Sunday, July 10, 2022

தொல்காப்பியம்-பொருளதிகாரமும், சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை

தொல்காப்பியம்-பொருளதிகாரமும், சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலை


பேரா. முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்
அண்ணாமலைக் கனடா,
(அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடாத்தும் கல்வித் திட்டம்)
ரொறொண்டோ, கனடா


சங்ககாலத்தில், ஆண், பெண் இருபாலரும் நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதற்குத் தமக்குப் புலனான சமூக ஒழுங்கு முறைகளையே நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். அந்தச் சமூகத்தில் ஆள்பவன், ஆளப்பட்டவன் என்ற பாகுபாட்டிற்கே இடமிருந்ததாகத் தெரியவில்லை. காலப்போக்கில் இந்நிலையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதும், சங்க கால மகளிர் நிலையை இக் காலத்தவர் விளங்கிக் கொள்ள முடியாமைக்குத் தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம் என்பதும் இவ் ஆய்வின் கருதுகோளாகும். ஆய்வுப் பரப்பெங்கும் இக் கருதுகோள் உள்நுழைந்து அதற்கான விடையைக் காண முயன்றிருக்கிறது. இவ்வாய்வு, கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. 

1. தொல்காப்பியம், கி. மு. 5 ஆம் நூற்றாண்டிற்கு முன்னையது. சங்கத் தொகை நூல்கள் வெவ்வேறு காலப்பகுதியில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. தொல்காப்பியர் காலத்திற்கும் சங்க இலக்கியங்களின் காலத்திற்கும் இடையில் ஆகக் குறைந்தது 200 ஆண்டுகள் இடைவெளி இருந்திருக்கவேண்டும். இந்த 200 ஆண்டுகள் கால இடைவெளியில், வாழ்வியல் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவில், நடை பெற்றிருப்பது அறியக் கிடக்கிறது.

2. பொருளதிகாரம் சமூகத்தில் மிகக் குறைந்த தொகையினரான (5% இலும் குறைவான) உயர்குடி மக்களின் வாழ்வியலைப் பெரிதும் காட்டிநிற்கிறது. உயர்குடித் தலைவன் தலைவியரது வாழ்வியலை அளவுகோலாகக் கொண்டு ஒட்டுமொத்தச் சமூகத்தையும் அளவிடமுடியாது. தொல்காப்பியம், பொருளதிகாரத்திலும், சங்க இலக்கியங்களிலும், மேல்மட்டக் குடிகளின் வாழ்வியலோடு தொடர்புபடுத்திக் கூறப்பட்டவை, கூறப்படாதவை, மௌனம் காத்தவை, அணிகளில் ஆங்காங்கே கூறப்பட்ட தகவல்கள் முதலியவற்றிலிருந்து பொதுமக்களின் வாழ்வியல் குறித்து அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

3. அகத்திணை இலக்கணமும் இலக்கியமும் காட்டும் பெண்களை உழைக்கும் வருக்கத்தினர், உயர்குடியினர் என இரு வகையாகப் பிரித்துக் காணலாம். மேற்கண்ட அடிப்படையில், தொல்காப்பியம் - பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் காட்டும் பெண்களின் சமூகநிலையின் முடிவுரை, அரசியல், கல்வி, பொருளாதாரம், சமூகம் என்னும் அடிப்படையில் தரப்படுகிறது. வரலாற்றில் பெண் அரசாண்டிருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் சங்க இலக்கியத்தில் காணப்படினும் பெண் அரசாண்டமைக்கான சான்றுகள் இல்லை. ஆனால், அரசுரிமை பெண்களுக்கு மறுக்கப்படவில்லை என்று ஊகிக்கக்கிடக்கிறது. 

