Thursday, January 10, 2019

சங்க இலக்கியத்தில் தித்தி

—  முனைவர்.ப.பாண்டியராஜா



தித்தி என்பது பெண்களின் உடம்பில் காணப்படும் ஒருவகைப் புள்ளிகள் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதனைத் தேமல், அதாவது, Yellow spreading spots on the body என்று தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) குறிப்பிடுகிறது.

தித்தி என்றால் என்ன என்பதைச் சங்க இலக்கிய மேற்கோள்கள் வழி ஆய்வோம்.


1.
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே - நற் 157/10

இதன் பொருள்:
சிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் 
அழகிய பூந்தாதுக்கள் உதிர்ந்ததைப் போல 
நுண்ணிய பலவான தேமல் புள்ளிகள் பரந்த மாநிறத்தவளான நம் தலைவி. 

மிகவும் உயரமான வேங்கைமரத்தின் பூக்களிலுள்ள தாதுக்கள் எதன் மீது உதிர்ந்து கிடந்தன என்ற செய்தி இங்கு இல்லை. மிகவும் உயரமான மரம் என்பதால் தாதுகள் தரை மீது சிந்துவதற்குள் காற்றால் அடிக்கப்பட்டு சிதறிப்போயிருக்கும். எனவே அருகிலுள்ள மரக்கிளையில் அந்த நுண்ணிய தாதுக்கள் உதிர்ந்து விழுந்திருக்கலாம்.

பெண்களின் மார்புப்பகுதியில் தோன்றும் சுணங்கு என்ற புள்ளிகள் வேங்கை மரத்துப் பூக்களைப் போன்று சற்றுப் பெரிதானவை என அறிகிறோம்.
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் - கலி 57/17
என்ற அடி இதனை அறிவுறுத்தும். ஆனால் தித்தி என்ற புள்ளிகள் வேங்கை மலரின் நுண்ணிய தாதுக்கள் போன்றவை என்பதை வேங்கை அம் பூ தாது உக்கு அன்ன நுண் பல் தித்தி என்ற சொற்கள் விளக்குகின்றன.


2.  அடுத்து, தாமரை மலரின் தாதுக்களைப் போன்றது தித்தி என்று ஒரு குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே - குறு 300/4

இதன் பொருள்:
ஆழமான நீரில் உள்ள தாமரைமலரின் பூந்தாது போன்ற
நுண்ணிய பல தேமலையுடைய மாநிறத்தவளே!

இந்த அடிகள், தித்தி என்பது தாமரை மலரின் பூந்தாதுக்கள் போன்று நுண்ணியதாகவும், பலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இவை மேனியில் எந்தவோர் இடத்திலும் காணப்படும் என்றும் உணர்த்துகின்றன.


3.  இனி, தித்தியைப் பற்றி மிக விரிவாக விளக்கும் அகநானூற்றுஅடிகளைப் பார்ப்போம்.

மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய
நுண் பல் தித்தி மாஅயோளே - அகம் 41/13-16

இதன் பொருள்:
மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள 
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
நுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய மாநிறத்தவளாகிய நம் தலைவி

பூங்கொத்துக்களில் உள்ள பூக்களின் மேல் வண்டுகள் மொய்க்கின்றன. அதனால், அந்தக் கொத்துக்களில் உள்ள பூந்தாதுக்கள், தேனுடன் கலந்து அதன் அடியிலுள்ள தளிர்களில் தெறித்துவிழுகின்றன. அதைப் போல இருக்கிறதாம் பெண்களின் தளிர்மேனியில் பரவலாய்க் காணப்படும் நுண்ணிய பல தேமல் புள்ளிகளான தித்தி.

பூ எந்த நிறத்தில் இருந்தாலும் அதன் தாது பொன்னிறத்தில்தான் இருக்கும் என்பது உண்மை. பூந்தாது மிகவும் நுண்மையானது. பலவாகச் சேர்ந்தால்தான் அதற்கு ஒரு வடிவம் கிடைக்கும். மேலே கண்ட மூன்று குறிப்புகளிலும் ’நுண் பல் தித்தி’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், தித்தி என்பது நுண்மையான பல பொன்னிறப் புள்ளிகளின் சேர்க்கை என்பது தெளிவாகும்.


4. அடுத்து இந்தத் தித்தி எவ்வாறு அமைந்திருக்கும் என்று பார்ப்போம். இந்த நற்றிணை அடிகளைப் பாருங்கள்.

கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் - நற் 160/3-5

மென்மையாக, மேன்மேலே தோன்றிய தித்தியையும், எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கைகளின் மேலே, அள்ளித்தெளித்தாற்போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்

என்று இதற்கு உரைகாணும் பின்னத்தூரார், பின்னர் விளக்கத்தில் தித்தி என்பது வயிற்றின் மேலே தோன்றுவது என்பார்.

ஆனால், ஔவை.துரைசாமி அவர்கள், இதற்கு...
மெல்லென, முற்பட மேலே பரந்த தித்திபொருந்திய எழுகின்ற இளைய அழகிய முலைகளையும் விரலால் தெறித்தாற் போல் பரவிய பொன் போலும் தேமலையும்
என்று உரை கூறுவார்.  இவர் கூற்றுப்படி, தித்தி என்பது மார்பகத்தில் தோன்றுவது என்றாகிறது. இவர் தித்தி என்பது வரிவரியாகத் தோன்றுவது என்றும், சந்தனக் குழம்பைக் கைவிரலால் தெறித்தாற்போலத் தோன்றுவது சுணங்கு என்றும் கூறுவார்.

