“நீ கல்லாகப் போகக் கடவாய்’, தவறு செய்த (?) மனைவியை சபித்தார் முனிவர்.உடனே முனிவரின் மனைவி கல்லாக மாறிவிட்டார். பின்னர் இராமர் காலடி பட்டு கல்லாக இருந்த அகலிகை மீண்டும் பெண்ணாக மாறினாள். இது இதிகாசக் கதை. கற்பனைக் கதைதான். உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் காலத்தின் கோலத்தால் மரங்கள் கல்லான நிகழ்வுகள் புவியியல் வரலாற்றில் பூமியின் பல பகுதிகளில் பல்வேறு காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அப்படிக் கல்லாக மாறிய மரங்கள் தமிழ் நாட்டில் “கல்மரங்கள்” என்றே அழைக்கப்படுகின்றன. நம் நாட்டில் கல் மரங்கள் அதிகமாக உள்ள மாநிலம் நம் தமிழ்நாடுதான்.
தமிழக நில அமைப்பில் சுமார் 80% வன்பாறைகளால் ஆனது. தீப் பாறைகளும் , உருமாற்றுப் பாறைகளும் இவ் வன்பாறைகளில் அடங்கும். தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் மென்பாறைகள் காணப் படுகின்றன. படிவப் பாறைகள் இத் தொகுப்பில் அடங்கும். அரியலூர் பகுதியில் இத்தகைய படிவப் பாறைகளே உள்ளன. பெரும் நீர்நிலைகளில் ஆறுகளால் கொண்டுவரப்படும் படிவங்கள் மற்றும் வண்டல்கள் படிகின்றன.. பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்போது, நீர்நிலைகளின் அடியில் படியும் படிமங்களின் அளவு, பலநூறு மீ. அளவிற்கு உயர்ந்து விடுகிறது. இப்படிவங்கள் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக கெட்டிபட்டுப் பாறைகளாக மாறுகின்றன, இவையே படிவப்பாறைகள் (SEDIMENTARY ROCKS ) எனப்படுகின்றன. . மணல் பாறைகள், களிப் பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் ஆகியவை இப்பகுதியில் கிடைக்கும படிவப் பாறைகள் ஆகும்.
நீர்நிலைகளின் அடியில் படிவங்கள் படியும்போது, அந்த நீரில் வாழும் உயிரினங்களும், ( சிப்பி, நண்டு, நத்தை, மீன் போன்றவையும் , நீர் வாழ் தாவர வகைகளும்), ஆற்றிலடித்து வரப்படும் மரங்கள், கிளைகள் மகரந்தங்கள், ஆற்றில் வாழும் உயிரினங்கள், ஆற்றோரம் உள்ள நிலப் பகுதியில் வாழும் உயரினங்கள் ஆகியவையும் சேர்ந்து புதையுண்டு போகின்றன. மேலும் மேலும் படிவங்கள் மேலே படியும் பொது அடியில் உள்ள படிவங்கள் அழுத்தத்திற்கும் வெப்பத்திற்கும் உட்பட்டு கெட்டிப் படுகின்றன. பாறைகளாக உருவெடுக்கின்றன. அதில் படிந்துள்ள உயிரினங்களில் உள்ள செல்லுலோஸ் போன்ற மென்பொருட்கள் , குவார்ட்ஸ் போன்ற கணிமங்களால் இட மாற்றம் செய்யப் பட்டு , அந்த உயிரினங்கள் உருக் குலையாமல் அப்படியே தொல்லுயிர் படிவங்களாக (FOSSILS) மாறுகின்றன. பொதுவாக , தொல்லுயிர் எச்சங்கள் படிவப் பாறை களிலேயே காணப்படுகின்றன. தாம் அடங்கியுள்ள படிமப் பாறைகள் தோன்றிய காலம், சூழ்நிலை போன்றவற்றை அறியவும், பரிணாம வளர்ச்சி பற்றி அறியவும் தொல்லுயிர் எச்சங்கள் மிகவும் பயன் படுகின்றன. தொல்லுயிர் எச்சங்களை ஆய்வு செய்யும் கல்வி தொல்லுயிரியல் (PALAEONTOLOGY) என்று வழங்கப் படுகிறது. புதைபடிவ எரிபொருட்களாகிய நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு ஆகியவற்றை கண்டுபிடிக்கும் பணியில் தொல்லுயிரியல் பெரும்பங்கு வகிக்கிறது.
அரியலூர் பகுதியிலுள்ள படிவப்பாறைகளில் பல்வேறு வகைப்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் ஏராளமான அளவில் கிடைக்கின்றன. இவற்றில் மிகப் பெருபாலானவை கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களே ஆகும். இதன் வாயிலாக , தற்போது இப்பகுதிக்கு நூறு கி.மீ. கிழக்கில் உள்ள கடல் , சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்திருக்கிறது என அறிய முடிகிறது.
இந்திய புவியியல் ஆய்வுத்துறையை சேர்ந்த ப்ளான்ஃ போர்ட் (BLANFORD-1862) மற்றும் இராபர்ட் ப்ரூஸ் ஃபுட் ( ROBERT BRUCE FOOTE-1873) ஆகியோர் இங்கே ஆய்வுகள் நடத்தி , இங்குள்ளப் படிவப் பாறைகள் பற்றியும் அவற்றில் பொதிந்துள்ள 12 கோடி ஆண்டுகள் பழமையான தொல்லுயிர் எச்சங்கள் பற்றியும் உலகிற்கு எடுத்துரைத்தனர். அன்று முதல் அரியலூர் பகுதி “PARADISE OF PALAEONTOLOGISTS” என்றே அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள புவிஅறிவியல் அருங்காட்சியகங்களை , அரியலூர் பகுதி தொல்லுயிர் எச்சங்கள் அலங்கரிக்கின்றன.
இவ்வளவு பெருமை வாய்ந்த அரியலூர் பகுதியில் இந்திய புவியியல் ஆய்வுத்துறைக்கு தலைமை ஏற்ற முதல் இந்தியர் எனும் பெருமை பெற்ற எம்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் 1940 ஆம் ஆண்டில், ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அவர் அரியலூருக்கு பத்து கி.மீ. மேற்கேயுள்ள சாத்தனூர் எனும் கிராமத்திற்கு 7௦௦ மீ. வடக்கே ஓடைப் படுகை ஒன்றில் 18மீ. நீளமுள்ள தொல்மர எச்சம்/ கல் மரம். ( FOSSIL TREE / WOOD FOSSIL) ஒன்றை கண்டு பிடித்தார். இந்த சாத்தனூர் கிராமத்தின் அருகே உள்ள வரகூர், ஆனைப்பாடி, அழுந்தளையூர், சாரதாமங்கலம் போன்ற கிராமங்களின் அருகே உள்ள ஓடைப் படுகைகளிலும் சில மீ. நீளமுள்ள கல் மரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. ஆயினும் சாத்தனூர் அருகே உள்ள 18 மீ. நீளமுள்ள கல்மரம்தான் இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான, மிகப் பெரிய கல்மரம் ஆகும். அருகே உள்ள ஆனைப்பாடி ஓடைப் படுகைகளில் காணப் படும் “அம்மோநைட்” எனப்படும் கடல் வாழ் உயிரினத்தின் தொல்லுயிர் எச்சங்கள் , சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரிடேஷியஸ் காலத்தை சேர்ந்தவை. (இவைகளில் சில கார் சக்கரம் அளவிற்கு பெரிதானவை) எனவே இந்தப் பகுதி சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் கடலின் கீழ் இருந்தது- ஆற்றில் அடித்து வரப்பட்ட பெரிய அடிமரம் கடலில் சேர்ந்து , மேலே மேலே படிந்த படிவங்களின் அடியில் சிக்கி கல்லாக சமைந்தது (PETRIFICATION) என்பது தெளிவு.. மணல் பாறைகளில் பதிந்து பூமிக்கு அடியில் இருந்த சாத்தனூர் கல்மரம் , ஓடைகளில் ஓடிவரும் தண்ணீரால் மேலேயுள்ள மண் அரிக்கப்பட்டு , அதனால் வெளிப் பட்டிருக்கிறது. ஆய்வின் போது கிடைத்த தடையங்களின் அடிப்படையில் , இந்த அடிமரம் சுமார் 26 மீ. இருந்திதிருக்க வேண்டும் என்றும், ஓடை நீரால் அடித்த் செல்லப் பட்டது போக எஞ்சியுள்ள 18மீ. பகுதியே தற்போது நாம் பார்ப்பது. என்றும் தெரிய வருகிறது.
இந்தக் கல்மரம் ஜிம்னோஸ்பேர்ம் ( GYMNOSPERM ) எனப்படும் “பூக்காத”-/”கனிதரா’ தாவரங்கள் பிரிவில் “கோனிஃபர்” (CONIFER) எனப்படும் கூம்புடை பிரிவை சார்ந்தது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன் ‘க்ரீடேஷியஸ்” காலகட்டத்தில் இவ்வகைத் தாவரங்களே பூமியில் பெருகி இருந்தன. பின்னர் “ஆஞ்சியோஸ்பேர்ம்” எனப்படும் பூக்கும் / கனிதரும் மரங்கள் தோன்றின.
தற்போது சாத்தனூர் –அரியலூர் பகுதிகளில் கடலும் இல்லை , பெருங்காடுகளும் இல்லை. இப்பகுதி இன்றைக்கு கடலிலிருந்து 1௦௦ கி.மீ. மேற்கே தள்ளியுள்ளது. ஆனால் 12 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட “க்ரீடேஷியஸ்” காலகட்டத்தில் இபகுதி கடலின் கீழ் இருந்தது என்பதை இங்கே கிடைக்கும் கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் எச்சங்கள் (MARINE FOSSILS) உறுதி செய்கின்றன. அன்றைய கடற்கரையை ஒட்டியோ அல்லது சற்று தள்ளியோ இருந்த நிலப்பகுதியில் 60-70 அடி உயரமுள்ள மரங்கள் இருதிருக்க வேண்டும். அந்த மரங்கள் ஆறுகளால் அடித்து வரப் பட்டு, கடலை அடைந்து, கடலுக்கு அடியில் படிந்த படிவங்களோடு சேர்ந்து படிந்து , கல்லாக சமைந்திருக்க வேண்டும்., பிற்காலத்தில் புவியியல் மாற்றங்களால் கடல் பின்னே செல்ல தற்போது இந்தக் கல் மரங்களும் ஏனைய தொல்லுயிர் எச்சங்களும், நிலப் பகுதியில் புதைந்து கிடக்கின்றன.ஆறுகளிலும் ஓடைகளிலும் மண் அரித்து அடித்து செல்லப் படும்போது, இவை வெளிப் படுகின்றன.
சரி , மரம் எப்படிக் கல்லாக மாறுகிறது.? சாதரணமாக மரம் மண்ணில் புதையுண்டு போகும் பொது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளால் அவை மட்கிப் போகும் வாய்ப்புகளே அதிகம். மாறாக , அந்த மரம் புதையுண்ட இடத்தில் மேலும் மேலும் படிவங்கள் படியும் போது அதனால் ஏற்படும் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக மரம் தகன நிலைக்கு உட்பட்டு குமைந்துபோய் கரியாக மாறக் கூடும். நிலக்கரி, பழுப்பு நிலக்கரிப் படிவங்கள் இப்படித்தான் உருவாகியுள்ளன. இதனை CARBONAISATION அல்லது கரியாக மாறுதல் எனக் குறிப்பிடலாம். மூன்றாவதாக மண்ணில் புதைந்த மரம் மட்கிப் போகும் முன்னால் அந்த மரத்திலுள்ள செல்களின் இடை வெளிகளிலும், செல் அடுக்குகளின் இடை வெளிகளிலும் , நிலநீர் புகுந்து விடுகிறது. அந்த நீரில் கரைந்துள்ள சிலிகா அந்த இடைவெளிகளை ஆக்கிரமித்து தாவரப் பொருளான செல்லுலோசை இடமாற்றம் செய்து விடுகிறது. இந்த நிகழ்வின் போது மரத்தின் அமைப்பு உருக்குலையாமல் அப்படியே காப்பாற்றப் படுகிறது. மரம் கல்லாக சமையும் இந்நிகழ்வு “PETRIFICATION” (PETRA MEANS ROCK) என்று அழைக்கப்படுகிறது.நிலநீரில் கரைந்துள்ள கனிமங்களின் தன்மைக்கேற்ப கல் மரத்தின் நிறம் மாறுபடுகிறது. சாத்தனூர் கல் மரம் சிலிகாவால் ஆனதால் இது பழுப்பு நிறத்தில் உள்ளது.