பெண் அரசு செய்ததற்கான வலுவான சான்றுகள் இல்லாதபோதும், சேர நாட்டில், சங்ககாலத்தில் நிலவிய பெண்ணின் அதிகார நிலையை, சொத்துரிமையை, எடுத்துக் காட்டுவதாக மருமக்கள் தாயமுறை ஆட்சி வழக்கில் இருந்திருக்கிறது. இது, தாய்த் தலைமையின் எச்சம் என்று கொள்ளலாம். ஆனால் இது பெருவழக்காக இருந்ததாகத் தெரியவில்லை. சங்ககாலத்தில், கல்வி தொடர்பாகப் பொது மக்களிடையே காணப்பட்ட விழிப்புணர்வும், கல்வி கற்பதில் காட்டிய ஆர்வமும் உயரியது. வறிய மாணாக்கர்கள், ஊர்விட்டு ஊர் சென்று பொது மன்றுகளில் தங்கி, வீடுகளில் விருந்தினராக நுழைந்து தமது ஏழ்மை நிலையிலும் கல்வி கற்றிருக்கிறார்கள். பாணர் குடியினர், தம்முள் ஒரு கல்விமுறையைக் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள். 

பெரும்பாலான சங்கப்புலவர்கள், வசதி வாய்ப்பற்ற பொதுமக்களே. பெண்பாற் புலவர்களில் பெரும்பான்மையானவர்கள் பொதுமக்களே. 473 சங்கப் புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 45 பேர் என்றும், அவர்கள் பாடிய பாடல்கள் 196 என்றும் அறிகிறோம். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக்காலச் சூழலில்; 10 விழுக்காடு பெண்கள் கவி பாடியதே அதிகம். பாடியோர் எண்ணிக்கையை விடப் பாடல் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். சங்க காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் புலவர்களாகவும் துணிச்சல் காரர்களாகவும் மனவுறுதி படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களிடமும் மன்னரிடமும் பெருமதிப்பும் மரியாதையும் இருந்திருக்கிறது. அவர்களை யாரும் அடக்கியாளவில்லை என்பதும் அவர்கள் பெண் என்ற முறையில் எங்கும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படவில்லை என்பதும் எந்த ஆணுக்கும் அவர்கள் எந்த வகையிலும் தம்மைக் குறைத்துக் கணக்கிட்டது கிடையாது என்பதும் நிரூபிக்கப்பட்டது. வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவது ஆண்மகன் கடமை என்று கூறும் ஒரு சமுதாய அமைப்பையே தொல்காப்பியர் காட்டுகிறார். 

உயர்குடிச் சமூகத்தில் பெண் வீட்டு நிருவாகம் செய்வதைக் கூறிய அவருக்குச் சராசரிப் பெண், வீட்டுத் தேவைகளுக்காக தன்பங்கிற்குச் சிறுகச் சிறுகத் தொழிலும் வியாபாரமும் செய்திருக்கிறாள் என்பதைக் கூறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் சங்க இலக்கியங்கள் அவற்றைக் கூறத் தவறவில்லை. உயர்குடிப் பெண் கணவனோடு இருக்கும் வரை கணவனின் சொத்து அவள் சொத்து என்னும் நிலைப்பாடே அக்காலத்தில் நிலவியிருக்க வேண்டும். கணவனை விட்டு அவள் விலகிய நிலையில் அவளுக்குச் சொத்தும் இல்லை, காப்புமில்லை என்ற அளவில் அவள் கணவனைச் சார்ந்தே இருக்கிறாள். கணவன் ஊரில் இல்லாத வேளைகளில் மனைவி தன்விருப்பப்படி புலவர்களுக்குப் பரிசில் வழங்கியிருக்கிறாள் என்ற அளவில் அவளுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இருந்திருக்கிறது. 

ஒரு சராசரிப் பெண்ணுக்குச் சொத்துரிமை என்று ஒன்று தனியாக இருக்கவில்லை. ஆணுடன் சேர்ந்து தொழில் செய்பவளுக்கு கணவனுடையது எல்லாம் அவளுடையதே; 

தந்தையோ தமையனோ கணவனோ கடலிலிருந்து கொண்டு வரும் மீன், கொண்டு வரும் வரை தான் ஆணின் சொத்து. அதனைக் கூடையில் ஏற்றி விலைப் பொருளாக்குவதும் உப்புப் போட்டுக் கருவாடாக்குவதும் பெண்ணின் கடமையாக இருந்திருக்கிறது. அப்படியானால் மீன் யார் சொத்து? 

நெல் விற்று எருது வாங்கி வரும் பெண், இந்த எருதை யார் பெயரில் சொத்தாக எழுதிக் கொள்ளுவாள்?

