பசித்திரு, தனித்திரு, விழித்திரு
- முனைவர் தி.சுரேஷ்சிவன்
'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வரிகள் ராமலிங்க வள்ளலார் உள்ளத்தில் எழுந்த உணர்வை நமக்கு காட்டுபவை. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னால், பறப்பன, நடப்பன, நீந்துவன என சக உயிர்களை கொன்று தின்றும் வழக்கத்தை முற்றிலும் எதிர்த்தவர் வள்ளலார். இறந்த உயிரினத்தின் உடலை புதைப்பதற்கு என் வயிறு இடுகாடு இல்லை என்று சொன்னவர்.
ராமலிங்கம் எனும் இயற்பெயருடைய வள்ளலார், தனது வாழ்வில் மூன்று நிலைகளை கடந்தவர். முதலில் நடராஜ வழிபாடு. 'அருட்சோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்' அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்'என்று பாடியவர். பின்னர் அருவுருவ வழிபாடு, சிவலிங்கம் மற்றும் ஜோதி வழிபாட்டினை செய்து திருநீறு பூசி நின்றார். பிறகு சுத்த சன்மார்க்கம் என்ற நெறியில் எந்த சின்னமும் இடாமல், அன்பு எனும் சக்தியை உயிர்களிடத்தில் செலுத்த அறிவுறுத்தி நின்றார்.
சிறுவயதில் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் ஆன்மிக கல்வியை படித்த வள்ளலார், கந்தக் கோட்டம் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு தெய்வப் பிறவியாக உருவெடுத்தார். பின்னர் வடலுார் சென்று 'தரும சாலை' தொடங்கி ஏழை எளியோருக்கு இலவசமாக உணவளித்தார். இன்றளவும் அந்த அன்னதானம் தொடர்ந்து வருகிறது.
ஜாதிய பாகுபாடுகளை சாடினார். எல்லா மதத்தினைரையும் அரவணைத்து 'சர்வசமய சமரச சுத்த சன்மார்க்கம்'என்ற மார்க்கத்தை தோற்றுவித்தார். வள்ளலாரின் சிந்தனை, அவர் காலத்தில் பலருடைய ஒப்புதலை பெறவில்லை என்பதால், 'கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்றும் வருத்தப்பட்டார். ஆனால் தற்போது உலகம் எங்கும் இவருடைய பாடல்கள் பாடப்படுகின்றன, சீர்திருத்தங்கள் பின்பற்றப்படுகின்றன.
திருவருட்பா:
இவருடைய பாடல்கள் மொத்தம் ஆறாயிரம். இவை ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டு உள்ளன. இன்றும் தமிழிசை வாணர்களால் இசையரங்குகளில் பாடப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வள்ளலார் பற்றி அறியோதோரே இல்லை என்றளவுக்கு 'திருவருட்பா' புகழ் பெற்ற நுாலானது.
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் படித்தே, வள்ளலார் இத்தகைய நிலையடைந்தார். சைவ சமய நெறியில் தொடக்க காலத்தில் இருந்து பின்னர், தனி வழியாக தமக்கென சன்மார்க்க நெறியை உருவாக்கினார்.
வள்ளலாரின் முக்கிய இரண்டு குறிக்கோள்கள் 1. ஜீவ காருண்யம், 2. மரணமிலாப் பெருவாழ்வு, எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருப்பது மட்டுமல்லாமல், ஆன்மிக வழியில் நின்று அறப்பணி செய்து மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
வள்ளலார் ஜோதியாக கலந்தார் என்று சொல்லுவர். தன்னுடைய உடலை யோக நெறியில் நிலைப்படுத்தி காற்றில் கரைந்து போகும் வண்ணம் ஒரு பேறினை பெற்றார் வள்ளலார். தைப்பூச நாளில் வடலுாரில் அவர் அடைந்த முக்தி நிலையை இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.
பாடல்கள்:
வள்ளலார் பாடல்களும், அவர்தம் கொள்கைகளும் மனதிற்கு இதம் தரும்.
'ஒருமையுடன் நினது திருமலரடி
நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்'
என்று மனமுருகப்பாடி, இறைவனிடம் நம் மனது சேராவண்ணம் தடுக்கும் கருவிகளை (சக்திகளை) பட்டியலிடுவார் வள்ளலார். சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் சமய சொற்பொழிவாளராகவும் விளங்கிய வள்ளலார், நூலாசிரியராக மொழி ஆய்வாளராக விளங்கியது தான் வியக்கவைக்கும் தன்மை. வெண்ணிற ஆடையை உடுத்துவதை வழக்கமாகக் கொண்ட வள்ளலார், கடவுளை ஜோதி வடிவாகக் கண்டு வழிபாடு செய்தார்.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற உபசேதத்தை செய்த வள்ளலார், எல்லா உயிர்களையும் நேசிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்து காட்டியவர். 'நமக்கு பசி என்ற ஒன்று இல்லாவிட்டால், யார் இறைவனை நினைப்பார்கள்' என்று கேட்டு, உணவை கண்டவுடன் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவதை சுட்டிக்காட்டி 'உணவை' கடவுளைப் போன்று போற்ற வேண்டும் என்று கூறி அதே நிலையில் வாழ்ந்து காட்டியவர்.
