Sunday, April 26, 2015

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 2

கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே


கேள்வி: பெரியாரிய இயக்கங்களும் நடுவே வந்த இயக்கங்களும் முந்தைய இயக்கங்களின் வரலாற்றை மறைத்துவிட்டனவா? நாம் அயோத்திதாசரையும் பிற தலைவர்களைப்பற்றியும் பேசுவதில்லை. பெரியார் மேலேயே கவனம் செலுத்துகிறோம். எங்கே பார்த்தாலும் பெரியார் சிலைகளும், படங்களுமே இருக்கிறதே ஒழிய இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் ஆகியோரது சிலைகளும், படங்களும் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றன

பதில்: ஆம்

கேள்வி: திராவிட இயக்கங்களின் வரவால் பழைய தலித் இயக்கஙக்ளை நாம் மறந்துவிட்டோமா?

பதில்: இதை நாம் திராவிட இயக்கத்தின் நன்மைகள், தீமைகள் என்ற இருவிதங்களாக பிரித்துப்பார்த்து புரிந்துகொள்ளலாம். சற்று விரிவாக பேசவேண்டிய விஷயம் இது. திராவிட இயக்கம் 1917ல் துவங்கியது என ஏன் அனைவரும் கூறுகிறார்கள்? 1912ல் சென்னையின் மேல்சாதி வியாபாரிகளும், நிலக்கிழார்களும் கைகோர்த்து தென்னிந்திய வணிகர் சங்கம் எனும் அமைப்பை துவக்கினார்கள். அது 1916ல் தென்னிந்திய நல உரிமைச்சங்கமாக 1916ல் மாறுகிறது. இது பின்னாளில் நீதிக்கட்சியாக மாறுகிறது. திராவிட இயக்கத்தின் வரலாறு இதுதான். அவர்களின் தொடக்ககாலக்குறிக்கோள் என்னவென கேட்டால் அது தலித் விடுதலையாக இல்லை. அதற்காக அவர்கள் இயக்கத்தில் சேரவும் இல்லை. முதல்முதலாக நீதிக்கட்சி வெளியிட்ட சாசனத்திலும் பிந்தங்கிய மக்களின் அடிப்படைதேவைகள் பூர்த்தி செய்யபடவேண்டும் எனத்தான் உள்ளதே ஒழிய , உரிமைகளைப்பற்றி எதுவும் கூறப்படவில்லை. ஆக அவர்களின் அடிப்படை நோக்கம் என்னவெனப்பார்த்தால் பிராமணர்கள் வெள்ளையருடன் (ப்ரிட்டிஷ் அரசு) கூட்டு சேர்ந்து அரசியல் அதிகாரத்தில் ஒரு பங்கை அடைந்துவிட்டார்கள். அந்த அதிகாரத்தில் ஒரு பங்கை அடையவே பார்ப்பனரல்லாதோர் இயக்கம் துவக்கபட்டது. அவர்கள் விரும்பியது அதிகாரமும், அதிகாரத்தை அடைவதற்கான ஒரு அடிப்படையுமே

தங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய அதிகாரம் மறுக்கப்பட்டதாகவும், அதை அடைய சமூகநீதி எனும் காரணத்தை முன்வைத்து அதிகாரத்தில் தமக்கான உரிமைகளை அவர்கள் கோரினார்கள். இந்த அடிப்படையில் அவர்கள் திரண்டதாலேயே நீதிக்கட்சிக்கு அன்று அடையாளம் கிடைத்தது. ஆனால் இது உருவான விதத்தை வைத்துப்பார்த்தாலே தமக்கும் கீழ் இருக்கும் தலித் மக்களை உயர்த்த அவர்கள் முன்வருவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு பொதுவான சமூகநீதியில் துளியேனும் ஆர்வம் இருந்திருந்தால் 1921ல் வந்த கோயில் நுழைவு மசோதாவை தோற்கடித்திருக்கமாட்டார்கள். ஆனால் அன்று அந்த கோயிலில் நுழையும் மசோதாவை தோற்கடித்தது அவர்களே.

