Sunday, January 20, 2019

பெண்ணையாற்றுத் திருவிழா——  திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம்


           “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் இறைவா” என்று பாரதி பாடியது, பெண்ணையாற்றுத் திருவிழாவில்தான் இருக்கும் என்று பள்ளி நாட்களிலும் கல்லூரி நாட்களிலும் நான் நினைத்ததுண்டு. அவ்வளவு குதுகலமாக இருக்கும் அந்தத் திருவிழா. தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள கிராமங்களிலும், நகரங்களிலும் தை மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது இந்த விழா. அந்த நாளன்று, கங்கையாறு பெண்ணையாற்றில் வந்து குளிப்பதாக ஒரு புராணக் கதை.

           கர்நாடக மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி ,அனுமன் தீர்த்தம், சாத்தனூர், ஆதித் திருவரங்கம், திருக்கோவிலூர், கண்ட்ரக்கோட்டை வழியே பாய்ந்து, கடலூருக்குச் சற்று வடக்கே கடலில் கலக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கண்ட்ரக்கோட்டையிலும், கடலூரிலும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

           கங்கையின் புனிதம் பெண்ணையில் கலப்பதால் அந்தப் புனிதத்தை, புண்ணியத்தைத் தமதாக்கிக் கொள்ளச் சுற்று வட்டாரங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்து ஆற்றில் நீராடி மகிழ்வர். மக்கள் மட்டுமல்ல அந்தப் பகுதிகளில் உள்ள திருக் கோவில்களிலிருந்து உற்சவ மூர்த்திகளும் வந்து நீராடும் காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களிப்பர்.. கடலூரைப் பொறுத்தவரை,. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், கரிநாள் (காணும் பொங்கல்) வெறும் நாள், திருநாள் எனப் பொங்கல் பண்டிகை ஆறு நாட்கள் நடைபெறும்.

source: https://www.tamilmalarnews.com/

           பெண்ணையாற்றுத் திருநாளன்று, வெள்ளை வெளேரென்று விரிந்திருக்கும் ஆற்றுப் படுகையில் காற்றாடி (பட்டம்) போட்டி மிகச் சிறப்பாக நடைபெறும். அந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக, மாஞ்சா போடும் வேலை வெறு நாளில் நடைபெறும். பொங்கலுக்கு முன்பிருந்தே கண்ணாடி பல்புகளை உடைத்து அரைக்கத் துவங்கிவிடுவோம். முரட்டுத்துணியில் அதை சளிப்போம். கண்ணாடித்தூள் மைதாமாவு போல் வரும்வரை அரைத்துச் சளிப்போம். மாஞ்சா காய்ச்சும்போது அதில் வெவ்வேறு பொருட்கள் அரைத்துக் கலக்கப்படும். அந்த ஃபார்முலா கோகோகோலா ஃபார்முலாவை விட டாப் சீக்ரட். புதுச்சேரி, கடலூர், ஓ.டி. நெய்வேலி எனப் பல பகுதிகளிலிருந்து பத்து, பதினைந்து காற்றாடி டீம்கள் வரும். ஒருவர் ஃபார்முலா அடுத்தவருக்குத் தெரியாது.

           சின்னஞ்சிறுவர்கள் விடும் வால்கட்டி காற்றாடிகளை யாரும் அறுக்க மாட்டார்கள். மூங்கில் குச்சிகளை சீவி செய்யப்பட்ட கொக்கடி ( வால் கட்டாதவை) காற்றாடிகளுக்கு இடையே மட்டுமே டீல் நடக்கும். டீலின் போது பட்டம் விடுபவர் விரலில் மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் சொட்டும். எதைப் பற்றியும் கவலைப் படாமல், அடுத்தவன் பட்டத்தை அறுத்து அதைக் காற்றில் மிதக்கச் செய்யும்போது நாங்கள் அடையும் சுகத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

source: https://www.thehindu.com/news/national/tamil-nadu/high-on-fun-with-kites/article7624233.ece

           விழாவில் கூடும் ஆயிரக்கணக்கான மக்கள், கடலூரின் எல்லையில் உள்ள பாலத்தின் கீழ் நிழலில், குடும்பம் குடும்பமாக அமர்ந்து, இட்லி- பொடி ஆயில்,வெங்காய சட்னி, பூண்டு மிளகாய் சட்னி, சாம்பார், மசால் வடை ,புளிச் சோறு, எலுமிச்சை சோறு, சாம்பார் சோறு, தேங்காய் சோறு, தயிர்ச் சோறு எனத் தாங்கள் கொண்டு வந்த அன்னங்களை மற்ற குடும்பங்களோடு பகிர்ந்துண்டு மகிழ்வர். பல வண்ண பலூன்கள், பனங்கிழங்கு, பஞ்சு மிட்டாய், ரப்பர் மிட்டாய் , குச்சி ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ், கப் ஐஸ் என வித விதமான ஐஸ்கள், ஒரு  பக்கம் குடை ராட்டினம், மறுபக்கம் தொட்டி ராட்டினம்... ...எங்களின் பாடு படு கொண்டாட்டமாக இருக்கும்.

           வடக்குப் பகுதியில் ஒரு 50மீ. அகலத்திற்கு நீர் ஓடிக் கொண்டிருக்கும். அதை ஒட்டிய பகுதியில், கைகளால் மணலைத் தோண்டினால் ஊற்று சுரக்கும், அதைக் கூஜாவில் முகந்து வந்து குடித்து மகிழ்வோம். இன்றைய பாட்டில் தண்ணீரை விடக் குளிர்ச்சியாய், சுவையாய் இருக்கும். 

           இப்போதும் பெண்ணையாற்றுத் திருவிழா நடைபெறுகிறது. ஆற்றில் மணலும் இல்லை. இளைஞர்கள் இடையே மகிழ்ச்சியும் இல்லை

           அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே......பெண்ணையே, பெண்ணையே, பெண்ணையே !!!தொடர்பு: திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)


No comments:

Post a Comment