Monday, July 4, 2022

சோழர் காலக் கோயில் நிர்வாகமும் செப்பேடு ஆதாரங்களும்

சோழர் காலக் கோயில் நிர்வாகமும் செப்பேடு ஆதாரங்களும்


 —  முனைவர் எஸ். சாந்தினிபீ



அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் சார்ந்த நிதி முறைகேட்டுப் புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. இப்படிப் புகார்கள் எழும்போது, அதில் அரசு தலையிட முயன்றால், கோயிலை நிர்வகிப்பவர்கள் எதிர்ப்பதையும் காண முடிகிறது. இதுபோன்ற நிர்வாகச் சிக்கல்கள், அந்தக் கால அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வந்ததில்லையா? அந்தக் காலத்தில் கோயில்களை அமைத்த அரசர்கள் அதற்கான நிதி நிர்வாகத்தைத் தெளிவாக முறைப்படுத்தி வைத்திருந்தனர். இதற்காக எழுதப்பட்ட செப்புப் பட்டயங்கள் இன்றும் அரசர் காலத்துச் சாட்சிகளாக உள்ளன.

கோயில் நிதியையும் நிர்வாகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணியை அக்காலம் முதல் நம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர். கோயிலைக் கட்டிய அந்தக் கால மன்னர்கள், அவற்றின் நிர்வாகத்தில் இன்றைய அரசு மற்றும் நீதித் துறைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகக் கவனம் செலுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, சோழ மன்னர்கள் காட்டிய கவனத்தில் எந்தக் குறையையும் காண முடியாது. இவர்கள் ஆழ்ந்து ஆலோசித்து, முடிந்த வரையில் தவறான பயன்பாடுகளைத் தடுக்க முயன்றுள்ளனர்.

எனினும், அவர்களாலும் கோயில்களின் நிதி நிர்வாகத்தில் நூறு சதவீதம் புகார் எழாமல் பராமரிக்க முடியவில்லை. அதே நேரம், இது சார்ந்து சோழ மன்னர்களின் முயற்சிகள் பெரும் பாராட்டுக்குரியவை. இதற்கான ஓர் உதாரணம், அன்று கச்சிப்பேடு என்றழைக்கப்பட்ட காஞ்சிபுரத்து உலகளந்தப் பெருமாள் கோயிலின் செப்பேடு.   'மெட்ராஸ் மியூசியம் செப்பேடு' என்று பரவலாக அறியப்படும் ஐந்து ஏடுகளைக் கொண்ட இது.   சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியச் செய்திகள் கிடைத்தாலும் முடிவில் மட்டும் ஒன்றிரண்டு ஏடுகள் காணாமல் போயுள்ளதால், சில விஷயங்கள் கிடைக்கவில்லை.

மன்னருக்கு நினைவூட்டல்:
உத்தம சோழனின் 16வது ஆட்சி ஆண்டில் (பொ.ஆ. 965) வெளியிடப்பட்டது இந்தச் செப்பேடு, அவருக்குப் பின் பேரரசர் முதலாம் ராஜராஜன் அரியணையில் அமர்ந்தார். சோழ மன்னர்களுக்குப் பொதுவாக நாட்டின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று தங்கி, நிர்வாகத்தைக் கவனிக்கும் வழக்கம் உண்டு. ஒருநாள், தலைநகர் தஞ்சையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு அலுவல் நிமித்தமாக மன்னர் உத்தம சோழன் சென்றிருந்தார். அரண்மனையின் தென்புறத்தின் சித்திர மண்டபத்தில் அமர்ந்திருந்தவரிடம் ஒரு அலுவலர், காஞ்சியிலுள்ள பெருமாள் கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்கும் கடமை உள்ளதாக மன்னரிடம் நினைவூட்டினார்.

அன்று 'ஊரகப் பெருமாள் கோயில்' என அறியப்பட்டதுதான் இன்றைய காஞ்சிபுரத்தின் உலகளந்த பெருமாள் கோயில். இக்கோயிலின் வரவு செலவுக் கணக்கு, திருவிழா செலவு,  திருவிழாக் காலப் பணிப் பங்கீட்டு முறை போன்ற பல செய்திகளை இச்செப்பேடு பதிவுசெய்துள்ளது. இதன்படி பல ஊர்சபைகள் இக்கோயில் இருப்பிலிருந்து பொன்னைக் கடனாகப் பெற்று அதற்கான வருடாந்திர வட்டித் தொகை, கோயில் நிலங்களிலிருந்துவரும் வருமானம் ஆகியவை வரவாகக் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் சங்கராந்தி, சித்திரை விஷு (இன்றும் கேரளத்தில் கொண்டாடப்படுகிறது) ஆகிய இரண்டு திருவிழாச் செலவுகளும் சொல்லப்பட்டுள்ளன.

