Showing posts with label மா. மாரிராஜன். Show all posts
Showing posts with label மா. மாரிராஜன். Show all posts

Saturday, September 18, 2021

நூல் அறிமுகம்: தமிழா? சம்ஸ்கிருதமா?

-- மா. மாரிராஜன்

இரண்டு மொழிகளின் ஒப்பீடு, பழமை, சிறப்பு... இது குறித்த மொழியியல் ஆய்வு  நூல்கள் குறித்து ஒரு தேடல்.  புராணம் மற்றும் இலக்கியம் மேற்கோள் இல்லாமல் சுயசார்பின்றி வரலாறு தொல்லியல்த் தரவுகளுடன் கூடிய நூல் மற்றும் கட்டுரைகளைத் தேடிய ஒரு தேடலில்  நண்பரிடம் விசாரித்த போது... "தமிழா ? சம்ஸ்கிருதமா?"   நூலை வாசியுங்கள் என்றார். கரச என்று அறியப்படும் பேராசிரியர் முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் அவர்கள் எழுதிய நூல். 

krs book.JPG
நூல் விவரம்: 
தமிழா? சம்ஸ்கிருதமா?
ஆசிரியர்: முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS)
விலை: ₹180
தடாகம் வெளியீடு, முதற் பதிப்பு, ஜனவரி  2021
ISBN: 97893888627191

தமிழா? சம்ஸ்கிருதமா? நூலின் தலைப்பே கல்வெட்டு வடிவ எழுத்துக்களில் அமைந்து இருப்பது  முதல் ஈர்ப்பு.  நான் விரும்பும் இலக்கியச் செல்வர் பேரா.வீ.அரசு அவர்களின் அணிந்துரை அளித்திருப்பது அடுத்த ஈர்ப்பு.  பொதுவாக மொழிக்கலப்பு என்பது இயல்பான நிகழ்வு. ஆனால்,  சம்ஸ்கிருத கலப்பு என்பது திட்டமிட்ட சதிச்செயல் என்ற அணிந்துரையே நூலின் உள்ளடக்கத்தை எடுத்துரைக்கிறது.

அடுத்து..
கரச அவர்கள் நுழையும் முன் ஒரு வேண்டுகோள் மற்றோர் ஈர்ப்பு. 
"நுழையும் முன்.. வேண்டுகோள்!
இந்த நூலுக்குள் நுழையும் முன், ஓர் அன்பு வேண்டுகோள்:
 - வாசிக்கும் போது, உங்களின் தனிப்பட்ட மதப் பிடித்தம்  அரசியல் பிடித்தம் எஃதாயினும், சற்றே மறந்துவிடுங்கள் ! 
 - தற்பிடித்தம் கடந்து, தமிழைத் தமிழாக மட்டுமே அணுகிக் காணுங்கள் ! 
 
தமிழ்மொழியின் தகைமைகளுள் தலையாவது என்னவென்றால், வேறு எந்த இனத்தின் மொழிக்குள்ளும் தன்னை வல்லடியாகத்  திணித்துச் சிதைக்காத அறம் மிக்க மொழி, இத்தமிழ்மொழி!

அதே அறத்தின் சீர்மையை நீங்களும் கைக்கொண்டு, உங்களின் தற்பிடித்தம் கடந்து வாசிக்கவும். உங்களின் பிடித்தம்: இறைவனாக  இருக்கட்டும் (அல்லது) உண்மையாக இருக்கட்டும்! 
உண்மைத் தேடல்தானே இறைத் தேடல்?
 - மனம் ஆரத் தமிழ் உண்மை காண்போம்! 
 - மனம் ஆறத் தமிழ் உண்மை காண்போம்! 
 - மனம் மாறத் தமிழ் உண்மை காண்போம்!" 

"தற்பிடித்தம் கடந்து, தமிழைத் தமிழாக மட்டும் அணுகிக் காணுங்கள்" 
அடடா!!! சுயசார்பு என்று அடிக்கடி நான் பயன்படுத்தும் ஒரு சொல், இங்கே தற்பிடித்தம் என்று ஆரம்பமாகிறதே. நாம் தேடிய நூல் இதுதானோ....?

"நீவிர், தமிழ் போல்,  வாழ்வாங்கு வாழ்க!  வாருங்கள் நூலுக்குள் புகுவோம்!... "

என அழைக்கிறார், நெகிழ்ச்சியுடன் நூலுக்குள் புகுந்தேன்..

முதல் பகுதியில், 
"தமிழ் மொழி, வடமொழியைவிடப் பழமையானதா? ஆதாரம் உள்ளதா?

ஆம்; என விளக்கும் விரிவான விளக்கவுரைகள் மற்றும் அறிவியல் தொல்லியல்த் தரவுகள்.  என்னிடம் இருக்கும் ஐயங்களுக்குத்  தெளிவான விளக்கம் தந்தன. 

பிராகிருதம்=பிர + கிருதம் - Raw form
மேம்படாத வடிவம்..

சம்ஸ்கிருதம் = சம்ஸ் + கிருதம் - Refined form
மேம்பட்ட வடிவம்..

மேம்படாத கரடுமுரடான மொழிதானே முதலில் தோன்றியிருக்கும். அதாவது, பிராக்ருதத்தின் "தம்மம்" என்பதுதான் சம்ஸ்கிருதத்தில் "தர்மம்".

புரிய ஆரம்பித்தது.  சம்ஸ்கிருதத்தின் மூலம் தெரிய வருகிறது. கரடுமுரடான தமிழி எழுத்துக்களும், மேம்பட்ட தமிழ் எழுத்துக்களும் தமிழே. 
தோற்றமும் தமிழே.. வளர்ச்சியும் தமிழே..   வேறு எங்கிருந்தும் எதையும் பெறாமல் சுயம்பு மொழி இது.

நிறைய விளக்கங்கள், அறிவியல் ரீதியான ஆய்வுகள் என்று ஒவ்வொரு மொழியின் வேர்ச்சொல்லுக்குள் புகுந்து அடித்து ஆடுகிறார் ஆசிரியர். ஆசிரியருக்குத்  தமிழ், சம்ஸ்கிருதம் உட்பட 12 மொழி தெரியுமாம்!!!!!!!

முழுமையாக வாசித்ததில் ஒரு தெளிவு கிடைத்தது. சம்ஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமையானதா? என்ற கேள்விக்கு; ஆம், என்ற பதிலை 
25 பக்கத்தரவுகள் மூலம் வரலாறு அறிவியல், தொல்லியல் ரீதியாக ஆதாரத்துடன் நிறுவுகிறார்.

அடுத்த பகுதி..
"எவருடைய காலத்தில் தமிழ், பிறமொழிக் கலப்பு இல்லாமல் இருந்தது?"

