Wednesday, January 30, 2019

சிலோன் தீவு வரைப்படம்

—  முனைவர் க.சுபாஷிணி          திரு. வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைபடம்.

          Insel Zeilan  என்ற  டச்சு மொழிப் பெயருடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.  வரைபடம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.  Insel Zeilan    என்பது டச்சு மொழிப் பெயர். ஆக, இலங்கைத் தீவு டச்சுக்காலனித்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

          இந்த வரைபடத்தின் அசல்,  காகிதத்தில் அச்சுப்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் மன்னார், கண்டி, மட்டக்களப்பு, திரிகோணமலை போன்ற பெயர்களை அடையாளம் காண முடிகின்றது.

          கி.பி.17ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவின் பெரும்பகுதி போர்த்துக்கீசியர்களாலும் உள்ளூர் இலங்கை மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது.  போர்த்துக்கீசியர்களின் தாக்கத்தை எதிர்க்க உள்ளூர் இலங்கை மன்னர்கள்  வணிகம் செய்ய வந்த டச்சுக்காரர்களின் உதவியை நாடினர். 1638ம் ஆண்டு கண்டி ஒப்பந்தம் மன்னன் 2ம் ராஜசிங்கனுக்கும் டச்சு அரசு பிரதிநிதிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.  டச்சு அரசின் தாக்கம் இதன்வழி இலங்கையில் காலூன்றத் தொடங்கியது. ஆனால் மன்னன் 2ம் ராஜசிங்கன் அதே வேளையில் பிரஞ்சுக்காரர்கள் உதவியையும் நாடியதோடு திரிகோணமலை துறைமுகத்தையும் அவர்களுக்கு வழங்கினார். இது டச்சுக்காரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இப்பகுதியைத் தாக்கி திரிகோணமலையை டச்சுக்காரர்கள் கைப்பற்றி தம் வசம் வைத்துக் கொண்டனர்.

          இந்த நிலை படிப்படியாக மாறியது. இலங்கைத் தீவு Dutch Ceylon  என்ற பெயரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் கி.பி.1640 முதல் 1796 வரை இருந்தது.   கடற்கரையோர பகுதிகளை இக்காலகட்டத்தில் டச்சுப்படை கைப்பற்றியிருந்தது. ஆனால் கண்டியைக்  கைப்பற்ற இயலவில்லை. 1638ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.  டச்சுக்காரர்கள் தமிழர் வசம் இருந்த பகுதிகள் அனைத்தையும் தம் வசம்  படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர்.

          இக்காலகட்டத்தில் தமிழகத்தின்  தஞ்சையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குத் தோட்டங்களில் பணிபுரிய  கூலித் தொழிலாளர்களாக  மக்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இலவங்கப்பட்டை தோட்டங்கள், புகையிலைத் தோட்டங்களில் பயிர்த்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இக்காலகட்டத்தில்  டச்சு கடற்கரையோர அரசு (Dutch Coromandel) இயங்கிக் கொண்டிருந்தது. இதன் தலைமையகம் தமிழகத்தின் பழவேற்காடு பகுதியில் அமைந்திருந்தது.  இதன் வழி  தங்கள் காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் தேவைப்படும் மனிதவளத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாட்களைக்  கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் தலைமையகம்  செயல்பட்டது என்றும் அறியமுடிகின்றது.

          Insel Zeilan  என்று இலங்கை பற்றிய  பெயர் குறிப்பு ஜெர்மானிய டோய்ச் மொழியில் வெளிவந்த  ஆயிரத்து ஓர் இரவுகள் (Tausand und eine nacht) என்ற சிந்துபாத் கதையிலும்,   கி.பி 1755ல் வெளிவந்த  ஜெர்மானிய டோய்ச் மொழி வர்த்தகம் தொடர்பான லைப்ஸிக் நகரில் அச்சிடப்பட்ட ஒரு  நூலிலும் மேலும் சில 18ம், 19ம் நூற்றாண்டு நூல்களிலும்  குறிப்பிடப்படுகின்றது.

          இந்த  வரைபடம் இலங்கைத் தீவின்  முழுமையையும் குறிப்பதாகக் காட்டப்படவில்லை. குறிப்பாக  இலங்கையின் தென்பகுதி  இந்த வரைபடத்தில் தென்படவில்லை. ஆக, ஆரம்பக்கால ஆசிய நிலப்பகுதிகளின் வரைபட முயற்சியாக இருக்கலாம் என ஒரு வகையில் ஊகிக்கலாம். அத்துடன் டச்சு காலனித்துவ காலகட்டத்தையும் அச்சு இயந்திரங்கள் பரவலாக செயல்படத்தொடங்கிய நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டால் இது ஏறக்குறைய கி.பி 17ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது.தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)


Saturday, January 26, 2019

கற்பனை ஊற்றுக்கண்ணின் அடைப்பு ---ச்சி 
— முனைவர் ச.கண்மணி கணேசன்


அறியாப் பருவத்தில் பாட்டிகள் சூட்டிய  பட்டம் 
அறிந்தபின்னரோ அண்ணன்தம்பிகள் தட்டிய  மட்டம்
நாற்றாய் நடப்பட்டபின் நாயகரின் அரட்டல் 
நாற்காலி வீற்றிருக்கும் தலைமுறையின் மிரட்டல் 

                மாறி மிஞ்சுநரை எய்திவிட்டால்- அதுவரை

கொஞ்சிநின்ற பாலகரின் மீசைமுறுக்கும் உருட்டல் 
கிழடுகட்டை திட்டுஒன்றே வயோதிகம் வந்து கிட்டல்
இடைஞ்சல்பிறவிகள் இவரென்று முகம்திருப்பும் முட்டல் 
வாரிசாய் வந்துசேரும் வளைக்கரத்தார் சுட்டல்

வேராயிருந்து உயிர்ப்பித்த விழுதுகளை வேண்டாமெனும் கட்டம்
கோரப் பார்வைதான் சமூகத்தின் சட்டம் 
பொருந்தாத உறவுகளாய்ச் சதுரத்துக்குள் வட்டம்
திருந்தாத மனங்களுக்குச் சொல்வதென்ன திட்டம்! 

பிஞ்சுப் பருவமுதல் இவரென்றும் சினம்தாங்கித் தவிக்கிறாரே ஏன்?
பஞ்சுமனமென்றும் ஆறாமல் பற்றி எரிவதும் ஏன்?
விஞ்சும் அன்பிற்கென்றும் வேதனையே பிரதியாவது ஏன்?
தஞ்சமெனச் சென்றுஎன்றும் சுமைதாங்கி ஆனாரே ஏன்?

முட்களாய்த் தைக்கும் கேள்விக்குறி முனைகள் 
இதயச்சுவரில் ஏற்படுத்தும் இடைவிடாத ரணங்கள் 
ராஜாங்கம் நடத்தவந்த ராணியர் சோர்ந்துபோய்
தாஜாங்கம் செய்துசெய்தே தான்தேய்ந்தார் வாழ்க்கையிலே

மகிழ்ச்சிப் பால்வீதியில் பந்தங்களுடன் பவனிவரத் துடித்தவர்
நிகழ்ச்சி மாறிவிட்டதில் - விழிகளைமட்டும் விண்மீன்களில் சிக்கவிட்டு 
உறவுக்கும்பலுக்கு இடையில் ஒன்றியும் தனியாகவே தவிக்கிறார்
பிரச்சினைச் சுழிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட படகானார்

               விடிவுக்கரை காணத் தீர்ப்பொன்று தீட்டுகிறார்!!தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)


              

நார்த்தமலை - பெயர் விளக்கம்—— நூ.த.லோக சுந்தரம்

source: https://upload.wikimedia.org/wikipedia/commons/d/d6/Naarthaamalai-13.jpg

          நார்த்தமலை நார்த்தம்புல் வளரும் மலை.  நாரத்தைப்புல் வளரும் இடம் ஆதலால் நார்த்தமலை எனப் பெயரிட்டனர்.  தமிழ் மக்கள் எப்போதும் இயற்கையை ஒட்டியே வாழ்பவர்கள் ஆதலால் ஓர் திணை எனக் கொண்டு பெயரிடுவர். 

          நரந்தம் ஓர் நறுமணப்பொருள்.  நரந்தம் என்றால் நாரத்தை (683 திவாகரம்) .
நாம் ஊறுகாய்க்கு நார்த்தங்காய் பயன்கொள்கிறோம். நரந்தம் ஓர் நல்மணம் மிக்கு நாறும் புல்லாகும்; எலுமிச்சை வாசனை வீசும்.  ஆங்கிலத்தில் லெமன்கிராசு என்பார்கள் (https://en.wikipedia.org/wiki/Cymbopogon_citratus). 

நார்த்தம்புல்:

source: https://en.wikipedia.org/wiki/Cymbopogon_citratus#/media/File:Gardenology.org-IMG_2892_rbgs11jan.jpg


          நரந்தம் உலக நறுமணப்பொருள் வாணிப நிரலில் பெரும்பங்கு வகிக்கின்றமையை நாம் உணர வேண்டும். தமிழகத்தில் பரவலாக மொட்டைக்குன்றுகள் பாறைகள் உள்ள இடங்களில் இப்புல்லை இயற்கையாகக் காணலாம். பாறைகளின் இடுக்குகளில் குத்துக்குத்தாக வளரும். ஓசூர், வேலூர், வேட்டவலம், திண்டுக்கல் போன்ற  பாறைக்குன்றுகள் உள்ள இடங்களில்  மிக்கு காண்பது தான்  இப்புல்வகை.  நேரடியாகக் கண்டும் உள்ளேன். நான் எப்போதும் இதனைக்கண்டவுடன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வியப்பூட்டுவதற்கு இது புல்தானே எப்படி மணக்கின்றது எனக் கசக்கி முகர்ந்து பாருங்கள் எனக் காட்டுவது வழக்கம்.  தஞ்சையில் நடந்த கல்வெட்டு பயிற்சிப்பட்டறையில், பூலாங்குறிச்சி, திருமயம், சித்தன்னவாசல் முதலியவை சென்றபோதும்  இதனை சித்தன்னவாசலில் கண்டவுடன் பலருக்கும் காட்டினேன். விவசாய மக்கள்/பல்கலைக்கழகங்களும் அவ்வப்போது  ஓர் பணப்பயிராக வளர்க்க விளம்பரம் செய்துள்ளனர். 

          இஃது சங்க நூல்களில்  மிக்கு பரவலாக பேசப்படும் பொருளாவதும் காண்க. இந்தப் புல்லினை மேய்ந்த கவரிமானைக் காட்டும் புறம் 136 வரியினைக் காண்க.  மற்ற 17 வரிகளிலும் நரந்தம் நறுமணப் பொருள்களுடன் தனித்தோ உடனோ வருவது காணலாம்.  இதனை மக்கள் முதல்  அரசர் வரை ஓர் நறுமணப் பொருளாகவே பயன்கொண்டுள்ளமை காண்க.

நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி - 94 குறிஞ்சிப்பாட்டு 
நரந்த மரைப்ப நறுஞ்சாந்து மறுக - 553 மதுரைக் காஞ்சி
நறையும் நரந்தமும் அகிலும் மாரமும - 237 பொருநர் ஆற்றுப்படை 
நரந்த நறும்பூ நாள்மலர் உதிர - 141 அகநானுறு 
நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல் - 266 அகநானுறு
 
நரந்த  நறும்புல் மேய்ந்த கவரி - 132 புறநானூறு
 
நரந்தம் நாறும் தன் கையால் - 236 புறநானூறு
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய - 302 புறநானூறு
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது - 54 கலித்தொகை
நரந்த  நாறுங் குவையிருங் கூந்தல் - 52 குறுந்தொகை
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய் - 7 பரிபாடல் வையை 
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே - 16 பரிபாடல் வையை
பரந்திலங் கருவியொடு நரந்தம் - 11 பதிற்றுபத்து
நாகம் நாறு நரந்தம் நிரந்தன - 12 வேட்டுவ வரி, உரைப்பாட்டுமடை, சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்
நரந்தமும் நாகமும் பரந்து அலர்- மலர்வனம் புக்க காதை, மணிமேகலை
நரந்தம் என்பது நாரத்தை நாறும் - சூடாமணி நிகண்டு
நாளிகேரஞ் செருந்தி நறுமலர் நரந்தம் - 12.78
நாகம் சூதம் வகுளம் சரளம்சூழ் நாளிகேரம் இலவங்கம் நரந்தம் - 12.239  


தொடர்பு:  மயிலை நூ த லோ சு / நூ.த.லோக சுந்தரம் (selvindls61@gmail.com)Sunday, January 20, 2019

பெண்ணையாற்றுத் திருவிழா——  திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம்


           “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று பாரதி பாடியது, பெண்ணையாற்றுத் திருவிழாவில்தான் இருக்கும் என்று பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் நான் நினைத்ததுண்டு. அவ்வளவு குதுகலமாக இருக்கும் அந்தத் திருவிழா. தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள கிராமங்களிலும், நகரங்களிலும் தை மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது இந்த விழா. அந்த நாளன்று, கங்கையாறு பெண்ணையாற்றில் வந்து குளிப்பதாக ஒரு புராணக் கதை.

           கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி ,அனுமன் தீர்த்தம், சாத்தனூர், ஆதித் திருவரங்கம், திருக்கோவிலூர், கண்ட்ரக்கோட்டை வழியே பாய்ந்து, கடலூருக்குச் சற்று வடக்கே கடலில் கலக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கண்ட்ரக்கோட்டையிலும், கடலூரிலும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

           கங்கையின் புனிதம் பெண்ணையில் கலப்பதால் அந்தப் புனிதத்தை, புண்ணியத்தைத் தமதாக்கிக் கொள்ளச் சுற்று வட்டாரங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்து ஆற்றில் நீராடி மகிழ்வர். மக்கள் மட்டுமல்ல அந்தப் பகுதிகளில் உள்ள திருக் கோவில்களிலிருந்து உற்சவ மூர்த்திகளும் வந்து நீராடும் காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களிப்பர்.. கடலூரைப் பொறுத்தவரை,. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், கரிநாள் (காணும் பொங்கல்) வெறும் நாள், திருநாள் எனப் பொங்கல் பண்டிகை ஆறு நாட்கள் நடைபெறும்.

source: https://www.tamilmalarnews.com/

           பெண்ணையாற்றுத் திருநாளன்று, வெள்ளை வெளேரென்று விரிந்திருக்கும் ஆற்றுப் படுகையில் காற்றாடி (பட்டம்) போட்டி மிகச் சிறப்பாக நடைபெறும். அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக, மாஞ்சா போடும் வேலை வெறு நாளில் நடைபெறும். பொங்கலுக்கு முன்பிருந்தே கண்ணாடி பல்புகளை உடைத்து அரைக்கத் துவங்கிவிடுவோம். முரட்டுத்துணியில் அதை சளிப்போம். கண்ணாடித்தூள் மைதாமாவு போல் வரும்வரை அரைத்துச் சளிப்போம். மாஞ்சா காய்ச்சும்போது அதில் வெவ்வேறு பொருட்கள் அரைத்துக் கலக்கப்படும். அந்த ஃபார்முலா கோகோகோலா ஃபார்முலாவை விட டாப் சீக்ரட். புதுச்சேரி, கடலூர், ஓ.டி. நெய்வேலி எனப் பல பகுதிகளிலிருந்து பத்து, பதினைந்து காற்றாடி டீம்கள் வரும். ஒருவர் ஃபார்முலா அடுத்தவருக்குத் தெரியாது.

           சின்னஞ்சிறுவர்கள் விடும் வால்கட்டி காற்றாடிகளை யாரும் அறுக்க மாட்டார்கள். மூங்கில் குச்சிகளை சீவி செய்யப்பட்ட கொக்கடி ( வால் கட்டாதவை) காற்றாடிகளுக்கு இடையே மட்டுமே டீல் நடக்கும். டீலின் போது பட்டம் விடுபவர் விரலில் மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் சொட்டும். எதைப் பற்றியும் கவலைப் படாமல், அடுத்தவன் பட்டத்தை அறுத்து அதைக் காற்றில் மிதக்கச் செய்யும்போது நாங்கள் அடையும் சுகத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

source: https://www.thehindu.com/news/national/tamil-nadu/high-on-fun-with-kites/article7624233.ece

           விழாவில் கூடும் ஆயிரக்கணக்கான மக்கள், கடலூரின் எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் நிழலில், குடும்பம் குடும்பமாக அமர்ந்து, இட்லி- பொடி ஆயில்,வெங்காய சட்னி, பூண்டு மிளகாய் சட்னி, சாம்பார், மசால் வடை ,புளிச் சோறு, எலுமிச்சை சோறு, சாம்பார் சோறு, தேங்காய் சோறு, தயிர்ச் சோறு எனத் தாங்கள் கொண்டு வந்த அன்னங்களை மற்ற குடும்பங்களோடு பகிர்ந்துண்டு மகிழ்வர். பல வண்ண பலூன்கள், பனங்கிழங்கு, பஞ்சு மிட்டாய், ரப்பர் மிட்டாய் , குச்சி ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ், கப் ஐஸ் என வித விதமான ஐஸ்கள், ஒரு  பக்கம் குடை ராட்டினம், மறுபக்கம் தொட்டி ராட்டினம்... ...எங்களின் பாடு படு கொண்டாட்டமாக இருக்கும்.

           வடக்குப் பகுதியில் ஒரு 50மீ. அகலத்திற்கு நீர் ஓடிக் கொண்டிருக்கும். அதை ஒட்டிய பகுதியில், கைகளால் மணலைத் தோண்டினால் ஊற்று சுரக்கும், அதைக் கூஜாவில் முகந்து வந்து குடித்து மகிழ்வோம். இன்றைய பாட்டில் தண்ணீரை விடக் குளிர்ச்சியாய், சுவையாய் இருக்கும். 

           இப்போதும் பெண்ணையாற்றுத் திருவிழா நடைபெறுகிறது. ஆற்றில் மணலும் இல்லை. இளைஞர்கள் இடையே மகிழ்ச்சியும் இல்லை

           அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......பெண்ணையே, பெண்ணையே, பெண்ணையே !!!தொடர்பு: திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)


கோவை மாநகர்... அன்றும் இன்றும் ...


——    துரை.சுந்தரம்


முன்னுரை:
          கவிஞர் புவியரசு. கோவை வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பேரூர் சாந்தலிங்கர் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்ற தமிழாசிரியர். கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நாடகங்கள் என இதுவரை 106 நூல்களை எழுதியுள்ளவர். சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவர். தேசியத் திரைப்பட வளர்ச்சித்துறையில் பணியாற்றியவர். இவ்வாறு, இயற்றமிழ், நாடகத்தமிழ் ஆகிய இரண்டிலும் வல்ல இத்தமிழறிஞர், கோவை விழா நிகழ்ச்சிகளின் தொடராக, 11-01-2019 அன்று கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவொன்றை ஆற்றினார். கோவையைப் பற்றித் தம் வாழ்க்கையோடு இயைந்த அனுபவங்களையும், கோவையைப் பற்றிய பல்வேறு செய்திகளையும் சுவையோடு பகிர்ந்துகொண்டார். கோவையின் பழமை எவ்வாறிருந்தது என்பதை இன்றைய தலைமுறை அறிந்து மகிழும் வண்ணமும், பழங்கோவையின் சாயலை, ஓரளவு தம் சொந்த வாழ்வில் கண்ட சில மூத்த குடிமகன்களின் நினைவைக் கிளறி மகிழவைக்கும் வண்ணமும் அமைந்த அவரது சொற்பொழிவிலிருந்து சில துளிகள் இங்கே.

சொற்பொழிவாளரின் இளமைப்பருவம்-கல்விச் சூழல்:
          கவிஞர் புவியரசு தம் இளமைப்பருவத்தை நினைவு கூர்ந்தமை, நாம் அன்றைய கோவை நகரின் சூழலையும், அன்றைய கல்விச் சூழலையும் அறிந்துகொள்ளப் பெரிதும் துணை செய்தது. அவரே கூறியது போல அவரது உரை வெறும் புள்ளி விவரம் அல்ல; அது ஓர் அனுபவம். உடுமலைக்கருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறப்பு. முதல் வகுப்பு படிக்கும் காலத்தில், கோவை நகரில் இருப்பு. கோவையில் இன்றும் “மாட்டாசுபத்திரி”  என்ற பெயரில் வழங்கும் கால்நடை மருத்துவமனையின் அருகில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆசிரியர் அடித்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். ஓராண்டுகூட நிறைவுறவில்லை. ஏதோ காரணம்பற்றி, இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான காலகட்டத்தில் பள்ளி செல்லவில்லை. பின்னர், இடையர் வீதியில் இருந்த எஸ்.ஆர். சந்திரன் பள்ளியில் (S. R. CHANDRAN PREPARATORY SCHOOL) ஆறாம் வகுப்பில் சேர்ந்தார்.  ஐந்து வகுப்புகள் படிக்காத நிலையில் பாடங்கள் எவையும் படியவில்லை. இந்நிலையில், கோவையில் “பிளேக்” (PLAGUE) என்னும் கொள்ளை நோய் பரவியது. படிப்பு நின்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நகராட்சிப் பள்ளியில் (CITY MUNICIPAL HIGH SCHOOL)  நேரடியாக எட்டாம் வகுப்பில் சேர்க்கை. இப்பள்ளி, பெரும் விளையாட்டு வீரர்களைத் தந்திருக்கிறது. இவருக்குக் கணக்குப்பாடம் தெரியாது. ஆனால், கணக்கு ஆசிரியர் ஒவ்வொரு கணக்கையும் தாமே போட்டுக் காண்பித்துக் காண்பித்து மாணவர்களுக்குக் கணக்குப் புகட்டினார். கணக்கு ஆசிரியரை மறக்கவியலாது. காரணம் செந்தமிழில் பேசுவார். கோவையின் கல்விச் சூழல் பற்றி ஒரு குறிப்பு.  கோவையில், 1860-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியக் கிறித்தவச் சபையாரின் செயிண்ட் மைக்கேல் பள்ளியில் (ST.MICHAEL’S)  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிறித்தவரல்லாதார் அப்பள்ளியில் சேர இடம் கிடைக்காத சூழலில், கோவையின் நாயுடு வகுப்புச் செல்வர் ஒருவர் கோவை பீளமேட்டில், 1924-ஆம் ஆண்டு, அனைத்துச் சமயத்தாரும் கல்வி பயிலப் பள்ளி ஒன்றை அமைத்தார். சர்வ ஜன உயர்நிலைப்பள்ளி என அதற்குப் பொருத்தமானதொரு பெயரையும் இட்டார்.

          கவிஞர் புவியரசு அவர்கள் பின்னர் அரசு கலைக் கல்லூரியில் இடைநிலைப் பட்டம் (Intermediate) பெற்றார். இராமச்சந்திர ஐயர் என்னும் ஆசிரியர் கல்லூரியின் ஆய்வுக்கூடப் பொறுப்பாளராக இருந்தார்; ஆய்வுக்கூடப் பொருள்களில் கண்ணாடிப்பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த, பதப்படுத்தப்பட்ட மனிதத்தலையும் ஒன்று. சக மாணவர்களின் மிரட்சிக்கிடையில், அதை அச்சமின்றிக் கையில் எடுத்துக் காண்பித்த அனுபவம் கவிஞருக்குண்டு. ஆய்வுக்கூடத்தில் இருந்த இன்னொரு பொருள் மனித எலும்புக்கூடு. கைகளும், கால்களும் சிறு சிறு பகுதிகளாகத் திருகு ஆணிகளால் மூட்டப்பெற்றவையாக இருந்ததால், கவிஞர், நாள்தோறும் கைகளை வெவ்வேறு நிலைகளில் பொருத்தி வைத்து மகிழ்வாராம். ஒரு நாள் கை குவித்து வணங்கும் மனித எலும்புக்கூடு மறுநாள் வேறொரு தோற்றத்தில். இன்னொரு ஆசிரியர் சுப்புரத்தின ஐயர்; தலை முழுக்க முடியற்ற தோற்றம். உச்சியில் ஒரு சிறு குடுமி. புவியியல் (GEOGRAPHY) கல்விக்கான ஆசிரியரான அவர் தன் தலையையே பாடத்துக்கான கோளமாக வடிவமைத்துக்கொண்டு உலக நாடுகளைக் காட்டிக் கல்வி பயிற்றுவார் எனக் கவிஞர் கூறுகையில் அவையில் சிரிப்பலைகள்.

          அக்காலக் கோவையில் கல்வி, தரம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. எல்லாரும் படித்தனர். மணி மணியான ஆசிரியர்கள். கல்விக்குப் பெரிய மரியாதை இருந்த காலம் அது. இன்று அந்த மரியாதை காணாமல் போயிற்று. அக்காலக் கோவையில், பிச்சைக்காரர்கள் கூடப் படித்தவராயிருந்தனர். பக்திப் பாடல்களைப் பாடிப் பிச்சை எடுத்தனர்.


source:   https://www.quora.com/What-are-some-rare-pictures-of-Coimbatore


          கவிஞரின் சிரு பிள்ளைப் பருவத்தில் கோவை நகரம் மிக அமைதியான இடமாக இருந்தது. வெறிச்சோடிய சாலைகள். எங்கோ ஒலிக்கும் மிதிவண்டியின் மணிச் சத்தம். அல்லது குதிரை வண்டிகளின் சத்தம்.

கோவையின் மையப்பொருள்-பருத்தி:
          கோவையின் இயக்கம் பருத்தியை மையமாகக்கொண்டே சுழன்றது. ஒரு பக்கம் பஞ்சாலைகள்; ஒரு பக்கம் நெசவாளர்கள். கருங்கண்ணி, கம்போடியா என இருவகைப் பருத்தி. பருத்திச் செடிகள் அழகான மலர்களைக் கொண்டிருந்தன. பருத்தியிலிருந்து, விதை தனியாகவும் பஞ்சு தனியாகவும் பிரிக்கும் பணிக்கு ஜின்னிங் ஆலைகள் (GINNING MILL). அதை அடுத்து, நூல் நூற்கும் பணிக்கு நூற்பாலைகள் (SPINNING MILL). பின்னர் நெசவாலைகள். கோவை எங்கும் கைத்தறி நெசவு. நெசவுத் தொழில் நடக்கும் இடங்கள், பேட்டைகள் எனப் பெயர் கொண்டன. கோவையின் மையப்பகுதியில் தெப்பக்குளம் மைதானம் அமைந்திருந்தது. மைதானத்திலும், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களிலும் பாம்பு போல் நீண்டு கிடக்கும் சேலை வடிவில் விரித்து வைத்த நூல் பாய்கள்.