இளமை பற்றி வள்ளலார்:
இந்த உடம்பில் தோன்றும் இளமை கொஞ்சகாலம் கழித்து அழிந்து விடுகிறது. உடலில் தோன்றி மறையும் இந்த இளமையானது பகலில் கொண்ட மாறுவேடம் பளிச்சென்று வெளியாகி விடுவதுபோல் அழியக்கூடியது. வஞ்சனை நெடுநாள் மறைந்திடாமல் வெளிப்படுவது போல அழியக்கூடியது.கடற்கரையின் மீதேறிய கடலின் அலைநீர் வற்றி விடுவதுபோல இளமை அழியக்கூடியது.
மாலை நேரத்தின் முன் வெளிச்சத்தில் மஞ்சள் வெயில் தோன்றிச் சிறிது நேரத்திலேயே மாறிவிடுவதுபோல இளமை அழியக்கூடியது. மேகத்தில் தோன்றும் வானவில் சற்று நேரத்திலேயே விரைந்து மறைவதைப்போல இளமை அழியக்கூடியது என வர்ணிக்கிறார் வள்ளலார்.
'நீரில் தோன்றி உடன் மறையும் நீர்க்குமிழிபோல அழியக்கூடியது இளமை. இப்படி நிலையில்லாமலிருக்கும் இளமைப் பருவத்தை நிலையெனக் கருதி, உறுதியாகப் பற்றிக் கொண்டு அழகிய பெண்கள் மீது ஆசை கொண்டு அவர்களுடைய கண்பார்வையாகிய வலையில் சிக்கி, அறிவு மயங்கி, ஆற்றல் மழுங்கித் தீய செயல்களைப் பலமுறை செய்கின்றேன். சிறிதளவுகூட உன் திருவடியில் அன்பு வைத்து வணங்காது அறியாமையில் திளைக்கிறேன். அனுபவம்மிக்க அருளாளர்களிடம் ஞானநுால் தத்துவங்கேட்டுச் சிந்தித்துத் தெளிவுபெற்ற மெய்யுணர்வாளர்கள் அழியக்கூடிய இளமையை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பாத அந்த நிலையா இளமையை நிலையென்று கருதிப் பெரிதும் அவதிப்படுகிறேன். அந்தச் சிறுமையை அகற்றி என்னை நல்வழிப்படுத்திக் காத்தருள வேண்டும்' என்கிறார் ராமலிங்க அடிகள்.
யாரிடம் வேண்டுகிறார்:
சிறுமை அகற்றும் சீராளனாகத் திகழும் கந்தகோட்டத்துள் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமாகத் திகழும் முருகப்பனிடம்தான் வேண்டுகிறார்.
கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத விப்பெருங்
கன்ம வுடலிற் பருவம் நேர்
கண்டழியு மிளமைதான் பகல் வேடமோ புரைக்
கடனீர் கொலோ கபடமோ
உற்றொளியின் வெயிலிட்ட மஞ்சளோ வானிட்ட
ஒருவிலோ நீர்க் குமிழியோ
உலையனல் பெறக் காற்றுள் ஊதும் துருத்தியோ
ஒன்றுமறியே னிதனை நான்
பற்றுறுதியாக் கொண்டு வனிதையர்கண் வலையினில்
பட்டுமதி கெட்டுழன்றே
பாவமே பயில்கின்ற தல்லாது நின்னடிப்
பற்றணுவு முற்றறி கிலேன்
சற்றையகல் சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
(தெய்வமணிமாலை)
புண்ணியச் செயல்கள்:
எனவே நில்லாதனவற்றை நிலையாகக் கருதி ஏமாந்து போகாமல் நிலையான இறையருளைப் பெற வேண்டும்; அதன்வழி புண்ணியச் செயல்களைப் புரிதல் வேண்டும். அவ்வாறு வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்களே வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படுவர் என்னும் திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப வாழ வேண்டும்.
நல்ல கருத்துக்களை அள்ளி வழங்கும் வள்ளலாரின் தெய்வமணிமாலையை நாளும் வாசிக்க வேண்டும். வள்ளலார் பாடியுள்ள தெய்வமணிமாலைப் பாடல் ஒவ்வொன்றும் படிப்போரை ஈர்த்து இசைவித்து, பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் தன்மையது. நீதிக் கருத்துக்களையும் புராணக் கதைகளையும், உவமைகளையும் உணர்த்துவது.
கலைமாமணி முனைவர் தி.சுரேஷ்சிவன்
செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை
தினமலரில் பதிவு செய்த நாள்: 29.1.2021