கோயில் நுழைவு மசோதாவுக்கு எதிராக ஒன்றாக திரண்டு அது தோற்பதை உறுதி செய்தார்கள். பின்னாளில் (தலித் தலைவர்களான) இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா ஆகியோரின் இடைவிடாத அழுத்தம் காரணமாகவே அந்த மசோதா நிறைவேறியது.  அடித்தட்டு மக்களை முன்னேற்ற அன்று தொழிலாளர் கமிஷன் ஒரு நிதியை உருவாக்கச்சொல்லி வலியுறுத்தியது. பதவிக்கு வந்ததும் இவர்கள் செய்த முதல் வேலை அந்த நிதிக்கான ஒதுகீட்டைக்குறைத்ததுதான். அந்த நிதியை தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்து, அதை சுத்தமாக காலி செய்து அடித்தட்டு மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகளை சுத்தமாக ஒழித்தார்கள்.

இவர்கள் சமூகத்தை மூன்று பிரிவாக பிரித்ததைக்காண்கிறோம். பார்ப்பனர், பார்ப்பனர் அலலதோர், தலித். இத்தகைய பிரிவினையால் அன்றும், இன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டோரே.

பெரியாரிய இயக்கம் ஒடுக்கப்பட்டோருக்கு எதாவது உருப்படியான நன்மையைச் செய்தது எனும் கண்ணோட்டமே போலியானது. அதன்பின் பெரியார் திராவிட இயக்கத்தில் சேர்ந்து சுயமரியாதை இயக்கத்தைத்துவக்கி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைக்க முயன்றார். அதில் சிறிதளவு அவர் வெற்றி பெற்றாலும் சமூகம் அன்று இயங்கிய பழைய மாடலிலேயே அவர் இயங்கி அதற்கே உண்மையானவராக இருந்தார். அதைத்தாண்டி அவரால் செல்ல முடியாதற்கு காரணம் அன்று ஒடுக்கபட்ட மக்களுக்கு தலைவர்கள் இருந்ததால் அவர்களைத்தாண்டி இவரை அவர்களால் ஏற்க முடியவில்லை.

திராவிட இயக்கம் தலித் அல்லாதோரை மையமாக வைத்தே உருவானதால் ஒடுக்கப்பட்டோரை அதில் சேர்க்க சமூகரீதியான தடைகள் அவர்களுக்கு இருந்தன. அவர்களது விருப்பம் என்னவாக இருந்திருந்தாலும், ஒடுக்கபட்டோருக்கும், பார்ப்பனரல்லாதோருக்கும் இடையே உள்ள சமூகத்தடைகள் ஒடுக்கப்பட்டோரை இவ்வியக்கத்தில் சேர்க்க தடையாக இருந்தன. அதன்பின் திராவிட இயக்கம் வலுவான அரசியல் சக்தியாக மாறுகிறது. 1939ல் திராவிடர் கழகம் பிறக்கிறது. 1949ல் திமுக பிறக்கிறது.

1939ல் இருந்து 1949ல் அரசியலில் நுழைந்து அதிகாரத்தைப்பிடிக்க அவர்கள் முனைந்த இந்தப்பத்தாண்டு காலத்தில் அதிகாரத்தைப்பிடிக்க திராவிட அடையாளத்தை முன்வைத்தே அவர்கள் மக்களைத்திரட்டினார்கள். இந்த நிலையிலும் ஒடுக்கப்பட்டோரின் அடையாளத்தை அவர்கள் வெளிவரவிடாமல் மறைத்தே வந்தார்கள். ஒடுக்கப்பட்டோரின் அடையாளம் அவர்களுக்கு அன்று அவசியமானதாக இல்லை. ஒடுக்கபட்டோர் தம் அடையாளத்தை ஒட்டுவங்கியாக மாற்றாவிடில் அவர்களுடன் ஒன்றிணைய திராவிட இயக்கங்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

