Showing posts with label கோவை எழில். Show all posts
Showing posts with label கோவை எழில். Show all posts

Wednesday, September 1, 2021

இணைய(யா)நட்பு

-- கோவை எழில்


இதயத்தால் பிணைந்திருந்த 
காலங்கள் சென்று
இன்று இணையத்தால் இணைந்துள்ள 
இதயங்கள் வென்று.

நன்றி இணையமே!

முகம் அறியா நட்புகள்
அகம் அறியா  அறிமுகங்கள் 
இகம் முழுதும் இணைப்புகள்
சுகம் கேட்டு சுடுக்கைகள்.

அடுத்த வீட்டினில்
யார் தெரியாது
ஆனாலும்…
பார் முழுக்க பழக்கம்
ஊர் முழுக்க உறவுகள். 

அடையாளமின்றி அறிமுகம்
ஆனாலும்…
அதிலும் ஒரு நன்மைதான் 
அதுவும் ஓர் உண்மைதான்.

பாலினம் தெரியாது 
நிறம் அறியாது 
நாடு கிடையாது
சாதி மதம் புரியாது
மொழி ஒன்றே அறியும்.

கருத்து மணம் மட்டும் 
புரிந்த மனம்
மனிதம் மட்டும் 
உணர்ந்த இனம்.

எதிலும் எப்போதும்
தீதும் நன்றும் 
ஒன்றாய் இருப்பதே இயற்கை
இதிலும் இருக்காதோ ..

சேர் தொட்டு பார்த்ததில்லை
வலைத்தளத்திலேயே 
விளை நிலங்கள்
மழை இன்றி உழவு. 

என்ன தரவு வேண்டும் 
எதற்கு மனனம் வேண்டும் 
வலைத்தளமே அறிவு 
இணையமே மூளை. 

சிந்தனையைத் தகர்க்கின்ற 
நிந்தனைதான் வியப்பு 
இதுதான் எதிர்காலச் சிறப்பு.

சிந்தனையால் பிணைந்த வலை 
இதயத்தால் இணைந்த கலை 
அறிவியலே நீதான் விதை.

இணைய நட்பு
இணையா நடப்போ 
இல்லை இதுவும்
இனிய நட்பு. 

-- கோவை எழில் 

Thursday, January 14, 2021

உழவும் வாழ்வும்

உழவும் வாழ்வும் 

- கோவை எழில்

உடலும் உணர்வும்
உணவும் உயிரும்
உழவின் கொடையே.

உண்மை உணர்ந்து
உலகம் சுழலும்
உவகை உடனே.

ஆனால்...
வறட்சியும் புயலும்
இயற்கையின் சீற்றமும்
மதியிலா மாந்தரும்
மனமிலா மைந்தரும்
மிதித்து அழிப்பார் உழவையே.

ஆனாலும்....
அவர்தம் வயிறும்
அனைவரின் உயிரும்
அண்டியிருப்பது உழவையே.

அதனால்....
உழவு செய்யும் உழவரையும்-அவர்
களையெடுத்த கரங்களையும்
கண்ணில் ஒற்றி நன்றி சொல்வோம் வாரீர்
ஊர்கூடி ஒன்றுகூடி மகிழ்விப்போம் வாரீர்.

பொங்கலிலே பொங்கி வரும் பொழிவாய்
செங்கதிராய் ஒளிர்ந்து வரும் செழிப்பாய்
உழவர் வாழ்வுதன்னை உயர்த்திடுவோம் பாரில்
அவர் வேதனையைத் துடைத்திடுவோம் இந்நாளில்.

Tuesday, November 3, 2020

கீழ்த்திசை சிவக்கக் கண்டோம்

 கீழ்த்திசை சிவக்கக் கண்டோம் 


-- கோவை எழில்  


கீழ்த்திசை 
சிவக்கக் கண்டோம் 
கிளர்ச்சிகள் 
செய்யத் துணிந்தோம் 
புரட்சிகள்... 
வேண்டும் நாட்டில் 
இல்லையேல் 
பழமையே தூணாய் மாறும் 
வறுமையும் 
பசியும் நீங்கி 
வாழ்ந்திடும் 
மக்கள் வேண்டும் 
வையத்து மானிடர்கள் 
ஓர் ஜாதி ஆதல் வேண்டும் 
இல்லையேல் 
வாய்ச் சொல்லில் 
வீரம் பேசும் 
வாலிபம் 
பொய்யாய்ப் போகும்!