Wednesday, January 30, 2019

சிலோன் தீவு வரைப்படம்

—  முனைவர் க.சுபாஷிணி



          திரு. வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைபடம்.

          Insel Zeilan  என்ற  டச்சு மொழிப் பெயருடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.  வரைபடம் முழுமைக்கும் லத்தின் மொழியில் ஊர்கள் மற்றும் கடல்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.  Insel Zeilan    என்பது டச்சு மொழிப் பெயர். ஆக, இலங்கைத் தீவு டச்சுக்காலனித்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

          இந்த வரைபடத்தின் அசல்,  காகிதத்தில் அச்சுப்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தில் மன்னார், கண்டி, மட்டக்களப்பு, திரிகோணமலை போன்ற பெயர்களை அடையாளம் காண முடிகின்றது.

          கி.பி.17ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவின் பெரும்பகுதி போர்த்துக்கீசியர்களாலும் உள்ளூர் இலங்கை மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது.  போர்த்துக்கீசியர்களின் தாக்கத்தை எதிர்க்க உள்ளூர் இலங்கை மன்னர்கள்  வணிகம் செய்ய வந்த டச்சுக்காரர்களின் உதவியை நாடினர். 1638ம் ஆண்டு கண்டி ஒப்பந்தம் மன்னன் 2ம் ராஜசிங்கனுக்கும் டச்சு அரசு பிரதிநிதிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.  டச்சு அரசின் தாக்கம் இதன்வழி இலங்கையில் காலூன்றத் தொடங்கியது. ஆனால் மன்னன் 2ம் ராஜசிங்கன் அதே வேளையில் பிரஞ்சுக்காரர்கள் உதவியையும் நாடியதோடு திரிகோணமலை துறைமுகத்தையும் அவர்களுக்கு வழங்கினார். இது டச்சுக்காரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். இப்பகுதியைத் தாக்கி திரிகோணமலையை டச்சுக்காரர்கள் கைப்பற்றி தம் வசம் வைத்துக் கொண்டனர்.

          இந்த நிலை படிப்படியாக மாறியது. இலங்கைத் தீவு Dutch Ceylon  என்ற பெயரில் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் கி.பி.1640 முதல் 1796 வரை இருந்தது.   கடற்கரையோர பகுதிகளை இக்காலகட்டத்தில் டச்சுப்படை கைப்பற்றியிருந்தது. ஆனால் கண்டியைக்  கைப்பற்ற இயலவில்லை. 1638ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.  டச்சுக்காரர்கள் தமிழர் வசம் இருந்த பகுதிகள் அனைத்தையும் தம் வசம்  படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர்.

          இக்காலகட்டத்தில் தமிழகத்தின்  தஞ்சையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குத் தோட்டங்களில் பணிபுரிய  கூலித் தொழிலாளர்களாக  மக்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இலவங்கப்பட்டை தோட்டங்கள், புகையிலைத் தோட்டங்களில் பயிர்த்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இக்காலகட்டத்தில்  டச்சு கடற்கரையோர அரசு (Dutch Coromandel) இயங்கிக் கொண்டிருந்தது. இதன் தலைமையகம் தமிழகத்தின் பழவேற்காடு பகுதியில் அமைந்திருந்தது.  இதன் வழி  தங்கள் காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் தேவைப்படும் மனிதவளத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாட்களைக்  கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் தலைமையகம்  செயல்பட்டது என்றும் அறியமுடிகின்றது.

          Insel Zeilan  என்று இலங்கை பற்றிய  பெயர் குறிப்பு ஜெர்மானிய டோய்ச் மொழியில் வெளிவந்த  ஆயிரத்து ஓர் இரவுகள் (Tausand und eine nacht) என்ற சிந்துபாத் கதையிலும்,   கி.பி 1755ல் வெளிவந்த  ஜெர்மானிய டோய்ச் மொழி வர்த்தகம் தொடர்பான லைப்ஸிக் நகரில் அச்சிடப்பட்ட ஒரு  நூலிலும் மேலும் சில 18ம், 19ம் நூற்றாண்டு நூல்களிலும்  குறிப்பிடப்படுகின்றது.

          இந்த  வரைபடம் இலங்கைத் தீவின்  முழுமையையும் குறிப்பதாகக் காட்டப்படவில்லை. குறிப்பாக  இலங்கையின் தென்பகுதி  இந்த வரைபடத்தில் தென்படவில்லை. ஆக, ஆரம்பக்கால ஆசிய நிலப்பகுதிகளின் வரைபட முயற்சியாக இருக்கலாம் என ஒரு வகையில் ஊகிக்கலாம். அத்துடன் டச்சு காலனித்துவ காலகட்டத்தையும் அச்சு இயந்திரங்கள் பரவலாக செயல்படத்தொடங்கிய நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டால் இது ஏறக்குறைய கி.பி 17ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது.



தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)


No comments:

Post a Comment