அரியலூரைச் சுற்றியுள்ள சாத்தனூர், ஆனைப்பாடி வரகூர் ஆகிய இடங்களில் மட்டுமின்றி , விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை, கடலூர் மாவட்டம் நெய்வேலி, புதுவை காலாப்பட்டு மற்றும் விருதாச்சலம் பாரூர் ஆகிய இடங்களிலும் கல் மரங்கள் கிடைக்கின்றன. இராஜஸ்தான் மாநிலம் பொக்ரேன் பகுதியிலும் கல்மரங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. உலக அளவில் அரிசோனா கல்மரக் காடுகள் மிகவும் புகழ் பெற்றவை.
சாத்தூர் கல் மரத்தின் சிறப்பு மற்றும் முக்கியத்துவம் கருதி, இந்திய புவியியல் ஆய்வுத் துறை இதற்குக் கல்மரப் பூங்கா என பெயரிட்டு , தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது..இந்த இடம் வேலியிட்டு பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஓடை அரிப்பால் வெளிப்பட்ட இந்தக் கல்மரம், எதிர் காலத்தில் ஓடை வெள்ளத்தினால் அகற்றுபட்டு விடக்கூடாது என்பதற்காக , செயற்கைக் கால்வாய் அமைத்து ஓடை திருப்பி விடப்பட்டுள்ளது. கல்மரம் பற்றிய புவியியல் குறிப்பு ஒன்றும் இத்துறையினரின் அறிவிப்புப் பலகையில் காணப் படுகிறது. பாதுகாப்பிற்காக பணியாள் ஒருவரும் இருக்கிறார்.
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் (N.H. 45), பெரம்பலூரில் இருந்து, ஆறு கி.மீ. தெற்கே சிறுவாச்சூர் எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து கிழக்கே செல்லும் சாலையில் 14 கி.மீ. பயணித்தால் சாத்தனூரை அடையலாம்.அண்மைக்காலத்தில் சாத்தனூர் கல் மரத்தின் சிறப்பு பற்றி அறிந்த தமிழக அரசின் சுற்றுலா துறை , சிறுவாச்சூர்- சாத்தனூர் சாலையை செப்பனிடு பணியை மேற்கொண்டது. சாத்தனூரில் கல் மரத்திற்கு அருகே ஓய்வு விடுதி ஒன்றும் கட்டப் பட்டது. பத்து கோடி ஆண்டுகள் பழமையான கல்மரத்தைப் பாதுகாத்துவரும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் பணி பாராட்டிற்குரியது.
தலையிலே பாம்பு அணிந்திருப்பவள் கருமாரி, மாரியம்மன்தான். பாம்பின் உருவில் பாரினைக்காக்கவே சாம்பல் தருகின்றாள் தாய் என்று சொல்லுவதுண்டு.
இதோ எங்களூர் மாரியம்மன் பற்றி ஒரு கவிதை.
தெற்கிலந்தைக் குளம் மாரியம்மன் கோயில்
எங்களது சிற்றூரில் உறையும் தேவி
எழிலார்ந்த மாரியம்மன் கோயில் பற்றி
உங்களுக்குச் சொல்லுகின்றேன், முகமும் ஒன்றாய்
ஓருருவாய் ஒப்பற்ற அழகு சேரச்
சிங்கமதன் மேலமர்ந்து திகழும் காட்சி
செப்புதற்கு முடியாது, அம்மன் கண்கள்
பொங்குகிற கருணையினை என்ன சொல்ல?
புத்தழகுக் கருங்கல்லின் புனிதம் தேவி!
பூசாரி பண்டாரம் அலங்கா ரத்தில்
புன்னகைக்கும் தேவியவள் அமரும் கோயில்
ஆசார வாசலிலே புகுந்து விட்டால்
அங்கங்கே பரிவார தேவ தைகள்
வீசாத வெட்டரிவாள், சலங்கை, தண்டு,
விளங்குகிற பலிபீடம், பிரம்பு, யாவும்
தாசாதி தசர்களாய் ஊரார் எல்லாம்
தரிசிக்க வைத்திருக்கும் உபச்சாரங்கள்.
இடப்பக்கப் பீடத்தில் சுடலை மாடன்,
இன்னுமங்கே காந்தாரி, வீற்றி ருக்கத்
தொடக்கத்தில் கணபதியும் உட்பக்கத்தில்
தொங்குகிற நாக்குடைய நாயின் மேலே
எடுப்புடனே பைரவரும் கோயில் கொள்ள
இடையினிலே பலிபீடம் அமைந்திருக்க
அடுத்துள்ள வெளியினிலே வேம்பு நிற்க
அமைந்துள்ள கோயிலொரு அழகுக் கொள்ளை!
வருடத்திற் கிரண்டு முறை கொடைநடக்கும்
மண்விட்டு வெளியூரில் வாழ்வோர் கூட
கருத்துடனே அங்குவந்து கலந்து கொள்வார்
கண்கொள்ளாக் காட்சியது, முதல்நாள் மாலை
நிருத்தங்கள் செய்கின்ற கணியான் ஆட்டம்
நிகழ்த்தியபின் மாரியம்மன் சரிதை சொல்வார்
சரித்திரத்தில் அம்மனது பிறப்புச் சொல்லும்
சமயத்தில் மருளாடி துள்ளிப் பாய்வார்
சாமிவந்து பாய்கிறவர் மேலும் கீழும்
தாவிவந்தே ஆடுவதைப் பார்க்கும் போது
தாமுதலாய்ப் பார்ப்பவர்கள் பயந்துபோவார்
தடியெடுத்தே ஆடுவதும், அரிவாள் தூக்கி
பூமியது அதிரும்வகை துள்ளி வீழ்ந்து
புரளுவதும் , ஓலமிட்டுக் குறிகள் அங்கே
தாமுரைத்தே ஆடுவதும், சத்தம் போட்டே
சாடுவதும் பார்ப்பதற்குத் துணிவு வேண்டும்.
ஆடுபவர் உறவினர்கள் அங்க வஸ்த்ரம்
அவர்களது மார்புக்குக் குறுக்காய்ச் சுற்றிப்
போடுவதும், கணியான்கள் சுற்றிச் சுற்றிப்
புகழ்ந்தபடி பாடுவதும் பக்கம் அங்கே
கூடுவதும், கட்குடித்த சிலபேர் அங்கே
குதிப்பதுவும் , மாதரெலாம் குரவை போட்டே
பாடுவதும், நையாண்டி மேளம் பம்பை
பரவசமாய் அடிப்பதுவும் அமர்க்களந்தான்!
இரவெல்லாம் தெருக்கூத்து, வில்லுப் பாட்டு
இளைஞர்களின் சிலம்பாட்டம், உடுக்குப் பாட்டு
கரகாட்டம், ஒயிலாட்டம், உருமி மேளம்
காதுகட்கும் கண்களுக்கும் தீனி போட
மருளாட்டம் நம்முள்ளும் வருமோ என்னும்
வகையினிலே துடிப்புகளை ஏற்படுத்தும்.
இருளோட்டும் அலங்கார விளக்குக் கூட்டம்
எழிலாக அங்கங்கே ஜொலிஜொலிக்கும்~
துடுக்கான சாமிகளின் ஆட்ட பாட்டம்
தொடர்ந்துவர மறுநாளில் சுடலை மாடன்
சுடுகாட்டு வேட்டைக்குச் செல்லும் காட்சி
சொப்பனத்திலும் பயத்தை வரவழைக்கும்
எடுப்பான சல்லடங்கள் சலங்கை குல்லாய்
இன்னுமங்கே தும்புவார்ச் செருப்புப் போட்டு
நடுச்சாமம் சுடுகாடு சென்று மீளும்
நடப்பதனைக் காணுதற்குத் திரளும் கூட்டம்.
காலையிலே பொங்கல் வைப்பர், அதற்குப் பின்னே
கடாவெட்டு , வெட்டுவதும் ஓர்கலைதான்
மாலையினைப் போட்டிருக்கும் ஆட்டை வெட்ட
மறுநொடியில் அதன் உடலம் துடிதுடித்துக்
காலுதைக்கும் அக்காட்சி காணுகின்ற
கண்களிலும் ரத்தம்வரும், அதற்கும் மேலே
கோலமுடன் அம்மன்முன் படையலிட்டே
கொண்டாடி மகிழ்ந்திருக்கும் அடியார் கூட்டம்.
அதற்குப் பின் சாமிகளின் ஊர்வலங்கள்
அம்மன்மருள் ஆடுபவர் கரகம் வைத்தும்
கொதிக்கின்ற தீச்சட்டி ஏந்தி ,நீறு
கொட்டிவைத்த கப்பரையை கையில் வைத்துக்
குதித்தாடி வருகின்ற ஊர்வ லத்தில்
கூடுகிற சந்திகளில் காவு தந்து
துதிபாடி வீதியினில் செல்லும் காட்சி
தொடர்ந்துமறு கொடைவரைக்கும் நினைவிருக்கும்
ஊரிலுள்ள எல்லைகளிம் தெய்வங் கட்கு
ஊர்வலத்தில் செல்கையிலே முட்டைக் காவும்
வீரியத்தைக் காட்டுகின்ற சாமி கட்கு
மேல்கொண்டை சேவலினைத் திருகிக் கொய்து
சோரியெனப் பொங்குகிற இரத்தம் மாந்தி
துடிதுடிக்க எறிவதுவும் , அப்பப்பப்பா
யாரிதனை வகுத்தார்கள் தெரியவில்லை
அச்சமதா அவசியமா புரிய வில்லை
இங்கேதான் மாரியம்மன் கோயில் பக்கம்
இளவட்டக் கல்லொன்று கண்ட துண்டு
அங்கேயார் அதைத் தூக்கிப் போடு வாரோ
அவருக்குத் திருமணம்செய் தகுதி கிட்டும்
எங்கேநாம் இருந்தாலும் அற்றை நாளில்
இருந்ததெலாம் எண்ணுகையில் மனம்களிக்கும்
சிங்கத்தின் மேலமரும் மாரி யம்மா
சிறப்பெல்லாம் அளித்திடுக வாழ்க, வாழ்க!
படம் உதவி முனைவர் சுபாஷிணி:
இங்கே காணப்படும் சிலை டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனில் உள்ள National Museum of Denmark அருங்காட்சியகத்தில் ஆசிய அருங்கலைப்பொருட்கள் சேகரிப்பு உள்ள பகுதியில் இருப்பது. இதற்கு மாரியாத்தாள் எனப்பெயரிடப்பட்டு ஏறக்குறைய 1890ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சிற்பம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மாரியாத்தாள் காலரா நோயிலிருந்தும் சின்னம்மை நோயிலிருந்தும் மக்களைக் காப்பவள் என்ற குறிப்பும் இங்கே உள்ளது.
அடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா?
அஞ்சி அஞ்சிக் கிடந்த காலம் மறந்து போனதா?
கொடுமை தீர்ந்து வாழ வந்தும் ஒருமை இல்லையே -ஒரு
குலத்தைப் போல வாழ்வதென்ற பொறுமையில்லையே!
மாநிலங்கள்தோறும் என்ன பிரிவினை?
நாம் மறந்துவிட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை
ஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....
ஒருவரது நாட்டுப்பற்று உணர்வு எழுச்சி பெறும் விதமாக அமைந்த இந்தப் பாடலின் வரிகளை 1970 ஆண்டு சுதந்திரதினத்திற்கு வெளிவந்த "ராமன் எத்தனை ராமனடி" என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்தியா தனது 24 ஆவது சுதந்திரதின நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது, அதுவும், தொடர்ந்து மறு ஆண்டே கால்நூற்றாண்டு என்ற பெருமைமிகு எல்லையை அடைவதைக் கொண்டாட இருக்கும்பொழுது எழுதப்பட்ட ஒரு பாடலின் கருத்து "ஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....".
ஏன் அந்நாளில் இந்திய நாட்டில் இந்த ஒற்றுமை குறைந்த நிலை என்பதை அக்கால இந்திய அரசியலை திரும்பிப் பார்த்தால் தெரியும், அதனை அப்பாடலின் வரிகளே விளக்கும்.
