Thursday, October 14, 2021

தலையங்கம்: தமிழரின் தொல்லியல் தடயங்களை மீட்போம்


வணக்கம்.

அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுக் காலாண்டிதழின் ஊடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

கடந்த 3 மாதங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. அவைபற்றிய செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக வரலாற்றுக்குச் சிறப்பு சேர்க்கும் மைசூர் ஆவணப்பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களை மீட்டுக் கொணரும் நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டு தமிழக வரலாற்று ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிகழ்வு 19.8.2021 அன்று நிகழ்ந்தது. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு இந்த வழக்கினை நடத்த வேண்டும் என்ற சிந்தனையை 2017ம் ஆண்டு முதல் திட்டமிட்டு, 2018ம் ஆண்டு திரு. கௌதம சன்னா அவர்களது உதவியுடன், திரு.காந்தி அவர்களது ஆலோசனையின் படி மூத்த வழக்கறிஞர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.என்.ஆர்.இளங்கோ அவர்களது   உதவியுடன் இந்த வழக்கைத் தொடங்கினோம்.  இவ்வழக்கிற்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதோடு உண்மையில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன, என்ற கேள்விக்கு விடையாகக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கையும்  இந்தத் தீர்ப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இது இதுகாறும் நிலவி வந்த பல கேள்விகளுக்குச் சட்டப்பூர்வமான பதிலாகவும் அமைகிறது.    கடுமையான முயற்சியை மேற்கொண்டு இவ்வழக்கு வெற்றியடைய உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கும், சாதகமான தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கிருபாகரன், துரைசாமி ஆகியோருக்கும்  நன்றி கூற நாம் அனைவருமே கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம்   22ம் தேதி மெட்ராஸ் தின விழாவினை நாம் கொண்டாடுகின்றோம்.  இவ்வாண்டும் ஆகஸ்டு மாதத்தில் வரலாற்று சொற்பொழிவுகள், கானா பாடல்கள், மெட்ராஸ் நகருக்குச் சிறப்பு சேர்க்கும் விளையாட்டுகள் பற்றிய செய்திகள் என்பனவற்றோடு மெட்ராஸ் பற்றிய ஆய்வு நூலான `மெட்ராஸ் 1726`  என்ற தலைப்பிலான ஓர் ஆய்வு நூல் வெளியீடும், மெட்ராஸ் வரலாற்றில் தொழிற்சங்கத்தின் வளர்ச்சி மற்றும் மெட்ராஸில் அரசியல் தலைவர்கள் என்ற பல்வேறு தலைப்புகளில், ஆகஸ்ட் மாதம் 21,22 ஆகிய இரு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நாம் ஏற்பாடு செய்து கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இணையத்தில் நிகழ்த்தப்பட்டு அவை யூடியூப் பதிவுகளாக தமிழ் மரபு அறக்கட்டளையின் யூடியூப் சேனல் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அன்றாட அலுவல்களுக்கு இடையே சென்னை பெருநகரில் ஒவ்வொரு நாளும் பயணித்தாலும் கூட, சென்னையில் இருக்கின்ற வரலாற்றுச் சின்னங்களை அடையாளம் கண்டு அறிந்து கொள்ளாதவர்கள் ஏராளம் பேர். அத்தகையோருக்குச் சென்னையின் வரலாற்றுச் சிறப்புக்களை அறிமுகப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளையின் 20 ஆண்டுக்காலப் பயணம் நிறைவடைந்து 21ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் நிகழ்வினை உலகம் முழுவதிலுமிருந்து தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் உறுப்பினர்களும் ஆர்வலர்களும் இணைந்து சிறப்பித்தார்கள்.  21 ஆண்டுகாலப் பயணத்தில் நமது அமைப்பு ஏற்படுத்தியுள்ள உலகளாவிய வரலாற்று விழிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளை நினைவு கூறவும் இந்த நிகழ்வு வாய்ப்பாக அமைந்தது.

