Showing posts with label முனைவர்.க.சுபாஷிணி. Show all posts
Showing posts with label முனைவர்.க.சுபாஷிணி. Show all posts

Friday, July 22, 2022

தலையங்கம்: தமிழ் மரபின் வரலாற்று ஆய்வை மேம்படுத்துவோம்


வணக்கம்.
அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் காலாண்டிதழின் ஊடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய பயணம்... இந்தக் காலாண்டிதழோடு தமிழ் மரபு அறக்கட்டளையின்  30  ஆய்வுக் காலாண்டிதழ்களாக வெளிவந்துள்ளன. இந்த 30 காலாண்டிதழ்களும் தன்னுள்ளே சேகரித்து வைத்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு வழங்கி இருக்கும் வரலாற்றுச் செய்திகள் ஏராளம்...  ஏராளம். தொடர்ச்சியாக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் பல ஆர்வலர்களின் ஆய்வு நாட்டமும் முயற்சியுமே இதனை சாத்தியப்படுத்தியுள்ளன.

வரலாறு, தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகள், சமூகவியல் பார்வை, மானுடவியல் பார்வை, தொல்லியல் அகழாய்வுச் செய்திகள் எனப் பன்முகத்தன்மையோடு இந்த 30 காலாண்டிதழ்களும் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவை மட்டுமின்றி கவிதைகளும் இந்தக் காலாண்டிதழ்களை  அலங்கரித்திருக்கின்றன.

தொடர்ச்சியாக எந்தத் தொய்வும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளும், நாம் வெளியிட்ட அறிக்கைகளும், நமது பரிந்துரைகளும் கூட இந்த காலாண்டிதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் நடத்திய கல்வெட்டுப் பயிற்சிகள், மரபுப் பயணம் தொடர்பான செய்திகள், சமூக அக்கறையுடன் அவசர காலங்களில் தேவையுள்ளோருக்கு நாம் வழங்கிய இடர் கால உதவிகள் பற்றிய அறிக்கைகள், கருத்தரங்குகளில் நமது பங்களிப்பு, தமிழக அரசுக்கு நமது பரிந்துரைகள், நமது ஆய்வுக் காணொளிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் பேட்டிகள் எனத் தகவல் களஞ்சியமாக நமது மின்தமிழ் மேடை காலாண்டிதழின் 30 தொகுப்புகளும் திகழ்கின்றன.

இந்த 30 தொகுப்புகளையும் அதன் முதல் இதழ் தொடங்கி இன்று வரை  தொகுத்து, முறையாக அவற்றை நூல் வடிவில் வடித்து, தரமான முறையில் ஒவ்வொரு காலாண்டிதழையும் உருவாக்கி அளித்திருப்பவர் இதன் பொறுப்பாசிரியர் முனைவர் தேமொழி.  எடுத்துக்கொண்ட பணியை ஆய்வு திறத்துடனும், கடமை உணர்ச்சி சிறிதும் குறையாமலும் மேன்மேலும் காலாண்டிதழ்களின் தரத்தை உயர்த்தி சிறப்புற வடிவமைத்து வெளியிடும் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த 30 காலாண்டிதழ் தொகுதியும் கொண்டிருக்கும் செய்திகள் ஆய்வு மாணாக்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப் பல செய்திகளை வழங்குகின்றன. மின்னிதழ்களாக உள்ள இவற்றை அச்சு வடிவத்தில் அச்சுப்பதிப்பாக்கம் செய்து உங்கள் வீட்டு நூலகங்களில் இணைத்து வைத்துக் கொள்ளுங்கள். அவை நிச்சயம் உங்கள் வாசிப்பிற்கும், ஆய்விற்கும், சிந்தனைக்கும் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்றைய நமது கல்விச்சூழல் என்பது  ஆய்வுத் தரம் குறைந்தும், அவசரகதியிலும், சான்றிதழ் பெறுவதையே நோக்கமாகக் கொண்டும் என்பன போன்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய போக்கு தரமான ஆய்வுகள் வெளிவர உதவாது. இத்தகைய போக்கு மாற வேண்டும்.

வரலாற்றுச் செய்திகளையும் தொல்லியல் அகழாய்வுச் செய்திகளையும் ஆர்வத்துடன் வாசிக்கும் தமிழ் மக்கள் இந்த வாசிப்புக்கான எல்லையை தமிழ்நாடு என்ற நில அளவில் குறுக்கிக்கொள்ளாமல், உலகளாவிய வகையில் தங்கள் ஆய்வுப் பார்வையைச் செலுத்த வேண்டும். அத்தகைய பார்வை மனித இனத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதில் புதிய தெளிவுகளை நிச்சயம் உருவாக்கும்.

மேற்கூறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஆய்வுக் காலாண்டு இதழ்களான மின்தமிழ்மேடை இதழ்கள் உயர்ந்த, தரம் மிக்க பல கட்டுரைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தரவிறக்கி நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த அறிவு களஞ்சியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Wednesday, June 22, 2022

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோ எரெக்டஸ்

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹோமோ எரெக்டஸ் — முனைவர்.க.சுபாஷிணி



அண்மையில் 16 ஜூன் 2022, ஸ்பெயினின் மனித பரிணாம வளர்ச்சிக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (CENIEH) வெளியிட்ட அறிக்கையின்படி, 1.6 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஹோமோ எரெக்டஸ் புதைபடிமங்கள் சீனாவின் கோங்வாங்லிங் (Gongwangling) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்ஸ்டிடியூட் ஆஃப் வெர்டிபிரேட் பேலியோண்டாலஜி மற்றும் பேலியோ ஆந்த்ரோபாலஜி, CENIEH ஆய்வாளர்கள் மற்றும் சீனாவின் லியு வூ உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.


இந்த எலும்புக் கூட்டுக்குச் சொந்தமான ஹோமோ எரெக்டஸ் சீனாவின் கோங்வாங்லிங் பகுதியை அடைந்த முதல் ஹோமினின்களில் ஒருவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. படிமத்தின் மண்டை ஓடு, தாடை எலும்பு மற்றும் ஐந்து பற்களில் மைக்ரோ-கம்ப்யூட்டட் டோமோகிராபி, ஜியோமெட்ரிக் மோர்போமெட்ரி மற்றும் கிளாசிக்கல் மோர்பாலஜி நுட்பங்களுடன் ஆய்வு நடத்தப் பட்டது. ஆய்வின் முடிவு சீனாவில் உள்ள ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட மற்ற ஹோமோ எரெக்டஸ் தளங்களில் 400,000 மற்றும் 800,000 ஆண்டுகளுக்கு முன்பான புதைபடிமங்களில் காணப்பட்டதைப் போலவே உள்ளன என்றாலும் சில மாறுபாடுகளையும் இவை வெளிப்படுத்துகின்றன என்பதை இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஹோமோ எரெக்டஸ் என்பது அழிந்து போன பண்டைய மனித இனங்களுள் ஒன்று. 2 மில்லியன் ஆண்டுகள் காலகட்டத்தில் இவை வாழ்ந்ததற்கானச் சான்றுகள் உலகின் பல்வேறு இடங்களில் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தமிழகத்தின் அத்திரம் பாக்கம் பகுதியில் கிடைத்த தொல் மனித எச்சங்களும் இவ்வகை ஹோமோ எரெக்டஸ் இனமாக இருக்கலாம். ஆரம்பக்கால ஆப்பிரிக்க ஹோமோ எரெக்டஸ் புதைபடிமங்கள் (சில சமயங்களில் ஹோமோ எர்காஸ்டர் என்றும் அழைக்கப்படுகின்றன) மனிதனைப் போன்ற நவீன உடல் விகிதாச்சாரத்தில் ஒப்பீட்டளவில் நீளமான கால்கள் மற்றும் உடற்பகுதியின் அளவைக் காட்டிலும் குறுகிய கைகளைக் கொண்ட பழமையான மனிதர்கள் இவர்கள். இவர்களின் உடற்கூறுகள் தரையில் வாழும் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் மனித உடல் உடல் பரிணாம வளர்ச்சி கண்டதை வெளிப்படுத்துகின்றன. மரம் ஏறுதலிலிருந்து நடக்கக்கூடிய மற்றும் நீண்ட தூரம் ஓடக்கூடிய திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த பரிணாம வளர்ச்சி அமைகிறது. டச்சு அறுவை சிகிச்சை நிபுணரான யூஜின் டுபோயிஸ் தான் 1891 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் முதல் ஹோமோ எரெக்டஸ் மனித இனத்தின் புதைபடிமத்தைக் கண்டுபிடித்தார். 1894 ஆம் ஆண்டில், டுபோயிஸ் இந்த இனத்திற்கு பிதேகாந்த்ரோபஸ் எரெக்டஸ் என்று பெயரிட்டார். தமிழ்நாட்டின் மலையடிவாரங்களிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் அகழாய்வுகளை நிகழ்த்தினால் இவ்வகை தொல் மனிதர்களின் எச்சங்களைக் கண்டறிவதற்கு வாய்ப்பு அமையும். குறிப்பு: https://www.cenieh.es/en/press/news/homo-erectus-gongwangling-could-have-been-earliest-population-china ---

Wednesday, January 12, 2022

அயலகத் தமிழர் நாள் அறிவிப்பில் மகிழ்ச்சி அடைகிறோம்

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வெளிநாடு வாழ் துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், அயலகத் தமிழர் வரலாறு  அமர்வுக்குத் தலைமையேற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு தோழர்  திருச்சி சிவா அவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் உலகத் தமிழர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பில் எனது இனிய வணக்கம்.

suba speech.jpg

இது உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்ச்சிதான்.  பொங்கல் தமிழர் திருநாள் வாரத்தில் அயலகத் தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அயலகத் தமிழர் நாளாக ஜனவரி 12ம் தேதியைப் பிரகடனப்படுத்திய தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்திலிருந்து வணிகத்துக்காகப் புலம்பெயர்ந்து சீனா, கொரியா, ஜப்பான், இந்தோனீசியா, மலாயா, தாய்லாந்து எனப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிக நீண்டகாலமாக இந்நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அதே காலகட்டத்திலும், பிறகும் ஐரோப்பாவிற்குப் பயணமானோர் அங்கேயே தங்கி விட்டனர்.
தொடர்ச்சியாக வணிகத்திற்காகச் சென்றவர்கள் என்ற நிலை மாறி கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிலும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது நாட்டை விட்டு வெளியேறி, மொரிஷியஸ், பிஜீ, மார்ட்டினிக், சுரினாம், குவாதலப், மலாயா, இலங்கை மலையகம் எனப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம்.  அடுத்து, கடந்த நூற்றாண்டில் உயர் கல்விக்காகவும், புதிய வாழ்வுக்காகவும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா எனப் புலம்பெயர்ந்தோர் இன்று கணிசமான அளவில் உலகத் தமிழ் மக்களாக, ஆனால் தமிழ்நாட்டை எங்களது பண்பாட்டு வேராகக் கொண்டு வாழ்கின்றோம்.

எங்களது தமிழ் மரபு அறக்கட்டளை 2001ஆம் ஆண்டு தொடங்கி உலகளாவிய தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். தமிழகத்துக்கு வெளியே உதாரணமாக, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பாதுகாக்கப்படும் வரலாற்று ஆவணங்களை ஆய்வு செய்து, பதிவாக்கி அவை பற்றிய செய்திகளை ஆய்வறிக்கைகளாக வெளியிட்டு வருகின்றோம். 4.12.2019இல் ஜெர்மனியில் திருவள்ளுவருக்கு 2 ஐம்பொன் திருவள்ளுவர் சிலைகளை நிறுவினோம். இதுவே ஐரோப்பாவில் திருவள்ளுவருக்கு நிறுவப்பட்ட முதல் உருவச்சிலைகள் என்பதும் உலகளாவிய வகையில் திருவள்ளுவருக்கு வைக்கப்பட்ட முதல் ஐம்பொன் சிலைகள் என்ற சிறப்பையும் பெறுகின்றது.  இதே நாளை ஐரோப்பியத் தமிழர் நாளாகப் பிரகடனப்படுத்தி ஐரோப்பியத் தமிழர்களை ஒன்றிணைத்துச் செயல்பட்டு வருகின்றது எங்கள் தமிழ் மரபு அறக்கட்டளை.

அந்த வகையில் எங்களை தாய்நிலத்தோடு ஒன்றிணைக்கும்  தமிழக அரசின் இந்த முயற்சியை நாங்கள் மனதார வரவேற்கிறோம். தமிழக அரசைப் பாராட்டுகின்றோம்.

முதலமைச்சர் அவர்கள் இன்று தமது உரையில் அறிவித்த வெளிநாடு வாழ் தமிழர் அவசரக்கால உதவிக்கான தளம், உலகத் தமிழர்களுக்கான தமிழர் களஞ்சியம் ஆகிய திட்டங்களை நெஞ்சார வரவேற்கின்றேன். இவை எங்களது நீண்டகால தேவையாக இருக்கின்றது.  

இவ்வேளையில் எங்களது கோரிக்கையாக சிலவற்றை முன்வைக்க விரும்புகின்றோம்.  

1.  புலம்பெயர்ந்த தமிழக மக்களின் நீண்டகால வரலாறு - எத்தகைய பயணம், புதிய நாடுகளில் ஆரம்பக்கால துன்பகரமான சூழல், அதைப்பற்றிய ஆவணங்கள், படிப்படியான வாழ்வியல் மாற்றங்கள், தமிழர் புதிய நிலத்தில் உள்நாட்டு மக்களுடனான  ஒன்றிணைந்த வாழ்க்கை - தமிழ்க் கல்வி, பண்பாடு,  போன்ற ஆய்வுகளைத் தமிழகக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் முக்கியத்துவம் அளித்துச் செயல்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர் ஆய்வுத்துறையைக் கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

2.  ஐரோப்பிய, அமெரிக்க, கிழக்காசிய, தூரக்கிழக்காசிய நாடுகளில் உள்ள தமிழ், தமிழர், தமிழ்நாடு தொடர்பான ஆவணங்கள் ஓலைச்சுவடிகளாக, தாள் ஆவணங்களாக, செப்பேடுகளாக, வரலாற்றுச் சின்னங்களாக அயல்நாடுகளில் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் இவற்றை   மின்னாக்கம் செய்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அது தொடர்பான தகவல்களையும் தொடர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றோம்.  தனி நபர்களாகவும் அமைப்பாகவும் எங்களால் முடிந்த வரையில் இப்பணிகளைச் செய்து வருகின்றோம். தமிழக அரசின் உதவி கிடைத்தால் இவ்வாவணங்களை விரைவாக மின்னாக்கம் செய்து நாம் ஆய்வு செய்து வெளியிடப் பேருதவியாக அமையும்.

3. அயல் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத்  தமிழ் வாசிப்பை வளர்க்கும் வகையில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகளை ஏற்படுத்துவது அவசியத் தேவையாகின்றது. இப்புத்தகக் கண்காட்சிகளை ஐரோப்பாவிலும், மலேசியா, சிங்கையிலும் ஏற்பாடு செய்து தமிழ் நூல்கள் அயலகத் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் பரவும் வகை செய்ய வேண்டும்.

4. ஐரோப்பாவில் இருக்கும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் முறைசாரா பள்ளிக்கூடங்களாக இயங்கி வருகின்றன. அதற்கான ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களையும், பாட நூல்களையும் தமிழக அரசு உருவாக்கித் தர வேண்டும்.

அதுமட்டுமன்றி ஜெர்மானியர், ஆங்கிலேயர், பிரெஞ்சு மக்கள் என வேற்றுமொழி பேசும் மக்களும் பேச்சுத்தமிழ் கற்கும் வகையில் இணையவழி பேச்சுத்தமிழ் கற்கும் வாய்ப்புகளைத் தமிழக அரசு உருவாக்கித்தரக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வாய்ப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி. ஏற்பாட்டாளர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

தமிழால் இணைவோம்.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு


NRT 2022-01-12.jpg

நிகழ்ச்சியை இணையம் வழி காண இங்கே செல்க.
https://fb.watch/au59ueQu_j/  
https://www.youtube.com/watch?v=kcTAgl-Q3Ak
____________________________________________________







Saturday, September 25, 2021

ஆதி இந்தியர்கள் - வாசிப்பும் விமர்சனமும்

--முனைவர்.க.சுபாஷிணி




நூல்: ஆதி இந்தியர்கள் 
நூலாசிரியர்: டோனி ஜோசஃப்
வாசிப்பும் விமர்சனமும்: முனைவர்.க.சுபாஷிணி


பொதுவாகவே நான் வாசிக்கின்ற நூல்களில் வரலாற்றிற்கும் சமூகத்திற்கும் மிக முக்கியமானதாக நான் கருதுகின்ற நூல்களைப் பற்றி சிறு விமர்சனமாக அந்த நூல் கூறும் செய்திகளை எழுதி வைத்து, நூல் எவ்வகையில் எனது சிந்தனையைத் தாக்கியிருக்கின்றது என்ற கருத்தையும் இணைத்து அதன் வெளிப்பாடாக தோன்றுகின்ற கருத்துக்களையும் பதிவது வழக்கம். டோனி ஜோசஃப் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த நூல், தமிழ் மொழிபெயர்ப்பாக 'ஆதி இந்தியர்கள்' என்ற தலைப்பில் வெளிவந்தது. சென்ற ஆண்டு வாசித்து முடித்த பின்னர் உடனே நூல் சொல்லும் சில தகவல்களைக் குறிப்பாக ஒரு விமர்சனம் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். காலம் தள்ளிப் போய்விட்டது. அதனால் என்ன?   இப்போது  சற்று நேரம் ஒதுக்கி எழுதலாம் என்று என்று நினைக்கிறேன்.

இன்று தமிழகத்தில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் - கீழடி, ஆதிச்சநல்லூர்-சிவகளை, கொற்கை, பொற்பனைக்கோட்டை, கொடுமணல் என மிகச் சிறப்பாகப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற பலப்பல சான்றுகள் தமிழ்நாட்டின் மனிதகுல நாகரிகத்தை மேன்மேலும் விரிவாகவும் ஆழமாகவும் பார்க்கும் பார்வையை நமக்கு இதனால் சாத்தியப்படுத்துகின்றன. நூலுக்குள் செல்வதற்குள் நம்மைச் சுற்றி அடிக்கடி எழுப்பப்படுகின்ற சில கேள்விகளைக் கவனிப்போமே.

- இந்தியாவில் நீண்டகாலமாக வாழ்ந்த மனிதர்கள் யார்?
- குறிப்பாக தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் இங்கேயே தோன்றியவர்களா? அல்லது வேறு நிலப்பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்களா? 
- உலகின் மூத்த குடி எது? 
என்பது போன்ற பலப்பல கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்து நம் அறிவையும் கவனத்தையும் தாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த மேற்குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்க முற்படும் போது மனிதகுலத்தைப் பற்றி அறிவியல் சான்றுகள் கூறும் செய்திகளைச் சற்றேனும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.

இன்று மனிதர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் நாம் அனைவரும் ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை இனம். அது ஜப்பானியராக இருக்கட்டும், ஜெர்மானியராக இருக்கட்டும், தமிழராக இருக்கட்டும், செவ்விந்தியராக இருக்கட்டும், ஆஃப்கானிஸ்தான்காரர், நியூஸிலாந்து, அமெரிக்கர் என யாராயினும்.. அவர்கள் இந்த ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை இனம் தான். 

