Sunday, February 17, 2019

சங்கமித்தை - மாதகல் சம்பில்துறை பௌத்த அடையாளங்கள்

——    முனைவர்.க.சுபாஷிணி



            சாம்ராட் அசோகர் கலிங்கப் போர் அளித்த மன உளைச்சலினால் வன்முறையிலிருந்து மீண்டு அகிம்சைக்குத் திரும்பினார். புத்தரின் போதனைகள் அவருக்கு வழிகாட்டியதாக அவர் கருதினார். எனவே மக்களையும் அமைதி வழிக்குக் கொண்டு வரும் நோக்கில் தனது பிள்ளைகளையும் பௌத்தம் ஏற்கச் செய்து, அவர்களின் மூலமாகப் பௌத்த நெறியைப் பல நாடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க முனைந்தார். அதன் காரணமாக தென்னிந்தியா முழுமையும் அவரது ஆட்சி ஆளுமையினால் பௌத்தம் பரவியது. அது மட்டுமன்றி தமிழகம் மற்றும் இலங்கைக்குப் பௌத்தத்தைக் கொண்டு சேர்க்க தமது பிள்ளைகளான மகன் மகேந்திரன், மகள் சங்கமித்தை ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்கள் போகின்ற போது புத்த கயாவிலிருந்து அரச மரத்தின் கன்று ஒன்றைக் கொண்டு போய் இலங்கையில் பதியனிடக் கொண்டு சென்றார்கள். தமிழகம் வழியாகக் கடல் மார்க்கமாக அவர்கள் வந்தடைந்தார்கள். அவர்கள் கி.மு. 3ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் வந்திறங்கிய பகுதியாக யாழ் குடா நாட்டின் மாதகல் சம்பில்துறை பகுதி குறிப்பிடப்படுகிறது.

            புத்த கயாவிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் துறைமுகம் வந்து அங்கிருந்து கப்பலில் இலங்கைக்கு சங்கமித்தையின் குழுவினர் வந்தனர் என செய்திகள் கூறுகின்றன. ஆனால் இச்செய்தி சொல்லும் வகையில் இவ்வழிப்பாதை சரியானதுதானா என்பதும் கேள்வியாகின்றது.

            அசோகர் இந்திரப்பிரஸ்தம் என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய டெல்லியிலிருந்து தமிழகத்தின் வேலூர் வரை ராஜபாட்டை என அழைக்கப்படும் ஒரு அரச நெடுஞ்சாலையை அமைத்தார். இச்சாலையின் இருபுறமும் மரங்களை நட்டார். பயணிகள் ஓய்வெடுக்கும் சத்திரங்களைக் கட்டினார். இறுதியாக தமிழகத்தின் வேலூரில் வினையலங்கார விகார் என்ற பெயரில் ஒரு மடாலயத்தையும் அமைத்தார் என அறிகின்றோம். அனேகமாக இந்த ராஜபாட்டை வழியாக மகேந்திரனும் சங்கமித்தையும் தமிழகம் வந்து பின்னர் கடற்கரையோரப் பகுதிகளை வந்தடைந்து இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கலாம். இதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.



            சங்கமித்தை பெண்களுக்கான பிக்குணிகள் சங்கத்தை இலங்கையில் தோற்றுவித்தார். சங்கமித்திரையின் பயணப் பாதை தொடர்பான ஆய்வுகள் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் .அதே போல மணிமேகலை காப்பிய நாயகியான மணிமேகலையின் இலங்கை வருகையும், பின் ஏனைய பல தீவுகளுக்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் அவர் அட்சயபாத்திரத்தினைக் கையிலேந்தி பௌத்த நெறியைப் பரப்ப மேற்கொண்ட பயணங்கள் பற்றியும் முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். இவ்வகையான ஆய்வுகள் தமிழகத்திலிருந்து பௌத்த நெறி ஏனைய கிழக்காசிய நாடுகளுக்கும் தூரக்கிழக்காசிய நாடுகளுக்கும் பரவியமைக்கான ஆதாரங்களை வழங்கும்.

            இன்றைய இலங்கை அரசியல் சூழலில் சங்கமித்தை வந்திறங்கிய பகுதி என அடையாளம் காட்டப்படும் மாதகல் சம்பில்துறை சிங்களவர்கள் பகுதியாக அடையாளம் காட்டப்படுவதற்கான முயற்சிகள் தெரிகின்றன. இந்தச் சம்பில் துறை பகுதியில் ஐயனார் கோயில், கிருத்துவ தேவாலயம் மற்றும் வரைவர் கோயில்கள், சிவன் கோயில், முருகன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் சிலவும் உள்ளன.

            பௌத்த மதம் சிங்களவருக்கும், ஏனைய சைவ கிருத்துவ மத வழிபாடுகள் தமிழருக்கும் என இருக்கும் இன்றைய சமூக சிந்தனை நிலைப் போக்கு இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்ட சூழலுக்குப் புறம்பானதே. பண்டைய இலங்கையில் பௌத்தம் தமிழ் மக்களின் வாழ்க்கை நெறியாக நீண்ட காலம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த ஒரு சூழல் இருந்ததைப் புறந்தள்ளி விட முடியாது. ஆக, யாழ்ப்பாணத்தின் மாதகல் சம்பில்துறை பகுதி தமிழ்மக்கள் வாழ்விடப் பகுதி என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

            இன்று இப்பகுதி, பௌத்தமதம் சிங்களவருக்கான மதம் என்ற தட்டையான புரிதல், சிங்களவர், தமிழர் இருசாராருக்கும் உள்ளமையால், இரு சாராரும் குழப்பம் நீங்கி இப்பகுதியின் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு உள்ள முக்கியத்தையும் காண வேண்டியது வரலாற்றுத் தேவையாகின்றது. மதத்தை மையப்படுத்திய தவறான புரிதல் இருப்பதால் இப்பகுதி சிங்களவர் பகுதி என அடையாளப்படுத்தப்படும் முயற்சி இன்று தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்குச் சாட்சியாக இப்பகுதியில் இராணுவத்தினர் அதிகமாக நடமாடுவதையும் இப்பதிவுக்காகச் சென்றிருந்தபோது (அக்டோபர் 2018 இறுதி) நேரில் காண நேர்ந்தது.

            வரலாற்றுப் பார்வையில் யாழ்ப்பாணத்தின் மாதகல்-சம்பில்துறை பகுதி தமிழர் வரலாற்றுச் சுவடுகளில் இடம்பெற வேண்டிய ஒரு பகுதியே! 



தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)






Saturday, February 16, 2019

ஜெர்மன் தமிழியல் — நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை



——    தேமொழி


            சமயம் பரப்பும் நோக்கில் அமைந்திருந்த ஐரோப்பியரின் தமிழக வருகை, தொன்று தொட்டு காலந்தோறும் தமிழகத்தில் இருந்துவந்த தமிழின் நிலைக்கும், தமிழ்க்கல்வியின் நிலைக்கும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. ஐரோப்பியர் தங்களது சமயப்பணி வளர்ச்சிக்காக தமிழறிய எடுத்துக் கொண்ட அணுகுமுறையும், தொழிற்புரட்சியின் காரணமாக உருவாகிய அச்சுநூல் பதிப்பிக்கும் முறையும் ஒருங்கிணைந்ததில் தமிழின் வளர்ச்சியும் தமிழ்க்கற்பித்தலின் வளர்ச்சியும் ஐரோப்பியர் வருகையால் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியது. தமிழின் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதுவே முனைவர் க. சுபாஷிணியின் ஆய்வின் முடிவு.



            ஜெர்மனியில் வாழும் நூலாசிரியர் தனது தமிழறிவையும், தமிழாய்வு ஆர்வத்தையும், ஜெர்மானிய மொழியறிவையும், ஜெர்மனி மற்றும் மற்றபிற ஐரோப்பிய நாடுகளின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், அரசின் ஆவணச் சேமிப்புக் கருவூலங்கள் ஆகியனவற்றைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்ள அவருக்குக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிடாததால், தமிழ் குறித்த இந்த ஆய்வுநூல் கூறும் கருத்துக்களை உலகம் அறிவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.அயல்நாடுகளில் வாழும் தமிழர் எவ்வாறு தங்கள் சூழ்நிலையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் குறித்த புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தலாம் என்பதைச் செயலில் காட்டும் வழிகாட்டியாக இருப்பதற்கு க. சுபாஷிணியைப் பாராட்டலாம். நூலுக்கு இத்துறையின் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் முன்னுரை அளித்திருக்கின்றார். இந்த நூலால் நாம் அறியும் செய்திகள் என்ன?

            நூலின் முதல்பகுதி, கிறித்துவ சமயத்தின் வரலாற்றில் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட ஜெர்மன் பாதிரியார் மார்ட்டின் லூதரால் புராட்டஸ்டண்ட் சமயப்பிரிவு உருவானதை விளக்குகிறது. ஜெர்மானிய புராட்டஸ்டண்ட் பாதிரியார்களுக்கு டேனிஷ் அரசு அளித்த ஆதரவும் அடுத்து கிட்டியது. ஐரோப்பிய கிறித்துவ சமயத்தின் இப்புதிய சீர்திருத்த கிறித்துவப் பிரிவினரின் சமயம் பரப்பும் நோக்கமும், ஆர்வமும், தேவையும் அவர்களைக் கடல்வழிப் பயணமாக தமிழகத்தின் தரங்கம்பாடியில் கொண்டு வந்து சேர்க்கிறது. இவர்களுக்கும் முன்னரே போர்த்துக்கீசியர் ஆதரவில் கத்தோலிக்க கிறிதுவப் பிரிவினர் தமிழகத்தில் தங்கள் இறைப்பணியைத் துவக்கியிருந்த நிலையில், தரங்கம்பாடி நகரை ஒரு நுழை வாயிலாகக் கொண்டு இந்தியாவில் 1706 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஆதரவுடன் ஜெர்மானிய லூதரன் புராட்டஸ்டண்ட் சமயம் காலூன்றிய வரலாற்றைச் சுருக்கமான ஆனால் செறிவுள்ள அறிமுகமாகத் தருகிறார் சுபாஷிணி. இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள நீளமான பட்டியல் ஒன்று காலக்கோட்டில் வரிசைப்படுத்தும் தரவுகள் மூலம் இறைப்பணிக்காக 1706 இல் தொடங்கி, முதலில் தமிழகம் வந்த பாதிரிமார்களில் சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg) முதற்கொண்டு, பாதிரிமார் பலரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் நம்மால் அறிய முடிகிறது. இக்குறிப்புகள் மூலம் அவர்களின் இறைப்பணி சிறிது சிறிதாகத் தமிழகத்தில் தரங்கம்பாடியில் இருந்து கடலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, சென்னை எனப் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவடைந்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது.

            இத்திருச்சபையினரின் சமயம் பரப்பும் பணி தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் போக்கில் ஏற்படுத்திய மாற்றத்தை விவரிக்கிறது அடுத்த பகுதி. மக்களைச் சென்றடைய மக்களின் மொழியினை அறிவதற்கு வேண்டிய இன்றியமையாமை உணர்ந்த கிறித்துவ இறைப்பணியாளர்களான சீகன்பால்க், கரூண்ட்லர், சூல்ட்ஷே, ரைனுஸ் போன்றவர் தமிழ்க் கல்வி கற்கத் துவங்கியதுடன், தாம் தெரிந்துகொண்டவற்றை அடுத்து வரப்போகும் இறைப்பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் தமிழ் அரிச்சுவடி, சொற்களஞ்சியங்கள், இலக்கணநூல்கள், மக்களின் சமூக வாழ்வியல் குறித்த செய்திகள் என நூல்களாகத் தொகுக்கத் துவங்கியதை விவரிக்கிறார் ஆய்வாளர். இவர்களின் நூலாக்கப்பணிகளும், தொழில் நுட்ப உதவியுடன் அச்சுநூலாக்கி அவற்றை வெளிக்கொணரும் முயற்சியே நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்துவிட்டதை நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

            இறைப்பணியின் தொடர்ச்சியான ஒரு பகுதியாக கல்விப்பணியையும் முன்னெடுத்திருந்தனர் கிறித்துவ திருச்சபையினர். அவர்கள் நடத்திய இலவச கிறித்துவ பள்ளிக்கூடங்கள், அவை இயங்கிய காலஅட்டவணை, அவை கொண்டிருந்த பாடத்திட்டங்கள், ஆண்களுக்கான பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகள் என 18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் திருச்சபையினர் மேற்கொண்ட கல்விப் பணிகளையும் விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ்க்கல்வியுடன், சமயக்கல்வியும், டேனிஷ், போர்த்துக்கீசிய மொழியும் கூட கற்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வி மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட மக்களுக்கும் கல்வி வழங்குவதில் அக்கறை காட்டினர் ஐரோப்பிய பாதிரிமார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கக்கூடிய பள்ளிகளும், தங்கும் விடுதிகளுடன் கூடிய பள்ளிகளும், மாணவர்களுக்கு இலவச உணவு, உடை மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் சீகன்பால்க் காலம் முதலே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

            தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு இலக்கணப்பிழையின்றி உரையாடுவது வளர்ச்சியின் பகுதியாக இருக்கிறது. ஆனால், பிறமொழியைப் பயில விரும்புவோருக்கு மாற்றுமொழியின் இலக்கணப் பயன்பாடு ஒரு சவாலாக அமைந்துவிடுகிறது. மேலும் தமிழில் பேசும் மொழியும் இலக்கிய நடையும் வெவ்வேறாக இருப்பதும் அயல்மொழிக்காரர்களுக்கு தமிழைக் கற்பதில் தடங்கல்கள் அதிகம். ஆதலால் இவ்வாறு சமயப்பணி செய்யும் நோக்கில் தமிழகம் வரும் அயலார் எவருடைய முதல் முயற்சிகள் பெரும்பாலும் தங்களைப்போல தமிழைக் கற்கவிருப்போருக்கு தமிழைக் கற்றுத்தர உதவும் இலக்கண நூல்களாக, அகராதிகளாக, சொற்களஞ்சியங்களாக மொழிகற்றலுக்கு குறிப்புதவி தரும் நூல்களாக அமைந்துவிட்டிருக்கிறது. பொதுமக்களின் பேச்சுமொழிக்கேற்ப சமயப்பரப்புரை செய்ய பேச்சுத் தமிழைக் கற்பதும் தேவையாக இருந்துவிடவே, பேச்சுத்தமிழைக் கற்கும் முறைக்காகவும் நூல்களையும் அகராதிகளையும் உருவாக்கியுள்ளார்கள். ஆகவே ஐரோப்பியர் விவிலியத்தையும், இறைநெறி நூல்களையும் மட்டுமே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள் என்ற எண்ணம் நமது மேம்போக்கான புரிதலாக அமைந்துவிடுகிறது.