வண்டியில் உப்பை ஏற்றி, நெடுஞ்சாலையில் ஓட்டி, உப்பு வணிகத்தில் பெரும் பங்கு கொள்ளும் பெண்ணுக்கு இவ்வாணிபத்தில் பங்கு என்ன? 

ஆணுக்குச் சமமாக வயலில் வேலை செய்கிறாள் பெண். விளைபொருளுக்குச் சொந்தக்காரர் யார்? 
இவ்வாறு தொழிலைச் சமமாகப் பங்கு போட்டுச் செய்யும் சமூகத்தில்; சொத்துரிமை ஒரு சிக்கலாக இருக்கவில்லை. 

அகவிலக்கியத்தில் தலைவியே முக்கிய பாத்திரம் என்பது புள்ளிவிவர அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. தலைவியின் வாழ்வின் பிற்கூறு இப்படித்தான் இருக்கும் என்பதை நற்றாயைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் தந்தையிடமும், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் தாயிடமும் இருந்திருக்கிறது. ஆனால், தந்தையைத் தனது முடிவிற்குச் சாதகமாக மாற்றும் ஆற்றல் தாயிடம் இருந்திருக்கிறது. எனவே இறுதித் தீர்மானங்கள் பெண்களாலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆண், பெண் கடமைகள் சமமானவையாகத் தொல்காப்பியம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஆணும் பெண்ணும் உடலமைப்பில் ஒத்தவர்கள் போலக் காணப்பட்டாலும் அடிப்படையில் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் வெவ்வேறு அமைப்புக்களைக் கொண்டவர்கள். உடல் சார்ந்த தொழிற்பாடுகளை ஆணால் திறமையாக ஆற்ற முடியும். பெண் இனப் பெருக்கத்திற்குக் காரணமானவள், மென்மையானவள், உள்ளம் சார்ந்த செயல்களில் திறமைசாலி. உலகோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அணுகுமுறையிலும் ஆணிலும் பல வழிகளில் வேறானவள். அவர்கள், தமது தன்மைகளுக்கு ஏற்ற முறையில், தம்மிடையே ஏற்படுத்திக் கொண்ட எழுதா ஒப்பந்தத்தின்படி தொழிற்பாடுகளைப் பகிர்ந்து வாழ்ந்த வாழ்க்கையை ஆராயும் நாம் அதனைப் புரிந்து கொள்வதற்குத் தற்கால நடைமுறைகளை அளவுகோலாகக் கொண்டிருக்கின்றோம். 

மகளிர், மொழிவழி அல்லாத மறைமுகத் தொடர்பியலே பெரும்பாலும் கொள்கின்றனர் என்பது தொல்காப்பியர் மீது சுமத்தப்படும் ஒரு குற்றச்சாட்டு. இது தொடர்பான நூற்பாக்களும் விளக்கங்களும் அவற்றிற்கு எதிரான கருத்துக்களும் ஆராயப்பட்டன. ‘தொடர்பாடல்’ என்னும் சொல் விரிவாக ஆராயப்பட்டு, அதன்வழி தொல்காப்பியம் பெண்ணிற்குக் கூறியிருக்கும் தொடர்பாடல் இரட்டைத் தொடர்பாடலே என்பதும் களவிலும் கற்பிலும் அவளது தொடர்பாடல் அவளது இணையான தலைவனது தொடர்பாடலுக்கு எந்த வகையிலும் மாறுபட்டதோ, தாழ்வு பட்டதோ அல்ல என்பதும் நிறுவப்பட்டுள்ளது. பெண் ஆணின் விருப்பத்திற்கு ஏற்பக் கற்பிக்கப்பட்டவளாகக் கூறப்படுகிறது. 