முதல் பஞ்சாலையும் பஞ்சாலைப் போராட்டமும்:
          நூலிழை அறுந்து போகாமல் இருக்கும்படி சரியான அளவில் ஈரப்பசை இருக்கும் பகுதி கோவைப்பகுதி. எனவே, பஞ்சாலை அமையத் தகுதியான இடமாகக் கோவை இருந்தது. கோவையின் முதல் ஆலை ஸ்டேன்ஸ் பஞ்சாலை. உரிமையாளர் ஸ்டேன்ஸ் துரை. அவருக்குப் பஞ்சாலைக்கான நிலம் கொடுத்தவர் சேலம் நரசிம்மலு நாயுடு என்பவர். “விக்டோரியா அச்சகம்”  என்னும் பெயரில் முதல் அச்சகத்தை நிறுவியவர். தொண்ணூற்றாறு நூல்களை எழுதியவர். ஸ்டேன்ஸ் பஞ்சாலை இயங்கியபோது, சொற்பொழிவாளர் கவிஞர் புவியரசு அவர்கள், ‘சிட்டி யூனியன்’ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஸ்டேன்ஸ் பஞ்சாலையைத் தொடர்ந்து கோவையில் மொத்தம் நூற்றுப்பத்து ஆலைகள் தொடங்கப்பட்டு இயங்கின. நூறாம் எண் பருத்தி இழை கோவையில்தான் முதன்முதலில் நெய்யப்பட்டது.

Stanes mill

source:   https://www.quora.com/What-are-some-rare-pictures-of-Coimbatore


          பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு முறை நடந்தது. போராட்டம் வலுத்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியும் இங்கு நடந்தது. போராட்டத்துக்கு ஆதரவாக இரயில் வண்டி ஓட்டுநர் ஒருவர் இரயிலை நிறுத்திவிட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது.

திரைப்படக் கலையும் கோவையும்:
          திரைப்படக் கலைக்கு முன்னோடி கோவையே. பிரஞ்சுக்காரன் ஒருவன் திரையில் படம் காட்டும் ஒரு கருவியோடு திருச்சி-பொன்மலையில் சலனப் படக்காட்சிகளைத் திரையில் ஓடவிட்டதைப் பார்த்து அதில் மனதை ஈடுபடுத்திய வின்சென்ட் அவர்களை இங்கு நினைவு கூரவேண்டும். அந்தக் காலத்தில் ஆறாயிரம் ரூபாய்ப் பணம் கொடுத்து அந்தப் பிரஞ்சுக்காரனிடம் திரைப்படக் கருவியை (PROJECTOR) விலைக்கு வாங்கித் தம் தோள்களில் சுமந்தவாறு ஊர் ஊராய் அலைந்து சலனப்படத்தை மக்களிடம் காட்டியவர் அவர். ஆப்கானிஸ்தான் வரை அவர் சென்றதாகக் கேள்விப்படுகிறோம்.


Variety Hall Theater

source:   https://www.quora.com/What-are-some-rare-pictures-of-Coimbatore


         பிரிட்டிஷ் மகாராணியாரின் அரண்மனையின் தோற்றத்தை ஒத்த வடிவத்தில், “வெரைட்டி ஹால்”  (VARIETY HALL)   என்னும் பெயரில் திரைப்பட அரங்கு ஒன்றை அவர் கட்டுவித்தார்.  அதில் சலனப்படங்களை ஓடவிட்டார். பேச்சொலி இல்லாத ஊமைப்படங்கள். ’கார்ட்டூன்’ படங்கள் வெளியிடப்பட்டன. MEGAPHONE என்னும் ஒலிபெருக்கி மூலம் படங்களின் கதையை, உரையாடல்களைக் கலைஞர் ஒருவர் திரைக்கு முன் உள்ள மேடைப்பகுதியில் நின்றுகொண்டு பேசிக் காட்சிகளை விளக்குவார். “வெரைட்டி ஹால்”  (VARIETY HALL)   என்னும் பெயருக்கேற்ப அந்த அரங்கில் சலனப்படத்தைத் தவிர்த்து, ஆங்கிலோ-இந்திய மக்களின் “BALL”  என்னும் உள் அரங்க நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்தத் திரையரங்கு இருக்கும் அதே வீதியில் பின்னர் “எடிசன்” என்னும் பெயரிலும் ஒரு திரையரங்கு கட்டப்பெற்றது. சலனப்படத்தின் அடிப்படையைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனை நினைவூட்டும் வண்ணம் இப்பெயர் இடப்பெற்றது எனலாம். பின்னாளில், இந்த அரங்கு “சாமி தியேட்டர்” என்னும் பெயரில் இயங்கி இன்று மறைந்து போனது. மலையாளப் படங்களுக்கென்றே “சீனிவாஸ்”  திரையரங்கும்,  ஆங்கிலப்படங்களுக்கென்றே “ரெயின்போ”  திரையரங்கும் இயங்கின. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  கட்டுரை ஆசிரியர் கோவையில் 1964-ஆம் ஆண்டு, கல்லூரிப்படிப்புக்காகக் கோவை வந்தபோது, இந்த “சீனிவாஸ்”  திரையரங்கு முற்றிலும் ஆங்கிலப்படங்களைத் திரையிடும் அரங்காக மாறிவிட்டிருந்தது. அத் திரையரங்கு, திரையரங்குக்கான பெரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கவில்லை ஒரு சிறிய மாளிகை  (BUNGALOW) போன்றிருக்கும். ஒரு வீட்டுக்குள் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வே ஏற்படும். 1964-ஆம் ஆண்டில் அத்திரையரங்கில், ஆங்கிலப்பட இயக்குநர் ALFRED HITCHHOCK- இன்   “THE BIRDS”  என்னும் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்ததை மறக்க இயலாது.)

          வின்சென்ட் அவர்கள், பின்னர்  ”லைட் ஹவுஸ்”  (LIGHT HOUSE) என்னும் பெயரில் ஒரு திரையரங்கத்தைக் கட்டுவித்தார். கலங்கரை விளக்கத்தைக் குறிக்கும் இப்பெயருக்கும் கலங்கரை விளக்கத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. திரை அரங்கின் உட்புறக்கூரை முழுதும் வானத்தைப்போலக் காட்சிதரும் வண்ணம் நிலா, விண்மீன்கள்  ஆகியன விளக்கொளிகளின் மூலம் காணுமாறு அழகூட்டப்பெற்றிருந்தது. அரங்கின் பக்கவாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்ட சிலைகளின் மீதும் விளக்கொளி பட்டு மிளிர்ந்தது. எனவே, ‘விளக்குகளின் மாளிகை’  என்னும் பொருளில் திரையரங்குக்கு இப்பெயரிடப்பட்டது இன்று பலருக்கும் தெரியாது. அந்தத் திரையரங்கு பின்னாளில் “கென்னடி தியேட்டர்”  என்று இயங்கித் தற்போது இல்லாமலே மறைந்த பின்னும், திரையரங்கு இருந்த வீதி இன்றளவிலும் ‘லைட் ஹவுஸ்” வீதி என்றே வழங்கி வருகிறது.

          கோவை, திரைப்படக்கலையில் முன்னோடியாகத் திகழ்ந்தது பற்றி முன்னரே குறிப்பிட்டோம். கோவையில், ”பட்சிராஜா”, ”சென்ட்ரல்”  ஆகிய படப்பிடிப்பு நிலையங்கள் பெரிய வளாகங்களுடன் இருந்தன. பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். போன்ற பல நடிகர்கள் நடமாடிய நகரம் கோவை. கோவையைச் சேர்ந்த வேல்சாமிக் கவிராயர் என்பார், அக்காலத்தே சேலம் “மாடர்ன் தியேட்டர்ஸ்”   படப்பிடிப்பு நிலையத்தில் இயக்குநராய் இருந்தார். சிறப்பானதொரு நிலைக்கு உயர்ந்த அவர், பின்னாளில், அன்னார் ஒருவர் இருந்தார் என்ற தடயமே இல்லாமல் வீழ்ச்சியுற்றார்.

நாடகக் கலையும் கோவையும்:
          நாடகக் கலை என்பது அற்புதமான ஒரு கலை. அது, கோவையில் சிறப்புற்றிருந்தது. எம்.ஆர்.இராதாவின் நாடகங்கள் அரசியல் பரப்புரைக்காகப் பெயர்பெற்றவை. நாளும் நாடகத்தில், அரசியல் தொடர்பான சாடல்களுடன் உரையாடல்கள் அமைந்திருக்கும். முதல் நாள், குறிப்பிட்ட சாடலுக்காகக் காவல்துறையினர் நெருக்கடி அளித்தால், அடுத்த நாள் வேறொரு உரையாடல் மூலம் சாடல் தொடரும். நாடகம் ஒன்றே. கதை ’தூக்குத் தூக்கி’ யாக இருக்கும். ஆனால் அரசியல் உரையாடல்கள் இடை புகும். மக்களின் பேச்சு இலக்கியப்பேச்சல்ல.  நாடகப்பேச்சாகவே இருக்கும். டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவின் பணி குறிப்பிடத்தக்கது. டி.கே. சண்முகம் அவர்கள் கோவையில் “சண்முகா”  நாடக அரங்குக் கட்டிடத்தைக் கட்டுவித்தார். அரங்கின் மேடை பெரியதொரு மேடை. நாடகக் காட்சிகளில் மெய்யாகவே வண்டிகள் மேடையில் வரும். இரவோடிரவாக நாடகக் கதையை உருவாக்கிய நாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். அறிஞர் அண்ணாவும் அவ்வாறு எழுதிய “ஓர் இரவு”  நாடகம் இங்கு அரங்கேறியுள்ளது. சொற்பொழிவாளர் கவிஞர் புவியரசு அண்ணாவுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார்.

          முன்னர்க் குறிப்பிட்டவாறு, கவிஞர் புவியரசு அவர்களும் ஒரு நாடக ஆசிரியரே. ஆண்டு முழுதும் இருபத்தைந்து நாடகங்களுக்குக் குறையாமல் நாடகங்கள் அரங்கேறும். நாடகங்களின் போட்டியும் பரிசுகளும் உண்டு. புவியரசு அவர்களின் ஒரு நாடகம் பதினாறு முதற்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. “சலங்கை” என்னும் பெயரில் புவியரசு அவர்கள் எழுதிய நாடகம் (தேவதாசிகள் பற்றியது) வாதங்களுக்கு இடமளித்ததும், பெரும் கண்டனங்களுக்கு உள்ளானதும் நிகழ்ந்தன. புவியரசு அவர்கள், பின்னர் நாடகப்போட்டியின் நடுவராக இயங்கியதும் உண்டு. “செம்மீன்”  திரைப்படப் புகழ் நடிகை ஷீலா, கோவையில் போத்தனூரில் வாழ்ந்தது, அவரைப் புவியரசு அவர்கள் நாடகத்துக்கு அழைத்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். நாடகச் சம்பளமாக எழுபது ரூபாய்ப் பணமும், போக்குவரத்துக்கான குதிரைவண்டிக் கூலியாகப் பணம் ரூபாய் பதினைந்தும், முன்பணமாக முப்பது ரூபாய்ப் பணமும் ஷீலாவுக்குக் கொடுக்கப்பட்டது.

(கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  நடிகை ஷீலா, கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வந்தார் என்று புவியரசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டபோது, கட்டுரை ஆசிரியரும் தம் பள்ளி நாள்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளின் காலம். கட்டுரை ஆசிரியரின் சொந்த ஊரான அவிநாசியில் அவரது சிற்றப்பாவான “அன்புவாணன்”  என்பவர் -  இடைநிலை ஆசிரியர் (SECONDARY GRADE TEACHER) பயிற்சிப்பணி  -  அவிநாசியில் இருந்த நாடக ஆர்வலர்களைக் கொண்டு “பொன்விலங்கு”  என்னும் புதுமைத் தலைப்பில் நாடகம் ஒன்றை ஆக்கி, அதில் நடிகை ஷீலாவைக் கோவையிலிருந்து வரவழைத்து நாடகம் நிகழ்த்தினார். அந் நாடகத்தை நேரில் பார்த்த நினைவும், நாடகத்தின் இடை நேரத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், டி.ஆர். இராமச்சந்திரனும் நாடகத்தைச் சிறிது நேரம் பார்த்துப் பாராட்டிவிட்டுக் கோவை நோக்கிப் பயணப்பட்டதைக் கண்ட நினைவும் கட்டுரை ஆசிரியருக்குப் பசுமைப் பதிவு. பொன்விலங்கு என்னும் புதுமைத் தலைப்பை முதலில் அறிமுகப்படுத்தியவர் அன்புவாணன் அவர்களே. பின்னாளில், இந்தத் தலைப்பில் நா.பார்த்தசாரதி அவர்கள் நாவல் ஒன்றை எழுதினார் என்பது நாம் அறிந்ததே.)