திரைப்படத்தில் பள்ளி மாணவர்கள் நடத்தும் ஒரு கலைநிகழ்ச்சியில் அவர்கள் சிறைக்கைதிகளுக்கு நடித்துக்காட்டுவதாக இப்பாடலை இடைச்செருகல் செய்து பொருத்தமாக அமைத்திருந்தார்கள். பாடலின் வரிகள் கீழே:
தமிழக மக்கள்:
சேர சோழ பாண்டிய மன்னர் ஆண்ட தமிழ்நாடு
ஆண்ட தமிழ்நாடு
திராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது
ஆள்வதென்பதேது
தேனைப் போன்ற தமிழிருக்க வேறு பாஷை எதற்கு
வேறு பாஷை எதற்கு
தேசீயம் என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு
தேசீயம் என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு
தமிழ்நாடு தமிழருக்கே ..... தமிழ்நாடு தமிழருக்கே .....
தமிழ்நாடு தமிழருக்கே .....
ஆந்திர மக்கள்:
ஆந்திரதேசம் ஆந்திரருக்கே .....
கிருஷ்ணதேவருடன் ராமராயர் எமை
ஆண்ட தேசம் இது ராமையா
ராமையா ..... ராமையா .....
பரததேசம் எனும் பேரில் நீங்கள் அதைச் சேர்த்து வைத்தது என்ன தீமையா .....
தீமையா ..... தீமையா .....
தெலுங்கானா மக்கள்:
ஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய் வாழ்வது முறைதானா
வாழ்வது முறைதானோ
அடிப்போம் பறிப்போம் பிரிப்போம் எமக்கு வேண்டும் தெலுங்கானா
வேண்டும் தெலுங்கானா .....
மகாராஷ்டிரா மக்கள்:
மகாராஷ்டிரம் நமதே .....
சிவாஜி ஆண்ட இம்மராட்டி தேசத்தில் விரோதி வரலாமா?
விரோதி வரலாமா?
விடாமல் துரத்து போராட்டம் நடத்து எழுவோம் ஒரு சேனா
எழுவோம் ஒரு சேனா
கட்டுப்பட்டுச் சுமந்தது போதும்
போதும்
பட்டுப்பட்டுப் பயந்தது போதும்
போதும்
மாரைத்தட்டு வீரம் கொட்டு வாழ்க போராட்டம் .....
பஞ்சாப் மக்கள்:
பஞ்சாப் நமதே .....
பஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும் பாஞ்சால தேசமடி
பகைவரை எதிர்த்து பட்டாளம் சேர அஞ்சாத தேசமடி
சண்டிகர் என்னும் பொதுநகர் எங்கள் தலைநகர் ஆகுமடி
தரமாட்டோம் அதைவிடமாட்டோம் எனத் துணிந்து சபதம் செய்யடி
ஹரியானா மக்கள்:
ஹரியும் சிவனும் எனப் பிரிந்து பிரிந்து நாம் வாழ்வோம் ஹரியானா
அந்தத் தலைநகரம் எங்கள் தலைநகரம் பஞ்சாப் பெறலாமா?
பிற மாநில மக்களும் தொடர்வர் என்ற கணிப்பு:
வங்காளம் நமதே .....
கர்நாடகம் நமதே .....
கேரளம் நமதே .....
சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத் .....
காந்தி:
இந்திய தேசத்து செல்வங்களே இணையாதிருக்கும் உள்ளங்களே
சிந்திய ரத்தம் போதாதோ? தேசம் நாசம் ஆகாதோ?
அங்கே தெலுங்கானா ..... அப்பப்பா இங்கே ஹரியானா .....
நடுவில் பலசேனா ..... இங்கே நடப்பது சரிதானா .....
நேரு:
அடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா?
அஞ்சி அஞ்சிக் கிடந்த காலம் மறந்து போனதா?
கொடுமை தீர்ந்து வாழ வந்தும் ஒருமை இல்லையே -ஒரு
குலத்தைப் போல வாழ்வதென்ற பொறுமையில்லையே!
மாநிலங்கள்தோறும் என்ன பிரிவினை?
நாம் மறந்துவிட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை
ஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....
ஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....
பாரதி:
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு
வந்தே மாதரம் என்போம் .....
நாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம் .....
வந்தே மாதரம் என்போம் .....
நாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம் .....
வந்தே மாதரம் என்போம் .....
நாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம் .....
- கண்ணதாசன்
(ராமன் எத்தனை ராமனடி திரைப்படம்; 1970 சுதந்திர தின வெளியீடு)
காணொளி: https://www.youtube.com/watch?v=1kF8D5HWKPg
இந்தியா சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகள் கழித்தும் இருந்த நிலைமை இது. இதன் துவக்கம் இந்தியாவை மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரித்த காரணம் என்று கருதுவோர் உளர். ஆனால், மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பது அரசு நிர்வாகத்தைத் திறம்படக் கையாளும் ஒரு முறை. ஒரு குறிப்பிட்ட அடிப்படைப் பண்புகளைக் கொண்டவர்களை குழுக்களாக பிரித்துக் கொண்டால் தகவல் தொடர்பு எளிமையாக அமையும். நிர்வாகம் சீராக அமையும், மக்களுக்குச் சிறந்த சேவையை அளிக்க இயலும். வட்டார மக்களின் மொழியில் நீதிமன்றங்கள், அரசு நடவடிக்கைகள் யாவும் அமைய வேண்டும் என்பதும் இதில் அடங்கும் என்பதை இன்றும் அரசு புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
தமிழகம்:
ஆங்கிலேயர் ஆட்சியில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய திராவிட மொழிகள் பேசிய மக்களைக் கொண்ட பகுதிகள் முறையே இக்கால தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் (தற்பொழுது பிரிந்துவிட்ட அக்கால) ஆந்திரா ஆகிய மாநிலங்களாயின. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தை பாகிஸ்தான் போல, "திராவிடநாடு" எனத் தனிநாடாகப் பிரிக்க வேண்டும் என்ற தென்னக அரசியல் கட்சியான திராவிடக் கழகத்தின் கோரிக்கை நிறைவேறவில்லை. விடுதலை பெற்ற 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசீயம் என்ற கொள்கையாக 1965 இல் இந்தியாவின் அலுவலக மற்றும் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வினால் நாட்டின் விடுதலைக்கு முன்னர் 1930 களில் தமிழகத்தில் நடந்த ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் போலவே மீண்டும் ஓர் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் துவங்கியது.
முன்னிருந்த திராவிடம் என்ற பழங் கருத்து, மொழிவாரியாக 1953 இல் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்குப் பிறகு பொருத்தமற்றுப் போயிருந்தது. எனவே, திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு "தமிழ்நாடு தமிழர்களுக்கே" என்று தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கையை மாற்றியமைத்துக் கொண்டது. தமிழ்நாடு தமிழருக்கே, தேசீயம் என்ற பெயரில் நடுவண் அரசு ஏய்க்கிறது என்று போராட்டம் துவங்கியது. இந்திய நடுவண் அரசு 16 வது திருத்தச் சட்டமாக "பிரிவினைவாத தடைச்சட்டம்" என்ற சட்டத்தை இயற்றி, இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைத்து, சட்டத்தை நிறைவேற்றி பிரிவினைவாத கருத்துக்களை செயலற்றுப் போகச் செய்தது. சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கமுடியாமல் மொழியையும் கலாச்சாரத்தையும் காப்பது என்பதை தங்களது கொள்கையாக அறிவித்து, மாநில சுயாட்சி கொள்கை எனப் போராட்டத்தை மாற்றிக் கொண்டனர் அன்றைய தமிழக அரசியல்வாதிகள்.
இக்காலகட்டத்தில் இருந்த இந்த நிலைமையை கண்ணதாசன் தனது பாடல் வரிகளில் இவ்வாறு விளக்கினார்...
சேர சோழ பாண்டிய மன்னர் ஆண்ட தமிழ்நாடு
திராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது
தேனைப் போன்ற தமிழிருக்க வேறு பாஷை எதற்கு
தேசீயம் என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு
தமிழ்நாடு தமிழருக்கே ..... தமிழ்நாடு தமிழருக்கே .....
இது அக்கால தமிழகத்தின் நிலையாக இருந்தது. இருப்பினும், காலம் மாறினாலும் சுதந்திரம் பெற்று இப்பொழுது அரைநூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்டாலும் "தமிழ்நாடு தமிழருக்கே ....." என்ற பழைய போராட்டம் இக்காலத்தில் "தமிழ்த்தேசியம்" என்ற பெயரில் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய போராட்டம் தமிழ்நாடு தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும். வேற்று மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள், தமிழகத்தில் வாழ்ந்தாலும் வேற்று மொழியைத் தாய்மொழியாக பேசிக் கொண்டிருப்பவர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று புதிய திசையில் திருப்பப்பட்டுள்ளது. அன்றைய நாளில் தமிழ் மொழிக்குக் காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலோரை "வந்தேறிகள்" என அடையாளப்படுத்தி அவர்கள் கையில் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற முயலும் ஒரு போராட்டமாக இந்நாளில் மாறிவிட்டிருக்கிறது. இரண்டு காலகட்டத்தின் போராட்டங்களும் வெவ்வேறு வகையில் அமைந்து "தமிழர் நலனுக்காக" எனக் கூறப்படும் "உரிமைப் போராட்டங்கள்" போன்ற தோற்றத்தைத் தருகின்றன. தமிழ்த்தேசியப் போராட்டத்தைப் பற்றிய பல்வேறு கருத்துகள் நிலவினாலும் திராவிடத் தமிழ் தேசியராக அடையாளம் காணப்படும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கீழ்காணும் வகையில் "தமிழ்த்தேசியம்" என்ன என்ற அவரது கோணத்தை விளக்குவது கருத்தில் கொள்ளத் தக்கது.
“ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.”
- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
ஆந்திரம்:
1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் மொழிவாரி மாநிலங்கள் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, இந்தியாவை மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரிக்க திட்டமிடப்பட்ட பொழுது, ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழிருந்த 9 தெலுங்கு மொழி பேசப்படும் மாவட்டங்களும், ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கீழிருந்த 12 தெலுங்கு பேசும் மாவட்டங்களும், ஒன்றியப் பகுதியாக (அல்லது யூனியன் பிரதேசம்) பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த ஏனாம் பகுதியுடன் இணைக்கப்பட்டு 22 மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்களை உள்ளடக்கிய ஆந்திரப்பிரதேசம் என்ற மாநிலம் அமைக்கப்பட்டது. பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் ஆந்திரம் என்ற மொழி அடிப்படையிலான மாநிலம் அமைவதில் பெறும் பங்கு வகித்தார். ஆயினும், 1950 களில் இருந்தே நிஜாம் ஆட்சியின் கீழிருந்த மாவட்டங்கள், தெலுங்கு மொழி உருவானது தங்கள் பகுதி என்றும், தெலுங்கானா என்ற தங்கள் பகுதி, ஒரே மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில் ஆந்திராவுடன் இணைக்கப்படக்கூடாது எனக் கருதினர். இரு பிரிவுகளுக்கும் சமமாக அதிகாரம் பகிர்ந்து கொடுக்கும் உடன்படிக்கை போடப்பட்டு தற்காலிகமாக அமைதி உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை 1969 இல் காலாவதியாகும் நிலையில் அதை நீட்டிக்கக் கோரி தெலுங்கானா மக்கள் இயக்கம் மீண்டும் உயிர்பெற்று போராட்டங்கள் வெடித்தது. ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்று 360 மாணவர்கள் உட்படப் பலர் உயிரிழந்தனர்.
இதனை;
ஆந்திர மக்கள்:
ஆந்திரதேசம் ஆந்திரருக்கே .....
கிருஷ்ணதேவருடன் ராமராயர் எமை
ஆண்ட தேசம் இது ராமையா
ராமையா ..... ராமையா .....
பரததேசம் எனும் பேரில் நீங்கள் அதைச் சேர்த்து வைத்தது என்ன தீமையா .....
தீமையா ..... தீமையா .....
தெலுங்கானா மக்கள்:
ஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய் வாழ்வது முறைதானா
வாழ்வது முறைதானோ
அடிப்போம் பறிப்போம் பிரிப்போம் எமக்கு வேண்டும் தெலுங்கானா
வேண்டும் தெலுங்கானா .....