களவில் தலைவியின் இயக்கத்தில் தலைவன் ஒழுகினானே தவிரத் தலைவனின் இயக்கத்தில் தலைவி இயங்கவில்லை. தலைவி, யாருடைய ஆலோசனையோ அனுமதியோ இன்றித் தோழிக்கும் தெரியாமல், தலைவனைத் தெரிந்தெடுக்கிறாள். பெண்ணை, ஆண் கட்டாயப்படுத்தி எதையும் சாதித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. சங்ககாலப் பெண், தனது மனத்துக்குப் பிடித்தவனைக் கணவனாகத் தெரிந்தெடுக்கும் மனத் துணிவையும் சுதந்திரத்தையும் அக்காலச் சமூகம் அவளுக்குக் கொடுத்திருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் களவில் மெய்யுறுபுணர்ச்சி நடந்திருப்பதை மறுப்பதற்கில்லை. ஒத்த குணவியல்புகளும் ஆளுமையும் கொண்ட தலைவியின் சம்மதமின்றித் தலைவனுக்கு எதுவும் சாத்தியமில்லை என்பது தெளிவு. தொல்காப்பியர் இலக்கணப்படி ‘கற்பு’ என்பது ‘கன்னித்தன்மை’ யுடன் தொடர்புடைய பொருளில் ஆளப்படவில்லை. திருமணத்தின் முக்கிய நிகழ்வான புணர்ச்சி திருமணத்திற்கு முன்னமே நடந்து முடிந்து விட்டது. எனவே புணர்ச்சிக்கும் கற்புக்கும் தொடர்பில்லை. காட்டலாகாப் பொருளான ‘கற்பு’ என்பது நிறை என்னும் உள்ளத்து உணர்வு. துணைக்கு யாருமற்ற நிலையில் மதுரைத் தெருக்களில் நின்று நீதி கேட்ட வணிகர் குடிப்பிறந்த கண்ணகி தனது கற்பு வழித் தீர்வு கண்டாள். ஒரு சராசரிப் பெண்ணுக்கு இதுவும் சாத்தியமே. 

தொல்காப்பியர் காலத்தில், நிறை என்னும் பொருளில் ஆளப்பட்ட கற்புக்குப் பிற்கால ஆய்வாளர்கள், தம் காலக் கருத்தைப் புகுத்திப் பொருள் காண விழைவது பொருந்துவதாக இல்லை. தலைமுறை இடைவெளியைத் தாண்டிப் பொருள் காணவேண்டும். 

பெண் உடைமைப் பொருள் என்று கூறப்படுகிறது. மகட்பாற்காஞ்சி போன்ற துறைகள் பெண்ணை உடைமைப் பொருளாகக் காட்டுகின்றன. பிற்காலத்தில் பாடல்களுக்குத் துறைகள் அமைத்தலில் சில  தவறுகள் நேர்ந்திருக்கின்றன. புறநானூற்றில், மகட்பாற்காஞ்சிப் பாடல்களும் பெண் காரணமாக எழுந்த போரைக் குறிப்பிடவில்லை. சீறூர்த் தலைவரின் வீரமும் குடிச்சிறப்பும் மான மாண்பும் புகழ்வதற்குப் புலவர்கள் மேற்கொண்ட புனைவு நெறியே மகட்பாற்காஞ்சியாகும். சங்ககாலத்தில், பெண் உடன்கட்டை ஏறும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை. ‘சதி’ என்னும் கட்டாய வழக்கம் சங்ககாலத்தின் பின் சிறிது சிறிதாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. மனைவி இறந்த கணவனுக்கு, காதலியை இழந்த ‘தபுதார நிலை’ மட்டும் ஒரு புறநடையாகும். அதுவும் வருந்தி நிற்பது மட்டும் தான். பெண்ணுக்கு மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் மனைவி உயிரோடு இருக்கும் போதே கணவன் வேறொருத்தியை மணந்து கொள்ளும் இருதாரமணம் சங்ககாலத்தில் இருந்திருக்கிறது. 

சங்ககாலப் பெண்களும் காலத்தைப் பிரதிபலிப்பவர்களாக, மறக்குடி மரபிற்கேற்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பும்  வீரத்தாயாகவும், தன் கணவன் போர்க்களத்தில் இறந்தான் என்பதை அறிந்து தானும் உயிர் நீக்கும் பதிவிரதையாகவும், தன் கணவன் உயிர் குடித்தவனைக் கொன்று பழி தீர்த்த பின் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும்; மறக்குடி மகளாகவும், மாண்ட தலைவனின் தலையை அணைத்தபடி உயிர்விடும் வீரத்தலைவியாகவும் தமிழ் மறக்குடி மகள் காட்டப்படுகிறாள். 