Avinashi Road

Now :

source:   https://www.quora.com/What-are-some-rare-pictures-of-Coimbatore


கோவை இன்று எவ்வாறு இருக்கிறது?
          படைப்பிலும் கலையிலும் எழுச்சிபெற்ற அந்தக் கோவை இன்று எங்கே? நூற்றுப்பத்து ஆலைகள் இருந்தனவே; அவை என்னவாயின?  எப்படி மறைந்தன? நெசவால் செழித்த, நெசவாளர்களால் உருவாக்கப்பெற்ற நகரம் இன்றைக்கு என்னவாயிற்று?  பெரியதொரு கேள்வி. விடை காண இயலவில்லை. இன்று, இரண்டும் கெட்டானாய் போய்க்கொண்டிருக்கிறது. நாசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை வேறு புலத்திலிருந்து மக்கள் பெயர்ந்து கோவைக்கு வருதல் நிகழ்ந்துகொண்டு வருகின்றது. கோவைக்கென்று ஒட்டுமொத்தமான கருத்து, தெளிவு என்பது காணப்படவில்லை. சொற்பொழிவாளர் நகைச் சுவையாகச் சொன்ன ஒரு கருத்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இன்றையத் திரைப்படத்துறையினர் கூறுவதுபோலத் திரைப்படங்கள் பற்றிய கோவை மக்களின் கணிப்பைப் புரிந்து கொள்ள இயலவில்லை. கோவை இன்று பெரியதொரு மருத்துவ நகரமாகத் திகழ்கிறது. உண்மை. ஆனால் மருத்துவச் செலவு?  எந்த ஒரு நாடு மருத்துவத்தையும், கல்வியையும் இலவசமாக வழங்குகிறதோ அந்த நாடுதான் மெய்யான “ஜனநாயக”  நாடு. பிரிட்டனும், ஜெர்மனியும் அத்தகைய நாடுகள்தாமே.

கோவை நாளை எவ்வாறிருக்கும்?
          நாளை என்பது எவ்வாறிருக்கும்?  நம் வீட்டில் செவிட்டுப் பிள்ளைகள் பிறப்பார்கள். நாம் உண்மையில் கால்களைக்கொண்டு நடக்கிறோமா?  நம் கால்களின் விரல்கள் மண்ணில் பதிகின்றனவா? இல்லை. நாளை, கால் விரல்கள் இல்லாப் பிள்ளைகள் பிறப்பார்கள். பயன்படுத்தாத விரல்களுக்குப் படைப்பு இருக்காதல்லவா? மக்கள், தனித்தனியே பறப்பார்கள்.

          அறம் இருக்காது. ஒழுக்கம் இருக்காது. அநியாயத்தை நியாயப்படுத்துவோம். கைப்பேசிகள் என்னும் செல்பேசிகள் நமது சாத்தான்களாய் மாறிவிட்டிருக்கும் காலம் இது. இவற்றால் நிச்சயம் நமக்கு நன்மை நிகழாது.

          முப்பது ஆண்டுகளுக்கு மேல் உலகம் இருக்காது; அழிந்து போகும். இதைக் கவிஞர் சொல்லவில்லை. மூளைப்பகுதியைத் தவிர உடம்பின் அத்தனை வெளி உறுப்புகளும் வளைந்து மடிந்து முடங்கிப்போன நிலையில், சிந்தனை மட்டுமே உயிரோட்டமாய், ஒரு நாற்காலியில் சுருண்டு கிடந்த ஒரு சிறந்த அறிவியல் மேதை -  அண்மையில் மறைந்து போனாரே - ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (STEPHEN HAWKINS) அவர் சொன்னது. உலகம் அழியும்; ஆனால் நாய்கள் சாகா.

முடிவுரை :
          மனிதனுக்கு மரணம் அருகில் இருக்கும்போது மனிதம் இருக்கும்.

தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.

Saturday, January 19, 2019

தமிழ் ஆள; தமிழ் பேசு...

—  வித்யாசாகர்


          ஜென்மராஜ், ப்ரஷாத், ஹரிஷ், ஹிருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இவையெல்லாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு.          என்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் பொருத்து மொழியும் பல மாறுதலுக்கிணங்க தானே திரிந்தும் கலந்தும் விடுகிறது. எனவே எதையும் முற்றிலும் தமிழில்லை என்று அகற்றிவிடலாமா? அல்லது தனித்தமிழ் அல்ல என்று ஒதுக்கலாமா? எல்லாம் தமிழ்தான் ஆயினும் கலப்புத்தமிழ் இல்லையா என்று வருந்தியே நகர்வதா???

          இவையெல்லாம் சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் பிற மொழிச் சொற்கள் அல்லது பிற மொழிக் கலாச்சாரத்தால் வந்த சேர்ப்புகள் இல்லையா ? என்றாலும், அனைத்து மொழிக்குமே தாய் ‘நம் ஆதி மொழி’ தமிழ் தான் என்பதிலும் எண்ணற்றோருக்கு உலகளவில் மாற்றுக் கருத்தில்லையே.          எனவே இவையெல்லாம் தமிழுக்கு பிறமொழிகளிடமிருந்து வந்துள்ளது என்பதை விட, தமிழிலிருந்து தான் பிற மொழிகள் வந்துள்ளன என்பதை உலகமே இதோ மெல்ல மெல்ல ஏற்று வருகிறது. இவ்வருட கனடா ஜப்பான் லண்டன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் என உலகளாவிய பல பொங்கல் தினக் கொண்டாட்டங்களும் அதற்கொரு சான்று.

          என்றாலும் குழந்தைகளுக்கு பெயரிடுகையில், விளக்கமளிக்க அவசியமற்றவாறு தனித்தமிழில் மிக அழகாக எவ்வித சார்புமற்று வைக்கலாம். வெண்ணிலா, அறிவு, செல்வன், மதிநிறை, குறள், அருவி, மல்லி.. என்றெல்லாம்.

          வெள்ளைக்காரர்கள் இப்படித்தான் அவர்கள் மொழிக்கு நிறைவாக, ஸ்டவ், ஸ்ட்ரீட், ட்ரீ, ஸ்டீல், கேவ், மூன், கேட், ஃபிஷ், ஜாஸ்மின், காட் என்றெல்லாம் வைக்கிறார்கள்.

          நாம் கூட முன்பு இப்படியெல்லாம் வைத்திருந்தோம்; சிவப்பு, செவலை, கருப்பு, தேனு, அடுப்பு, பறி, சூரியன், சந்திரன் என்றெல்லாம் நிறைவாக நம் சொல்லினிக்க மொழியினிக்க வைத்திருந்தோம்.

          ஏனென்றால்  பெயர் என்பது ஒருவரை அழைக்க, குறிப்பிட என்றாலும் வாழ்நாள் முழுவதும் வெற்றி வெற்றி என்று அழைப்பதொரு போற்றுதலும் இல்லையா? தாத்தா போல வரவேண்டும், பாட்டி போல இருக்க வேண்டும், சூரியனைப்பொல ஒளிர வேண்டும், அருவி போல நிறைய வேண்டும் எனப் பலவாறு எண்ணற்ற மேற்கோள்கள், எதிர்பார்ப்புகள், நன்னெறி கொண்ட சிந்தனைகள், மொழிச் சீர் கொண்ட சொற்கள், பலவகைகள், தவிர நேர்மறை எண்ணங்கள் புக, வர, வளர என பல ஆழப் பார்வை பெயர் வைக்கையில் உளம்நிறைவதுண்டு.

          இடையே கூட ஒரு குழந்தைக்கு ‘மதிநிறைச் செல்வன்’ என்று வைத்தோம், அவர்கள் வீட்டில் மதி என்றழைக்கிறார்கள், அழைக்க ஏதுவாக இருக்குமென்று.

          அப்படி மதி, குயில், அகில், முகில், குறள், வெள்ளி, வாணி, அருள், மணி, சுடர், பாரி, ஓரி, நீதி, கொடை, தனம், அன்பு, நதி, மணி, முத்து, மரகதம், பவளம், குழலி, எழிலி, குறளி, வெண்பா என எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் பெயர்கள் மிகச் சிறப்பாக நம்மிடையே உண்டு அவற்றையெல்லாம் நாம் பார்த்து பார்த்து வைத்துப் பழக பழக மேலுள்ள கலப்புவகைப் பெயர்களின் மீதான ஆசை தானே ஒழியும். பின் பழக்கமும் அங்ஙனம் மெல்ல மாறிவிடும்.

          பிறமொழி புகுதலை தடுத்து நிறுத்துகையில் தான் நம் மொழியின் வளம் மிகப் பெருகும். இது நமது தமிழுக்கென்று மட்டுமல்ல அவரவர் தாய்மொழிக்கும் பொருந்தும்.

          வெறுமனே, ஒரு எண்ண பரிமாற்றம் தானே மொழி என்றெண்ணக்கூடாது. தகவலறிவிக்கத் தானே என்று விட்டுவிடலாகாது தமிழை நம்மால். மொழி தான் நிலத்தைப் பிரிக்கிறது என்பார் ஐயா கவிஞர் வைரமுத்து.

          அங்ஙனம் நிலம் பிரிகையில் இனம் மாறிவிடுமோ எனும் நெடிய பதட்டம் இருக்கிறது. சான்றுகளை நாம் பல மாநிலப் பிரிவுகளின் வழியே கண்டுதான் வருகிறோம். அன்று நாம் சேர்ந்து கட்டிய நதியிலிருந்து வரும் தண்ணீரின்றி மொழிவாரியாகப் பிரிக்கப்படுகிறது.

          ஆக, இனம் மாறிக்கொண்டால் பழக்கவழக்கங்கள் சிதையும். அல்லாது, வெற்றிக் குவிப்புகள் இடம் மாறிவிடும். வரலாறு பிழையாக பிழையாக பேசப் புறப்பட்டு விடுவர் பலர். எண்ணற்ற குழப்பங்கள் மொழி திரிவதால் காலமாற்றங்களிடையே நிகழ்ந்துவிடும்.

          எனவே மொழிமீது அக்கறை கொள்ளுங்கள். அவரவர் மொழிமீது அவரவர் அக்கறை கொள்ளுங்கள். தெலுங்கு பேச சந்தர்ப்பமோ, ஹிந்தி பேச சூழலோ, ஆங்கிலம் பேச கட்டாயமோ இருப்பின் அங்கே கசடற பேசுவோம். பேசப் பயிற்சி எடுப்போம்.

          பல மொழி கற்றுக்கொள்வது பல மனிதர்களைப் புரிய அணுக ஏற்க மறுக்க வாதிடச் சொல்லித்தர வணிகம் செய்ய தேவைப்படும். பிற மொழிகளைக் கற்றல் என்பது திறனைக் கூட்டும். அவர்களின் பண்பாடு, வரலாறு உயர் குறிப்புகள் என அனைத்தையும் அறியலாம் தவறில்லை.

          ஆனால் எவ்வாறு அம்மொழிகளைக் கற்று மிக நேர்த்தியாகப் பேசுகிறோமோ; அங்ஙனம் நம் மொழியையும் அதன் செழுமையோடு பேசுவதும் உச்சரிப்பதும் எழுதுவதும் பகிர்வதும் இன்றியமையாத ஒன்றாகும். எம்மொழியும் செறிவோடு பேசுகையில் கேட்கையில் அழகுதாம்.

          ஆயினும் நமக்கு நமது தமிழ் மிகச் சிறப்பான ஒன்றாகும். மூப்பு நிறைந்த நமது மொழியைப் பிற மொழிகளைக் கலந்து சிதைப்பது நல்ல அறிவன்று. நீங்களே அதைத் தனித்து தமிழில் பேச பேச முற்றிலும் உணர்வீர்கள்.

          எனவே முதலில் நேரம் சொல்வதில், வழி சொல்வதில், பெயரிடுவதில், தொழில் துவங்குவதிலிருந்து துவங்குங்கள். இவை தான் இன்றைய முழுச் சான்றுகள் நாம் நமது அழகு தமிழை சிதைத்துவிட்டோம் என்பதற்கு.

          எனவே அங்கிருந்து துவங்கி எங்கும் நிறைந்த மொழி எம் தமிழை ஒரு தமிழரின் மரபு அறிய, மறம் உணர்த்த, மாண்பு நிலைக்கத் தூக்கி பிடித்திருப்போம். தவறில்லை. மெல்ல மெல்ல வெறியின்றி குழப்பம் விடுத்துத் தெள்ளு தமிழில் பேசி நமக்குள் நாம் மகிழ்வோமே உறவுகளே.

          தவறாக எண்ணாதீர்கள், இவையெல்லாம் என் அறிவிற்குப் பட்டது. எல்லாம் சரியென்றில்லை. பிற கருத்துக்களும் அமையலாம். அவரவர் கருத்தை நான் ஏற்கத் தயார் எனினும் தமிழ் நம் மூலம் என்பதை எல்லோருமே அறிகிறோம், பிறகதை அழகுறப் பேசுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு தமிழை எப்போதும் நம் இனியதொரு அடையாளமாக வைத்திருப்பதற்குத் தயங்குவானேன்.