            திருச்சபையினரின் பணிகளை ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவையும் பணிக்கடமையாக பாதிரிமார்களுக்கு இருந்துள்ளது. இது இறைப்பணிக்கு ஆதரவு தந்த டென்மார்க் அரசரின் கட்டளை. அவ்வாறு அவர்கள் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதன் வாய்ப்பாக நம்மால் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக மக்களின் வாழ்க்கைமுறை என்னவென்று சமூகவியல் கோணத்தில் அறியவும் முடிகிறது. சமயம் என்ற அடிப்படையில் வசதியான வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்தவராக பிராமணர்கள் இருக்க, அவர்கள் உருவாக்கும் பொய்கள் மூலம் தமிழர் ஏமாற்றப்படுவதாக தமது கருத்தை சீகன்பால்க் (1714 ஆம் ஆண்டின் நாட்குறிப்பு) ஆவணப்படுத்தியுள்ளார். மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் பரப்புரையை இவர் மேற்கொண்ட பொழுது, அதற்காக இவரைக் கொல்ல தீட்டப்பட்ட சூழ்ச்சியில் இருந்தும் உயிர் தப்பியுள்ளார் என்பதையும் அறிகிறோம். ஆசாரக்கோவை நூல் அக்கால மக்கள் வாழ்வில் முக்கிய இடம்பெற்றிருந்ததும் அவரது குறிப்பால் தெரிகிறது. சமயம், சமூகவியல், மக்களின் பண்பாடு, வாழ்வியல் முறைகள் ஆகியவற்றைத் தமிழ் இலக்கியங்கள், இலக்கியம் என்ற கோணத்திலோ வரலாறு என்ற கோணத்திலோ பதிவு செய்ததே இல்லை. நமக்கு சராசரி வெகுமக்கள் வாழ்வின் நிலை, அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை அறிவதற்கு வாய்ப்பிருந்ததில்லை. இறைவன் அல்லது அரசன் இவர்களைப் போற்றிப்பாடுவதற்கு மேல் இலக்கியவாதிகள் அக்கறை காட்டாத நிலையால் தமிழிலக்கிய உலகில் நாம் இழந்தது அதிகம். சிலப்பதிகாரம் மூலம் இளங்கோவடிகள் செய்த வழிகாட்டுதலை சமய மறுமலர்ச்சி காலம் கைவிட்டுவிட்டதன் விளைவு அது. லூதரன் இறைப்பணியாளர்கள் பதிவுகளால் அக்குறை சற்றே சரி செய்யப்பட்டுள்ளது.

            ஐரோப்பியர் மத்தியில் இந்தியாவில் வாழ்பவர் நாகரிகமற்ற பண்பாட்டை உடையவர்கள் என்ற கருத்து நிலவியிருந்திருக்கிறது. அக்கருத்துக்கு முற்றிலும் மாறாக இலக்கியம், மொழி, மருத்துவம், கலை ஆகியவற்றில் இந்தியர் சிறப்புற்று இருந்தனர் என்பதை நேரடியாக அறிந்து கொண்ட மறைப்பணியாளர்கள் தாங்கள் அறிந்ததை தங்கள் எழுத்துகள் மூலம் ஐரோப்பிய மக்களுக்கு அறிவித்ததில் பெரும்பங்காற்றினர். முதலில் வந்த சீகன்பால்க் மலபார் (தமிழகம்) மக்களையும், தமிழையும் குறித்து ஐரோப்பாவிற்கு அனுப்பிய கடிதம் வழி இதை அறிவதற்கு முடிகிறது. அக்கடிதத்தில் நம்மில் பலர் எண்ணியிருப்பது போல மலபார் மக்கள் காட்டுவாசிகள் அல்லர், அவர்கள் பண்பட்ட மொழியைக் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய அரசியல் எல்லைகளுடன் கூடிய இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்னர் வந்தவர் இந்த ஐரோப்பியர்கள் என்பதால், அவர்கள் ஆவணங்களில் அவர்களது தென்னிந்தியப் பகுதிக்கான பயணக்குறிப்பு ‘தமிழ்நாடு’ அல்லது ‘மலபார்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது வியக்க வைக்கும் தகவல். மேலும், தமிழகத்தில் இறைப்பணியாற்ற வருபவர்களை அவர்கள் தக்க முறையில் தயார்படுத்த விரும்பியதன் காரணமாக ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக பயிற்றுவிக்க முயற்சியும் மேற்கொண்டனர்.

            இவர்கள் தமிழக மருத்துவம், நோய் தீர்க்கும் மூலிகை ஆகியவற்றைக் குறித்தும் அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்தனர். இறைப்பணியாளர்களில் பெரும்பாலோர் அவர்களது இருபதுகளின் பிற்பகுதியில் இந்தியாவில் பணியேற்று, 40 வயதுக்குள் மறைந்து விடும் நிலையே இருந்திருக்கிறது. மீண்டும் திரும்பி தங்கள் நாட்டிற்குச் சென்றவரின் எண்ணிக்கையோ அல்லது ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் என நீண்ட காலம் வாழ்ந்தவரின் எண்ணிக்கையோ குறைவு. புதிய தட்பவெப்ப சூழ்நிலை கொண்ட நாட்டில், புதிய உணவுமுறை வாழும் முறை ஆகியவை அவர்களை உடல்நலக் குறைவைத் தொடர்ந்து எதிர்கொள்ள வைத்ததுள்ளது. தங்கள் உடல்நலத்திற்காக இந்திய மருத்துவம் மற்றும் நோய் தீர்க்கும் முறைகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது வாழ்க்கையின் கட்டாயமாக இருந்தது.  கரூண்ட்லர், பிரெசியர், வால்த்தர் போன்று மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட பாதிரிமார்கள் மருத்துவம் குறித்த சுவடிகளையும் சேகரித்தனர். அவற்றை தங்கள் நாட்குறிப்புகளில் குறிப்பிட்டனர். வருங்காலத்தில் அவர்களைப் பின்பற்றி தமிழகத்தில் இறைப்பணிக்காக வருபவருக்கு இக்குறிப்புகள் உதவக்கூடும் என்பது அவர்களது நோக்கம் என்று சுபாஷிணி சுட்டிக் காட்டுகிறார். அத்துடன் இறைப்பணியாளர்கள் தாங்கள் நடத்திய பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ உதவியும், அவர்களும் மருத்துவம் குறித்து பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்துள்ளனர் என்பதும் தெரிகிறது.

            தமிழ்நூல் பதிப்புத் துறையின் முன்னோடிகள் ஐரோப்பியர் என்பதனை விளக்கும் முகமாக, ஐரோப்பியரின் வருகையால் ஓலைச்சுவடியில் இருந்து தமிழ், அச்சுநூல்கள் என்ற புதியவழியில் அடி எடுத்து வைத்தது என்பதற்கான சான்றுகளாக ஐரோப்பிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் குறித்த தரவுகளை நூலில் ஒரு அத்தியாயமாகத் தொகுத்தளிக்கிறார் சுபாஷிணி. ஒரு தகவல் குறிப்பு தொகுப்பு நூலாக தமது நூல் பயன்படக்கூடிய அளவில், நூலின் இப்பகுதியில் சீகன்பால்க், க்ரூண்ட்லர், சூல்ட்ஷே, ப்ரெஸ்ஸியர், வால்த்தர், சர்ட்டோரியஸ், ஃபேப்ரிக்குஸ், ரோட்லர், ரைனுஸ், க்ரவுல் ஆகியோரின் நூல்கள் குறித்த தொகுப்பையும் முக்கியமான நூல்களையும், தரங்கம்பாடி அச்சுக்கூடம் வழியாக அச்சிடப்பட்ட நூல்கள் குறித்த தகவலையும் தொகுத்து வழங்குகிறார். தரங்கம்பாடியில் 1712 ஆம் ஆண்டில் சீகன்பால்க் அச்சகம் ஒன்றை உருவாக்கினார். இந்த அச்சுக்கூடத்தில்  வெளியிடப்பட முதல் தமிழ்நூல் பைபிள்.

            பைபிளின் புதிய ஏற்பாட்டை சீகன்பால்க் தமிழில் மொழிபெயர்த்து தரங்கம்பாடி அச்சகம் வழியே அச்சிட்டு 1714 இல் வெளியிட்டுள்ளார். சீகன்பால்க் எழுதிய நூல்களில் “Grammatica Damulica” என்ற தமிழிலக்கண நூல், “Genealogie Der Malabarishen Gotter” (மலபார் கடவுளர்கள் / தமிழ்க் கடவுளர்கள்) என்ற ஜெர்மானிய மொழி நூல்கள் குறிப்பிடத்தக்கவை. சீகன்பால்க் தாமும் உடன் பணியாற்றிய இறைப்பணியாளர்களும் தமிழில் எழுதியதாகவும், தமிழுக்கு மொழிபெயர்த்ததுமாக தமது கடிதமொன்றில் குறிப்பிட்ட 32 தமிழ் நூல்களின் பட்டியலை நூலாசிரியர் இறுதியில் இணைப்பாகக் கொடுத்துள்ளார். கத்தோலிக்க வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூலும் 1718 ஆம் ஆண்டில் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் பிரெட்ரிக் காமரெர் என்பவரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் 1803 லேயே ஜெர்மனியில் அச்சுநூலாக வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துப்பணி அச்சுப்பதிப்புப்பணி மூலம் தமிழ் வளர்ச்சி புதுப்பரிமாணத்தை எட்டியதை இந்த அத்தியாயம் மிக விளக்கமாகத் தரவுகள் பலவற்றுடன் விளக்குகின்றது.

            அத்துடன் இந்நூலின் பின்னிணைப்பாக மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், மற்ற கிறித்துவ சமயப் பிரிவுகளில் இருந்தும் தமிழகத்தில் இறைப்பணி செய்யும் நோக்கில் வந்தோர் 16 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு எவ்வாறு தமிழ் வளர்ச்சியில் பங்கேற்றனர் என்ற தகவல் தொகுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதி இத்துறையில் ஆய்வு செய்வோருக்கு இன்றியமையாத ஒரு பகுதி. இப்பகுதியில் ஆரம்பக்கால தமிழ் அச்சுநூல்கள் குறித்த வரலாறும் ஐரோப்பியர் வருகை எவ்வாறு ஓலைச்சுவடித் தமிழ் அச்சுப்பதிப்புகளாக திசைதிரும்பின என்பதை அறிவதற்கு நல்வாய்ப்பாக அமைகிறது. 15 ஆம் நூற்றாண்டின் அச்சு எந்திரம் உருவாக்கிய தொழிற்புரட்சியும், 20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியும் விளைவித்த சமூகப்புரட்சிகளால் கல்வியும் மொழியும் பலரையும் சென்றடைய இந்த மாற்றங்கள்தானே உறுதுணையாக அமைந்துவிட்டிருக்கிறது.

            போர்த்துக்கீசிய பாதிரியார் அண்டிறிக்கி அடிகளார் (Henrique Henrique) முன்னெடுப்பில் 1578 இல் வெளியான, 16 பக்கங்கள் கொண்ட ‘தம்பிரான் வணக்கம்’ (Christian doctrine in Tamil) என்று லத்தீன் மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அச்சுநூலாக பதிப்பிடப்பட்ட நூலே தமிழில் வெளிவந்த முதல் அச்சுநூல். இந்திய மொழியில் முதலில் அச்சுநூல் வெளியானதும் தமிழில்தான். இவர்கள் தவிர்த்து ராபர்ட்-டி-நோபிலி, வீரமாமுனிவர் எனத் தன்னை குறிப்பிட்டுக் கொண்ட கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி போன்ற கத்தோலிக்கப் பிரிவு ஐரோப்பியர் ஆற்றிய தமிழ்ப்பணிகளும் என்றும் தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்பவை. இக்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் அச்சுநூல்கள் எண்ணிம வடிவ மின்னூல்களாக மாறிய திருப்புமுனையுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, ஐரோப்பியர் கொணர்ந்த அச்சுநூல் பதிப்பு இயந்திரம் தமிழ் மொழி வளர்ச்சிக்குக் கொடுத்த தாக்கம் எளிதாகப் புரியும்.

