Sunday, February 26, 2017

ஒரு ஃபோட்டோ நெகடிவ்

- ருத்ரா இ பரமசிவன்
 


உன் வாழ்க்கையின்
ஒரு ஃபோட்டோ நெகடிவ்
உன் மன ஆழத்தில்.

அதை நீ எல்லோருக்கும்
ப்ரிண்ட் போட்டு காட்டமுடியாது.
உன் முகம் ரோஜாதான்
உன் வானம் பளிங்கு நீலம் தான்
ஆனாலும் உன்
சட்டைகளையெல்லாம்
உரித்துப்போட்டு விட்டு காட்சி கொடுக்க முடியாது.

சித்தர்கள் சமணத்துறவிகள்
அழகாய் நம் மீது பின்னல் வேலை போடும்
அந்த ஐம்பொறிகளைக்கூட‌
களைந்து வீசி விட்டவர்கள்.

அவர்கள் எதையோ தேடுகிறார்கள்!
அதற்காக‌
அம்மண சாமியார்களாய்
அலைந்து திரிந்து
கல்லடி பட்டார்கள்.

நாம் நாகரிகத்தின்
நுனிக்கொம்பர் ஏறியபின்  கண்டோம்
நம் அசிங்கமான நிர்வாணத்தை.
ஆணும் ஆணும் அல்லது
பெண்ணும் பெண்ணும்
சேர்ந்தால்  என்ன என்று?

நம் புராணங்களின் இடுக்கு சந்துகளில்
இது இருந்தாலும்
இது மீண்டும் நம்மை மரமேறிகளாக
மனிதனை மனிதன் பச்சையாக
பிய்த்துத் தின்றுவிடும் நிகழ்வுகளை
அரங்கேற்றிவிடுமோ என்ற அச்சமே
நம்மைத்தடுக்கும் சுவர் ஆக இருக்கிறது.

பொருள்களின் அதிகப்படியான இன்பம்
அலுப்பு தட்டி விடுகிறது.
"லா ஆஃப் டிமினிஷிங் யுடிலிடி" என்று
ஆல்ஃப்ரட் மார்ஷல் கூறுகிறார்.
இதை உள்ளுணர்ந்து பொருளாதார முதலாளிகள்
விளம்பரத்தின் மூலம்
அதே பொருளை பல்வேறு முகமூடிகளில்
நுழைத்து
நுகர்வோர்களுக்குள் ஒரு
"ஆர்டிஃபிசியல் இமேஜினரி செண்டிமென்டல் அட்டாச்மெண்டை"
அதாவது "கற்பனையான செயற்கை ஈர்ப்பின் ஒட்டுதலை"
தங்கள் பொருள்கள் மீது பாய்ச்சுகிறார்கள்.
டிவிகளில்
இதற்குத்தான் அந்த "வண்ண ஒளி"க்கசாப்புகள்
நடத்தப்படுகின்றன.

ஆனால் இரண்டு (ஆண் பெண்)மனங்கள் இடையே
அத்தகைய செயற்கை பூச்சுகள் இயலாது.
அதற்காக பாரம்பரியம் அது இது என்ற‌
போலி பாவ்லாக்களை
மிக மிக உச்சிக்குப்போன நாகரிகம் ஏற்றுக்கொள்வதில்லை.

அதனால் தான் ஆண் ஆண் அல்லது பெண் பெண்
சேர்ந்து கொண்டு வாழும் ஒரு
படிமத்துள் படிந்து கொள்ள நினைக்கிறார்கள்.
அதே "அலுப்பு" என்னும் உலுக்கு விசையின்
ஒரு பூகம்பம் வரும் வரைக்கும்
அதுவே "அல்ட்ரா" நினைப்புகள் ஆகும்.

புணர்வுகளில்
முதலில் நிகழ்வது
மனங்களின் புணர்வுகள்.
அது இருவர் இடைப்பட்டது மட்டும் அன்று.
உலக மனிதங்களின்
எலலா இதயங்களும்
ஒரே தகட்டில் லேமினேட் செய்யப்படுவது.
அந்த சாந்தி முகூர்த்தை தேடித்தான்
இந்த அம்மண சாமியார்களும் ஓடுகிறார்கள்.
தங்கள் ஆழ்நிலை சிந்தனையின் அடுக்குகளை
பாடல்களின்
மேளங்கள் தட்டிக்கொண்டு
செல்கிறார்கள்.

அந்த திசைகள் கழன்ற வெளியில்
அதற்கு அடையாளமாய்
ஏதோ ஒன்றை
"நட்ட கல்லாக்கி நாலு புஷ்பம் சாத்தி
சுற்றி வந்து மொணத்து மொணத்து"
மந்திரங்கள்
தந்திரங்கள்
எந்திரங்கள்
என்று என்னவெல்லாமோ செய்கிறார்கள்.

பரிணாம விசை ஒன்று தான்
பஞ்ச பூதங்களையெல்லாம்
பூச்சாண்டி  காட்டி
மிரட்டிக்கொண்டிருப்பது.
மனித வளர்ச்சி
அறிவுகளின் "புணர்வுகளில்"மட்டுமே
நிலைத்து நிற்பது.

