Thursday, February 2, 2017

21.1.2017 - கோலாலம்பூரில் நடைபெற்ற த.ம.அ கருத்தரங்கம்

மலேசியாவில் தமிழர்களின் வாழ்வு என்பது பன்னெடுங்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. நீண்ட தொடர்பு தமிழக மக்களுக்கும் மலேசிய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களுக்கும் இருந்துள்ளமையை வரலாற்று ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அந்த வகையில் மலேசிய தமிழர்களின் வரலாற்றுச் செய்திகளையும் அவை தொடர்பான ஆவணங்களையும் பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்ற முனைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தன. இந்த முயற்சிகளை அதிகாரப்பூர்வமாக்கி செவ்வன செய்திட வேண்டும் என்ற நோக்கத்தில் 2015ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளை பதிவு செய்யப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்றது.2017ம் ஆண்டின் முதல் நிகழ்வாக "பண்பாட்டு மீட்சிக்கான தேடல் - பன்னாட்டுப் பார்வையில்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். தமிழர் பண்பாட்டில் இறையியல் கூறுகளை மையப்படுத்தி இந்த ஒரு நாள் கருத்தரங்கு திட்டமிடப்பட்டிருந்தது. இளம் தலைமுறையினர் அதிகமாகக் கலந்து கொள்ளும் வகையில் பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்திகள் பரிமாறப்பட்டதால் அதிகமான இளைஞர்கள் இந்தக் கருத்தரங்கில் வந்து கலந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது.

இக்கருத்தரங்கில் நான்கு வெவ்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவாளர்களது உரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.