            தமிழின் வரலாற்றில், தமிழகத்தில் வரலாற்றில் விடுபட்ட பகுதிகளை, நாம் அறிந்திராத மக்களின் சமூக வாழ்வியல் குறிப்புகளை அறிவதற்குத் தமிழகத்தில் இறைப்பணியாற்றிய ஐரோப்பிய திருச்சபையினரின் நூல்களின் மூலமும் ஆவணக்குறிப்புகள் மூலமும் அறிவதற்கு வேண்டியத் தேவை இருப்பதை இந்த நூலைப்படிப்பதன் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஐரோப்பியர் பாதிரிமார்கள் கிறித்துவ சமயத்தை கீழை நாடுகளில் பரப்ப வந்தவர் என்ற குறுகிய நோக்கில் மட்டும் நாம் புரிந்து கொண்டிருப்பது இந்திய, தமிழக வரலாற்றிற்கு இழப்பு என்பதை ஆய்வாளர் எச்சரிப்பதை நூலைப்படித்து முடித்த பின்னர் உணர முடிகிறது. தொடர்ந்து தமிழர் தம் வரலாற்றை நிறைவு செய்யும் நோக்கில் நம் கவனத்தை அயல்நாட்டார் பதிவு செய்தவற்றில் இருந்து அறிந்து கொள்ளும் வண்ணம் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவர்கள் எழுத்து வடிவில் விட்டுச் சென்ற தரவுகளில் நம் வரலாற்றின் பகுதிகள் நம் கவனத்திற்கு வராமல் அவரவர் நாடுகளின் ஆவணச் சேகரிப்புகளில் உள்ளன. ஆய்வாளர் சுபாஷிணி போன்றோரை முன்மாதிரியாகக் கொண்டு அயலகத்தில் வாழும் ஆய்வார்வமும் தமிழார்வமும் உள்ளவருக்கு நல்லதொரு வாய்ப்பு. குறிப்பாகத் தமிழகத்தில் வணிகத்தொடர்பு அல்லது சமய பரப்பல் என்று ஆர்வம் காட்டிய ஐரோப்பிய நாடுகளான போர்த்துகல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்த் (ஹாலந்த்), டென்மார்க், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழர் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஐரோப்பிய-தமிழக ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்.


நூலறிமுகம்:—
நூல்: ஜெர்மன் தமிழியல் — நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை
ஆசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
வகை: ஆய்வு நூல்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு: நவம்பர் 2018
விலை: ரூ 200
ISBN: 9789386820754




தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)


நன்றி - சிறகு:  http://siragu.com/தமிழ்-வளர்ச்சியில்-ஐரோப்/

நாற்பது பேர்



—  ருத்ரா இ.பரமசிவன்



நம் "இனியவை நாற்பது"க்கெல்லாம்
அடித்தளமாக‌
படுத்துக்கிடப்பது
ஒரு தேசிய சோகத்தின்
இந்த "இன்னா நாற்பது" தான்.
கம்பீரமாய் இந்த அசோகசக்கரம்
இப்படி மீசை முறுக்கி நிற்பதன்
மாறாத வீரத்தையும் துணிவையும்
மண்ணுக்குள் கிடந்தாலும்
செதுக்கிக்கொண்டிருப்பவர்கள்
இந்த நம் தவப்புதல்வர்களே.
அழுது புலம்பும் தன் மனைவி 
எனும் தாயின்
அந்த கர்ப்பத்துக்குள்ளும்
ஒரு எரிமலைப்பிஞ்சை
பதியம் செய்து இருக்கிறோம்
என்ற நினைப்பில் அல்லவா
அவன் அந்த சவப்பெட்டியில் கிடக்கிறான்.
ஏதோ
தீபாவளிக்கு அப்பா தைத்துத்தந்த‌
புதுச்சட்டையை அணிந்து கொண்டது
போல் அல்லவா
அந்த பெட்டிக்கு ஒரு மூவர்ண சட்டையை
போட்டுக்கோண்ட திருப்தியில்
படுத்துவிட்டான்.
வாளோடு வாள்மோதும்
யுத்தம் எல்லாம் செய்யத் திராணியற்ற‌
மலட்டு மிருகங்களின்
இந்த சதிகள் எல்லாம்
தவிடு பொடியாக நொறுக்கப்படவேண்டும்.
பாரதத்தின்
எல்லாமொழியும் உருண்டு திரண்டு
இப்போது
தீப்பிழம்பாக வெளிச்சம் ஏற்றுகிறது.
நம் மண்ணின் நாடி நரம்புகளின்
பின்னல் எல்லாம்
நம் எல்லா மாநிலங்களிலும்
மூவர்ணத்தின் ஒரே அக்கினி வர்ணத்தை
உயர்த்திக்காட்டுகிறது.
நம் தேசியக்கனலின் அதன் 
ஒரே மொழி
இதோ ஒலிக்கிறது

"வந்தேமாதரம்"




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)




Friday, February 15, 2019

திருப்புன்கூர்


——    தேமொழி


            திருப்புன்கூர் கோயில் .... இங்கு வரலாற்றில் இருந்த சாதி பேதத்திற்கு ஆவணப்படுத்தும் வகையில் சிற்பச் சான்றும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

            திருநாளைப்போவார்(நந்தனார்)   திருப்புன்கூர் சென்று சிவனை வழிபட விரும்பினாராம், அவர் நன்கு பார்த்து கும்பிடும் வகையில் நந்தியை விலகி நிற்கச் சொன்னாராம் சிவன்.

            கவனிக்க,  உள்ளே வாயேன் என்று சிவன் அவரை அழைக்கவில்லை, அழைக்க விரும்பவுமில்லை. 

இதை ....
"சீரேறும் இசைபாடித்
            திருத்தொண்டர் திருவாயில்
நேரேகும் பிடவேண்டும்
            எனநினைந்தார்க் கதுநேர்வார்
காரேறும் எயிற்புன்கூர்க்
            கண்ணுதலார் திருமுன்பு
போரேற்றை விலங்கஅருள்
            புரிந்தருளிப் புலப்படுத்தார்
"
என்று பெரியபுராணம் கூறும்.

source: http://rightmantra.com/wp-content/uploads/2016/02/thirupunkoor-nandhi-3.jpg

            கருவறையில் இருந்து பார்க்கும்பொழுது தோன்றும் காட்சி இது, சிவனின் கட்டளையை ஏற்று பார்வையை மறைக்காமல் தூண்  ஓரமாக ஒதுங்கி நிற்கும் நந்தி.

source: https://i.ytimg.com/vi/JygVxvlwAtU/maxresdefault.jpg

            இந்தப் படத்தில் அறிவிப்புப் பலகையை  படிப்பவர் அருகில் நின்று பார்த்தால் சிவனை நந்தி மறைக்காது.  ஆனால் திருநாளைப் போவாருக்கோ  அதுவரை செல்ல அனுமதியில்லை.

            அவரை உள்ளே அழைக்க சிவனுக்கும் மனமில்லை. அதனால் 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று நந்தியை நகரச் சொன்னாராம்.
நந்தி விலகியதாம். இன்று, 
"நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே"
என்பது மக்கள் வழக்காற்றில் இடம் பெற்றுவிட்ட ஒரு  கூற்று.

source: https://upload.wikimedia.org/wikipedia/commons/5/5e/Tiruppunkur1.jpg

            இப்பொழுது படத்தில் தோன்றுவது போல தெருவில் நின்றவாறே நந்தி மறைக்காமல் சிவனை வணங்கலாம். 

source:  https://2.bp.blogspot.com/-fV3kqhPnYtU/Wds4FvEt_NI/AAAAAAAAAjo/q-r1ae-7Fg4gXpSTG1bHuCVNTrIBGaBVwCLcBGAs/s1600/the-off-centre-nandi.jpg

            இன்று இந்த படத்தில் அர்ச்சகர் (?) இருக்கும் இடத்தில் அவர் மூதாதையரும் நின்றிருப்பார்.  அது பிறப்பு அடிப்படையில் உள்ள அனுமதி என்று நமக்குத் தெரிவதால் உறுதியாகச் சொல்லலாம்.

            மற்றொரு பக்கத்தில் உள்ள அம்மையாரின்  மூதாதையர் அனுமதிக்கப்பட்டிருப்பார்களா?  தெரியாது.  உறுதியாகச் சொல்ல வழியில்லை. 

            இந்த ஆண் பெண் இருவரின் உடையமைப்பின் அடிப்படையில்   அவர்களது மூதாதையர் பின்னணி கணிக்கப்படுகிறது.

            ஆண்கள் சட்டையை நீக்கிவிட்டு கோயிலுள் நுழைவதன் தேவை என்ன? 

            குலத்திற்கேற்ற வகையில் ஆடை அணிவது, அணியவேண்டும் என்பது, சட்டை போடக்கூடாது, இரவிக்கை அணியக்கூடாது என்பதெல்லாம் யார் சொன்னது? 

            யார் யார் கோயிலுக்குள் வரவேண்டும் வரக்கூடாது என்று சொன்னதெல்லாம் யார் சொன்னது? கடவுள் சொன்னதா? 

            அவ்வாறு சொல்லியிருந்தால் வள்ளுவர் போல நாமும்  பாடவேண்டியதுதான்... கெடுக உலகியற்றியான்.

            சமய அடிப்படையில் இருந்த சாதிபேதத்தை  நன்றாகவே ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டிற்குரியது. 

            மனதில் ஒரு குற்றவுணர்வே இல்லாமல் பேதம் காட்டியுள்ளார்கள் என்பதற்கு திருப்புன்கூர்  நந்தி இன்று சாட்சியாக நிற்கிறது





படங்கள் உதவி: இணையம்



தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)









Thursday, February 14, 2019

மூன்று பள்ளிப்படை கோவில்கள்



——    மா. மாரிராஜன்


            மூன்று பள்ளிப்படை கோவில்களையும் ஒரே நாளில் சென்று பார்க்க வேண்டும், வந்து வழிகாட்டுங்கள் என்ற நண்பர்களின் அன்புக் கட்டளையை ஏற்றாயிற்று.

1. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை
2. இராஜராஜன் பள்ளிப்படை கைலாசநாதர் கோவில்
3. திருப்புறம்பியம்
இம்மூன்றும் எங்கள் இலக்கு..

             ஒரு நெருடல், இக்கோவில்களில் இரண்டு எப்போதும் பூட்டியே இருக்குமே, புகைப்படம்  எடுக்க விடமாட்டார்களே.  பழைய நினைவுகள், கசப்பான பல பழைய  அனுபவங்கள் நினைவுக்கு வந்தாலும் திட்டமிட்டபடி பயணத்தைத் துவங்கினோம்.

            .. இம்முறை எங்களுக்குக் கிடைத்தது பல இனிய அனுபவங்கள்..


1. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை:
            தாராசுரத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாகப் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படையை முதலில் அடைந்தோம். வழக்கம்போல் கோவில் பூட்டியிருந்தது. வாசலில் அர்ச்சகரின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது.  தொலைபேசியில் அழைத்தோம், 10 நிமிடத்தில் வருகிறேன் என்ற அர்ச்சகர்  சரியாக 5 நிமிடத்தில் வந்தார். முதல் வியப்பு !!

            அமைதியான சூழல். பொறுமையாகக் கோவிலை வலம் வந்து, கட்டுமானம், சிற்பங்கள், கல்வெட்டு என பார்த்துப் பார்த்து படம் எடுத்தோம். எந்தத் தடையும் இல்லை. அர்ச்சகரும் எங்களுடன் வலம் வந்து அவருக்குத் தெரிந்த சில விடயங்களை எங்களுக்குக் கூறினார். எங்களிடம் சில ஐயங்களை எழுப்பி விடைகாண முயன்றார்.

            பள்ளிப்படை கோவிலில் அம்மனுக்கு தனிச் சன்னிதி இருப்பது சாத்தியமா என்னும் அவரது கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை.

            கோவிலினுள் உள் நுழைகிறோம். அற்புதமான பழுவூர் நந்தியையும், வியப்பான துவார பாலகர்களையும் பார்த்து, படம் எடுத்தோம். எந்தத் தடையும் இல்லை. கருவறை வாயிலில் அமர்ந்து இறைவனைப் பிரார்த்திக்கும் பொழுது  அர்ச்சகரின் அதி அற்புதமான குரலில் சுத்தத் தமிழில் பதிகங்கள் கேட்டது அடுத்த வியப்பு !!



            தீபாதரணையை கண்களில் ஒற்றி தட்சணையாக தட்டில் பணம் போடமுயன்றோம். பணத்தைப் போட அவர் அனுமதிக்கவில்லை. அடுத்த .. அடுத்த.. வியப்பு !!!!

            எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் தட்சணையாக  பணம் வாங்க  மறுத்தார். பிறகு, கோவிலுக்கு எண்ணை வாங்கப் பயன்படுத்துங்கள் என்று கூறி பணத்தைக் கொடுத்தோம். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தோம்.  விடைபெற்றுப் புறப்படும்போது, மருத்துவர் கலைக்கோவன் ஐயா எழுதிய மலைக்க வைக்கும் மாடக்கோவில்கள் என்னும் புத்தகத்தை பரிசாகக் கொடுத்தார்.  அடுத்த வியப்பு  !!!!  
இப்படியும் ஒருவர், போற்றுதலுக்குரியவர்.


2. இராஜராஜன் பள்ளிப்படை கைலாசநாதர் கோவில்:
            உடையாளூர் சென்று இராஜராஜனின் பள்ளிப்படை என்று சொல்லப்படும் ஒட்டத்தோப்பு லிங்கத்தைப் பார்த்து விட்டு, பால்குளத்தம்மன் கோவில் சென்று பிரபலமான அந்தக் கல்வெட்டை படம்பிடித்தோம். அந்த அற்புதமான கல்வெட்டுத்தூணை இரும்பு பட்டையால் நெறித்து ஆனி அடித்து, வெள்ளை வர்ணம் பூசி பாதுகாப்பு செய்துள்ளார்கள்.

            குளத்தின் அருகே உள்ள கைலாசநாதர் ஆலயத்திற்கு விரைந்தோம். வழக்கத்திற்கு மாறாகக் கோவில் திறந்து இருந்தது. முதல் வியப்பு !!  வாங்கோ.. வாங்கோ.. என்ற அர்ச்சகரின் அன்பான வரவேற்பு, அடுத்த வியப்பு !!

            இதற்கு முன் மூன்று தடவை இக்கோவிலுக்கு வந்தும், கருவறையில் உள்ள அந்த அற்புதமான சோழ அரசன் அரசியின் சிற்பம், மற்றும் காலடியில் அடியார்களைக் கொண்ட பிரத்யோகமான துவாரபாலகர் சிற்பம் 
இவற்றைப் புகைப்படம் எடுக்க அனுமதி கிடைத்ததே இல்லை. ஆனால், இம்முறை தாராளமாக படம் எடுக்கலாம் என்று அனுமதி கிடைத்தது. மிதமிஞ்சிய உற்சாகத்துடன் படம் பிடித்தோம்.



அருமொழிதேவ வளநாட்டு, திருநரையூரு நாட்டு, சிவபாதசேகரமங்களத்து, உடையார் சிவபாதசேகர ஈஸ்வரமுடையார்..

என்னும் கல்வெட்டு வாசகத்தைத் தேடி படித்து படம் பிடித்து பரவசமானோம்.  கல்வெட்டு வாசகங்கள் அடங்கிய தொகுப்பு கையில் இருந்ததால் சாத்தியமாயிற்று.   ஏதோ ஒன்றைச் சாதித்த நிறைவுடன் திருப்புறம்பியம் நோக்கி விரைந்தோம்.


3. திருப்புறம்பியம்:
            பிற்காலச் சோழவரலாற்றில் தவிர்க்கவே இயலாத ஒரு பெயர் திருப்புறம்பியம். இங்கு நடந்த பெரும் போரும், போரின் விளைவால் அமைந்த சோழர்களின் ஏற்றமும், போரில் இறந்த கங்கமன்னன் பிரித்வீயின் பள்ளிப்படையும், வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  பொன்னியின் செல்வன் வாசித்தவர்களுக்கு, திருப்புறம்பியம் வெகு பரிட்சயமாக இருக்கும். திருப்புறம்பியர் போர், விஜயாலரின் வீரம், பள்ளிப்படை காட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்று பல சம்பவங்கள்.

            இவ்விடத்தை இரவில் பார்க்கவேண்டும் என்ற ஆவலில், சரியாக இருட்டிய பிறகு திருப்புறம்பியத்தை அடைந்தோம். குறிப்பிட்டத் தூரத்திற்கு மேல் வாகனம் செல்லாது. நடைப்பயணம்தான்.அவ்வூரைச்சேர்ந்த நண்பர் திரு. செந்தில் வழிகாட்ட அடர்ந்த காட்டிற்குள், கும்மிருட்டில் நடந்தோம்.. நிஜமாலுமே ஒரு திகிலான அனுபவம்.


            தற்போது ஐயனார் கோவில் என அழைக்கப்படும் பள்ளிப்படைக் கோவிலை இருட்டில், செல்போன் வெளிச்சத்தில் பார்த்தது பரவசமான ஒன்று. நம்முடைய பல கேள்விகளுக்கு தக்கச் சான்றுகளுடன் திரு.செந்தில் விளக்கம் அளித்தார்.  பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் பள்ளிப்படை காட்சிகளை இவ்வூரைச் சேர்ந்தவர்களைக் கொண்டு ஒரு நாடகமாக நடத்துகிறார். இப்பள்ளிப்படையிலேயே எதார்த்தமாக உயிரோட்டமாக அக்காட்சிகள் நாடகமாகின்றன.  எங்கள் குழுவிற்கும் ஒரு  காட்சி நடத்துங்கள் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தோம்..



            ஒரேநாளில் மூன்று பள்ளிப்படை கோவில்கள்..   மறக்க இயாலா அனுபவம்.




தொடர்பு:  மா. மாரிராஜன் (marirajan016@gmail.com)



இராஜசிம்மேசுவரம் - காஞ்சி கைலாசநாதர் கோயில்


——    துரை.சுந்தரம்



முன்னுரை:
            நண்பர்கள் திரு. வீரராகவன், திரு. சுகவன முருகன் ஆகிய இருவரின் தொல்லியல் சார்ந்த பணிகளில், கல்லூரி மாணவர்களுக்குக் கல்வெட்டு எழுத்துகள் பயில்விக்கும் பணியும் ஒன்று. அண்மையில், அவர்கள் காஞ்சியில் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளில் கட்டுரை ஆசிரியரையும் ஈடுபடுத்தினர். கிரந்த எழுத்துகளை மாணவர்க்கு அறிமுகம் செய்துவைக்கும் பணி. அது போழ்து, காஞ்சியில் உள்ள கைலாச நாதர் கோயிலின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் கூறும் நோக்கில் மாணவர்களை அழைத்துச் சென்ற நிகழ்வில், கட்டுரை ஆசிரியருக்கும் காஞ்சிக்கோயிலையும் அங்கிருக்கும் கிரந்தக் கல்வெட்டுகளையும் கண்டு மகிழும் வாய்ப்பு கிட்டியது. அது பற்றிய ஓர் பகிர்வு இங்கே.

உதவி : இணையம்

கல்வெட்டியல் அறிஞர் ஹுல்ட்ஸ் (E.HULTZSCH):
            1886-ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள், 21-ஆம் நாள்; முன்னாள் மதராஸ் அரசின் கல்வெட்டு ஆய்வாளராக (EPIGRAPHIST TO THE GOVERNMENT OF MADRAS) ஹுல்ட்ஸ் (E.HULTZSCH) அவர்கள் பணியேற்றதும், அடுத்த ஆண்டே 27-09-1887 முதல் 19-10-1887 வரை காஞ்சியில் தங்கியிருந்து கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகளைத் தாமே படியெடுத்ததாகக் குறிப்பிடுகிறார். 1883-ஆம் ஆண்டு டாக்டர் பர்கஸ் (Dr. BURGESS) அவர்கள் இக்கோயிலைக் கண்டு சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அதுவரை, மற்ற கோயில்களோடு ஒப்பிடுகையில் அவ்வளவு முதன்மை பெறாத நிலையில் கருதப்பட்ட கைலாசநாதர் கோயில் பல்லவர் கலைப்பாணியில் கட்டப்பெற்றது என்பதோடு, பெரும் எண்ணிக்கையில் பல்லவர் எழுத்தில் (கிரந்தம்) சமற்கிருத மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பெற்றிருக்கிறது எனக்கூறியுள்ளார். 1884-85 –ஆம் ஆண்டில் எஸ்.எம். நடேச சாஸ்திரி அவர்கள் இக்கோயிலின் பல்லவர் கல்வெட்டுகளைப் படியெடுத்துள்ளார்.  ஹுல்ட்ஸ் (E.HULTZSCH) அவர்கள், நடேச சாஸ்திரியார் எடுத்த படிகளை 1887-ஆம் ஆண்டில் படித்து  எழுத்துப்பெயர்ப்பு (TRANSLITERATION), மொழிபெயர்ப்பு (TRANSLATION) ஆகிய பணிகளைச் செய்துள்ளார்.  அவர் இங்குள்ள கல்வெட்டுகளைப் பற்றிக் கூறும் பல்வேறு செய்திகளைக் கீழே ‘கோயிலின் கல்வெட்டுகள்’  தலைப்பில் காண்க.

பல்லவ மன்னன் இராஜசிம்மனும் கைலாசநாதர் கோயிலும்:
            காஞ்சி கைலாசநாதர் கோயில் பல்லவ மன்னன் இராஜசிம்மன் கட்டுவித்தது. மகேந்திரவர்மன் முதன்முதலில் செங்கல், சுண்ணம், மரம், உலோகம் ஆகியவை இன்றிக் கோயில் கட்டுவித்த பெருமையைக் குடைவரைக் கோயில் எழுப்பிப் பெற்றான் எனில், முதல் கட்டுமானக் கற்கோயிலைக் கட்டிய பெருமையை இராஜசிம்மன் கைலாசநாதர் கோயிலைக் கட்டுவித்துப் பெறுகிறான். இக்கட்டுமானக் கோயிலின் காலம் கி.பி. 685-705. கோயிலின் அடித்தளம் (அதிட்டானப்பகுதி) கருங்கல்லால் அமைக்கப்பெற்றது. அதன்மேல் எழுப்பப்பட்ட கட்டுமானமும், பிற சிற்பங்களும் மணற்கல்லால் அமைக்கப்பட்டவை. சுற்றாலை முழுதுமாக ஐம்பத்தெட்டு திருமுன்களை (சன்னதி) உடைய தனிக்கோயில்களைக்கொண்டு தனித்த அழகு பெற்ற கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. கட்டுமான அழகும், சிற்பக் கலை அழகும் பெற்ற இக்கோயிலின் தோற்றத்தில் மகிழ்ந்துபோன சோழப்பேரரசன் முதலாம் இராசராசன் இக்கோயிலுக்குப் பலமுறை வருகை தந்ததாகவும், தஞ்சைப் பெருங்கோயிலை எழுப்ப இக்கோயிலே ஓர் உந்துதலை அவனுக்கு அளித்ததாகவும் கூறுவர். கோயிலில் உள்ள கோட்ட அமைப்பும், கோட்டங்களில் காணப்பெறும் சிற்பங்களும் இக்கூற்று மெய் என்பதாக நம்மை உணரவைக்கின்றன.  தஞ்சைக் கோயில் சிற்பங்களைக் காண்பதுபோல உணர்கிறோம். பல்லவ அடிச்சுவட்டைச் சோழன் தொடர்ந்தமை கண்கூடாகத் தெரிகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில், இக்கோயிலின் பெயர் “இராஜசிம்ம பல்லவேசுவரம்” என்றும், “இராஜசிம்மேசுவரம்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

            ஐம்பத்தெட்டு தனிக்கோயில்களையும் சுற்றிவருகையில் ஒரு வெள்ளோட்டப் பார்வையாகவே சிற்பக் கலை அழகினைக் கண்டு மகிழ முடிந்தது. முழுதும் கண்டு மகிழப் பல நாள்கள் வந்து போகவேண்டும். ஒரு கலைக்கருவூலமாகத் திகழும் இக்கோயிலில் பல்லவப்பாணியை நிலை நிறுத்தும் சிம்மச் சிற்பங்களும், இரு சிம்மங்களுக்கிடையில் உள்ள சிறு இடைவெளியில் அமைக்கப்பட்ட சிற்பங்களும், கோட்டச் சிற்பங்களும் – கோட்டச் சிற்பங்களில் சிவனின் பல்வேறு தோற்றங்களும், தொல்கதைகளில் வரும் நிகழ்ச்சிகளை விளக்கும் வேறு பல சிற்பங்களும் -  நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. சிற்பங்கள் அனைத்தையும் ஆய்வு நோக்கில் பார்வையிட்டுப் பலர் நூல்கள் எழுதியிருப்பர். அவற்றைப் பெற்று அவற்றின் துணையுடன் கோயிலின் முழு அழகையும் சிறப்பையும் கண்டுணரக் காலம் வேண்டும்.