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாக தமிழ்நாடு அரசு இவ்வாண்டு அறிவித்தது. இது வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைகின்றது.    

உலகத் தமிழர்களைப் பொறுத்த வரையில் செப்டம்பர் மாதம் சமூகநீதிக்கான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்யும் மாதமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம், கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடிய, தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர்கள் பிறந்த நாட்களும் நினைவு நாட்களும் இந்த மாதத்தை அலங்கரித்தன என்பதுதான்.

செப்டம்பர் 5ஆம் தேதி வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்; செப்டம்பர் 5ஆம் தேதி அன்னை தெரசா நினைவு நாள்; செப்டம்பர் 11 மகாகவி பாரதியார் நினைவு நாள்; செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா அவர்களது பிறந்த நாள்; செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் ஈ.வே ராமசாமி அவர்களது பிறந்தநாள்; செப்டம்பர் 17 ஆம் தேதி திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்களது நினைவு நாள், செப்டம்பர் 18ஆம் தேதி மூதறிஞர் ரட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள்  என முக்கிய தலைவர்களின் நினைவுகளை எழுப்பும் மாதமாக அமைந்தது.

தமிழ்நாடு அரசு செப்டம்பர் 17ஆம் தேதியை சமூக நீதி நாள் என இவ்வாண்டு அறிவிப்பை வெளியிட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை மையமாகக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்ச்சிகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன.  இவையனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இவை தவிர தமிழக அரசு செப்டம்பர் மாதத்தில் நெதர்லாந்தில் பாதுகாக்கப்படுகின்ற சோழர் காலச் செப்பேடுகளை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்ற செய்தியை செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார்கள் என்பதைப் பலரும் அறிந்திருப்பீர்கள்.   இதற்குத் தொடர்புடைய வகையில்  கடந்த ஆகஸ்ட் மாதம் நெதர்லாந்து லெய்டன் நூலகத்திற்கு நேரடியாகச் சென்றிருந்தபோது சேகரித்த தகவல்களை மையமாகக் கொண்டு நெதர்லாந்தில் உள்ள சோழர் காலச் செப்பேடுகள் என்ற தலைப்பிலான காணொளிப்  பதிவு ஒன்றினையும் இம்மாதம் வெளியிட்டது தமிழ் மரபு அறக்கட்டளை. 


மேலும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தமிழகத்தின் சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நெதர்லாந்து சோழர் காலச் செப்பேடுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு கலந்துரையாடலையும் கல்லூரி மாணவர்களுக்கும் அருங்காட்சியக ஆணையர்,  அதிகாரிகள், பொதுமக்களுக்கு வழங்கினேன்.  இதன் தொடர்ச்சியாக அச்செப்பேடுகளை முறையாக நெதர்லாந்து அரசை அணுகிப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளைத் திட்டமிடவும் கலந்துரையாடப்பட்டது.

மலேசியத் தமிழர்கள் வரலாறு பற்றிய ஓர்  ஆவணப்பதிவாக்க முயற்சிக்கான கலந்துரையாடல் நிகழ்வும் இம்மாதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மலேசியக் கிளைக்கான புதிய வலைப்பக்கம் (https://malaysia.tamilheritage.org/) செப்டம்பர் மாதத்தில் உருவாக்கப்பட்டது வெளியிடப்பட்டது.

இம்மாத இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகளாக ஐந்து நூல்கள் வெளிவர உள்ளன.  இந்த ஆய்வு நூல்களை வாங்கி உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
Monday, October 11, 2021

எல்லாச் சாலைகளும் தீட்சை பூமியை நோக்கி...

-- முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி


அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாள் 1956 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 14 ஆம் நாள். 