ஆக பார்ப்பனரல்லாதோர் இயக்கம் அன்று தலித் அடையாளத்துடன் நேருக்கு நேர் மோதி அதை ஒடுக்கும் நோக்கிலேயே சென்றது. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், ரிபப்ளிக்கன் கட்சி என அந்த இயக்கத்தின் எந்த வடிவிலும், எந்த வகையிலும் அவர்கள் ஒடுக்கட்டோரை ஆதரிக்கவோ, அவர்களுக்காக பாடுபடவோ முனையவே இல்லை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில் அக்காலத்தில் வெளிவந்த காண்டீபம் எனும் பத்திரிக்கையை நான் படிக்கையில் "வடநாட்டவரான அம்பேத்காரை தென்னாட்டுக்கு ஏன் அழைக்க வேண்டும்?" என எழுதப்பட்டிருந்ததை படித்தேன். ஆக இப்படித்தான் அவர்கள் அன்று பேசிவந்தார்கள். இந்த வகையில் அம்பேத்கரின் அடையாளத்தை மறைக்கவும் அவர்கள் முயன்றார்கள். பெரியாருக்கு அம்மாதிரி நோக்கம் இல்லையெனினும் திராவிட இயக்கத்தால் ஜாதியின் பிடியை விட்டு வெளியே வரமுடிந்ததில்லை. ஆக தெரிந்தோ, தெரியாமலோ திராவிட இயக்கம் தலித்துகளின் அடையாளத்தையும், அரசியலையும், சமூக வரலாற்றையும் ஒடுக்குவதில் மிகமுக்கியமான பங்கை வகித்தது.

____________________

http://www.southasianist.ed.ac.uk/article/view/147/88

Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the VCK, Chennai,
26th September 2012
by Hugo Gorringe
Dr. Hugo Gorringe (Hugo.Gorringe@ed.ac.uk)

J. Gowthama Sanna g.sannah@gmail.com or http://gsannah.wordpress.com


மொழியாக்கம்: செல்வன்

________________________________________________________


செல்வன் - holyape@gmail.com
________________________________________________________Saturday, April 25, 2015

தேன் சொட்டும் சொட்டாங்கல்

-- கவிஞர் ருத்ரா 

கூழாங்கல் 
பிஞ்சு விரல்களில்
பரிணாமம் கொண்டது
வைரங்களாய்.

பாட்டோடு
சொட்டு சொட்டாய் 
தேன் சொட்டும் இந்த‌
சொட்டாங்கல்.

குட்டை குட்டையாய்
சீட்டிப்பாவாடை
மீட்டிய தெல்லாம்
மரகத வீணைகள்.

நம் வரலாறு
ஆயிரம் பக்கங்களில் இல்லை
இந்த ஒலிப்பிறைகள்
உதிர்த்ததே நம் காலப்பிரளயம்.
 
 
________________________________________________
 
 
கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்  - ruthraasivan@gmail.com
 
________________________________________________
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிள்ளைவிளையாட்டு: சொட்டாங்கல் !

--மலர்விழிமங்கையர்க்கரசி

ஆத்துத்தண்ணீல ஆட்டம்போட்டு
மாஞ்சுமாஞ்சு மண்ணுலஅலஞ்சு
அச்சுஅச்சாக் கூழாங்கல்லுப்பொறுக்கி
அடிப்பாவாடையில சேகரிச்சுஅள்ளிக்கிட்டு
அப்படியேவீடுவந்து கொட்டிவிட்டா
முத்தம்பூராவும் முழுசா ரொம்பீரும்.!

ஒத்தக்கல்ல ஒசரமாச்சொடுக்கி அது
தரஎறங்குமுன்ன தடவிஎடுக்கணும்
எடுக்கறகல்லவிட்டு அடுத்தகல்லுல கை
அலுங்னா அம்புட்டுத்தேன் அவுட்டு
அடுத்தாளுக்கு ஆட்டபோரும்புள்ள ஆத்தாடி.!