இந்த இனம் மட்டும்தான் மனித இனமா என்றால்...  இல்லை என்கிறது உலக அறிவியல், அகழாய்வு, மரபணுவியல் ஆய்வுகள். வேறு என்னென்ன இனங்கள் இருந்தன எனத் தேடி ஆராய்ந்து பார்க்கும் போது மேலும் சில மனித இனங்கள்  இந்தப் பூமியில் வாழ்ந்து அழிந்து போன செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக Homo erectus, Homo floresiensis, Homo habilis, Homo heidelbergensis, Homo neanderthalensis போன்றவை இவற்றுள் அடங்கும்.  ஜெர்மனியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில்  Homo steinheimensis என்ற ஒரு வகை இனத்தையும் ஆய்வாளர்கள் தொல் அகழாய்வில் கண்டு பிடித்தனர். ஆனால் இவ்வகை அனைத்துமே முற்றிலும் அழிந்து விட்டன. 

வாழ்க்கை என்பது, அது தாவரமாகட்டும், நுண்கிருமியாகட்டும், மிருகங்களாகட்டும்... அதன் பரிணாம வளர்ச்சியில் வந்த நம் மனிதகுலமாகட்டும்... எல்லோருக்குமே வாழ்க்கை ஒரு போராட்டம் தான்! 

இந்த மனிதகுல வாழ்க்கை போராட்டத்தில் எஞ்சி நிற்பது ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை மட்டுமே.   ஆகவே ஆய்வாளர்கள் இந்த மனித இனமாகிய நம்மை நவீன மனிதர்கள் என்றும் அடையாளப்படுத்துகின்றனர் (Modern Human). 

இந்த நவீன மனிதர்கள் இந்த உலகில் தோன்றிய காலமாக 160,000லிருந்து 90,000  ஆண்டுகள் காலகட்டம் என்றும் அவர்கள் தோன்றிய நிலப்பகுதி ஆப்பிரிக்கா என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அறிமுகத்துடன் நூல் வாசிப்பிற்குள் செல்வோமே..!

--- 2 --- 

நூலின் பார்வை முழுமையாக இன்றைய நில எல்லை அடிப்படையிலான இந்திய தொல் வரலாற்றில் நவீன மனிதர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எப்படி நிலை பெற்றார்கள் என்ற செய்தியைக் கூறுகிறது.

நான்கு அத்தியாயங்கள் நூலில் உள்ளன. அவை 1) முதல் இந்தியர்கள் 2) முதல் உழவர்கள் 3) முதல் நகரவாசிகள் அதாவது ஹரப்பர்கள் 4) இறுதியாகக் குடியேறியவர்கள்-ஆரியர்கள் என்ற நான்கு மைய விசயங்களை ஆராய்கின்றன. இதற்குத் துணையாக இந்திய தொல் வரலாற்றில் நவீன மனிதர்களைப் பற்றிய ஒரு சுருக்கமான காலவரிசை விளக்கமும், முடிவுரையாக எப்படிச் சரியான கோணத்தில் வரலாற்றைப் பார்ப்பது என்ற வழிகாட்டுதலும், பின்னிணைப்பாக கங்கர்-ஹக்ரா பள்ளத்தாக்குச் செய்திகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.


நூலின் தொடக்கப்பகுதிகள் கீழ்க்காணும் செய்திகளை விவரிக்கின்றன.

ஆப்பிரிக்காவிற்கு வெளியே ஹோமோ சேப்பியன் சேப்பியன் என்ற நவீன மனிதன் வெளியே மேற்கொண்ட வெற்றிகரமான மனித இடப்பெயர்ச்சி இன்றைக்கு ஏறக்குறைய 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இவர்களே இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற மனிதர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்தாலும் இன்று பல்வேறு இனங்களாக வளர்ச்சி கண்டிருக்கிறது இந்த ஹோமோ சேப்பியன் சேப்பியன் மனித குலம்.

அப்படி வெளியேறியவர்களில் இன்றைக்கு ஏறக்குறைய 65 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் அவர்களில் சிலர் இன்றைய இந்தியாவை வந்தடைந்தனர். இவர்கள் ஏற்கனவே இருந்த ஏனைய ஹோமோ வகை மனிதர்களை எதிர் கொண்டிருந்தாலும் அந்த மனித குலம் அழிந்து ஹோமோ சேப்பியன்ஸ்   சேப்பியன்ஸ்  வகை மனிதகுலம் மட்டுமே இன்று நிலைபெற்றிருக்கிறது.

ஏறக்குறைய அதே காலகட்டத்தில் அதாவது 60 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல்வேறு பகுதிகளில் நகரத் தொடங்கி வாழத் தொடங்கினர். ஏறக்குறைய 40 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருந்த ஹோமோ நியாண்டர்தால் வகை மனிதகுலம் ஹோமோ சேப்பியன் தாக்கத்தால் வலுவிழந்து பூண்டோடு அழிந்தார்கள்.

ஏறக்குறைய 40 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த நவீன மனிதர்கள் முதல் இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர். நுண்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி படிப்படியாக மத்திய மற்றும் கிழக்குப் பகுதி இந்தியாவில் மிக வேகமாக மக்கள் தொகை பெருக்கத்தை உருவாக்கினர். 

கிமு 5500 லிருந்து 2600 வரையிலான காலகட்டத்தை முந்தைய ஹரப்பா காலகட்டம் என்றும், 
கிமு 2600 லிருந்து 1900 வரையிலான காலகட்டத்தை முதிர் ஹரப்பா காலகட்டம் என்றும் 
வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் பின்னர் அங்கேயே தங்கி மக்கள் தொகை  அதிகரித்ததால் கிமு 2000 காலகட்டத்தில்  தொடர்ந்து இரண்டு முறை மத்தியத்தரைக்கடல் பகுதிக்கும் சிந்து சமவெளிப்பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். 

இதே காலகட்டத்தில் அதாவது கிமு 2000 லிருந்து கிமு1000 காலகட்டத்தில் மத்திய ஆசியாவிலிருந்து ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளைச் சேர்ந்த மேய்ப்பாளர்கள் பலமுறை தெற்காசியப் பகுதிகளுக்கு வந்தடைந்தனர். 17.6.2017இல் ‘தி இந்து’ நாளிதழில் வெளிவந்த 'How Genetics is Settling the Aryan Migration Debate'   என்ற தலைப்பிலான நூலாசிரியரின் கட்டுரை  ‘தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்ட இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய மக்கள் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர் என்ற கோட்பாட்டிற்கு டிஎன்ஏ சான்றுகள் எப்படி ஆதரவளிக்கின்றன என்பதை விளக்கியிருப்பதையும் இவ்வாய்வு  2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகெங்குமுள்ள 92  அறிவியலறிஞர்கள்  இணைந்து எழுதி வெளியிட்ட  'Genomic Formation of South and Central Asia'  எனும் ஆய்வறிக்கை உறுதி செய்திருப்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

கிமு1900 லிருந்து 1300 வரை பிந்தைய ஹரப்பா காலகட்டம் என அழைக்கப்படுகின்றது. நீண்டகால வறட்சி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரக் காரணமானது; ஹரப்பா நாகரிகம் மறைவிற்கு இதுவும் ஒரு காரணமானது.

மேற்கூறப்பட்டுள்ள தகவல்களை நூலாசிரியர் பட்டியலாக்கி இன்னும் விரிவாக அறிமுகப் பகுதியில் வழங்குகிறார். இது ஆப்பிரிக்காவிலிருந்து நவீன மனிதகுலம் வெளியேறி இடம் பெயர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த பல்வேறு இனங்களாக பரிணாம வளர்ச்சி பெற்ற நிகழ்வுகளை வாசிப்போர் புரிந்து கொள்ள எளிமையாக அமைகிறது.

இடம்பெயர்ந்து கொண்டே இருப்பது மனித குலத்தின் இயல்பு. அதன் வெளிப்பாடாகத்தானோ என்னவோ... இன்றும் கூட  நாம் ஓரிடத்தில் கல் போலக் கிடக்காமல் மற்றோரிடத்திற்குப் பயணம் சென்று கொண்டேயிருக்கின்றோம்.

--- 3 --- 

பொதுவாகவே   மனித குலம் (ஹோமோ) என்று நாம் கூறும் போது நமது சிந்தனையில் தோன்றுவது உருவத்தால் நம்மை ஒத்த, ஆனால் இன்றைக்குப் பன்னெடுங் காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த நம் மூதாதைய தொல் மனிதர்கள் என்ற எண்ணம்தான். ஆனால் இது உண்மை அல்ல. இந்தப் பூமியில் வெவ்வேறு மனித குலங்கள் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் இப்போது எஞ்சியிருப்பது நவீன மனிதர்கள் என நாம் கூறும் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்ற வகை மனிதர்கள் தான்.

நமது மூதாதையர்கள் இந்த உலகில் தோன்றி நகர்ந்து இனப்பெருக்கம் செய்து ஏனைய மனித குலத்தை அழித்து ஒழித்து வெற்றிகரமாக இந்த இனத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். இந்த நவீன மனிதர்களுக்கு முன்னரே வாழ்ந்தவர்களைப் பற்றியும் சில தகவல்களை இந்த நூல் கூறுகிறது.

உதாரணமாக ஹோமோ ஹேபிலிஸ், ஹோமோ எரெக்டஸ், ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் போன்ற மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்து முற்றிலுமாக அழிந்து விட்டனர். இவர்களுள்  ஹோமோ எரெக்டஸ் வகையினர் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் வாழ்ந்த தொல் மனித இனம். ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் வகை மனிதர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் தென்மேற்கு ஆசியாவிலும் மத்திய ஆசியாவிலும் வாழ்ந்தவர்கள். இப்படி மேலும் சில வகைகள் உண்டு. மேலும் வெவ்வேறு வகை மனித இனங்கள் வாழ்ந்ததற்கான தடையங்களும் அவ்வப்போது தொல்லியல் அகழாய்வுகளில் நமக்குத் தெரிய வருகின்றன.

கடந்த நூறு ஆண்டுகளில் படிப்படியாக மரபணுவியல் ஆய்வு என்பது பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.  கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்த ஆய்வுகளுக்குத் துணை நிற்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில் கடந்த 30 ஆண்டுகளில் விரிவான ஆய்வுகள் உலகமெங்கிலும் தொல் மனிதர்கள் தொடர்பாக நடத்தப்பட்டுள்ளன. ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை மனிதரான நமது மூதாதையர்கள் கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைய ஆப்பிரிக்கப் பகுதியில் வாழ்ந்து, இன்றைக்கு ஏறக்குறைய 70 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் இடம்பெயர்ந்து வெளியேறி இனப்பெருக்கத்தின் வழியாக இன்றைய உலக மாந்தர்களை உருவாக்கியிருக்கின்றார்கள்.


நியாண்டர்தால் மனிதர்கள் ஐரோப்பாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்தார்கள். அவர்களது எச்சங்கள் இன்று ஐரோப்பாவின் ஜெர்மனி போன்ற பல நாடுகளில் குகைகள் உள்ள பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. இந்த நியாண்டர்தால் வகை மனிதர்களுடன் நமது மூதாதையர்களான ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை மனித குலம் புணர்ச்சிக் கலப்பில் வெற்றி அடைந்திருக்காது என்ற எண்ணம் நீண்ட காலம் இருந்தது. ஆனால் இந்த எண்ணம் 2010ஆம் ஆண்டில் வெளிவந்த ஆய்வறிக்கைகள் வழி மாற்றம் கண்டது.  இன்றைய நவீன மனிதர்கள் சிலரிடம் இருக்கும் மரபணுக்களில் நியாண்டர்தால் மரபணுக்கள் உள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தின என்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த இந்த ஹோமோ சேப்பியன்ஸ்  வகை மனிதர்கள், அங்கிருந்து இன்றைய கிழக்காசியா பகுதி வரை வந்து பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல எடுத்துக்கொண்ட காலம் 5000 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்திலும் பல மரபணு திரிபுகள் ஏற்பட்டிருக்கின்றன.

3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகத்தின் அத்திரம்பாக்கம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ’பண்டைய மனிதர்களின்’ (ஹோமோ சேப்பியன்கள் அல்ல) கற்கருவிகள் அவர்கள் கற்கருவிகளைத் தயாரித்துப் பயன்படுத்தும் அளவிற்கு வளர்ச்சியடைந்ததைக் காட்டுவதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இந்தப் பண்டைய மனித இனம் எது என்றறிய போதுமான மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கிடைக்கப்படவில்லை என்றே  ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.    மிக ஆழமான தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் தமிழகத்தின் மலைப்பகுதிகள், மலையடிவாரங்கள், குகைப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை விரிவாக்கினால் பண்டைய மனிதர்களின் தொல் படிமங்கள் கிடைக்க   வாய்ப்புள்ளது. இந்த அடிப்படையில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

நூலாசிரியர் முன்னுரையில் கூறும் ஒரு செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது. அதாவது, "தொன்று தொட்டு இன்று வரை எந்த ஒரு குழுவோ இனமோ அல்லது சாதியோ 'தூய்மையான' ஒன்றாக இருந்து வரவில்லை". இங்குத் தூய்மை என்பது ‘இனக்கலப்பு’ என்ற பொருளில் கொள்ளப்பட வேண்டும். 

1871ஆம் ஆண்டில் சார்ல்ஸ் டார்வின் நவீன மனிதர்கள் அதாவது ஹோமோ சேப்பியன் சேப்பியன் ஆகிய நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றியிருக்கக்கூடும் என்று தன் ஆய்வை வெளியிட்டார்.  இது உலக சிந்தனையில் பெறும் தாக்கத்தை உருவாக்கிய கருத்தாக அமைந்தது.  

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹோமோ சேப்பியன்களாகிய நமது மூதாதையர்களிடையே பெரும் எண்ணிக்கையில் இனக் கலப்புகள் நடந்து முடிந்து விட்டன என்பதையும் நாம் எல்லோருமே ஆப்பிரிக்காவிலிருந்து இன்றைக்கு 70 ஆயிரம் ஆண்டுகள் காலச் சூழலில் வெளியேறி இடம் பெயர்ந்து தனித்தனி இனங்களாக வளர்ச்சியடைந்து பிறகு அந்த வெவ்வேறு இனங்களுக்கிடையே கலப்புகள் ஏற்பட்டு பரிணமித்திருக்கும் ஒரு கலவை தான் நாம் என்பது மரபணுவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளாகின்றன.

--- 4 --- 

இன்றைக்கு ஏறக்குறைய 65,000 ஆண்டுகள் காலகட்டத்தில் நவீன மனிதர்கள் இந்தியாவை அடைந்த போது அவர்கள் சிறு குழுக்களாக இந்தியாவின் கடற்கரையோரப் பகுதிகள் வழியாக இடம்பெயர்ந்து, சில பகுதிகளில் தங்கி வாழ்ந்து, மீண்டும் இடம்பெயர்ந்து, என்ற வகையில் கடந்து சென்றிருக்கக்கூடும்.  

முதன் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வாரிசுகள் என்று  தேடினால் அந்தமான் தீவுகளில் இருக்கும் ஓங்கே பழங்குடியினரை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்.   இன்று நம் கண்முன்னே இருக்கும் முதன் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வாரிசுகள் இவர்கள் என்று மரபணுவியல் ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 


ஓங்கே இனத்தவர்களைப் போல அந்தமான் தீவில் வசிக்கும் ஜரவா மக்களும் இன்றைக்கு ஏறக்குறைய 55,000 ஆண்டுகள் கால வாக்கில் இடம்பெயர்ந்தவர்கள்.  இவர்கள் தெற்கு மற்றும் மத்திய அந்தமான் பகுதியில் வசிக்கின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகையே இன்று இருக்கின்றனர்.
  
இன்றைய இந்திய நிலப்பகுதியில் நமது மூதாதையர்களான தொல் மனிதர்கள் பல்வேறு காலகட்டங்களில் உட்புகுந்திருக்கின்றனர். ஒரே நேரத்தில் எல்லா இடங்களுக்கும் பரவலாக்கம் என்றில்லாமல் பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி குழுக்களாக வந்து சேர்ந்திருக்க வேண்டும். இவர்களுள் பண்டைய மனிதர்கள் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கக்கூடும் என நூலாசிரியர் தன் கருத்தைக் குறிப்பிடுகின்றார்.  நமது மூதாதையர்களான நவீன மனிதர்கள் கடற்கரையோரமாக தங்கள் நகர்வை ஏற்படுத்திக்கொண்டே ஏனைய தொல் மாந்தர்கள் இருந்த பகுதிகளில் அவர்களோடு கடும் தாக்குதலில் ஈடுபட்டு அவர்களை   வீழ்த்தி புதுப் புதுப் பகுதிகளுக்குப் பரவியிருக்க வேண்டும்.

இந்தியாவின் இன்றைய நவீன மனிதகுலம் இந்தியாவிற்குள் நுழைந்த போது அங்கு ஏற்கனவே காலூன்றி இருந்த ஏனைய தொல் மாந்த இனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு நிலைபெற்றது. தெற்காசியாவில் பண்டைய மனிதர்களின் புதைப் படிமம் ஓர் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஓரளவு முழுமையான மண்டையோடு கிடைத்தது என்றும் அது ஹோமோ ஹெய்டல்பர்ஜன்சிஸ்  வகை என்றும் ஆய்வில் அறியப்பட்டது.

நூலின் இரண்டாம் அத்தியாயம் `விவசாயம் உழவர்கள்` என்ற கோணத்தில் விரிவாக அலசுகிறது. தெற்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட வேளாண் பரிசோதனைகளில் பழமையானது மெஹெர்கர்   என்ற கிராமத்தில் தொடங்கியது. இப்பகுதி இன்றைய பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் உள்ள போலன் கணவாய் அடிவாரத்தில் அமைந்திருக்கும் கிராமம். கிமு 7000லிருந்து கிமு 2600 வரை மக்கள் வாழ்ந்த ஒரு நிலப்பகுதி இது. தெற்காசியாவில் வேளாண்மை எவ்வாறு தொடங்கிப் பரவியது என்பது குறித்த ஆய்வுக்கு இந்த ஆய்வு உதவியது. இதன் அடிப்படையிலேயே ஹரப்பா நாகரிகம் தொடர்பான ஆய்விற்கும் இது வித்திட்டது என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழுவினர்  இப்பகுதியில் அகழாய்வு செய்த போது கண்டறியப்பட்ட அனைத்து வீடுகளும் பல அறைகளைக் கொண்டவையாக இருந்தன என்றும், கைகளால் தயாரிக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு அவை அமைக்கப்பட்டிருந்தன என்றும், மேலும் விரிவாக பல தகவல்களை இந்த அத்தியாயத்தில் மெஹெர்கர்  வாழ்விடப் பகுதி பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

மத்திய யூப்ரடீஸ் பகுதியில் முர்ரேபிட் என்ற இடத்திற்கு அருகே அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளின் படி அங்கு வசித்து வந்தவர்கள் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே கோதுமையையும்  'ரை' எனப்படும் புல்லரிசியையும் சாகுபடி செய்திருந்தனர் என்றும் கிமு 10,700 ஆம் ஆண்டு வாக்கிலேயே 'ரை' சாகுபடி செய்யப்பட்ட அறிகுறிகள் தோன்றியதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். மெஹெர்கர்  தொடர்பான விரிவான அலசல், அங்கு மேற்கொள்ளப்பட்ட விவசாய முறைகள், தட்பவெப்பநிலை ஆகியன பற்றிய செய்திகள் இப்பகுதியில் நன்கு ஆராயப்படுகின்றன.