என்று கண்ணதாசன் இப்போராட்டத்தை எழுதினார்.
இதனைத் தொடர்ந்து ஆந்திர ஆட்சியைக் கைப்பற்ற விரும்புபவர்கள் தனி தெலுங்கான உருவாக்க ஆதரவு தருவாகக் கூறி மக்களைக் கவர முற்படுவது வழக்கமாகிப் போனது. இறுதியாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் (ஜூன் 2, 2014) ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழிருந்த பகுதியைக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா என்ற மாநிலமாகப் பிரிக்கப்பட்டு தனியே செயல் படத் தொடங்கியது.
மகாராஷ்டிரம்:
பால் தாக்கரேவால் 1966 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது சிவசேனா என்ற அரசியல் கட்சி. அந்நிய ஆக்கிரமிப்பை ஒழித்துக் கட்டிய மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியின் சேனை என்ற பொருளில் சிவசேனா என அழைக்கப்பட்டது. 'மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே' என்பது 1960 களில் இப்போராட்டத்தின் முழக்கமாக இருந்தது. தென்னிந்தியர்களுக்கு எதிராக எழுந்த பல போராட்டங்களுக்கும் இது காரணமாக அமைந்தது.
மகாராஷ்டிரம் நமதே .....
சிவாஜி ஆண்ட இம்மராட்டி தேசத்தில் விரோதி வரலாமா?
விடாமல் துரத்து போராட்டம் நடத்து எழுவோம் ஒரு சேனா
கட்டுப்பட்டுச் சுமந்தது போதும்
பட்டுப்பட்டுப் பயந்தது போதும்
மாரைத்தட்டு வீரம் கொட்டு வாழ்க போராட்டம் .....
என்னும் அவர்களது முழக்கத்தை தனது பாடல்வரிகள் மூலம் காட்டினார் கண்ணதாசன்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவின் 2008 ஆண்டு தலையங்கம் ஒன்று அமிதாப் பச்சன் போன்ற பாலிவுட் நடிகர்கள், பிறமாநிலங்களில் இருந்து மும்பை வந்து குடியேறி தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள். இவர்கள் மராத்தியர்களுக்காகவும், மகாராஷ்டிரத்தின் நலனுக்காகவும் அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால் பலரது கவனத்தைக் கவர்ந்தது.
பஞ்சாப்:
பஞ்சாபி மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம் பஞ்சாப். 1966 ஆம் ஆண்டில் ஹரியான்வி மொழியினர் அதிகமுள்ள பஞ்சாப் மாநிலத்தின் கிழக்குப் பகுதி ஹரியானா எனப் பிரிக்கப்பட்டது. இந்த இரு மாநிலங்களுக்கும் இடையே சண்டிகர் நகரம் அமைந்திருக்கிறது. இரு மாநிலங்களுமே சண்டிகர் நகரத்திற்கு உரிமை கொண்டாடி போராட்டத்தில் இறங்கின.
இதனை கண்ணதாசனின் கீழ்வரும் வரிகள் காட்சிப் படுத்துகிறது ....
பஞ்சாப் மக்கள்:
பஞ்சாப் நமதே .....
பஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும் பாஞ்சால தேசமடி
பகைவரை எதிர்த்து பட்டாளம் சேர அஞ்சாத தேசமடி
சண்டிகர் என்னும் பொதுநகர் எங்கள் தலைநகர் ஆகுமடி
தரமாட்டோம் அதைவிடமாட்டோம் எனத் துணிந்து சபதம் செய்யடி
ஹரியானா மக்கள்:
ஹரியும் சிவனும் எனப் பிரிந்து பிரிந்து நாம் வாழ்வோம் ஹரியானா
அந்தத் தலைநகரம் எங்கள் தலைநகரம் பஞ்சாப் பெறலாமா?
இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்கும் சண்டிகர் நகரின் உரிமைகோரி இருமாநிலங்களும் கிளப்பிய சர்ச்சையின் காரணமாக, இந்நகரம் இந்திய அரசின் தனி ஒன்றியப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பொழுது இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல.
காஷ்மீர்:
இந்தியாவின் பகுதியாக காஷ்மீரை இணைத்த துவக்கக் காலத்தில் இருந்தே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் காஷ்மீரின் மீதான உரிமைப் போராட்டமும் துவங்கியது. 1965ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தான் போர் இந்த உரிமைப் பிரச்சனையின் அடிப்படையில் நிகழ்ந்த இரண்டாவது இந்திய-பாகிஸ்தான் போர் என்பது குறிப்பிடத் தக்கது. காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என காஷ்மீர் மக்களில் சிலரும் தனிப்பட்ட கருத்து கொண்டிருந்தனர். "சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத்" என்ற அவர்களின் முழக்கத்தை கண்ணதாசனின் வரிகளும் காட்டுகின்றன. ஆனால் இன்றுவரை காஷ்மீரில் அமைதி நிலவவில்லை.
1965 -1969 வரை நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கிய நிகழ்வுகளின் தாக்கத்தில் கண்ணதாசன் இப்பாடலை எழுதினார். அப்பாடல் எழுதப்பட்டு அரை நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இந்திய நாட்டில் உரிமைப் பிரச்சனைகள், பிரிவினைவாத முழக்கங்கள் தொடர்கின்றன.
தன்னைப்போல ஒரு இந்தியராக இருந்தாலும் வெளிமாநிலத்தின் மக்களிடம் நேசக்கரம் கொடுக்கத் தயங்கும் மனநிலை மக்களிடம் காணப்படுகிறது. சாதி, மத, மொழி சச்சரவுகளுக்கோ குறைவுமில்லை. கண்ணதாசன் பாடலில் இறந்துபோன தலைவர்களான காந்தி, நேரு, பாரதி ஆகியோருக்கு உயிர் கொடுத்து அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுவது போல அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஒரே மொழி பேசினால் ஒற்றுமை வளரும் என்று வாதம் செய்து வருபவர் இங்குக் கவனிக்க வேண்டியது ...
ஒரே தெலுங்கு மொழி பேசிய மக்களால் ஏன் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க முடியவில்லை.
எதனால் இறுதியில் மாநிலங்கள் ஆந்திரா தெலுங்கானா எனப் பிரிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது?
மகாராஷ்டிர மாநிலத்தின் ஆட்சி மொழியான மராட்டியுடன், அங்கு இந்தி, குஜராத்தி, பார்சி மொழி, கன்னடம், உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகளும் மக்களால் பேசப்படுகிறது. பள்ளிகளில் மராட்டிய மொழி, ஆங்கில மொழியுடன் இந்தி மொழியும் கற்பிக்கப்படுகிறது, உருதும் கற்பிக்கப்படுகிறது. பல மொழி மக்கள் வாழ்ந்தும், பலமொழிகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டும் அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்ததாகவும் தெரியவில்லை. பிற மாநில மக்கள் குறித்த கசப்புணர்வு சிவசேனாவின் நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.
எல்லோரும் இந்தி கற்பதால், அல்லது எல்லோரும் ஒரே மொழி பேசுவதால் இந்தியாவில் ஒற்றுமை வருமா?
அல்லது பிறர் உரிமையை மதித்து அனைவரும் இந்தியர் என்று அவர்கள் அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் ஒற்றுமை வருமா?
இவை சிந்திக்கப்பட வேண்டிய கேள்விகள். ஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....
தமிழ்மண் இதழில் கட்டுரை ஆசிரியர் கௌதம சன்னா எழுதி வரும் தொடர். கட்டுரை ஆசிரியர் சம்மதத்துடன் மின்தமிழில் வெளியிடப்படுகின்றது.
-சுபா
சேரி.. சாதி.. தீண்டாமை..8
சேரிகளின் தோற்றம் - அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்...
கௌதம சன்னா
1
சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. தீண்டாமையும் உருவானதைப் பற்றின ஆய்வை முன்னெடுத்த முதல் புத்தகம் அது. அதற்கு முன்பு இத்துறைப் பற்றி யாரும் பேசவேயில்லை என்பதால் மிக முன்னோடியான நூல் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் அதற்குப் பிறகும் அத்துறை பெரிதாக வளரவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இதுவரை தீண்டாமையும் சேரியும் உருவான புதிரை விடுவிக்க யாரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. எனவேதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்த நூலில் அம்பேத்கரின் கருத்துக்களை அவரின் எழுத்துகளிலேயே பார்த்தால் கூடுதல் தெளிவு பிறக்கும் என நம்புகிறேன்.
அம்பேத்கர் கூறுகிறார்..
வேறுநாடாக இருந்திருந்தல் இந்தகைய வகுப்பினர் இருந்து வருவது மனாசான்றைக் குத்திக் குடைந்திருக்கும்., அவர்களது மரபு மூலம் பற்றி ஆழமான ஆய்வு நடந்திருக்கும். ஆனால் ஓர் இந்துவின் மனத்தில் இவை இரண்டுமே நிகழவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையானது, சிக்கலற்றது. இந்த வகுப்பினர் இருந்து வருவதை இரங்கத்தக்கதாகவோ, அவமானகரமானதாகவோ இந்து கருதுவதில்லை. இந்தப் பழிபாவத்துக்கு பிராயச்சித்தம் தேடவேண்டும் அல்லது இந்த இழிநிலை எப்படித் தோன்றியது, அது எவ்வாறு வளர்நது வலுப்பெற்றது என்பதை ஆராய வேண்டும் என்றும் அவன் உணர்வதில்லை. அதேசமயம் அவனது நாகரிகம் மிக தொன்மையானது மட்டுமல்ல, பல அம்சங்களில் ஈடுஇணையற்றது, தன்னிகரில்லாதது என்று ஒவ்வொரு இந்துவும் போதிக்கப்படுகிறான். தனது நாகரிகத்தைப் போற்றிப் புகழ்வதிலும், தலைமீது தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதிலும் எந்த இந்துவும் ஒருபோதும் சலிப்பதில்லை, சளைப்பதில்லை. இந்து நாகரிகம் மிகப் பழமையானது என்று கூறப்படுவதைக் புரிந்துக் கொள்ள முடியும். அதனை ஏற்கவும்கூட முடியும். ஆனால் இநது நாகரிமம் தன்னிகரில்லாதது, ஒப்பற்றது என்று எந்த அடிப்படையில் உரிமை கொண்டாடப்படுகிறது என்பதைப் புரிந்துக்கொள்வது அவள்ளவு எளிதல்ல. இந்துக்கள் விரும்பாவிட்டலும், இந்துக்கள் அல்லாதவர்களைப் பொறுத்தவரையில் இத்தகைய உரிமையை இந்துக்கள் ஒரே ஓர் அடிப்படையில்தான கொண்டாட முடியும். இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ள இந்த வகுப்பினர் (தீண்டத்தகாதவர்) இருந்து வருதே அந்த அடிப்படை.. அத்தகைய வகுப்பினர் இருந்து வருவது ஒரு தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுப்போக்கு என்பதில் ஐயமில்லை. எனவே எந்த இந்துவிடம் இதனைக் கிளிப்பிள்ளைப்போல திருப்பத் திருப்பகூற வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இதனை யாரும் மறுக்கமாட்டார்கள். இது பெருமிதம் கொள்வதற்குப் பதிலாக வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம் என்பதை இந்துக்கள் உணர வேண்டும். (அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் தொகுதி 14 பக்கம் 2)
அம்பேத்கரின் ஆதங்கம் தெளிவானது என்பது மட்டுமல்ல, அது இன்னமும் கண்டுக்ககொள்ளப்படாமலே இருக்க்கிறது என்பதுதான் மிக முக்கியமானது. சாதி இந்துவின் மனச்சான்று விழித்துக்கொள்வதற்கு பதில் நாளும் நாளும் அது அதளபாதால இருட் குகைக்கள் நீளப் போய்கொண்டே இருக்கிறது.
2
சரி இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம். அம்பேத்கரின் கருத்துக்ளின் படி கிராமம் எப்படி இரண்டாக தோன்றியது அல்லது கிராமத்தில் சேரிகள் எப்படி உருவாயின அவை எவ்வாறு பல்கிக் பெருகின, எப்படி செயல்பட்டன, எவ்வாறு பரிமாணம் அடைந்தன என்பதை பார்க்க வேண்டும்.