தெளிவான, சரியான ஆய்வியல் வாதம் வைக்கப்படுகிறது. மொத்தத்தில் நான் தேடிய நூல் இதுதான் என்று கூறமுடியாது.  நான் தேடிய நூல்களுள் இதுவும் ஒன்று என்று நிச்சயமாகக் கூறலாம்.


---




Friday, September 10, 2021

கல்கி ஒரு சகாப்தம்

-- மா. மாரிராஜன்
 

செப்டம்பர் 9, 1899 கல்கி அவர்களின் பிறந்ததினம். அவரது 122 ஆவது பிறந்த நாள் அன்று அவரைப்பற்றிய ஒரு சில நினைவலைகள்...



கல்கியின் சாதனைதான்  என்ன? அவர் ஓர் இலக்கியவாதியா? நூறாண்டு கடந்தும் அவர் கொண்டாடப்படுவதன் மந்திரம்தான் என்ன? சரித்திரத்தின் பெருமையை அடுப்பறை பெண்களும் எட்டிப்பார்க்கும் நிலையை உருவாக்கியவர் கல்கி என்றார் அறிஞர் அண்ணா. உண்மைதான்; பெரும் ஆய்வாளர்கள் மட்டுமே வலம் வந்து கொண்டிருந்த வரலாற்று உலகின் வாசலை வெகு சாமானியனுக்காகத் திறந்து விட்டவர் கல்கி.

1950 ..  கல்கி வார இதழில் பொன்னியின் செல்வன் தொடர் ஆரம்பம். ஓர் அத்தியாயத்தில் இவ்வாறு கூறுவார்..
பிற்காலத்தில் கோப்பரகேசரி என்னும் பட்டத்துடன் சோழ சிங்காதனம் ஏறப்போகும் உத்தமச்சோழரை நேயர்களுக்கு அறிமுகம் செய்கிறோம். இந்த கோப்பரகேசரி என்னும் வார்த்தையின் பரிச்சயம் நீலகண்ட சாஸ்திரி போன்ற ஆய்வாளர்கள் மட்டுமே அறிந்த ஒன்று.  ஆனால் பொன்னியின் செல்வன் வந்தபிறகு,  சரித்திரம் சாதாரண மக்களுக்கும் சொந்தமானது. 

அன்றைய காலத்தில் நந்தினி கொண்டை மிகவும் வைரலாம். இன்றைக்கும் பிரபலப் பதிப்பகமான வானதி பதிப்பகம் பொன்னியின் செல்வன் நாயகி வானதி ஏற்படுத்திய தாக்கம்தான். 

கல்கி 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி மயிலாடுதுறை அருகே புத்தமங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. பெற்றோர் இராமசாமி - தையல் நாயகி. இவரது மனைவி பெயர் கல்யாணி. தன் பெயரை மனைவியின் பெயருடன் இணைத்து கல்கி ஆனார்.

கல்கி அவர்கள் எழுதியவை 9 நாவல்கள், 9 நாடகங்கள், 10 பெருங்கதைகள், 119 சிறுகதைகள், 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள். இவர் எழுதிய 'அலை ஓசை' நாவல் சாகித்திய அகாடமி பரிசு பெற்றது. தனது பள்ளிக்காலம் முதலே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1927 ல் நவசக்தி பத்திரிக்கையின் துணை ஆசிரியர். பின்பு 1930 ல் ஆனந்த விகடனில் சேர்ந்தார்.  கல்கி என்ற பெயரில் இவரது எழுதிய முதல் படைப்பு  "ஏட்டிக்குப் போட்டி".

தமிழ்மகன் - குகன் - அகத்தியன் - பிராமண இளைஞன் - விவசாயி - பெற்றோர் - எமன் - லாங்கூலன் இவை யாவும்  இவரது புனைபெயர்கள். தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகள் பிரபலமாக இருந்த அக்காலத்தில் தமிழ் இசையை முன்னெடுத்தவர் கல்கி. எம். எஸ். சுப்புலட்சுமியுடன்  இணைந்து இதற்கான பல நிகழ்வுகளை முன்னெடுத்தார். எம். எஸ். அவர்கள் நடிப்பில் உருவான மீரா திரைப்படத்திற்குக் கதைவசனம் எழுதி, இவர் எழுதிய காற்றினிலே வரும் கீதம் என்னும் பாடல் இன்றும் பிரபலம்.

பிறகு, 1941 ல் ஆனந்த விகடனில் இருந்து விலகல். எம்.எஸ் அவர்கள் நிதியுதவி செய்ய, சதாசிவம் அவர்கள் முன்னெடுக்க, ரசிகமணி டி.கே.சிதம்பர முதலியார் அவர்கள் உற்சாகமூட்ட, 1941 ல் கல்கி இதழை ஆரம்பித்தார் கல்கி. 
1941 அக்டோபர் 16 ம் நாள் பார்த்திபன் கனவு என்னும் வரலாற்று நாவல் கல்கியில் தொடராக ஆரம்பம் ஆனது. 1943 பிப்ரவரி மாதம் நிறைவுற்றது.  ஒரு முறை கல்கியும், ரசிகமணி டி.கே.சி.யும் மாமல்லபுரக் கடற்கரையில் அமர்ந்துள்ளனர். அப்போது கல்கி இவ்வாறு கூறுகிறார். விதியின் எழுத்தை கிழிச்சாச்சு, விட்டகுறை வந்து தொட்டாச்சு என்ற புகழ் பெற்ற கவிதையைச் சொல்லி சிற்பிகளின் பேச்சுக்குரலுடன் அவர்களின்
உளியின் ஓசையும் எனக்குக் கேட்கிறது. ஒவ்வொரு சிற்பமும் உயிர் பெற்று எழுகிறது. பல்லவர்களை எழுத வேண்டும் என்றாராம்.

1944 - ஜனவரி 1 ல் சிவகாமியின் சபதம் தொடர் ஆரம்பமானது.  1946 ஜூன் 30 ல் முடிந்தது.  மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 70,000 பிரதிகள் என்னும் மிகப்பெரும் இலக்கை கல்கி இதழ் அடைந்தது. முற்றும் என கொட்டை எழுத்தில் போட்டேன்.  என் 10 வருட பாரம் இறங்கியது. என்றார் கல்கி. ஏறக்குறைய 10 ஆண்டுக்காலம் சிவகாமியின் சபதத்தை பாரமாகச்  சுமந்துள்ளார்.

1950 - அக்டோபர் 22 கல்கி வார இதழில் ஓர் எளிமையான விளம்பரம். ராஜராஜ சோழனின் இளம் பிராயத்தில் சோழநாட்டில் நடந்த சரித்திரக் கதை. அடுத்தவாரம் முதல் பொன்னியின் செல்வன். 1950 - அக்டோபர் 29 அன்று பொன்னியின் செல்வன் ஆரம்பம் ஆனது. சோழ வரலாறு என்னும் மிகப்பெரும் சரித்திர வாயில் சாமானியனுக்காகத் திறந்தது. வாசிப்போனின் கரங்களைப் பிடித்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பின்னோக்கி  அழைத்துச் சென்று வீரநாரயண ஏரிக்கரையில் நம்மை இறக்கி விடுகிறார்.