இந்த அத்தியாயம் மேலும் ஒரு முக்கிய செய்தியை விரிவாக ஆராய்கிறது. தற்காலத்து இந்திய மக்கள் குழுவின் ஒட்டுமொத்த மரபணு தொகுதியையும் வரிசைப்படுத்தி இந்திய மக்களின் வரலாற்றை மறு நிர்ணயம் செய்யும் நோக்கத்தில் 2009ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் நிகழ்த்தப்பட்ட இரண்டு ஆய்வுகளை இப்பகுதி மிக விரிவாக ஆராய்கிறது. முதல் ஆய்வின் தலைப்பு Reconstructing Indian Population History.  இரண்டாவது ஆய்வின் தலைப்பு Genetic Evidence for Recent Population Mixture in India. இந்த இரண்டு ஆய்வறிக்கைகளுமே கீழ்க்காணும் விஷயங்களை வலியுறுத்துகின்றன :
1) இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களும் கலப்பினத்தைச் சேர்ந்தவர்களே; கலப்பு விகிதாச்சாரத்தில் மட்டுமே வேற்றுமை இருக்கிறது
2) இந்திய மக்களின் பரம்பரை குறைந்தபட்சம் இரண்டு குழுக்களோடு தொடர்பு கொண்டுள்ளது 1) முதல் இந்தியர்கள் 2) மேற்கு யுரேசியர்கள். 

இந்த ஆய்வின் முடிவுகள் எப்படிப்பட்ட எதிர்வினைகளை எதிர்கொண்டன என்பதை டேவிட் ரைட் 2018-ஆம் ஆண்டில் வெளியிட்ட 'Who we are and How we got தேரே' என்ற நூலில் விவரிக்கும் செய்தியையும் நூலாசிரியர் இப்பகுதியில் வழங்கி அதனை விவரிக்கின்றார். மிகச் சுவாரசியமானதும் முக்கியமானதுமான செய்தி என்னவென்றால், இந்த ஆய்வறிக்கையின் படி தென்னிந்திய மூதாதையர் முதல் இந்தியர்களின் வம்சாவளியினர் ஆவர் என்ற பதிலே!

ஜாக்ரோஸ் மலைப் பகுதியைச் சேர்ந்த ஈரான் வேளாண் குடியினரின் தொடர்புகள், மரபணு ரீதியிலான பங்களிப்புகள், சிந்து சமவெளிப் பகுதியில் இம்மக்களது தாக்கம் ஆகிய கூறுகள் முக்கிய கவனத்தோடு இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, தெற்காசியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலகட்டத்தில் ஈரானிய வேளாண் குடியினர் பெரும் எண்ணிக்கையில் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்; அவர்களுடைய மரபியல் சுவடுகள் இன்றைய இந்தியர்களிடம் அளக்க முடியாத விதத்தில் பதிந்து போய் உள்ளன‌.

இந்த அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் பின் குறிப்பாக ஒரு முக்கிய செய்தியை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அதாவது கிமு 1900 ஆண்டு வாக்கில் ஹரப்பா நாகரிகம் வீழ்ச்சி அடைந்த போது அதைக் கட்டி எழுப்பிப் பல நூற்றாண்டுகள் பேணிக்காத்தவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவினர்; குறிப்பாக, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு அவர்கள் சென்றனர்!

--- 5 --- 

`முதல் நகரவாசிகள்: ஹரப்பர்கள்` என்ற தலைப்பில் அமைந்த மூன்றாவது அத்தியாயம் ஹரப்பா நாகரிகம் பற்றிய ஆர்வமுள்ளவர்களுக்கு விரிவான செய்திகளைத் தருகின்ற பகுதியாக விளங்குகிறது.  இப்பகுதியில் கூறப்படுகின்ற சில முக்கிய செய்திகளைக் குறிப்பாகக் காண்போம்.
- ஹரப்பா நாகரிகத்தை மேற்காசியர்கள் மெலுஹா என்றே அழைத்தனர்.’
- மெசப்பட்டேமியா முத்திரைகளில் இடம்பிடித்திருக்கும் எருமை மாடு, சிந்து சமவெளியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த ஒரு விலங்கு.
- மெசப்பட்டேமியா   நாகரீகத்திற்கும் ஹரப்பா நாகரீகத்திற்கும் இடையே வர்த்தக பரிவர்த்தனைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
- யூப்ரடிஸ்-டைகிரிஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே இருந்த மெசப்பட்டேமியாவில் (அதாவது இன்றைய ஈராக்) சுமேரியர்கள் வாழ்ந்துவந்தனர். ஊருக் போன்ற மெசப்பட்டேமிய நாகரிகத்தின் முதல் நகரங்களைச் சுமேரியர்கள் கட்டி எழுப்பினர்.
- ஹரப்பா நாகரிகம் தனித்துவமிக்க ஒரு நாகரீகம். 
- ஹரப்பா நாகரீகத்தில் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த நகரங்களைக் கொண்டிருந்தனர்.
- நகரங்களின் தெருக்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன.
- வீடுகள் எல்லா சமயங்களிலும் வடக்கு-தெற்கு அல்லது கிழக்கு-மேற்கு திசையைப் பார்த்தபடி வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன.
- அவர்களது நீர் மேலாண்மை தொழில்நுட்பம் மிக நவீனமாக இருந்தது.
- சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் ஹரப்பாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் இருந்ததை உறுதி செய்துள்ளன.
- ஹரப்பாவிற்கு வரும் வர்த்தகர்கள் மற்றும் விருந்தினருக்கு வசதியாக பொது குளியல் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
- அகழாய்வுகளில் லட்சக்கணக்கான பெண்கள் அணியும் வளையல்கள் கிடைத்தன.
- அகழாய்வில் கிடைத்திருக்கின்ற முத்திரைகளில் 60 சதவீத முத்திரைகளில் ஒற்றைக் கொம்பு விலங்கு  உருவம் பொறித்தவை கிடைத்துள்ளன. இது அரச முத்திரையாக இருக்கலாம்.
- அந்த மாபெரும் நகரத்தின் எல்லா பகுதிகளிலும் பொருட்களை எடை போடுவதற்கு ஒரே வழி முறைதான் பின்பற்றப்பட்டது. தரப்படுத்தப்பட்ட கனச்சதுர எடைக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.


சிந்துவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் செழித்திருந்த நிலப்பகுதிகளில் எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி   பேசப்பட்டது என்ற கேள்வி தொடர்ந்து சவாலாக இருக்கும் ஒன்று. ஹரப்பா எழுத்து வரிவடிவத்தின் அடிப்படை மொழி முதல்நிலைத் திராவிட மொழியாக இருக்கலாம் என்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களும் மொழியியலாளர்களும் ஆதரிப்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இப்பகுதியில் மெசப்பட்டேமியா மொழிகள், அதிலும் குறிப்பாக, ஈல மொழி பற்றி ஆய்வாளர்கள் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களால் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. உலகிலேயே ஆறாவது பெரிய மொழிக் குடும்பமாக அமைந்திருக்கின்றது திராவிட மொழிக் குடும்பம்.  திராவிட மொழிகளுக்கும் ஈல மொழிக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அதில் குறிப்பாக பிற்கால ஈல மொழி திராவிட மொழிக் குடும்பத்தின் பிராகுயி மொழியை ஒத்திருந்தது என்ற செய்தியையும் சுட்டிக்கட்டுகின்றார்.

இதில் மேலும் சுவாரசியமான ஒரு செய்தி என்னவென்றால்  பெஹிஸ்டன் கல்வெட்டுகளின் புதிரை விடுவிப்பதில் முக்கிய பங்காற்றிய எட்வின் நாரிஸ் என்னும் மொழியியலாளர், ஈல  எழுத்து வரிவடிவம் தமிழ் எழுத்து வரிவடிவத்தோடு அதிகமாக ஒத்துப் போகிறது என்பதை 1853 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்தார் என்ற செய்தி.  இதுகுறித்து மேலும் பலர் இத்தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்த செய்திகளையும் மெக்  ஆல்பியன் 1981 ஆம் ஆண்டில் எழுதிய Proto Elamo Dravidian: The Evidence and its Implications  என்ற ஆய்வறிக்கையைத் தனிக் கவனத்தோடு நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 

இதன் தொடர்ச்சியாக கல்வெட்டியலாளரான ஐராவதம் மகாதேவன், பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆகியோர் ஹரப்பா மொழியைப் படிக்கத் தொடங்குவதற்கான புதிய கண்ணோட்டங்களைக் குறிப்பிட்ட செய்திகள் அமைகின்றன. அதில் மிக முக்கியமாக ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் 2015 ஆம் ஆண்டில் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறப்பட்ட  கருத்துக்களை நூலாசிரியர் முக்கியமாகக் குறிப்பிடுகின்றார்.
1) ஹரப்பர்கள் வேத காலத்தைச் சேர்ந்த ஆரியர்கள் பேசிய மொழிக்கு எதிரான மொழியைப் பேசினர்.
2) சிந்து சமவெளிப் பகுதியில் கிடைத்த வரி வடிவங்களின் மொழி திராவிட மொழியின் தொடக்கக் கால வடிவங்களில் ஒன்று
3) சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களுக்கு முந்தியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன
4) சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் பல விலங்குகள் இடம் பெற்றிருந்த போதும் குதிரைகள் மட்டும் இடம் பெறவில்லை.
5) சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் புலி பரவலாக இடம்பெற்றிருந்தது.
6) சிந்து சமவெளி நாகரிகம் பெரும்பாலும் நகர்ப்புற நாகரீகமாக இருந்தது.
சிந்துவெளியில் பேசப்பட்ட திராவிடமொழிகள் தென்னிந்தியாவை அடைந்த காலம் எது என்ற கேள்வி முக்கியமானது. கிமு 2500 ஆம் ஆண்டு வாக்கிலேயே திராவிடமொழிகள் தென்னிந்தியாவை அடைந்து விட்டன. தென்னிந்தியாவிற்குத் திராவிட மொழிகளை முதன்முதலாக கொண்டுவந்தவர்கள் ஹரப்பாவின் மேய்ப்பாளர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் நூலாசிரியர் விவரிக்கின்றார். தென்னிந்திய மூதாதையரோடு அவர்களுக்கு ஏற்பட்ட கலப்பு இன்றைய தென்னிந்திய மக்கள் தொகையின் பெரும் பங்களிப்பிற்குக் காரணமாகியிருக்கின்றது. 

இந்தியர்கள் பேசும் மொழிகள் 4 முக்கிய மொழிக்குடும்பங்கள் பற்றியும் நூல் வரிசையாகப் பட்டியலிடுகிறது.
1. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம் (முக்கால்வாசி இந்தியர்கள் இதைப் பேசுகின்றனர்)
2. திராவிட மொழிக் குடும்பம் (ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்கள் பேசுகின்றனர்)
3. ஆஸ்திரோ ஆசிய மொழிக் குடும்பம் (1.2 சதவீத இந்திய மக்கள் பேசுகின்றனர்) 
4. திபெத்திய பர்மிய மொழிக் குடும்பம் ( 1 சதவீதத்திற்கும் குறைவான இந்தியர்கள் பேசுகின்றனர்)
சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என அழைப்பது ஆய்வு ரீதியாக பொருத்தமானதாக இருக்காது, ஏனெனில் கக்கர்- ஹக்ரா ஆறுகளை சரஸ்வதி என அழைப்பதில் இருக்கும் சர்ச்சைகள் இதற்கு வலு சேர்க்கவில்லை என்பதையும் நூலாசிரியர் கூறி இக்கருத்தாக்கத்தைத் தகர்க்கின்றார்.

--- 6 --- 

இந்த நூலின் இறுதி அத்தியாயமாக வருவது `இறுதியாக குடியேறியவர்கள்:ஆரியர்கள்` என்ற தலைப்பிலான பகுதி.  உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்யும் கேள்வியாக இன்றளவும் இருப்பது இந்திய-ஐரோப்பிய மொழி பேசியவர்களது இந்தியாவிற்கான வருகையைப் பற்றிய காலம், அதன் தாக்கம், அவை ஏற்படுத்திய விளைவுகள் என்பது தொடர்பானவை. 

Early Indians-fig.6.JPG

இதற்கு முக்கியக் காரணம்;
1) இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய சமஸ்கிருத அல்லது வேத கலாச்சாரத்தைச் சார்ந்தது அல்ல என்பது,
2) இந்திய ஐரோப்பிய மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவிற்கு வந்தனர் என்று கேட்பது.. எப்போது நாம் நம்முடைய கலாச்சாரத்தில் பல்வேறு கூறுகளை இறக்குமதி செய்தோம்... அல்லது இரண்டறக் கலக்கும் வகையில் உள்வாங்கிக்கொண்டோம் என்று கேட்பதற்குச் சமமானது, 
என்ற இரண்டு காரணங்களை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

சற்று நமது சமகாலச் சூழலைச் சிந்திப்போம்...
நமது அன்றாட வாழ்வியலைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற சடங்குமுறைகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், மூடப் பழக்க வழக்கங்கள் என ஒவ்வொன்றாக எடுத்துப் பட்டியலிட்டு அவற்றை நாம் ஆராயத் தொடங்கினால் தமிழர் பண்பாட்டின் அடிநாதமாக இருக்கின்ற இயற்கை சார்ந்த வாழ்வியல் கூறுகளிலிருந்து வெகுதூரம் பெயர்ந்து ஆரியர்களின் வைதீக பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் ஒவ்வொரு சிறு சிறு கூறுகளாக உள்வாங்கிக் கொண்ட உண்மையை நாம் உணர முடியும். பேச்சளவில் ஆரியத்தையும் சமஸ்கிருதத்தையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளி வைப்பவர்கள் கூடத் தங்களது அன்றாடக் குடும்பச் சடங்குகள், வழிபாட்டுக் கூறுகள் ஆகியவற்றில் அப்பண்பாட்டுக் கூறுகளை இயல்பாக உள்வாங்கிக் கொண்டு அவற்றைக் கடைபிடித்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இது இன்றைய நிதர்சனமான நகைமுரண்!

இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசிய தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் எங்கிருந்து இந்திய நிலப்பகுதி வந்தார்கள் அவர்கள் எப்போது இங்கு வந்தனர்? இதுவே மையக் கேள்வி.
தற்போது இந்திய மக்களில் முக்கால்வாசிப்பேர் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி போன்ற இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். உலக மக்களில் இதே மொழிக் குடும்பத்தைச் சார்ந்த 40 சதவிகிதத்தினர் ஆங்கிலம், ஸ்பானிஷ் பிரெஞ்சு, ஈரான், ரஷ்யன், ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியத் துணைக்கண்டம் தான் இந்து ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு எல்லையாக இருக்கிறது. இந்தியாவிற்குக் கிழக்கே  இந்திய-ஐரோப்பிய மொழியைப் பேசும் நாடுகள் இல்லை. இந்த நிலையில் இந்த இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் எப்படி இந்தியாவின் ஆதிக்க மொழியாக மாறியது என்ற கேள்வியை முன்வைக்கின்றார் நூலாசிரியர்.  இந்த மொழி இந்த நிலத்தில் தோன்றாதது,  கடந்த ஒரு காலத்தில் இந்தியாவிற்குள் வந்திருக்க வேண்டும் என்று தன் பதிலையும் இரண்டு வெவ்வேறு சாத்தியக்கூறுகளை விளக்கி விவரிக்கின்றார்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக உலகளாவிய பல அறிஞர்களையும் சோர்வடையச் செய்துகொண்டிருந்த ஆரியர்களின் இடப்பெயர்ச்சி தொடர்பான கேள்விக்கு மரபணுவியல் ஆய்வுகள் விடை கண்டுள்ள செய்தியை மரபியல் கூறுகளை விளக்கி அறிவியல்பூர்வமாக நூலாசிரியர் இப்பகுதியில்  இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது தொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வு 2018 மார்ச் 31 அன்று வெளியான The Genomic Formation of South and Central Asia என்ற தலைப்பு கொண்ட அறிக்கையாகும். (ஆர்வமுள்ளோர் இணையத்திலிருந்து  வாசிக்கலாம்). 

--- 7 --- 

இறுதியாகக் குடியேறியவர்கள் ஆரியர்கள் என்ற இறுதி அத்தியாயத்தில் மேலும் சில பகுதிகளைக் காண்போம்.

ஸ்டெப்பி புல்வெளியில் இருந்த  மேய்ப்பாளர்கள் இன்றைய வடக்கு  ஆப்கானிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகளில் பரவியிருந்த நாகரிகங்களின் மீது எந்தத் தாக்கத்தையும் விளைவிக்காமல் தெற்கு நோக்கிச் சென்று தெற்காசியாவை அடைந்து அங்கு ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மக்களுடன் இனக்கலப்பில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இந்தியாவில் இன்று இருக்கும் இரண்டு முக்கிய பரம்பரையில் ஒன்றான வட இந்திய மூதாதையர் என்ற பிரிவு  உருவாக இவர்கள் காரணமாகினர். 

தென்னிந்திய மூதாதையர் என்போர் அதே காலகட்டத்தில் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் தெற்குப் பகுதி இந்தியாவிலிருந்த முதல் இந்தியர்களுடன் மேற்கொண்ட இனக்கலப்பால் உருவானவர்கள்.  இந்த ஸ்டெப்பி புல்வெளி மேய்ப்பாளர்கள் யம்னயா என்று அழைக்கப்படுகின்றார்கள்.

Early Indians-fig.7.JPG

யார் இந்த யம்னயா மக்கள் என்ற கேள்வி தற்சமயம் மனிதகுல ஆய்வுலகில் ஆர்வத்துடன் பேசப்படும் ஒரு கேள்வியாக அமைகிறது.  இவர்கள் அடிப்படையில் கி.மு 50,000லிருந்து  30,000 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளில் குடியேறியவர்கள். ஏனைய மக்களுடன் இருந்து தூரமும் புவியியல் தடைகளும் அவர்களைப் பிரித்ததால் மரபியல் ரீதியில் முற்றிலுமாக வேறுபட்டவர்களாக இவர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தனர்.

யம்னயா மக்களின் தனிப்பட்ட பண்பாட்டுக் கூறுகளாக இறந்து போன ஒருவரை ஒரு மரப்பெட்டியில் போட்டுப் புதைத்து அந்த இடத்தில் கல்லாலும் மண்ணாலும் மேடெழுப்பி கல்லறை மேடுகளை உருவாக்கும் பண்பும், குதிரைகள் பூட்டிய சக்கரங்கள் கொண்ட வண்டிகள் அமைத்தல் என்ற பண்பும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளில் குதிரைகள் பூட்டிய வண்டிகள் அவர்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும், தண்ணீரைச் சுமந்து வரவும் புதிய பகுதிகளுக்குப் பயணம் செய்து அங்குப் பெண்களைக் கவர்ந்து அப்பகுதிகளில் இனப்பெருக்கத்தின் வழியாக   தங்கள் எண்ணிக்கையையும் ஆளுமையை விரிவாக்கம் செய்தமை போன்றவற்றைக் கூறலாம்.

யம்னயா மக்கள் கிமு 3,000 ஆண்டு வாக்கில் முதலில் ஐரோப்பாவில் நுழைந்தனர்.    'கயிற்றுப் பதிவுப் பாண்டம்' (Corded ware culture)  பண்பாட்டுடன் யம்னயா குழு தொடர்புப் படுத்தப்படுவதையும் காண்கிறோம். உதாரணமாக ஜெர்மனியில் கிடைத்த பண்டைய மனிதர்களின் டிஎன்ஏ  ஆய்வுகளின்படி இப்பண்பாட்டைச் சார்ந்தோரில் 75 சதவீதத்தினர் யம்னயா பரம்பரையினர் என்பது தெரிய வந்தது.   ஐரோப்பாவில் யம்னயா பரவலாக்கம் மத்திய தரைக்கடல் பகுதியில் வழக்கிலிருந்த பெண் தெய்வ வழிபாட்டை மாற்றி வன்முறையின் வடிவமாகத் திகழ்கின்ற சீயஸ் போன்ற ஆண் போர் கடவுளர் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது; இதன் தொடர்ச்சியாக  ஆணாதிக்கச் சமூகமாக இது மாறியது என்பதையும், இதன் தாக்கம் ஐரோப்பா முழுமைக்கும் பரவியது  என்பதையும் காண முடிகிறது.