          குறைந்த பட்சம் வீட்டில் பிறமொழி கலப்பின்றி பேச முயலுங்கள். நண்பர்களோடு உறவினர்களோடு அக்கம்பக்கம் பழகுகையில் தூய தமிழ்பேசி பழகுங்கள். குழந்தைகள் நம்மிடம் பேசுகையில், குழந்தைகளிடம் நாம் பேசுகையில், குழந்தைகள் பிறரிடம் பேசிப் புழங்குகையில் பிறமொழி கலவாமல் பேசச் சொல்லிக்கொடுங்கள்.

          குழந்தைகள் நம் வரம். தமிழ் அவர்களுக்கு நாம் தரும் வரம். அதை உடைக்காது தருவோமே? எனக்கு நம்பிக்கையுண்டு; இப்போதெல்லாம் நம் மக்கள் மிக அறிவாகச் செறிவாக பாரம்பரியம் கெடாது வாழத்துவங்கி விட்டனர். எனவே தமிழையும் அழகாக உணர்வோடு சேர்த்து கலப்பின்றி பேசி மகிழ்வாரென்று எனக்குப் பெரிய நம்பிக்கையுண்டு.

          என்றாலும் ஒன்று உண்மை. மொழி சார்ந்து நாமெல்லாம் சிந்திக்க பழகிவிட்டோம். இனி; நம் காதுகளில் பேசக்கேட்கும் பேசப்படும் தமிழும் மேலும் இனித்துவிடும் என்பது சத்தியம்.

          அதற்கு நன்றி. வணக்கம். வாழ்க!!


குறிப்பு: நீ முதலில் வித்யாசாகர் என்ற பெயரை தமிழில் வையிடான்னு திட்டி விடாதீர்கள். ஒன்று; வித்யா என்பது அன்று என் இறந்த தங்கையின் பெயர். அதனால் இன்று எனது மகளின் பெயர். எனவே அஃதென் பெயரும் கூட... எல்லாவற்றையும் விட, அறிவுக்கடல்னு தமிழில் வைத்தால் மிக அதீதமாகிவிடலாம். நான் கடல் அல்ல; நீங்களெல்லாம் கலந்திருக்கும் கடலின் ஒரு துளி.தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)


Thursday, January 17, 2019

வரலாற்றுக்கான உரிமை...


——  ஆர்.பாலகிருஷ்ணன், இஆப"வரலாறு கிடக்கிறது
அது என்ன 
வாழ்வாதாரமா?" என்று
கடந்து செல்லலாம்
கண்டு கொள்ளாமல்...

ஆனால் அப்படி
கடந்து செல்லவேண்டாம்.

வரலாறு
வாழ்ந்ததற்கான ஆதாரம்...

யார் யாரோ 
அரியணை ஏறிய தேதியும்
அமரரான‌ தேதியும்
அவர்களின்
அந்தப்புரத்து மக்கள் தொகையும்
அல்ல நமது அக்கறை.

இது நமது வரலாறு.
நமக்கான வரலாறு.
வேர்கள் பற்றிய
விசாரணை.

எத்தனை மலைகள்
ஏறி‌ இறங்கினார்கள்
பாரியின், ஓரியின்
முன்னோர்கள்..

எத்தனை‌‌ தலைமுறைகளின்
கதைகளை 
கருவில் வைத்து 
கடத்திவிட்டார்கள் 
அவ்வைப் பாட்டிகள்...

இதோ 
நோகாமல் நொங்கு
எடுக்கிறார்கள்
போலி வரலாற்றுப்
பொய்த் தரகர்கள்.

எழுதி "வைத்தது" தான்
வரலாறு என்றால்
23 ஆம் புலிகேசிகள் தான்
எப்போதும் நாயகர்கள்.

இதோ.
மொகஞ்சதாரோவின்
'நடன மங்கை' யின்
வளையல் கைகளில்..
இன்னும் வாசிக்கப்படாத
"வரலாற்றின்"‌வசீகரம்.

கீழடியின் 
ஆழ அடுக்கில் 
அகழ்ந்தெடுத்த‌ பானையில்
இன்னும்
மிச்சம் இருக்கிறது 
பொங்கலின் வாசம்.

இது 
வெறும் பெருமை அல்ல
நமது
வரலாற்றுக்கான உரிமை...source: https://en.wikipedia.org/wiki/Dancing_Girl_(sculpture)#/media/File:Dancing_girl.jpg


— ஆர்.பாலகிருஷ்ணன், இஆப.,  புவனேஸ்வரம்.

Tuesday, January 15, 2019

இலங்கையில் தமிழ் மரபு அறக்கட்டளை ...

வணக்கம்.
 
2018ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இலங்கைக்கான நமது பயணம். நீண்ட நாள் திட்டமாக இருந்த இலங்கைக்கான பயணமும், களப்பணிகளும் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை இலங்கையில் உருவாக்கம் பெற தொடக்கப்புள்ளியாக அமைந்திருக்கின்றது.

இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய செயலமர்வு யாழ் பல்கலைக்கழக விரிவுரைமண்டபத்தில் 29.10.2018 அன்று நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளையை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் பல்கலைக்கழகத்தில் தொடக்கினோம். இந்த நிகழ்வில்  துணைவேந்தரின் பிரதிநிதியாக வந்து வாழ்த்துரை வழங்கினார் சித்தமருத்துவத்துறையின் தலைவர் பேரா.மிகுந்தன். அவரோடு  கலைப்பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.சுந்தர், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்ணம்,  தமிழ் மரபு அறக்கட்டளை இலங்கை பொறுப்பாளர் ஆசிரியர்.வாலண்டீனா இளங்கோவன், முனைவர்.க.சுபாஷிணி,   பேராசிரியர்.நா.கண்ணன்,  எழுத்தாளர் மதுமிதா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்தப் பயணத்தின் போது இலங்கையின் யாழ்ப்பாணத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளான யாழ் நூலகம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, டச்சுக் கோட்டை, கந்தரோடை, நல்லூர் கந்தசுவாமி கோயில், கீரிமலை, சங்கமித்திரை முதன் முதலாக வந்திறங்கிய பகுதி என அறியப்படும் மாதகல், குறும்பசிட்டி, யாழ் நூலகம், சர்.பொன்.இராமநாதன் பெண்கள் கல்லூரி போன்ற பல பகுதிகளில் களப்பணியாற்றிப் பதிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின்   இலங்கை மரபுரிமை சிறப்புப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்பதிவுகளை http://www.srilanka.tamilheritage.org/ எனும் பக்கத்தில் காணலாம்.

கி.பி 19ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இலங்கைக்கு வந்த தமிழ் மக்கள் இராமேஸ்வரம் வழியாக மரக்கலங்களில் பயணித்து பின்னர் மன்னார் வந்தடைந்து அங்கிருந்து கால் நடையாகவே மலையகம் வரை வந்திருக்கின்றனர். இது மிகக்கடினமான ஒரு பாதை. ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் இதன் போது நிகழ்ந்திருக்கின்றன. அப்படி வந்த தமிழ் மக்கள் வந்து ஒன்று கூடிய முக்கிய இடமாக “மாத்தளை” கருதப்படுகின்றது.

மலையகத்தமிழர்களின் முக்கிய தொழில் தேயிலைத் தோட்டத்தைச் சார்ந்ததாகவே அமைகின்றது. இங்கு ஆண்களும் பெண்களும் சலிக்காது உழைக்கின்றனர். பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களாக ஆங்கிலேயர்களும், இந்தியர்களும், சிங்களவர்களும் இருக்கின்றனர். மலையகத்தமிழ் மக்களின் பொதுப்பிரச்சனையாக அமைவது அம்மக்களுக்குச் சொந்த வீடு இல்லாமையும், ஓய்வூதியச் சலுகைகள் ஏதும் இல்லாமையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் எனலாம்.  இங்கு இஸ்லாமியர்கள் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்கின்றனர். சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் அனைவரிடையே இயல்பான நட்புணர்வு வெளிப்படுகின்றது. தமிழ் பேசும், எழுதும் சிங்களவர்கள் சிலரைத் தோட்டங்களில் நேரடியாகக் கண்டு உரையாட முடிகின்றது. பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள மொழியும் பேசுகின்றனர். தமிழ் மக்கள் வழிபடும் தெய்வங்களாக, பிள்ளையார், மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் அதிகமாக உள்ளன. யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஊர் நூலகங்களைக் காண்கின்றோம். ஆனால் மலையகப் பகுதியில் நூலகங்களை அதிகம் காண முடியவில்லை. அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளே இங்கு அதிகமாக மக்களை வாட்டும் நிலை இருப்பதால் இந்த நிலையோ என எண்ணத் தோன்றுகிறது. 


மலையகம் முழுமையுமே தூய்மையாக உள்ளது. தமிழக வகை உணவுகளை இங்கே கடைகளில் காண்கின்றோம். தமிழ்ப்பள்ளிகள் அனைத்துமே “வித்யாலயா” என்ற சமஸ்கிருத பெயருடனேயே வழக்கில் உள்ளன. தமிழகத்தில் 1950களின் காலகட்டத்து மணிப்பிரவாள நடைபோல பல சமஸ்கிருத பயன்பாடு இருப்பதை இலங்கையில் காண்கின்றோம். பேருந்து பயணங்கள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லும் முக்கிய போக்கு வரத்துச் சாதனமாக உள்ளது. தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் தமிழ்ப்பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். கால்களில் அட்டை கடித்து துன்பப்படுவது என்பது அவர்களது வாழ்க்கையின் இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டதால் இவ்வூழியர்கள் பலரது கால்விரல்கள் மிக மோசமான நிலையில் இருப்பதைக் காணலாம்.  தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு அவர்களது கல்வி மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியப்படும்.

நீண்ட கால போரினால் இலங்கையில் தமிழர் மரபுரிமைச் சின்னங்கள் பல சேதப்படுத்தப்பட்ட சூழலைக் காண்கின்றோம். போருக்குப் பின்னரான மக்கள் சமூக நலன் மீட்டெடுப்பு என்பது நிகழ்கின்ற இதே வேளையில் தமிழர் மரபுரிமை பாதுகாப்பு என்ற கருத்தியலைப் புறந்தள்ளிவிடாது, அதற்குத் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

இலங்கையில் பௌத்தம் தமிழர்களுக்கு அந்நியப்பட்ட ஒரு சமயமல்ல. சிங்கள மொழி இலங்கையில் உருபெறுவதற்கு முன்னரே தமிழ் மக்கள் வழக்கில் இருந்த பண்பாட்டு அம்சங்களுள் பௌத்தத்திற்கு முக்கிய இடம் இருக்கின்றது என்பதை நினைவு கூற வேண்டியுள்ளது. இன்றைய சூழலில்,  மத ரீதியான பார்வை, சாதி ரீதியான பார்வை என்ற குறுகிய வட்டங்களை ஒதுக்கி விட்டு, பண்டைய இலங்கைத் தமிழர் வரலாற்றுப் பின்புலத்தை ஆராய வேண்டியதும், தெளிவுடன் பண்பாட்டுக் கூறுகளை அணுக வேண்டியதுமான அவசியம் உள்ளது. 

இலங்கைத் தமிழர்கள் உலகம் முழுதும் வாழும் நூற்றாண்டு இது.  உலகத் தமிழர்களாக அனைவரும் இணைந்து இலங்கைத் தமிழர் மரபுரிமை பாதுகாப்பிற்கும் ஆவணப்படுத்தல் தொடர்பான முயற்சிக்கும் இணைந்து செயல்படுவோம்.

உலக மக்கள் அனைவருக்கும் தைத்திருநாள்  நல்வாழ்த்துகள்!

அன்புடன்

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை

Friday, January 11, 2019

உண்டாலம்ம இவ்வுலகம்!

—  சொ.வினைதீர்த்தான்


பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182). புறநானூறு.

பாடலின் பின்னணி: இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தோடு “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால்தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான்.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.


கொண்டு கூட்டு: இவ்வுலகம் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே உண்டு எனக் கூட்டுக.

உரை: இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டார்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

சிறப்புக் குறிப்பு:
திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்பல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துக்களை இப்பாடலில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துகளுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் - 82)
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (குறள் - 428)
பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள் - 996)
பொருள்: பண்புடையவர்கள் பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.
தொடர்பு: சொ.வினைதீர்த்தான்
karuannam@gmail.com

Thursday, January 10, 2019

கோகர்ணம் கோயில் கல்வெட்டு

——    துரை.சுந்தரம்

கோகர்ணம் சிவன் கோயில் கல்வெட்டு, புதுக்கோட்டை
கல்வெட்டின் பாடம்:
1  (ஸ்வஸ்தி)ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ (இரா)...
2  தேவற்கு யாண்டு ... தோரை சமுத்தி(ர)...
3  போசள வீர சீ நாரசிங்க தேவர் மகன் ..
4  (ச்வர) தேவர் மாதா சேர மஹா தேவி ...
5  ள்ளைகளில்  (வீர)ச் சயனமாதா ....  யிக்கு..
6  ....இதேவற்கும் நன்றாகத்  .... 
7  டையார் திருக்கோகர்ணம் உடைய ..
8  (தே)வர்க்கு முன்பு நித்தற்... (வருகிற)..
9  தா விளக்குச் செல்லவும் உத்தர...
10 (த்து முதற்தியதி) முதல்  ....
11 நாள் ஒன்றுக்கு இரு நாழி ...
12 மஞ்செல்லக்கடவதாக இவ்வூர்ச்
13 கொண்டு விட்ட நிலம் ஆக ..
14  (நா)ன்கெல்லை உள்பட்ட நிலத்தில்..
15 ....ச் செம்பாதியும் புன்செய் ...
16 ....செம்பாதிக்கும்  வி(லை)...  
17 ...இக்கோயிற் சபையார் ...
18 ..ண்டுச் சந்திராதித்தவற் செல்ல...
19 (இ)த்தன்மம் .......
20 (ற)லை மேலன.


