— திருத்தம் பொன். சரவணன்
முன்னுரை:
வண்டி என்று சொன்னவுடன் இக்காலத்து மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது என்னவோ ஈர்வை (டூவீலர் / மொபெட்) தான். அதிக வசதி கொண்டவர்களுக்கு நால்வை (கார்) நினைவுக்கு வரும். ஆனால் இவையெல்லாம் எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து எப்படியெல்லாம் உருமாறி நம்முன்னால் வந்து நின்றன என்ற வரலாறு நம்மில் பலபேருக்குத் தெரியாது. உண்மையில் வண்டிகளின் ஆதி தோற்றம் பற்றிய சரியான கால ஆய்வு என்பது முழுமையாகச் செய்யப்படவுமில்லை இதுவரையிலும் அறியப்படவுமில்லை. இவ் ஆய்வுகளைச் செய்யப் புகுந்தோரும் கீழைநாடுகளின் பண்பாடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அரைகுறையாக ஆய்வுசெய்து தமது முடிவுகளை அறிவித்திருக்கின்றனர்.
சக்கரங்களின் கண்டுபிடிப்பிற்குப் பிறகே வண்டிகள் கண்டறியப்பட்டு அவற்றில் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்ற கருத்தே வலுவாக எங்கும் நிலவுகிறது. அதாவது சக்கரங்கள் கண்டுபிடிக்கப் பட்டபின்னர் அவை முதன்முதலில் மண்பாண்டத் தொழிலில்தான் பயன்படுத்தப் பட்டதென்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சக்கரங்கள் எப்போது எங்கே யாரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது? இச் சக்கரங்களைக் கொண்டு யார் முதன்முதலில் மண்பானைகளைச் செய்தார்கள்? என்ற கேள்விகளுக்கு மிகச்சரியான ஆதாரங்களுடன் கூடிய விடையினை இதுவரை எந்தவொரு ஆய்வாளரும் முன்வைக்கவில்லை என்பதே உண்மையாகும்.
முன்பொரு காலத்தில் இந்தியா முழுவதிலும் தமிழர்களே வாழ்ந்திருந்தனர் என்பது நான்கு கடவுள் - பகுதி 3 - தொல்தமிழகம் என்ற ஆய்வுக்கட்டுரையில் பல சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தொல்தமிழர் பண்பாட்டில் வண்டிகளும் சக்கரங்களும் எவ்வகையான பயன்பாட்டில் இருந்தன என்பதற்குச் சங்க இலக்கியங்களைத் தவிர வேறு உறுதியான ஆதாரங்கள் கிடைக்காத நிலையே இதுநாள்வரையிலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த தொல்பொருள் எச்சங்கள், இலக்கிய ஆதாரங்களுக்குத் துணையாக நின்று மேலும் வலுசேர்க்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், சங்க இலக்கிய ஆதாரங்கள் மற்றும் அகழ்வாய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலத் தமிழரின் பண்பாட்டில் வண்டியும் சக்கரங்களும் புழங்கப்பட்ட நிலையினைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையினைக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
சங்க இலக்கியத்தில் வண்டி:
சங்க இலக்கியத்தில் வண்டி தொடர்பான பல பாடல்கள் உள்ளன. ஆனால் ஒரு பாடலில் கூட வண்டி என்ற சொல் பயிலப்படவில்லை. பாண்டில், தேர், வையம், சகடம், சாகாடு, ஒழுகை போன்ற பல பெயர்களால் வண்டியானது குறிக்கப்பெற்றுள்ளது. வண்டியைப் பற்றிப் பல சங்கப் பாடல்கள் கூறினாலும் பெரும்பாணாற்றுப்படையில்தான் விரிவான செய்திகளைக் காணமுடிகிறது. காளைமாடு பூட்டிய வண்டியினைக் கைக்குழந்தையினைக் கொண்ட பெண்ணொருத்தி ஓட்டிச்சென்ற நிகழ்வினை அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவரும் சங்கப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
.... கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப .... - பெரும். 46
