Monday, August 1, 2016

கபாலி திரைப்படம் பற்றிய சில சிந்தனைகள்..!

திரைப்படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதைத்தொடர்ச்சி, அதனை படமாக்கிய விதம், காட்சிகளுக்கு ஏற்ற பின்னனி இசை என ஒவ்வொன்றும் என் மனதைக் கவர்ந்தன.

 கபாலி ஒரு பொழுது போக்கு வகையிலான ஒரு படம் என்பதையும் மீறி பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களையும்  இப்படத்திற்கான முயற்சி தொடங்கிய நாள் தொட்டு உருவாகி இருந்ததையும், பின்னர் படம் வெளிவந்த பின்னர் எழுத்துலக பிரபலங்கள் தொடங்கி பலரும் இப்படம் தொடர்பான  தங்கள் கருத்துக்களைப் பதிந்து வருகின்றார்கள் என்பதையும் வாசித்து வருகின்றேன்.

மலேசிய சூழலைப் பின்னனியாகக் கொண்ட படம் என்பது இப்படத்தின் மேல் எனக்குத் தனிப்பட்ட முறையில் இருந்த ஒரு ஈர்ப்பு. தமிழ்ப்பட நட்சத்திரங்களில் பலரது நடிப்பில் வந்த திரைப்படங்களைப் பார்த்து கதை பிடிக்கும் போது அதில் லயித்துப் போவேன்.
படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றனர். ஒருவரையும் குறை சொல்லமுடியவில்லை.  தனித்து நிற்கும் நாயகர்களாக ரஜினிகாந்தின் கபாலி கதாபாத்திரம் நிற்கின்றது. அதற்குப் பக்க துணையாக யோகி, குமுதவல்லி, டோனி லீ, அமீர்,  தமிழ்நேசன், வீரசேகரன், லோகா  ஆகியோரது கதாபாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன. ஏனைய கதாபாத்திரங்களையும் சொல்லலாம். பட்டியல் நீளும். ரஜினிகாந்திற்கு நடிப்பில் இது ஒரு திருப்புமுனை என்று கருதுகின்றேன். இதே போன்ற சமூக சிந்தனையை மையமாகக் கொண்ட படங்களில் நடிப்பதை நான் வரவேற்கின்றேன்.

மலேசிய தமிழர்களின் வரலாற்றை அதிலும் குறிப்பாக கூலித் தொழிலாளிகளாகத்  தமிழர்கள் புலம்பெயர்ந்த கதை.. தோட்டத் துண்டாடல், சீனத் தொழிளாலிகளுக்கும் இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கும் இடையிலான சம்பள வேற்றுமை, .. அதில் காட்டப்படும் பாரபட்சம் என்பன படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஏனையோருக்கு இது சாதாரண ஒரு காட்சியாக மட்டும் படத்தில் தோன்றியிருக்கலாம். மலேசிய சூழலில் பிறந்தாலும் மலேசிய காலணித்துவ ஆட்சிகால வரலாற்றை அறிந்தவர்களால் மட்டும் தான் இத்தகைய சில காட்சிகளின் நூதனமான  பின்னனிகளை அறிந்து கொள்ள முடியும்.

படத்தின் தொடக்கம் என்னை மிக கவர்ந்தது. படக்காட்சியில் கவனம் வைத்ததால் நடிக நடிகையர் பெயரைக் கூட  வாசிக்க மறந்து போனேன்.  காவல் துறையின் அறையில் கபாலி பற்றி விவாதிக்கும் காட்சி, முற்றிலும் மலாய் மொழியில் வந்துள்ளது. இது பாராட்டத்தக்கது. இது மிக இயல்பான தன்மையை படத்திற்குத் தந்தது. ஆனால் கீழே அதற்கு தமிழில் மொழிமாற்றம் கொடுத்திருக்கலாம். மாறாக ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்பட்ட்து. இதனை ஒரு குறையாகச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ஏனெனில், ஆங்கிலம் தெரியாத தமிழ் வாசகருக்கு மலாய் மொழிப் பேச்சின் சரியான வாசகங்கள் சரியாகச் சென்று சேர சிரமம்  ஏற்பட்டிருக்கும். அதே போல இறுதிக் காட்சிகளில் டோனி லீ ஒரு பிறந்த நாள் நிகழ்வில் பேசும் சீன மொழிப் பேச்சிற்கும் அதே வகையில் தமிழ் வாசகத்தைக் கொடுத்திருக்கலாம்.