உணர்ச்சித்தீக்களின் புணர்வுகளில்
மிஞ்சும் சாம்பல்களிலிருந்து
ஃபீனிக்ஸ்களும் சிறகு முளைத்து
வெளி வரலாம்.
ஆயினும்
உலக மானிடம்
எனும் மௌன உந்து விசையே
பரிணாமத்தின் மைல் கற்களை நட்டு
முன் முன் செல்கிறது.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்."

______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

Monday, February 20, 2017

கீழடி ஆய்வும் அதன் காலக் கணிப்பு முறையும்

-- நூ.த.லோக சுந்தரம்

கீழடி அகழாய்வில் கண்ட பொருட்களைக்கொண்டு அங்கு வாழ்ந்தோரின் நாகரீக காலம் கணிக்க வேண்டும் என்றபோது அங்குக் கிட்டிய பொருள்களில் காணும்  கரிம பொருட்களை க் கொண்டு கணிக்க "ரேடியோ கார்பன்" (கதிரியக்கக் கரிமம் 14) எனும் வழி முறை உள்ளதை அறிவோம்.   அதன்  விளக்கத்தை விக்கிப்பீடியாவில்  காணலாம் (en.wikipedia.org/wiki/Radiocarbon_dating). 

கரி அணுக்களில் கரிமம் 14 என்பது கதிர் இயக்கம் வெளிவிடும்  இயல்பினது. ஓர்  வளரும் பொருள் (அதாவது, கரிமப்பொருள்) இவ்வகை கரியம்  14  (கோடியில் ஓரிரு) அணுக்களையும் சேர்ந்து  வளர்ந்துவிடும் எனும் உண்மையைக்கொண்டும்,  இப்போது  அந்த கருமப்  பொருளில் கரிமம் 14 எனும் அணு வகையைச் சார்ந்த அணுக்களிருந்து வெளிவரும்  கதிரியக்கம்  நொந்து போகும் அளவினை அளந்து அதன் இப்போதைய காலம் தெரிய வரும். அதனால் அகழாய்வினில் கண்ட பொருளின் காலம் கணிக்கப்படும்.

சுடுமண் சார்ந்த பானை  ஓடு போன்ற கரிமம் அல்லாத  பொருட்களுக்கு "சுட்டு ஒளிர் நோக்கல்" (தெர்மோலுமினேசசென்ஸ் / Thermoluminescence) எனும் முறை உள்ளது. இதனைப்பற்றிய விவரங்களுடன் அவ்வகை சிறப்புமுறை ஆய்வு மேற்கொள்ளக்கூடிய ஓர் வாணிபவகை நிறுவனமாகும். காணலாம் (www.oxfordauthentication.com/about-us/the-laboratory-and-the-tl-testing-process/).
இதனில் சுடுமண் சார்ந்த பொருள்களின் ஊடே காணும் கதிரியக்க அளவினைக்கொண்டே அப்பொருளின் காலம் கணிக்கப்படுமாம்.

முன்பு முதுசொம் ( தமிழ் மரபு அறக்கட்டளை / Tamil Heritage Foundation ) வலைத்தளங்களில் மறைந்துள்ள நொய்யலாற்றுப்படுகை ஓடுகள் போரூர் மடாலயத்திலிருந்து பெற்றவை  பற்றிய  ஆய்வு  நோக்கும் முயல்வினில் தேடியபோது இந்தியாவில் நாகாலாந்து பல்கலைக்கழகத்தில் இதற்கான 'தெர்மோலுமினேசசென்ஸ்' ஆய்வுக்கூடம் இருப்பதை நான் கண்டு குறித்தது   நினைவில் வருகின்றது

மற்றொன்றும் உள்ளது இதற்கு 'ஆக்டிவேஷன்  அனாலிசிஸ்' (Avation analysis) இதுவும் கதிரியக்க காலக்  கணிப்பு  வகையைச் சார்ந்ததே. இதனைக்கொண்டு ஒரு பொருளில் காணும் வெவ்வேறு வகை மூலகங்கள் (அணுக்கள் ) எத்தனை சத்தம் உள்ளது என்பதைக் கணிக்க முடியும்.  இதனைக் கொண்டு கண்ட பொருட்களில்  இவை இவை  பொருள்  ஒரே இடம் சார்ந்தது / அல்லாதது என வேறுபாடு கணிக்க முடியும்.

இந்த 'ஆக்டிவேஷன்  அனாலிசிஸ்' கொண்டுதான் நெப்போலியன் போனபார்ட் எனும் பிரஞ்சு நாடாண்டவன் எப்படி ஆர்சினிக்கு எனும் விஷப்பொருளை சிறிது சிறிதாக உணவில் கலந்து பிரிட்டிஷாரால்  கொல்லப் பட்டார்  எனும் உண்மை  அவரின் பாதுகாக்கப்பட்ட மயிர்க்கற்றையில்  கண்ட ஆர்ஸினுக்கு எனும் மாழை ஒத்த அணுவின் அளவினால் கண்டுபிடித்தனர்.