பொருள்விளக்கம்: அந்த வண்டிச் சக்கரத்தின் சூட்டானது பெருத்திருந்தது. ஆரக்கால்கள் திருத்தப்பட்டிருந்தன. உருளியானது ஒரே மரத்தில் செய்யப்பட்டு பார்ப்பதற்கு முரசினைப் போலத் தோன்றியது. வண்டியின் பாரானது கணையமரம்போல பருத்த கழியினால் செய்யப்பட்டு இருந்தது. வண்டியின்மேல் இருந்த ஆரையின்மேல் பசுந்தாள்களைக் குவித்து இருந்தனர். இத்தாள்கள் உலர்ந்து கருத்துப்போன நிலையில், ஆரைக்குமேலாக வெண்ணிறத் துணியாலான பொதிமூட்டைகள் கயிற்றால் கட்டிவைக்கப்பட்டு இருந்த தோற்றமானது கருநிறக் குன்றின்மேல் வெண்மேகங்கள் இருப்பதைப் போலத் தோன்றியது. வண்டியின் பின்புறத்தில் இருந்த கோழிகள் தங்கும் கூடானது யானைகளைத் துரத்தும் தோட்டக் காவலர்கள் தங்குகின்ற உயரமான குடிசையினைப் போல ஆரையின் மேல் தோன்றியது. சிறிய மருப்பினைக் கொண்ட பெண்யானையின் முழங்காலைப் போலத் தோன்றிய ஒரு சிறிய உரலானது வண்டியில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. நாடகமாடும் பெண்கள் ஆடும்போது தம்கையில் எடுத்து வாசிக்கும் சிறியபறையினைப் போலத் தோன்றிய புளித்த மோர்க்கஞ்சியைக் கொண்ட மண்பானையானது வெண்ணிறத் துணியைக்கொண்டு மூடி கயிற்றால் கட்டப்பட்டிருக்க, கையில் குழந்தையைக் கொண்ட அப்பெண்ணானவள் வண்டியின் முன்னால் இருக்கும் வளைந்த பகுதியில் அமர்ந்தவாறு காளைமாட்டினைத் துரத்தி ஓட்டிக் கொண்டிருந்தாள்....
வண்டியின் பயன்பாடுகள்:
சங்ககாலத் தமிழர்கள் என்னென்ன வகையான வண்டிகளைப் பயன்படுத்தினர் என்பதைச் சங்க இலக்கியங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. காளைமாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளை இழுவைக்குப் பயன்படுத்திய செய்திகளைக் கூறும் சங்கப் பாடல்கள் பல உள்ளன. இவற்றில் காளைமாடு பூட்டிய வண்டிகளைப் பாரம் சுமந்து செல்வதற்கும் குதிரை வண்டிகளை மனிதர்கள் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தி உள்ளனர். இதைப் பற்றிச் சங்கப் பாடல்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.
அ. உப்புவண்டி:
சங்ககாலத்தில் பொதுமக்கள் ஒரு மாட்டுவண்டியில் என்னென்ன திணைகளை எப்படியெல்லாம் ஏற்றிக்கொண்டு சென்றனர் என்பதை மேற்கண்ட பெரும்பாணாற்றுப்படை பாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, கடலில் விளையும் உப்பினைச் சாத்தர்கள் (வணிகர்கள்) மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்று ஊருக்குள் விற்றனர். உமண் என்பது உப்பினைக் குறிக்கும் என்பதால் உப்பு விற்கும் சாத்தர்கள் உமணர் என்று அழைக்கப்பட்டனர். சங்க இலக்கியப் பாடல்களில் உமணர்களின் உப்பு வண்டி மிகப்பரவலாகப் பேசப்பட்டுள்ளது. ஒருசில பாடல்களை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் - குறு.165
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட - புறம்.313
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் - நற்.331
இக்காலத்தில் இருப்பதைப்போன்ற தார்ச்சாலைகள் சங்ககாலத்தில் இல்லை. ஆனால் கற்களை மண்ணில் தொடர்ச்சியாகப் பதித்து அவற்றின்மேல் மணலைக் கொட்டிப் பரப்பிச் சாலைகள் அமைத்திருக்க வேண்டும் என்ற கருத்து தோன்றுகின்றது. காரணம் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்கள் ஆகும்.
... விரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ - புறம்.90
வண்டிகள் சாலையில் செல்லும்போது பரப்பியிருந்த மணலின்மேல் சக்கரங்கள் ஏறுதலால் ஓசையுண்டாகவும் கற்கள் பிளந்து உடையவும் பெருமிதத்துடன் நடந்துசெல்லும் காளைமாட்டுக்குத் துறையும் உண்டா?என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.
உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி
கரும் கால் வெண்குருகு வெரூஉம் - நற்.4
உமணர்கள் உப்பினை ஏற்றிய வண்டிகள் செல்லும் நீண்ட வழியில் மணலின்மேல் சக்கரங்கள் ஏறும்போது உண்டாகிய பெரும் ஓசையினைக் கேட்டு வயலில் இருந்த குருகினங்கள் அஞ்சிப் பறந்தன என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.
மேற்காணும் பாடல்களில் இருந்து, சங்க காலத்தில் உமணர்கள் தங்களின் உப்புவண்டிப் போக்குவரத்திற்காக இதுபோன்ற கல்-மணல் சாலைகளை அமைத்துப் பயன்படுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னதான் கல்-மணல் சாலைகளை அமைத்தாலும் மழையினால் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சீர்கெடத் தான் செய்யும். இதனால் ஆங்காங்கே சேற்றுநிலம் உண்டாகத் தான் செய்யும். வண்டிகள் உப்பினைச் சுமந்து செல்லும்போது வழியில் இருக்கும் சேற்றில் சில நேரங்களில் வண்டிச் சக்கரங்கள் சிக்கிக் கொள்ளும். பாரம் அதிகமாக இருப்பின் சிக்கிய சக்கரங்களை மீட்டு எடுத்து மேலேற்றுவதற்கு காளைமாடும் சரி மற்றவர்களும் சரி மிகவும் சிரமப்படுவார்கள். இதைப் பற்றிய செய்திகளைக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் - புறம்.60
(பொருள்: உப்பங்கழியில் இருந்து உப்பினை ஏற்றிக்கொண்டு மலைநாடு செல்லும்வழியில் வண்டியின் சக்கரம் சேற்றில் சிக்கிக்கொள்ள, அதனைத் தனது வலிமையால் வென்று மீட்டெடுக்கும் எருதினைப் போன்ற பெரும் வலியுடைய எனது தலைவன்...)
நெய்தல் மரபின் நிரை கள் செறுவின்
வல் வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து
சாகாட்டாளர் கம்பலை அல்லது பூசல் அறியா ...- பதி.27
(பொருள்: களிப்பான சேற்றில் வண்டியின் சக்கரங்கள் சிக்கிக்கொள்ள, எருதினையும் வண்டியினையும் மீட்க முயல்கின்ற வண்டிக்காரர்கள் எழுப்பும் பேரோசை அல்லது வேறோசையினைக் கேட்டறியாத....)
ஆ. குதிரை வண்டி:
சங்ககாலத்தில் தமிழர்கள் குதிரைகளின்மேலும் குதிரைகள் பூட்டிய வண்டிகளிலும் ஏறிப் பயணம் செய்தனர் என்று "சங்க இலக்கியத்தில் விலங்கியல் - குதிரை" என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். சங்க இலக்கியத்தில் "தேர்" என்று கூறப்படுவதான குதிரை வண்டி தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளை இங்கே காணலாம்.