அம்பேத்கரின் ஆய்வில்.. தொடக்ககால மனிதக் கூட்டம் நாடோடியாகவே அலைந்துக் கொண்டிருந்தது என்பது முதல்படி. ,இரண்டாவது அலைந்துக் கொண்டிருந்த மக்களில் ஒரு குழு ஒரிடத்தில் நிலையாக தங்கி தமது வாழ்விடத்தை அமைத்துக் கொண்டது. அதன்படி ஆதிகால மனித சமூகம் இரண்டாக பிரிகின்றது. அதாவது அலையும் ஒரு மக்கள் கூட்டம். நிலைபெற்று வாழத் தொடங்கிய ஒரு மக்கள் குழு. இந்த இரண்டு குழுக்களையும் அம்பேத்கர் பின்வருமாறு அழைக்கிறார்.
1. பூர்வீக நாடோடி (Nomadic communities) அல்லது சிதறடிக்கப்பட்டக் குழு (Broken Men)
2. நிலையமர்ந்த குழு அல்லது நவீனகாலக் குழு (Modern Society)
மேற்கண்டக் குழுக்களின் இயல்புகளை அம்பேத்கர் பின்வருமாறு விளக்குகிறார்.
பூர்வீக சமுதாயம் (Primitive Society) நாடோடி (Nomadic communities) சமூகங்களைக் கொண்டிருந்தது. நவீனகால சமூதாயமோ (Ancient Modern Society) குடியமர்ந்த சமுகங்களைக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பூர்வீக சமுதாயம் குருதி உறவுகளைக் கொண்ட குலமரபு சமூகங்களைக் கொண்டிருந்தது. நவீனகால சமுதாயமோ பிரதேசப் பற்றுதல் கொண்ட ஸ்தல சமுகங்களைத் தன்னுள் கொண்டிருந்தது. வேறுவிதமாகக் கூறினால் பூர்வீக சமுதாயம் நவீன கால சமுதாயமாக மாறுவதாற்கு முன்னர் இரு பரிணாம வளர்ச்சி மார்க்கங்களை மேற்கொண்டது. ஒரு பரிணாம வளர்ச்சி மார்க்கம் பூர்வீக சமுதாயத்தை குலமரபு குழுவிலிருந்து பிரதேசக் குழுவாக மாற்றியிருக்கிறது. (அ எ பே .தொ 14.ப 52)
மேற்கண்ட இரண்டு பிரிவுகள் மனித குல வரலாற்றின் இயக்கத்தையும், எதிர்காலத்தையும் நிர்ணயித்தன. அந்த இரண்டு குழு என்பது இரண்டு மட்டுமே அல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். உலகம் முழுதும் இப்படிப்பட்டக் குழுக்கள் கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப முன்னம் பின்னுமாக உருவாகிக் கொண்டிருந்தன. மனித குல வரலாற்றில் இந்தியத் துணைக் கண்டத்தில் இது சுமார் ஐம்பாதாயிரம் ஆண்டு காலத்திற்கு முன் உருவாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இப்படி உருவான இந்த இரண்டு குழுவின் முரண்பாடுகள் எவ்வாறு இயங்கின என்பதைப் பற்றி அம்பேத்கர் பின்வருமாறு விளக்குகிறார்.
பூர்வீக சமுதாயம் இவ்வாறு குலமரவு அமைப்பை (Totem) அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது இரண்டு விஷயங்களைக் குறித்தது. முதலாவதாக, பூர்வீக சமுதாயத்தில் ஒவ்வொரு தனி நபரும் ஒரு குலமரபைச் சேர்ந்தவராக இருந்தான். இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு அவன் ஒரு குலத்தைச் சேர்ந்தவனாக இருப்பது அவசியம். குலத்துக்கு வெளியே எந்தத் தனிநரும் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அவன் சுத்த பூஜ்ஜியம்தான். இரண்டாவதாக, குலமரபு அமைப்பானது பொதுக் குருதித் தொடர்பு, பொதுப் பண்பொற்றுமையின் அடிப்படையில் அமைந்திருந்ததால் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் இன்னொரு குலத்தில் சேர்ந்து அதன் அங்கமாக மாற முடியாது. எனவே சிதறுண்ட சமூகத்தினர் ஆங்காங்கு தனித்தனி நபர்களாவே வாழ வேண்டியிருந்தது. ஒரு குலம் இன்னொரு குலத்தை எதிர்த்துப் போராடி வந்த பூர்வீக சமுதாயத்தில் சிதறுண்ட தனிநபர்களின் ஒரு திரள் இருந்து வருவதானது அத்திரள் தாகுதலுக்குள்ளாகும் அபாயம் எப்பேதுமே இருந்து வந்தது. இந்நிலைமையில் எங்குபோய் புகலிடம் தேடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. யார் தங்களைத் தாக்குவார்கள் என்பதும், பாதுகாப்பாக யாரை நாடிச் செல்வது என்பதும் அவர்களுத் தெரியவில்லை. எனவேதான் புகலிடம் தேடுவதும் பாதுகாப்பு நாடுவதும் சிதறுண்ட பிரிவினரின் பிரச்சனையாக உருவெடுத்தது. (அஎபே .தொ 14.ப 56)
மேற்கண்ட அமைப்பில் குலமரபு என்பதை எப்படி விளங்கிக் கொள்வது. மானுடவியல் ஆய்வுகளில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இதைப் புரிந்துக் கொள்வது எளிதாயிருக்கும். ஆனால் சாதராண வாசகர்களுக்கு தெளிவிற்காக சிறிது விளக்கம் தேவைப்படுகிறது. பொதுவாக குலமரபு என்பது தற்காப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றாகும். தமது ரத்த உறவிற்குள் மட்டுமே அனைத்து சமுக நடவடிக்கைகளையும் பின்பற்றுவதாகும். ரத்த உறவற்ற பிறரை அந்நியராகவே கருதுவது குலமரபு குழுவின் இயல்பு. அதில் பிறப்பு, பூப்படைதல், திருமணம், இறப்பு, சடங்குகள், வாழிட எல்லை, அவைகளைக் குறியிட்டுக் காட்டும் அடையாளக் குறியீடுகள் அல்லது சின்னங்கள் இவை மிக முக்கியமானவை. இவையே பிற்காலத்தில் தீட்டு என்ற கருத்ததாக்கத்திற்குள் வந்தவை. ஒரு குலமரபின் குழுவிற்குள் இவை அத்தனையும் கட்டுப்படுத்தப்பட்ட விதிகளுக்குள் கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் விலக்கப்படவோ அல்லது கொல்லப்படவோ கூடும். இப்படி கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதின் மூலம் வேறு ஒரு குழுவோ அல்லது அலையும் நாடோடிக் குழுவோ தம் குழுவில் இணைவதை எளிதில் தடுக்க முடியும். அதுவுமன்றி பிற குழுக்களை எளிதில் இனம் காண முடியும். இதில் உள்ள முக்கிய வேறுபாடு என்னவெனில் அலையும் நாடோடிக் குழுவும் இதுபோன்ற குலமரபு கூறுகளை வைத்திருந்தாலும் அதற்கு பிரதேச எல்லை என்பது கிடையாது. அதனால் அலையும் போது எளிதில் கலப்புகளும் அழிவுகளும் நேர்கின்றன. அதனால் அது எப்போதும் பாதுகாப்பற்ற நிலையிலேயே அலைந்துக் கொண்டிருக்கிறது. இதுதான் அக்குழுவினை ஒரு நிலையான இடத்திற்கு நோக்கித் தள்ளுகிறது. அப்படியானால் அலையும் குழுவிற்கும் நிலையமர்ந்த குழுவிற்குமான பிரச்சினை எப்படி உருவாகியிருக்கும் என்பதை அனுமானித்தால் இந்த கருத்துக்கு தெளிவினைப் பெற முடியும். அது குறித்து அம்பேத்கர் கூறுவதைப் பார்ப்போம்.
நாம் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டாவது விசயம், குலங்கள் பாஸ்பரம் ஒன்றுடன் ஒன்று சமாதானமாக அமைதியாக வாழ்ந்ததில்லை. எப்போதும் அவை சண்டை சச்சரவில் ஈடுபட்டிருந்தன. அனைத்துக் குலங்களும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தபோது அவற்றிடையே போர்கள் நிகழ்வதற்கு பின்வரும் மூன்று பிதரான காரண¢ங்கள் இருந்தன.
1.கால்நடைகளைக் கவர்ந்து செல்வது
2. பெண்களைக் கடத்திக் செல்வது
3.. மற்ற குலங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை திருட்டுத்தனமதாக மேய விடுவது. (அஎபே தொ.14 பக் 54)
இந்த பிரச்சினையை நாடாடிக் குழுக்கள் மட்டும் சந்திக்கவில்லை. ஏற்கெனவே நிலையமர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் குலக்குழு கூடுதலாக எதிர்கொண்டது. அதற்கான காரணம் பின்கண்டவாறு இருந்தது.
..குடியமர்ந்த குலத்திடம் இரண்டு மடங்கு செல்வச்செழிப்பில் மிதப்பதை நாடோடிக் குலத்தினர் தெரிந்துக்கொண்டன்ர. நடோடிக் குலத்தினரைப் போன்றே இவர்களிடம் ஏராளடமன கால்நடைகள் இருந்தன. கால்நடைகள் மட்டுமின்றி, தானியங்கள் மிகுந்திருந்தன, இவை நாடோடிக் குலத்திடடம் இல்லை. எனவே அவர்கள் தானிய மணிகள் மீது பெரிதும் நாட்டம் கொண்டிருந்தனர். குடியமர்ந்த குலத்தினரின் செல்வங்களைக் கவரும் நோக்கத்தாதேடு நாடோடி குலத்தினர் அவர்கள் மீது திட்டமிட்டு பல தாக்குதல்களைத் தொடுத்து வந்தனர். இதிலுள்ள மூன்றாவதொரு அம்சத்தை இங்கு குறிப்பிட வேண்டும். குடியமர்ந்த குலத்தினர் அதிக ஆதாயம் தரும் தொழிலில் ஈடுபட்டிருந்தததால் அவர்களால் தங்கள் கலப்பைகளை போர்வாளா மாற்ற முடியவில்லை. தங்கள் இல்லங்கலிருந்து வெளியேறி திடீர்த் தாக்குதல் தொடுக்கும் குலத்தினரைத் துரத்திச் சென்றறு அவர்களுடன் பொருதவும் இயலவில்லை. (அ எ பே தொ14 ப 55)
இது ஒரு பிரச்சனையென்றால். மற்றொரு பிரச்சனையானது அலையும் நாடோடிக் குலங்களுக்குள் உருவானதாகும். அதில்தான் சிதறுண்டக் குழுவினர் உருவாகியிருக்கின்றனர். அதை மிக முக்கியமானதமாக அம்பேத்கர் கருதுகிறார்.