கீழ்க் காணும் இந்தச் செய்தியில் முன்பே காலம் காட்டும் பண்புகளுடன்  கண்ட பானைஓடுகளில் காணும் இரும்பு அணுக்களின் தன்மையினைக்கொண்டு இப்புவியில் புவியீர்ப்பு ஆற்றல் எப்படியெல்லாம் மாறி வந்துள்ளது என்பதை காண்கின்றனராம்.
________________________________

ANCIENT POTTERY RECORDED GEOMAGNETIC FIELD FLUCTUATIONS
Monday, February 13
TEL AVIV, ISRAEL—Live Science reports that Erez Ben-Yosef of Tel Aviv University and his colleagues measured fluctuations in the strength of the Earth’s magnetic field using a collection of pottery jugs dating to between the eighth and second centuries B.C. The jugs were marked some 2,500 years ago with administrative stamps by the bureaucracy of the kingdom of Judah, and then fired. The heat locked information regarding the Earth’s geomagnetic field into the iron-containing minerals in the clay, while the stamps provide precise dates. The study suggests that in the Levant, the strength of the magnetic field “fluctuates quite rapidly,” but because the precise locations of where the pottery was fired are not known, the scientists can't determine the direction of the geomagnetic field based on it. The research could help lead to a system of dating heated materials based upon their magnetic properties. For more on archaeology of the kingdom of Judah, go to “Cults of the Bronze Age.”
www.archaeology.org/news?page=2
படங்கள்: இணையத்திலிருந்து
________________________________________________________ 


நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  

காமராசரும் கல்வியும்

- இராம.கி.


காமராசரையும், கல்வியையும் பற்றிய பேச்சு இங்கு எழுந்தவுடன், 46 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழைய சிறு நிகழ்வு என் நினைவிற்கு வந்தது.

கோவை நுட்பியற்கல்லூரியில் நான் வேதிப்பொறியியல் படித்த காலத்தில் நெருங்கிய நண்பரில் ஒருவன் அரங்கராசன் நற்சிந்தனையாளன். குமுகவுணர்வும் செயற்துடிப்பும் மிக்கவன். திருச்சிராப்பள்ளித் தென்னூர் அக்கரகத்தைச் சேர்ந்த அரங்கராசன் குடும்பத்தார் திருவிண்ணவ நெறியாளர். நண்பனுக்கு 3 அக்காக்கள். இவன் ஒரே பையன். அம்மா தவறிப்போன காரணத்தால், இரண்டாவது அக்கா தன் கணவரோடு வந்துதங்கி அரங்கராசனின் அப்பா கிருஷ்ணனைப் பார்த்துக்கொண்டார். அரங்கராசன் நண்பர் யாராயினும் அவர்களின் நடுவீட்டு ஊஞ்சல்வரை ஊடி வரமுடியும். அக்கார வடிசல் முதற்கொண்டு எல்லா அமுதுகளும் எங்களுக்குத் தருவார். எங்கள் நண்பர்கள் யாருக்குள்ளும் ஒருவேற்றுமையும் காணாத உன்னதமான குடும்பம்.

அரங்கராசனின் மூத்த அக்கா இலட்சுமி ஒரு காந்தியவாதி. திருச்சிராப்பள்ளி தென்னக இருள்வாய் (Southern Railways) மருத்துவமனையில் செவிலியாய் வேலைபார்த்தார் பொன்மலையில் அவரின் துணைவர் ஒரு பேராயத் தொழிற்சங்கவாதி. திருவிண்ணவரில்லை. இருவருக்கும் எப்படி உறவேற்பட்டது என்று எனக்குத்தெரியாது. துணைவரின் மூத்த மனைவி வேறோரிடத்திலிருந்தார். மூத்தாரின் பிள்ளைகள் அக்காவீட்டிற்கும் வந்துபோய்க் கொண்டிருப்பர். அக்காவிற்குப் பிள்ளைகளில்லை. தென்னூரிலில்லாது அக்கா அத்தானோடு பொன்மலையில் தங்கியிருந்தார். இவ்வுறவை அரங்கராசனின் அப்பா ஏற்றுக்கொண்டதில்லை. குடும்பத்தில் மற்றவர் ஏற்றும் ஏற்காமலும் இருந்தார். அக்காவும் அத்தானும் தென்னூர் வீட்டினுள் வராவிட்டாலும், வாசல்வரை வந்திருக்கிறார்கள்.