குதிரை வண்டியை ஓட்டுபவனை வலவன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. காளைமாடுகளைப் போலவே குதிரைகள் ஓட்டத்தின்போது தளர்ந்தால் அவற்றைக் குத்துக்கோல் கொண்டு வலவர்கள் குத்துவார்கள். குதிரைவண்டி வருவதனைப் பிறர் அறிந்து கொள்வதற்காக குதிரையின் கழுத்திலும் வண்டியிலும் ஒலிக்கின்ற பல மணிகளைக் கோர்த்துத் தொங்க விட்டிருப்பார்கள். இச்செய்திகளை எல்லாம் கீழ்க்காணும் நற்றிணைப் பாடலில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலிமா
வலவன் கோல் உற அறியா
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே - நற்.78
குதிரை வண்டியின் சக்கரமானது மாட்டுவண்டியைப் போலன்றி மெலிதாக இருக்கும். மணற்பாங்கான நெய்தல் நிலங்களில் செல்லும்போது சக்கரங்கள் மணலில் புதைந்துவிடாமல் இருப்பதற்கு ஏதுவாக சக்கரங்களின் மேல்வளைவில் அரத்தின் வாய்போன்ற கூரிய பல பற்களை வரிசையாகக் கொண்ட இரும்பினாலான பட்டைத் தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏறத்தாழ இவ் அமைப்பானது சேறுநிறைந்த வயலில் உழுவதற்குத் தற்காலத்தில் பயன்படுகின்ற நுகத்தேரின் (டிராக்டர்) சக்கரங்களின் அமைப்பினை ஒத்திருக்கும். குதிரை வண்டிகளின் ஆழிக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டும் என்றால், திருமாலின் கையிலிருக்கும் சக்கரப்படையினைச் சொல்லலாம். இத்தகைய சக்கரங்களை வள்வாய் ஆழி (கூரிய வாயினைக் கொண்ட சக்கரம்) என்றும் நேமி என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
தேரும் ஓவத்து அன்ன கோப செம் நிலம்
வள்வாய் ஆழி உள் உறுபு உருள கடவுக - அகம்.54
வள்வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலிமா ... - நற்.78
குதிரை வண்டி வேகமாக ஓடும்போது வண்டிச் சக்கரங்களின்மேல் இருந்த தகடுகளில் கதிரொளி பட்டுத் தகதகவென ஒளிர்ந்தது. இதனால் இதனை இளம்பிறையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி .. - குறு.189
சக்கரங்களில் பல்போன்ற அமைப்புக்கள் இருந்த காரணத்தினால் குதிரை வண்டிகள் செல்லும்வழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகள், பயிர்கள் மற்றும் பூக்கள் வண்டிச் சக்கரங்களின் வாய்ப்பட்டு அறுபடும். இச் செய்திகளைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா - நற்.338
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப.. - குறு.189
பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள்முகம் துமிப்ப வள்இதழ் குறைந்த கூழைநெய்தலும்... - குறு.227
மலைக்குன்றில் இருந்து கீழ்நோக்கி வேகமாக இறங்கும்போது குதிரைவண்டியின் சக்கரங்கள் எழுப்பிய கடகட ஓசையானது கார்முகில்கள் மழைநேரத்தின்போது எழுப்பும் ஓசையினைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.