இப்புடியே கிழக்கப்பாத்து ஒருஆளும்
மேக்கபாத்துஒருஆளுமா அப்புடியே
சொடுக்கி சொடுக்கிக் கல்லெடுத்து
இடதுஓரமாக் குவிச்சுக்கிட்டேவரவர
எரணிநேரமாயிரும் கடைசிக்கல்லெடுக்க!
விளக்குவக்கறதுக்குள்ள வீடுபோய்ச்சேந்துறணும்
எண்ணிப்பாத்துக் கணக்குக்கழிச்சு எந்திருச்சா
எங்கேயிருக்கோமுன்னே எவருக்கும்தெரியாது
வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டிவைக்கும்
விந்தைமனிதரின் பொன்னான கண்டுபிடிப்புத்தேன்
பிள்ளைவிளையாட்டு சொட்டாங்கல்லூ ஊ ஊ ஊ
கல்லுல்லா,,,,கல்லுல்லா.____கல்லுல்லா!picture source: @ Sengai Podhuvan http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Game_paandi_7.jpg/800px-Game_paandi_7.jpg________________________________________________
பேராசிரியர் முனைவர்  மலர்விழிமங்கையர்க்கரசி - malarmangay64@gmail.com
________________________________________________

கவுதம் சன்னாவுடன் ஓர் நேர்காணல் - 1

கவுதம் சன்னாவுடன் பேட்டி. பேட்டி எடுப்பவர் எடின்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹ்யூகோ கொரிங்கே


கேள்வி: தலித்துகளின் தற்போதைய நிலை என்ன? அது மட்டுமல்ல. இது திராவிட மண். இங்கே அரசியல்வாதிகள் ஜாதி ஒழிப்பைப்பற்றி பெரியார் காலத்திலிருந்து பேசி வருகிறார்கள். இந்த (திராவிட) மண்ணில் தலித் இயக்கங்கள் அவசியம் தானா?

பதில்: இந்த மாநிலம் மட்டுமில்லை. இந்தியா முழுக்க தலித் இயக்கங்களுக்கான அழுத்தமான தேவை இருக்கிறது. ஏன் என கேட்டால் இது ஈவேரா பூமியெனினும் தலித் எழுச்சி வரலாறு 150 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே இருக்கிறது. 1777ல் சென்னையில் ஒரு பெரிய கிளர்ச்சி நடைபெற்று அதைப்பற்றி இரட்டைமலை சீனிவாசன் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அப்போது சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தலித் ஒருவரின் மரணத்துக்காக ஒரு விசாரணை நடைபெற்று, அதன்பின் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தலித் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. அன்றில் இருந்து தொடர்போராட்டங்கள் இருந்தாலும் அவை ஒருங்கிணைக்கபடாதது மாற்றம் வருவதற்கான வாய்ப்பை தடுத்துவிட்டது. 1840ல் ஆதிதிராவிடன் எனும் வார்த்தை "பூர்வகுடி திராவிடன்" எனும் பொருள் தரும் வகையில் அறிமுகம் ஆகிறது. 1880ல் ஆதி திராவிடர் மகாஜன சபையும், 1890ல் பறையர் மகாஜன சபையும், 1891ல் திராவிடர் மகாஜன சபையும் உருவாகின்றன. ஆக 1880ல் இருந்து 1891க்குள் மூன்று முக்கிய இயக்கங்கள் உருவாகியுள்ளன. இன்றைய தலித் இயக்கங்கள் எல்லாமே இவற்றின் வாரிசுகள் தான். இன்றைய இயக்கங்கள் எழுப்பும் கோரிக்கை அன்றைய இந்த மூன்று இயக்கங்களும் எழுப்பிய கோரிக்கைகளே. பெரியார் முதலான தலைவர்கள் இந்த காலக்ட்டங்களின் மத்தியில் வந்து போன தலைவர்களே. பெரியாருடன் நின்றுவிடாமல் நாம் இன்னமும் கூட பல பெயர்களைக்குறிப்பிடவேண்டும்