எங்கள்மேல் கொண்ட ஆழ்ந்த அன்பால் அரங்கராசன் அக்கா எங்களெல்லோர்க்கும் அக்காவானார். அப்பொழுதெல்லாம் மதுரைவழிப் பேருந்துகள் குறைந்திருந்ததால் காரைக்குடியிலிருந்து கோவைபோகத் திருச்சிவழி இருள்வாயிற் பயணிப்பேன். திருச்சி வரும்போதெல்லாம் அரங்கராசன் அகத்திற்கும், அக்காவைப் பார்க்கப் பொன்மலைக்கும் போவேன். அகவைமுதிர்ந்த காரணத்தால் அம்மா போலவே அக்கா பரிவுகாட்டுவார். அக்காவோடு அரங்கராசனும் நானும் காரசாரமாய் அரசியல் வாதங்கள் செய்ததுண்டு. 70 களின் காலத்தில். உலகமெங்கும் இடதுசாரிச் சிந்தனை பரவியிருந்தது.. தமிழிளையோர் பலரும் அன்று இடதுசாரி, தி,மு.க.வின் வழி சிந்தனைவயப்பட்டதால், பேராயக்கட்சியை ஏற்காதிருந்தார். எங்களின் பெருமுயற்சியால் பேராயக்கட்சியைத் தோற்கடித்திருந்தோம் அல்லவா? எனவே ஒருவித இறுமாப்பும் கூட எங்களுக்கு வந்தது. (67 இல் விருதுநகரிற் தோற்றிருந்த) காமராசரை வம்பிற்கிழுத்தே பலநேரம் அக்காவுடன் பேசிவிளையாடுவோம். ஆனாலும் அக்கா எங்களைக் கோவிக்கமாட்டார். எம்மேற்கொண்ட அன்பு சற்றுங் குறையாது. “போங்கடா, போக்கத்த பயல்களா? உங்களுக்கு என்னடா அரசியல் தெரியும்?” என்று சொல்லிவிடுவார்.

இலட்சுமியக்காவிற்கு பெருந்தலைவர் காமராசர்மேல் இன்னதென்று சொல்லமுடியாத ஈடுபாடு; ஒரு பக்தி. சொந்தக்காரர், தெரிந்தவரெனப் பலருக்கும் இது பெரும்வியப்பைக் கொடுத்தது. .அரங்கராசன் அப்பாவோ, மூதறிஞர் இராசிமேல் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர். சுதந்திராக்கட்சி தலைதூக்கிய காலம். எப்படியிருந்தாலும் காமராசரின் பிறந்தநாளுக்கு அக்கா சென்னைக்கு வந்துவிடுவார். எப்படியும் அவரை அன்று கண்டு வாழ்த்துச்சொல்லாது ஓய மாட்டார். 1970-72 இல் சென்னையிலுள்ள இந்திய நுட்பியற்கழகத்தில் நான் முது நுட்பியல் (வேதிப்பொறியியல்) படித்தேன். அரங்கராசன் வெங்காலூர் இந்திய அறிவியற்கழகத்தில் முது பொறியியல் (வேதிப்பொறியியல்) படித்தான். நாங்கள் இருவருமே இடதுசாரிச் சிந்தனையில் தீவிரமாய்ச் சென்றுகொண்டிருந்தோம். அக்காவிற்கும் அது தெரியும்.

1971 இல் நாட்டில் மாற்றங்கள் நடைபெற்ற காலம். 1969 இல் பிரிந்துபோன இந்திராகாந்தி தனக்கென ஒரு பேராயக்கட்சியை உருவாக்கிப் 1971 மார்ச்சுத் தேர்தலில் பெருவெற்றி ஈட்டியிருந்தார். சிண்டிகேட் இண்டிகேட் என்று பேராயக்கட்சி இரண்டாய் உடைபட்டது. தமிழகத்திலோ கலைஞர் தலைமையில் தி.மு.க. பென்னம்பெரிய வெற்றிபெற்றது. நாகர்கோயிலில் பாராளுமன்ற உறுப்பினராய் காமராசர் தேர்ந்தெடுக்கப்பெற்ற போதும் அவர் சார்ந்த நிறுவனப் பேராயம் (Organization Congress) மிகுந்த தோல்விகண்டு சோர்ந்துகிடந்தது. சட்டப்பேரவையிலும் பேராயக்கட்சியினர் வெறும் 15 பேராய்க் குறுகிப்போனார். பெருந்தலைவர் நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்வது குறைந்துபோயிருந்தது. 1971 தேர்தலுக்கப்புறம் நன்றிதெரிவிக்கும் கூட்டம் சைதாப்பேட்டையில் நடந்த போது அவருடைய நொகையான பேச்சைக்கேட்டு அதிர்ந்துபோனேன். இப்படி இவர் மக்களைத்திட்டினால் எப்படி இனி இவருக்கு வாக்களிப்பர்? பென்னம் பெரிய கட்சிக்குப் ஒரு பொதிவானதிட்டம் வேண்டாமா? வெறுமே சு.ம. பயல்கள் என்று எதிரியைக் குற்றஞ்சாட்டினாற் போதுமா? இப்படியெல்லாம் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அவர்மேல் எனக்குக் கிடுக்கங்கள் (criticisms) நிறைய இருந்தன. நாளைக்கே புரட்சி வந்துவிடப்போகிறது என்பதுபோல் எண்ணிக்கொண்ட இளம்பிள்ளைவாதம் எம்முள் குடிகொண்டிருந்தது.