இதில் மிக முக்கியமாகக் கருத வேண்டிய ஒன்று, 'இடம் பெயர்ந்தவர்கள் உருவாக்கிய புதிய கலாச்சாரங்களில் வன்முறையைக் கொண்டாடுகின்ற, ஆண்களை மையப்படுத்துகின்ற போக்கு மிகவும் தூக்கலாக இருந்தது என்பது. இதற்குச் சான்றாக, அகழாய்வுகளில்  கிடைத்த கல்லறைகளில் பெரும்பாலும் ஆண் எலும்புக்கூடுகளே காணப்பட்டன என்றும், அவை பெருங்காயங்களுடன் இருந்தன என்றும் அவற்றின் அருகில் போர்க்கோடாரிகள் இருந்தன' என்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். யம்னயா மக்களின் இடப்பெயர்ச்சி ஆண்களை மையமாகக் கொண்டிருந்தது.   யம்னயா மக்களிடம் மண்பாண்டங்கள் செய்யும் பாரம்பரியம் இருக்கவில்லை. அவர்கள் ஓரிடத்தில் தங்காமல் வெவ்வேறு இடங்களுக்குத் திரிந்து கொண்டிருந்தமையால்  அவர்களுக்கு உடையாத, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் தேவைப்பட்டன.  ஆனால் கயிற்றுப் பதிவுப் பாண்டப் பண்பாட்டைச் சேர்ந்த பெண்களை இவர்கள் கவர்ந்ததால் மண்பாண்டங்கள் செய்யும் கலை இவர்கள் பண்பாட்டில் இடம்பெறத் தொடங்கியது. இதனை விவரிக்கும் வகையில் யம்னயா இனத்தின் ஆரம்பக்காலக் கல்லறைகளில் கிடைக்காத மண்பாண்டங்கள் பிந்தைய கல்லறை அமைப்புகளில் கிடைப்பதை ஆசிரியர் விளக்குகிறார். 

Population Genomics of Bronze Age Eurasia என்ற தலைப்பிலான 2015ம் ஆண்டு கட்டுரை வழங்கும் இடப்பெயர்வு தகவல்களையும் இப்பகுதியில் நூலாசிரியர் விவரிக்கின்றார். தங்களை ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய இந்த ஸ்டெப்பி புல்வெளி மேய்ப்பாளர்கள்  இந்தோ-ஈரானியர்  என்றும் அழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் இறுதியில் ஈரானிலும், இந்தியாவிலும் நிரந்தரமாகக் குடியேறினர் என்றும், ஜொராஸ்டிரிய மதத்தின் முக்கிய புனித நூலான அவெஸ்தாவிலும் ரிக் வேதத்தில் வெளிப்படுகின்ற கலாச்சாரங்கள் மற்றும் தொன்மக்கதைகளில் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். 

2017ம் ஆண்டில் வெளிவந்த  A Genetic Chronology for the Indian Subcontinent  Points to heavily sex-biased Dispersals என்ற கட்டுரையைக் குறிப்பிட்டு இந்திய-ஐரோப்பிய மேய்ப்பாளர்கள் சமுதாயங்களில் பரவலாகக் காணப்படுகின்ற  ஆணாதிக்க அமைப்பு முறை, திருமணமானதும் மணப்பெண்ணை மணமகன் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம், தந்தை வழி உறவு முறை போன்றவற்றோடு பொருந்துவதையும் குறிப்பிடுகின்றார். இதனை நோக்கும் போது இன்று தமிழ்ச்சமூகம் உள்வாங்கிக் கொண்ட முக்கிய சமூக அமைப்பாக உள்ள மணமகள் கணவன் வீட்டிற்கு அனுப்பும் முறை, ஆரியப் பண்பாட்டைத் தமிழ்ப் பண்பாடும் உள்வாங்கிக் கொண்டதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. இது, நமது சமூக வாழ்வியல் கூறுகளையும் தமிழர்கள் மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது!

--- 8 --- 

ஆதி இந்தியர்கள் யார் என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சியை எளிதாக விவரிக்க நூலாசிரியர் டோனி ஜோசஃப் நாம் சாப்பிடும் பீட்சாவை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்.
1. பீட்சாவின் அடித்தட்டு -  65,000 ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி, மத்தியக் கிழக்கு ஆசியா வழியாக வந்து, இந்தியக் கடற்கரையோர நிலப் பகுதிகளின் வழியாக தென்னிந்தியா வரை வந்து,  பிறகு கிழக்கு நோக்கிச் சென்று இந்தியா முழுமைக்கும் பரவியவர்கள். இவர்களே பூர்வகுடி மக்கள் என்று அறியப்படுபவர்கள். 
2. அடுத்து, ஜாக்ரோஸ் மலைப்பகுதி மேய்ப்பாளர்கள் பலுசிஸ்தான் வந்தடைந்து, அங்கிருந்த முதல் இந்தியர்களோடு இனக்கலப்பில் ஈடுபட்டபோது பீட்சாவின் அடித்தட்டின் மீது பரப்பப்பட்ட சாஸ் போன்று என எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியவர்கள்.
3. பொ.ஆ.மு 2000ப் பிறகு ஆரியர்கள் இப்பகுதிக்கு வந்தபோது அந்த அடித்தட்டின் மேல் ஏற்கனவே பூசப்பட்ட தக்காளி சாஸின் மீது தூவப்பட்ட சீஸ்  போல அவர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்களை வட இந்தியாவில்  அதிகமாகவும்  தென்னிந்தியாவில் குறைவாகவும் பீட்சாவின் மீது உள்ள தக்காளி சாஸின் மீது  தூவப்பட்டது போல உருவகப்படுத்திக் கொள்ளலாம்.
4. அதே காலகட்டத்தில் வெளியிலிருந்து இந்திய நிலப் பகுதிக்குள் வந்த ஆஸ்திரோ ஆசிய மொழிகள் பேசும் மக்கள், திபெத்திய பர்மிய மொழிகள் பேசிய மக்கள், கிரேக்கர்கள், யூதர்கள், பார்சிகள், சிரியர்கள், முகலாயர்கள், போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், என பலப்பல சீஸ் வகைகளும் இந்தப் பீட்சா தட்டின் மேல் தூவப்பட்ட வகையில் உருவகம் செய்கிறார். இப்படி பல்வேறு காலகட்டங்களில் இந்த பீட்சா அடித்தட்டின் மேல் இருக்கின்ற தக்காளி சாஸின் மேல் படிப்படியாக தூவப்படுகின்ற சீஸ்களாக   இந்தியாவிற்குள் வந்து சேர்ந்த, இங்கேயே தங்கிவிட்டவர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டு இந்தியர்களாக உருவானதை இவ்வகையில் பீட்சா ஒன்றை உதாரணமாக எடுத்துக் கொண்டு பீட்சா உருவகத்தைப் பயன்படுத்துகிறார் நூலாசிரியர். 
இது இந்திய நிலப்பகுதிக்குள் மக்கள் இடப்பெயர்ச்சியையும், குடியேற்றத்தையும் எளிதாக விளக்குகின்றது எனலாம்.  

fig8.jpg

பொ.ஆ.மு. 150 வாக்கில் பதஞ்சலி எழுதிய மகாபாஷ்யம் என்ற நூலில் ஆரியர்களின் பூமி எது என்று கேள்வி எழுப்பி,  கலாக்கா காடுகள், கங்கை ஆறும் யமுனை ஆறும் சந்திக்கும் இடத்திற்கு அருகில் இருந்திருக்க வேண்டுமென்றும், பரியாத்திரை மலைகள் அதாவது விந்தியமலைகளாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். 

பொ.ஆ.மு 500 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் தோன்றிய மகத நாடும் மகதப் பேரரசும்  வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஓர் அரசு. பொ.ஆ.மு   7ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் இடையே இங்கிருந்துதான் புத்த மதமும் சமண மதமும் தோன்றின.  இவை ஏற்கனவே இருந்த ஆரிய மதத்தின் அடிப்படையான வேத நூல்களையும், சடங்குகளையும், சமூகத்தில் நிலவிய பழக்க வழக்கங்களையும் கேள்வி கேட்டன. முதல் இந்தியப் பேரரசான மௌரியப் பேரரசு பொ.ஆ.மு 322 -180ல் இப்பகுதியில்தான் தோன்றியது.
ஆரியர் பண்பாட்டை விளக்கும் நூலாசிரியர் கீழ்க்கண்ட வகையில் குறிப்பிடுகின்றார். 
 - அர்ச்சகர்களுக்குத் தாராளமாக தானம் வழங்குவது
 - பெரிய பலிச் சடங்குகள்
 - ஆட்சியாளர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நெருக்கமான சார்புடைய உறவு

மௌரியப் பேரரசைப் பற்றி விவரிக்கும் நூலாசிரியர், ஆய்வாளர் புரோன்க்ஹார்ஸ்ட் கூறும் கீழ்க்காணும் செய்திகளைப் பதிகிறார். அவை: 
 - மௌரியப் பேரரசை ஆண்ட எந்த அரசருக்கும் பிராமணர்களிடத்திலும் அவர்களுடைய கோட்பாடுகள் மீதும் எவ்விதமான ஈடுபாடும் இருக்கவில்லை
 - மகத நாட்டின் தொடக்கக் கால அரசர்களாகிய பிம்பிசாரர், அஜாதசத்ரு ஆகியோர் தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று புத்த மதத்தினர் கூறுகின்றனர்; இதையே ஜைன மதத்தினரும் கூறுகின்றனர்.
 - பொ.ஆ.மு 350ஆம் ஆண்டுவாக்கில் அப்பகுதியை ஆண்ட நந்த பேரரசர்கள் ஜைன மதத்தைப் பெரிதும் ஆதரித்தனர்.
 - நந்தர்களைத் தூக்கி எறிந்த சந்திரகுப்த மவுரியர் நந்தர்களைப் போலவே பிராமணர்களிடத்திலும் எந்தவிதமான ஈடுபாடும் காட்டவில்லை
 - சந்திரகுப்த மவுரியர் ஜைன மதத்திற்கு மாறி ஒரு ஜைன துறவியாக இருந்தார்
 - அவருடைய மகன் பிம்பிசாரர் பிராமணர்கள் அல்லாத சமய இயக்கங்களை, குறிப்பாக, ஆசீவகச் சமய இயக்கத்தை ஆதரித்தார்
 - அவருடைய மகனான அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்
 - அவருக்கு அடுத்து வந்தவர்கள் ஆசீவகத்தில் அதிகம் ஆர்வம் காட்டினர்
 - மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் வந்த கங்கர்கள் பிராமணர்களாக இருந்த காலகட்டத்தில்தான், பொ.ஆ.மு 185 வாக்கில்,  பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் எதிர்பார்த்த இடத்தை அடையத் தொடங்கினர். 
மனுதர்ம சாத்திரம் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

பொ.ஆ.மு 6-2ஆம் நூற்றாண்டு காலகட்டம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற காலமாகக் கருதப்படுகிறது.உபநிடதங்கள் இயற்றப்பட்டன.உலகிலேயே முதன் முதலாக மதப் பரப்பாளர்கள் மூலமாக மதங்கள் பரப்பிய பௌத்தமும் சமணமும் தோன்றின.சமணம் இந்தியாவின் பல இடங்களுக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.புத்த மதம் கிழக்காசிய நாடுகளிலும் உலகின் ஏனைய பிற பகுதிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது. 

இவை மட்டுமன்றி, சங்கத்தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்ட பொற்காலமாகவும் தமிழ் மன்னர்களின் அரசுகள் தோன்றி வளர்ந்து, உழவும் வணிகமும்  விரிவாக்கம் பெற்ற காலமாகவும் இது திகழ்ந்தது என்பதையும்  நாம் குறிப்பிட வேண்டும். 

--- 9 --- 


நம்மைச் சுற்றி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகின்ற ஒரு முக்கிய கேள்வி, எப்போது சாதி அமைப்பு என்பது இந்திய சூழலில் வலுப்பெற்றது என்பதாகும். இதற்கான பதில் தருவதாக அமைகிறது நூலின் முடிவுரை பகுதி.
 - பொ.ஆ 1ஆம் நூற்றாண்டு வரை சாதியக் கட்டமைப்புடன் கூடிய சமூகநிலை இந்தியாவில் இல்லை.
 - பொ.ஆ 2ஆம் நூற்றாண்டில் சமூகத்திற்குள் புகுத்தப்பட்ட சமூக அடுக்கு அதிகார அமைப்பு இந்த சாதி அமைப்பு.
 - இந்தச் சாதி அமைப்பு மக்களைச் சிறு சிறு துண்டுகளாகப் பிரித்துள்ளது; இது மிக முக்கியமாக ஒரு பாதிப்பை இந்திய சமூகத்தில் வழங்கியிருக்கின்றது. அது என்னவெனில், ஒரு சமுதாயத்தில் உள்ள தனிநபர்களின் ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்தும் திறனை சமுதாயம் இழக்கின்ற ஒரு நிலையாகும்.
 - பொ.ஆ 1ஆம் ஆண்டு வரை இருந்த சமூக பண்பாட்டுச் சூழலில் இதற்கு அடுத்த நூற்றாண்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சாதி சமூக கட்டமைப்பு புகுத்தப்பட்டு படிப்படியாக அது உறுதி செய்யப்பட்டது
 - புத்தமதம் அது தோன்றிய பூமியிலேயே தோற்கடிக்கப்பட்ட பின்பும் பல நூற்றாண்டுகள் படிப்படியாக வலுவிழந்தாலும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது.
 - பொ.ஆ 2ஆம் நூற்றாண்டை ஒட்டி இந்தியாவில் சாதி அமைப்பு முறை தோன்றி சமண பௌத்த மத தத்துவங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதைக் காண்கின்றோம். ஆதிசங்கரரின் படைப்புகளிலிருந்து தர்க்கரீதியான விவாதங்கள் மற்றும் வன்முறை மூலமாக கருத்து மோதல்கள் தொடர்ந்தன என்பதையும் காணமுடிகிறது.
 - சாதி சமூக கட்டமைப்பு ஏற்படுத்திய பிரச்சனைகளை எதிர்த்து அம்பேத்கர் தனக்கும் தன்னைப் பின்பற்றியவர்களுக்கும் புத்தமதத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு சமுதாயம் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த கருத்து முரண்பாடுகள் தொடர்ந்து இன்று வரை தொடர்வதைக் காட்டுகிறது.
 - அதேவேளை அம்பேத்கருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே ஏற்பட்ட சித்தாந்த ரீதியான கருத்து முரண்பாடுகள் ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரியத்தின் பழமைவாதம் கொண்டிருந்த கருத்துகளுக்கும் மகத நாட்டின் முற்போக்கு வாதம் கொண்டிருந்த கருத்துகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை ஒத்ததாக காண வைக்கின்றது என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்திய கலாச்சாரம் ஒத்த தன்மை கொண்டதல்ல; மாறாக அது பன்முகத்தன்மை கொண்டது. ஒற்றைக் கலாச்சாரம் என்ற கொள்கையை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் இன்றும்  தொடருகின்றன; அதே சமயம் அவை தோற்கடிக்கப் படுகின்றன. 

இந்திய வரலாறு எழுதப்பட்டிருக்கும் முறை தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்படவேண்டும்; பெரும்பாலான சமயங்களில் நமது வரலாறு எழுதப்பட்டிருக்கும் முறையை நியாயப்படுத்தும் முயற்சி மட்டுமே நடைபெறுகிறது என நூலாசிரியர் விமர்சிக்கின்றார்.

இந்திய வரலாறு எப்போது தொடங்கியது என்ற கேள்விக்கு 65,000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் இந்தியா வந்து சேர்ந்த வேளையிலிருந்து தான் அது தொடங்கப்படுகிறது என்கிறார் நூலாசிரியர். வரலாறு திரிக்கப்படாமல் இருக்கவும், அது மக்களுக்குத் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும் என்றால், சரியான அடித்தளத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். அதாவது, இன்றைய மக்களின் மூலாதாரமாக இருந்த மக்களான முதல் இந்தியர்களிடம் இருந்து தான் இந்திய வரலாறு தொடங்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

இறுதியாக, இந்தியர்களாகிய நாம் உண்மையில் யார்? என்ற கேள்விக்குப் பல மூலங்களிலிருந்து முகிழ்த்து எழுந்த நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியர்கள்; ஒற்றை மூலத்திலிருந்து உருவானவர்கள் அல்ல என்ற பதிலை முன்வைக்கின்றார். பலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் நம்முடைய கலாச்சார தூண்டல்கள், பாரம்பரியங்கள், நடைமுறைகள் ஆகியன விதவிதமான உள்ளூர் பரம்பரைகளிருந்தும் வெளியே இருந்து இடம்பெயர்ந்தவர்களின்  வம்சாவளிகளிடம் இருந்தும் பெறப்பட்டவை. 
1. 65,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி இந்த நிலப்பகுதிக்கு வந்தடைந்த துணிச்சல் மிக்க முன்னோடிகளின் பரம்பரை தான் இன்றும் இந்திய மக்களின் அடிநாதமாக இருந்து வருகிறது.
2. மேற்கு ஆசியாவில் இருந்து வந்த இன்னொரு குழு வேளாண் புரட்சிக்கு வித்திட்டது; ஹரப்பா நாகரீகத்திற்கும் பங்களித்தது.இந்த ஹரப்பா நாகரீகம் தான் இன்றைய இந்திய கலாச்சாரத்தைச் செழிப்பாக ஆக்கிய திராவிட மொழிகள் புதிய சித்தாந்தங்கள் மற்றும் நடைமுறைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது.
3. மத்திய ஆசியாவிலிருந்து வந்து சேர்ந்த இன்னொரு குழு சமஸ்கிருதத்தின் தொடக்கக்கால வடிவத்தைத் தங்களுடன் கொண்டு வந்தது. அந்த மொழியோடு கூடவே நமது சமுதாயத்தின் அடிப்படையை மறு வடிவமைப்பு செய்த நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் அது கொண்டுவந்தது.
4. இதனை அடுத்து இந்தியா மீது படையெடுத்து வந்தவர்கள், வர்த்தகம் செய்ய வந்தவர்கள், என அனைவரும் கலந்து  இந்தியா என்று நாம் அழைக்கும் நாகரீகத்திற்குத் தங்கள் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
முடிவுரையின்  இறுதியில் நூலாசிரியர் இப்படிக் கூறுகிறார்,"நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் தாம்!"

மிக நீண்ட காலம் நிகழ்த்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்திய சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மரபணுவியல் ஆய்வுகள் இந்த நூற்றாண்டின் தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் துணையாக அமைகின்றன. இந்திய மக்களின் மூதாதையர்களைப் பற்றியும்- நாம் யார் - நமது மூதாதையரின் பண்டைய  பண்பாடுகள் - இந்திய சமூகக்கட்டமைப்பில் சாதிய அமைப்பின் தோற்றம், வளர்ச்சி - போன்ற அடிப்படை கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் சரியான பாதையை அமைக்கின்றது இந்த நூல். ஒவ்வொரு இந்தியரும் வாங்கி வாசித்து தனது தோற்றப்புள்ளியைப் புரிந்து கொள்ள இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டி!