ஆரம்பக் கட்டத்தில் பல்வேறு குலமரபு குழுவினரும் தங்களுக்குள் ஓயாது ஒழியாது போரிட்டுக் கொள்வது சகஜமாயிருந்தது. அதிலிருந்த எழுந்ததே சிதறுண்டக் குழுவினரின் பிரச்சனை. ஒரு குலப்போரில் எந்த ஒரு குலத்தினரும் பூண்டோடு ஒழித்துக் கட்டப்படுவதில்லை. மாறாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு நிலைகுலையச் செய்யப்படுகின்றனர். இவ்வாறு தோற்கடிக்கப்பட்ட குலத்தினர் பல நேர்வுகளில் துண்டு துண்டாக சிதறுண்டு போயினர். இதன் விளைவாக ஆரம்ப காலத்தில் சிதறுண்ட குலத்தினர் அடங்கிய ஒரு பிரிவினர் எல்லாத் திசைகளிலும் சுற்றி திரிந்தனர். சிதறுண்ட குலத்தினர் பிரச்சினை எழுவதற்கு என்ன காரணம் என்பதைப புரிந்துக் கொள்வதற்கு பூர்வீக சமுதாயம் அடிப்படையில் ஒரு குலமரபு அமைப்பாக இருந்து வந்தது என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.(அ எ பே .தொ 14.ப 55)
இப்படி சிதறடிக்கப்பட்ட குலமரபுக் குழுவைச் சேர்ந்தவர்கள் தனித் தனி நபர்களாகவோ அல்லது மிகச்சிறு குழுவாகவோ அலைந்தனர்.. அவர்களுக்கு பல பிரச்சினைகள் உருவாயின. அவற்றுள் முக்கியமானவை உணவுப் பிரச்சினை. அவர்கள் உணவிற்காக வேட்டையாடலாம். வேட்டைக்காக விலங்ககுளை பின்தொடர்ந்துப் போகலாம். அப்படி போகும்போது ஏற்கெனவே அலைந்துக் கொண்டிருக்கும் பெரிய குலத்தையோ அல்லது பெரிய நிலையமர்ந்த குலத்தையோ அவர்கள் எதிர் கொள்ள வேண்டும். இதனால் உயிருக்கு உத்திரவாதமில்லை. எந்நேரமும் எச்சரிககையுடன் இருக்க வேண்டும். அல்லது அடந்த காடுகளில் நுழைந்து காட்டுவாசிகள் வாழ்க்கையை மேற்கொள்ளலாம். அப்படி மேற்கொள்ள வேண்டுமானால் மிருகங்களின் தாக்குதலை சமாளிக்கும் அளவிற்கு குழு பலம் வேண்டும். தனிநபராக காட்டில் அலைவது தற்கொலைக்குச் சமம். எனவே சமவெளிகளில் அலையும் ஏதாவது ஒரு குழுவிடம் சேர்வதோ அல்லது நிலையமர்ந்த ஒரு குழுவிடம் சேர்வதே ஒரு தற்காலிக பாதுகாப்பாகவும் இருக்கலாம். ஆனால் அலையும் ஒரு சிறு குழு குலமரபுக் குழுவாக இருப்பதால் புதிய ஆட்களை சேர்த்துக் கொள்வது கடினம், அதற்கு குலமரபு விதிகள் இடம் தராது. தனி நபர்களாய் இருந்தால் குறைந்தப் பட்ச பாதுகாப்பின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து ஒரு புதிய குழுவாக மாறி தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இது ஒரு வாய்ப்பு. அப்படி சேரும்போது அது ஒரு வலுவுள்ள குழுவாக மாறுவதற்கு பல காலம் பிடிக்கும். அப்படி பல குழுக்கள் உருவாயின.
எனினும் சிதறுண்ட பிரிவினர் நிலைத்த இடம் நோக்கி, பாதுகாப்பு, உணவினை தேடி அலைந்துக் கொண்டிருந்தனர். அது ஒரு குழுவோ பல குழுக்களோ எப்படியாயிலும் அவற்றின் அலைச்சல் அதன் விதியாக இருந்தது. இப்படி அலையும் குழு தம்மைப் பாதுகாத்துக் கொள்ள செயல்பட்ட விதியினை அம்பேத்கரின் ஆய்விலிருந்தே பெற்றுக் கொள்ளலாம். சாதி உருவான போது “போலச் செய்தல் விதி” செயல்பட்டுள்ளதை நிறுவியிருக்கிறார். அந்த விதியை இங்கு பரிசோதித்துப் பார்த்தால் அது வலுவாக செயல்பட்டிருப்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
போலச் செய்தல் விதியென்பது ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு போக்கினை அல்லது மாதிரியினைப் பின்பற்றுவதாகும். அதன்படி அலைந்துக் கொண்டிருக்கும் சிதறடிக்கப்பட்ட குழுவிற்கு பாதுகாப்பு உள்ளிட்ட இத்யாதிகள் கிடைக்க வேண்டுமாயின் ஏற்கெனவே நவீன சமுதாயமாக மாறிவிட்ட நிலையமர்ந்த சமுகத்தைப் போல தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு நிலையான ஓர் இடத்தை கண்டுப் பிடிப்பது மட்டுமின்றி, நிலைபெற்ற சமுகத்தின் உற்பத்தி உள்ளிட்ட பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டியிருக்கும். அல்லது அந்த குலத்தை போரிட்டு விரட்டிவிட்டு அவ்விடத்தை கைப்பற்றிக் கொள்ள வேண்டும். இதில் இரண்டாவது எளிதாக இருக்கும். ஆனால் அது தற்காலிகமாக இருக்கும். ஏனெனில் போர்கள் தவிர்க்க இயலாத அம்சமாக தொடர்ந்து மாறிவிடும் எனவே ஒரு மாற்று ஏற்பாடு அவசியமாகிறது. அந்த மாற்று ஏற்பாடு எல்லா இடத்திலும் நிகழ்ந்தது என்று பொருளில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் முதலில் தோன்றியிருக்கலாம் என்று அனுமானித்துக் கொள்ள முடியும். அது எப்படி நடந்தது என்பதைப் பற்றி தமது நூலில் அம்பேத்கர் தெளிவுப் படுத்தியுள்ளார். அதில்..
இங்கு அடுத்த கேள்வி எழுகிறது. இவ்விரு குழுக்களும் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு கண்டன.? இரு தரபுகளும் மக்கள் ஒரு பேரம் செய்துக் கொண்டு, இப்பிரச்சினைகளுக்கு முடிவுக் கட்டினர். இதன்படி குடியமர்ந்த குலத்தினருக்கு காவல் பணி புரிய சிதறுண்ட பிரிவினர் ஒப்புக் கொண்டனர். இதற்குப் பிரதிபலனாக இவர்களுக்கு உணவும் புகலிடமும் தருவதற்கு குடியமர்ந்த குலத்தினர் இணக்கம் தெரிவித்தனர். முக்கியமாக பரஸ்பரம் ஒருவர் ஒத்துழைப்பு மற்றவருக்குத் தேவைபடும் நிலைமையில் இத்தகைய ஓர் உடன்பாடு ஏற்பட்டிருக்கவில்லை என்றால் அது இயற்கைக்கு மாறானதாக இருந்திருக்கும்.. (அஎபே .தொ 14.ப 57)
அம்பேத்கரின் இந்த கருதுகோள் மிக முக்கியமானதாகும். இதுபோன்ற உடன்பாடு நிகழ்ந்திருப்பதை உலகில் பல இடங்களில் நாம் காண முடியும். இந்த உடன்பாட்டிற்கு வராமல் போனால் அலையும் குலமரபுக் குழு பாதுகாப்பின்றி மீண்டும் தமது நாடோடி வாழ்க்கையை தொடங்க வேண்டியதிருக்கும். எனவே உயிர் வாழ்க்கையின் நெருக்குதல் அவர்களை இணங்கி வாழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதில் உருவாகின்ற இடர் என்ன. புதிதாக வந்த நாடோடிக் குழு ஒரு குலமரபுக் குழுவாகவோ அல்லது பலர் குல மரபைத் சேர்ந்தவர்களின் தொகுப்பாவோ இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஒப்பந்தம் செய்துக் கொண்ட நவீன குழுவுடம் நேரடியாக இணைய முடியுமா என்பது ஐயமே. ஏனெனில் குலமரபு விதிகள் அதற்கு இடம் தராது. அவர்களால் ரத்தக் கலப்பு உருவாகி நிலைத்து வாழும் குழுவிற்குள் பிரச்சினைகளும், குழப்பங்களும் உருவாகலாம். அதனால் பாதுகாப்பிற்கு வந்தவர்களால் கேடுகளே பெருக வழி பிறக்கும். இந்நிலையில் இப்பிரச்சினை எப்படி கையாளப்பட்டிருக்கும் என்பதற்கு அம்பேத்கர் தரும் விளக்கம்தான் கிராமத்திற்கு வெளியே புது குடியிறுப்பை அல்லது சேரியை உருவாக்க வழிவகுத்தது. இது குறித்து அம்பேத்கர் பின்வருமாறு கூறுகிறார்.
தீண்டப்படாதவர்கள் ஏன் கிராமத்திற்கு வெளியே ஏன் வசிக்கிறார்கள் என்ற பிரதான கேள்விக்கு இப்போது வருவோம். இந்தக் கேள்விக்கான பதிலை மேலே கண்ட விளக்கங்களிலிருந்து பெற முடியும். இந்து சமுதாயம் ந«£டாடி வாழ்க்கை முறையிலிருந்து குடியமர்ந்த கிராம சமுக வாழ்க்கை முறைக்கு மாறிக் கொண்டிருந்தபோது இந்தியாவில் இதே நிகழ்வுப் போக்குகள் நடைபெற்றிருக்க வேண்டும். பூர்வீக இந்து சமுதாயத்தில் குடியமர்ந்த குலமரபுக் குழுக்களும், சிதறுண்ட பிரிவினரும் இருந்திருக்க வேண்டும் குடியமர்ந்த குலங்கள் கிராமத்தையும் கிராம சமுகத்தையும் உருவாக்கின. சிதறுண்ட பிரிவினர் வேறுபட்ட குலத்தையும் வேறுபட்ட குருதி உறவையும் கொண்டவர்களாதலால் கிராமத்திற்கு வெளியே வசித்து வந்தனர். இவ்வகையில் பார்க்கும்போது தீண்டப்படாதவர்கள்தான் ஆதியில் சிதறுண்டப் பிரிவினராக இருந்தனர் என்று கூறலாம். அவர்கள் சிதறுண்டப் பிரிவினராக இருந்ததால்தான் கிராமத்துக்கு வெளியே வசித்தனர்.
மேற்கண்ட தமது கருத்தை நிலைநிறுத்த அம்பேத்கர் இரண்டு சான்றுகளைத் தருகிறார். ஒன்று பழைய இந்து சாத்திரங்களிலிருந்தும் மற்றும் அவர் காலத்திய சான்றான மகர்களிக்கு சாதி இந்துக்களும் இடையிலான் சமூக ஒப்பந்தத்தையும் சுட்டிக் காட்டுகிறார். அதனைச் சுறுக்கமாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் ஒரு பரந்துப்பட்ட பார்வை பெற முடியும்.
இந்து சாத்திரங்களிலி குறிப்படும் அந்த்யாக்கள், அந்தயஜாக்கள், அந்த்யாவாசின்கள் என்று குறிப்பிடப்படும் பெயர்கள் வர்ண சமுகத்தில் கடைசியாக உள்ள வர்ணத்தைச் சேர்ந்தவனையே குறித்தது என்று ஆய்வாளர்கள் சொல்லி வந்ததை அம்பேத்கர் மறுத்து அந்த வார்த்தை கிராமத்திற்கு வெளியே அல்லது கடைசியில் வசிப்பவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று தமது வாதத்தை முன்வைக்கிறார்.
அடுத்தச் சான்று சிதறுண்டப் பிரிவினர் தீண்டத்தகாதவர்களான மகர்கள் எனப்படும் சமுகத்தவரை ஒத்தவர்களாக இருந்தனர் என்பதைப் பற்றினதாகும். மகராட்டிரத்தில் மகர்கள்தான் பெரும்பான்மையினர். அவர்கள் கிராமங்களின் கடைசியில் அல்லது தனிச் சேரியில் வாழ்ந்தாலும் சாதி இந்துக்களிடமிருந்து அவர்களுக்கு 52 வகையான உரிமைகள் கிடைத்தன. அதில் முக்கியமானவை 3 என்று அம்பேத்கர் குறித்திருக்கிறார். அது பண்டைய காலத்தில் நாடோடி குலமரபுக் குழு பெற்ற உரிமைகளைப் போன்று இருப்பதால் அதை முன்வைக்கிறார். அதில்..
1. கிராமவாசிகளிடமிருந்து உணவு பெறும் உரிமை
2. அறுவடைக் காலத்திலி ஒவ்வொரு கிராமவாசியிடமிருந்தும் தானியங்களை பெறும் உரிமை.