1971 ஆம் ஆண்டு சூலைமாதம் 15 ஆம் நாள். ஏற்கனவே வெங்காலூரிலிருந்து அரங்கராசன் வந்திருந்தான். திடீரென்று அன்றுகாலை திருச்சியிலிருந்து 11/12 மணிக்கு இலட்சுமியக்கா சென்னை  இ.நு.க. கிருட்டிணா விடுதிக்கு வந்துசேர, “என்னவிது? என்னைத்தேடி வந்திருக்கிறார்” என்று வியந்துபோனேன். அக்காவை விருந்தோம்பியபின் பேசிக்கொண்டிருந்தோம். “புறப்படுங்கடா, தலைவரைப் பார்க்க; இன்னைக்கு அவர் பிறந்தநாள். மாலையில் அவர் வெளிநிகழ்ச்சிகளுக்குப் புறப்படுமுன் பார்க்கலாம்” என்றார். “வேண்டாங்க்கா, ஏதாவது இடக்குமடக்காக நாங்கள் அவரிடம் பேசிவிட்டால் உங்களுக்கும் கஷ்டம், நீங்கள் பாட்டிற்கு உங்கள்தலைவரைப் பார்க்கச்செல்லுங்கள். நாங்கள் இங்கே கதைத்துக்கொண்டிருக்கிறோம். இன்றுமாலை சில தோழர்கள் வருவதாகச் சொன்னார்கள்.” என்றுசொன்னோம். அக்கா ஒப்பவில்லை. ”உங்களுக்கு என்னடா அரசியல்பற்றித் தெரியும்? வெறும் தியரி பேசுவீர்கள். புரட்சி வந்துருச்சா? உள்ளேர்ந்து ஊறி என்ன பேச்சு வருமென்று உங்களுக்கு அனுபவமுண்டா?” என்றுகேட்டார். “இவ்வளவு தூரம் சொல்கிறாரே! பெரியவர் நம்பூதிரிப்பாட்டையே மறுத்துக்கிடந்த நாம் இவருக்குப்பிடித்த தலைவரையும் தான் பார்த்து விடுவோமே?” என்று எங்களுக்குள்  மருக்கமும் கிடுக்கமும் இருந்தாலும் புறப்பட்டோம்..

இன்று காமராசர் நினைவில்லமாய் இருக்கிறதே அத் திருமலைப்பிள்ளைத் தெரு வீட்டிற்கு மாலை 3.30 மணி அளவிற் போய்ச்சேர்ந்தோம். வீட்டுக்கு வெளியில் யாரும் அவ்வளவாயில்லை. ஓரிருவர் வந்துபோய்க் கொண்டிருந்தார். பிற்பகல் பெருந்தலைவர் மாடியில் ஓய்வெடுக்கும் நேரம். 4 மணிக்குத் தான் கீழே வருவார் என்று தெரியும். தலைவரைப் பார்க்கவந்திருப்பதை அக்கா  உதவியாளரிடம் சொன்னார். கீழே காத்திருந்தோம். 15 நுணுத்தங்களில் அவர் எழுந்து தன்னைச் செவ்விக்கு அணிமைசெய்தது தெரியவந்தது. அக்கா மேலேபோய் வாழ்த்துச்சொல்லி ஆசிபெற்று எங்களையும் கூட்டி வந்திருப்பதைச் சொல்லியிருப்பார் போலும். 10 நுணுத்தங்கள் அவர்கள் கட்சிநிலை பற்றிப் பேசிக்கொண்ட பின்னால் ஓர் உதவியாளர் வழி எங்களிருவரையும் மேலேயழைத்தார்.

அப்பொழுதுதான், அவ்வளவு நெருக்கத்தில் நான் பெருந்தலைவரைப் பார்த்தேன். “வாங்க, தம்பி” என்றழைத்தார். தயங்கித்தயங்கி நாங்கள் உள்ளே சென்றோம். பிறந்தநாள் வாழ்த்துக்களையும், வணக்கங்களையுஞ் சொன்னோம்.

“அப்புறம் லெட்சுமி, இவரு யாரு?, இவரு யாரு?”

“ஐயா, இவன் என் தம்பி, ரங்கராஜன், இவன் அவன் நண்பன் கிருஷ்ணன். உங்களைப் பார்க்கணும்னு கூட்டிக்கிட்டு வந்தேன். இவங்கள்லாம் உங்களை நம்ப மறுத்து. என்னோடெ வழக்காடிக்கிட்டே யிருப்பாய்ங்க. ஆனாலும் இவய்ங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தோணும்னு கூட்டிட்டு வந்தேன்.”

“அப்படியா, நல்லது! தம்பி என்ன பண்ணுறீங்க”

“ஐயா, இங்கே சென்னை ஐ,ஐ,டி,யில் எம்டெக் (கெமிகல் இஞ்சினியரிங்) படிங்கிறேங்கய்யா. இவன் பெங்களூர் ஐ.ஐ.எஸ்ஸியில் எம் இ.(கெமிகல் இஞ்சினியரிங்) படிக்கிறான்.”