புத்தருடன் அம்பேத்கருக்கு ஏற்பட்ட புரிதல்:
அண்ணல் அம்பேத்கரின் சிறுவயதில் ராமாயணமும், மகாபாரதமும் தினமும் இரவில் படிக்கும் படி அவரது தந்தையார் உத்தரவிட்டிருந்தார். தந்தை சொல் கேட்டு அப்படியே செய்து வந்தார் அம்பேத்கர். மாணவப் பருவத்தில் அவர் மிக நன்றாகப் படித்து வகுப்பினில் தேறியதற்காக அவரது தந்தையின் நண்பர் தாதா கெலூஸ்கர் என்பவர், அவர் எழுதிய 'புத்தரின் வரலாறு' என்ற நூலை அம்பேத்கருக்குப் பரிசளித்தார். அந்த நூலை முழுவதுமாக ஆர்வத்துடன் வாசித்த அம்பேத்கருக்கு, அவருடைய மனதில் ஏற்கனவே பொங்கிக் கொண்டிருந்த உணர்வுகளுக்குப் பெரும் வடிகால் அமைந்த நிறைவு ஏற்பட்டது. நாள்தோறும் ராமாயணமும், மகாபாரதமும் படித்து வந்தாலும் அம்பேத்கர் அந்த இதிகாசங்களில் உள்ள பெரும்பாலான கதாபாத்திரங்களை விரும்பவில்லை. அவற்றில் ஆதிக்கமும், உயர் சாதி வெறியும் இருப்பதை உணர்ந்தார். அதுவும் கிருஷ்ணரின் நடவடிக்கைகள் தொடர்ந்த குற்றச்செயல்களாகவே அவருக்குப் பட்டன. அதேபோல் ராமனின் நடவடிக்கைகளும் மனித சமுதாயத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கவில்லை என்றும் அம்பேத்கர் கருதினார்.

மதக் கோட்பாடுகள் என்ற பெயரில் நம்மைச் சுற்றியிருக்கும் தவறான வழிகாட்டுதலிலிருந்து மனித சமுதாயம் விடுபடவும், மீளவும் புத்தரின் தம்மம் ஒன்றே வழி என்று அம்பேத்கர் உணர்ந்தார். புத்தர் கூறிய நல்ல அறிவுரைகள் தான் 'தம்மம்' என்ற பொதுவான சொல்லாக அறியப்படுகிறது. 

buddha art.jpg

 - வாழ்க்கையில் தூய்மையைக் கடைப்பிடிப்பது; 
 - வாழ்வில் நிறைவடைவது; 
 - புலன் உணர்வுகள் மீது போதுமான கட்டுப்பாடு (நிப்பானம்); 
 - ஆசையைத் துறந்து வாழ்வது; 
 - அனைத்துக் கூட்டுப் பொருட்களும் நிலையற்றவை என உணர்வது; 
 - நல்ல செயற்பாட்டினை ஒழுக்க நியதியின் கருவி என்று உணர்வது 
            (தம்மம்: நூல் 3: பகுதி 3: ப: 195 - 210) 
ஆகிய இவையெல்லாம் எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடிய தம்மம் ஆகும். ஆகவே புத்தர் காட்டிய தம்மத்தின் வழி நடப்பது ஒன்றே மனிதனை மனிதனாக உணர்வதற்குச் சரியான கருவியாகும் என்று அம்பேத்கர் கருதினார்.

இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன்:
கௌதம புத்தர் ஒருவரே மாறிவரும் நவீன உலகத்திற்கு வழிகாட்டக்கூடிய ஒளியை அளித்திருக்கிறார் என்பதை அம்பேத்கர் உணர்ந்திருந்தார். வருங்கால உலகத்திற்கான வழிகாட்டுதல் அனைத்தும் புத்த நெறியில் இருப்பதை அவர் கண்டார். இனிவரும் காலங்களில் அறிவியல் சார்ந்து வாழும் மனிதர்களுக்கு மதம் என்ற ஒன்று அவசியம் என்று கருதப்பட்டால், அவர்கள் புத்தரின் தம்மத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அம்பேத்கர் கருதினார். இவை எல்லாம், இந்தியாவில் உள்ள அனைத்து மதக் கோட்பாடுகளையும் கற்றறிந்த பின்னால், தனக்கு ஏற்பட்ட ஒரு தீர்க்கமான முடிவு என்று அம்பேத்கர் கூறினார். 