1845ல் இருந்து 1880 வரை தலித்துகளுக்காக உழைத்த ஏராளமான தலைவர்கள் இருந்தார்கள். வி அயோத்திதாச பண்டிதர் (இவர் கே அயோத்திதாச பண்டிதரின் ஆசிரியர்), புலவர் வைரக்கண் வேலாயுதம், வெங்கிடசாமி பண்டிதர், ஆரண்யகதாச பண்டிதர், மைலியா சின்னதம்பி, புலவர் மற்றும் நாவலாசிரியர் பி.ஏ.ஏ ராஜேந்திரம் பிள்ளை மற்றும் சாங்கு சித்த சிவலிங்க நாயனார். இந்த தலைவர்கள் தலித் மக்களை சமூக நீரோட்டத்தில் கலக்க வைத்து எதிர்காலத்துக்கு வித்திட்டார்கள். சுபிக்ஷார சங்கம், பூர்வதமிழ் அபிமான சங்கம், பஞ்சமர் கல்வி சங்கம், மற்றும் ஆதூலர் அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் காலக்ட்டத்திலும் தலித் மக்களை திரட்டும் முயற்சி நடைபெற்றது

இந்த தலைவர்களின் முயற்சி இவர்களது நோக்கங்களை முன்னெடுக்கும் பின்னாளைய தலைவர்கள் உருவாக வழிவகுத்தது. முக்கிய தலைவர்களாக அயோத்திதாசர் (தென்னாட்டின் முதல் சமூகசீர்திருத்தவாதியான இவர் சாதியற்ற திராவிடர்களின் இயக்கத்தைத்துவக்கினார்) மற்றும் இவரது நண்பர் டி. ஜான் ரத்தினம் (இவர் முதல்முதலாக திராவிடர் கழகத்தை துவக்கி திராவிட பாண்டியன் இதழையும் 1887ல் நடத்தினார். இதன் பின்னரே ஈவேரா தனது திராவிடர் கழகத்தை துவக்கினார்) ஆகியோரைக்கூறலாம்.

இக்காலகட்டத்தைசேர்ந்த மற்ற தலைவர்களாக பி.எம் மதுரா பிள்ளை, பி. வெங்கடாசல சுப்பிரமணியம், மயிலை சின்னதம்பி, ஸ்வாமி அரண்கைய தாசர் (மூன்றாவது தலித் பத்திரிக்கையான சுகிர்த வாசினியின் ஆசிரியர்), ஓ. பழனிசாமி, ஓம்பிரகாச ஸ்வாமி, வி சி வாசுதேவ பிள்ளை, ஸ்வாமி தேசிகானந்தா,  எம்.சி மதுரா பிள்ளை, வி தர்மலிங்கம் பிள்ளை ஆகியோர் ஆதிதிராவிடர் மகாஜன சங்கத்தையும், எல்.சி குருசாமி, எச்.எம் ஜெகன்னாதன் ஆகியோர் அருந்ததியரையும் இவ்வியக்கத்தில் பிரதிநிதிப்படுத்தினார்கள்.

1910களின் துவக்க வருடங்களில் கே அப்பாதுரை, புலவர் பெரியசாமி, ஆர் வீரய்யன் முதலானோர் முதன்மையாகவும், 1920ல் எம் சி ராஜா இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் சங்கத்தின் முதல் தலித் தலைவராகவும் இருந்தார்கள். 1930ல் ஸ்வாமி சகஜானந்தர், பி.எம். வேலாயுதபாணி, வி.ஐ முனுசாமிப்பிள்ளை, என். சிவராஜ், அன்னை மீனாம்பாள் (இந்தியாவின் முதல் தலித் பெண் தலைவர்), ஜோதி வெங்கிட செல்லம் மற்றும் பி. பரமேஸ்வரன் ஆகியோர் தலித்துகளுக்காக அம்பேத்கரால் உந்தபட்டு பணியாற்றினார்கள். ஆக தமிழ்நாட்டில் தலித் எழுச்சிக்கு செறிவான ஒரு வரலாறு இருக்கிறது