அரங்கராசனைப் பார்த்துச் சில கேள்விகள் கேட்டார். அவர்கள் அப்பாவைப் பற்றியும் விசாரித்தார். திரும்ப என்னைப் பார்த்து,

”தம்பி, உங்களுக்கு எந்தவூரு”

“காரைக்குடிக்குப் பக்கமய்யா”

“அப்படியா நம்மூரு. ராமநாதபுரம் மாவட்டம். ஊருலே மழை கிழை பெய்யுதா? போற வர்ரப்பல்லாம் பாக்குறேனே? ஒரு பொட்டுத் தண்ணியில்ல. இன்னும் மாடுவிரட்டி மேய்ச்சுக்கிட்டு நம்ம பயக இருக்காய்ங்களா? நல்லாப் படிக்கணும் தம்பி ”படிங்கடா, படிங்கடா”ன்னு சொல்லிச்சொல்லி நாதான் வறண்டுபோகுது. எங்கே கேக்குறாய்ங்க?”.

“இன்னம் மழை வரல்லைய்யா! படிப்பு முக்கியந்தான்யா. நிச்சயம் படிப்பொம்யா!

எங்களுடைய பழைய பள்ளி, கல்லூரிக் கல்வி விவரங்களை ஓரளவு கேட்டறிந்தார். ”எல்லாத்தையும் பேசுங்க, அலசுங்க. ஆனாப் படிங்க” என்றபடி மீண்டும் சில அறிவுரைகள். அடுத்த நிகழ்ச்சிக்குப் போக  நேரமாகிவிட்டதை உதவியாளர் ஞாவகப்படுத்தினார். நாங்கள் கீழேயிறங்கிவந்த பிறகும், அக்காவும் தலைவரும் 10 நுணுத்தங்கள் கட்சிவிவரங்களைப் பேசியபின் மாடியிலிருந்து  கீழே வந்தனர். அங்கிருந்து அவருடைய பழைய அம்பாசிடர் வண்டியில் ஏறிச்செல்லும்வரை பார்த்துக்கொண்டிருந்தோம். கீழே 7,8 பேர் அவரைச் சந்திக்கக் காத்துக்கொண்டிருந்தார். ஒருசில முகமன்களைக் கூறிவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுவிட்டார்.


தான் முற்றுமுழுதாக முடிந்துபோன காலத்திலும் அவர்சிந்தனை இளைஞர் படிக்கவேண்டுமென்பதிற்றான் இருந்தது. கல்விக்காக அவரெடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றும் இந்நிகழ்வின் ஊடாக அடியுணர்வில் எழும்பிவந்தது புரிந்தது.  ஒரு பெருந்தலைவனை அப்படித்தான் இன்றும் நினைவு கூருகிறோம்.”நல்லாப் படிக்கணும் தம்பி” இன்றும் அந்த வாசகம் என் காதுகளில் ஒலிக்கிறது. அவர் வாழ்க்கையின் சாரம் அதுதான். கல்வி என்று வந்தால் காமராசர் தான் என்கண்ணில் நிலைத்துநிற்பார். அக் கருப்புத்தமிழன் இல்லாது தமிழ்நாட்டிற் கல்வியேது? 

பி.கு: தோல்வியில் நைந்துபோன, மனம்வெறிச்சொடிய, காமராசரின் வாழ்க்கை அதற்கப்புறம் 4 ஆண்டுகளில் முடிந்தது.

படங்கள்: இணையத்திலிருந்து

__________________________________________________________________

 
இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com

__________________________________________________________________

Friday, February 3, 2017

ஏறு, எருது, காளை

-- நூ.த.லோக சுந்தரம்


ஏறு, எருது, காளை என்னும் சொற்கள் தமிழில் உள்ளன.
சே; பெற்றம்;  பாண்டில்  எனவும் குறிக்கப்படுகின்றன.
விடை; இடபம்; நந்தி எனவும் திசைச் சொற்கள் உண்டு.
அதான்று, 
பாறல்; புல்லம்; மூரி; பூணி; இறால்  எனவும் திவாகர் நிகண்டு காட்டுகின்றது.
OX; BULL  என ஆங்கிலத்தில் இரு சொற்கள் உள்ளன.
OX (plural OXEN ) என்றால் ஏர் உழ வண்டியிழுக்க பயன்படும்.

காயடிக்கப்பட்டது:
ஆண் ஆன் இதனின் ஆணுறுப்பு பயனற்றதாக செய்யப்பட்டது, அதன் வலிமை முழுதும் இனப்பெருக்கத்திற்குப் பயன்படாமல் நிறுத்தி வேலை வாங்கிப் பயன்கொள்ளவே செய்யப்பட்டவை காயடிக்கப்படும்* காளைகள்.

கொம்பு பொசுக்கியது: 
இதனின் கொம்புகள் கன்று நிலையிலேயே தீயிட்டு பொசுக்கி அவை வளராமல் தடுத்து நிறுத்தி கொம்பு வளர உள்ள திறனை வேலை வாங்கி பயன்கொள்ளச் செய்வது.