---  ***  --- 

Saturday, May 15, 2021

இலங்கையில் சிங்களவர்

நூல் திறனாய்வு: முனைவர்.க.சுபாஷிணி

இலங்கையில் சிங்களவர்
 - இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் - 
நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி



மானுடவியல் துறையில் சீரிய வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களுள் ஒருவர் பக்தவச்சல பாரதி. இவரது ஏனைய நூல்களான தமிழர் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழகப் பழங்குடிகள் போன்ற ஏனைய சில நூல்களின் பட்டியலில் இணைவது தான் `இலங்கையில் சிங்களவர்` என்ற தலைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த நூல். ஏறக்குறைய 200 பக்கங்களைக் கொண்டிருந்தாலும் இந்த நூல் சிங்களவர் வரலாறு, பண்பாடு, சமூக நிலை, மரபணு ஆய்வு என்று நுணுக்கமாக பல தகவல்களை வழங்குவதால் இந்த நூல் கூறும் முக்கிய விஷயங்களைத் தனித்தனியே ஆராய்வது அவசியமாகின்றது.

தமிழக வரலாற்றை ஆராய முற்படும் பலரும் தமிழக நில எல்லைக்குள் ஆய்வுக் களத்தை அமைத்துக் கொள்வது இயல்பு. இதற்கு மாற்றாக தமிழகத்திற்கு அருகில் இருக்கும் இலங்கையில் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலை அவர் எழுதுவதற்கு அவருக்குக் கிடைத்த நேரடி அனுபவங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நூலாசிரியர் மூன்று முறை வெவ்வேறு காரணங்களுக்காக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யக் கிடைத்த தனது வாய்ப்பையும் அதன் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு தீவிர வாசிப்பு, கலந்துரையாடல்கள் மற்றும் நூல் ஆய்வு என்ற அடிப்படையிலும் இந்த நூல் அமைந்திருக்கின்றது.

இலங்கையைப் பற்றி ஆராய முற்படும் எல்லோருக்கும் பொதுவாகவே ஆய்வுக்கவனம் `தமிழர்கள், தமிழ்மொழி` என்ற அடிப்படையில் அமைவதுண்டு. ஆனால், இந்த நூல் இலங்கையில் சிங்களவர் பற்றி பேசுகிறது. `சிங்களவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள்; பௌத்தத்தைத் தனது சமயமாக கடைப்பிடிப்பவர்கள்; ஆயினும் திராவிட பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள்`, என்ற கருத்துடன் நூலைத் தொடங்குகிறார் நூலாசிரியர். வரலாற்று ஆய்வுகளில் நமக்கு அருகில் இருக்கும் நாடுகளைப் பற்றிய, அங்கு வாழ்கின்ற மக்களின் சமுதாய நிலை பற்றிய ஆய்வுகளிலும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்ச்சி நோக்கம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை நூலில் குறிப்பிடுகிறார்.

இலங்கை ஏறக்குறைய இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய நிலப்பகுதியின் ஒரு பகுதியாக இருந்து அதன் பின்னர் கடல் ஏற்றத்தால் தனித்தீவாகியது.  சிங்கள, சிஹல போன்ற சொற்கள் பொ.ஆ. 3 முதல் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சொல். ஆயினும் ஈழம் (ஈலம்) என்னும் சொல் மிகப் பழங்காலத்தில் வழக்கில் இருந்தது என்பதைச் சான்று கூற பல எடுத்துக்காட்டுகள் வழங்குகின்றார். சங்க இலக்கியத்தில் ஈழம் என்ற சொல்லைக் குறிப்பிட்டு வருகின்ற செய்யுட்கள் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய 4500 ஆண்டுகளுக்கு மேலாக இத்தீவினை ஈழம் என்று அழைக்கும் மரபு இருந்துள்ளது என்பதை நூலாசிரியர் முன்வைக்கின்றார்.

இலங்கை வரலாறு எனும் போது மகாவம்சமும், தீபவம்சமும், சூளவம்சமும் முக்கியத்துவம் பெறுபவை. இவை கூறும் செய்திகளின் அடிப்படையில் இலங்கையில் மக்கள் குடியேற்றம் பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் விஜயனின் தலைமையில் நடந்தது எனக் குறிப்பிடப்படுகிறது. இதனை வாசிக்கும் போது எல்லோருக்கும் எழுகின்ற கேள்வி, இலங்கைத் தீவில் விஜயனின் வருகைக்கு முன்பு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்களது இன அடையாளம் என்ன? அவரது பண்பாடு எது? போன்றவையாகும்.

இலங்கைத் தீவில் பன்னெடுங்காலமாக வாழ்ந்த மக்களுள் பூர்வகுடிகளான நாகர் இன மக்கள் என்னும் இக்கருத்தை வலியுறுத்தும்  வகையில் அமைந்த தொல்லியல் ஆய்வுகள் அண்மைய கால கண்டுபிடிப்புகளில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணத்திற்கு அருகே மன்னார் தீவுக்கு அருகே உள்ள கட்டுக்கரை பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் நாகர் பண்பாட்டுச் சான்றுகள் பல கிடைக்கப் பெற்றமை குறித்து அந்த அகழாய்விற்குத்  தலைமை தாங்கிய பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களது கட்டுரைகள் நமக்கு நல்ல சான்றுகளாக அமைகின்றன. இந்த நாகர் மக்கள் தமிழர்களின் மூதாதையர்கள். தென்னிந்தியாவில் கிடைப்பது போல தொல்தமிழ்  தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் இன்று இலங்கைத் தீவில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அனுராதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கிடைத்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக சிங்களமொழி உருவான பொ.ஆ 5ம் நூற்றாண்டுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தத் தீவில் தமிழ் மொழியும் தமிழ் பேசும் மக்களும் வாழ்ந்தார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இந்த அடிப்படையில் இலங்கைத் தீவிற்குக் குடிபெயர்ந்த சிங்கள மக்களின் மரபணு, பண்பாடு, சமயம், சமூக நிலை, வரலாறு ஆகியவற்றை ஆராய்வதே இந்த நூலில் அடிப்படை நோக்கமாக அமைகிறது.

மகாவம்சத்தை மொழிபெயர்த்த  ஜெர்மானியரான வில்கம் கெய்கர் (1938),  இலங்கைக்கு வந்த விஜயன் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து புறப்பட்டு வந்தவன் என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதனடிப்படையில் காணும்பொழுது அனேகமாக பஞ்சாப், குஜராத் ஆகிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். ஒரு சில ஆய்வாளர்கள் சிங்களவர்கள் இன்றைய ஒரிசா மாநில பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றும் ஒரு சிலர் இன்றைய வங்காளதேசம் நாட்டின் நிலப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகின்ற ஆய்வுகளையும் காண்கிறோம். இத்தகைய குழப்பத்தைத் தெளிவு படுத்த மரபணு ஆய்வு என்பது முக்கியமாகிறது.

இந்த நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் நூலாசிரியர் சிங்கள இன மக்களின் மரபணு ஆய்வுகளை விரிவாக அலசுகிறார். இலங்கையில் இன்று நாம் காணும் போது அங்கு வாழ்கின்ற மக்களை சிங்களவர், இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், மலாய்க்காரர்கள், வேடர்கள், பர்கர் (டச்சு போர்த்துகீசிய நாட்டவர்கள்) என்ற வகையில் பிரிக்கலாம். மரபினக் குழு C, F, H, L, R2, J2 O3, R1A1, என்ற வகையிலும் இன அடையாளக் கூறு M130, M89, M69, M20, M124, M172, M122, M17   அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சிங்களவர் மரபணு எந்த இனக் குழு மற்றும் மரபின குழு வட்டத்திற்குள் வருகிறது என்பதை நூலாசிரியர் இந்தப்பகுதியில் விளக்குகின்றார்.  M17 இன அடையாளக் கூறு கிழக்கு ஐரோப்பிய மக்களுக்கு உரியது. இதனை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்கள். உதாரணமாக பஞ்சாபியர் குஜராத்தியர் மராத்தியர் ஆகியோரிடம் மிக அதிகமாக காணப்படுகின்றது. அதேபோல மேற்குவங்கப் பிராமணர்களிடம் 72% அளவும் பிராமணர்களிடம் 48% அளவு உள்ளன. அதேபோல தென்னிந்தியாவில் ஐயங்கார் பிராமணர்களிடம் 31% , செஞ்சு பழங்குடிகளிடம் 26% இது காணப்படுகிறது என்ற செய்தியையும் குறிப்பிடுகிறார். இதற்கு எதிர் மாறாக M20 இன அடையாளக் கூறு மத்தியக் கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு ஏறக்குறைய 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மிகப்பெரிய எண்ணிக்கையில் அமைந்த குழு என்றும்,  இந்த மரபணு மூலத்தைக் கொண்ட மக்களே இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மிக அதிகம் இருக்கின்றனர் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 

இலங்கை மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பாக மரபணு ஆய்வு எனும் பொழுது இந்த நூலில் நூலாசிரியர் 6 ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.

1. டாக்டர் கிர்க் ஆய்வு - இவரது ஆய்வு The legend of Prince Vijaya: A study of Sinhalese origins.1976ம் ஆண்டு வெளிவந்தது. இவரது ஆய்வின் படி இன்றைய சிங்களவர்களின் மரபணுக்களை ஆராய்ந்தபோது சிங்களவருக்கும் தமிழருக்குமான தொடர்பு நெருக்கமாக இருப்பதும் ஏனைய பஞ்சாபியர் குஜராத்தியர் வங்காளியரோடு ஒப்பிடும்போது  நெருக்கம் குறைந்து இருப்பதும் வெளிப்பட்டது. சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே உள்ள தூரமும் சிங்களவருக்கும் வங்காளியருக்கமான தூரமும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதை இவரது ஆய்வுகள் சுட்டிக் காட்டின. ஆக வங்காளியர்கள் முன்னர் திராவிட மொழி சமூகத்தாராக இருந்து பின்னர் இந்தோ-ஆரிய மொழி தாக்குதலுக்கு ஆட்பட்டு அந்த மொழியை ஏற்றுக் கொண்டு இருத்தல் வேண்டும் என்கிறது இவரது ஆய்வு.

2. டாக்டர் சாஹா ஆய்வு - இவரது ஆய்வுகள் இலங்கை சிங்கள மக்கள் வங்காளியர்களைவிட இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழருடனும் மரபணு ரீதியில் நெருங்கிக் காணப்படுகின்றனர் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. வங்காள மக்களோடு சிங்களவர்களுக்குத் தொடர்பு உண்டு எனும் பழங்கதை காலம் காலமாக இருந்து வந்தாலும் அதனை மெய்ப்பிக்கும் வகையிலான மரபணு நெருக்கம் இந்த இரண்டு இனக் குழுவினருக்கும் இல்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். ஆனால்,  வரலாற்றின் ஒரு காலகட்டம் வரை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  ஒத்த மரபணு (gene pool) கொண்டவர்களாக இருந்து பின்னர் பல்வேறு சமூக நிலை மாற்றங்களின் அடிப்படையில் சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்தனர் என்று இவரது ஆய்வு குறிப்பிடுகிறது.

3. பாத்திஹா ஆய்வு (முதல் கட்டம்) - இந்த ஆய்வு மரபணு நெருக்கத்தை ஆராயும்போது சிங்களமக்கள் தமிழர்களுடன் மரபணு அடிப்படையில் மிகவும் நெருங்கிக் காணப்படுகின்றனர் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றது.

4. பாத்திஹா ஆய்வு (இரண்டாம் கட்டம்) - சிங்களவர்களுக்கும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் வாழும் மக்களுக்கும் நேரடியான மரபணு உறவு ஏதும் இல்லை என்று குறிப்பிடுவதோடு  மரபணு நெருக்கம் வங்காளியருடனும் தமிழருடனும் நெருக்கமாக இருக்கிறது என்றும் வெளிப்படுத்துகிறது.

5. டாக்டர் சத்ரியா ஆய்வு - genetic distance analysis என்ற ஆய்வு முறையின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், தென்னிந்திய முஸ்லிம்கள் அனைவரும் நெருக்கமான உறவு கொண்டவர்கள் என்றும், குஜராத்தியர், பஞ்சாபியர், வடமேற்கு இந்தியப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குழுவாக காணப்படுகின்றனர் என்றும், வங்காளியர் தனி ஒரு குழுவாக காணப்படுகின்றனர்   என்றும், இலங்கை வேடர்கள் மரபணு ரீதியில் தனித்த ஓர் இனக்குழுவாக காணப்படுகின்றனர் என்றும்  ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியது. சத்ரியா ஆய்வின் மிக முக்கிய பங்களிப்பாகக் கருதப்பட வேண்டியது சிங்கள மக்களின் இனக்குழு உருவாக்கத்தில் ஏறக்குறைய 70 விழுக்காடு மரபணு நெருக்கம் இந்தியத் தமிழரின் மரபு கொண்டதாக இருக்கிறது என்பதாகும்.

6. டாக்டர் டுமாஸ் கிவிசில்டு ஆய்வு -இந்த ஆய்வின் படி இலங்கை சிங்களவர் மரபணு அடையாளக் கூறுகள்,  இந்தியாவிற்கு ஆரியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வந்து சேர்ந்த தென்னாசிய திராவிட சமூகங்களுக்கு உரிய மரபணு அடையாளக் கூறுகள் M20, M124, M172 ஆகியவை மிக அதிகமாக, அதாவது ஏறக்குறைய 26.6% இருப்பதாக வெளிப்படுத்தியது.

மேற்குறிப்பிட்ட அனைத்து ஆய்வுகளையும் விரிவாக விளக்கி, சிங்களவர்கள் இதுகாறும் பொதுவாக குறிப்பிடப்பட்ட வகையில் பொ.ஆ முதலாம் நூற்றாண்டு வாக்கில் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் பெரும் கூட்டமாக இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர்கள் எனும் வாதம் தவறானது என்பதையும், சிங்களவர்கள் தென்னிந்தியாவில் தோற்றம் பெற்றவர்கள் தான் என்ற கருத்தையும் நூல் நிலைநாட்டுகிறது.

இத்தகைய ஆய்வுகள் இலங்கைத்தீவில் பெருவாரியாக வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் அடிப்படையில் ஒரே மரபணு கூறுகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது.


[புகைப்படம்:  அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயத்தில் உள்ள போதி மரம், கோயில்]

இந்த நூலின் மூன்றாவது அத்தியாயம் சிங்களச் சமூகத்தில் சாதி முறை பற்றி ஆராய்கிறது. பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் என்பதால் முழுமையாக பௌத்த சமூக நெறிகளை உள்வாங்கியதா  சிங்களப் பௌத்த நிலை என்றால், அது இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கின்றது. ஆக சிங்களப் பௌத்தம் என்பதை அடிப்படை பௌத்த நெறிகளுள் மாற்றம் செய்து கொண்ட ஒன்றாகக் காண வேண்டியது இதனைப் புரிந்து கொள்ள அவசியமாகின்றது.  இந்தியச் சமூகம் போன்ற சாதி அமைப்பு ஒன்று சிங்களச் சமூக அமைப்பில் அடிப்படையாக இருப்பதை இந்த அத்தியாயம் வெளிப்படுத்துகிறது.

நூலாசிரியர் ஏராளமான பல நூல்களை இந்தப் பகுதிக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டாலும் மிக முக்கியமாக இரண்டு நூல்கள் வழங்குகின்ற செய்திகள் இந்த அத்தியாயத்தில் மிகப்பரவலாகக் கையாளப்படுகின்றன. Bryce Ryan எழுதிய Cast in modern Ceylon: The Sinhalese system in transition (1953) என்ற நூல் மிக அதிகமாகவும் Richard Fick எழுதிய The social organisation in North-East in Buddhas time (1920) ஓரளவும்  கையாளப்பட்டுள்ளன.

புத்தர் காலத்தில் மனு கூறிய நான்கு வருணப் பாகுபாட்டை இலங்கை சூழலில் காணவில்லை என்கிறது ரிச்சர்ட் ஃபிக் அவர்களது ஆய்வு. தொழில்முறை சார்ந்த குடிகள் அமைப்பே சிங்களவர் சூழலில் இருந்தது என்பதை இது குறிப்பிடுகிறது. இந்தியச் சூழலில் சங்க இலக்கியத் தரவுகள் தருகின்ற குடி முறையிலான சமூக அமைப்பு போன்ற ஒரு முறையே இது எனலாம்.

சிங்கள மக்களிடையே, எவ்வகையில் சாதி என்ற கருத்தாக்கம் முதன்முதலாக தோன்றியது என்பது கண்டி மலைப்பகுதியில் ஒரு தொன்மமாக வழக்கில் உள்ளது. இதனை நூர் யால்மண் தான் எழுதிய Under the Bo tree (1971)  என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்தத் தொன்மத்தின் படி சிங்கள மக்களின் புராணகால மூதாதையராக மகா சம்மாத என்பவர் இருந்ததாகவும், அவருக்கு வேண்டிய பணிகளைச் செய்வதற்காக பல்வேறு சாதிகளை அவர் உருவாக்கி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெயரை அவர் இட்டார் என்கிறது இந்தப் புராணக்கதை.

இந்தியச் சூழலில் வர்ணாசிரம அடிப்படையில்  பிராமணர்கள் சாதி அடுக்கின் உயர்ந்த நிலையில் வைக்கப்படுகின்றனர். ஆனால் இலங்கையில் சிங்களவர் சாதிப் படிநிலை வரிசையில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கொவிகம  (விவசாயத் தொழில்) என்ற சாதி உயர் சாதியாக குறிப்பிடப்படுகிறது. இதே படிநிலை வரிசையை இலங்கைத் தமிழர் சூழலிலும் நாம் காண்கிறோம். வெள்ளாளர் அல்லது வேளாளர் எனக் குறிப்பிடப்படும் சமூகமே இலங்கைத் தமிழ் சாதி வரிசையில் உயர் அந்தஸ்தைப் பெறும் சாதியாக வழக்கில் இருக்கின்றது. ஆக இது ஓர் ஒற்றுமையைப் புலப்படுத்துகிறது. அதாவது இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்களாயினும் தமிழராயினும் விவசாயக் குடிகளே சாதி கட்டமைப்பு வரிசையில் முதலிடத்தைப் பெறுகின்றனர் என்பதே!

நூலின் இந்தப் பகுதி ஒவ்வொரு சாதி குழுவினரைப் பற்றியும் அடிப்படைத் தகவல்களை வழங்கியிருக்கின்றது. சிங்களவர் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சாதிக்  கட்டுமான அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள இந்த விளக்கம் நிச்சயம் உதவும் என்பதால் சிறு குறிப்பாக அவற்றைத் தொடர்ந்து காண்போம்.

1. கொய்கம அல்லது கொவிகம - இதன் பொருள் `நிலத்தை உழுது பயிர் செய்வோர்` என்பதாகும். இலங்கையின் சமூக அமைப்பில் உயர் சாதியினராக கருதப்படுபவர்கள் இவர்கள். சிங்கள  மக்கள் தொகையில் 1960ம் ஆண்டு கணக்கின்படி 60% இவர்கள் இருக்கின்றனர். இச் சாதிக்குள் பல கிளை சாதிகள் உள்ளன. 

2. கராவ - இவர்கள் சிங்கள மீனவர்கள். ஆய்வாளர்களின் கருத்தின்படி இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்கள். இலங்கையில் கரையார் எனும் தமிழ் மீனவர்களை ஒத்தவர்கள் இந்தச் சாதி குழுவினர். இந்தச் சமூகத்தில் பௌத்தர்கள், கிறித்தவர்கள் என இரண்டு பிரிவு இருக்கின்றது. குறிப்பாக நீர்கொழும்பு பகுதியில் கிராம மக்கள் முழுமையாக கத்தோலிக்கர்களாக உள்ளனர். இவர்கள் தங்களை சத்திரியர் வம்சத்தினர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றனர். மீன் பிடிக்கும் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள்.