அங்கேதான் நமது நண்பன் வந்தியத்தேவனின் அறிமுகம் கிடைக்கிறது. அவனுடன் சேர்ந்தே நமது பயணமும் துவங்குகிறது. வாசிப்பது வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பே என்னும் மனநிலை எளிதாகவே
நம்மை ஆக்கிரமிக்கிறது. அன்று ஆரம்பித்த பொன்னியின் செல்வனின் தாக்கம் 70 ஆண்டுகள் கடந்து இன்றும் தொடர்கிறது. 1950 ல் அறிமுகமான  கனவு நாயகன் வந்தியத்தேவன் இன்றும் அதே மிடுக்கோடு இருக்கும் அதிசயம்! எது வரலாறு? எது புனைவு?  என்று இன்றும் தேடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம்? பொன்னியின் செல்வனை நேசிப்போரும், விமர்சிப்போரும், இருவருக்குமான விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. பொன்னியின் செல்வன் பாத்திரங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டும் வழக்கம் இன்றும் உண்டு. 

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு என்னதான் காரணம்?  பல நிகழ்வுகள் உள்ளன. சரியான வரலாற்று ஆதாரங்களிலிருந்து சம்பவங்களை எடுத்தார் கல்கி என்கிறார் வை.கோ. கடுந்தமிழ் தவிர்த்து எளிய பழகு தமிழ் மூலம் வாசகர்களைக் கவர்ந்தார் என்கிறார் கல்கியின் பொறுப்பாசிரியர் ஆர். வெங்கடேஷ். என் தாத்தாவின் அளப்பரிய அர்ப்பணிப்பே பொன்னியின் செல்வன் என்கிறார் கல்கியின் பேத்தி லட்சுமி நடராஜன்.



கல்கியின் ஆஸ்தான ஓவியர் மணியம்.  இக்காலத்தில் ஓவியர் மணியம் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பொன்னியின் செல்வன் பிறந்த காலத்தில் மணியனுக்கு செல்வனும் பிறந்தான் என்றார் கல்கி. மணியன் செல்வனும் மிகச்சிறந்த ஓவியர். கல்கி வசித்த அடையாறு வீட்டில் இரவு நேரத்தில் எழுதுவார். ஓவியர் மணியம் அவர்களுடன் ஆலோசித்து அவ்வார ஓவியங்களை வரையச் செய்வார். ஒவ்வொரு வாரமும் இரண்டு அத்தியாயங்கள்,  16 பக்கங்கள், ஐந்து ஓவியங்கள் என்று வகைப்படுத்துவார்.  கோட்டோவியம்,  நீர் வண்ண ஓவியம் என்று பலவாறு அமர்க்களப்படுத்தினார் மணியம். ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புக்கேற்றவாறு ஓர் ஓவியம் இருக்கும்.  பருந்தும் புறாவும் என தலைப்பு, பருந்து புறா ஓவியம் இருக்கும். ஐயனார் கோவில் என்று தலைப்பு, ஐயனார் கோவில் பற்றிய ஓவியம் இருக்கும்.  கல்கியின் வசீகர எழுத்து, எளிய நடை, மெல்லிய உணர்வு, இழையோடும் நகைச்சுவை இப்படி எல்லாமே சரியாக அமைந்ததால் பொன்னியின்  செல்வன் சிகரம் தொட்டது. 1950 அக்டோபர் 29 ல் தொடங்கி 1954 மே 16 ல் பொன்னியின் செல்வன் நிறைவு.  என்னாது? முடிஞ்சிடுச்சா? என்றுதான் ஒட்டுமொத்தமாய் குரல்கள் எழும்பின. அது என்னாச்சு?  உத்மச்சோழருக்கு பட்டம் சூட்டிய பிறகு அருள்மொழி என்னவானார்? வந்தியத்தேவன் எங்கே சென்றார்? இதுபோன்ற பல கேள்விகள் எழுந்தன (இன்றளவும் இக் கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கப் பெறவில்லை).   வெகு சாமர்த்தியமாய் இக்கேள்விகளை எதிர் கொண்டார் கல்கி. பொன்னியின் செல்வன் முடிவுரையில் பதிலும் கூறினார்.

இதன் பிறகு பொன்னியின் செல்வன் ஐந்து முறை கல்கி வார இதழில் ஐந்துமுறை தொடராக வந்தது.
1950 - 1954 வரை மணியம் ஓவியம்
1968 - 1972 வரை வினு ஓவியம்
1978 - 1982 வரை மணியம் ஓவியம்
1998 - 2002 வரை பத்மவாசன் ஓவியம்
2014  முதல் வேதா ஓவியம்
1954 டிசம்பர் 5ல் பொன்னியின் செல்வன் புத்தகமாய் வெளிவந்தது. 1999 ல் கல்கியின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. பொன்னியின் செல்வன் விஸ்வரூபம் எடுத்தது. பல பதிப்பகங்கள் போட்டியிட்டு பொன்னியின் செல்வனைப் பதிப்பித்தன. எந்தப் புத்தகக் கண்காட்சியிலும்  இடம் பெற்று விற்றுத்தீர்வதே இதற்குக் கிடைத்த மிகப்பெரும் அங்கிகாரம். 

கல்கி அவர்கள் மிகச்சிறந்த விடுதலைப்போராட்ட வீரராய் இருந்துள்ளார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். இவர் எழுதிய தியாகபூமி நாவல் திரைப்படமாய் வெளிவந்தது. அப்படத்தில் தேசபக்திப்பாடல்கள் மிகுதியாக இருந்ததால் அப்படத்தைத்  தடைசெய்யலாம் எனத் தகவல் கிடைத்தது.  இயக்குநர் சுப்ரமணியமும் எஸ்.எஸ்.வாசனும் அப்படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காட்டினார்கள். தொடர்ந்து அப்படம் திரையிடப்பட்டது.

இந்தியா விடுதலைப்பெற்றது. ஆகஸ்டு 17 வரவேண்டிய கல்கி இதழ், ஆகஸ்ட் 15 ல் வெளிவந்தது கார்ட்டூன் புகழ் பெற்ற ஒன்று. கல்கி மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்.. மெல்லிய ஹாஸ்யம் அவர் எழுத்துக்களில் இழையோடும். வர வர என் கையெழுத்து மிக மோசமாய் உள்ளது. கம்போசிடருக்கு புரிந்தால் சரி என்று எழுதினார். அவரது உடல்நிலை மிகுந்த மோசமடைந்தது. மருத்துவரின் பரிசோதனை அறையிலிருந்து வெளிவருகிறார் எழுத்தாளர் பகீரதன். என்னாயிற்று என்று கல்கியிடம் கேட்க, "ஒன்றுமில்லை" என்கிறார் டாக்டர். சந்தோசம்தானே என்றார் பகீரதன்.   சிரித்தபடி கல்கி கூறுகிறார், "ஏதாவது இருந்தால் நான் குணமாகலாம், என்னிடம்தான் ஒன்றுமில்லையே" என்று.  