நந்தி:
Inline image 3
Inline image 2  Inline image 6 

                                          தஞ்சை


கோயில்களில் காட்டப்படும் நந்திக்குக் கொம்புகள் இல்லாதமையை காண்க.  இந்நாளில் பெரும்பாலும் இப்படி என்றாலும் கொம்புகள் குறைந்தவையும், முழுதும் உள்ளவையும் காணலாம். எனினும், எல்லாமும் திமில் உடையவையே.
நந்தி = ஆண்
நந்தினி = பெண்


*காயடித்தல் எனும் முறைக்கு ஈடாக  மனித இனத்திலும் நடைபெறுவதும் உண்டு. பீத்தோவன் எனும் மேற்கத்திய இசைக்கலைஞர் தனது  குரல் வளம்  மாறாமல் இருக்க அப்படிச் செய்துகொண்டதாக செய்திகள் உண்டு பிற்காலத்தில் அவர் செவிடாக வாழ்ந்தார் என்பர்.________________________________________________________ 

நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  

Thursday, February 2, 2017

பாணாவாளி அகழாய்வு சிந்து முத்திரையில் ஏறு தழுவல் விளையாட்டு

--- சேசாத்திரி சிறீதரன் 


ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது. 
பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு 

Impression of a Banawali seal  from c.2300 – 1700 BCE, showing an acrobat leaping over a bull. Source: UMESAO 2000:88, No. 335
வேல் - மா, I  -ன, மாடு - ன்.  இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.
மூன்று கிளை மரம் - ந, நாற்கோடு - ன்,  hypen போன்ற கோடு - அ, மீண்டும் நாற்கோடு - ன், இரு கோட்டு மீன் - சா, இருபுறமும் மும்மூன்று கோடு U - கே,  U நடுவில் கோடு - ன, கோட்டின் இருபுறமும் மும்மூன்று கோடுகள் - த்த, வைரவடிவம் - ன். இதில் உள்ள எழுத்துக்கள்        நன்அன் கேனத்தன் என்பன. நன்னன் கேனத்தன் செப்பமான பெயர்.             எருமை உரு பொறித்த இந்த முத்திரையில் முதல் இரு சிறுகோடு - அ, இரு பெரிய கோடுகள் - ண, இருகோடுகளின் கீழ் கவிழ்த்த A - ங்க, வட்டத்துள் வைரம் - ன். இதில் உள்ள எழுத்துகள் அணங்கன்  என்பன.  
___________________________________________________________
 

சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
___________________________________________________________
 

21.1.2017 - கோலாலம்பூரில் நடைபெற்ற த.ம.அ கருத்தரங்கம்

மலேசியாவில் தமிழர்களின் வாழ்வு என்பது பன்னெடுங்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. நீண்ட தொடர்பு தமிழக மக்களுக்கும் மலேசிய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களுக்கும் இருந்துள்ளமையை வரலாற்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அந்த வகையில் மலேசிய தமிழர்களின் வரலாற்றுச் செய்திகளையும் அவை தொடர்பான ஆவணங்களையும் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்ற முனைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தன. இந்த முயற்சிகளை அதிகாரப்பூர்வமாக்கி செவ்வன செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில் 2015ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளை பதிவு செய்யப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்றது.2017ம் ஆண்டின் முதல் நிகழ்வாக "பண்பாட்டு மீட்சிக்கான தேடல் - பன்னாட்டுப் பார்வையில்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். தமிழர் பண்பாட்டில் இறையியல் கூறுகளை மையப்படுத்தி இந்த ஒரு நாள் கருத்தரங்கு திட்டமிடப்பட்டிருந்தது. இளம் தலைமுறையினர் அதிகமாகக் கலந்து கொள்ளும் வகையில் பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்திகள் பரிமாறப்பட்டதால் அதிகமான இளைஞர்கள் இந்தக் கருத்தரங்கில் வந்து கலந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது.

இக்கருத்தரங்கில் நான்கு வெவ்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவாளர்களது உரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.