3. சலாகம - இவர்களும் தென்னிந்தியாவிலிருந்து பிற்காலத்தில் குடியேறியவர்கள் என்றும் இவர்களுக்குச் சாலியர் என்று ஒரு பெயர் ஒரு காலத்தில் இருந்தது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தென்னிந்திய சாலியர் சமூகத்தவர் போன்றே இவர்கள் கண்டி பகுதியில் நெசவாளர்களாக இருந்தனர். தொன்மையான டச்சு ஆவணங்களை ஆராயும்போது குறிப்பாக 1250ல் சீன வணிகர்களின் உதவியுடன்  இவர்களின் மூதாதையர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர் என்ற குறிப்புகள் கிடைக்கின்றன.

4. துராவ - இவர்கள் கள் இறக்கும் சாதியினர். கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

5. நவண்டண்ண - தமிழகத்தில் பஞ்ச கம்மாளர்கள் எனக் குறிப்பிடப்படும் சமூகத்தை ஒத்தவர்கள். சிங்கள மக்கள் பெரும்பாலும் இவர்களை `ஆசாரி` என்றே அழைக்கின்றனர் என்பது இங்குக் கவனிக்கப்பட வேண்டியது. சிங்கள மொழியில் பல தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைகிறது. இவர்கள் தங்களைப் பிராமணச் சாதியிலிருந்து தோன்றியவர்கள் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழகத்தில் திராவிட பஞ்ச கம்மாளர்கள் தங்களை விஸ்வகர்மா பிராமணர் என்று கூறிக் கொள்வது போல இவ்வழக்கம் தொடர்வதை உற்று நோக்க வேண்டியுள்ளது.

6. ஹண்ணாலி - சிங்களச் சமூகத்தில் தையல்காரர்கள் தனிச் சாதியாக இடம்பெற்றிருக்கின்றனர். மன்னராட்சி காலத்தில் அரண்மனைக்குத் துணி தயாரிக்கும் பணியில் இருந்தார்கள். இன்றைய நவீன இலங்கையில் இச்சமூகத்தினர் சாதி அடையாளத்தை இழந்து இருக்கின்றார்கள். இன்றைய நிலையில் கண்டியில் தமிழ் பேசும் தையல்காரர்கள் நிறைந்து விட்டார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

7. ஹுணு - பாரம்பரியமாக சுண்ணாம்பு சுடும் தொழில் செய்பவர்கள். மிகச் சிறிய அளவில் இவர்கள் எண்ணிக்கை உள்ளது.

8. ஹேன - சலவைத் தொழில் செய்பவர்கள். சிங்கள மக்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சமூகத்தினர் வாழ்கின்றனர். இந்தியாவில் டோபி என அழைக்கப்படும் சமூகத்தவர் போன்றவர்கள். சிங்களச் சமூகத்தில் உயர்குடி சாதியினருக்குச் சலவை ஊழியம் செய்வது இவர்களுடைய பாரம்பரியத் தொழில். பூப்பு, இறப்பு சடங்குகளின் போது தீட்டுத் துணிகளை நீக்குவதும், திருமணத்தில் பழைய துணிகளைப் பெறுவதும் சடங்கு சம்பிரதாயங்களைக் கவனிப்பதும் இவர்களின் முக்கிய வேலை.

9. வகும்புர -  வெல்லம் காய்ச்சும் தொழில் செய்பவர்கள்.  இலங்கையின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் சமூகத்தினர். வணிகம் முதலாளித்துவம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுபவர்களாக வசதி படைத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

10. ஹின்னா -சாலியர் சமூகத்தினருக்கு வண்ணார் தொழில் செய்பவர்கள். பழங்காலத்தில் இவர்கள் சிங்களச் சமூக அடுக்கில் மிகவும் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்டனர்.

11. படஹல - சிங்களக் குயவர்கள். இலங்கைத் தீவின் எல்லாப் பகுதிகளிலும் களிமண் கிடைப்பதால் இவர்கள் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

12. பணிக்கி -  தமிழகத்தில் அம்பட்டர் என வழங்கப்படும் சாதியினருக்கு ஒப்பான சமூகநிலை படைத்தவர்கள். அம்பட்டர் என்ற தமிழ் வழக்குச்சொல் சிங்கள மொழியில் `எம்பட்டியோ` என்றும் வழங்கப்படுகிறது.

13. வெள்ளி துரயி -  இவர்கள் பொ.ஆ. 289 ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அனுராதபுரம் வந்தடைந்தார்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது. புனித போதி மரத்தைக் காவல் காப்பதற்காக இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இன்றைக்குக் கோயில் பணியோடு தொடர்புடையவர்கள் மட்டுமே வெள்ளி துரயி என்ற சமூக அடையாளத்தைக் கொண்டுள்ளனர். பௌத்த மதத்தின் புனித குறியீடான போதி மரத்தைக் காவல் செய்பவர்கள் எனும் தகுதி இவர்களுக்குப் பெருமை சேர்க்கிறது.

14. பண்ண துரயி - துரயி சாதியின் ஒரு பிரிவாக இவர்கள் அமைகிறார்கள். இவர்கள் மன்னர் ஆட்சியின் போது அரச குடும்பத்துக்குச் சொந்தமான குதிரை யானை போன்ற கால்நடைகளுக்குப் புல் அறுத்துப் போடும் வேலை செய்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.

15. பெரவா - மேளக்கருவி வாசிக்கும் சாதியினர். சிங்களச் சமூகத்தில் சற்று தகுதி குறைந்தவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். ஜோசியம் பார்த்தல் நெசவு செய்தல் சாமியாடி விடதல் போன்ற தொழில்களும் செய்கின்றனர். தமிழகத்தில் மேளக்கருவி (பறை)  வாசிக்கும் பறையர் சாதியில் ஒரு பிரிவினர் நெசவுத் தொழில் செய்து வந்ததை எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்தியச் சாதிகளும் குடிகளும் தொகுதி 6ல் குறிப்பிடுகின்றார் என்பதும்  இங்குக் குறிப்பிடத்தக்கது.

16. பட்கம் பெரவா - சிறிய எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஈமக்கிரியை நிகழ்வுகளில் மேளம் அடிக்கும் சாதியின் ஒரு பிரிவினர்.

17. கொண்ட துரயி - இந்தச் சமூகத்தினர் பாரம்பரியமாகக் கையில் வேலேந்தி போதி மரங்களைக் காவல் காப்பவர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். மன்னர்களின் பல்லக்குகளைத் தூக்கிச் செல்பவர்களாக இருந்தனர்.

18. பட்கம் - கண்டிப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் அடித்தள சாதியினர். உயர்சாதியினர் வீடுகளில் வேலைகளுக்கு ஈடுபடுபவர்கள். தமக்கென சொந்தமான நிலமற்றவர்கள். கூலி வேலை செய்பவர்கள்.

19. கவிக்கார - வட்டார சாதியினராக அறியப்படுபவர்கள். இச் சமூகத்துப் பெண்கள் நடன மாந்தர்களாக ஆண்கள் பாட்டுக் கலைஞர்களாக இருக்கின்றனர். கோயில்களில் பெண்கள் நடனம் ஆடுவதும் ஆண்கள் பாணர் தொழிலைச் செய்வது இச்சமூகத்தினர் தொழிலாக அமைகிறது. 

20. ஒலீ - கோயில்களில் நடனம் ஆடுபவர்களாகவும் திருவிழாக்களில் பங்களிப்பவர்களாகவும், விழாக்களில் அசுரர்களை வதம் செய்யும் பாவனைகளைச் செய்பவர்களாகவும் உள்ளவர்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சாதியினர்.

21. தெய்வ கட்டர -  இதனைத் தமிழ்ப் படுத்தினால் `தமிழ் புறச்சாதிகள்` என்ற பொருள் வருகிறது. இவர்கள் உடல் தோற்றம் நடை உடை பாவனையிலும் வாழ்க்கை முறையிலும் சிங்கள மக்களாகவே காணப்படுகின்றனர் என்றாலும் சிங்கள மக்கள் இவர்களை `தமிழ்ப்புறச்சாதிகளாக` அடையாளப்படுத்துகின்றனர். இலங்கையை ஆண்ட எல்லாளன் எனும் தமிழ் மன்னனின் படை வீரர்கள் `தெய்வ கட்டர` என அழைக்கப்பட்டனர். காலப்போக்கில் இவர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு கலப்படைந்து விட்டாலும் இன்றும் தமிழ்ச் சாதி மரபினர் என அடையாளப் படுத்தப் படுகின்றனர்.

22. பலீ - தமிழகத்தில் புதிரை வண்ணார்கள் போன்று அடித்தள சாதி சமூக மக்களின் அழுக்குத் துணிகளைச் சலவை செய்யும் வண்ணார்களாக உள்ளனர்.

23. கஹலபெரவா - இலங்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்று. ஈமக்கிரியை நிகழ்வுகளில் மேளம் அடித்தல், பிணம் எரித்தல், அடக்கம் செய்தல், குப்பை அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை மிக நீண்ட காலமாக சிங்களச் சமூகத்தில் செய்துவரும் மரபினர்.

பொதுவாகவே சிங்கள மக்கள் மொழியின் அடிப்படையில் ஒன்றுபட்டாலும் சாதிப்பிரிவு கட்டமைப்பைச் சார்ந்தே இவர்களது சமூக அமைப்பு அமைந்திருக்கின்றது.  

இந்தியாவில் உள்ளது போன்ற சாதி கட்டமைப்பு சிங்களச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி அமைந்திருப்பதை மானுடவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆரம்பக் காலத்தில் தொழில் அடிப்படையில் அமைந்த சமூகப் பிரிவுகளாக இருந்த நிலை மாறி இந்திய வர்ணாசிரமத் தத்துவத்தின் தாக்கத்தின் அடிப்படையில், அதனை உள்வாங்கிய வகையில் விரிவான சாதி அமைப்பைக் கொண்டதாக வளர்ச்சி கண்டு விட்டதைக் காண முடிகிறது. இலங்கை வரலாற்றைக் கூறும் நூல்களில் ஒன்றான சூளவம்சம் குறிப்பிடுவதுபோல இலங்கை பௌத்த அரசு சார்ந்த நடவடிக்கைகளில் இந்திய வைதீக தொடர்புகள் இருந்தமையையும் நாம் இங்குக் கவனிக்க வேண்டியுள்ளது. 

குறிப்பு: சிங்களவர் சமூகச் சூழலை விரிவாக அறிந்தவர்களும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மேலுள்ள செய்திகளில் ஏதேனும் தவறான குறிப்புகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டலாம். இது சிங்களவர் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ள மானுடவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும்.



srilanka - suba.jpg

மானுடவியல் ஆய்வுகளில் இனங்களின் உறவுமுறை கட்டமைப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒரு கூறு. நூலின் நான்காவது அத்தியாயம் சிங்களச் சமூகத்தில் உறவுமுறை பற்றி மிக விரிவாக ஆராய்கிறது.

மகாவம்சம், சூளவம்சம் மற்றும் ஏனைய பிற புராணக் கதைகள் கூறுகின்ற வரலாற்றுச் செய்திகள் இலங்கை சிங்களவர்களுக்கு வட இந்தியத் தொடர்பு இருப்பதை வலியுறுத்துகின்றன. ஆனால் மரபணு ரீதியான ஆய்வுகளை நோக்கும்போது அவை தென்னிந்திய மக்களுடன், அதிலும் குறிப்பாக திராவிட இன மக்களுடன் மரபணு நெருக்கம் இருப்பதைப் பலப்படுத்துகின்றன. இவர்கள் இனத்தால் சிங்களவர்; மொழியால் இந்தோ - ஆரிய மொழி பேசுபவர்கள்; மதத்தால் பவுத்தர்கள்; பண்பாட்டால் தென்னிந்தியர்கள் என்று ஆய்வாளர் Cordrington (1926) கூறுவதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இக்கூற்றை உறுதி செய்வதாகவே அமைகிறது சிங்கள இன மக்களிடையே உள்ள உறவுமுறை வழக்கங்கள்.

"சமூகத்தில் மனிதர்கள் மன உறவாலும் இரத்த உறவாலும் பிணைக்கப்பட்டுள்ளனர். நாம் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும்  உறவுமுறை சொற்கள் உறவின் தன்மைகளையும் பண்புகளையும் வரையறுத்துள்ளன; திருமண விதிகளைக் கூறுகின்றன; திருமண விருப்பங்களைத் தெரிவிக்கின்றன; மணமுறையில் கையாள வேண்டிய தவிர்ப்புகளையும் விலக்குகளையும் சுட்டிக்காட்டுகின்றன; உறவினர்களிடையே பேணவேண்டிய நடத்தை முறைகளை ஒழுங்கு செய்கின்றன" என ஓர் இனத்தின் உறவுமுறைகளின் முக்கியத்துவம் பற்றி நூலாசிரியர் தெளிவுபடுத்துகின்றார்.

இலங்கை சிங்கள மக்களின் உறவு முறை குறித்த விரிவான ஆய்வினை நிகழ்த்தியவர் துருக்கி நாட்டு மானிடவியல் அறிஞர் நூர் யால்மண். இவரது ஆய்வு சிங்கள மக்களின் உறவு முறையானது (1962) திராவிட முறை சார்ந்தது என்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த ஆய்வினை விரிவாக்கி அவர் எழுதிய நூல் Under the Bo tree: Studies in caste kinship and marriage in the interior Ceylon, 1971 என்ற பெயரில் வெளிவந்தது. இதேபோல எட்மண்ட் லீச் ஆராய்ந்து எழுதி வெளியிட்ட A village in Ceylon: A study of land tenure and kinship (1961), என்ற நூலும், இலங்கையின் மூத்த இனவியல் அறிஞர் எம் டி ராகவன் எழுதி வெளியிட்ட The Karava of Ceylon: Society and culture (1961) ஆகிய நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் சில நூல்களையும் நூலாசிரியர் சிங்கள தமிழ் உறவு முறைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்களை இந்த அத்தியாயத்தில் சான்றாகக் காட்டுகின்றார்.
இன்று உலகளாவிய நிலையில் ஆறுவகை உறவுமுறை அமைப்புகள் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன அவை பின்வருமாறு:
1. எஸ்கிமோ முறை
2. ஓமஹா முறை 
3. குறோ முறை
4.. இராகுவர் முறை (திராவிடர்கள்)
5.  ஹவாய் முறை
6. சூடானிய முறை
இதில் இராகுவர் முறை என்பது ஆஸ்திரேலிய முது குடிகள், இலங்கை வேடர்கள், இலங்கைச்  சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், தென்னிந்தியச் சமூகங்கள், வட இந்தியாவில் வாழும் பூர்வ திராவிடர்கள், தென்னிந்தியாவும் வட இந்தியாவும் சந்திக்கும் எல்லையோரத்தில் வாழும் மராட்டியச் சமூகத்தார், நடு இந்தியச் சமூகத்தார் ஆகியோரிடம் பரவலாகக் காணப்படும்  உறவு முறையாகும்.

திராவிட உறவு முறையின் தனிச்சிறப்பு என்பது என்னவெனில் தாய்வழி உறவினர்களும் தந்தை வழி உறவினர்களும் சமச்சீர் உரிமையோடு அணுகும் முறையாகும்.  உதாரணமாகப் பாட்டி என்றோ தாத்தா என்றோ அழைத்தால் அவை இரண்டும் தாய் தந்தை ஆகிய இரண்டு வழி பாட்டன்களையும், பாட்டிகளையும் குறிக்கின்றன. அதேபோல பேரன் பேத்தி ஆகிய சொற்களும், இன்னும் பல சொற்களும் அமைகின்றன.

திராவிட உறவு முறைக்கு உள்ள மற்றொரு சிறப்பு ஒவ்வொரு நபருக்குமான உறவு கூட்டத்தை பெரும் பிரிவாகப் பிரித்துக் காண்பது. உறவினர்களில் ஒரு சாதியினர் அண்ணன்-தம்பி முறையில் வருபவர்கள்; மற்றொரு பிரிவினர்  மாமன்-மச்சான் முறையில் வருபவர்கள். இந்த உறவு முறை பிரிவு திராவிட உறவு முறையில் அடித்தளத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது. தமிழ் உறவுமுறைச் சொற்கள் அனைத்தும் இந்த முறை கோட்பாட்டை முன்வைத்து உறவினர்களை இரண்டு பெரிய வகைகளாகப் பிரித்து விடுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

உறவினர் சுற்றத்தை திருமண உறவு அல்லது ரத்த உறவு என்ற இரண்டு பெரிய வகையில் பிரிக்கும் முறை திராவிட உறவு முறையில் மட்டுமே காணக் கூடியதாக அமைகிறது. இதற்கு நேர்மாறாக ஹிந்தி உறவுமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால் அங்குத் தாய்வழி தந்தைவழி உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உறவுச் சொல் இருப்பதைக் காண முடியும். இது திராவிட உறவு முறையிலிருந்து அடிப்படை வேறுபாடாகும் என்பதையும் நூலாசிரியர் விவரிக்கின்றார்.

திராவிட உறவு முறையின் அடிப்படை அமைப்பாக்கத்தில் பழங்காலத்திலிருந்து திராவிட மக்கள் உறவுமுறை வழக்கில் கொண்டுள்ள உறவுத் திருமண முறை, அதாவது cross cousin marriages ஒரு முக்கியக் கூறாக அமைகின்றது. திராவிட உறவு முறையை ஆராய்ந்த தாமஸ் டிரவுட்மன் ( 1981) இது நேற்று இன்று தோன்றிய ஒரு வழக்கு அல்ல, மாறாக வரலாற்றின் ஊடாக கட்டமைந்த உருவாக்கம் ( historical construct) என்று விரிவாக ஆய்வு மூலம் நிரூபித்துக் காட்டியதையும் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் இன வேறுபாடு - தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு பௌத்தர் சைவர் என்றில்லாமல் திராவிட உறவுமுறை என்பது இலங்கைத் தீவு முழுவதும் ஒரே முறையிலேயே அமைகிறது. இன்றும் புழக்கத்தில் உள்ள சிங்கள உறவுமுறைச் சொற்கள் சிலவற்றை ஆசிரியர் உதாரணத்திற்குப் பட்டியலிட்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே புரிதலுக்காக வழங்குகின்றேன்.
சிங்களம்: அப்பா, அப்புச்சி - தமிழ்: அப்பா
சிங்களம்: அம்மா, மவு - தமிழ்: அம்மா
சிங்களம்: மாமா, மாமாண்டி - தமிழ்: தாய்மாமன், அத்தையின் கணவர், மாமனார்.    
சிங்களம்: ஐயா - தமிழ்: அண்ணன்
சிங்களம்: அக்கா - தமிழ்: அக்கா 
சிங்களம்: லொகு அக்கா - தமிழ்: மூத்த அக்கா   
சிங்களம்: சகோதரி - தமிழ்: உடன் பிறந்தவள்
சிங்களம்: சகோதரா - தமிழ்: உடன் பிறந்தவன்
சிங்களம்: மினிஹ, புருசய்யா - தமிழ்: கணவன்
சிங்களம்: பவுலா, கனு - தமிழ்: மனைவி
மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் தாத்தாவைக் குறிக்கச் சொல்லப்படும் சிய்யா/சிய்யான் என்ற சொல்லின் திரிபாக `சியா` என தாத்தாவை அழைக்கும் வழக்கமும் சிங்களவர்களிடம் காணப்படுகிறது. சிங்கள உறவு முறையில் நேர் திராவிடச் சொற்கள் அதிகமாகவும், அதோடு இடைக்காலச் சிங்களச் சொற்களும் கலந்திருப்பது தெரிகிறது.

சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் என்ற வகையிலும், சிங்கள மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் என்ற அடிப்படையிலும் ஒப்பாய்வுகள் செய்யப்படுவதும், அது பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவந்து அவை பெரும் வகையில் கலந்துரையாடப்படுவதும் அவசியம். ஏனெனில் தமிழர், சிங்களவர் என்ற இரண்டு வெவ்வேறு இனங்கள் எனக் காண்பதை விட ஒரே இனத்தின் ஒரு பிரிவாக, அதாவது பண்டைய திராவிட தொல்குடி மரபின் ஒரு பிரிவே சிங்களவர்கள் என்ற முடிவுக்கே நம்மை  மானுடவியல் ஆய்வுகள் இட்டுச் செல்கின்றன!




2018 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு இரண்டு முறை நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அங்குள்ள பௌத்த விகாரை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அந்தக் கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் நமக்கு நன்கு பரிச்சயமான விநாயகர், லட்சுமி, சிவன் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் சிங்கள முகத்துடன் சிறிய சிறிய கோயில்களில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு நண்பர்களுடன் பேசி கேட்டு அறிந்து கொண்ட போது பௌத்த ஆலயங்களில் இத்தகைய தமிழர் வழிபாட்டில் இடம்பெறுகின்ற தெய்வ வடிவங்களும் அவற்றுக்கான சன்னிதிகளும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். சமயம் சார்ந்த ஒற்றுமைகள் என்பது ஒருபுறமிருக்க, மொழியில், பண்பாட்டில் உள்ள ஏராளமான ஒற்றுமைகள் பற்றியும், முறையான ஆய்வுகள் இலங்கையின் இரண்டு பெரும் இனங்களான சிங்களவர்கள்-தமிழர்கள் ஆகிய இரண்டு இனங்களுக்கும்  இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும்.

சிங்களவர் உறவுமுறை பெயர்களில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருப்பதைக் காண்கின்றோம். சில உதாரணங்களை முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.   பொதுவாக இந்தியாவில் தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வது போல, சிங்களவர் சமூகச் சூழலில் `கண்டி சிங்களவர்` அதாவது மலைநாட்டுச் சிங்களவர் என்றும் தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றவர்கள் `கரையோரச் சிங்களவர்` என்றும் நில அடிப்படையில் அடையாளப்படுத்தப் படுகின்றார்கள். இவர்களுள் மலைநாட்டுச் சிங்களவர் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

கண்டி சமூகத்தில் இரண்டு வகை திருமண முறை இருப்பதைக் காண்கிறோம்.
1. பின்னா - இவ்வகை திருமணத்தில் கணவன் தன் மனைவி வீட்டிற்குச் சென்று வாழ்வது வழக்கம். இந்த வாழும் முறை அதாவது சிங்கள மொழியில் 'வாசகம' என்பது மருமக்கட்தாய முறைப்படி மனைவி வீடாக அமைகிறது.

2. இதற்கு மாறாக திருமணத்திற்குப்பின் மனைவி தன் கணவர் வீட்டிற்குச் சென்று வாழும் முறை 'தீக' என அழைக்கப்படுகிறது. 

இந்த இரண்டு வகை திருமணப் பிரிவுகளும் கண்டி சமூகத்தில் அதாவது மலைநாட்டுச் சிங்களவர் சமூகத்தில் உள்ளன. இந்த இரண்டு பிரிவினரும் திராவிட உறவு முறையைப் பின்பற்றுகின்றனர்.  ஆக, திராவிட சமூக அமைப்பில் இன்றும் தாய்வழிச் சமூக முறையும் தந்தை வழி சமூக முறையும் தொடர்வதை நாம் காண்பது போல, மலைநாட்டுச் சிங்களவர் சமூகத்திலும் இது இயல்பாக இருப்பதைக் காண முடிகிறது.

இலங்கையில் பேசப்படுகின்ற சிங்கள மொழியின் ஒரு உறவு மொழியாக 'மஹல்' மொழி அமைகிறது. இது இலட்சத் தீவுகளிலும், மாலத்தீவுகளிலும் பேசப்படும் மொழியாகும் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

சிங்கள மொழி ஒரு இலக்கிய மொழியாக உருவானது பொ.ஆ. 10ஆம்  நூற்றாண்டு காலவாக்கில் தான். சிங்கள எழுத்தின் வரிவடிவமானது தென்னிந்திய  சாய்வுக் கோடு வகையில் விளங்குகிறது என்று கூறும் அறிஞர் கோலின் மாசி காவின் (Colin Masica, 1991) கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.

இலங்கையின் மேற்குப் பகுதியில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகளான நாகர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வாழ்ந்தவர்கள் என்பதும், இந்தப் பூர்வீக நாக மன்னர்களின் சின்னங்களாக சிங்கமும் பனை மரமும் இருந்தன என்பதும், பிற்காலத்தில் இலங்கையில் இந்தப் பூர்வகுடிகள் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னரும் கூட சின்னங்களைக் கைவிடாமல் இருப்பதும் முக்கியத்துவம் பெறும் ஒன்று. இந்தச் சிங்கமும் பனைமரமும் தமிழகச் சேர மன்னர்களுக்கு உரிய சின்னங்கள் என்பதையும் நாம் ஒப்புநோக்க வேண்டியுள்ளது.

பண்பாட்டு அடிப்படையில் திராவிட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கும் சிங்களவர்களின் மொழி இந்தோ-ஆரிய மொழியாக இருக்கின்றது என்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி இருப்பதைப் பார்த்தோம். இந்தக் கலப்பு எப்படிச் சாத்தியமானது என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. சிங்களவர்களின் மிக ஆரம்பக்கால இடப்பெயர்வு என்பது தென்னிந்தியப்  பகுதிகளின் ஊடாக நடந்தேறியது என்றும், அவர்கள் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளோடு மிக நீண்டகாலமாக இனத் தொடர்பு கொண்டிருந்தாலும் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வந்து, மிக நீண்ட காலங்கள் வாழ்ந்து, தென்னிந்தியப் பெண்களைத் திருமணம் செய்து, தமிழ் பவுத்தத்தைத் தழுவி, தமிழ்த்  தேசத்தோடு உறவாடி, தென்னிந்தியக்  கிராம தெய்வங்களை வணங்கி வழிபட்டு தங்கள் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து இலங்கை சென்று அடைந்தார்கள் என்று கருத வாய்ப்புள்ளது.

பூர்வ வட இந்தியர்கள், அதாவது இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள்  உறவுத் திருமணங்களைத் தங்கள் பண்பாட்டில் கொண்டிருப்பதில்லை. அவர்களது திருமண முறை உயர்குல  முறை, அதாவது hypergamy என்ற அமைப்பில் அடங்கும். இது திராவிட திருமண முறையான உறவுத் திருமணங்கள் என்ற கருத்தாக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபடும் ஒரு முறையாக அமைகிறது என்பதை இங்குக் காண வேண்டும்.

உறவுத் திருமணங்கள் தென்னிந்தியச் சமூகத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் இருப்பதற்குக் காரணம் வேளாண்மை. நிலமும் நீரும் சமூக வாழ்வியல் அமைப்பில் முக்கிய இடம் பிடிப்பதால் இவை திருமணத்தால் குறைந்து விடக்கூடாது என்பதற்காகத் திராவிட பண்பாட்டில் ஏற்படுத்திக்கொண்ட முறையே உறவுத் திருமணங்களாகும், என்கிறார் நூலாசிரியர்.

பண்பாட்டு ஒற்றுமை எனக் காணும்போது சிங்களவர்கள் கண்ணகி வழிபாடு செய்வதும், விநாயகர் வழிபாடு செய்வதும், விஷ்ணு, முருகன், வள்ளி ஆகிய தெய்வங்களின் வழிபாடுகளைச் செய்வதும், கேரளத்தின் கதகளி நடன வகையை ஏற்று உள்வாங்கிக் கொண்டதும்,  உணவுப் பழக்கவழக்கங்களில் கேரள பழக்கவழக்கங்கள் மிகுந்து இருப்பதும் முக்கியமான கூறுகளாகும்.

ஆக, வட இந்தியாவிலிருந்து வந்த விஜயன் வட இந்தியப் பின்னணியோடு சிங்கள அரசைத் தோற்றுவித்து சிங்களவர்கள் உருவானார்கள் என்ற புராணக்கதையை முழுமையான வரலாறு என்று கொள்ளாமல், மகாவம்சம் சூளவம்சம் மற்றும் ஏனைய புராணங்களில் உள்ள ஏராளமான கதைகளை வாய்மொழி கதைகளின்  ஆவணப்படுத்தல் என்ற அடிப்படையில் அவற்றை ஆராய வேண்டியது அவசியமாகிறது. 

வாய்மொழிக் கதைகள் இன வரலாற்று மீட்டுருவாக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பதை உலகளாவிய மானுடவியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுவதை நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.

ஆசிரியர் இந்த அத்தியாயத்தின் இறுதியில் கூறும் ஒரு கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. "பன்மை இனத்துவம் கொண்ட நாடுகளில் இன வரலாறு வரலாற்றின் அனைத்துப் பரிமாணங்களிலும் ஊடுருவியிருக்கும். அதனை முற்சாய்வு  ஏதுமின்றி ஆராயும்போது மட்டுமே புதிய உண்மைகள் வெளிப்படும். சிங்கள இனத்துவத்தையும் இந்த வகையில் ஆராய வேண்டும்."


நூலின் ஐந்தாம் அத்தியாயம் சிங்கள மக்கள் வாழ்வியலில் திருமண முறைகள் பற்றி ஆராய்கிறது. இப்பகுதியின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் ஆரிய மணமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உறவுமுறை திருமண அமைப்பை அடிப்படையாகக் கொண்டது சிங்களத் திருமண முறை, அதாவது திராவிட முறை பழக்க வழக்கங்களோடு தொடர்பு கொண்டது என்று நிலை நிறுத்துகிறார். அதற்கு மேலைநாட்டு அறிஞர்கள் H.W.Codrington, நூர் சால்மன், மற்றும் இலங்கை ஆய்வாளர் மானிடவியலர் எம் டி ராகவன் அவர்களது ஆய்வுகளையும் சான்றாகப் பயன்படுத்துகின்றார்.

அடிப்படையில் காணும்போது சிங்களச் சமூகத்தில் திருமண முறை அகமணத்தைக் கொண்டது என்பதைக் காணமுடிகிறது. `கொய்கம` சாதி அமைப்பில் விரிவான கிளை சாதிகள் உள்ளன. ஆகவே அகமண தன்மையை உறுதியாகப் பின்பற்றும் சமூகமாக இது அமைகிறது. திராவிட அகமணதன்மை என எடுத்துக் கொள்ளும்போது கிளைச் சாதிகளுக்குள்ளேயே காணப்படும் வகையரா/பரம்பரை/கூட்டம்/குலம்/கிளை/கொத்து/இல்லம் என அழைக்கக்கூடிய பிரிவுகளுக்கு உள்ளே திருமண உறவுகள் எவ்வகையில் கட்டமைக்கப்படுகின்றன என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.

சிங்களச் சமூகத்தவர்களது விதிகளின்படி பங்காளி உறவுடைய எவரும் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் அண்ணன்-தம்பி அல்லது அக்காள்-தங்கை உறவாகக் கருதப்படுகின்றனர். முறைப்பையன் தனது முறைப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள உரிமை கோரப்படுவதும் சிங்களவர்  வழக்கத்தில் இருக்கிறது. முறைப்பையனுக்குப்  பதிலாக வேறு ஒருவரை அப்பெண் திருமணம் செய்ய நேரிட்டால் மணப்பெண் அந்த முறைப்பையனுக்கு 100 வெற்றிலை கொடுத்து அனுமதி கேட்கவேண்டும் என்ற சடங்கும் சமூகத்தில் நடைமுறையில் இருப்பதாக நூல் குறிப்பிடுகிறது.

தென்னிந்தியாவில் சில பூர்வகுடிகளிடம் இன்றும் தாய்வழி சமூக முறை இருக்கின்றது. நூர் சால்மன் தனது நூலில் ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார். அதாவது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு தமிழர்களிடம் தாய்வழிச்சமூகமுறை மிச்சசொச்சம் இருக்கின்றது என்பதை இவரது ஆய்வு குறிப்பிடுகின்றது. திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஆண்,  பெண்ணின் வீட்டில் திருமணத்திற்குப் பிறகு சென்று வாழ்வது என்பது கண்டி பகுதியில் அதிகம் வழக்கிலிருக்கும் முறை என்றும், இது 'பின்ன' என்று குறிப்பிடப்படுகின்றது என்றும், தந்தைவழி குடும்ப முறையில் மணப்பெண் கணவன் வீட்டில் சென்று வாழ்வது முறையாகக் கருதப்படுகின்றது என்றும், இதனை 'தீக' என்று சிங்களவர் குறிப்பிடுகின்றனர் என்பதையும் நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.

'தீக' திருமண முறையில்  பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பதும் வழக்கில் இருப்பதைக் காணமுடிகிறது. இந்த வழி திருமண முறையில் பெண்ணுக்கு அசையா சொத்துகள் மட்டுமே பங்கு உண்டு என்றும், அதனை விற்பதற்குப் பெண்ணுக்கு உரிமை இல்லை என்றும், பயிரிடும் உரிமையை மட்டும் அவள் தன் உடன்பிறந்தோருக்குக் கொடுக்கலாம் என்றும், ஆனால் அதில் வரும் வருமானத்தைக் கண்டிப்பாக கேட்டுப் பெற மாட்டாள் என்றும், யார் பயிரிடுகிறார்களோ அவர்கள் நினைத்து எதைக் கொடுக்கிறார்களோ அதனைப் பெற்றுக் கொள்வார்  என்றும் அறிய முடிகின்றது. இதனைக் காணும்போது மிக உறுதியான ஆணாதிக்க மரபு வழிமுறையாக இதனைக் கருதலாம்.

திருமண நிகழ்வில் விருந்துபசாரம் செய்தல், நல்ல நேரம் பார்த்தல், மணமகள் வீட்டில் மணமகன் வருகையைக் கொண்டாடுதல், ஆடை மாற்றுதல் சடங்கு, கால் பெருவிரல்களைக் கயிற்றால் கட்டுதல் ஆகியவற்றோடு பெண்கள் பாலி மொழியில் அமைந்த பழம்பெரும் பாடலாகிய `ஜெயமங்களசூத்திரா` பாடலைப் பாடுவது, அதன் பின்னர் தேங்காய் உடைத்தல், மாமா உறவு வழி சடங்குகள், முறைப்பையன் இருந்தால் அவன் மணப்பெண்ணை விட்டுக் கொடுக்கும் சடங்கு என வரிசையாக சடங்குகள் அமைகின்றன. திருமணம் மணப்பெண் வீட்டில் நடக்கும் வீட்டிற்கு அருகிலேயே ஒரு  தற்காலிகக் குடிசை அமைக்கப்படும் என்றும் அதனை வண்ணார்கள் அமைத்து அலங்கரித்துக் கொடுக்கின்றனர் என்றும் அறிய முடிகிறது. தாலிகட்டுவது போல ஒரு சின்னத்தை அணிவிக்கும் முறை சிங்களத் திருமணங்களில் இல்லை என்றே தெரிகிறது. 

பல கணவர்கள் அதாவது சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்து வாழும் முறை தம்பகல்லே, மஹா கண்டென ஆகிய பகுதிகளில் இருந்ததை நூர் யால்மன் (1971) பதிகின்றார். அதேபோல பல மனைவியர் உள்ள ஆண்களின் குடும்பங்கள் சிலவற்றையும் தாம் கண்டதாக இவரது ஆய்வு வெளிப்படுத்துவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். இதற்குப் பெரும்பாலும் நிலங்களும் சொத்தும் பிற குடும்பங்களுக்குச் சென்று விடக்கூடாது என்ற கருத்தே அடிப்படையாக அமைகிறது.

இன்றைய காலச்சூழலில் சிங்களச் சமூகத்தவர் பண்பாட்டில் திருமண முறைகள் மேற்கத்திய வழக்கங்களையும் உள்ளடக்கிய வகையில் பல மாற்றங்களுடன் திகழ்கின்றது. இன வேறுபாட்டைக் களைந்து சிங்கள மக்கள் தமிழ் மக்கள் என வேறுபாடின்றி கலப்புத் திருமண நிகழ்வுகளும் இன்றைய இலங்கையில் கண்கூடு.


புகைப்படம்: இலங்கை மலையகத்தில் பதுளை நகரில் அமைந்துள்ள முதியாங்கனை ரஜ மகா விகாரையில்.

வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் முதலே தாய்த் தெய்வ வழிபாடு என்பது உலக மக்களின் அனைத்துச் சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுவதை இன்றைய தொல்லியல் அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தில் தாய்த் தெய்வ வழிபாடு என்பது தொன்மையான வழிபாட்டுக் கூறுகளில் ஒன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் கண்ணகிக்குத் தமிழகத்தில் கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்திற்கு அருகிலுள்ள இலங்கையில் கண்ணகி எப்படி வழிபடப்படுகிறாள் என்பதைத்தான் நூலில் ஆறாவது அத்தியாயம் பேசுகிறது.





நூலாசிரியர் ஆய்வாளர்கள் சிலரது ஆய்வுகளை இந்தப் பகுதிக்கு முக்கியச் சான்றுகளாகப் பயன்படுத்துகின்றார். அதில், பேராசிரியர் ஒபயசேகர எழுதிய The cult of the Goddess Pattini (1984),  பேராசிரியர் ரிச்சர்ட் கொம்ரிட்ச் எழுதிய, Food for 7 Grandmothers: Stages in the universalisation of the Sinhalese ritual, (1971), லூத்மினா மீர்வொர்த்-லெவினா எழுதிய The Hindu goddess Pattini in the Buddhist popular belief in Ceylon (1916), L.S.Hiatt எழுதிய The Pattini cult of Ceyon Tamil Perspective (1973) ஆகியவை வெகுவாக இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி மேலும் பல நூல்களையும் இந்தப் பகுதியில் நூலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். அவை அனைத்தும் கண்ணகி சிங்களப் பண்பாட்டில் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி நமக்கு வியப்பூட்டும் வகையில் உள்ள சிங்கள இலக்கியங்களாக அமைகின்றன.

கஜபாகு மன்னன் இலங்கையில் நிலவி வந்த பஞ்சத்தைப் போக்குவதற்கு தமிழகம் சென்று கண்ணகி சிலையைக் கொண்டுவந்து ஆடி மாதத்தில் விழா எடுத்தான், என இதன் பூர்வீகத்தை ஒரு மரபு பேசுகிறது. இந்த கஜபாகு பொ.ஆ 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.

பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டில் பௌத்தம் முழுமையாக இலங்கையில் பரவத் தொடங்குவதற்கு முன்பு இலங்கைத் தீவு முழுக்க நாட்டார் வழிபாட்டு மரபு தெய்வங்கள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் நாக வழிபாடு, இயற்கை வழிபாடு என்பதோடு கண்ணகி வழிபாடும், ஏழு பெண் தெய்வங்களின் வழிபாடும்,  'கிரி அம்மா' என்ற பெண் தெய்வ வழிபாடும் அடங்குகிறது.