இவர்களில் கொள்கைரீதியான அடிப்படையில் தலித் எழுச்சியை முன்னெடுத்தவராக அயோத்திதாசரைக்கூறலாம். அவர் ஜாதியை மறுத்தவர்களையே தமிழராகவும், திராவிடராகவும் கருதினார். ஜாதி இருக்கிறது என்றவர்களை அவர் தமிழராக ஏற்கவில்லை. அவர் சமூகத்தில் "ஜாதி இருக்கிறது என்பவர்கள்- இல்லை என்பவர்கள்" என இரு பிரிவாக பிரித்தார். தலித்- தலித் அல்லாதவர் என்ற இருபிரிவாக கூட அவர் பிரிக்கவில்லை. ஆக தென்னாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி அயோத்திதாசரே. ஆக தமிழ்நாட்டில் மட்டும் இன்றி இந்தியா முழுக்க தலித் இயக்கங்கள் தம் முயற்சியை முன்னெடுக்க வேண்டி உள்ளன. இக்கோரிக்கைக்ள் 1880களில் இருந்து எழுப்பபட்டு வருகின்றன. அயோத்திடகசை 1891ல்லேயே முதல் பெட்டிசனை போடுகிறார். இக்கோரிக்கைகள் அன்றுபோலவே இன்றும் முக்கியமானவையாக உள்ளன. ஆக தலித் இயக்கங்களின் அவசியம் இன்றும் உள்ளது.

____________________

http://www.southasianist.ed.ac.uk/article/view/147/88

Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the VCK, Chennai,
26th September 2012
by Hugo Gorringe
Dr. Hugo Gorringe (Hugo.Gorringe@ed.ac.uk)

J. Gowthama Sanna g.sannah@gmail.com or http://gsannah.wordpress.com


மொழியாக்கம்: செல்வன்

________________________________________________________


செல்வன் - holyape@gmail.com
________________________________________________________Wednesday, April 15, 2015

தென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் தாகம்!!

இன்று நாம் பரவலாக அறியும் தென்னாப்பிரிக்க தமிழர்களின் வரலாறு 1860ம் ஆண்டில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு மாற்று மனிதவளத் தேவை என்பது அத்தியாவசியமாகிப் போன சூழலில் அவர்களது பார்வை தென்னிந்தியாவை நோக்கிச் சென்றதன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த  உடல் உழைப்பு தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்கா கொண்டு செல்லும் முயற்சி தொடங்கியது.1800ம் ஆண்டு வாக்கில் அமுல் படுத்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் தொடர்பான சட்டம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்களைக் கொண்டு செல்வதை சாத்தியப்படுத்தியிருந்தது.  இந்தியாவில் அப்போது நடப்பில் இருந்தது  பிரித்தானிய காலணித்துவ ஆட்சி. ஆக, பிரித்தானிய அரசு அப்போதைய இந்திய காலணித்துவ  அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தென்னாப்பிரிக்கக் காடுகளை வெட்டி கரும்புத்தோட்டம் உருவாக்க தென்னிந்தியாவிலிருந்து தொழிளாளர்களைக் கொண்டு செல்வது என முயற்சி மேற்கொண்டது.  இந்தியாவின் வளங்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்வது என்பதை அப்போதைய  காலணித்துவ அரசு நடைமுறைப்படுத்தியிருந்தது. இங்கிலாந்தின் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய காலணித்துவ நாடுகளின் வளங்களே பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொருட்களை எப்படி தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனரோ அதே போல மனிதர்களையும் தமது பொருளாதார வளத்தினைப் பெருக்க பிரித்தானிய அரசு பயன்படுத்திக் கொண்டது. இதன் அடிப்படையில் தான் பல தொழிலாளர்கள், அதிலும் குறிப்பாக தென்னிந்திய தொழிலாளர்கள் மலாயா, சிங்கை, பர்மா, மொரிஷியஸ், பிஜி தீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர்.  இப்படித்தான் தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கும் தென்னிந்தியர்கள் குடியேற்றம் ஆரம்பித்தது.1860 ஆண்டு அப்போதைய  மட்ராஸிலிருந்து 16 நவம்பர்  டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர்.  இவர்கள் மூன்றாண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டு தொழிலுக்காக கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் தமிழர்கள். இதனை அடுத்து தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வந்த தமிழ் மக்களில் பலர் திரும்பிச்செல்லாத நிலையில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் என்ற ஒரு தனி இனமே ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகியது.