மதம் என்பது அதிகாரத்திற்கான ஓர் அடிப்படை என்பதை இந்திய வரலாறு நிரூபித்திருக்கிறது. இந்துக்கள் மதம் என்று அழைப்பது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதி நெறிகளைத் தான். இவற்றைப் பரப்புவதைத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக்க வேண்டுமானால், வேத, சாஸ்திர, புராணங்கள் புனிதமானவையோ, அதிகாரப் பூர்வமானவையோ அல்ல என்று சட்டப்பூர்வமாகச் செய்துவிட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். இந்துக்கள் இந்தியாவின் மன நோயாளிகள். உயர்ந்த இந்து, தாழ்ந்த இந்து என்று இருக்க முடியும். ஆனால் நல்ல இந்து என்று யாரும் இருக்க முடியாது என்பதையெல்லாம் முன்னமேயே கணித்து இருந்தார் அண்ணல் அம்பேத்கர். 

இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதியை ஒழிப்பது என்பது, இந்து மதத்தை அழித்து ஒழிக்கும் வழி என்று உறுதிப்படக் கூறினார் அண்ணல் அம்பேத்கர். சாதிக்கும், வர்ணத்திற்கும் உள்ள மத அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும், சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடிப்பது மதக் கடமை என்று கூறச் சாத்திரங்களே உதவுகின்றன என்பதும் அம்பேத்கரின் அறிவுரைகள். சாதிகளின் மதமான இந்து மதத்தைக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே நமது முதல் எதிரி என்று அடையாளப்படுத்திய அம்பேத்கர், இந்து மதத்தில் நிலவி வரும் சாதி, தீண்டாமையைச் சுட்டிக்காட்டி, தான் இந்துவாகப் பிறந்திருந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதன்படி சாதித்தும் காட்டினார் என்பது இந்திய வரலாற்றில் புத்தருக்கு அடுத்து நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் புரட்சி.

தன்மானத்தைக் காப்பதே தீட்சையின் மௌனப் புரட்சி:
மதம் மாறுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் அம்பேத்கரின் மதமாற்றம் தீண்டாமை என்னும் கொடிய பேயின் கோர நர்த்தனத்தால் விளைந்தது. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 'தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது' என்ற வாசகத்தை அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் பெற வைத்தாலும், நடைமுறையில் இந்தியாவில் இன்னும் தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்று உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில்தான் அவர் பல லட்சம் மக்களோடு பௌத்தம் தழுவினார். 

இனவெறியும், நிறவெறியும் மட்டுமே அறிந்திருந்த மேற்குலக நாட்டினர் 'சாதிவெறி' என்றால் என்ன என்ற கேள்வியுடன் இந்தியாவைத் திடுக்கிட்டு நோக்கினர். ஆனாலும் இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டங்களில் 'சாதிவெறி' விவாதப் பொருளாக வில்லை. அதை விவாதப் பொருளாக ஆக்குவதற்கு இந்தியாவும் விரும்பவில்லை. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, 'தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது' என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அம்பேத்கரின் வாசகங்களைத்தான் இந்தியா உலக நாடுகளுக்குச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் இந்தியாவில் தீண்டாமையும், சாதிவெறியும் இன்னும் நிலவுகின்றன என்பதை அன்றாடம் வரும் செய்திகள் உறுதிப்படுத்தி வருகின்றன. 

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக, தீண்டாமையை ஒழித்துவிட்ட ஒரு நாடாகத் தன்னை முன்னிறுத்துவதில் உள்ள கயமைத் தன்மையை உலகுக்கு அம்பலப்படுத்தும் விதமாகத்தான், அம்பேத்கர் இந்து மதத்தை விட்டுப் பௌத்தம் தழுவினார். இதுவே இந்தியப் பூர்வ குடிமக்களின் தன்மானத்தைக் காக்கும் நிகழ்வு என்றும் அம்பேத்கர் கருதினார்.