டிசம்பர் 5, 1954.. கல்கியின் மறைவு. மீ.ப.சோமு அவர்களின் தலையங்கத்தோடு அவ்வார கல்கி இதழ். இதழ் முழுவதும் கல்கிக்குப் புகழஞ்சலி செலுத்தும் கவிதைகள், கட்டுரைகள்.
புத்தேனரி ரா.சுப்ரமணியன் இவ்வாறு எழுதுகிறார்..
" மாய்ந்ததே வசன மேதை!
  மறைந்ததே ஹாஸ்ய ஜோதி!
காய்ந்ததே தமிழ்ப்பூஞ் சோலை!
  கல்கியின் எழுது கோலே
ஓய்ந்ததே! மக்கள் உள்ளம் 
  உடைந்ததே, கண்ணீர் வெள்ளம்
பாய்ந்ததே கல்கி வைத்த
  பயிரெலாம் செழிக்கு மாறே."

கல்கி ஒரு சகாப்தம்! நேற்றும்.. இன்றும்.. நாளையும்..


---

Friday, September 3, 2021

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

-- மா.மாரிராஜன்

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு ... 
ஏறக்குறைய ... 

1887 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்த கல்வெட்டுகள் படியெடுக்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கினார்கள்.  இவர்களால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் முதலில் ஊட்டியிலும், பிறகு சென்னையிலும் பாதுகாக்கப்பட்டு,  இறுதியில் மைசூர் தொல்லியல்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது.  சுமார் 60000 கல்வெட்டுப் படிகளில், மிகக் குறைந்த அளவே வெளியிடப்பட்டது.  மீதமுள்ள தமிழ் கல்வெட்டுகளை வெளியிடவேண்டும் என்பது பல வருடக் கோரிக்கை... 

இந்தச் சூழலில் மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுப்படிகள் போதிய பராமரிப்பின்றி  அழிந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டும் எழும்பியது.  மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான முதல் முயற்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டது. 
(பார்க்க:  https://books.google.co.in/books?id=rUFWDwAAQBAJ&lpg=PP1&pg=PA20#v=onepage&q&f=false  கல்வெட்டில் அரசியல்) 
தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அறக்கட்டளையின் நிறுவனர் சுபாஷிணி;  செயலாளர்  தேமொழி; வழக்கறிஞர் கௌதமசன்னா; வழக்கறிஞர் காந்தி பாலசுப்ரமணியன் ஆகிய குழுவினர் கூட்டத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டது.  உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.என். ஆர். இளங்கோ அவர்கள் எந்தக் கட்டணமும் பெறாமல் ஆஜராக முன்வந்தார்.

திரு.கௌதமசன்னா மற்றும்  திரு.பி.மணிமாறன் இருவரையும் மனுதாராகக் கொண்டு   வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு எண்: W.p.(md) no 20678 / 2019.  
இவ்வழக்கில் வாதிட்டவர் மூத்த  வழக்கறிஞர் திரு.என். ஆர். இளங்கோ

இதே கோரிக்கையைக் கொண்டு மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தவர் திரு. இளஞ்செழியன் (17399 / 2020)
வாதிட்டவர்  மூத்த  வழக்கறிஞர் திரு.சித்தார்த்த விஷ்ணு.
தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்  திரு.வீரகதிரவன் மற்றும் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
தொல்லியல் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் திருமதி. விக்டோரியா கௌரி ஆஜரானார்.

மனுதாரர்கள் இருவர் சார்பாக நிறைவு வாதத்தை மூத்த வழக்கறிஞர் திரு.என். ஆர். இளங்கோ எடுத்துரைத்தார்.  ஏறக்குறைய 266 பக்க வரலாற்றுத் தரவுகளுடன் கூடிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வாதம் செய்தார்  திரு.என். ஆர். இளங்கோ.  மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகம் கொண்டுவருவதன் அவசியத்தை மிகத் தெளிவாக சான்றுகளுடன் எடுத்துரைத்தார். வழக்கிற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழக்கறிஞர் திரு.காந்தி பாலசுப்ரமணியன் அவர்கள் சேகரித்துக் கொடுத்தார். 
வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை  மா.மாரிராஜன், திருச்சி பார்த்தி, ஆறகழூர் வெங்கடேசன், பத்திரிகையாளர் சஃபிமுன்னா,  வழக்கறிஞர்கள் அருண் மற்றும் திலக்குமார் ஆகியோர் கொடுத்தனர்.

தீர்ப்பும் சாதகமாகவே வந்தது.  மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுப்படிகள் அனைத்தையும் சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை நீதியரசர்கள் திரு.கிருபாகரன் மற்றும் திரு.துரைச்சாமி அமர்வு வழங்கியது.

நீதிமன்றத் தீர்ப்பில்:
தமிழ் மொழியின் சிறப்பு, பழமை, தமிழ் வழிக் கல்வியின் அவசியம், பெற்றோர்களுக்கு அறிவுரை, தொல்லியல் துறையின் குளறுபடி என அனைத்தையும் மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் முழு விவரம், எளிய தமிழில்,  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே  என்று ஆரம்பித்தனர் நீதியரசர்கள்...

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தக்குடி; 
தமிழ் மொழி இளமையானது மற்றும் மிகப்பழமையானது. பழங்காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை தமிழ் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. உலகத்தின் முதல் மொழி என்று கூற இயலாது என்றாலும் உலகத்தின் மிகப்பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என நிச்சயமாகக் கூறலாம். தமிழ் மொழியானது கி.மு. 409 - 508 வரை காலக்கணிப்பை உறுதி செய்து அறிவியல் பூர்வமாக கரிமப்பகுப்பாய்வு மூலம் கீழடி உறுதி செய்தது.  இந்தியாவின் மிகப்பழமையான மொழியாக மௌரியப் பேரரசர் அசோகர் கால பிராகிருத மொழி எழுத்தே கி.மு. 268 -232 என்று இதுவரை நம்பப்பட்டது. ஆனால், தமிழ் மொழி பிராகிருதத்தைக் காட்டிலும் பழமையானது என்று நிறுவப்பட்டது.