மறக்குடி மாதருக்குத் தமிழர் வரலாற்றில் தனியிடம் தரப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணத்தாலேயே பெண்ணுக்குக் கடல் பயணம் மறுக்கப்பட்டது. சங்க காலத் தமிழர் பண்பாட்டில் பெண்கள் மடலேறியிருக்கமுடியாது என்பது நிறுவப்பட்டது. பாசறைக்குப் பெண்கள், தொழில் தொடர்பாகப் போயிருக்கிறார்கள் என்பதும் எவரும் போரில் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்பதும் நிறுவப்பட்டது. எனவே, மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டவை யாவும் நன்நோக்குடனேயே மறுக்கப்பட்டன, பெண் என்ற காரணத்தால் அல்ல. 

கலை வளர்த்த ஒரு குடிக்கும் பணமும் அதிகாரமும் வாய்ப்பும் மிக்க உயர்குடி மக்களுக்குமிடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலில் உருவானவர்களே பரத்தையர் குலம். எனலாம். கலைமக்களாக இருந்த விறலியரை விலைமகளாக்கியதில் பாணரது பங்கும் பெரியது. தமது வாழ்வாதாயத்தின் பொருட்டுத் தம் குலப் பெண்டிரைப் பொருளுக்கு விற்றனர் என்பது தான் உண்மை. போரின் விளைவாக ஆண் பெண் சமநிலை அற்றுப் போனதும், போரில் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட மகளிருக்கும் இதுவே தொழிலாக ஆக்கப்பட்டதும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டைத் தமிழர் போற்றி வந்தமையும் சங்ககால இறுதிப் பகுதியில் பரத்தையர் பெருக்கத்திற்கான வேறு காரணங்களாக அமைந்தன எனலாம். பரத்தையருக்குக் குழந்தைகள் பிறந்திராவிட்டால் பரத்தையர் குடி அருகி இல்லாமற் போயிருக்கவேண்டும். மாறாகப் பரத்தையர் எண்ணிக்கை பல்கிப் பெருகியிருக்கிறது. இது, பரத்தையரது மகப்பேறு, தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் தவிர்க்கப் பட்டிருக்கிறது என்ற கருத்தை உறுதி செய்கிறது.

தலைவன் பரத்தையிற் பிரிதலை ஒரு சாதாரண நிகழ்வாகத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் கூறுகின்றன. சுவை கருதிப் பரத்தையர் ஒழுக்கம் அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. பரத்தையிடம் ஆண் செல்வது அவனது பலவீனம். இதுவே தலைவியின் பலமாகவும் ஆகிவிடுகிறது. தலைவிக்குத் தலைவனின் பரத்தைமையைப் பொறுத்துப் போகும் பண்பு கூறப்படுகிறது. இது, தலைவி, தலைவனின் பரத்தமையை ஏற்று நடக்காவிட்டால், அவள் ஒதுக்கப்படக்கூடியதொரு நிலை உருவாகும் என்று அச்சுறுத்துவது போல இருக்கிறது. 

கற்பு வாழ்க்கையில் கணவனின் பரத்தைமை ஒழுக்கம் அவளுக்கு ஒரு தலையிடியாக இருந்ததே ஒழிய அது அவள் வாழ்க்கையைத் தகர்க்கும் ஒழுக்கமாக இருக்கவில்லை. அவள் அதனை அக்கால வாழ்க்கை நெறியின் ஒரு அம்சமாகக் கொண்டு பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையே காணப்பட்டிருக்கிறது. தலைவன் தலைவியரிடையே புலவியும் ஊடலும் ஏற்படுவதற்குத் தலைவனின் பரத்தைமை தவிர வேறு காரணம் உள்ளதாகப் பாடல் இல்லை. கணவனை ஊடியும் கூடியும் ஏசியும் பணிந்தும் நயந்தும் கடிந்தும் அவனது தவறுகளை எடுத்துக் கூறும் உரிமையும் தகுதியும் கடமையும் பெற்றவள் தலைவி ஒருத்தியே. 