தீட்சை ஏற்கும் நாளின் சிறப்பு:
அண்ணல் அம்பேத்கர் தான் பௌத்தம் ஏற்ற நிகழ்வின் நாளையும், இடத்தையும் புத்தரோடு தொடர்பு உள்ளதாகவும், வரலாற்றுச் சிறப்பு உள்ளதாகவும் அமையுமாறு தேர்ந்தெடுத்தார். 

அசோக மன்னர் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) கலிங்கத்தின் மீது படையெடுத்து, வென்று, அப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மனம் வருந்தி, அங்கு வந்த ஒரு பௌத்த பிக்குவின் வழி புத்தரின் அறிவுரைகளை ஏற்று, பவுத்தம் ஏற்ற நாள்தான் அக்டோபர் 14 என வரலாறு குறிப்பிடுகிறது. 

அசோகர், கலிங்கப் போர் முடிந்த ஒன்பதாவது நாளில் (நவமி-பாலி) போர் ஆயுதங்களைத் தூய்மைப்படுத்தி, இனி அவை போருக்கல்ல; உழவுக்கும், பூசைக்குமான (ஆயுதபூசை) கருவி என்றாக்கி விட்டு, அசோகர், தான் போரில் வென்ற பத்தாவது நாளில் (விஜயதசமி-பாலி) பௌத்தம் தழுவினார். 

வரலாற்றோடும், புத்தருடனும் தொடர்புடைய அந்த நாளையே அம்பேத்கரும் பௌத்தம் தழுவும் நாளாகத் தேர்ந்தெடுத்தார்.

தீட்சை பூமியின் சிறப்பு:
ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் தமிழர்களே பரவியிருந்தனர்; தமிழர்களே ஆண்டிருந்தனர். "ஒரு மொழி வைத்து உலகாண்ட வரலாறை" சங்கத்தமிழ் இலக்கியங்கள் (புறநானூறு) பறைசாற்றுகின்றன. அவர்கள் தங்கள் முன்னோர் வழிபாடுகளில், பாம்பை (நாகம்) வைத்து வணங்கி வந்தனர். இதனால் அவர்கள் நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இந்த நாகர்களே, திராவிடர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்றும், அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அம்பேத்கர் தன் ஆய்வில் தெரிவித்திருக்கிறார். 

அந்த நாகர்கள் அனைவரும் பௌத்தர்களாகவே உலகியலை அறிந்து வாழ்ந்தனர். பௌத்தத்துக்கும், வைதிகப் பிராமணியத்திற்கும் நடைபெற்ற நீண்ட முடிவிலாப் போரை, அதர்ம யுத்தமாக்கி வைதிகம் வென்றது. அப்படி ஒரு காலத்தில், பௌத்தம் செழித்திருந்த பூமிதான், நாக்பூர் என்று அழைக்கப்படும் நாகபுரி. அதனால் தான் தெற்கையும், வடக்கையும் இணைக்கும் இந்தியத் துணைக் கண்டத்தின் மையத்தில், இந்நாடு முழுவதும் பௌத்தர்களாக இருந்த வரலாற்றை நினைவு கொள்ளும் வகையில் நாகபுரியைத் தேர்ந்தெடுத்தார் அம்பேத்கர். 

நாகபுரியில், 14. 10. 1956 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் தன் மனைவியுடனும், தன்னைப் பின்பற்றும் பல லட்சம் தொண்டர்களுடனும் புத்தர் சிலையை வணங்கி, வெள்ளைத் தாமரை மலர் தூவி, பௌத்தம் ஏற்றார். புத்த தம்மங்கள் பாலி மொழியில் சொல்லப்பட்டன. அவற்றை அம்பேத்கரும், அவர் மனைவியும் தங்கள் தாய்மொழியான மராத்தி மொழியில் கூறி பௌத்தம் ஏற்றனர். அதற்கு அடையாளமாக அம்பேத்கர் 22 உறுதி மொழிகளையும் அப்போது ஏற்றார். அவற்றை அம்பேத்கர் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல, மற்ற அனைவரும் அப்படியே திரும்பவும் மொழிந்து பௌத்தம் ஏற்றனர். 