இந்நீதிமன்றம் 22.03.2021 அன்று ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியபோது கொடுத்த மேற்கோளை மீண்டும் நினைவுகூருகிறோம். "தமிழ் மொழி பழமையானது. சமஸ்கிருதத்தை விடப் பழமையானது. என்னால் வணக்கம் மட்டுமே தமிழில் சொல்லமுடிகிறது. இதற்கு மேல் செல்லமுடியாதது வருத்தம் அளிக்கிறது" இவ்வாறாகப் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டார். பிப்ரவரி 2018 இல் டெல்லியில் நடந்த மாணவர்கள் விழாவில் குறிப்பிட்டார். இது மோடி அவர்களின் கருத்து மட்டுமல்ல. உலக மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தும் ஆகும்.

2500 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் பழமையான மொழியாகும். அசோகரின் பிராகிருதத்தை முந்திச் சென்று, இந்தியாவின் பழமையான மொழி தமிழ் ஆகும். கீழடி எழுத்துக்கள் தமிழின் பழமையை மட்டுமல்ல, பழங்காலந்தொட்டே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்றும் கூறுகிறது.  2600 ஆண்டுகளாக தமிழ் மொழி பேசப்பட்டும் எழுதப்பட்டும் தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை இன்றைய மாணவர் சமுதாயம் புறக்கணித்து ஆங்கில வழியை நாடுவதும், இதற்குப்  பெற்றோர் ஆதரவு இருப்பதும் எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.  இதே போல் தாய்மொழி புறக்கணிப்பு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

இந்தியாவில் கண்டறியப்பட்டக் கல்வெட்டுகளில் மிகப்பழமையானதாக தமிழ் கல்வெட்டுகளே எனத்தெரிகிறது. தொல்லியல் துறை அளவீட்டின்படி அதிக எண்ணிக்கையில் இருப்பது தமிழ் கல்வெட்டுகளே என்பதும் உறுதியாகிறது.  இக்கல்வெட்டுகள் அக்கால மக்களின் வரலாறு, நிர்வாகம், வாழ்வியல், வணிகம், போன்ற தகவல்களைத் தருகிறது. கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் வரலாற்று மூலங்களாகும். இந்த தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மைப்படிகள் பாதுகாப்பு குறித்தே இவ்வழக்குத் தொடரப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள கல்வெட்டுகள் ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டன. காடு, மலை என்று அலைந்து திரிந்த  அவர்கள் மிகக் கடினமான சூழலில் இக்கல்வெட்டுகளைக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்தார்கள். இப்பதிவுகள் அனைத்தும் மைசூரில் உள்ள The Archaeological Survey of India (ASI) அலுவலகத்தில் வைக்கப்பட்டன. மைசூரில் உள்ள கல்வெட்டுப்படிகளில் குறிப்பாக தமிழ் கல்வெட்டுகள் சரியாக பராமரிப்பின்றி இருப்பதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். கல்வெட்டுகள் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் அச்சப்படுகிறார். Damaged , Destroyed and found to be Missing. இதற்குத் தீர்வு கேட்டே இவ்வழக்குகள்  தொடரப்பட்டுள்ளது.
Petition (md) no 20768 of 2019 மற்றும் Md no 17399 Of 2020.

கல்வெட்டுகளை மைசூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்து பாதுகாத்து மின்னாக்கம் செய்ய வேண்டும். இதற்கு போதிய கல்வெட்டு ஆய்வாளர்களை ASI பணி நியமனம் செய்யவேண்டும்.  என்பது மனுதாரர் கோரிக்கை. எதிர் தரப்பில் தொல்லியல் துறை தாக்கல் செய்த  எதிர் - பிரமாணப் பத்திரம் (Counter - Affidavit) மூலம் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கையே அதிகம் என்று தெரிகிறது. ஆனால் இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கையை தொல்லியல்துறை துல்லியமாக தரவில்லை. 

21.02.2018 இல்..
தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 38000.
சமஸ்கிருதக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 11000.
என்ற விவரத்தைக் கொடுத்தது.

ஆனால்; 
21.12.2020 இல்..  
தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 28276.
சமஸ்கிருதக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 17001.
என்ற விவரத்தைக் கொடுத்தது.

இது பேரதிர்ச்சியாக உள்ளது. தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறைந்தது.?  

14.07.2021 இல் டெல்லியில் உள்ள இந்தியத் தொல்லியல்துறை கலாச்சார அமைச்சகம் கொடுத்த அறிக்கையின்படி கல்வெட்டுகளின் எண்ணிக்கை தோராயமாக 74000. RTI கொடுத்த 38000 தமிழ் கல்வெட்டுகளில்..
28, 276 என்று ஏன் குறைத்துக் காட்டப்பட்டது?  அதேபோல் 11000 சமஸ்கிருதக் கல்வெட்டுகள் எப்படி 17001 ஆக அதிகரிக்கப்பட்டது? தொல்லியல்துறை தொடர்ந்து முரண்பாடான (Contradictory) தகவல்களையே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 

தமிழ் கல்வெட்டுகள் மைசூரில் இருந்தால்  அவை பாதுகாக்கப்படாது என்ற மனுதாரர் வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. தமிழ் கல்வெட்டுகள் பராமரிப்பின்றி அழிக்கப்படுவதாக மனுதாரர்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறார்கள். சமீபத்திய தொல்லியல்துறை வெளியீடான தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி 41 ( S.i.i.vol.41) No 271( Are.488 of 1905) 272, 273, 274,275,276,277, 426,427,428,429,430.
இக்கல்வெட்டுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டதாக தொல்லியல்துறையே அறிவித்துள்ளது.

மேலும் பல கல்வெட்டுகளின் நிலை இப்படித்தான் உள்ளது. சரியான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி ஏராளமான தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் அழிந்துபோனதை உறுதி செய்கிறோம். அடுத்த தலைமுறைக்கு இக்கல்வெட்டுகளைக் கொண்டு செல்ல தொல்லியல் துறை தவறிவிட்டது. கல்வெட்டுகளின் மைப்படிகளை மின்னாக்கம் செய்யும் முயற்சியாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் தொல்லியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தும் இப்பணி கைவிடப்பட்டது.

2005 - 2006 ஆம் ஆண்டு  ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையும் வெளியிடவில்லை. கண்டறியப்பட்ட படிமங்களைக் காலக்கணிப்பும் செய்யவில்லை. இதுகுறித்து மனுதாரர் காமராஜ் அவர்கள் தொடர்ந்த வழக்கு  W.p.no.13096 2012.
ஆதிச்சநல்லூர் ஆய்வாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூர் படிமங்களைக் காலக்கணிப்பு செய்யவோ,  ஆய்வறிக்கை வெளியிடவோ மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று வாக்குமூலம் அளித்தார். எனவே மாநில அரசுக்கு இந்நீதிமன்றம் கோரிக்கை வைத்தது. ஆதிச்சநல்லூர் படிமங்களைக் காலக்கணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தோம்.