முதல் சொற்பொழிவு தமிழ் பௌத்தம் பற்றியது. தமிழகத்திலிருந்து வருகை செய்திருந்த எழுத்தாளர்.திரு.கௌதம சன்னா அவர்கள் இந்தச் சொற்பொழிவை வழங்கினார். தமது உரையில் புத்தரின் வரலாறு தொடர்பான செய்திகளிலிருந்து தொடங்கி, அவர் அரண்மனையிலிருந்து வெளியேறியமைக்கான, வழக்கில் இருக்கும் கதைக்கு முற்றிலும் மாறுபாடான ஒரு கருத்தினை முன் வைத்து புதிய தகவல்களை வழங்கினார். புத்தரின் கொள்கைகள், அவரது துறவு அது தொடர்பான தேடல்கள், புத்தமத பிரிவுகள், தமிழில் உள்ள புத்த இலக்கியங்கள், பாலி மொழி தொடர்பான தகவல்கள் மட்டுமன்றி இன்று தமிழர் வாழ்வியலில் வழக்கில் இருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகளில் கலந்திருக்கும் பௌத்தத்தின் தாக்கம் பற்றியும் அவரது சொற்பொழிவு அமைந்திருந்தது. முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருந்த இச்சொற்பொழிவு, வந்திருந்த பார்வையாளர் மத்தியில் குறிப்பிடத்தக்க கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மண்ணில் மட்டுமன்றி மலேசிய சூழலிலும் பௌத்தத்தின் தாக்கம் பற்றி விரிவான ஆய்வுகள் நிச்சயம் தேவை என்பதை உறுதி செய்வதாக அமைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து எனது சொற்பொழிவு இடம்பெற்றது. தமிழர் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் குல தெய்வ வழிபாடு பற்றியும் நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றியும் இந்த உரையில் தகவல்கள் வழங்கினேன். தமிழகத்துக்கான எனது களப்பணிகளுக்கான பயணங்களில் நான் சேகரித்த நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய விபரங்களை வழங்கினேன். இதில் சாமிகள் பற்றிய பின்னணியில் இருக்கும் கதைகள், செவி வழிச்செய்திகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் என்பன பற்றிய செய்திகளையும் வழங்கினேன். தமிழகத்திலிருந்து அன்றைய மலாயாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாடுகளை தாங்கள் புலம்பெயர்ந்த மலாயாவிலும் ஏற்படுத்தி, இன்று அக்கோயில்கள் பெரிய அளவில் மக்களால் வழிபடப்படும் நிலை இருப்பதையும் எனது சொற்பொழிவில் பகிர்ந்து கொண்டேன்.மதிய அமர்வில் முதல் பேச்சாளராக பேரா.நா.கண்ணன் தனது கட்டுரையை வழங்கினார். பன்முகத்தன்மையில் எவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கி தமிழர் வாழ்வில் வழிபாட்டுக் கூறுகள் அமைந்தன என்பதை சுட்டிக் காட்டுவதாக அவரது சொற்பொழிவு அமைந்தது. பக்தி நிலை பற்றி விரிவாகத் தனது சொற்பொழிவில் விளக்கம் அளித்தார். அத்தோடு வைஷ்ணவ பாரம்பரியத்தில் பக்தி நிலை பற்றி குறிப்பிட்டு ஸ்ரீ ராமானுசரின் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களையும் முன் வைத்து தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.இந்தக் கருத்தரங்கில் இறுதி சொற்பொழிவாக அமைந்தது திரு.ஒரிசா பாலு அவர்களின் வள்ளலார் பற்றிய ஆய்வுரை. வள்ளலாரின் சன்மார்க்க கருத்துக்களை எளியத் தமிழில் வந்திருந்தோர் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக தனது உரையில் விளக்கமளித்தார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலாரைப் போலவே தற்சமயம் தமது பயிர்கள் காய்ந்து கருகி மடிவதைக் கண்டு மனம் தாளாது மடிந்த தமிழக விவசாயிகளைத் தனது உரையில் நினைவு கூர்ந்தார். வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை விட ஆறாம் திருமுறையை வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற தன் கருத்தை முன் வைத்ததோடு வள்ளலாரை இறைவனாகப் பார்க்காமல் நல்ல சக மனிதராக, வழிகாட்டியாகப் பார்த்தால் அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்ளலாம் என்ற அருமையான கருத்தையும் முன் வைத்தார்.இந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய வழக்கறிஞர் சரஸ்வதி அவர்கள் சொற்பொழிவாளர்களின் கருத்துக்கள் மலேசிய சூழலில் எவ்வகையான தேவைகளை முன்னிருத்துகின்றது என மிக அழகாகவும் சுருக்கமாகவும் வழங்கியது வந்திருந்த பேராளர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியை சரியாகப் புரிந்து கொள்வதற்கு மிக உதவியது.இறுதியாக நிகழ்வில் நன்றியுரைக் கூறி பேசிய தமிழ் மலர் நாளிதளின் நிர்வாக இயக்குனர் திரு.பெரியசாமி அவர்கள் கருத்தரங்க சொற்பொழிவுகள் ஒவ்வொன்றையும் விவரித்து விளக்கமளித்ததோடு இவ்வகைக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற தன் கருத்தையும் வலியுறுத்தினார்.இந்த நிகழ்ச்சிக்கான ஆதரவினை மலாயா பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் துறையும், தமிழ் மலர் நாளிதழும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் திரு ஓம்ஸ் பா தியாகராஜனும் வழங்கியிருந்தனர். திரு. ஓம்ஸ் பா தியாகராஜன் அவர்களது பொதுச்சேவையையும் தமிழ் மேல் அவர் கொண்டிருக்கும் பற்றினையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பால் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு இந்தக் கருத்தரங்கில் அவரைத் தமிழ் மரபு அறக்கட்டளை சிறப்புச் செய்து எமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டவர்கள் இவ்வகை நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெற வேண்டும் எனக் கூறிச் சென்றது ஆர்வம் அளிப்பதாக அமைந்தது. மலேசிய தமிழ்ச்சூழலில் தரமான நூல் வாசிப்பு என்பது மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழர் வரலாறு பற்றிய அதீதப் போக்கினைப்பற்றிப்பேசி மன நிறைவு கொள்ளும் மனப்பாங்கும் சற்று அதிகமாகவே இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தரமான நூல் வாசிப்பு , மற்றும் தரமான ஆய்வுக் கருத்தரங்கங்கள் ஆகியன தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கருத்தை தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

​சுபா​