குறிப்பு:  திருக்கோகர்ணம்  கோயில் இறைவனின் திரு முன்பு  அதாவது கருவறையிலேயே  நந்தா விளக்கு எரிக்க நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கொடைத் தன்மம்  ஹொய்சள அரசன்  சோமேசுவரனின் நன்மைக்காகவும், அவனுடைய அன்னை சேர மஹா தேவியின் நன்மைக்காகவும் நிறைவேற்றப்பட்டது எனலாம். ஹ<->ப   மாற்றம்  தமிழ், கன்னட மொழிகளில் இயல்பு என்பது இக்கல்வெட்டில் “போசள”  என்னும் சொல் வழி அறிகிறோம். 

போசளரின் தலை நகர் துவார சமுத்திரம் இக்கல்வெட்டில் தோரை சமுத்திரம் எனக்குறிப்பிடப்படுகிறது.  இறைவன் பெயர் திருக்கோகர்ணமுடைய (நாயனார்)  என்றழைக்கப்படுகிறார். கொடை நிலம் நன்செய், புன்செய் இரண்டும் சேர்ந்த நிலம் ஆகலாம். இந்த தன்மத்தைக்  காக்கின்றவர்  பாதம் என் தலை மேலன என்று கொடையாளி  சொல்லும் குறிப்பும் கல்வெட்டில் உள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு.நன்றி- படம் உதவி: மயிலை  நூ.தா.லோ.சு.தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.
உத்தம சோழன் செப்பேடு

——    துரை.சுந்தரம்


முன்னுரை:
தொல்லியல் அறிஞர் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழ்,  வரலாறு ஆகிய இரு துறைகளிலும் புலமையுடையவர். தொல்லியல் துறையில் அலுவலராகப் பணி நிறைவு செய்தவர். செப்பேடுகளை விரிவாக ஆய்ந்து எழுதுவதில் வல்லவர். அவருடைய சில நூல்கள் என்னிடம் உண்டு. அண்மையில், அவருடைய நூலொன்றினைப் படித்துக்கொண்டிருந்தேன். உத்தம சோழனின் செப்பேடுகள் பற்றிய நூல். ”காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்”  என்னும் தலைப்பிட்டது. மதுராந்தகன் என்னும் பெயர்கொண்ட உத்தம சோழன், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் வழிபாட்டுக்கு வழங்கிய நிவந்தமே இச்செப்பேடு. இச்செப்பேட்டினையும், இச்செப்பேடு வாயிலாக அறியவரும் வரலாற்றுச் செய்திகளையும் விரிவாக எடுத்துரைக்கின்றார் ஆசிரியர். தமிழகத்தின் கோயில்கள்தாம் எத்துணை வரலாற்றுப் பெட்டகங்களைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன என்பதை நினைக்கையில் பெரும் வியப்பு எழுகிறது. எத்தனை கோயில்கள்! எத்தனை கல்வெட்டுகள்! அனைத்தையும் அறிந்துகொள்ள எவ்வளவு காலம் நமக்குத் தேவைப்படும்? இந்த இடத்தில், தொல்லியல் அறிஞர் ஹுல்ட்ஸ் அவர்கள் (Dr. E. HULTZSCH) கூறியது நினைவுக்கு வருகிறது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் 1891-ஆம் ஆண்டுக்குரிய ஆண்டறிக்கையில்,

“மதராஸ் பிரசிடென்சியின்கீழ் எண்ணற்ற பெருங்கோயில்கள் - இந்தியாவின் பிற பகுதிகளில் காணவியலாதன - உள்ளன; அவற்றின் கலை வடிவங்கள் பெருஞ்செல்வங்கள்.  டாக்டர். ஃபெர்குசன் (Dr. FERGUSSON) சிறப்பாகக் குறிப்பிடுகின்ற சீரங்கம், சிதம்பரம், நெல்லை, காஞ்சி, தஞ்சை, மதுரை போன்ற பல கோயில்கள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளவை. இப்பிரசிடென்சியின் விரிந்த நிலப்பரப்பில் பரவிக்கிடக்கும் கோயில்களைத் தற்போதுள்ள பணியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும் எனக் கூறவியலாது. ஒரு பத்தாண்டுக்காலம் ஆகலாம். மிகப்பெருங் கோயில்களில் ஒன்றான இராமேசுவரத்தை மட்டும் முற்றாக ஆய்வு செய்ய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். கிருஷ்ணா மாவட்டத்தில், காலத்தால் முற்பட்ட பௌத்தச் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் கொண்டுள்ள மேடுகளை ஆய்வு செய்ய மட்டுமே பல்லாண்டுகள் ஆகக்கூடும்.”

என்று குறிப்பிடுவது கருதத்தக்கது. அவர் இக்கருத்தைச் சொல்லுகையில், தஞ்சை, மதுரை, வேலூர், இராமேசுவரம் ஆகிய கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டுவிட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். செப்பேடுகள், கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிந்துகொள்ள, பல்வேறு அறிஞர்களின் பல்வேறு நூல்கள் துணை செய்கின்றன. இவற்றால்தாம், வரலாற்றுச் செய்திகள், வரலாற்றில் ஆர்வமுடையவர்க்குப் பரவலாகச் சென்றடைகின்றன. இவ்வாறு தெரிந்துகொண்டவற்றை இன்னும் பலருக்கு எட்டவைக்கும் முயற்சியாகவே என் கட்டுரைப் பணியைக் கருதுகிறேன். ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூலின் அட்டைப் பகுதியில் இரண்டு ஒளிப்படங்கள் தெளிவாக இருந்தன. இவை செப்பேட்டின் இரு பக்கங்களின் படங்கள். அவற்றில் உள்ள எழுத்துப் பொறிப்புகள், இராசராசனின் தஞ்சைக்கோயில் கல்வெட்டு எழுத்துகளின் வடிவ அழகுக்கும் நேர்த்திக்கும் முன்னோடியாக அமைந்துள்ளதைப் பார்க்கையில், அவற்றின் பாடத்தோடு நூலாசிரியரின் ஆய்வுக் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆவலைத் தடுக்க இயலவில்லை.  அதன் பகிர்வு இங்கே.

செப்பேட்டின் அமைப்பு:
தற்போது, சென்னை எழுமூர் அருங்காட்சியகத்தில் உள்ள இச்செப்பேட்டுத் தொகுதியில் ஐந்து ஏடுகளே உள்ளன. ஏடுகளின் இடப்பக்க மையத்தில் உள்ள துளைகள் வழியே ஒரு வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழர் இலச்சினை உள்ளது. மொத்தம் நூற்று இருபத்தொரு வரிகள்; முதல் பன்னிரண்டு வரிகள் கிரந்த எழுத்துகள்; வடமொழி.  மற்றவை தமிழ் எழுத்து; தமிழ் மொழி. தொடக்கத்தில் கிரந்தப்பகுதியில் சில ஏடுகளும், இறுதியில் ஒரு தமிழ் ஏடும் இல்லாததால் உத்தம சோழனின் மெய்க்கீர்த்தியை அறிய இயலவில்லை.

செப்பேட்டின் காலம்:
உத்தம சோழனுடைய பதினாறாம் ஆட்சியாண்டில், கி.பி. 985-86 –ஆம் ஆண்டில் செப்பேடு வெளியிடப்பட்டது.

செப்பேடு வெளியிட்ட இடம்:
காஞ்சியில் இராசராசனின் தமையன் கரிகாலன் ஓர் அரண்மனை கட்டுவித்ததும், அந்த அரண்மனையில் சுந்தர சோழன் இறந்துபோனதும் அறியப்பட்ட செய்திகள். அந்த அரண்மனையில், சித்திர மண்டபம் என்னும் ஒரு மண்டபத்தில் அரசன் அமர்ந்திருந்தபோது செப்பேட்டுக்கான நிவந்த ஆணை வெளியிடப்படுகிறது. இதே சித்திர மண்டபத்தில், முதலாம் இராசேந்திரன் எசாலம் செப்பேட்டினை வெளியிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி அரண்மனை, செப்பேட்டில், “கச்சிப்பேட்டுக் கோயில்”  எனக் குறிப்பிடப்படுகிறது.  கோயில் என்பது அரச அரண்மனையைக் குறிக்கும். (இறைவனின் கோயில் ஸ்ரீகோயில் என வழங்கும்). காஞ்சி என்பது பண்டு ”கச்சிப்பேடு”  என்றே வழங்கியதை நோக்குக. அப்பெயரையும் சுருக்கி “கச்சி”  என்றழைப்பதும் வழக்கமாயுள்ளது. கச்சி என்னும் பெயர், காலப்போக்கில் கஞ்சி எனவும்,  பின்னர் காஞ்சி எனவும் மருவியிருக்கக் கூடும். கோட்டையோடு கூடிய நகரமாதலால், பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் என வழங்கியிருக்கலாம். ”கச்சிப்பேடு” என்னும் ஊர்ப்பெயரில் பின்னொட்டாக வருகின்ற “பேடு”  என்னும் சொல் கருதத்தக்கது. பேடு என்னும் இச்சொல், பல ஊர்களின் பெயர்களில் உள்ளதைக் காணலாம். கோயம்பேடு, மப்பேடு, தொழுப்பேடு என்று சில ஊர்ப்பெயர்களை எடுத்துக்காட்டலாம். எழுத்துப்பொறிப்புடன் கூடிய சங்க காலத்து  நடுகல்லான புலிமான் கோம்பைக் கல்லில் “கல்பேடு”  என்னும் ஊர் குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுகிறது.

செப்பேட்டுத் தொகுதியில் இரண்டு ஏடுகளின் ஒளிப்படங்கள் முன்னரே குறிப்பிட்டவாறு நூலில் வெளியிடப்பட்டுள்ளன. படங்கள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.  அவற்றின் படங்களும், பாடங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48. 

முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48.
பாடம்:
37  ட்டை நாளைக்கிடக்கடவ பொலிசைப்பொன் கழஞ்சே நாலு மஞ்சாடியும் நி
38  வந்தஞ்செய்(த)படி திருவமிர்து மூன்று ஸந்திக்கு நெல் முக்குறுணி அறுநாழியு 
39  ம் கறியமுது இரண்டுக்கு மூன்று ஸந்திக்கு நெய் நானாழியும் நெய்யமுது நிசதம்
40  உழக்கினுக்கு நெல் ஐஞ்ஞாழியும் தயிரமுது போது உரியாக மூன்று ஸந்திக்கும் (த)
41  யிரமுது நாழி உரிக்கு நெல் முன்னாழியும் அடைக்காயமுது மூன்று ஸந்திக்கு
42  நெல் முன்னாழியும் விறகினுக்கு நெல் இரு நாழியும் ஆராதிக்கும்
43  வேதப்ராஹ்மணன் ஒருவனுக்கு நெல் பதக்கும் இவனுக்கு புடவை முதல்
44  ஓராட்டை நாளைக்கு பொன் ஐ(ஞ்)கழஞ்சும் பரிசாரகஞ் செய்யு மாணி ஒருவனுக்கு
45  நெல் அறுநாழியும் இவனுக்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொன்
46  கழஞ்சும் திருமெய்காப்பாளன் ஒருவனுக்கு நிசத நெல் குறுணியும் இவனு
47  க்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொனிருகழஜ்சும் நந்தனவனம் உ(ழ)ப்
48  பார் இருவர்க்கு நிசத நெல் குறுணி நானாழியும் இவர்களுக்கு புடவைக்கு
       பொன்


இரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.

இரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.
பாடம்:
49  கழஞ்சும் சங்கிராந்தி ஒன்றினுக்கு ஆசார்ய பூசனை உட்பட பொன் கழஞ்சேய் காலா
50  க சங்கிராந்தி பன்னிரண்டினுக்கு பொன் பதினைங்கழஞ்சும் திருமெய்ப்பூச்சு
51  க்கும் திருபுகைக்கும் திங்கள் அரைக்கால் பொன்னாக ஓராட்டை நாளைக்கு
52  பொன் கழஞ்சரையும் திருநமனிகை மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொ
53  ன் முக்காலும் திருபரிசட்டம் மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொன் கழஞ்
54  சும் உகச்சகள் தலைப்பறை ஒன்றும் மத்தளி இரண்டும் கறடிகை ஒன்
55  றும் தாளம் ஒன்றும் சேகண்டிகை ஒன்றும் காளம் இரண்டும் கை
56  மணி ஒன்றுமாக ஆள் ஒன்பதினுக்கு புடவை முதலுட்பட உழை ஊர் பொலி
57  ஊட்டு நெல் னூற்றைம்பதின் காடியும் கச்சிப்பேட்டு நகரத்தார் பக்கல் விலை  கொ
58  ண்டுடைய நிலத்தில் சித்திரவல்லிப் பெருஞ்செறுவான பட்டியும் துண்டு
59  ணுக்கச் சேரியில் விலை கொண்டுடைய நிலத்தில் மேட்டு மதகாறு பாஞ்ச
60  சேந்தறைப்போத்தன் நிலத்துக்கு வடக்கில் தடி மூன்றும் காடாடி குண்

செப்பேடு கூறும் செய்திகள்:
உயர் அதிகாரியின் விண்ணப்பம்:
முன்னரே குறிப்பிட்டவாறு, உத்தம சோழன் காஞ்சி அரண்மனையில் வீற்றிருந்தபோது, மூவேந்தவேளான் என்னும் ஒரு பதவி நிலையில் உள்ள பெரிய அதிகாரியான நக்கன் கணிச்சன் என்பான் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைப்பதாகச் செப்பேடு தொடங்குகிறது. உலகளந்தான் கோயிலுக்கு, கச்சிப்பேட்டிலும், துண்டுணக்கச்சேரி என்னும் ஊரிலும் நிலங்கள் இருந்துள்ளன. இந்நிலங்கள் கோயிலுக்குரிய முதலீடாக இருந்தன. விளைச்சலின் மூலம் வட்டியாக வரும் நெல் வருவாய் (பொலிசை, பொலியூட்டு) கோயிலின் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. விளைச்சல், பூ என்றும் போகம் என்றும் வழங்கப்பட்டது. இந்த நிலங்களைக் கண்காணிக்க, கருவுளான்பாடி, அதிமானப்பாடி ஆகிய ஊர்களைச் சேர்ந்தோரை நியமிக்க வேண்டியே மேற்குறித்த மூவேந்தவேளான் அரசனிடம் விண்ணப்பம் செய்கிறான்.

கோயிலின் வருவாய்:
கோயிலுக்கு வேறு வரவினங்களும் இருந்துள்ளன. முகந்து விற்கும் தானியம் முதலான பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி வருமானம் கோயிலைச் சாரும். இது (செப்பேட்டில்) “கால் அளவு கூலி”  என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது.  முகத்தல் அளவைக்கு ‘கால்’ என்னும் கருவி பயன்பட்டது. ஊருக்குப் பொதுவாக இருக்கும் கால் ஊர்க்கால்; கோயிலுக்குத் தனியே கால் இருக்கும். அரசனின் பெயர் கொண்ட காலும் தனியே உண்டு. எடுத்துக்காட்டாக இராசகேசரிக் கால். இறைவனின் பெயர் கொண்ட காலுக்கு எடுத்துக்காட்டு ஆடவல்லான் கால். அதுபோலவே, நிறுத்து விற்கும் பொருள்கள் மீதான வரி வருமானமும் இக்கோயிலுக்கு இருந்தது. நிறுத்தலுக்குக் கோல் (துலாக்கோல்) பயன்பட்டது. இவ்வகை வருவாய் (செப்பேட்டில்) “கோல் நிறை கூலி”  என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது.  கோயிலுக்கு அளிக்கப்பட்ட பொன், காசு, பணம் ஆகிய வைப்புத்தொகைகள் முதலீடுகளாகவும், அவற்றால் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி) வருவாயாகவும் கோயிலுக்குப் பயன்பட்டன. கோயிலின் வரவினங்கள் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையும் கண்காணித்துக் கணக்கில் வைக்க கணக்கர்களையும் நியமிக்க அரசனிடம் வேண்டுகிறான் மேற்குறித்த மூவேந்தவேளான். “நீயேய் நிவந்தம் செய்வீய்” என்று மன்னன், நிவந்தப்பொறுப்புகளை இந்த அதிகாரியிடமே ஒப்படைக்கிறான்.  இந்தச் செய்திகள் எல்லாம் செப்பேடு குறிப்பிடும் பொது அல்லது முதன்மைச் செய்திகள். கோயிலில் நடைபெறும் வழிபாடு, (பூசனை, படையல் ஆகியன), நிர்வாகம், கோயிலின் பணியாளர்கள் ஆகியன பற்றியவை  சிறப்புச்செய்திகள்.

செப்பேடு கூறும் சிறப்புச் செய்திகள்:
இறைவனின் பெயர்:
கோயிலின் இறைவன் உலகளந்த பெருமாள், செப்பேட்டில் “ஊரகப் பெருமான்” என்று குறிப்பிடப்படுகிறார்.

வழிபாடு (பூசனை, படையல்):
கோயிலில் மூன்று சந்தி வழிபாடு நடை பெற்றது. மூன்று சந்திக்கும் திருவமுது படைக்கப்பெற்றது. திருவமுதோடு சேர்ந்த பிற அமுதுகளாவன:
கறியமுது – காய்கறிகளைக்கொண்ட உணவினைக் குறிக்கும். அதாவது பொறிக்கறி.
தயிரமுது.
அடைக்காயமுது – பாக்கினைக் குறிக்கும். இச்செப்பேட்டில் வெற்றிலை தனியே குறிக்கப்படவில்லையெனினும் வெற்றிலையையும் சேர்த்தே அடைக்காய் அமுது என்னும் சொல் நின்றது. (சில கல்வெட்டுகளில் இலை அமுது தனியே குறிக்கப்பெறும். அடைக்காய் என்னும் பழந்தமிழ்ச் சொல், தற்போது தமிழில் வழங்குவதில்லை என்றாலும், கன்னடத்தில் இந்த வழக்கு இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். கன்னடத்தில் இலை, எலெ என்றும் அடைக்காய், அடிக்கெ என்றும் திரிந்து வழங்குகின்றன. வெற்றிலை பாக்கு என நாம் குறிப்பதைக் கன்னடர்கள் எலெ-அடிக்கெ என்பார்கள். அடைக்காய் என்னும் தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் “ARECA”  என்று வழக்கும். “ட”  தமிழ் ஒலிப்பு ஆங்கிலத்தில் “ர/ற”  ஒலிப்பாக மாறியுள்ளது. ஒரு ஆங்கில அகராதி, “ARECA” –வின் மூலத்தை, மலையாளம் எனவும், மலையாளத்திலிருந்து போர்த்துகீசிய மொழிக்குச் சென்றது எனவும் குறித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாயில்லை.)
நெய் அமுது.
சங்கிராந்தி – கோயில் வழிபாடுகளில் சங்கிராந்தி வழிபாடும் இருந்தது. ஞாயிறு(கதிரவன்) ஓர் இராசியில் புகும் காலம் சங்கிராந்தியாகும். அதுவே, புதிய  மாதப்பிறப்பாகும்.  கல்வெட்டுகளில் மாதங்களின் பெயர்கள் சித்திரை, வைகாசி, ஆனி   என்னும் பெயர்களில் குறிப்பிடப்படுவதில்லை.  ஞாயிறு புகும் இராசியின் பெயராலேயே குறிக்கப்படும். சித்திரை மாதத்தில், ஞாயிறு, மேழ(மேஷ) ராசியில் புகுவதால் மேழ(மேஷ) ஞாயிறு என்றும், இதே போன்று, வைகாசி, இடப(ரிஷப) ஞாயிறு என்றும், ஆனி, மிதுன ஞாயிறு என்றும் வரிசைப்படுத்திப் பன்னிரண்டு இராசிகளின் பெயரால் மாதங்கள் குறிக்கப்பட்டன. எனவே, ஆண்டின் இறுதி மாதமாகிய பங்குனி, மீன ஞாயிறு என அமையும். இவ்வாறு, பன்னிரண்டு சங்கிராந்திகள். பன்னிரண்டு சங்கிராந்தி பூசனைகள்.
ஆச்சாரிய பூசனை – சங்கிராந்தி தோறும், ஆச்சாரிய பூசனை என்னும் ஒரு வழிபாடும் உடன் நடந்ததாகச் செப்பேட்டின் வாயிலாக அறிகிறோம். இது குருவை வணங்குதல் என்னும் நிகழ்ச்சியாகும். செப்பேட்டின்படி, இந்த ஆச்சாரிய பூசனை பன்னிரண்டு சங்கிராந்தியின்போதும் நடந்துள்ளது.

இறைவனை வழிபடும்போது, ‘சோடச உபசாரம்’ என்னும் பதினாறு வகையான வழிபடுதல் முறைகள் உண்டு.  அவற்றில் பலவற்றை இச்செப்பேட்டில் காண்கிறோம்.
திருமெய்ப்பூச்சு – இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குப் பூசும் சந்தனம் முதலான நறுமணப்பூச்சு.
திருப்புகை – நறுமணப்புகை.
திருநமனிகை – இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குச் செய்யும் நீராட்டு.
திருப்பரிசட்டம் – இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குச் சார்த்தும் உடை.

கோயிலில் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டவர்கள்:
ஆராதிக்கும் வேத பிராமணன் – பூசைசெய்யும் வேதம் வல்ல பிராமணன்.
ஆச்சாரியர் – குரு
பரிசாரகம் செய்யும் மாணி – கோயிலில் ஏவல் தொழில் செய்யும் பிரம்மச்சாரி.
திருமெய்காப்பான் – திருமெய்காப்பு என்பது கோயில் காவலைக் குறிக்கும்.  எனவே, திருமெய்காப்பான் என்பவன் கோயில் காவல் பணி செய்பவன்.
திருமெழுக்கிடுவார் – கோயிலைப் பெருக்கி மெழுகித் தூய்மை செய்து வைப்பவர்.
நந்தவனம் உழப்பார் – நந்தவனத்தில் பணியிலிருக்கும் உழவன். (இக்கோயிலில் உழப்பார் இருவர் இருந்துள்ளனர்)
உவச்சர்கள் – செப்பேடு, ஓரிடத்தில், உகச்சகள் என்றும், மற்றோரிடத்தில் உவச்சர்கள் என்றும் குறிப்பிடுகிறது.  இவர்கள், இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் ஆவர்.  

கல்வெட்டுகளில், இசைத்தல் என்னும் சொல்லுக்குத் தலைமாற்றாகக் (பதிலாக) கொட்டுதல் என்னும் சொல்லே பயிலுவதைக் காண்கிறோம். ‘பறை முதலியன கொட்டுவித்து’,   ‘மத்தளம் கொட்டுகிற’, ‘உவைச்சன் கொட்டுவிதாக’, ‘பஞ்சமா ஸப்தம் கொட்டுகின்ற’  போன்றவை சில சான்றுகள். காளத்தைக் குறிக்கையில் மட்டும் ’ஊதுதல்’ என்னும் குறிப்பைக் காண்கிறோம்.  புழக்கத்திலிருந்த சில இசைக்கருவிகள் ஆவன:
பறை
தலைப்பறை
மத்தளம் அல்லது மத்தளி
கறடிகை
கைமணி
சேகண்டிகை
தாளம்
காளம் அல்லது எக்காளம்
திமிலை
பஞ்சமா சப்தம்
உடுக்கை
வீணை
சகடை (முரசு)

நிவந்தத்தின் விளக்கம்:
கோயிலின் வருமானங்களாகிய நெல்லும், பொன்னும்(கழஞ்சும்) கீழ்க்கண்டவாறு நிவந்தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 
திருவமுது, கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது ஆகியவற்றுக்கு நெல் வழங்கப்பட்டது. திருநொந்தாவிளக்கெரிக்கத் தேவையான நெய்க்காகவும் நெல் கொடுக்கப்பட்டது.
வேத பிராமணன், பரிசாரக மாணி, திருமெய்காப்பான், நந்தவனம் உழப்பார் ஆகியோர்க்கு நெல்லும், இவர்களுக்கான ஆடைகளுக்காகப் பொன்னும்(கழஞ்சும்) வழங்கப்பட்டன. ஆடை என்பதற்குச் செப்பேட்டில் ‘புடவை’ என்னும் சொல் பயன்படுத்தப்பெறுகிறது. திருமெழுக்கிடுவார்க்கு நெல் மட்டுமே அளிக்கப்பட்டது.
சங்கிராந்தி, ஆச்சாரிய பூசனை,  திருமெய்ப்பூச்சு, திருபுகை, திருநமனிகை, திருபரிசட்டம் ஆகியவற்றுக்குப் பொன்(கழஞ்சு) வழங்கப்பட்டது.

திருவிழாக்கள்:
மகர சங்கராந்தி (செப்பேடு இதை உத்தரமயன சங்கராந்தி என்று குறிக்கிறது),  சித்திரை விஷு ஆகிய இரு திருவிழாக்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டன. சித்திரைத் திருநாள் ஏழு நாள் விழவாக நடைபெற்றது. திருவிழாவுக்கான செலவினங்களுக்குக் கழஞ்சு வழங்கப்பட்டது. திருவிழாக்களின்போது, எண்ணெய், பூ, சந்தனம் போன்றவற்றிற்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் இருந்தன. தேவரடியார், இறைவனுக்குப் பள்ளிச் சிவிகை சுமப்பார், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கும் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. செப்பேட்டில், சிவிகை சுமப்போரைக் குறிப்பிடுகையில்,

வரி 85 . . . . . . . . . . . . . . . . . தேவர் பள்ளிச் சிவிகை காவும் சிவி
வரி 86 கையார்க்கும் . . . . . . . . . . . . . . . . .