இவ்வாறான பல காரணங்களால்; மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள், செப்பேடுகளின் பதிவுகள் மற்றும் அனைத்துத் தமிழ் தொல்லியல் ஆவணங்கள் அனைத்தும் மைசூரிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கிறோம்.

அரபி மற்றும் பர்சியன் மொழிக் கல்வெட்டுகளின் அலுவலகம் நாக்பூரில் உள்ளது. 
சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகள் அலுவலகம் லக்னோவில் உள்ளது. 
இந்தோ - ஆரிய மொழியான சமஸ்கிருதத்துக்கே தனிப்பிரிவு அலுவலகம்  இருக்கும்போது எண்ணிக்கையில் அதிகம் உள்ள தமிழ் மொழிக் கல்வெட்டு அலுவலகம் இல்லை. 
அதை திராவிட மொழிக் கல்வெட்டுகளுடன் ஏன் இணைத்து வைத்துள்ளீர்கள்?

தமிழ் மொழிக் கல்வெட்டுகளுக்கும் தனி அலுவலகம் வேண்டும். சென்னைப்பிரிவு - Epigraphy Branch Tamil என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். இங்கு தமிழ் மொழியின் அனைத்துத் தொல்லியல் ஆவணங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.  போதுமான கல்வெட்டியல் பிரிவு ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இதையே பேராசிரியர் இராஜவேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் பரிந்துரை செய்கிறது.

மேற்கண்ட காரணங்கள்; மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் Article 51 - A Constitution of india 1949;  மற்றும் Article 49 /1949
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம். இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியிலிருந்து 6 மாதக் காலத்திற்குள்..
"மைசூரில் இருக்கும் அனைத்துத் தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றப்படவேண்டும்". அவ்வாறு மாற்றப்படுவதால் கீழ்க்கண்ட நன்மைகள் இருக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது.  ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று மாணவர்களுக்கு சென்னையில் மைப்படி இருப்பதுதான் வசதி. மைசூரில் இருப்பது தூரம் மற்றும் செலவு. மைசூர் செல்லுதல், தங்குதல் என்று வீண் அலைச்சல் மற்றும் தேவையற்ற செலவும் ஏற்படுகிறது.

ஓய்வு பெற்ற முதுநிலை  தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள் அனைவரும் -  சென்னையில்தான் உள்ளனர். இவர்கள் ஆய்வு வசதியாக இருக்க சென்னைதான் பொருத்தமாக இருக்கும். 60 சதவீதம் தமிழ்க் கல்வெட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்பணியை மேற்கொள்வதற்கு சென்னைதான் சரியான இடம். தமிழகத்தில் உள்ள 50,000 கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் பல்வேறு காரணங்களால் சிதைவுற்றன. இவற்றில் உள்ள செய்திகளை அறிய மைப்படிகள்தான் ஒரே தரவு. இவை 1887 முதல் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ் கல்வெட்டுகள் என்பதால் இவை தமிழகத்தில்தான் இருக்கவேண்டும்.

ஆகவே...
சென்னையில் தமிழ் கல்வெட்டியல் பிரிவு தொடங்கவேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யவேண்டும். மைசூரில் உள்ள அனைத்துத் தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மற்றும் அனைத்துத் தமிழ் ஆவணங்களும் சென்னைக்கு இடமாற்றம் செய்யவேண்டும்.  இவை வெளியிடப்பட வேண்டும். போதுமான கல்வெட்டியல் ஆய்வாளர்கள் பணிநியமனம் செய்தல் வேண்டும்.  போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும்.  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டத் தேதியிலிருந்து 6 மாதக் காலத்திற்குள் இப்பணிகள் நிறைவு பெறவேண்டும்...

W.p.( md) no 20678 of 2019 and 17399 of 2020.
N.KIRUBAKARAN...J
and
M. DURAISAMY....J

தீர்ப்பின் நகல்: https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/785328




----------------------------------------------------

தமிழகத்திற்கு மீளவிருக்கும் மைசூருவில் சிறைப்பட்டுள்ள தமிழ்க்  கல்வெட்டுக்கள் 

-- கௌதம சன்னா

மைசூருவில் சிறைப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் முழுமையாக மீட்கப்படுமா..?

மைசூருவில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறைப்பட்டுள்ள தமிழ்க் கல்வெட்டுப் படிகளை மீட்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் படி தற்போது கிடைத்தது.  வழக்கில் வெற்றி என்றாலும் ஆவணங்கள் முழுமையாக மீட்கப்படும் என்கிற நம்பிக்கை சிதைந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லித்தான் ஆக வேண்டும்.

மாண்புமிகு நீதியரசர்கள் சிறப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் தீர்ப்பில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த தகவலை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் தமது  வாதத்தில் முன்வைத்தார். அதை நீதி மன்றம் வலியுறுத்தியுள்ளது.

அதன்படி 21.02.2018 அன்று தமிழ் கல்வெட்டுப்படிகள் 38,000 ம் என்று சுட்டிக்காட்டிய இந்தியத் தொல்லியல் துறை 21.12.2020 அன்று அதன் எண்ணிக்கை 28,276 என்றும் 14.02.2021 அன்று 28,860 என்றும் குறைத்துக் காட்டியுள்ளது. அதே காலக்கட்டத்தில் சமஸ்கிருதக் கல்வெட்டுப்படிகளை முதலில் 11,000 என்றும் பிறகு 17,001 என்றும் கடைசியாக 25,756 என்றும் உயர்த்திக் காட்டியுள்ளது.

எனவே தமிழ்க் கல்வெட்டுப்படிகள் சுமார் 9,140 காணவில்லை என்று தெரியவந்திருக்கிறது என்பது அம்பலமாகியிருக்கிறது. கல்வெட்டுக்களை மீட்கும் இந்த வழக்கு தொடுக்கப்படாமலிருந்தால் இந்த உண்மையும் வெளி வந்திருக்காது. மத்திய அரசின் இந்த பாராமுகத்தையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவர் முன்னுள்ள கடமை..

கல்வெட்டுப் படிகளை மீட்கும் முனைப்பில் தமிழக அரசு உறுதியாக இருப்பது மகிழ்ச்சியளித்தாலும், மறைக்கப்பட்டுள்ள மீதமுள்ள கல்வெட்டுப்படிகளை மீட்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.  குறிப்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்த பிரச்சினையைத் தேர்தல் வாக்குறுதியாக வைக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.


