தென்னாப்பிரிக்கத்தமிழர்களின் தமிழ் தாகம் என்பது அளப்பறியது. தங்கள் மொழி என்பது நாளடையில் புழக்கத்தை விட்டு மறைந்து விட்டதை உணர்ந்து தங்கள் மொழியையும், பண்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் அண்மைய காலத்தில் பல்வேறு முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். தமிழிசையை புறந்தள்ளும் நிலை மாறி பல முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழிசையே ஆக்கிரமிக்கும் நிலையை இங்கு காண்கின்றோம். கோயில்கள், தமிழ் சடங்குகள், தமிழ் வாழ்வியல் முறைகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டு மென்மேலும் தங்கள் பாரம்பரிய விழுமியங்கள் மறைந்து கால ஓட்டத்தில் நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் இவர்கள் கவனத்துடன் செயல்படுகின்றனர். பல்வேறு தென்னாப்பிரிக்க தமிழ்ச்சங்கங்களும்  தமிழ் இயக்கங்களும் செய்யும் சேவைகளை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளையின் தமிழ்ச்சேவையானது அளப்பறியது; குறிப்பிடத்தக்கது.

தமிழ் மொழி தென்னாப்பிரிக்காவில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது தகுதியான தமிழ்ப்பாடங்களே; அப்பாடங்களை முறையுடன் நடத்த  தகுதி பெற்ற தமிழாசிரியர்கள்; என அடிப்படை தேவையைக் கண்டறிந்து இத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் முயற்சி மேற்கொண்டு தமிழாசிரியர்களுக்கான ஓராண்டு பயிற்சியைச் செய்து முடித்திருக்கின்றது இந்த இயக்கம். இதன் வழி 43 மாணவர்கள் தம்மை தகுதி பெற்ற தமிழாசிரியர்களாக உருவாக்கிக் கொள்ள வழி அமைத்துக் கொடுத்திருக்கின்றது இத்திட்டம். இத்திட்டத்தின் பின்னனியில் இருந்து அதனை இயக்கும் மாபெரும் சக்தியாக விளங்குபவர் திரு. மிக்கி செட்டி அவர்கள். பொருளாதார ஆதரவு, திட்ட அமைப்பு, மாணவர்களுக்கும் அமைப்பிற்கும் ஆதரவு என பல்முனையில் செயல்படும் இவர் ஒரு அசாத்தியமான  மனிதர். தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் இவர் என்பது மிகையான கூற்று அல்ல.

மகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாளின்  20 ஆண்டு காலங்கள் தென்னாப்பிரிக்காவில் வசித்தவர். மகாத்மா காந்தியடிகளுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்களில் ஒருவராக அறியப்படும் தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாடு தென்னாப்பிரிக்கா. அங்கு அப்போது எவ்வகையில் தமிழ் உணர்வு இருந்ததோ அதில் சிறிதும் குறைவில்லாது,  தமிழ் உணர்வே தமிழரின் தன்மானத்திற்கு அடையாளம் என தென்னாப்பிரிக்க தமிழர்கள் தீவிரமாக தமிழ் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரின் ஊக்கமும் நாளுக்கு நாள் பெருக வேண்டும். இவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமது இன்றைய நிலை போலல்லாது நன்கு தமிழில் எழுதவும் பேசவும் கற்றவர்களாக வளர்ச்சி பெற  வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துகின்றது!அட்டைப்படக்குறிப்பு: மகாத்மா காந்தியடிகள் தாம் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயத்தில் தங்கி இருந்த  சர்வோதயா இல்லத்தின் முன்பகுதியில் ஒரு அச்சு ஆலையை உருவாக்கி நடத்தி வந்தார். 1903ம் ஆண்டில் தொடக்கப்பட்ட அந்த அச்சு ஆலையின் புகைப்படமே  இச்சஞ்சிகையின் அட்டைப்பகுதியை அலங்கறிக்கின்றது.

அன்புடன்
சுபாஷிணி

  

_____________________________________________
சுபாஷிணி - ksubashini@gmail.com
_____________________________________________