சிங்களவரின் பௌத்த மத அடையாளத்துக்குக் குறைவில்லாத வகையில் சிங்களப் பண்பாட்டில் கண்ணகி தெய்வம் 'கண்ணகி தெய்யோ' அல்லது 'பத்தினி தெய்யோ' எனச் சிறப்பிக்கப்படுகிறார். அடிப்படையில் கடவுள் கோட்பாட்டை மறுக்கும் பவுத்தம் இலங்கையைப் பொறுத்த வகையில் கண்ணகி தெய்வத்தையும் மற்றும் தமிழ் நிலத்தில் நன்கு பரிச்சயமான விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன் ஆகிய நான்கு தெய்வங்களையும் உள்ளடக்கிய தெய்வீக மரபைக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இலங்கை பௌத்தம் தேரவாத பௌத்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் கூட தாய் தெய்வ வழிபாடு இங்கு கண்ணகி வழிபாடாக முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கண்ணகி தொன்மத்தை மூன்று வெவ்வேறு வகையில் குறிப்பிடுகின்றார்கள்.
1. நாக தெய்வமான நாக அரசனின் கண்ணீரில் இருந்து பிறந்தவள்
2. நீலத்தாமரையில் இருந்து தோன்றியவள்
3. பாண்டிய மன்னனின் தோட்டத்து மாமரத்திலிருந்து பிறந்தவள்
மேற்கூறிய மூன்று தொன்மங்களுமே கண்ணகியின் பிறப்பை அசாதாரண நிகழ்வாகக் காட்டுகின்றன. 

சிங்கள மக்களின் வழிபாட்டு மரபில் கண்ணகி தெய்யோவைப் பன்முகத்தன்மை கொண்ட கடவுளாக வழிபடுகின்றனர்.
1. கண்ணகி வளமைக்கும் ஆரோக்கியத்திற்குமான தெய்வம்.
2. கண்ணகி பௌத்த மதத்தைக் காத்து வரும் தெய்வம்
3. கண்ணகி இலங்கைத்தீவைக் காக்கும் காவல் தெய்வம்

கண்ணகி வழிபாட்டிற்கு முன்னர் ஏழு பெண் தெய்வங்கள் வழிபாடு என்பதும் சிங்களவர் மரபில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது. இது தமிழ்நில மரபில் உள்ள சப்த கன்னியர் அல்லது ஏழு கன்னிமார் என்ற வழிபாட்டு மரபோடு ஒப்பீடு செய்யத்தக்கது.

நூலாசிரியர் சிவன், முருகன், விநாயகர், விஷ்ணு ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடும் போது நூலில் `இந்து தெய்வங்கள்` எனக் குறிப்பிடுகின்றார்.  `இந்து மதம்; என்ற ஒரு அடையாளப்படுத்துதல்  ஆங்கிலேய காலனித்துவக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வழக்கம் என்பதன் அடிப்படையில் நூலாசிரியர் இதனை `பண்டைய தென்னிந்திய தொல் தெய்வ வழிபாடுகள்` எனச் சுட்டுவது பொறுந்தும் என்று கருதுகிறேன்.   லிங்க வழிபாடும்  இவ்வகையில் தொல்  தெய்வ வழிபாடு என்ற வகையிலே சுட்டப்பட வேண்டும்.  

கண்ணகியைச் சிங்களவர்கள் ஒரு தொன்மையான பௌத்த தெய்வமாகவே கருதுகிறார்கள். ஏறமல பத்தினி தெய்வம் புத்தர் நட்ட மாவித்தில் இருந்து தோன்றியவள் என சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு கட்டத்தில் மைத்திரி புத்தர் வடிவில் கண்ணகியை இனம் காணவும் சிங்களவர் முற்பட்டனர். அடுத்த கட்டத்தில் பத்தினி தெய்வமான கண்ணகி போதிசத்துவர் எனும் நிலையிலிருந்து பரிநிர்வாண நிலைக்கு உயர்த்தப்பட்டார்.  மேலும் இத்தகைய பல தொன்மங்கள் கண்ணகியைப் பௌத்த சமயத்துடன் பின்னிப் பிணைத்துக் காட்டுவதைத்  தீவிரமாக முயன்றுள்ளன.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை கண்ணகி தமிழ் தெய்வம் அல்ல; மாறாக சிங்களப் பௌத்தர்களுக்கே உரிய  முக்கிய தெய்வம். இன்று இலங்கை முழுவதும் கண்ணகிக்குப் பல கோயில்கள் உள்ளன.

இன்று கண்ணகி தெய்யோ சிங்களவர் பண்பாட்டில் பிரிக்கப்பட முடியாத முக்கிய இடத்தை ஏற்றிருக்கும் ஒரு தெய்வம் என்பது வியப்பளிக்கும் உண்மை.

குறிப்பு: இலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றி 2019ஆம் ஆண்டு நான் இலங்கை சென்றிருந்தபோது பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களை ஒரு பேட்டி கண்டிருந்தேன்.  அதனை ஆர்வமுள்ளோர் கேட்டு மேலும் தெளிவு பெறலாம். https://youtu.be/OnnKg427H3Q


கண்ணகி வழிபாடு சிங்களப் பண்பாட்டில் பின்னிப்பிணைந்து இருப்பது போல முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு வழிபாடாக அமைகிறது முருகன் வழிபாடு. தமிழர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதிர்காமக் கந்தன் சிங்களவர்களது 'கதரகமத் தெய்யோ' என்று வழிபடும் ஒரு கடவுளாகவும் அமைகிறார். சிங்களப் பண்பாட்டில் முருகன் வழிபாடு - தமிழ் மரபின் தாக்கமும் சிங்கள மரபின் விரிவாக்கமும், என்ற பொருளில் இந்த நூலின் ஏழாவது அத்தியாயம் அமைகிறது.

இலங்கையின் மூன்று பூர்வகுடிகள் முருகனைத் தங்களது கடவுளாகச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
1. சிங்களப் பௌத்தர்கள் 
2. இலங்கைத் தமிழர்கள்
3. இலங்கை வேடர்கள்

நூலின் இந்த இயலில் சில முக்கிய நூல்கள் ஆய்வுக்குப் பயன்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு B.Paffenberger , எழுதிய The Kataragama pilgrimage Hindu Buddha's interaction and its significance in Sri Lanka polyethnic social system, 1979, என் டி ராகவன் ஆய்வில் வெளிவந்த India in Ceylonese history: Society and culture 1969 மற்றும் பேராசிரியர் என் சண்முகலிங்கன் எழுதிய கதிர்காம முருகன் சமூக மானிடவியல் தரிசனம் 2014, பேராசிரியர் டெஸ்மணட் மல்லிகாரச்சி எழுதிய சிங்களப் பௌத்த வர்த்தகர்களின் உடல்மொழி 2003, ஆகிய நூல்களை நூலாசிரியர் பல இடங்களில் சான்று குறிப்பிடுகின்றார்.

இவர்கள் மட்டுமன்றி இலங்கை இஸ்லாமியர்களும் கதிர்காம கடவுளை வணங்குகின்றனர் என்பதும் ஒரு கூடுதல் தகவலாக அமைகிறது.

இலங்கைத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் ஊவா மாகாணத்தின் புத்தளம் பகுதியில் இருக்கின்ற 'தியனகம' என்ற பெயர் கொண்ட காட்டின் நடுவில் அமைந்திருக்கின்றது கதிர்காமம். சிங்களப் பௌத்தர்களைப் பொருத்தவரை,
1. சிங்களப் பௌத்தர்களது தொன்மையான குடியேற்றங்களில் ஒன்று கதிர்காமம்.
2. அங்கிருக்கும் அரசமரம் தேவநம்பியதீசன் அநுராதபுரத்திலிருந்த  அரசமரத்திலிருந்து கொண்டுவந்து நட்ட கிளை என மகாவம்சம் குறிப்பிடுகிறது.
3. மரபுவழி சிங்கள இலக்கியமான `கந்த உபாத` எனும் இலக்கியம் தமிழ் அரசனான எல்லாளனை வெற்றி கொண்டதால் நேர்த்திக்கடனாக துட்டகைமுனு என்ற அரசன் கட்டியது இந்த ஆலயம் என்கிறது.
4. மகாசேனன் என்ற சிங்கள மன்னனின் மறுபிறப்பு கதிர்காமக் கந்தன் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதன் அடிப்படையை வைத்து இன்று வரை பௌத்தமத ஆலய பரிபாலனச் சட்டத்தின் கீழ் கதிர்காமம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களவர் வருகைக்கு முன்னரே கதிர்காம முருகன் தமிழர்களின் கடவுளாகக் கொள்ளப்படுகின்றார். துட்டகைமுனு அதனை ஒரு சிங்களவர் ஆலயமாக மாற்றி அமைத்திருக்கக் கூடும் என்றே தமிழர்கள  கருதுகின்றனர்.  குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளான திருமுருகனின் கோயில் இது என்றும், சமஸ்கிருதத் தொடர்பின்றி மக்கள் வழிபாடு செய்யும் வகையில் இந்தக் கோயில் அமைந்திருக்கின்றது என்பதும் தொல்காப்பியம் குறிக்கும் `கந்தழி` வழிபாடு இது என்றும் குறிப்பிடலாம் என மு.கணபதிப்பிள்ளை (1967) குறிப்பிடுவது இங்கு ஒப்பிட வேண்டியிருக்கிறது.



வேடர்களைப் பொருத்தவரை,  வள்ளி தமது தமக்கையாகவும் கந்தன் தனது மைத்துனனாகவும் பலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அக்காவை மணமுடித்த கந்தனுக்கு வருடந்தோறும் எடுக்கப்படும் பெருவிழாவில் கலந்து கொள்வது நமது கடமை என வேடர்கள் ஒவ்வொருவரும் நம்புகின்றார்கள். வேடர் குலத் தலைவன் மகள் வள்ளியைக் களவு மணம் புரிந்த இடமாக கதிர்காமத்தை இலங்கை வேடர் சமூகம் நம்புகின்றது. சூரனைத் தாக்கிக் கொன்ற பின்னர் வள்ளியை மணம் புரிய வந்த இடம் இதுவே என நம்புகின்றார்கள்.  கதிர்காமத்திற்கு மேற்கே 3 மைல் தொலைவில் மாணிக்க கங்கை நதிக்கரையில் செல்லக்கதிர்காமம் அமைந்திருக்கின்றது. இங்கு ஒரு பிள்ளையார் கோயிலும் இருக்கின்றது.  முருகனின் வேண்டுகோளின்படி யானையாக பிள்ளையார் தோன்றி வள்ளி திருமணத்திற்கு உதவினார் என்ற புராண கதையும் வேடர்கள் வழக்கில் இருக்கின்றது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலில் தமிழர் கடவுளாகவே கதிர்காம கடவுள் கருதப்படுகின்றார். கதிர்காமத்தில் மிக நீண்ட காலமாகவே முருகனுக்கு நைவேத்தியமாக மான் இறைச்சி படைக்கப்பட்டு வந்தது. 1960 களுக்குப் பிறகு கதிர்காமத்தைப் புனித நகரமாக இலங்கை அரசு பிரகடனப்படுத்திய பிறகு மான் இறைச்சி படைப்பது நிறுத்தப்பட்டது என நூலாசிரியர் கூறுவது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது. ஆக மான் இறைச்சி முருகக் கடவுளுக்குப் படைத்த பண்பாட்டுக் கூறுகளைக் காணும்போது பழங்குடி சமூகத்தின் வழிபாட்டு மரபை உணர்த்துவதாக அமைகிறது.

கதிர்காமத்தைப் போலவே கண்டியிலும் இருக்கும் கதரகமா கோயில் இலங்கை சிங்களவர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறும் ஒரு கோயிலாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிங்கள வணிகர்கள் இந்த முருகன் கோயிலை தங்களது வழிபாட்டின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர். சிங்கள வணிகர்கள் ஒவ்வொரு நாளும் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை தங்கள் மரபாகவும் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்களின் முருக வழிபாட்டு முறையில் உடலில் சிறிய இரும்பு முட்கள் மற்றும் ஆணிகளைத் துளைத்து வேண்டுதல் வழிபாடு செய்வது வழக்கில் இருப்பதை ஓபயசேகர (1988) அவர்களது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. கதிர்காமத்தில் தூக்குக் காவடி எடுக்கும் இஸ்லாமியர்களும் இத்தகைய வழிபாட்டில் இணைந்து கொள்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை கதிர்காமம் மற்றும் கண்டி கதிரகமத் தெய்யோ என்ற வடிவில் முருகவழிபாடு தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியாகத் தொடர்கிறது.

இலங்கை சிங்களவர் வரலாறு பற்றி நீண்டகாலமாகவே வட இந்தியத் தொடர்புகளை மட்டுமே உறுதிசெய்யும் வரலாற்றுப் பின்னணி செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம் ஆகிய புராணக்கதைகளை மூல பாலி மொழியிலிருந்து மொழிபெயர்த்த ஜெர்மானியரான வில்கெம் கெய்கர் மற்றும் மாக்ஸ்முல்லர் போன்றவர்களின் சிங்களவர்கள் வட இந்தியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்ற வகையிலான கருத்தாக்கமும் ஒரு காரணம். இது மட்டுமன்றி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் பரணவிதான எழுதிய இலங்கை வரலாறு, அதாவது இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன் துட்டகாமினிக்கும் இடையில் நடைபெற்ற போர் பற்றிய செய்திகள் இன்றுள்ள தலைமுறையினர் வரை செல்வாக்கு செலுத்தி வருகிறது என்று கூறுகிறார் நூலாசிரியர். 

மேற்குறிப்பிட்ட இந்தக் கருத்தாக்கங்கள் இலங்கையிலேயே நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர் இலங்கைக்கு  அன்னியர் என்ற பார்வையை முன்வைத்து துட்டகாமினி தொடுத்த போர் சிங்கள மக்களுக்கான ஒரு விடுதலைப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.


இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரத்தில் ஆட்சி செய்தவன் தமிழ் மன்னன் எல்லாளன். இவனைப் பற்றி பௌத்த பிக்கு மகாநாமதேரர்  தனது நூலான மஹாவங்ச என்ற நூலில் விளக்கியிருந்தாலும் அதற்கு விளக்கம் கூறும் சிங்களத் தேசியவாத வரலாற்றாசிரியர்கள் இதற்குத் தவறான விளக்கங்களைக் கூற முற்பட்டனர் என்பதும் இது ஒரு பக்கச் சார்பாக அமைந்துவிட்டது என்றும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

சிங்கள மொழி வளர்ச்சி பெற்ற விதத்தை நான்கு கட்டங்களாக அறிஞர்கள் பிரிக்கின்றனர்.
1. ஸ்ரீலங்கா பிராகிருதம் இது பொ.ஆ.மு. 400க்கும் முந்தியது
2. தொடக்கக்காலச் சிங்களம் பொ.ஆ 400 இல் இருந்து 700 வரை
3. இடைக்காலச் சிங்களம் பொ.ஆ 700 இல் இருந்து 1200 வரை
4. தற்காலச் சிங்களம் பொ.ஆ 1200 முதல்

இன்றைய நிலையில் இலங்கையில் ஏழு முக்கிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
1. சிங்களம் 2. தமிழ் 3. திவேகி (மாலத்தீவில் பேசப்படும் மொழி) 4. அரபு 5. கிரியோல -  மலேசியாவிலிருந்து வந்து சேர்ந்த மலாய் மக்கள் பேசும் பல கலப்புகள் கொண்ட ஒரு மொழி 6. போர்த்துகீசியமும் சிங்களமும் கலந்த வகையில் போர்த்துக்கீசிய வம்சாவழியினர் பேசும் ஒரு கலப்பு மொழி 7. சாமுண்டி வேடர்கள் பேசும் ரோடியா மொழி.

நூலாசிரியர் நூலில் குறிப்பிடும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் காணும் போது சிங்கள மொழியின் வளர்ச்சியைக் கீழ்க்காணும் வகையில் காணலாம்.
1. இலங்கை பூர்வ குடியினர் வழக்கில் இருந்த 'எளு' என்பது சிங்கள மொழியில் ஆரம்பக்கால மொழியாக இருந்தது.
2. புத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொ.ஆ.மு 3ம் நூற்றாண்டில் பவுத்தர்கள் வருகையால் மகதி மொழி இலங்கைக்கு வந்தது. இது பாலி மொழியாக வளர்ச்சி பெற்றது.
3. இலங்கையில் கலையும் அறிவியலும் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் சமஸ்கிருதம் அறிமுகமானது.
4. சமஸ்கிருதம் கலந்த மொழியில் இருந்த மகாயான அல்லது வைத்தூலிய பௌத்த மதப் பிரிவு இலக்கியங்கள் வழியாகவும் சமஸ்கிருதம் பரவியது. இதன் காலம் பொ.ஆ 3ம் நூற்றாண்டு.
5. அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவின் இன்றைய கேரள  (அன்றைய தமிழகம்) பகுதியிலிருந்து அரசியல் மாற்றங்களின் காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறிய பௌத்தர்களும் சமணர்களும் இலங்கைத் தீவிற்கு வந்த நிகழ்வும் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் சிங்களத்தில் சமஸ்கிருதப் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.
6. சிங்கள இலக்கிய உருவாக்கம் நடைபெற்ற காலம் பொ.ஆ. 1250.
7. சிங்கள மொழி இலக்கணமும் தொடரிலும் திராவிடம் சார்ந்திருக்கின்றன.
8. கால ஓட்டத்தில் மேலும் பல ஐரோப்பிய மொழிகளையும் உள்வாங்கிய வகையில் இக்காலச் சிங்கள மொழி உள்ளது
சிங்கள இலக்கியங்கள் எனக் காணும் போது அதில் பழமையானது 'சித்தத் சங்கரவா'  எனும் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். 

இந்த நூல் இரண்டு வகையான எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. 
1. எளு வரி வடிவம் (பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகள் கலக்காதவை) 
2. மிஸ்ர என்னும் பாலி மற்றும் சமஸ்கிருத ஒலிகள் கலந்த கலப்பு வடிவம். 
இந்த நூல் வீரசோழியத்தைத் தழுவி எழுதப்பட்டது. இதனை எழுதியவர் சங்கராஜா அனோமதச்சி. இன்றைய சிங்கள மொழியின் மாற்றங்களிலும் வளர்ச்சியிலும் இலங்கையில் பௌத்த மத அறிமுகம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது கண்கூடு.

சாதாரணமாகப் பார்த்தாலே சிங்கள மொழியின் எழுத்து வரிவடிவம் தமிழ் வட்டெழுத்து வகையில் அமைந்திருப்பதைக் காணலாம். இன்றைய மலையாள எழுத்துக்கு மிக நெருக்கமான வகையில் இந்த எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. சிங்கள மொழி உருவான சமயத்தில் பொறிக்கப்பட்ட சிகிரியா கல்வெட்டுக்களைக் காணும்போது அதில் பல இடங்களில் தமிழ் மலையாள சிங்கள எழுத்துக்களும் கலந்திருப்பதைக் காண்கின்றோம்.  

சிங்களப் பண்பாடு மொழி ஆகிய இரண்டுமே திராவிடமொழி மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்து அமைந்திருக்கின்றன. புராணங்களைச் சார்ந்த கருத்தாக்கங்களை விலக்கிவிட்டு, மொழியியல், மரபணு மற்றும் மானுடவியல் பார்வையில் ஆய்வுகளைத் தனிச்சார்பற்ற நிலையில் மேற்கொள்ளும்போது தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்த முடியும். 

சிங்கள வாழ்வியல் மொழி பண்பாடு என விரிவான பல்வேறு தகவல்களை வழங்கும் சிறந்த ஓர் ஆய்வு நூலாக இந்நூல் அமைகிறது. வரலாற்று ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். 

-சுபா