எதிர்த்த தித்தி முற்றா முலையள் - நற் 312/7

என்ற வேறொரு நற்றிணை அடியும் ’எதிர்த்த தித்தி’ என்பதால், இது மேலேறிப் படரும் தன்மையுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே தித்தி என்பது படர்ந்துள்ள இடத்தின் அடிப்பாகத்தில் சிலவாகவும்,  மேலே படர்ந்து விரிந்து பலவாகவும் இருக்கும் என்பது தெளிவாகிறது.

அடுத்ததாக,

வடித்து என உருத்த தித்தி - அகம் 176/23

என்கிற அகநானூற்று அடிக்கு, ‘பொன்னை உருக்கி வார்த்தாலொப்ப உருக்கொண்ட தேமலையும்’ என்று பொருள்கொள்வார் வேங்கடசாமி நாட்டார்.

எனவே இது பொன்னிறம் கொண்டது என்பது தெளிவாகிறது.


5. அடுத்து, இந்தத் தித்தி உடம்பில் எங்கெங்கு படரும் என்று காண்போம். மேலே கண்ட சிலகுறிப்புகளினின்றும் தித்தி என்பது அழகு ததும்பும் மாநிற மேனியில் படரும் என்று பொதுவாகவும், பெண்களின் மார்பகம் என்று குறிப்பாகவும் கூறுவதைக் கண்டிருக்கிறோம். இந்தக் குறுந்தொகை அடிகளைப் பாருங்கள்.

அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப - குறு 293/5,6

நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை, 
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க

என்பது இதன் பொருள். எனவே, தித்தி என்ற இவ்வகைத் தேமல், தொடைப் பகுதியிலும் காணப்படும் என்பதை மேலே கண்ட அடிகள் நிறுவுகின்றன. குறங்கு என்பது தொடை.

அடுத்து,

அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ - அகம் 385/9,10

பொருள்: 
வழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது
தேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட

என்ற அகநானூற்று அடிகளும், தித்தி தொடைப்பகுதியிலும் படர்ந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அடுத்து,

நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் - கலி 60/3

இதன் பொருள்: 
நுட்பமான அழகிய ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும் இடை

என்ற கலித்தொகை அடி, தித்தி என்பது இடைப்பகுதியிலும் காணப்படும் என்றும், அது ஒளிவிடும் புள்ளி (ஒண் துத்தி) என்றும் கூறுகிறது.


6.  இனி, தித்தி என்பதைப் பற்றிய சில முரண்பாடான கருத்துக்களைப் பார்ப்போம்.

உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை - பதி 52/17,18

இதன் பொருள்: 
அங்குமிங்கும் அலைப்பதால் வருந்தும் மாலையினையும், மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமலையும், 
ஈரப்பசையுள்ள இதழ்களைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பெருமை பொருந்திய இயல்பினையும் உடைய உன் மனைவி 

என்ற பதிற்றுப்பத்து அடிகளுக்கு உரை வகுத்த ஔவை துரைசாமியார், ஊரல் அம் துருத்தி என்பதற்கு மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமல் எனப் பொருள் கொள்கிறார். ஆனால்,

ஊரல் அம் வாய் உருத்த தித்தி - அகம் 326/1

என்ற அகநானூற்றுப் பாடலுக்கு உரை எழுதும் வேங்கடசாமி நாட்டார், இதனை ‘ஊரலாகிய அழகுவாய்ந்த உருப்பெற்ற தேமல்’  என்கிறார். இவர் ஊரல் என்பதுவும் ஒரு தேமல் வகை என்பார்.  இதனாலோ என்னவோ ஊரல் என்ற சொல்லுக்கு, ஊர்வது (creeping thing) என்றும், தேமல் வகை (Erruptive patch on the skin) என்றும் இரண்டு பொருள்களையும் தருகிறது தமிழ்ப்பேரகராதி. ஊரல் என்பதற்கு, அரித்தல், தினவு (Itching sensation)என்ற பொருளும் உண்டு. ஒருவேளை தித்தி என்ற பொன்னிறப்புள்ளிகள் மேனியில் ஓரளவு நமைச்சல் உண்டாக்கலாம். இதனால் கெடுதல் இல்லை என்பதனைக்குறிக்கவே, இதனை ஊரல் தித்தி என்று சொல்லாமல், ஊரல் அம் தித்தி என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர் என்றும் சொல்லலாம்.



இனி, தித்தி என்ற சொல் சங்க இலக்கியங்களைத் தவிர வேறு இலக்கியங்களில் மிக மிக அருகியே வந்திருப்பதைக் காணலாம்.  அவற்றில், பெருங்கதை என்ற நூலில் உஞ்சைக்காண்டத்தில் தித்தி பற்றிய ஒரு செய்தி உண்டு.

தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் - உஞ்ஞை 41/97

என்ற இந்தப் பெருங்கதை அடியால் தித்தி என்ற தேமல், இடுப்பைச் சுற்றி, இடுப்பிற்கும் சற்றுக் கீழான அல்குல் பகுதியிலும் படர்ந்திருக்கும் எனத் தெரியவருகிறது.

எனவே, பெண்களின், இடைப்பகுதி, தொடைப்பகுதி மற்றும் மேனியின் பல பகுதிகளிலும், மிக நுண்ணியவாகவும், பலவாகவும் பொன் நிறத்தில் தோன்றும் ஒளிர்வுள்ள புள்ளிகளே தித்தி என்பது இவற்றால் பெறப்படும்.






தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/








No comments:

Post a Comment