இந்தத் திருவிழாக்களில் இறைவனுக்கான படையல் பொருட்கள், வாசனைப் பூச்சு, காய் பழம், வெற்றிலைப் பாக்கு, விளக்குக்கான எண்ணெய் சமையலுக்கான விறகு உட்பட பலவற்றிற்குமான தொகை கூறப்பட்டுள்ளது. கலைஞர்கள், தேவரடியார்,  பல்வகை இசைக்கருவி வாசிக்கும் உவச்சர்கள் உட்பட வழக்கமான பல வகைச் செலவுகளும் சொல்லப்படுகின்றன. ஆனால், இச்செப்பேட்டில் 'கண்டழிவற்காக' என ஒரு தொகை ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருவிழாக் காலத்தில் எதிர்பாராது ஏற்படும் செலவிற்கான தொகை இது.   அதாவது, இக்காலத்தில் நாம் 'இதர செலவுகள்' என்று குறிப்பிடுகிறோமே அதைத்தான் 'கண்டழிவு' என்று குறிப்பிட்டுள்ளனர். இதில், வரவு செலவுக் கணக்கு பார்க்கச் சொல்லப்பட்ட முறைதான் மிகச் சிறப்பானது.

கணக்குப் பார்ப்பது யார்?
"மாதந்தோறும் கணக்குப் பார்க்க வேண்டும்.   திருவிழாக் காலத்தில் விழா முடிந்த கையோடு கணக்குச் சரி பார்க்க வேண்டும்.  காஞ்சிபுர நகரத்தார் குழுவின் தலைவரும் ஆண்டு வாரியத்தாரும், ஏற்றுவழிச்சேரி, கஞ்சகப்பாடி குடியிருப்புகளைச் சேர்ந்தாரும் இக்கோயில் திருவிழாக்கள் முடிந்ததும் கோயில் கணக்குகளைப் பார்வையிட வேண்டும்.  கஞ்சகப்பாடியாரும் ஏற்றுவழிச்சேரியாருமே கோயிலுக்கு மெய்க்காப்பாளரை நியமிக்க வேண்டும்;  கோயில் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவார், திருமெய்க்காப்பு (பாதுகாவலர்), கணக்கெழுதுவார் ஆகியோரை நகரத்தாரே தேர்ந்தெடுத்துப் பணியமர்த்த வேண்டும்.   கோயில் செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டால், பதினெட்டு நாட்டு அடியார்கள் மட்டுமே ஒன்றுகூடி நேர்செய்தல் வேண்டும் எனச் செப்பேடு குறிப்பிடுகிறது.

அதாவது, கோயில் வழிபாடு செய்யும் பூசாரிகளுக்கும் கோயிலின் சொத்து வரவு செலவுகளுக்கும் தொடர்பில்லை. வரவு செலவான நிதி நிர்வாகம் பார்ப்பவர்கள் வேறு பல ஊர்களையும் குடியிருப்புகளையும் சேர்ந்தவர்களே. இவர்களுடன் கோயில் பணி செய்பவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. இவர்கள் சேர்ந்தால் ஊழல் ஏற்படும் எனக் கருதி, கோயில் பணியாளர்களையும் கணக்கு மேற்பார்வை செய்பவர்களையும் சோழர்கள் தனித்தனியே வைத்துள்ளனர். மேலும், நிதி நிர்வாகம் செய்பவர்களுடன் வேறு பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் அமர்த்தி, அதிலும் ஊழலைத் தடுக்க முயன்றுள்ளனர்.

காவிரிப்பாசன மாவட்டங்களில் உள்ள பெருங்கோயில்கள் அனைத்தும் சோழர் கால நிதி நிர்வாகப் பட்டியலைச் சேர்ந்தவைதான். இந்தப்பின்னணியில் ஒருசில கோயில்கள் மட்டும் வரவு செலவுக் கணக்கைக் காண்பிக்க மறுப்பது சரியா என்கிற கேள்வியை வரலாற்று ஆதாரங்கள் எழுப்புகின்றன.



பேராசிரியர் முனைவர் எஸ்.சாந்தினிபீ 
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர்
நன்றி: ஜூலை 3, 2022- இந்து இதழ் 




No comments:

Post a Comment