முதல் சொற்பொழிவு தமிழ் பௌத்தம் பற்றியது. தமிழகத்திலிருந்து வருகை செய்திருந்த எழுத்தாளர்.திரு.கௌதம சன்னா அவர்கள் இந்தச் சொற்பொழிவை வழங்கினார். தமது உரையில் புத்தரின் வரலாறு தொடர்பான செய்திகளிலிருந்து தொடங்கி, அவர் அரண்மனையிலிருந்து வெளியேறியமைக்கான, வழக்கில் இருக்கும் கதைக்கு முற்றிலும் மாறுபாடான ஒரு கருத்தினை முன் வைத்து புதிய தகவல்களை வழங்கினார். புத்தரின் கொள்கைகள், அவரது துறவு அது தொடர்பான தேடல்கள், புத்தமத பிரிவுகள், தமிழில் உள்ள புத்த இலக்கியங்கள், பாலி மொழி தொடர்பான தகவல்கள் மட்டுமன்றி இன்று தமிழர் வாழ்வியலில் வழக்கில் இருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகளில் கலந்திருக்கும் பௌத்தத்தின் தாக்கம் பற்றியும் அவரது சொற்பொழிவு அமைந்திருந்தது. முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருந்த இச்சொற்பொழிவு, வந்திருந்த பார்வையாளர் மத்தியில் குறிப்பிடத்தக்க கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மண்ணில் மட்டுமன்றி மலேசிய சூழலிலும் பௌத்தத்தின் தாக்கம் பற்றி விரிவான ஆய்வுகள் நிச்சயம் தேவை என்பதை உறுதி செய்வதாக அமைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து எனது சொற்பொழிவு இடம்பெற்றது. தமிழர் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் குல தெய்வ வழிபாடு பற்றியும் நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றியும் இந்த உரையில் தகவல்கள் வழங்கினேன். தமிழகத்துக்கான எனது களப்பணிகளுக்கான பயணங்களில் நான் சேகரித்த நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய விபரங்களை வழங்கினேன். இதில் சாமிகள் பற்றிய பின்னணியில் இருக்கும் கதைகள், செவி வழிச்செய்திகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் என்பன பற்றிய செய்திகளையும் வழங்கினேன். தமிழகத்திலிருந்து அன்றைய மலாயாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாடுகளை தாங்கள் புலம்பெயர்ந்த மலாயாவிலும் ஏற்படுத்தி, இன்று அக்கோயில்கள் பெரிய அளவில் மக்களால் வழிபடப்படும் நிலை இருப்பதையும் எனது சொற்பொழிவில் பகிர்ந்து கொண்டேன்.மதிய அமர்வில் முதல் பேச்சாளராக பேரா.நா.கண்ணன் தனது கட்டுரையை வழங்கினார். பன்முகத்தன்மையில் எவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கி தமிழர் வாழ்வில் வழிபாட்டுக் கூறுகள் அமைந்தன என்பதை சுட்டிக் காட்டுவதாக அவரது சொற்பொழிவு அமைந்தது. பக்தி நிலை பற்றி விரிவாகத் தனது சொற்பொழிவில் விளக்கம் அளித்தார். அத்தோடு வைஷ்ணவ பாரம்பரியத்தில் பக்தி நிலை பற்றி குறிப்பிட்டு ஸ்ரீ ராமானுசரின் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களையும் முன் வைத்து தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.இந்தக் கருத்தரங்கில் இறுதி சொற்பொழிவாக அமைந்தது திரு.ஒரிசா பாலு அவர்களின் வள்ளலார் பற்றிய ஆய்வுரை. வள்ளலாரின் சன்மார்க்க கருத்துக்களை எளியத் தமிழில் வந்திருந்தோர் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக தனது உரையில் விளக்கமளித்தார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலாரைப் போலவே தற்சமயம் தமது பயிர்கள் காய்ந்து கருகி மடிவதைக் கண்டு மனம் தாளாது மடிந்த தமிழக விவசாயிகளைத் தனது உரையில் நினைவு கூர்ந்தார். வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை விட ஆறாம் திருமுறையை வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற தன் கருத்தை முன் வைத்ததோடு வள்ளலாரை இறைவனாகப் பார்க்காமல் நல்ல சக மனிதராக, வழிகாட்டியாகப் பார்த்தால் அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்ளலாம் என்ற அருமையான கருத்தையும் முன் வைத்தார்.இந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய வழக்கறிஞர் சரஸ்வதி அவர்கள் சொற்பொழிவாளர்களின் கருத்துக்கள் மலேசிய சூழலில் எவ்வகையான தேவைகளை முன்னிருத்துகின்றது என மிக அழகாகவும் சுருக்கமாகவும் வழங்கியது வந்திருந்த பேராளர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியை சரியாகப் புரிந்து கொள்வதற்கு மிக உதவியது.இறுதியாக நிகழ்வில் நன்றியுரைக் கூறி பேசிய தமிழ் மலர் நாளிதளின் நிர்வாக இயக்குனர் திரு.பெரியசாமி அவர்கள் கருத்தரங்க சொற்பொழிவுகள் ஒவ்வொன்றையும் விவரித்து விளக்கமளித்ததோடு இவ்வகைக் கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற தன் கருத்தையும் வலியுறுத்தினார்.இந்த நிகழ்ச்சிக்கான ஆதரவினை மலாயா பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் துறையும், தமிழ் மலர் நாளிதழும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் திரு ஓம்ஸ் பா தியாகராஜனும் வழங்கியிருந்தனர். திரு. ஓம்ஸ் பா தியாகராஜன் அவர்களது பொதுச்சேவையையும் தமிழ் மேல் அவர் கொண்டிருக்கும் பற்றினையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் பால் அவர் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு இந்தக் கருத்தரங்கில் அவரைத் தமிழ் மரபு அறக்கட்டளை சிறப்புச் செய்து எமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.
நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டவர்கள் இவ்வகை நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெற வேண்டும் எனக் கூறிச் சென்றது ஆர்வம் அளிப்பதாக அமைந்தது. மலேசிய தமிழ்ச்சூழலில் தரமான நூல் வாசிப்பு என்பது மிக மிகக் குறைவாகவே இருக்கின்றது. தமிழர் வரலாறு பற்றிய அதீதப் போக்கினைப்பற்றிப்பேசி மன நிறைவு கொள்ளும் மனப்பாங்கும் சற்று அதிகமாகவே இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தரமான நூல் வாசிப்பு , மற்றும் தரமான ஆய்வுக் கருத்தரங்கங்கள் ஆகியன தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கருத்தை தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

​சுபா​

No comments:

Post a Comment