கோயிலின் கல்வெட்டுகள்:
            கோயிலின் அதிட்டானப்பகுதி முழுதும் கருங்கல்லால் அமைக்கப்பட்டது முன்னரே சுட்டப்பட்டது. இக்கருங்கல் பகுதி முழுதும் பெரும்பாலும் கல்லெழுத்துகள் காணப்படுகின்றன. இக்கருங்கல் பகுதி ஜகதி என்னும் உறுப்பாகவும், இதன் மேல் பகுதி – மணற்கல்லால் அமைக்கப்பட்டது -  குமுதப்பகுதியாகவும் தோன்றுகிறது. (இந்தக் குறிப்புகள் உறுதி செய்யப்படவேண்டியவை. பார்வையிடும் நேரத்தில் விரைவாகக் கல்வெட்டுப் பகுதிகளையும், ஆங்காங்கே சில பல சிற்பங்களையும் ஒளிப்படம் எடுக்கும் ஓர் ஓட்டத்தில், கட்டிடக் கலை நுணுக்கங்களில் எல்லாம் உள்ளம் ஊன்றவில்லை.) கல்லெழுத்துகள் அனைத்தும் கிரந்த எழுத்துகள் என்பதே இங்கு குறிக்கப்படவேண்டுவது. பல்லவ கிரந்த எழுத்துகள் தனித்தன்மையைப் பெற்றவை.  தொடக்கத்தில் காணப்படும் சில கல்வெட்டு எழுத்துகள், எழுத்துகளாகத் தோற்றம் காட்டா. ஓவிய வடிவில் அவை உள்ளன. மற்ற கல்வெட்டுப்பகுதிகள், படிக்கும் வண்ணம் எழுத்துகளைப் பெற்றிருந்தாலும், அவையும் ஓர் ஓவிய வடிவைக்கொண்டுள்ளன எனலாம்.

கோயிலின் ஒரு கல்வெட்டு பல்லவர் குடிவழியைக் குறிப்பிடுகிறது...
[பிரம்மன்]
ஆங்கீரஸ
பி3ருஹஸ்பதி
ச0ம்யு
ப4ரத்3வாஜ
துரோண
அச்0வத்தாமன்
பல்லவ   (பல்லவர் குடிமரபின் முதல் தோன்றல்)

            இதே கல்வெட்டு, இரணரஸிக(ன்) என்னும் அரசனை அழித்தவன் உக்3ரத3ண்டன் எனவும், உக்3ரத3ண்டனின் மகன் இராஜசிம்மன் எனவும் குறிக்கிறது.  இன்னொரு கல்வெட்டு, முதல் துணைக்கோயிலின் பெயர் ”நித்ய விநீதேச்0வர(ம்)”  என்று குறிக்கிறது. மற்றொரு கல்வெட்டு, சிவனுக்கான சிறு கோயிலைக் (மூன்றாம் துணைக்கோயில்) கட்டுவித்தவர் ”ரங்கபதாகை” என்பதாகவும், இவர் ”காலகாலா”  என்னும் விருதுப்பெயரையுடைய பல்லவ அரசன் ”நரசிம்மவிஷ்ணு”வின் அரசியார்  என்பதாகவும் குறிக்கிறது. மீதமுள்ள கல்வெட்டுகள், இராஜசிம்மனின் நூற்றுக்கணக்கான விருதுப்பெயர்களைத் தாங்கியுள்ளன. இவ் விருதுப்பெயர்கள் நான்கு அடுக்குகளில் பொறிக்கப்பட்டுள்ளன. கருங்கல் பகுதியில் ஓர் அடுக்கும், மணற்கல் பகுதியில் மூன்று அடுக்குகளும் இப்பெயர்களைக் கொண்டுள்ளன. கருங்கல் அடுக்கிலும், மணற்கல் அடுக்குகளில் ஒன்றிலும் மட்டும் எழுத்துகள் படிக்கும் வண்ணம் உள்ளன. மற்றவை  அழிந்துவிட்டன. 

இராஜசிம்மனின் விருதுப்பெயர் தாங்கிய கல்வெட்டுகள்:
            அதிட்டானப்பகுதியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இராஜசிம்மனின் விருதுப்பெயர்களைத் தாங்கியுள்ளன. மொத்தம் இருநூறு விருதுப்பெயர்களுக்கு மேல் உள்ளன. அனைத்தும் சமற்கிருதப் பெயர்கள்; பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டவை. எடுத்துக்காட்டுக்காகக் கீழே சில பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

விருதுப்பெயர் பெயரின் விளக்கம்
அத்யந்தகாம எல்லையற்ற விருப்பு
ரணஜய போரில் வெற்றி
அபி4ராம அன்பு
அபராஜித வெல்லற்கரிய
அமித்ரமல்ல பகைவருக்கு மல்லன்
அதிரணசண்ட போரில் கடும் வலிமை
ஆஹவ கேசரி போரில் சிங்கம்
காஞ்சி மகாமணி காஞ்சியின் அணிகலன்
நித்யவர்ஷ (என்றும்) மழை போல் கொடை
ஸங்க்ராம ராம போரில் இராமன்
கலாசமுத்3ர கலைகளில் கடல்
பார்த்த விக்ரம வலிமையில் பார்த்தன் (அர்ஜுனன்)
பு4வநி பா4ஜந உலகுடைய
அச்0வப்ரிய புரவிப் பிரியன்
இதிஹாசப்ரிய புராண, இதிகாசங்களில் விருப்பு
ஆதோத்3ய தும்பு3ரு இசைக்கருவிகளில் தும்புருவை ஒத்த
நாக3ப்ரிய யானைப் பிரியன்
காவ்யப்ரபோ3த4 காவியங்களுக்கு உயிரூட்டும்
வீணா நாரத3 வீணையில் நாரத3ர்
ச0ங்கர ப4க்த சிவனடியான் 
ஈச்0வர ப4க்த சிவனடியான்
இப4வத்ஸராஜே யானையைப்பற்றிய அறிவில் வத்சராசனை ஒத்த
இப4வித்4யாத4ர யானையைப்பற்றிய அறிவில் வல்ல

பார்வையிட்ட சில கல்வெட்டுகள்:
            கோயிலில் நேரடியாகப் பல கல்வெட்டுகளை  ஒளிப்படம்   எடுத்தவற்றுள் சில கல்வெட்டுப் பொறிப்புகளை ஹுல்ட்ஸ் அவர்களின் மொழிபெயர்ப்புச்சொற்களில் இனம் காண இயன்றது. அவை இங்கு சிறியதோர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

1.   ஸ்ரீ அத்யதா3ர

ஸ்ரீ அத்யதார



            “அத்யதா3ர”  என்னும் விருதுப்பெயரை “The extremely Noble”  என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.  “அத்ய”  என்பது நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் “அதிகம்”  என்னும் சொல்லின் வடிவம் என்று புலனாகிறது.

            பல்லவ கிரந்தம் தனித்தன்மை பெற்றது என முன்னரே பார்த்தோம்.  ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களும் அவ்வெழுத்துகளில் உண்டு.  “அ” எழுத்தும் இரு வகையாக எழுதப்படுகின்றது. கீழே காண்க.


            
            இவை எளிய, இயல்பான  வடிவங்கள்;  கைலாசநாதர் கோயில் கல்வெட்டு எழுத்துகள் மிகவும் அழகுணர்வோடு ஓவியத்தின் வடிவ அழகினைச் சேர்த்து எழுதப்பட்டவை.

            பல்லவர் வடபுலத்துச் சாதவாகனருடன் தொடர்பு கொண்டவர்கள். சாதவாகனரின் மேலாண்மையை ஏற்று அவரின் கீழ் ஆட்சி செய்த குறு மன்னர்கள்.  சாதவாகனரின் எல்லைப் புறக் காவலர்களாகவும் பதவியில் இருந்தவர்கள்.  காஞ்சியைக் கைப்பற்றிய பின்னரும் பல்லவ அரசர்கள் வடபுலத்துத் தலைநகர்களில் இருந்தவாறே  பல செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர். இச்செப்பேடுகள் பெரும்பாலும் சமற்கிருத மொழியில், வடபுலத்தில் வழக்கிலிருந்த எழுத்துகளில் எழுதப்பட்டவை. இவ்வெழுத்துகள் கி.பி. நான்காம் நூற்றாண்டு அளவில்  வழக்கில் இருந்தவை. அசோகர் பிராமி எழுத்துகள் வளர்ச்சியுற்று வடிவ மாற்றம் பெற்ற எழுத்துகள். கி.பி. நான்காம் நூற்றாண்டில் குப்தர்கால  எழுத்துப் பட்டியல் பல்லவர் பயன்படுத்திய எழுத்துகளோடு ஒத்துப்போகின்றன. மகேந்திர பல்லவனுக்கு முன்பு இந்நிலைமை. அவ்வகையில், கி.பி. நான்காம் நூற்றாண்டில், தமிழ் பிராமியின் வளர்ச்சி நிலையைக் கட்டிலும் வடபுலத்துப் பிராமியின் வளர்ச்சி மிகுதி என்பது புலனாகிறது. இந்த வடபுலத்து எழுத்துகளின் தாக்கத்தாலேயே கிரந்த எழுத்துகளைப் பல்லவர் உருவாக்கியுள்ளனர் எனலாம்.  இந்த ஒற்றுமையைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் ஒருவாறு உணர்த்தும்.



2.   ஸ்ரீ உக்3ரப்ரதாப

உக்ரப்ரதாப



            ஸ்ரீ உக்3ரப்ரதாப என்னும் விருதுப்பெயரை “He who is endowed with terrible   bravery”  என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.  உக்கிரம், பிரதாபம் ஆகியவை நம் இயல்பு வாழ்க்கையில் நமக்கு அறிமுகமாயுள்ள சொற்களே.

3.   ஸ்ரீ உந்நதராம

ஸ்ரீ உந்நதராம



            ஸ்ரீ உந்நதராம  என்னும் விருதுப்பெயரை “The exalted and lovely” என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். இங்கு, “ராம”  என்னும் சொல், இராமனைக் குறிக்கவில்லை என்றாகிறது.

4.   ஸ்ரீ உக்3ரவீர்ய்ய
          
ஸ்ரீ உக்ரவீர்ய்ய


            ஸ்ரீ உக்ர வீர்ய்ய என்னும் விருதுப்பெயரை ”He who possesses terrible prowess. “  என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.  வீரியம் என்னும் சொல்லும் நமக்கு அறிமுகமாயுள்ள சொல்லே.

5.   ஸ்ரீ உதி3தோதி3த
ஸ்ரீ உதிதோதித


            ஸ்ரீ உதிதோதித  என்னும் விருதுப்பெயரை  " He who is rising ever and ever"  என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.  உதித் என்பது உதயம் என்னும் எழுச்சியைக் குறிக்கும் வட சொல். இரண்டு முறை “உதித்”  என்பதால் மீண்டும் மீண்டும் எழுச்சியுறுகின்ற என்னும் பொருள் அமைந்துள்ளது எனலாம்.

6.   ஸ்ரீ அநுநய ஸாத்4ய
  
ஸ்ரீ அநுநயஸாத்ய


            ஸ்ரீ அநுநயஸாத்4ய  என்னும் விருதுப்பெயரை "He who is to be conquered (only) by submissiveness"  என  ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.

7.   ஸ்ரீ ராஜஸிம்ஹ   -    ஸ்ரீ அத்யந்த காம

ஸ்ரீ ராஜசிம்ஹ - ஸ்ரீ அத்யந்தகாம


            இக்கல்வெட்டுப்படத்தில், மணற்கல்லின் தேய்மானம் காரணமாக முழுச் சொற்களும் புலப்படவில்லை. 

8.   ஸ்ரீ ராஜஸிம்ஹ
ஸ்ரீ ராஜசிம்ஹ


            இக்கல்வெட்டை  அடையாளம் காட்டியவர் கோயிலில் காவல் பணியில் இருந்த தனியார் காவலர் ஆவார்.  கட்டுரை ஆசிரியர் சுற்றாலையில் கல்வெட்டுகளை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,  ’ராஜஸிம்ஹன்’ பெயர் காணப்படுகின்ற கல்வெட்டைக் காண்பிப்பதாக அழைத்துச் சென்று காட்டினார்.  இது எப்படி அவரால் முடிந்தது என்னும் கேள்விக்கு அவர் தந்த விடை வியப்பை அளித்தது. தொல்லியல் அறிஞர்

திரு. நாகசாமி அவர்கள் இக்கல்வெட்டைச் சுட்டிக்காட்டி விளக்கியதை நேரில் கண்டு உள்ளத்தில் பதிவு செய்துவிட்டார் அக்காவலர் !!!

9.   ஸ்ரீ உந்நதராம

ஸ்ரீ உந்நதராம
பூவேலைப்பாடுகளுக்கிடையே எழுத்துகள்  (ஒளிப்படம் உதவி : swamisblog)


மாணவர்களுடன்



துணை நின்ற நூல்கள்:
1     தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி-1
2    INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS - By C. SIVARAMAMURTI
3    HISTORY OF THE PALLAVAS OF KANCHI - By R.GOPALAN




தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.





காதல் ...


——    கவின்மொழிவர்மன்



            உலகத்தில் எல்லா உயிர்களிடத்தும் காதல் இருக்கிறது.  பூமி முதலான கோள்கள் சூரியனைச் சுற்றுவதும் காதல்தான்.  தாமரை, சூரியகாந்தி போன்றவை சூரியனைக்கண்டு மலர்வதும்,  மல்லிகை,முல்லை போன்றவை வெண்ணிலவைக் கண்டு மலர்வதும்,  தென்றலின் தீண்டலில் கார்முகில் பொழிவதும்,  திங்களின் வரவில் செங்கதிர் மறைவதும் காதலே.  விலங்கினத்தும் காதல் உண்டு.  தன் இனத்து உயிர்களுக்குப் பிறவற்றால் தீங்குநேர துடிக்கும் பறவைகளும் விலங்குகளும்.  தன் இணையைப் பிரிந்துவிட்டால் உணவின்றி சாகும் உயிர்களும் உண்டு.

