Friday, July 22, 2022

தலையங்கம்: தமிழ் மரபின் வரலாற்று ஆய்வை மேம்படுத்துவோம்


வணக்கம்.
அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் காலாண்டிதழின் ஊடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய பயணம்... இந்தக் காலாண்டிதழோடு தமிழ் மரபு அறக்கட்டளையின்  30  ஆய்வுக் காலாண்டிதழ்களாக வெளிவந்துள்ளன. இந்த 30 காலாண்டிதழ்களும் தன்னுள்ளே சேகரித்து வைத்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு வழங்கி இருக்கும் வரலாற்றுச் செய்திகள் ஏராளம்...  ஏராளம். தொடர்ச்சியாக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முனைப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் பல ஆர்வலர்களின் ஆய்வு நாட்டமும் முயற்சியுமே இதனை சாத்தியப்படுத்தியுள்ளன.

வரலாறு, தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகள், சமூகவியல் பார்வை, மானுடவியல் பார்வை, தொல்லியல் அகழாய்வுச் செய்திகள் எனப் பன்முகத்தன்மையோடு இந்த 30 காலாண்டிதழ்களும் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவை மட்டுமின்றி கவிதைகளும் இந்தக் காலாண்டிதழ்களை  அலங்கரித்திருக்கின்றன.

தொடர்ச்சியாக எந்தத் தொய்வும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பல்வேறு செயல்பாடுகளும், நாம் வெளியிட்ட அறிக்கைகளும், நமது பரிந்துரைகளும் கூட இந்த காலாண்டிதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நாம் நடத்திய கல்வெட்டுப் பயிற்சிகள், மரபுப் பயணம் தொடர்பான செய்திகள், சமூக அக்கறையுடன் அவசர காலங்களில் தேவையுள்ளோருக்கு நாம் வழங்கிய இடர் கால உதவிகள் பற்றிய அறிக்கைகள், கருத்தரங்குகளில் நமது பங்களிப்பு, தமிழக அரசுக்கு நமது பரிந்துரைகள், நமது ஆய்வுக் காணொளிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் பேட்டிகள் எனத் தகவல் களஞ்சியமாக நமது மின்தமிழ் மேடை காலாண்டிதழின் 30 தொகுப்புகளும் திகழ்கின்றன.

இந்த 30 தொகுப்புகளையும் அதன் முதல் இதழ் தொடங்கி இன்று வரை  தொகுத்து, முறையாக அவற்றை நூல் வடிவில் வடித்து, தரமான முறையில் ஒவ்வொரு காலாண்டிதழையும் உருவாக்கி அளித்திருப்பவர் இதன் பொறுப்பாசிரியர் முனைவர் தேமொழி.  எடுத்துக்கொண்ட பணியை ஆய்வு திறத்துடனும், கடமை உணர்ச்சி சிறிதும் குறையாமலும் மேன்மேலும் காலாண்டிதழ்களின் தரத்தை உயர்த்தி சிறப்புற வடிவமைத்து வெளியிடும் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்த 30 காலாண்டிதழ் தொகுதியும் கொண்டிருக்கும் செய்திகள் ஆய்வு மாணாக்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப் பல செய்திகளை வழங்குகின்றன. மின்னிதழ்களாக உள்ள இவற்றை அச்சு வடிவத்தில் அச்சுப்பதிப்பாக்கம் செய்து உங்கள் வீட்டு நூலகங்களில் இணைத்து வைத்துக் கொள்ளுங்கள். அவை நிச்சயம் உங்கள் வாசிப்பிற்கும், ஆய்விற்கும், சிந்தனைக்கும் உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்றைய நமது கல்விச்சூழல் என்பது  ஆய்வுத் தரம் குறைந்தும், அவசரகதியிலும், சான்றிதழ் பெறுவதையே நோக்கமாகக் கொண்டும் என்பன போன்ற வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய போக்கு தரமான ஆய்வுகள் வெளிவர உதவாது. இத்தகைய போக்கு மாற வேண்டும்.

வரலாற்றுச் செய்திகளையும் தொல்லியல் அகழாய்வுச் செய்திகளையும் ஆர்வத்துடன் வாசிக்கும் தமிழ் மக்கள் இந்த வாசிப்புக்கான எல்லையை தமிழ்நாடு என்ற நில அளவில் குறுக்கிக்கொள்ளாமல், உலகளாவிய வகையில் தங்கள் ஆய்வுப் பார்வையைச் செலுத்த வேண்டும். அத்தகைய பார்வை மனித இனத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதில் புதிய தெளிவுகளை நிச்சயம் உருவாக்கும்.

மேற்கூறிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஆய்வுக் காலாண்டு இதழ்களான மின்தமிழ்மேடை இதழ்கள் உயர்ந்த, தரம் மிக்க பல கட்டுரைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தரவிறக்கி நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த அறிவு களஞ்சியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

No comments:

Post a Comment