-------------------------------------





Monday, August 9, 2021

இராஜேந்திரச் சோழன் பிறந்த ஆடித் திருவாதிரை

இராஜேந்திரச் சோழன் பிறந்த ஆடித் திருவாதிரை

-- மா.மாரிராஜன்



ஆடித் திருவாதிரை (இந்த ஆண்டு - 05.08.2021) இராஜேந்திரச் சோழன் பிறந்தநாள். 

rajenthiran2.JPG

இராஜேந்திரனின் போர் வெற்றிகளும், கண்ட களங்களும் சற்று அதிகம்தான்.  அனைத்திற்கும் சிகரமாய் ஆய்வாளர்களால்  கொண்டாடப்படுவது  கங்கை வெற்றியை; அப்படி என்ன அதில் சிறப்பு..?

அரசர்கள் போர்களில் வெற்றிபெறுவதும், அவ்விடங்களில் வெற்றித்தூண் (ஜயஸ்தம்பம்) நடுவதும் வழக்கமான ஒன்றுதான். இந்தத் தூண் கல்லால் செதுக்கப்பட்ட ஒன்று. தனது வெற்றியை பறைசாற்றும் ஓர் அடையாளம்.

இராஜேந்திரனும் தனது கங்கை வெற்றியை கொண்டாட ஒரு தூண் நட்டார். கல் தூண் அல்ல. நீர்த்தூண் (ஜலஸ்தம்பம்) தண்ணீர் மயமான தூண்.  கங்கைநீரை சோழபுர ஏரியான சோழகங்த்தில் கொட்டி ஒரு நீர்த்தூண் நட்டு, கங்கை கொண்ட சோழன் என்னும் அழியா புகழ் பெற்றார். 

இந்நிகழ்வுகளை அப்படியே திருவலங்காடு செப்பேடு மற்றும் இராஜேந்திரனது மெய்கீர்த்தி சாசன வரிகள் எடுத்துரைக்கிறது. புதிதாக கட்டமைக்கப்பட்ட  சோழபுரத்தைக் கங்கை நீரால் சிறப்பிக்க முடிவு செய்கிறார். கங்கைநீரை கொண்டு வருமாறு தம் படைத்தலைவனுக்கு ஆணையிடுகிறார்.  அப்படைத் தலைவனும் படையுடன் சென்று வடதேச மன்னர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வருகிறார்.  அப்படைத்தலைவனை வரவேற்ற இராஜேந்திரன், தான் அமைத்த சோழகங்கம் ஏரியில் நீர்த்தூண் அமைக்கிறார்.

rajenthiran6.JPG
உலகத்தமிழர்களின் பெருமைமிகு இந்நிகழ்வை, திருவலங்காடு செப்பேட்டின்  109 - 124 செய்யுள்  கூறுகிறது. 
செய்யுள் 109 - 124 வரை உள்ள வடமொழிப் பகுதியின் தமிழாக்கம்:

செப்பேட்டின் 109 வது செய்யுள்:
"பகீரதனின் தவத்தின் வலிமையால்   பூமிக்கு வந்த கங்கை நீரை தன் தோளின் வலிமையால் அந்த கங்கை நீரைக்கொணர்ந்து தன் நாட்டை புனிதமாக்க முயன்றான் இராஜேந்திரன்"

செய்யுள் 110:
"கங்கை நதிக்கரையில் வாழும் பகையரசர்களை வெல்வதற்கு,  வீரத்தில் சிறந்தவனும், பலமான படைகளை உடையவனும்,  அறமறிந்தோரில் முதல்வனுமான தன் படைத்தலைவனுக்கு ஆணையிட்டான்"

செய்யுள் 111:
"பனிமலையிருந்து வரும் கங்கை நீரைப் போல் கல கல என்னும் ஒலி எழுப்பியவாறு  அப்படைத்தலைவனின் குதிரைகள் சென்றது"

செய்யுள் 112:
"யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தால் இராஜேந்திரனின் படைகள் கங்கை நதியை கடந்தது"

செய்யுள் 113:
"யானைகள்,  குதிரைகள், வீரர்கள்,  இவர்கள் எழுப்பிய புழுதி பறந்தவாறு விக்ரமச்சோழனின் (இராஜேந்திரன்) படைகள் எதிரி மண்டலத்தில் நுழைந்தன"

செய்யுள் 114:
"இராஜேந்திரனின் படைகள், இந்திரரதனை முதலில் வென்று சந்திரகுலத்தின்  ஆபரணமாய் திகழும் இடத்தைக் கைப்பற்றியது"

செய்யுள் 115:
"நடைபெற்ற போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட, தண்ட நுனியினை உடைய வெண்கொற்றக்கொடை கீழே விழுந்தது. இது சந்திரனின் பிம்பமே கீழே விழுந்தது போல் இருந்தது"

செய்யுள் 116:
சிபிகுல அரசனின் (இராஜேந்திரன்)  படைத்தலைவன் இரணசூரனை வென்று,  தர்மபாலனின் நாட்டில் நுழைந்தான். பிறகு தேவநதியான கங்கை நோக்கிச் சென்றான்"

செய்யுள் 117:
"அந்த நதிக்கரையில் இருக்கும் அரசர்களை படைத்தலைவன் வென்றான். அவர்களைக் கொண்டு அந்த புனித நீரை தன் தலைவன் மதுராந்தகனுக்காக (இராஜேந்திரன்)  கொண்டு வந்தான்"

செய்யுள் 118:
"கோதாவரி நதிக்கரையை இராஜேந்திர சோழன் அடைகிறார். சந்தனப்பூச்சுகள் கொண்டு நதிக்கரையில் நீராடி முடிக்கிறார். வெற்றியுடன் வரும் தன் படைத் தலைவனை வரவேற்கிறார்"

செய்யுள் 119:
"அவனுடைய வேகமான அந்தப்படை எதிரி அரசனை வென்று,  பெரும் புகழ் மற்றும் இரத்தினங்கள் இவற்றுடன் கங்கை நீரையும் தன் தலைவனுக்காகக் கொண்டு வந்தது"

தன்னுடைய தேசத்தில் சோழகங்கம் என்ற பெயருடையதும்,  கங்கை நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பம் ஒன்றை நிறுவினான் (நீர்மயமான வெற்றித்தூண்)

இனி; இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் காணப்படும் கங்கைப்படையெடுப்பில் அவர் வென்ற நாடுகள்:

rajenthiran5.jpg
1. சக்கரக்கோட்டம் — இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரக்கூடா என்னும் நகரம்.
2. மதுரை மண்டலம் — இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா.
3. நாமனைக்கோனை — இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி என்று யூகிக்கப்படுகிறது.
4. பஞ்சப்பள்ளி — ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ள பஞ்சப்பள்ளி.
5. மாசுனிதேசம் — சட்டீஸ்கர் மாநிலப்பகுதியாக இருக்கலாம்.
6. ஆதிநகர் — ஒடிசா மாநிலத்தின் கான்ஜம் மாவட்டப்பகுதி.
7. ஒட்டவிஷயம் — இன்றை ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி.
8. கோசலை நாடு — இன்றைய ஜார்க்கண்ட் மாநிலம்.
9. தண்டபுத்தி — மேற்குவங்காளத்தின் மேற்குப்பகுதி.
10. தக்கண லாடம் — இன்றைய பீகாரின் ஒரு பகுதி.
11. வங்காளதேசம் — இன்றைய அஸ்ஸாம் , பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதி.
மேற்கண்ட நாடுகளை இராஜேந்திரன் தலைமையிலான சோழர் படை வென்றுள்ளது. இப்படையெடுப்பில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக அந்தந்த நாட்டின் கலைச் செல்வங்களை வெற்றிச் சின்னமாக தமிழகம் கொண்டுவந்தனர்.