            காதல் யாருக்கும் யாவற்றுக்கும் சொல்லி வருவதில்லை, சொன்னாலும் போவதில்லை.  இவர்மீதுதான் இப்போதுதான் வரவேண்டும் என்பதில்லை.  எந்த வயதிலும் வரலாம்.  யார்மீதும் வரலாம்.  காதல் கண்ணுக்குத் தெரிவதில்லை.  காற்றைப்போலத் தேகம் தீண்டுவதும் இல்லை.  வானவில் போல வண்ணம் நிறைந்ததும் இல்லை.  நிறமற்று,உருவற்று உணர்வுள்ள ஒன்றுதான் காதல்.

            ஆதலால் கடவுள் எனச் சொல்லலாமா?   ஆம்.சொல்லலாம்.

            கடவுளைப் போலத்தான் காதலும்.  வெகுவாக சிலிர்க்க வைக்கும், சிரிக்க வைக்கும், சிறக்க வைக்கும். ஏன் இறக்கவும் வைக்கும்.  பெற்ற தாய்க்காகவோ உடன் பிறந்த பிறப்புக்காகவோ யாரும் உயிர் விடுவதில்லை.

             பெற்றோர்மேல் அன்பு தன்னை ஈன்றதால்.   பிள்ளைகள்மேல் அன்பு தன்னால் ஈன்றதால்.   உடன்பிறந்ததால் சகோதர அன்பு.

            முன்பின் பார்த்தறியாது, முழுவதும் கேட்டறியாது, கண்ணோடுகண்பேசி  கலந்துவிட்ட நொடிப்பொழுதில் உன்னோடுதான் வாழ்வெனக்கு என்று உயிரோடு பிணைவதுதான் காதல்.

            வேறு எந்த உயிர்களிலும் இல்லை இதுபோன்ற ஒரு உணர்வு. உண்மை காதலில் தனது இணை தன்னை விட்டுச்சென்றாலும், தன்னையே வெறுத்தாலும், தான் நேசித்த இதயத்தால் தனக்கு வேதனை அவமானம் ஏன் உயிரே போகும் நிலை வந்தாலும்,  தன் காதலுக்காக அனைத்தையும் மகிழ்வோடு ஏற்கும் ஒரு உயிர்தான் மானுடப்பிறப்பு.

இந்தக் காதல் நிறைய பேரை சாதிக்க வைத்திருக்கிறது. 
இந்தக் காதல் நிறைய பேரை சோதிக்கச் செய்கிறது.
இந்தக் காதல் நிறைய பேரை சிரிக்கவும் அழவும் வைத்திருக்கிறது.
காதலிக்காகவும் காதலனுக்காவும் உயிர்பிரிந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

            இதே காதலுக்காக கொலை செய்தவர்களும் உண்டு.  மிருகத்தை மனிதமாக்குவதும் மனிதத்தை இறைவனாக்குவதும் இந்தக் காதல்தான்.  இதேக் காதல்தான் ஒருவனைப் பைத்தியமாகவும் அறிவாளியாகவும் மாற்றுகிறது.

            காதலின் சுகமானது காதலை வென்றவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை.  காதல் முடிந்து கல்யாணமானபிறகு அவர்கள் காதலை கொன்றுவிட்டு கணவன் மனைவியாக மட்டுமே வாழ்கின்றனர்.
 காதலில் தோற்றவர்கள் பெரும்பாலும் காதலுக்காகவே நினைந்து உருகி மருகி அழுது புலம்பி இறுதியில் இறந்தும் போகின்றனர்.  இங்கே மரிப்பது உடல் மட்டுந்தான்.

            காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. யாரையும் பொய்யாக நேசிக்காதீர். யாருடைய உணர்வுகளையும் குத்திக் கிழிக்காதீர்.  உணர்வைக் கொல்வதும் ஒரு கொலையே.  இவர்கள் தண்டனையில்லா மறைமுக கொலைகாரர்கள்.  இவர்களில் காதல் என்ற பெயரில் ஏமாற்றுபவர்களும்,காதலித்து ஏமாற்றுபவர்களும் அடக்கம்.

            நேசிப்பதிலும் நேசிக்கப்படுவதிலும் ஒரு உயர்ந்த சுகம் இருக்கத்தான் செய்கிறது.  இதை எவ்வளவு விலை கொடுப்பினும் வாங்க இயலுவதில்லை.  எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை.  உண்மையான அன்பு உலகம் உள்ளளவும்  அழிவதில்லை.

ஆதலால் காதல் செய்வீர்...

உன்மீது நான்
கொண்ட நேசம்
உலகிலே இல்லாத
 மகரந்த வாசம்
காற்றோடும் மழையோடும்
கரைந்திடா பாசம்
கடலையும் வானையும்
தாண்டியே வீசும்,

விண்ணோடும் முகிலோடும்
உன்னுருவத் தோற்றம்
கண்ணோடு இணைந்த
கண்மணியாய் ஒளிவீசும்
இன்றல்ல நேற்றல்ல
இதுபோலே பாசம்
இறந்தாலும் இறவாது
நான்கொண்ட நேசம்.





தொடர்பு:  கவின்மொழிவர்மன் (kavinmozhitamil@gmail.com)





Wednesday, February 13, 2019

மந்திரம் - ஒரு பொருள் விளக்கம்



—  இராம.கி.


            இரு மொழிகளிலும் சிறந்த புலமைபெற்ற சிவாச்சாரியார்களையும், பட்டர்களையும் வைணவ ஆச்சாரியார்களையும் உள்ளடக்கிய தென்னிந்திய அருச்சகர் சங்கம் வெளியிட்ட சிவாகம விளக்கவுரை நூலிலிருந்து எடுக்கப்பட்டதாக மந்திரமென்ற சொல்லுக்கு
சமசுகிரதத்தில் ‘மந்திரம்’ என்னும் சொல் மநநம் + த்திராணம் என்னும் இரு சொற்களின் புணர்ச்சியால் ஏற்பட்டதாகும் இச்சொல் வாசகம் வாச்யமென்று இரண்டாக விரியும். அதாவது தான் நினைத்த பொருளைப் பிறர்க்குத் தெரிவித்தலும், பிறர் தெரிவித்ததனைத் தாமுள்ளுணர்தலமாகும் 
            என்று விளக்கம் சொல்லப்பட்டது. படித்து நான் வியந்துபோனேன். என் குறைபட்ட மொழியியலறிவில் புரிந்துகொண்டபடி, மநநம்+த்ராணம் என்பது ஒருநாளும் மந்திரமாகாது. புணர்ச்சியில் அது மநந்த்ராணம் என்றே திரியும். கண்டமேனிக்குச் சங்கத இலக்கணம் இப்படியெல்லாம் வேலை செய்யாது. இதுபோன்ற “பௌராணிக விளக்கங்களை” வைத்துப் பொருள்கொள்வோருக்கு என்னசொல்ல முடியும்?. மோனியர் வில்லியம்சைப் பாருங்கள் என்றுமட்டுமே சொல்லமுடியும். பௌராணிகர்களைப் பார்த்தால் தடுமாறத்தான் வேண்டும். மந்திரத்தின் தாதுவாக ”மந்”நையே மோனியர் வில்லியம்சு அகரமுதலி சொல்லும். அத்தாது, ஆத்மனேபாதத்தில் சொல்லப்பட்டதில், 8.4 ஆம் வகையைச் சேர்ந்ததாம். பாணினியின் தாது பாடப்படி, அது xxx, 9; xxv, 670 என வகைப்படுத்தப் படும்.

            இதன் அடிப்பொருள் to think, believe, imagine, suppose, conjecture என்பதே. இதன் அடிவழி வந்த சொற்கள் பல. மந, மநந, மநஸ், மநு, மநுஷ், மநோ, மந்த்து, மந்த்ர, மந்த்ரி போன்றவையும் பிறவும் ஆகும். இவையெலாம் ஒழுங்கான சங்கத இலக்கணவழி வந்த சொற்கள். ”சூ, மந்திரக்காளி, ஓடிவா, ஓடிவா” என்றபடி, மநந்த்ராணம் என்றசொல் மந்த்ரம் ஆகிவிடாது. மந்த்ர என்பதற்கு instrument of thought, speech, sacred text or speech, a prayer or song of praise என்று பொருள் சொல்வர். இதன்படி “சிவசிவ, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் மணிபத்மே ஹூம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடு நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு .......” போன்று இன்னும் பலவும் மந்திரங்களே. அவற்றைச் சொல்வதில் ஒருவிதமான எழுச்சி, நிறைவு, அமைதி போன்றவை ஒருவருக்குக் கிடைக்குமானால் அம் மந்திரங்களுக்குப் பயனுண்டு தான். இவை மனம் தொடர்பானவை.

            மந் எனும் தாதுக்கும் முந்தையதாய் முல்*>முன்>மன் எனும் வேரைத் (முன்னு-தல் வினையைத்) தமிழ்ச்சொற்பிறப்பியல் சொல்லும். (”வேறுபல முன்னிய விரகறி பொருந - பொருநராற்றுப்படை 3) கன்னடத்திலும் இது முந்நு என அமையும். ஞாவகம் கொள்ளுங்கள். மொழியீற்றில் னகரம் என்பது நகரத்தின் போலி. சொல்முடிவில் வெரிந் என்றசொல் தவிர்த்து மற்ற சொற்களில் னகரமே ஈற்றாகும். பொதுவாக முன்னுதலென்பது பொருந்தல் பொருளையே உணர்த்தும். மு- வும் நு வும் பல சொற்தொடக்கங்களில் போலிகள்.’ மன்>மன்னு, மனம், மனசு, மனனம், மன்>மான்>மாந்து, மாந்தன், மந்திரம், மந்திரி என்ற சொற்களைத் தமிழென்றுஞ் சொல்லலாம். மன்னுந் திரம்(>திறம்) தமிழில் மந்திரமாகும். இதற்குச் சங்கதத்தைத் துணைக்கழைக்கத் தேவையில்லை.

            அன்றாடம் நாம் காணும் காட்சிகளை, பட்டறிந்தவைகளை, ஏதோசிலவோடு பொருத்துகிறோம். அப்பொருத்தல்களே நம்மூளையில் பதிகின்றன. பின் நினைவாகின்றன. முன்>நுன்>நின்>நினை என்பதும் முன்னுதலின் இன்னொரு வடிவுதான். இதேபோல் முன்>உன்>உன்னு என்பதும் இன்னொரு வடிவு. உல்>உள்>உள்ளம் என்பதும் மனத்தின் இன்னொரு சொல். உள்>ஒர்>ஓர்>ஓர்தல்= பொருந்தல். கருதல், கண்ணுதல் என்ற சொற்களும் பொருந்தல் தொடர்புள்ளவை செ>செத்து>சித்து>சிந்து>சிந்தனை என்பதும் கருதல் தொடர்பானது. முன், நினை, உன், உள், ஓர், கண், கருது, சித்து என்பவற்றின் அடியிலும் பலநூறு தமிழ்ச்சொற்கள் உள்ளன. எல்லாவற்றையும் சங்கதப்படுத்திப் பார்ப்பது நம்மை அடிமைத்தனத்திற்கே இட்டுச்செல்லும். வழக்கம்போல் ஒரு சிலர் எதுமுந்தி என்பதில் குடுமிப் பிடிச் சண்டையும் போடலாம். அது வேறு கதை.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
            என்று வரையறை தருவார் தொல்காப்பியர் (செய்யுளியல் 178). இதைவிடச் சிறப்பான வேறு வரையறையை மந்திரத்திற்கு நான் கண்டேனில்லை. மேலேசொன்ன “சிவசிவ, ஓம் நமசிவாய, ஓம் நமோ தமிழ்  நாராயணா, ஓம் மணிபத்மே ஹூம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடு நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு .......” என்பன வெல்லாமும் நிறைமொழி மாந்தரின் ஆணையில் கிளந்தவையே. மந்திரம் என்பது வாய்மொழி எனவுஞ் சொல்லப்படும். திருமூலர் அருளிய திருமந்திரமும், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியுங் கூட மந்திரவகையைச் சேர்ந்தவை தான். வாய்மொழி என்பதைச் சிவவாக்கியர் நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் ஒரு பாட்டில் சொல்லுவார்:
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணன்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ? நாதனுள்ளி ருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?  
            முள்ளுதல்> மொள்ளுதல் என்பது வாய்க்குள் நாவை உருட்டி ஒலிஎழுப்புவது. மொள்>மொழு>மொழி என்பதும் அதே பொருள்தான். முள்>முழங்கு = சத்தமாய் ஒலியெழுப்புவது. முள்>முழு<முணு> முணுமுணுப்பு= காதில்கேட்காத அளவிற்கு மென்குரலில் சொல்வது., பலரும் மந்திரம் சொல்லும்போது சத்தமிட்டுச் சொல்ல மாட்டார். முணுமுணுத்தே சொல்வார். மந்திரம் என்றால் என்னவென்று புரியச் சிவவாக்கியரின் மேலுள்ள வாக்கும் தேவைதான்.