பரத்தை, தலைவன் மேல் உண்மையான அன்பு கொண்ட நிலையிலும் கூட, பிற்கால மாதவி போன்று, தலைவன் வாழ்க்கையில், தனக்கென நிலையான ஒரு இடத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியாத நிலையில் இருந்தவள். சங்க காலப் பிற்பகுதியில் தனக்கும் தலைவன் மேல் உரிமை உண்டு என்பதைத் தலைவி, தோழி, உற்றார் காணப் பொது இடத்தில் உரிமை கோரிக் கொள்ளும் நிலை உருவாகியிருந்தது. காலமும் சமூகமும் பரத்தைக்கு இழைத்த அநீதி பல நூற்றாண்டு காலத்திற்குச் சமூகத்தைப் பழிவாங்கத் தவறவில்லை. மிக அண்மைக் காலம் வரை இதன் கொடுமை நீடித்திருந்திருக்கிறது. பெண் சமூகத்தின் ஒரு பகுதி, பரத்தை என்னும் பெயரால், பல நூற்றாண்டுகளாக மீளமுடியாத ஒரு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்தது என்பது மறுக்கமுடியாத ஒரு விடயமாகும்.

தொல்காப்பியம் ஆணாதிக்க சமூகத்தைப் பிரதிபலித்தபோதிலும், பெண்ணுக்கு முழுச் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தது, பெண்ணை உயரிய இடத்தில் வைத்துப் பாராட்டத் தவறவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் சார்ந்து வாழவேண்டியதன் தேவையைக் காட்டி நிற்கிறது பாரிமகளிர் வரலாறு. இளம்பெண் ஒருத்தி, வீட்டிற்கும் ஊருக்கும் அஞ்ச வேண்டிய ஒரு பண்பாட்டுக்குக் கட்டுப்பட்டிருந்ததையும் நக்கண்ணையார் பாடல்கள் காட்டி நிற்கின்றன. சமூகம், குடும்பம் என்னும் தாபனங்கள் ஆரோக்கியமாக இயங்குவதற்குச் சில கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் அத்தியாவசியமானவை. சங்ககாலத்தில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு சமூக அமைப்பையே நாம் காணக்கூடியதாக உள்ளது. 

சங்க காலத்தின் பின் தொடங்கிப் படிப்படியாகக் காலங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட ஆண் பெண் பாலாரிடையேயான சமனற்ற தன்மை சமூகத்தில் ஓர் அதிகாரப் படிநிலையை  உருவாக்கி இருக்கிறது. சங்ககாலத்தில் இல்லாதிருந்த இந் நிலைப்பாட்டைச் சங்ககாலத்தின் மேல் ஏற்றிப்பார்க்கும் முயற்சி வலுவற்றது. சங்க காலப் பெண் கல்வியில் உயர்நிலையில் இருந்திருக்கிறாள். வீரத்தில் போற்றப்படும் இடத்தில் இருந்திருக்கிறாள். மிகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள். குடும்பத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இல்லத்தலைவியாக இருந்திருக்கிறாள். சமூகத்தில் அவளுக்கென்று உயரியதொரு இடம் இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை. 

ஆண், பெண்பாலாருக்கு இருக்கவேண்டிய பத்துப் பண்புகளில் சமநிலை தவறுவது விரும்பப்படாவிடினும் அப்படி ஒருவர் உயர்ந்திருக்கும் வேளையில் அது ஆணாக இருக்கலாம் என்னும் மரபைத் தொல்காப்பியர் கூறியிருப்பது, இந்நிலைப்பாடு சிறந்த குடும்பம் உருவாக வழி வகுக்கும் என்னும் கொள்கையின் அடிப்படையிலேயே என்று ஊகிக்கக் கிடக்கிறது. இன்றைய நவீனத்துவச் சமூதாயச் சிந்தனையாளர்கள், இன்றைய சமூகச் சிந்தனையை அளவுகோலாகக் கொண்டு, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னைய ஒரு சமூகத்தின் நிலைப்பாட்டை அளக்க முயல்வது, பொருத்தமானதல்ல. 

உயர் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்னும் கொள்கைக்கு அடிப்படையாகப் பெண்மைப் பண்புகள் காக்கப்படவேண்டும் என்னும் கருத்துத் தொல்காப்பியம் எங்கனும் ஊடுருவி நிற்கிறது. இன்று, சங்ககாலத்து நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாமைக்குத் தலைமுறை இடைவெளியே காரணம் என்னும் முடிவு கொள்ள வேண்டியிருக்கிறது. 





No comments:

Post a Comment