என்று எழுதப்பட்டுள்ளது. இதில் “காவும்”  என்னும் சொல் ஆளப்பட்டுளது கருதத்தக்கது. சுமக்கும் என்பதற்கான நல்ல தமிழ்ச் சொல் இங்கு பயின்றுவந்துள்ளது. பரிமேலழகர் இச்சொல்லைக் கையாண்டிருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சிவிகையைத் (பல்லக்கு) தோளில் சுமப்பதுபோலவே, முருகக் கடவுளுக்கு எடுக்கும் காவடியும் தோளில் சுமக்கப்படுவதாலேயே, அதற்குக் காவடி என்னும் சொல்லால் பெயரிட்டிருப்பர் எனலாம். காவுதல் என்னும் சொல்லின் அடிப்படையில் ‘காவடி’ உருவாகியிருக்கலாம்.

செப்பேடு குறிக்கும் சில மக்கள்:
பட்டசாலிகள்:
செப்பேட்டில், அதிமானப்பாடி, கருவுளான்பாடி ஆகிய இரு ஊர்களைச் சேர்ந்த நெசவாளர்களே வரவு செலவுகளைக் கண்காணிக்கும் ஸ்ரீகாரியம் செய்பவர்களாகக் குறிக்கப்படுகிறார்கள். செப்பேட்டின் வடமொழிப்பகுதி, இவர்களைப் பட்டசாலி என்று கூறுகிறது. வடமொழித் தொடரான ”ராஜ-வஸ்த்ர க்ருதாமேஷா(ம்)”   என்ற தொடரும் இவர்களையே சுட்டும் எனலாம். அவ்வாறெனின், பட்டசாலிகள் என்னும் நெசவுக்குடிகள், அரசனுக்குரிய துணிகளை நெய்கின்றவர் எனப் பொருள் அமைகிறது.

சோழாநியமத்தார்:
கச்சிப்பேட்டில் இருந்த வணிகர் குழுவினராக இவர்கள் குறிக்கப்பெறுகிறார்கள். இவர்களில் சிலரைச் செப்பேடு “தோளாச் செவியர்” என்று கூறுகிறது. இத்தொடர், பொருள் பொதிந்த கவின் தொடர் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தோளாச் செவியர் என்னும் தொடர், தோட்கப்படாத செவி என்று பொருள் தரும். அதாவது துளைக்கப்படாத செவி; ”தொள்”  என்பதே வேர்ச்சொல்லாக இருக்கவேண்டும். அவ்வாறெனில், தொளைத்தல், தொளை என்பதே சரியான வடிவங்களாயிருக்கவேண்டும்; ஆனால், நாம், ‘துளைத்தல்’, துளை என்று மருவிய வடிவத்தைப் பயன்படுத்துகிறோம் என்றாகிறது.தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.சங்க இலக்கியத்தில் தித்தி

—  முனைவர்.ப.பாண்டியராஜாதித்தி என்பது பெண்களின் உடம்பில் காணப்படும் ஒருவகைப் புள்ளிகள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதனைத் தேமல், அதாவது, Yellow spreading spots on the body என்று தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) குறிப்பிடுகிறது.

தித்தி என்றால் என்ன என்பதைச் சங்க இலக்கிய மேற்கோள்கள் வழி ஆய்வோம்.


1.
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே - நற் 157/10

இதன் பொருள்:
சிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் 
அழகிய பூந்தாதுக்கள் உதிர்ந்ததைப் போல 
நுண்ணிய பலவான தேமல் புள்ளிகள் பரந்த மாநிறத்தவளான நம் தலைவி. 

மிகவும் உயரமான வேங்கைமரத்தின் பூக்களிலுள்ள தாதுக்கள் எதன் மீது உதிர்ந்து கிடந்தன என்ற செய்தி இங்கு இல்லை. மிகவும் உயரமான மரம் என்பதால் தாதுகள் தரை மீது சிந்துவதற்குள் காற்றால் அடிக்கப்பட்டு சிதறிப்போயிருக்கும். எனவே அருகிலுள்ள மரக்கிளையில் அந்த நுண்ணிய தாதுக்கள் உதிர்ந்து விழுந்திருக்கலாம்.

பெண்களின் மார்புப்பகுதியில் தோன்றும் சுணங்கு என்ற புள்ளிகள் வேங்கை மரத்துப் பூக்களைப் போன்று சற்றுப் பெரிதானவை என அறிகிறோம்.
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் - கலி 57/17
என்ற அடி இதனை அறிவுறுத்தும். ஆனால் தித்தி என்ற புள்ளிகள் வேங்கை மலரின் நுண்ணிய தாதுக்கள் போன்றவை என்பதை வேங்கை அம் பூ தாது உக்கு அன்ன நுண் பல் தித்தி என்ற சொற்கள் விளக்குகின்றன.


2.  அடுத்து, தாமரை மலரின் தாதுக்களைப் போன்றது தித்தி என்று ஒரு குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே - குறு 300/4

இதன் பொருள்:
ஆழமான நீரில் உள்ள தாமரைமலரின் பூந்தாது போன்ற
நுண்ணிய பல தேமலையுடைய மாநிறத்தவளே!

இந்த அடிகள், தித்தி என்பது தாமரை மலரின் பூந்தாதுக்கள் போன்று நுண்ணியதாகவும், பலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இவை மேனியில் எந்தவோர் இடத்திலும் காணப்படும் என்றும் உணர்த்துகின்றன.


3.  இனி, தித்தியைப் பற்றி மிக விரிவாக விளக்கும் அகநானூற்றுஅடிகளைப் பார்ப்போம்.

மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய
நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/13-16

இதன் பொருள்:
மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள 
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
நுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய மாநிறத்தவளாகிய நம் தலைவி

பூங்கொத்துக்களில் உள்ள பூக்களின் மேல் வண்டுகள் மொய்க்கின்றன. அதனால், அந்தக் கொத்துக்களில் உள்ள பூந்தாதுக்கள், தேனுடன் கலந்து அதன் அடியிலுள்ள தளிர்களில் தெறித்துவிழுகின்றன. அதைப் போல இருக்கிறதாம் பெண்களின் தளிர்மேனியில் பரவலாய்க் காணப்படும் நுண்ணிய பல தேமல் புள்ளிகளான தித்தி.

பூ எந்த நிறத்தில் இருந்தாலும் அதன் தாது பொன்னிறத்தில்தான் இருக்கும் என்பது உண்மை. பூந்தாது மிகவும் நுண்மையானது. பலவாகச் சேர்ந்தால்தான் அதற்கு ஒரு வடிவம் கிடைக்கும். மேலே கண்ட மூன்று குறிப்புகளிலும் ’நுண் பல் தித்தி’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், தித்தி என்பது நுண்மையான பல பொன்னிறப் புள்ளிகளின் சேர்க்கை என்பது தெளிவாகும்.


4. அடுத்து இந்தத் தித்தி எவ்வாறு அமைந்திருக்கும் என்று பார்ப்போம். இந்த நற்றிணை அடிகளைப் பாருங்கள்.

கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் - நற் 160/3-5

மென்மையாக, மேன்மேலே தோன்றிய தித்தியையும், எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கைகளின் மேலே, அள்ளித்தெளித்தாற்போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்

என்று இதற்கு உரைகாணும் பின்னத்தூரார், பின்னர் விளக்கத்தில் தித்தி என்பது வயிற்றின் மேலே தோன்றுவது என்பார்.

ஆனால், ஔவை.துரைசாமி அவர்கள், இதற்கு...
மெல்லென, முற்பட மேலே பரந்த தித்திபொருந்திய எழுகின்ற இளைய அழகிய முலைகளையும் விரலால் தெறித்தாற் போல் பரவிய பொன் போலும் தேமலையும்
என்று உரை கூறுவார்.  இவர் கூற்றுப்படி, தித்தி என்பது மார்பகத்தில் தோன்றுவது என்றாகிறது. இவர் தித்தி என்பது வரிவரியாகத் தோன்றுவது என்றும், சந்தனக் குழம்பைக் கைவிரலால் தெறித்தாற்போலத் தோன்றுவது சுணங்கு என்றும் கூறுவார்.

எதிர்த்த தித்தி முற்றா முலையள் - நற் 312/7

என்ற வேறொரு நற்றிணை அடியும் ’எதிர்த்த தித்தி’ என்பதால், இது மேலேறிப் படரும் தன்மையுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே தித்தி என்பது படர்ந்துள்ள இடத்தின் அடிப்பாகத்தில் சிலவாகவும்,  மேலே படர்ந்து விரிந்து பலவாகவும் இருக்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக,

வடித்து என உருத்த தித்தி - அகம் 176/23

என்கிற அகநானூற்று அடிக்கு, ‘பொன்னை உருக்கி வார்த்தாலொப்ப உருக்கொண்ட தேமலையும்’ என்று பொருள்கொள்வார் வேங்கடசாமி நாட்டார்.

எனவே இது பொன்னிறம் கொண்டது என்பது தெளிவாகிறது.


5. அடுத்து, இந்தத் தித்தி உடம்பில் எங்கெங்கு படரும் என்று காண்போம். மேலே கண்ட சிலகுறிப்புகளினின்றும் தித்தி என்பது அழகு ததும்பும் மாநிற மேனியில் படரும் என்று பொதுவாகவும், பெண்களின் மார்பகம் என்று குறிப்பாகவும் கூறுவதைக் கண்டிருக்கிறோம். இந்தக் குறுந்தொகை அடிகளைப் பாருங்கள்.

அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப - குறு 293/5,6

நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை, 
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க

என்பது இதன் பொருள். எனவே, தித்தி என்ற இவ்வகைத் தேமல், தொடைப் பகுதியிலும் காணப்படும் என்பதை மேலே கண்ட அடிகள் நிறுவுகின்றன. குறங்கு என்பது தொடை.

அடுத்து,

அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ - அகம் 385/9,10

பொருள்: 
வழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது
தேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட

என்ற அகநானூற்று அடிகளும், தித்தி தொடைப்பகுதியிலும் படர்ந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அடுத்து,

நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் - கலி 60/3

இதன் பொருள்: 
நுட்பமான அழகிய ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும் இடை

என்ற கலித்தொகை அடி, தித்தி என்பது இடைப்பகுதியிலும் காணப்படும் என்றும், அது ஒளிவிடும் புள்ளி (ஒண் துத்தி) என்றும் கூறுகிறது.


6.  இனி, தித்தி என்பதைப் பற்றிய சில முரண்பாடான கருத்துக்களைப் பார்ப்போம்.

உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை - பதி 52/17,18

இதன் பொருள்: 
அங்குமிங்கும் அலைப்பதால் வருந்தும் மாலையினையும், மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமலையும், 
ஈரப்பசையுள்ள இதழ்களைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பெருமை பொருந்திய இயல்பினையும் உடைய உன் மனைவி 

என்ற பதிற்றுப்பத்து அடிகளுக்கு உரை வகுத்த ஔவை துரைசாமியார், ஊரல் அம் துருத்தி என்பதற்கு மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமல் எனப் பொருள் கொள்கிறார். ஆனால்,

ஊரல் அம் வாய் உருத்த தித்தி - அகம் 326/1

என்ற அகநானூற்றுப் பாடலுக்கு உரை எழுதும் வேங்கடசாமி நாட்டார், இதனை ‘ஊரலாகிய அழகுவாய்ந்த உருப்பெற்ற தேமல்’  என்கிறார். இவர் ஊரல் என்பதுவும் ஒரு தேமல் வகை என்பார்.  இதனாலோ என்னவோ ஊரல் என்ற சொல்லுக்கு, ஊர்வது (creeping thing) என்றும், தேமல் வகை (Erruptive patch on the skin) என்றும் இரண்டு பொருள்களையும் தருகிறது தமிழ்ப்பேரகராதி. ஊரல் என்பதற்கு, அரித்தல், தினவு (Itching sensation)என்ற பொருளும் உண்டு. ஒருவேளை தித்தி என்ற பொன்னிறப்புள்ளிகள் மேனியில் ஓரளவு நமைச்சல் உண்டாக்கலாம். இதனால் கெடுதல் இல்லை என்பதனைக்குறிக்கவே, இதனை ஊரல் தித்தி என்று சொல்லாமல், ஊரல் அம் தித்தி என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர் என்றும் சொல்லலாம்.இனி, தித்தி என்ற சொல் சங்க இலக்கியங்களைத் தவிர வேறு இலக்கியங்களில் மிக மிக அருகியே வந்திருப்பதைக் காணலாம்.  அவற்றில், பெருங்கதை என்ற நூலில் உஞ்சைக்காண்டத்தில் தித்தி பற்றிய ஒரு செய்தி உண்டு.

தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் - உஞ்ஞை 41/97

என்ற இந்தப் பெருங்கதை அடியால் தித்தி என்ற தேமல், இடுப்பைச் சுற்றி, இடுப்பிற்கும் சற்றுக் கீழான அல்குல் பகுதியிலும் படர்ந்திருக்கும் எனத் தெரியவருகிறது.

எனவே, பெண்களின், இடைப்பகுதி, தொடைப்பகுதி மற்றும் மேனியின் பல பகுதிகளிலும், மிக நுண்ணியவாகவும், பலவாகவும் பொன் நிறத்தில் தோன்றும் ஒளிர்வுள்ள புள்ளிகளே தித்தி என்பது இவற்றால் பெறப்படும்.


தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/