விடு விசை குதிரை விலங்கு பரி முடுக
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி
கார் மழை முழக்கு இசை கடுக்கும்
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே - அகம்.14
இ. வில்வண்டி:
தற்காலத்தில் வில்வண்டி என்று அழைக்கப்படும் வண்டியானது சங்க இலக்கியங்களில் ஆரைச்சாகாடு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஆரை என்பது வில்லைப் போன்று அரைவட்டமாக வளைந்த கூரையினைக் குறிப்பதாகும். வண்டியில் நீண்டதூர பயணம் செய்யும்போது வெயில் / மழையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும் அலுப்பு தெரியாமல் இருப்பதற்கும் வண்டிக்கு மேலாக வில்போன்ற அமைப்பினை கூரையாக அமைத்திருப்பார்கள். அருகில் ஒரு வில்வண்டியின் படம் காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக, வில்வண்டியில் இருக்கும் ஆரையானது மரச்சட்டங்களை வளைத்து அதன்மேல் துணிகொண்டு போர்வைபோல மூடிச் செய்யப்பட்டு இருக்கும். மழைக்காலங்களில் இந்தத் துணிகளில் நீர் ஊறி உள்ளே சொட்டக்கூடாதென்றும் வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும் ஆரையின் மேற்புறத்தில் பசுந்தளைகளை குவியலாகப் போட்டுக் கயிற்றால் கட்டியிருப்பார்கள். அதுமட்டுமின்றி, ஆரையிலுள்ள துணியின் அடிப்புறத்தில் அதாவது உட்புறமாக செவ்வரக்கு என்னும் மெழுகினை உருக்கித் துணியில் ஊற்றி வார்த்திருப்பர். இதனால் துணியில் இருந்து உட்புறமாக நீர் சொட்டாது. ஆரைத்துணியில் வார்த்திருந்த செவ்வரக்கானது முருக்கமரம் முழுவதிலும் மலர்ந்திருந்த செந்நிற மலர்களைப் போல அழகுடன் தோன்றியதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
... ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை - சிறு.252
ஆரைத்துணியின் மேற்புறத்தில் குவித்து வைத்திருந்த பசுந்தளைகள் உலர்ந்துபோயிருக்க, உட்புறத்தில் செந்நிற அரக்கு பூசப்பட்டிருக்க அதைப்பார்த்த புலவருக்கு முதலையின் நினைவு வந்துவிட்டது. அந்த ஆரையின் அமைப்பானது பார்ப்பதற்கு எப்படி இருந்ததென்றால் ஒரு முதலையானது தனது வாயை அகலமாகத் திறந்து வைத்திருந்ததைப் போல நீண்டு இருந்ததென்று கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து - அக.301
இன்னொரு புலவரோ ஆரையினை மலைக்குன்றுக்கு ஒப்பாகக் கூறுகிறார். காய்ந்துபோன தளைக்குவியலுக்கு மேலாக வெண்ணிறத் துணியாலான மூட்டைகளை அடுக்கிக் கயிற்றால் கட்டியிருந்தனர். இதைப்பார்த்த புலவருக்குக் கரிய மலைக்குன்றும் அதன்மேல் தங்குகின்ற வெண்மேகப் பொதிகளும் நினைவுக்கு வர உடனே கீழ்க்காணுமாறு பாடுகிறார்.
மாரிக் குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் .. - பெரும். 37
வில்வண்டிகள் பயணத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டன என்பதால் விரைவு கருதி பெரும்பாலும் குதிரைகளையே இவ் வண்டிகளில் பயன்படுத்தினர். பொருளாதார நிலைக்கேற்ப காளைமாடுகளும் வில்வண்டிகளில் பயன்படுத்தப்பட்டன.
வண்டியின் உறுப்புக்கள்:
சங்க காலத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வண்டிகளில் இருந்த பல்வேறு உறுப்புக்களின் பெயர்களைச் சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. காளைமாடுகள் பூட்டி இழுக்கப்படும் ஒரு வண்டியின் படமும் அதன் உறுப்புக்களைக் குறிக்கும் சங்கத் தமிழ்ப் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சகடு / சக்ர - எது முதலில்?:
மேலே கண்ட வண்டியின் பல்வேறு உறுப்புக்களில் சகடு என்பது வண்டியின் ஆழியைக் குறிக்கும் ஒரு சங்ககாலத் தமிழ்ச்சொல் ஆகும். இச்சொல்லில் இருந்தே வண்டியின் ஆழியைக் குறிக்கும் சக்ர என்னும் செங்கிருதச் சொல் தோன்றியது என்று இக்கட்டுரையின் ஏழாம் பகுதியில் கண்டோம். ஆனால், சக்ர என்னும் செங்கிருதச் சொல்லில் இருந்தே தமிழ்ச்சொல் ஆகிய சகடு / சகடம் தோன்றியது என்ற கருத்தே இதுவரையிலும் நிலவி வருகிறது. உண்மையில் இக்கருத்தானது மீள்பார்வை செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதனை இக்கட்டுரையின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாகக் கருதப்படும் சுமேரியப் பண்பாடு, மாய்கோப் பண்பாடு, முந்தை கூர்கன் பண்பாடு, கிழக்கு ஐரோப்பா பண்பாடு போன்ற பண்பாட்டினர் தான் உலகில் முதன்முதலில் சக்கரங்களைப் பயன்படுத்தியதாக விக்கிப்பீடியா கூறுகிறது. ஆனால், இந்தப் பண்பாடுகளில் யார் முதன்முதலில் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்ற கேள்விக்குச் சரியான விடையை இன்னும் காணமுடியவில்லை என்று அதே விக்கிப்பீடியா கூறுகிறது. அதுமட்டுமின்றி, உலகில் முதன்முதலில் சக்கரங்களை வண்டியில் பயன்படுத்தவில்லை என்றும் பானைசெய்யும் குயவர்கள் தான் சக்கரங்களை முதன்முதலில் பயன்படுத்தினர் என்றும் கூறுகிறது.