Ambedkar.JPG
பௌத்தம் தழுவியதற்கு அடையாளமான 22 உறுதி மொழிகளில் பத்தொன்பதாவது உறுதிமொழியாக, "மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத, கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தைத் தழுவிக் கொள்கிறேன்" என்று அம்பேத்கர் அமைத்த வாசகம் தான் அவர் பவுத்தம் தழுவியது குறித்து உலகிற்கு அளிக்கும் செய்தி.

மத மாற்றமல்ல; சமூக விடுதலை:
அண்ணல் அம்பேத்கருக்கு ஒரு மாபெரும் கனவு இருந்தது. அது, உண்மையை உணர்ந்த, அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான். இதே கனவு தான் புத்தருக்கும் இருந்தது. பின்னர் அது சங்கமாக உருப்பெற்றது. 

அம்பேத்கருக்கு அந்தக் கனவு இன்னும் விரிந்தது. அந்தக் கனவுலகத்தில் அனைவரும் சமம்; பிறப்பு, பாலினம் என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி; அதற்கான கட்டமைப்பு வசதிகள்; அனைவருக்கும் மருத்துவ வசதி; பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சமுதாயக் கூடங்கள்; உயர்கல்விக்கான நூல் நிலையங்கள்; தொழில் கல்லூரிகள்; பிக்குகளுக்கான பயிற்சி முகாம்கள் என்று நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கரின் கனவு. ஆனால் இதை அரசாங்கம் செய்கிறதோ இல்லையோ அம்பேத்கரின் கனவான தீட்சை பூமியில் அவர் செய்தார். அதற்காக ஓர் அறக்கட்டளையை நிறுவி, நூறு ஏக்கர் நிலத்தில் மேற்குறிப்பிட்ட வசதிகளை உருவாக்க அம்பேத்கர் திட்டமிட்டார். அவையெல்லாம் இன்று நனவாகி நிற்கின்றன.

அம்பேத்கர் பௌத்தம் ஏற்றது வெறும் மதமாற்ற நிகழ்வல்ல. அது சமூக விடுதலையின் ஓர் அடையாளமாகும். புத்தரின் புரட்சி எப்படி உலகையே மாற்றத்திற்கு உள்ளாக்கியதோ, உள்ளாக்கி வருகிறதோ அதேபோலவே அதே வழியில் அம்பேத்கர் செய்த புரட்சியானது, மானுட விடுதலைக்கு வித்திட்ட மகத்தான புரட்சி. மானுட இனம், அனைத்தையும், துக்கம் உட்பட, விட்டு விடுதலையாக வேண்டுமானால் புத்தர், திருவள்ளுவர், அம்பேத்கர் காட்டிய அறிவு (புத்த) வழியில் செல்வதே அனைவரின் கடமை. அதுவே பிறவிப் பெருங்கடலை நீந்த வைக்கும் அற வழியுமாகும்.

மதமாற்றம் ஏற்படுத்திய விளைவுகள்:
இந்தியாவின் உயிர்ப்பு என்ற ஒன்றை ஒற்றைச் சொல்லில் சொல்வதானால், அது புத்தரின் தம்மம் என்றே சொல்லமுடியும். அதைத் தமிழில் அறம் என்று திருவள்ளுவர் மொழிகிறார். ஒரு காலத்தில் பௌத்தத்தை அழித்த வைதீகர்கள் கூட இதைச் சொல்லத் தயங்குவதில்லை. என்னதான் சமணத்திலிருந்து கிளைத்ததாக 'அறம்' இருந்தாலும், கௌதம புத்தரால் வடிவமைக்கப்பட்ட நாணயமாக, அது எளிய மக்கள் எல்லோரிடமும் சேர்ந்தது. இதை இந்தியாவிலேயே முழுமையாக உணர்ந்தவரில் அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு அறிவாளியும், அரசியல்வாதியும் இல்லை.