3. கிராமவாசிகளுக்கு சொந்தமான செத்த விலங்குகளை தங்களுடையதாக்கிக் கொள்ளும் உரிமை. (காண்க - அஎபே .தொ 14. ப60-61)
இவை போதிய தகவல்கள் அல்லாவிட்டாலும் தீண்டத்தாகதவர்கள் ஆம்பம் முதலே கிராமத்துக் வெளியே வசித்து வந்தனர் என்ற கருத்துக்கு ஆதரவாக இவை சில சான்றுகளை அளித்துள்ளன. அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற காரணத்திற்காக கிராமத்தைதவிட்டு வலுக்ட்டாயமாக வெளியேற்றப்படவில்லை. கிராமத்திற்கு வெளியேதான் வசிக்க வேண்டும் என்று அவரகள் எவ்வகையிலும் நிர்பந்திக்கபபடவில்லை. தொடக்க காலம் முதலே அவர்கள் கிராமத்திற்க்கு வெளியே வசித்து வந்தார்கள் என்றால் குடிபெயர்ந்த குலத்திடமிருந்து வேறுபட்டதொரு குலத்தைச் சேர்ந்த சிதறுண்டவர்களாக அவர்கள் இருந்ததே இதற்கு காரணம். (அ எ பே .தொ 14.ப 62)
அதே நேரத்தில் இந்த புதிய குடியிறுப்பில் வசித்தவர்களுக்கும் தீண்டாமைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ஆக, தீண்டத்தாகதவர்கள் ஆரம்பம் முதலே கிராமத்துக் வெளியேதான் வசித்து வந்தனர், அவர்கள் கிராமத்திற்கு வெளியே வசிப்பதற்கும் தீண்டாமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ஊகிப்பது முற்றிலும் இயல்பானதே என்பதை இதிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம். (அ எ பே .தொ 14.ப 57-58)
இப்படி உருவான கிராமத்திற்கு வெளியேயான தனிக் குடியிறுப்பு மற்ற இடங்களில் அல்லது இந்தியத் துணைக்கண்டத்தில் எல்லா கிராமங்களிலும் எவ்வாறு பரவியிருக்கும் என்பதற்கான பதிலைப் பெற வேண்டும். அதற்கு அம்பேத்கரின் போலச் செய்தல் விதியைத்தான் பயன்படுத்த முடியும். ஒரு முன்மாதிரி உருவாகிவிட்டால் அது மற்ற சமுகங்களிடையே பரவுவது ஒன்றும் கடினமல்ல. நிலைநிறுத்தப்பட்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டினை நிலையமர்ந்த குழுவுக்கு அனுகூலமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தேவைப்பட்ட நேர்வுகளில் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த சமுக ஒப்பந்தமானது போலச்செய்தல் விதியாக மாறி பிற சமுகங்களை பற்றி இந்தியா முழுமைக்கும் பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு பரவியிருக்கிறது. சொல்லப்போனால் அண்மைக்காலம் வரை செயல்பட்டுக் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் உள்ளடக்கம் எல்லா நேரத்திலும் ஒரே நோக்கத்திற்காக மட்டும் இருக்கு வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை புரிந்துக் கொண்டால் பிரச்சினையில் மூலத்தைப் புரிந்துக் கொள்வதும் எளிதாகும்.
அம்பேத்கர் அவர்களின் இந்த முடிவுகள் சேரி எவ்வாறு உருவாகியிருக்கும் என்பதைப் பற்றின ஒரு தீர்மானகரமான முன்வைப்பு. அடிப்படையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முழுமையானது அல்ல என்பதை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். அது நிச்சயம் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று ஆய்வு என்பது அது பின்னாளில் நடக்கும் என்று நம்பினார். கெடுவாய்ப்பாக அது சாதி இந்துக்கள் மத்தியில் இன்னும் வளரவில்லை என்பது சோகமான உண்மை. எனவே இந்த ஆய்வில் அதை நாம் தொடரப் போகிறோம். அம்பேத்கர் தொட்டுக்காட்டிய ஆய்வின் முடிவினை அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குவது அவரது ஆய்வுத் துறைக்கு செய்யும் ஒரு பங்களிப்பு மட்டுமல்ல., வரலாற்றின் மறைந்த பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாகும்.
எனவே இது வரை பார்த்தக் கருத்துக்களை தொகுப்பாக பார்த்துக் கொள்வோம்.
மனித இன தொடக்க வரலாற்றில் குலமரபு குழுக்கள் உருவாயின.
அவை தொடர்ந்து போரிட்டுக் கொண்டன.
அவற்றில் சில நிலையாக தங்கி நவீன சமுகமாக மாறின. சிலது நாடோடிகளாக அலைந்தன.
இந்த இரண்டு குழுக்களின் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக தமக்குள் ஒரு ஒப்பந்ததை உருவாக்கிக் கொண்டு இரண்டு குடியிறுப்புகளாக கிராமம் உருவானது.
இரண்டு குடியிறுப்புகளுக்கும் குலமரபு வேறுபாடுகள் மட்டும் இருந்தனவே தவிர எந்த விதத்திலும் தீண்டாமை என்பது இல்லை. அது உருவாக இன்னும் பலகாலம் இருக்கிறது.
மேற்கண்ட முடிவுகள் முழுமையானதல்ல என்பதும் அம்பேத்கர் சொன்னதுபோல சில குறைபாடுகளும் இருக்கின்றன. அதே நேரத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றை தற்கால ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அவை என்ன...?
தமிழ்நாட்டில் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இரண்டு நிலைகளைக் காணமுடிகிறது. ஒன்று, தாமே பூமியில் வந்து பிறந்து அருள்செய்யும் தெய்வங்கள் மற்றது இறந்தவர்கள் தெய்வமாக்கப்படுவது. தற்கொலை,கொலை,விபத்து,வீரமரணம் போன்ற நிலைகளில் இறந்தவர்களுக்குக் கோயில்கட்டி வழிபடுகின்றனர். இத்தெய்வங்கள் நாட்டார் தெய்வங்கள்,கிராம தேவதைகள்,சிறுதெய்வங்கள் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.இவற்றின் வழிபாட்டு முறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. “கழுந்திரட்டு” அல்லது “கீழுவடி” வழிபாடு என்பது இறந்த ஒரு வீரனின் வழிபாடாகும்.
கழுந்திரட்டு வீரன் கதைகள்: சாத்தான்குளம் பகுதியில் கன ஆய்வு மேற்கொண்டபொழுது கழுந்திரட்டுப் பற்றிய கதைகளை அறியமுடிந்தது. அக்கதைகள் யாவும் கழு ஏற்றப்பட்ட ஒரு வீரனின் வரலாறாக உள்ளன.
1. சாத்தாவி நல்லூரைக் கடம்பராஜா என்பவர் ஆண்டு வந்தார்.அவரது அரசவையில் இருந்த அழகான வீரன் ஒருவன், அரசனின் மகள் மீது காதல் கொண்டான். இளவரசியைக் கற்பழித்தான் என்று அரசனால், கழு ஏற்றப்பட்டான்.கழுவில் நின்ற அவன் தெய்வமாகிவிட்டான்.
2. திருக்களூரில் பிறந்த உடையார் தென்காசி மன்னன் சீவலமார்பனின் நம்பிக்கைக்கு உரிய வீரனாகத் திகழ்ந்தான். மன்னன் அவன்மீது மிகுந்த பற்றுடையவராக இருந்தார். இதனால் பொறாமை கொண்ட அமைச்சர்கள் அரசன் எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளன்று அவரது முத்திரை மோதிரத்தை உடையாரின் உடைவாள் உரையில் சூழ்ச்சியாக வைத்துவிட்டனர். உடையார் குற்றம் சாட்டப்பட்டு கழு ஏற்றப்பட்டார். அவர் தெய்வமானார். 3. டாக்டர். தி.நடராசன் "உடையார் கதை" என்ற வில்லுப்பாடலை பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திருக்களூர் என்னும் கிராமத்தில் சங்கரமூர்த்திக் கரையாளர், தன்னப்பெத்தாள் இருவரும் திருமணம் ஆகிப் பலவாண்டு காலம் குழந்தையின்றி இருந்தனர். திருக்களூர் கோவிலுக்குத்
திருவிழா நடத்தி "உடையார்" என்ற மகனைப் பெற்றனர். பூச நட்சத்திரத்தில் பிறந்த அவன் மோதிரம் ஒன்றால் இறப்பான் எனச் சோதிடம் மூலம் அறிந்தனர். பல கலைகளையும் கற்று அழகனாகத் திகழ்ந்த உடையார் மீது நல்லதங்கை என்ற இடைக்குலப்பெண் மோகம் கொண்டாள். உடையாரின் வீரம் தென்காசி ஸ்ரீவல்லபாண்டியனுக்குத் தெரிய வந்தது. மன்னன் உடையாரைக் காண விரும்பினார். உடையாரின் பெற்றோர் அவனைத் தென்காசிக்கு அனுப்ப விரும்பவில்லை. உடையார், பெற்றோர் சொல்லை மீறி தனது துணையாக சிறுவன் ஒருவனுடன் தென்காசி சென்றார். அங்கு தாசிகள் தெருவில் தங்கினார். இலைவாணிப் பெண் அனைஞ்சி, செட்டிப் பெண் பூவனைஞ்சி ஆகியோருடன் மகிழ்ந்திருந்தார். அரசனிடம் சென்று தனது எண்ணெய் காப்பு சாத்தும் திறனைக் காட்டினார். அரசன் மகிழ்ந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். அரசனின் மனைவி நீலக்கன்னி உடையார் மீது மோகம் கொண்டாள். அவன் அஞ்சினான். பெண் வேடத்தில் அந்தப்புரத்திற்கு வரச்சொன்னாள். உடையார் பெண் வேடத்தில் சென்று அரசியுடன் மகிழ்ந்திருந்தார்.
உடையாரின் புகழ், பெருமை இவற்றைக் கண்ட அமைச்சர்கள் பொறாமை கொண்டனர். எண்ணெய்க் காப்பு சாத்தும் மறத்தலைவனின் துணையுடன் அரசனின் முத்திரை மோதிரத்தை உடையாரின் உடைவாளின் உறையில் மறைத்து வைத்தனர். அரசன் முத்திரை மோதிரத்தைத் தேடினான். உடையாரின் உடைவாள் உறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. உடையார் அதிர்ச்சி அடைந்தார். தனக்குக் கழு அமைக்க இரும்பு வேண்டினார். அரசன், அரசி, பெற்றோர், ஊரார் கழு ஏற வேண்டாம் எனத் தடுத்தனர். உடையார் கழு அமைத்தார். உடையாருடன் சென்ற சிறுவன் தானே உடைவாளை பாய்ச்சி இறந்தான்.உடையார் கழு ஏறினார். உடையார் ஆறு நாட்கள் கழுவில் இருந்தார். நல்லதங்கை அவருக்கு மோர் ஊற்றினாள். நல்லதங்கையிடம் அரசி நீலக்கன்னிக்குச் செய்தி சொல்லி அனுப்பினார். ஏழாவது நாள் உடையாரின் உயிர் பிரிந்தது. அதே நேரத்தில் அரசியின் உயிரும் பிரிந்தது. இருவரும் ஒன்றாகச் சிவலோகம் அடைந்தனர்.
கழுந்திரட்டுப் பற்றிய இக்கதைகள் யாவும் கழுவில் உள்ளவன் சிறந்த வீரன் என்பதனை உணர்த்துகின்றன. கரையனார் என்பது கோனார் இனத்தின் ஒரு பிரிவாகும். உடையார் கோனார் இனத்தவர் என்று கூறுகின்றனர். இவ்வழிபாடு செய்வோர் பெரும்பாலும் கோனார் இனத்தவர்களே.
கழுவடி: பழங்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்ற கழுமரத்தினைப் பயன்படுத்தினர். இக்கழுமரம் கூர்மையான நுனியை உடைய மரம் அல்லது இரும்பால் ஆன தூணாகும். வழுவழுப்பும் கூர்முனையும் கொண்ட தூணின் உச்சியில் தண்டனைக்குரியவரை அமரச் செய்து தண்டனையை நிறைவேற்றுவர். சாத்தான்குளம் பகுதியில் உள்ள கழுவடி தளத்தில் கல்தூண் ஒன்று நடப்பட்டு அதன் கூர்மையான உச்சியில் மனித உருவிலான மரப்பொம்மை வயிற்றில் குத்திய நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இம்மரப்பொம்மை நீண்ட முடியும் வழமையான உடற்கட்டும் கொண்டு விளங்குகின்றது. கோடைவிழாவின் போது கழுமரத்தைச் செப்பனிட்டு புதிய மரப்பொம்மையை கழுவில் ஏற்றுகின்றனர். உடையார் கோவில் வில்லுப்பாடலை ஆய்வு செய்த ஆய்வாளர் கொடைவிழாவில் கழுவேற்றத்தினைச் சேவல் மூலம் நிறைவேற்றுகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாவட்டம் வேளச்சேரி, சூளைமேடு ஆகிய இடங்களில் மதுரை வீரனுக்குக் கழுவடி பூசை நடத்தப்படுகின்றது. அங்கு இரண்டு கம்புகளை நட்டு அதில் கீழிருந்து ஏழு அரிவாள்களைக் குறுக்காகக் கட்டி, மேல்பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு அரிவாள்களைக் கட்டுவர். மதுரைவீரன் சாமி வந்து ஆடுபவர் ஒவ்வொரு கழுவடியிலும் நின்றும் படுத்தும் ஆடுவர். இதனைக் கழுவடி வழிபாடு எனக் கூறுகின்றனர். பூம்புகார் பல்லவன் ஈசுவரன் கோவில் பட்டினத்தூர் வழிபாட்டில் கழுவேற்றுதல் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுகின்றது. தஞ்சை, நாகப்பட்டின பகுதி வட்டார மாரியம்மன் கோவில்களில் கழுவடி மேடை அமைக்கப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.