மேற்கூறிய நான்கு விதமான பண்பாடுகளையும் பார்த்தால் அவை வெவ்வேறு நாட்டினைச் சார்ந்தவை என்பது புலப்படும். இத்தனைப் பண்பாடுகளைப் பற்றிக் கூறிய ஆய்வாளர்கள் ஏன் இந்தியாவின் தொன்முது பண்பாட்டினராக வாழ்ந்துவந்த சங்கத் தமிழரின் பண்பாட்டினைப் பற்றிக் கூறவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. உண்மையில், உலகின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துவந்த இப் பண்பாட்டினர்கள் சக்கரங்களைக் கண்டறிந்து மட்பாண்டத் தொழிலுக்குப் பயன்படுத்திய அதே சமயத்தில்தான் இந்தியாவில் சங்கத் தமிழர்களும் ஆழிகளைப் பயன்படுத்தலாயினர் என்று உறுதியாகக் கூறலாம். தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் எச்சங்களை இக்கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளலாம். இதைப்பற்றிய விரிவான செய்திகளைக் கீழே காணலாம்.
ஆதிச்சநல்லூர் தாழிகள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் என்னும் ஊரானது தொல்தமிழகத்தின் பண்பாட்டுத் தொட்டில் என்று கருதப்படுகிறது. அந்த அளவுக்கு அங்கே தொல்தமிழர் பண்பாட்டின் எச்சங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் பலனாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன. இத்தாழிகளுக்குள் இறந்த மனிதர்களின் எலும்பின் எச்சங்களும் கிடைத்துள்ளன. காரணம், சங்ககாலத் தமிழரின் பண்பாட்டின்படி இறந்தவர்களை முதுமக்கட் தாழி எனப்படும் மண்ணால் செய்யப்பட்ட பெரிய பெரிய தாழிகளுக்குள் (பானைகள்) வைத்துத்தான் புதைப்பார்கள். இதைப்பற்றிய செய்திகள் பல சங்க இலக்கியப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்த ஈமத்தாழிகளுக்குள் இருந்த எச்சங்களின் வயதானது கார்பன் டேட்டிங் முறைப்படி 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னரும் அந்த ஊரில் தமிழர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் அத் தமிழர்கள் மண்தாழிகளை உருவாக்கத் தெரிந்தவர்கள் என்பதும் உறுதியாகிறது. சக்கரங்களின் உதவியின்றி இவ்வளவு பெரிய மண்தாழிகளை அதுவும் சரியான வடிவில் உருவாக்க இயலாது என்பதால் அவர்கள் கண்டிப்பாகச் சக்கரங்களைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்பதும் உறுதியாகிறது. இக்கூற்றுக்கு ஆதாரமாக உள்ள சங்கப் பாடல்கள் சிலவற்றையும் கீழே காணலாம்.