தொடர்பு: 
இராம.கி.  (iraamaki@bsnl.in) 
http://valavu.blogspot.com







Tuesday, February 12, 2019

தந்தைமை




— முனைவர் ச.கண்மணி கணேசன்  


என்னைச் சுமப்பதே சுகம் என்று நீங்கள் தூக்கித் திரிந்த காலம்  
உங்கள் தோளில் நாடியைப் பதித்துக் கொண்டு உலகைச் சுற்றிப்பார்த்த காலம்
இரண்டு கைகளிலும் இரண்டு மிட்டாய்கள் கொடுத்துத் திண்ணையில் இறக்கிவிட்ட காலம் 
முதன்முதலாய்த் தெருப்புழுதியில் கால்பதித்த போது உங்கள் சுண்டுவிரலைப் பிடித்த காலம்
எனக்குப் பிடித்த குளோப்ஜாமூன் வாங்கிக்கொடுத்து குஷியாக்கிய காலம்
வணிகப்பயணம் மேற்கொள்ளும் முன்னர் அண்டன்பேக்கரி வரை உடனழைத்துச் சென்ற காலம் 
கைநிறையப் பொட்டலங்கள் கொடுத்து டாடா  காட்டிய காலம்      
அம்மாவுக்குப் பயந்து உங்களிடம் ரகசியமாய்ப் பேனா வாங்கிய காலம் 
'எம்பொண்ணுக்குப் படிப்பெல்லாம் தேவையில்லை' என்று கொடிபிடித்த காலம்
சென்ற தீபாவளிக்கு எடுத்த அதே கலர்; அதே டிசைன்; அதே ரகதாவணியை இந்தத் தீபாவளிக்கும் கொடுத்த காலம்
எனக்குப் பரிசாகக் கிடைத்த 'பாரதியார் கவிதைகள்' புத்தகத்தைக் கடைத்தெரு முழுதும் காட்டித் திரிந்த காலம்
சொந்தக்காலில் நான்நிற்க நீங்கள் தவித்த காலம்
'மாப்பிள்ளைக்குத் தலைக்கறி தாண்டா பிடிக்குமாம்; சமைத்துப் பழகிக்கொள்' என்று வற்புறுத்திய காலம்   
கைப்பிடித்துக் கொடுத்தவேளை மருண்டகோலம்; 'சம்பளத்த முழுசா மாமியார் கையில குடுத்துருப்பா' என்று பதறிய காலம் 
என்னிடம் வாங்குவது மானக்கேடு என்று ஒதுங்கிய காலம்
நான் வெய்யிலில் வாடாதபடி; 'ஐயா அலைஞ்சி வாங்கிட்டு வந்துர்ரேண்டா; நீ வீட்டுக்குப் போடா' என்று என்னைப் பொத்திய காலம்     
'மாங்காய் போட்டு மீன்குழம்பு; எங்கம்மா சமைத்தமாதிரி' என்று ருசித்த காலம்
'கண்ணா'... என்று வாய்நிறைய அழைத்து; அந்தக்குரலில் அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்திய காலம்  
இன்று என்கையைப் பற்றிக்கொண்டு எத்தனையோ சொந்தங்கள்;
எனக்குப் பிடித்துக்கொள்ள தந்தையின் சுண்டுவிரல்.......?
                                                                                                                                   
    

தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)



                                                                                                                                                                                                           

Monday, February 11, 2019

இசையாய், இசை தரும் பொருளாய் ...


——    தேமொழி


            மொழியின் சொற்களால் இருபொருள்பட சொல்லி மொழிநயம் கூட்டுவது போல, இசையின் சுவரங்களால் இருபொருள்பட சொல்லி இசைநயம் கூட்டுவதும் உண்டு.  இதற்கு மொழியறிவும் இசையறிவும் தேவை.

மொழியின் சொற்களால் இருபொருள்பட சொல்லி மொழிநயம் கூட்டுவது:
            ஒரு பாடலில் ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இரட்டுற மொழிதல் (சிலேடை); இரண்டு +உற +மொழிதல் = இரட்டுற மொழிதல், அதாவது  இரண்டு பொருள்படப்பாடுவது. 

நீ வரவேண்டும் ஏன் வரவில்லை
நான் வரலாமா ஒருக்காலும் இல்லை 
ஒருகாலும் இல்லை ... ஒருக்காலும் இல்லை 
(- கண்ணதாசன்)

என்று ஒரு காலிழந்து ஊனமுற்ற பெண் தன்னைக் காணவராத காதலனிடம் தான் அவனைத் தேடிச் செல்லமுடியாத தனது  நிலைமையை விளக்குவாள். ஆணைத் தேடிச் செல்ல அவள் பெண்மை இடம் கொடுக்கவில்லை, அதனால் அது ஒருக்காலும் நடவாது.  மேலும், அவள் ஒரு கால் இழந்தவள் என்பதால் அவளால் நினைத்தாலும் முடியாது.   ஒருக்கால் என்பதை வைத்து இதுபோல நயமுள்ள வகையில் எத்தனைப் பேரால் பாடல் தர இயலும். 

            மற்றொன்று பலரும் அறிந்தது. 
எனக்கு "மதம்" பிடிக்கவில்லை .. எனக்கு "மதம்" பிடிக்கவில்லை ...
என்று இருபொருள்பட (சமயம்/ வெறி) சொல்வது மொழி நயத்துடன் அமைகிறது.


இசையின் சுவரங்களால் இருபொருள்பட சொல்லி இசைநயம் கூட்டுவது:
            அவ்வாறே,  இசையில் சுவரங்கள் வழி மொழித்திறமையைக்  கையாளுவதும் உண்டு, அது  ஸ்வராட்சரம் எனப்படும். 

ஸ்வரம் + அக்ஷரம் = ஸ்வராக்ஷரம் / ‘ஸ்வராட்சரம் (swaraksharam)’
ஸ்வரம் = ச ரி க ம ப த நி என்ற இசையின் அடிப்படையான ஏழு சுவரங்கள்  
அக்ஷரம் =  எழுத்து  (எ.கா.: அக்ஷர அப்யாசம் – எழுத்துப் பயிற்சி;   பஞ்சாக்ஷரம் - ந ம சி வா ய என்னும் ஐந்து எழுத்தான பஞ்சாட்சரம்)

            இசையின்  சுவரங்களையே மொழியின் எழுத்துக்கள் போல பாவித்து,  அந்த எழுத்துக்களை இணைத்து ஒரு பொருளுள்ள சொல்லும் வருவது போல அமைப்பது.

            'ச' என்ற சுவரத்தையும்,  'ரி' என்ற சுவரத்தையும் ஒரு பண்ணில் இணைத்து 'சரி'  என்று சுவரங்களாகவும் பாடுவதும், அதே நேரத்தில்  அவ்வாறே 'சரி' என்று ஒப்புக்கொள்ளும் பொருளிலும் குறிப்பது. பாடலின் வரி சாகித்தியம் என்று  சொல்லப்படும். 

            இங்கு ச என்பதும் ரி என்பதும் இசையின் சுவரமாகவும் இருக்கிறது அவ்வாறே மொழியின் எழுத்தாகவும் அமைகிறது, அதனால் பொருள் கொண்ட செய்தியாக மாறுகிறது. சுருக்கமாக, வரியின் அக்ஷரமும் அது இசைக்கப்படும்  ஸ்வரமும் ஒன்றாக அமைவது ஸ்வராக்ஷரம்.  ஆகவே 'சரி' என்பது பாடலில் ஸ்வராக்ஷரம் என்ற தகுதியைப் பெறுகிறது.

            இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் பாடல் அகத்தியர் படத்தில் 'வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்' என்று இராவணனுக்கும் அகத்தியருக்கும் இடையில் நடக்கும் ஒரு போட்டிப்பாடலின் இறுதியில் வருகிறது (https://www.youtube.com/watch?v=z5wZVG_oJiI&feature=youtu.be&t=352)
பாடலில் சுவரங்கள் பாடும் இறுதிப் பகுதியில், பாடும் சுவரவரிசையின் இறுதியில் வரும் சுவரங்கள் ஒரு பொருளைக் குறிப்பதாக அமையும்.

இராவணன்:  ...........................  சமமா (அகத்தியரே நீ எனக்கு சமமா?)
அகத்தியர்:  ...........................  சமமா நீ சமமா (இராவணனே சமமா நீ எனக்கு சமமா?)
இராவணன்:  ...........................  நீ சரிசமமா (நீ எனக்கு சரி சமமா?)
அகத்தியர்:  ...........................  நிதாநி மதமா நீ சதமா (நிதானம் தேவை, உனக்கு மதமா? நீ நிலையா?)
இராவணன்:  ...........................  மநிதா நீ பாதக  மநிதா (மனிதனே நீ பாதகம் செய்யும் மனிதன்)
அகத்தியர்:  ...........................  பரிகாசமா சாகசமா  (என்னை பரிகாசம் செய்கிறாயா? சாகசம் செய்கிறாயா?)

இங்கு மேலே கூறப்படும் இசையின் சுவரங்கள் அதன் குறிப்பிட்ட இசைநிலையைத் தாண்டி மொழியின் எழுத்தாக மாறி ஒரு பொருளைக் குறிப்பதால் இவை ஸ்வராக்ஷரம் ஆகிறது.

மேலும் இது போன்ற சில திரையிசைப் பாடல்களிலும் வரும், மற்றொன்று...

நீயே உனக்கு என்றும் நிகரானவன் (பலே பாண்டியா - https://youtu.be/b3ku7VgUi30?t=292)
மா... மா.... (என்ற சுவரங்கள் இணைந்து 'மாமா' என்ற உறவைக் குறிக்கும்)
ப நி மா மா (பணிந்து போ மாமாவே என்ற பொருள்)
நீ மாமா (நீ மாமன் என்ற பொருள்)

சரி = சரி 
மநிதா = மனிதா 
மாமா = மாமன் 
சநி = சனியன் 
மகா = மகா(பெரிய)
கநி = கனி

என்பது போன்று இசையின் சுவரங்களை பொருள் பொதிந்த எழுத்துக்கள் கொண்ட சொற்களாக  ஸ்வராக்ஷரம் என்ற வகையில் மாற்றலாம். இசை விற்பன்னரின் கற்பனைக்கு எல்லை இல்லை. 



தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)





Saturday, February 9, 2019

சந்தை



—  ருத்ரா இ.பரமசிவன்


சந்தை களம் கட்டியது.
தரகர்கள் துண்டுக்குள்
கைவிரல் நுழைத்து
பேரம் பேசுகிறார்கள்.
இன்னும் மணி அடிக்கவில்லை.
அப்போது தான்
முகங்கள் முகமூடிகளைக்
கழற்றிக்கொண்டு
வெளியே வரும்.

யாரிடம் சரக்கு இருக்கிறது?
யார் வாங்குகிறார்கள்?
யார் விற்கிறார்கள்?
இந்த மூடு மந்திரம் தான்
இந்த தேர்ச்சக்கரத்தை
உருட்டிக்கொண்டு இருக்கிறது.
இது "காகித நதியில்"
நடைபெறும் கும்பமேளா.
கங்கைகளும் யமுனைகளும்
காவிரிகளும்
மனிதர்களின் வாக்கு ஆபாசங்களால்
சாக்கடைகளாக உருமாறின.

திருவிழாவின் நெருக்கடிகளில்
பலூன் விற்பவர்கள்
சவ்வு மிட்டாய் விற்பவர்கள்
பொம்மைகள் விற்பவர்கள்
தள்ளுவண்டிகளில்
ஈக்களோடும் பூச்சிகளோடும்
தின் பண்டங்கள் விற்பவர்கள்.
மிளகாய் பஜ்ஜி இனிப்பு பூரி
இத்யாதி இத்யாதி
விற்பவர்கள்
சில்லரைச்சத்தங்கள் சலசலக்க‌
மொய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கெடுபிடி செய்யும்
காவலர் வாகனங்கள்
ஜனத்திரளை விலக்கி விலக்கி
வழி ஏற்படுத்துகின்றன,
காந்தியின் புன்னகைக்கட்டுகள்
எங்கே எங்கே
எந்த டிக்கியில் இருக்கிறது?
எந்த புளி மிளகாய்ச்சிப்பங்களில்
பொதிந்து கிடக்கிறது
என்று
மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

மக்களெல்லாம் கூறு  கட்டப்பட்டு
பொட்டலம் பொட்டங்களாக‌
பணத்துக்கு
அடிமாட்டு விலையில்
வியாபாரம் ஆகின்றன.
நஷ்டங்கள் லாபங்களாக‌
பாலிஷ் ஏற்றப்பட்டு
பண்ட மாற்றம் செய்யப்படுகிறது.
சமுதய மொத்தமும் மூச்சுத்திணறி
சிந்திக்கும் தூய காற்று கிடைக்காததால்
முகமூடி போட்டுக்கொண்டு
முட்டி மோதிக்கொண்டிருக்கிறது.
இதற்கு ஆக்சிஜன் சிலிண்டர்
மாட்டுவதென்றால்
எத்தனை ஆகாயத்தை
வெட்டி எடுப்பது?
மணல் அள்ளும் மாஃபியாக்களிடம் தான்
டெண்டர் விடவேண்டும்.
அப்புறம் சூரிய சந்திரர்கள்
வரும் பாதையும் பள்ளமாகி
எங்காவது விழுந்து கிடப்பார்கள்.
குவாரிக்காரர்கள் அவற்றையும்
க்ரஷ் செய்து ரோட்டுக்கு
ஜல்லியாக்கி விடுவார்கள்.