படத்தில் பேசப்பட்ட   பல வாசகங்கள் என்னை மிக மிகக் கவர்ந்தன. குறிப்பாகச் சில காட்சிகள்..
கபாலி சிறையிலிருந்து வெளிவரும் போது காவல் அதிகாரியிடம் பேசுவது..
கபாலி pet shop (விலங்கு பறவைகள் விற்பனை) இடத்தில் வில்லனைத்தாக்கி விட்டு நடந்து வரும் போது பேசுவது..
தோட்டத்து உதவி மேளாளரிடம் சண்டை போடும் போது கபாலி பேசும் வாசகங்கள்..
தமிழ்நேசன் கதாபாத்திரத்தின் பேச்சுக்கள்..
இறுதிக்காட்சியில் வீரசேகரன் கபாலி வசனங்கள் ..
குமுதவல்லியை 25 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது குமுதவல்லி பேசும் வாசகங்கள்..
கபாலியை ஊக்கமூட்டும் வகையில் குமுதவல்லி..
..இப்படி  பல காட்சிகளில் வசனங்கள் என்னைக் கவர்ந்தன.

காட்சி அமைப்பும் அக்காட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களும் மிக நுணுக்கமாக ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுல்ளன என்பதைக் காண முடிந்தது.

உதாரணமாக கபாலி சிறையிலிருந்து வெளிவந்து காரில் பயணம் செய்யும் போது தமிழ்நேசனை நினைவு கூறும் காட்சி, துன் சம்பந்தன் கட்டிடத்தைக் கடக்கும் போது வருவதாகக் காட்டப்படுவது, தமிழ்நேசன் - துன் சம்பந்தன் அவர்களைப் போன்ற ஒரு கதாபாத்திரமாக, அதாவது தோட்டத்தொழிலாளர் நலனுக்காக உழைத்த மனிதராக நினைவு கூற வைக்கின்றது.  இறுதிகாட்சி படமாக்கப்பட்ட இடம், அதன் பின்னனியில் இரட்டைக் கோபுரம் ஆகியன இரண்டு ஆளுமைகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடையில் நடக்கும் போரின் தன்மையை விவரிக்கும் வகையில் ”மெட்டபோரிக்கலாக” அமைந்திருந்த்து.

படத்தில் பின்னனி இசை அபாரம். அதன் தாக்கத்திலிருந்து இன்னமும் நான் மீளவில்லை.
கானா பாலாவின் பாடல், அதற்கான நடனம், காட்சி இவை பிரமாண்டம். மிக ரசித்தேன்.

படத்தில் இயல்பாக மலாய் கலந்த தமிழ் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.  மலேசியத்தமிழர்களின் தனித்துவமான தமிழிலேயே படம்.. அதே வகையான பேச்சு ஒலி..   எனக்கு இது மிகப் பிடித்தது. ” காடி, நாட்டான், சடையன், வெடப்பு,.. இப்படி பல சொற்கள்..    படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மலேசியாவில் இருந்து கொண்டு அங்கே நடக்கும் ஒரு நிகழ்வை பார்ப்பது போல என்னைத் தடுமாற வைத்து விட்டது.

இரண்டு காட்சிகள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தன.
1. பல ஆண்டுகளுக்குப் பின்னர் கபாலியும் குமுதவல்லியும் சந்திக்கும் காட்சி
2. தமிழ்நேசன் கபாலியைச் சந்திக்கும் போது பேசும் காட்சி  
பென்ஸ் கார் மலேசிய மக்களின் கனவு.  இதே வகை மாடலில்   ஒன்றை வீட்டில் வைத்திருந்தோம் . அது படம் பார்க்கும் போது நினைவு வந்த்து.