சாத்தான்குள வட்டார கழுத்திரட்டு வழிபாடு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள கோனார் இனமக்கள் தாம் வழிபாடும் கூவையாடன் பீடத்தின் முன்பு ஒரு கழுந்திரட்டினை அமைத்துள்ளனர். கோயிலுக்கு,வெளிப்புறம் தனியாக ஒரு கழுந்திரட்டினையும் அமைத்துள்ளனர். சுடலைமாடன் கோயில் கொடைவிழாவின் போது கழுந்திரட்டிற்குச் சிறப்பான பூசை நடைபெறுகின்றது. இத்தெய்வத்தினை வழிபடுவோர் தங்கள் வீட்டில் குழந்தைபிறப்பு, பூப்புனித நீராட்டு, திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளின் போது கழுந்திரட்டினை வழிபடுகின்றனர். அச்சமயங்களில் சேவல் ஒன்றினைப் பலிகொடுக்கின்றனர்.
சாத்தான்குளத்தின் அருகில் உள்ள சாஸ்தாவி நல்லூர் கிராமத்தின் அருகில் வயிரவம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள கோனார்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள தருவாய் என்ற இடத்தில் கழுந்திரட்டு ஒன்று வைத்துள்ளனர். இங்கும் சுடலைமாடன் கோயில் உள்ளது. இச்சுடலைமாடனை தேவர், ஹரிஜன இனமக்களும் வழிபடுகின்றனர். வயிரவத்தில் வாழ்ந்து வந்த கோனார்கள் குடும்ப பிரச்னைக் காரணமாக சாத்தான்குளம், தச்சமொழி, நரையன்குடியிருப்பு, தூத்துக்குடி அருகில் உள்ள தட்டாப்பாறை போன்ற இடங்களுக்கும் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் இங்கிருந்து "பிடிமண்" எடுத்துச் சென்று தங்கள் ஊர்களில் "கழுந்திரட்டு" அமைத்து வழிபட்டு வருகின்றனர்.
உடையார் வழிபாடு ஸ்ரீ உடையார் சுவாமி வழிபாடு தென்தமிழகத்தில் வேரூன்றிப் பரவியுள்ளது. இவ்வழிபாடு இன்றளவும் காலம் காரணமாக எவ்வித மாறுதலும் அடையவில்லை. கொடைவிழாவின் போது கதையாடல் மற்றும் நிகழ்கலை நோக்கில் கழுவேற்றமும் நடைபெறுகிறது. கதையைப்பாடும் புலவரும் பார்வையாளர்களும் உடையார் கோவிலுக்கு உரிமையுடையவர்களாக உள்ளனர். கழுவேற்றத்தினைச் சேவல் மூலம் நிறைவேற்றும் போது பார்வையாளர்கள் கண்ணீர் விட்டு அழுவதும், அமைதியான சூழ்நிலையை மேற்கொள்ளுவதும் தொன்றுதொட்டு நிலவி வருகிறது என உடையார் வழிபாடு பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர் த.த.தவசிமுத்து குறிப்பிட்டுள்ளார்.
சமணர்களைக் கழுவேற்றிய செய்தியினைத் தேவாரப்பாடல்கள் கூறுகின்றன. பட்டினத்தார் வழிபாட்டில், தான் குற்றவாளியல்லன் என்பதனை நிரூபிக்க கழுமரத்தினை எரிக்கின்றனர். சில மாரியம்மன் கோவில்களில் கழுவடி மேடை அமைக்கின்றனர். மதுரைவீரன் வழிபாட்டிலும் இக்கழுவடி வழிபாடு இணைந்துள்ளது. சாத்தான்குளம் பகுதியில் கழு ஏற்றிய நிலையில் உள்ள உருவவழிபாட்டினை நாம் பார்க்கின்றோம். கழுவடி வீரன் தம் குடும்பத்திற்குத் துணை நிற்பான் என்ற நம்பிக்கையில் இவ்வழிபாடு இன்றுவரை நிலைபெற்றுள்ளது. மானத்திற்காக உயிர்விட்ட உடையாரின் நினைவாக இவ்வழிபாடு நடைபெறுகிறது என அறியமுடிகிறது. ஸ்ரீவல்லபாண்டியன் காலத்தில் நிகழ்ந்ததாக வில்லுப்பாடல் குறிப்பிடுகின்றது. அரசர்கள் மட்டுமல்லாது அரசகுடும்ப பெண்களும் பிற ஆண்களுடன் மோகம் கொண்ட நிலையை இக்கதைகள் வழி அறிகின்றோம். திருநெல்வேலி பகுத்திக்கு என்ற தனிச்சிறப்பு பெற்ற வில்லுப்பாடலில் உடையாரின் கதை இடம்பெற்று சமயச் சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதனை மேலும் வரலாற்று அடிப்படையில் அணுகவேண்டும். இதுபோன்று உயர்வர்க்கப் பெண்களுடன் தொடர்பு கொண்டு உயிர்விட்ட பிறவீரர்களின் கதைகளையும் சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும்.
குறிப்பு:
கழுவேற்றம் சடங்கு தொடர்பில் அமைந்த ஒரு கட்டுரையைப் பகிர்ந்து கொள்கிறேன். இக்கட்டுரையை நமக்காக தட்டச்சு செய்து வழங்கிய நண்பர்கள் மைதிலி, சுவர்ணலதா ஆகியோருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
தென் ஆப்ரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய காந்தியார் தென் ஆப்ரிக்கா போல் ஒரு ஆசிரமம் அமைக்க உடன் அழைத்துவந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தென் ஆப்ரிக்காச் சத்யாகிரகிகள். அவர் நாடு திரும்பும்போது அவருடைய நண்பர் இந்தியா சென்றதும் வேதாரண்யம் பகுதியில் இருக்கும் தன் முன்னோர்களின் வீட்டையும் சத்யாக்கிரகம் செய்த குற்றத்துக்காக நாடு கடத்தப்பட்டு வேதாரண்யம் பகுதியில் வாழும் சத்யாக்கிரகிகளையும் சந்திக்குமாறு வேண்டினார்.
இந்தியாவுக்கு வந்து சுதந்திரப்போரில் ஈடுபடுவதற்கு முன்னோடியாக அவர் இந்தியாவைச் சுற்றி வந்து இந்தியச் சூழலை அறிந்துகொள்ள முயற்சி எடுத்ததும் அவர் முதலில் பயணம் செய்த இடம் வேதாரண்யத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அவரது பயணத்தில் தென் ஆப்ரிக்காவில் வீறுகொண்டெழுந்த மக்கள் இங்கே அடிமைகளாகப் பண்ணையாட்களாகப் பணிபுரிவதைப் பார்த்துக் கலங்கிப்போனவர் தில்லையாடி வள்ளியம்மையின் வீட்டுக்குமுன் மண்டியிட்டு வணங்கி தன்னுடைய எதிர்காலச் செயல்பாடுகள் ஆங்கிலேய அடிமைத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் இந்திய சமூகக் கட்டமைப்பின் கிடுக்கிப்பிடியில் சிக்கிச் சக்கையாகும் உழைப்பாளிகளையும் பெண்களையும் கரையேற்றுவதாக உறுதி பூண்டார்.
இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் காந்தி “இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்தியச் சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்! என் அண்ணனின் மரணத்தை விட வள்ளியம்மையின் மரணம் என்னை அதிகம் பாதிக்கும்” என்று எழுதினார். மகாத்மா காந்தி தில்லையாடி வந்த பொழுது மண்ணைத் தொட்டு வணங்கினார் என்று கூறப்படுகிறது.ஒரு பெண். தன் தாய்நாட்டை பார்த்திராத போதும் அதன் விடுதலைக்காக போரிட்டவர். நாம் 15வது வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வைப்பற்றி புலம்பிக்கொண்டிருந்தோம். இந்தப் பெண் தன் நாட்டிற்காகச் சிறை சென்று இறந்தாள். நாம் நமது விடலைப்பருவத்தைச் சுவைத்துக்கொண்டிருந்த வயதில் இந்தப் பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து போரிட்டாள்.
தகவல் உதவி: http://gouthamtamil.blogspot.in/2012/03/blog-post.html
ஃபிலிபஸ் பால்டேயஸ் (Philippus Baldaeus) எனும் பாதிரியார் தமிழில் மொழி பெயர்த்த கர்த்தரின் ஜெபம் 1672 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அச்சானது. ஐரோப்பிய மொழிகள் அல்லாத வேற்று மொழி ஐரோப்பாவில் அச்சானது இதுவே முதன்முறை.
இந்த பரமண்டல ஜெபத்தை , 1964இல், நான் 4 ஆம் வகுப்புப் படிக்கும் போது , எங்கள் செயின்ட் டேவிட் பள்ளியில் சொல்ல ஆரம்பித்தேன். அப்போது எனக்கு எட்டு வயது. துடுக்குத்தனம் அதிகம். நேரே தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றேன். அனுமதி மறுக்கப்பட்டது. "இன்னார் வீட்டுப் பையன் " என்றேன் ; உள்ளே விட்டார்கள்.
தலைமை ஆசிரியர் அருமை நாயகம் அவர்கள். பெயருக்கு ஏற்றார் போல் அருமையான மனிதர், மிகச் சிறந்த ஆசிரியர்.....என்னைப்பார்த்து
" ஏன்னா வேணும்" "சார், இந்த ஜெபம் நல்லா இல்ல சார்." "ஏண்டா" "நல்லாவே புரியல சார். 'ராச்சியம் வருவதாக,,,,,அன்றன்றுள்ள அப்பம்' .... ஒண்ணுமே புரியல சார் , மாத்துங்க சார்." "டேய் டேய் ....அப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. பெரியவங்க எழுதினது " "யார் , யார் சார் எழுதினாங்க, எங்க இருக்காங்க , அவங்க கிட்ட சொல்லி மாத்துங்க சார். உங்களுக்கு தெரிஞ்சவங்கதானே/"
" டேய் . கிளாசுக்குப் போ....நேரமாவுது. .....அப்புறம் சொல்றேன். " உணவு இடைவேளையில் கண்ணில் பட்டார் . "சார் " " அப்புறம் சொல்றேன்னு சொன்னேன் இல்ல , போடா....சாப்ட்டு வா...போ." அடுத்த திங்கள் முதல் பீரியட் , "நீதி போதனை", H.M. எங்கள் வகுப்புக்கு வந்தார். பொதுவாக சின்ன கிளாசுக்கெல்லாம் வர மாட்டார். மிரண்டுவிட்டனர் அனைவரும். என்னை முறைத்தார்கள்.
" கர்த்தருடைய ஜெபம் , யார்- எப்போ எழுதினதுன்னு இவன் கேட்டான். நல்ல கேள்வி...இப்பிடித்தான் கேக்கணும். இத்தினி வருஷமாச்சி எனக்கும் தெரியாது. பெரியவங்கள கேட்டு சொல்றேன் ...நீங்களும் கேட்டுப் பாருங்க " என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதிர்ச்சியில் உறைந்தோம். H.M.முக்கே தெரியாதா?
ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டன.கடந்த ஜூன் மாதம் இணையத்தில் அந்த ஜெபம் கண்டேன். புள்ளி இல்லை. நெடில் தனியே இல்லை. நிச்சயமாகப் பழைய ஆவணம் என உணர்ந்து, மின் தமிழிலும் , ஃபேஸ்புக்கிலும் போட்டேன். நண்பர் ஒருவர், இந்த ஜெபம் ஃபிலிபஸ் எழுதியது எனக்குறிப்பிட்டிருந்தார்.