குழப்பத்தின் மேல் குழப்பம்.
வாக்கு போட்டு வாக்கு போட்டு
வாக்கு எண்ணி வாக்கு எண்ணி
...............
....................
இந்த உற்"சவங்களில்"
சவமாக ஆகிக்கொண்டிருப்பது
நம் ஜனநாயகம் மட்டுமே.





தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)



​திருப்புடைமருதூர் ஸ்ரீநாறும்பூநாதர் சித்திரக்கூடம்


—  முனைவர் க.சுபாஷிணி



          தமிழர் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் புராதனச் சின்னங்களில் ஆலயங்களில் காணப்படும் சுவர்ச்சித்திரங்களும் அடங்கும். இன்று நமக்குக் கிடைக்கின்ற தொழில்நுட்ப கருவிகள் இல்லாத கடந்த நூற்றாண்டுகளில் நடந்த செய்திகளையும் நிகழ்வுகளையும், புராணக் கற்பனைக் கதாப்பாத்திரங்களையும் ஆவணப்படுத்தும் முயற்சியாக ஓவியக்கலைகள் அமைந்தன. தமிழகத்தின் பல்வேறு கோயில்களிலும், மண்டபங்களிலும்,  பாறைகளிலும் சித்திரங்கள் இன்று கண்டுபிடிக்கப்படுகின்றன. இப்படி நாம் கண்டறியும் சித்திரங்கள், இன்று நம் மக்களாலேயே சிதைக்கப்படும் அவலம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.  இவ்வகைச் சித்திரங்கள் சிதைக்கப்படும் போது தமிழர் தம் வரலாற்றின் சில முக்கியப் பகுதிகளை நாம் அழிக்கின்றோம் என்ற புரிதல் சிறிதும் இல்லாமலேயே நாம் தொடர்ந்து புராதனச் சின்னங்களைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றோம்.

          திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் ஏறக்குறை 26கி.மீ தூரத்தில்  வீரவநல்லூர் என்ற ஊர் வருகின்றது. அவ்வூருக்கருகில் தாமிரபரணி  ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஒரு ஊர் திருப்புடைமருதூர்.



         கடனா நதி என்ற ஆறு  தாமிரபரணியில் சேரும் இடத்தில் இந்த திருப்புடைமருதூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள நாறும்பூசுவாமி கோயில் கோபுரத்தின் உள்ளே அமைந்துள்ள சித்திரக்கூடம் தமிழக ஓவியக் கலைக்கும் மரச்சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

          இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை கொண்டதாக அறியப்படும்  இக்கோயிலில் 14 கல்வெட்டுக்கள் உள்ளன.

          ஏறக்குறைய கி.பி.10ம் நூற்றாண்டு தொடங்கி 19ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுக்கள் இவை. கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளை விவரிக்கும் கல்வெட்டுக்களாகவே பெரும்பாலும் இவை அமைகின்றன. அவற்றுள் முதலாம் ராஜராஜனின் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் அடங்கும்.

          கி.பி.9ம் நூற்றாண்டு  தொடங்கி அறியப்படும் இக்கோயில்  சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் எனப் பல மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட கோயிலாக விளங்குகிறது. தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுத் தொடர்ந்து இக்கோயில் சிறப்புடன் திகழ்கின்றது.

          இக்கோயிலின் வாயிற்புரத்தில் 5 நிலைகளைக் கொண்ட கோபுரம்  உள்ளது. இந்த ஐந்து நிலைகளிலும் ஏறிச்செல்லப் படிகள் உள்ளன.  ஒவ்வொரு தளங்களின் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சித்திரவேலைப்பாடுகளாகும். 

          இச்சித்திரக் கூடத்தில் இடம்பெறும் சித்திரங்களுள் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைச் சிற்பங்கள் ஓவியங்களாக உள்ளன; தென் தமிழக வரலாற்றில் இடம்பெறும் தாமிரபரணி போர் பற்றிய விரிவான காட்சிகள் ஒரு தளத்தில் நிறைந்து காணப்படுகின்றன.

          இவை மட்டுமன்றி சிவபுராண கதைகள், விஷ்ணு புராணத்தில் வரும் சில கதைகள், திருவிளையாடற்புராணத்தில் வருகின்ற  கதைகள், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றோடு தலபுராணக் கதைகளும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன.

          இக்கோயில் கோபுரத்தின் இரண்டாவது தளம் தாமிரபரணிப்போரை காட்சிப் படுத்துவதாக அமைந்துள்ளது. நுட்பமான போர்க்காட்சிகள், ஈட்டி, வாள், வேல்கம்பு போன்ற போர்  கருவிகளுடன் வீரர்கள் போரிடும் காட்சி சித்திரங்களாக அமைந்திருக்கின்றன.  தென் தமிழகத்தின் துறைமுகப் பகுதிகளில் வந்திறங்கிய போர்த்துக்கீசிய வணிகர்கள் பற்றியும், அரேபிய வணிகர்கள் பற்றியும் சில  காட்சிகள் அமைந்திருக்கின்றன.  சில போர்க்காட்சிகளில் தமிழர்கள் மட்டுமன்றி போர்த்துக்கீசியர்களும் ஓவியத்தில் காட்டப்படுவது வியப்பளிக்கின்றது.

          கி.மு 14ம், 15ம் நூற்றாண்டுகளில் தென் தமிழகத்தின் கடற்கரை பகுதிகளின் வணிக ஆளுமையை அரேபிய வணிகர்கள் தம் வசம் வைத்திருந்தனர்.  அரேபிய வணிகர்கள் கப்பலில் பயணித்து குதிரைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் குதிரை வணிகத்தைக் காட்டும் காட்சி ஒன்றும் இதில் இடம்பெறுகின்றது. கப்பலில் குதிரைகள் அரேபியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு புன்னைக்காயல் துறைமுகத்தில் இறக்கப்படுவதையும் தமிழ் வணிகர்கள் துறைமுகத்தில் கடல் வணிகத்திற்காகக் கப்பலில் பயணம் செல்வதையும் ஒரு ஓவியம் மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறது.

          இக்கோபுரத்தின் ஐந்தாவது தளம் முழுமைக்கும் கடவுள் உருவங்கள் ஓவியங்களாகத்  தீட்டப்பட்டுள்ளன. மூன்றாம் நான்காம் தளங்களில் புராணக் காட்சிகள் கண்களைக் கவரும் வண்ணம் சுவர்களை முழுமையாக அலங்கரிக்கின்றன. அவற்றுள் கருவூர் தேவர் இக்கோயிலுக்கு வந்து வழிபட வரும் ஒரு காட்சி, சைவர்கள் சமணர்களை வாதில் வெல்லும் காட்சி,  சமணர் கழுவேற்றம் பற்றிய காட்சி , சமய வாதங்களை வெளிப்படுத்தும் அனல்வாதம் -புனல் வாதக் காட்சி போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.



          இவ்வோவியங்கள் தாவரங்களிலிருந்தும் மூலிகைச் செடிகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பது இவற்றின் தனிச் சிறப்பு.

          ஒவ்வொரு தளங்களிலும் வெளிச்சம் புக வாய்ப்பில்லாத நிலையிலும் மிகத் துல்லியமாக நுணுக்கமாக ஓவியங்களையும் சிற்பங்களையும் உருவாக்கிய இக்கலைஞர்களின் திறனை என்னவென்று புகழ்வது?

          உலகின் பண்டைய நாகரிகங்களில், குகைச்சித்திரங்கள் தொடங்கி, கோயில் சித்திரங்கள் வரை தமது பண்பாட்டைப் பதிந்து வைக்கக் கருவியாக இக்கலையைப் பயன்படுத்தினர் பண்டைய மக்கள். கிரேக்கர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், ரோமானியர்களை இவ்வகையில் சிறப்பித்துச் சொல்லலாம். அந்த வரிசையில் தமிழர்  பண்பாட்டின்  ஆவணப்பதிப்பாக நமக்கு இவ்வகைச் சித்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

          ஒரு சமூகத்தின் சமகால நிலையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மக்களின் தோற்றமும் அவர்கள் அணிந்திருக்கும்  ஆடை அணிகலன்களும் அமைகின்றன, இதனால் ஓவியங்களில் இடம்பெறும் மனிதர்களின் தோற்றம், அரசு அதிகாரிகள், படை அதிகாரிகள், வணிகர்கள், குடிமக்கள், சமயவாதிகள்  ஆகியோரின் ஆடைகள் கவனிப்பிற்கு உரியனவாக அமைகின்றன.

          இக்கோயிலின் சுவர்ச்சித்திரங்களை மிக ஆழமாக ஆராய்ந்து புகைப்படங்களுடன் ஒரு நூலாக வெளியிட்டவர் பேராசிரியர் சா.பாலுசாமி. இக்கோயிலின் 2ம் தளத்தில் அமைந்திருக்கும் தாமிரபரணிப் போரைப் பற்றி குறிப்பிடுகையில்  “இந்தத் தாமிரபரணி போர், 1532-ம் ஆண்டு ஆரல்வாய்மொழிக் கணவாய்க்கு அருகே திருவிதாங்கூர் அரசர் பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மாவுக்கும், விஜயநகர அரசர் அச்சுத தேவராயருக்கும் இடையே நடைபெற்ற போர் என்றும்,   அந்தக் கால அரசாங்க நடவடிக்கைகளை இந்தச் சுவரோவியங்கள் நுட்பமாக வெளிப்படுத்துகின்றன என்பதோடு  கி.பி 16-ம் நூற்றாண்டின் சமய, சமூக, அரசியல் வரலாற்றுக்குத் திருப்புடைமருதூர் ஓவியங்கள் இன்றளவும் முக்கியமான சாட்சிகளாக விளங்குகின்றன”  என்றும் குறிப்பிடுகின்றார். இக்கோயிலின் ஓவியங்கள் அனைத்தும் விஜயநகர ஓவிய பாணியையும், நாயக்கர்களின் ஓவிய பாணியையும் இணைத்து ‘வேணாட்டுப் பாணி’ என்று அழைக்கப்படும் புதிய பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.

          தமிழக கோயில்களில் உள்ள சுவர்ச்சித்திரங்கள் பெருமளவில் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் சிலரால் சிதைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. 

          இத்தனைச் சிறப்பு வாய்ந்த இச்சுவர் சித்திரங்களின் மீது தங்கள் பெயரையும் தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து இவற்றைச் சிதைப்பவர்கள் அயல்நாட்டுக்காரர்கள் அல்ல, மாறாக நமது தமிழகத்திலேயே வாழும் மக்கள் தான். எதற்காக இவர்கள் இப்படிச் செய்கின்றனர்?

          நம் சூழலில் இன்று வரை புராதனச் சின்னங்களையும் கோயில் கலைகளையும் மதித்துப் போற்றி பாதுகாக்கும் சிந்தனை பொது மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது என்பது தான் உண்மை. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் உள்ள கடமை அல்ல. மாறாக நம் அனைவருக்குமே இருக்கும் கடமை என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் உணர வேண்டும்.

          ஒரு கலைச்சிற்பத்தைக் கீறி வைக்கும் போதும், ஒரு ஓவியத்தின் மீது எழுதி அதனைச் சிதைக்கும் போதும், நமது மூதாதையர் விட்டுச் சென்ற புராதன கலை படைப்புக்களை அழிக்கின்றோம் என்ற சிந்தனை எழ வேண்டும். ஒரு சிற்பத்தின் மீது எழுதும் போது நமது தமிழினத்தின் வரலாற்றைச் சிதைக்கின்றோம் என்ற எண்ணம் தோன்ற வேண்டும். இப்படி சிந்தனை மாற்றம் நிகழும் போது நமது கவின் கலைகளும் கோயிற்கலைகளும் நிச்சயம் பாதுகாக்கப்படும்.

          கோயில் என்பது பக்தர்கள் வந்து வரம் கேட்டு வேண்டிக் கொண்டு, வந்து வழிபட்டு விட்டு குப்பைகளைப் போட்டு விட்டுச் செல்லும் இடமல்ல. கோயில் என்பது கலைகளின் இருப்பிடம். கோயில்கள் பண்பாட்டுத் தளத்தின் மிக முக்கிய சான்றுகள். கோயிலையும் அவை கொண்டிருக்கும் பண்பாட்டுக் கூறுகளையும் சேதப்படுத்தாமல் அவற்றைப் பாதுகாப்பதும் நமது அடுத்த தலைமுறைக்கு அதன் சிறப்பு குறையாமல் விட்டுச் செல்வதும் தமிழர் நம் ஒவ்வொருவரது கடமையுமாகும்!


தொடர்பு: முனைவர் க.சுபாஷிணி (ksubashini@gmail.com)