தனிப்பட்ட முறையில் படத்தின் இயக்குனருக்கு என் நன்றியைச் சொல்லித்தான் ஆகவேண்டும். படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகளின்  நல்ல கதாபாத்திரங்கள் இப்போதுதான் சினிமா துறை பெண்களை மதிக்க ஆரம்பித்திருக்கின்றது என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்த்து. ஏனெனில் பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் வரும் கதாநாயகிகள் பெரும்பாலும் அறிவில்லாத அழகு பொம்மைகளாக, தவறு செய்து விட்டு கன்னத்தில் அறை வாங்கி மகிழ்பவர்களாக, முட்டாள்களாக என இருப்பதை விட்டு, அறிவுள்ள, வீரமிக்க, வேலை செய்யத் தயங்காத,  அதே நேரம், அன்பும் கணிவும், தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளும் தன்னம்பிக்கை மிகுந்த கதாபாத்திரமாக அமைத்திருந்தமை மிகச் சிறப்பு. நாகரிகமான மரியாதையான ஆடை அமைப்பும் மிகச் சிறப்பு.

கூலித்தொழிலாளியாக வந்தோர் கூலிகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது சட்டமல்ல.  நல்ல வகையில் உழைத்து  முன்னேறக்கூடிய திறமை வாய்ந்த அனைவருமே வாழ்க்கையில் உயர முடியும் அப்படி உயர்பவர்களுக்கு தகுந்த மரியாதையைக் கொடுக்கத்தான் வேண்டும் என்பதை கதை பார்ப்போரை கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும்.

மலேசிய இந்தியர்களை இப்போது பாதித்திருக்கும் மிக முக்கியச் பிரச்சனைகளாக இருப்பவை கேங்ஸ்டரிசம், போதைப்பொருள் பயன்பாடு ஆகியனதான். இதனை மையமாக வைத்து படம் செய்திருப்பது மிகுந்த பாராட்டுக் குறியது. எப்படியெல்லாம் இளம் தலைமுறயினர் வாழ்க்கையை ஒரு சிலர் சீரழிக்கின்றனர் என நான் மலேசியா செல்லும் போதெல்லாம் நண்பர்களுடன் பேசி வருந்திக் கொண்டிருப்பேன். அதே வருத்தத்தின் பிரதிபலிப்பை இப்படத்தில் எந்த வித ”கோஸ்மெட்டிக் டச்-அப்” ஏதும் இன்றி  உணர்ந்தேன்.

தமிழகத்தின் சாதிக்கொடுமைகள் மலேசியத் தமிழர்கள் மத்தியிலும் பரவி வருகின்றது. சாதியால் மக்களைப் பிரித்து வைத்து உயர் சாதியில் பிறந்தால் தான் மரியாதை உயர்வு என நினைப்போருக்கெல்லாம் சாட்டையடி கொடுப்பது போன்ற வசனங்களும் காட்சி அமைப்புக்களும் பரவலாக வந்துள்ளமை பாராட்டுக்குறியது.  இந்தப் படம் பார்த்த பிறகாவது சாதி சங்கம் வைத்து நடத்திக் கொண்டிருக்கும்  மலேசியத் தமிழர்கள் திருந்தி அவற்றைக் கலைத்து  விட்டு ஒற்றுமையாக நாம் எல்லோரும் தமிழர்கள் என வாழ ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.  இந்திய தேசத்தில் இந்தச் சாதி என்னும் தொழு நோயை, தொற்று நோயை அழிப்பது சுலபமான காரியமல்ல.  அதற்கு கபாலி போன்ற, குமுதவல்லி போன்ற அமீர், போன்ற சிந்தனை கொண்டோரும், யோகி போன்ற துடிப்புமிக்க இளைஞர்களும் தேவை.

இப்படம் மலேசியத் தமிழர்களில் கூலித்தொழிலாளியாக வந்து சொல்லொணாத் துன்பதை சந்தித்த மக்களை உலகத் தமிழர்கள் நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதே வரலாற்றுப் பார்வையில் இதுவரை நான்கு ஆவணப்  படங்களை நான் வெளியிட்டிருக்கின்றேன் என்பது எனது வெளியீடுகளை அறிந்தோருக்குத் தெரியும். அவற்றுடன் கபாலியும் உலகத் தமிழர்களுக்கு மலேசிய தமிழர்களின் அதிலும் குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர் நிலையை காட்டியிருக்கின்றது.  மலேசியத் தமிழர்களைப் பற்றி உலகத்தமிழர்களைப் பேச வைத்த ஒரு படம் என்ற ரீதியில் இயக்குனருக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் ஒரு மலேசியத் தமிழரான எனது பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துக்களையும் பதிவதில் மகிழ்கிறேன்.

-சுபா

No comments:

Post a Comment