rajenthiran4.jpg

அந்நாடுகளில் சோழர்களது சாசனங்களும் பொறிக்கப்பட்டன. ஒட்டரதேசம் என்று சாசனங்களில் குறிப்பிடப்படும் இன்றைய ஒடிசா மாநிலத்தில் கஜபதி மாவட்டத்தில் மகேந்திரகிரி  மலைச்சிகரம் ஒன்றில் மூன்று கற்கோவில்கள் உள்ளன. இவை தர்மர் கோவில்,  பீமன் கோவில், குந்திகோவில் என்று அழைக்கப்படுகிறது.

rajenthiran3.jpg
rajenthiran3.1.jpg
தர்மர் கோவிலின் வாயில் நிலைப்படியில் ஒரு கல்வெட்டுப்பொறிப்பு உள்ளது. வடமொழியில் அமைந்த இக்கல்வெட்டின் தமிழாக்கம்:
"இராஜேதிரன் தனது தோள் வலிமையால் விமலாதித்யனை வென்று மலை மிகுந்த நாடுகளையும் மற்ற நாடுகளையும் கைப்பற்றி கலிங்கபதி போன்றோரை அடக்கி மகேந்திரமலை உச்சியில் விஜயஸ்தம்பத்தை நட்டான்."

இக்கல்வெட்டுப் பொறிப்பின் கீழே சோழர் கால இலச்சினையும் கோட்டோவியமாக உள்ளது. அமர்ந்த புலியின் முன்பாக கயல்கள். தர்மர் கோவிலுக்கு அருகே இருக்கும் குந்தி கோவிலில் மூன்று கல்வெட்டுப் பொறிப்புகள் உள்ளன.

முதல் கல்வெட்டு:
மகேந்திரகிரி மலை உச்சியில் சோழர்கள் விஜயஸ்தம்பம் நட்டது பற்றி பதிவு செய்கிறது.

இரண்டாவது கல்வெட்டு:
இராஜேந்திரனின் படைத்தளபதியான இராஜேந்திர சோழபல்லவரையன் என்னும் ராஜராஜ மராயனுக்கு இக்கோவிலில்  விட்டி வாரண மல்லன் என்ற பட்டத்தை அளித்து (எதிரிகளின் யானைப்படையை வென்ற தலைவன்)  வீர அங்குசம் ஒன்றை வழங்கி சிறப்பித்துள்ளார் சோழப்பேரரசர் இராஜேந்திரன் என்பது பற்றி பதிவு செய்கிறது.

மூன்றாம் கல்வெட்டு:
இப்பகுதியை ஆண்ட விமலாதித்தனை குறிப்பிடும் துண்டு கல்வெட்டு ஆகும்.

வீர அங்குசம் பெற்ற  இராஜேந்திர சோழ பல்லவரையனான இராஜராஜராஜன் மராயன் என்பவரே கங்கை படையெடுப்பின் சோழர் படைத்தளபதி ஆவார். இராஜேந்திரனின் மெய்கீர்த்தி சாசனத்தில் கங்கைநீரை எடுத்த இடம்பற்றி கூறுகையில்; 

"நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்"
நெடுங்கடல் போல் பரந்து நிற்கும் உத்திரலாடம் என்னும் இடத்தில் நறுமணமிக்க மலர்களையுடைய தூய்மையான கங்கை நீரை சோழர் படை எடுத்தது.. இப்பகுதியை ஆண்ட மகிபாலனை சோழர்கள் வென்றார்கள்.

கங்கையில் நீர் எடுத்து வரும் சோழர் படையை இராஜேந்திரன் கோதாவரி நதிக்கரையில் வரவேற்றார். கங்கை நீர் எடுத்த சோழர் படைக்குத் தலைமையேற்றத் தளபதியின் பெயர் விக்கிரமச் சோழ சோழியவரையனாகிய அரையன் ராசராசன். இவரின் பெயரைக் கேட்டவுடன் எதிரி அரசன் ஒருவர் ஓடி ஒளிந்து கொண்டார் என்கிறது ஒரு கல்வெட்டுச் செய்தி.

கங்கை நீருடன் சோழர்படை தாயகம் திரும்பியது. கங்கைநீரால் சோழபுரம் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. சோழகங்கம் என்னும் ஏரியும் வெட்டி அதில் கங்கைநீரை கலந்தனர்.

இராஜேந்திரனின் கங்கைவெற்றியை பறைசாற்றும் கல்வெட்டுகள்:
கும்பகோணம் (A.r.e.1932 para 13)  "இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்துத் திருவடி தொழுது" என்ற கல்வெட்டு பதிவு செய்கிறது.
 
எண்ணாயிரம் என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டில்  ( A.r.e. 1931 -32 part 2 para 3)
" உடையார் ஸ்ரீஇராஜேந்திரசோழதேவர்
 உத்ரபாதத்தில் பூபதியாரை ஜயித்தருளி
 யுத்தோத்சவ விபவத்தால் கங்காப்பரிகிரகம் பண்ணி
 யருளின கங்கை கொண்ட சோழனென்னும்
 திருநாமத்தால்...."

உத்ரபாதம் என்னும் உத்திரலாடத்தில் கங்கை அரசர்களை வென்று கங்கை நீரை கொண்டு வந்து கங்கை கொண்ட சோழன் என்னும் பெயர் பெற்ற உடையார் இராஜேந்திர சோழதேவர்.

ஒரு நீண்ட பயணம். இந்தியாவின் வடபகுதி முழுவதும் சோழர்களின் இராஜாங்கம். ஓர் ஒற்றைச் சொல்... தமிழர்களின் வீரத்தையும் தீரத்தையும் பராக்கிரமத்தையும் பறைசாற்றிய அந்த ஒரு சொல்...
"இராஜேந்திரச் சோழன்"


 
Reference; 
சோழர் செப்பேடுகள், முனைவர் க. சங்கரநாராயணன்.
இராஜேந்திரச் சோழன். குடவாயில் பாலசுப்ரமணியன்.
S.i.i.vol 3. Page 424.

புகைப்படம் உதவி:
முனைவர் சிவராமகிருஷ்ணன்; திருச்சி பார்த்தி 



---