சான்று எண்: 1
கலம் செய் கோவே கலம் செய் கோவே
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே - புறம்.228
பொருள்சுருக்கம்: நெடுமா வளவன் என்னும் மன்னன் இறந்துவிட்டான். அவனைப் புதைப்பதற்கு ஈமத்தாழி தேவைப்படுகிறது. மற்றவர்களைப் போலன்றி இம் மன்னன் கொடையிலும் வீரத்திலும் மிகப் பெரியவன் என்பதால் இவனை மிகப்பெரிய தாழிக்குள் வைத்துத்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று விரும்பும் புலவர் பானைசெய்யும் குயவனைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார் : " பானைசெய்யும் பெரும் குயவனே ! நெடுமாவளவனுக்கான ஈமத்தாழியை எவ்வாறு செய்யப் போகிறாய்?. இந்த மண்ணுலகத்தையே சக்கரமாகவும் பெரிய மலையினையே மண்ணாகவும் கொண்டு இம்மன்னனுக்கான ஈமத்தாழியைச் செய்ய உன்னால் முடியுமா?. ".
புலவர் இந்த மண்ணுலகத்தினைச் சக்கரமாகக் கருதியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆம், இந்த மண்ணுலகம் ஒரு சக்கரத்தினைப் போல எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் புலவர் அதனை ஒரு சக்கரமாகக் கொள்ளச் சொல்கிறார். சக்கரத்தின்மேல் வைத்துச் செய்யப்படும் மண்ணுக்குப் பதிலாக பெரிய மலையினையே மண்ணாகக் கொள்ளச் சொல்கிறார். இந்த அருமையான உவமையிலிருந்து பெறப்படும் வரலாற்றுச் செய்தி இதுதான்: சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த குயவர்கள் சக்கரங்களைக் கொண்டே பானைகளை உருவாக்கி இருக்கின்றனர்.
சான்று எண்: 2
.... வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் ... - மலை.475
பொருள்விளக்கம்: வயலில் வெண்ணெல்லை அரிவோர் எழுப்பிய உடுக்கை ஒலியைக் கேட்டு அஞ்சிய எருமைக் கடாவொன்று தனது கூட்டத்தைப் பிரிந்து வேகமாக ஓடியது. அப்போது நிலத்தில் தேங்கியிருந்த நீரின்மேல் அதன் கால்கள் பதியவும் அதிலிருந்து வட்டவட்டமாக அலைகள் தோன்றிக் கொண்டே இருந்தன. இதைப் பார்ப்பதற்குக் குயவன் பானைசெய்யப் பயன்படுத்தும் சக்கரம் சுற்றுவதனைப் போலத் தோன்றியது.
இப்பாடலில் வரும் 'வனைகலத் திகிரி' என்பது குயவன் பானை வனைய / செய்யப் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிப்பதாகும். இதிலிருந்து, சங்ககாலத் தமிழர்கள் பானைசெய்வதற்குச் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்னும் செய்தியினைப் பெறமுடிகிறது.
முடிவுரை:
இதுவரை கண்டதிலிருந்து சங்ககாலத் தமிழகத்தில் சக்கரங்கள் இழுவைத் தொழிலுக்கு மட்டுமின்றி மண்பாண்டத் தொழிலுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருள் எச்சங்களின் வயதின்படி தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சக்கரங்களைக் கொண்டு மண்பானைகள் செய்யப்பட்டது என்றும் அறியப்பட்டது. இவ் இரண்டையும் இணைத்துப் பார்க்குமிடத்து, சக்கரங்கள், மண்பாண்டங்கள் மற்றும் வண்டிகளை உருவாக்கும் அறிவியலைத் தமிழர்கள் பிறரிடமிருந்து கற்கவில்லை என்பதும் சக்ர என்ற சொல்லில் இருந்து சகடு என்னும் தமிழ்ச்சொல் தோன்றவில்லை என்பதும் உறுதியாகிறது. இக் கூற்றுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சக்கரம், மண்பாண்டம், வண்டி தொடர்பான தமிழ்ச்சொற்கள் பலவும் எப்படியெல்லாம் திரிந்து இந்தியாவின் பிறமாநில மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை பிறிதொரு கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
___________________________________________________________
தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/