அம்பேத்கருக்கு முன்னதாகவும், அவருக்கடுத்தும் தனிமனித வழியிலும், இயக்கக் கோட்பாட்டிலும், அரசியல் முறைகளிலும், கலைப் படைப்புகளிலும் புத்தரையும் அவரது அறத்தையும் போற்றி வளர்த்தவர்கள் தமிழ்நாட்டில் அயோத்திதாசப் பண்டிதரும், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவுமே. அயோத்திதாசர் 'தமிழ் பௌத்தம்' என்ற புதிய பாதையை வகுத்தார். 

அயோத்திதாசர் காலத்திற்குப் பிறகு அவர் தோற்றுவித்த பௌத்த சங்கமும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் ஒன்றாக இயங்கிய காலமும் இருந்தது. புத்தர் விழாக்களில் கலந்து கொண்ட பெரியார், அண்ணல் அம்பேத்கருடன் பர்மாவில் நடைபெற்ற உலகப் பௌத்த சங்க மாநாட்டில் கலந்துகொண்டார்.

1940 களில், அரசியல் பயணமாக பம்பாய், டெல்லி, லாகூர் வரை சென்ற பெரியாரும், அண்ணாவும் காசி வரை சென்று வாரணாசி, புத்த கயாவுக்கும் சென்று வந்தனர். அங்கு புத்தர் சிலையைப் பார்த்து, "பார்ப்பனியத்தை விரட்டிய உங்கள் புரட்சியை வைதீகம் நாடு கடத்தி விட்டதே" என்ற மௌனமாக வினவுகிறார் அண்ணா. அதற்குப் புத்தரின் மௌனமான புன்னகையே பதிலானது. "வைதிகத்தின் வைரிகள்" காலந்தோறும் தோன்றுவார்கள் என்பதாகப் புத்தரின் புன்னகைக்குப் பொருள் கொள்கிறார் அண்ணா. 

அந்தப் பொருளின் வடிவம் தான் பெரியாரும், அம்பேத்கரும். அந்த அறம்தான் அண்ணாவை வழிநடத்தியது. அவரது அரசியல் வெற்றிகளுக்கும், சாதனைகளுக்கும் அந்த அறமே காரணம். 

அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டில் புத்த மதம் தழுவிய போது அவரை வரவேற்றுப் பாராட்டுகிறார்; வாழ்த்துகிறார்; வணங்குகிறார் அண்ணா. அதைத் திராவிட நாடு இதழில் (21.10.1956) இப்படி எழுதுகிறார் அண்ணா.

"டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தின் உள்ளடக்கத்தை நன்கு கற்றிருப்பவர். அவர் கற்காத இந்து மதத் தொடர்புடைய வடமொழி, வேத ஆகம நூல்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்திய அரசியல் சட்டங்களை உருவாக்கக் கூடிய அளவிற்குச் சட்ட நூல் பயிற்சி பெற்றிருப்பவர். 

அத்தகைய ஒரு பேராசிரியர், இந்து மதத்தை உதறித் தள்ளிவிட்டு மூன்று லட்சம் மக்களுடன் புத்த நெறியை மேற்கொண்டார் என்பது சாதாரணமானவர்கள் இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி விட்ட சம்பவம் போல் கருதக்கூடியது அல்ல. 

டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றச் சம்பவம் உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறி விடாது. சட்டப்படி தீண்டாமை இந்தியத் துணைக் கண்டத்தில் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற விதியைக் கொண்டுள்ள இந்திய அரசியல் சட்டம் அதற்குரிய விடையைத் தராது. உலக அமைதிக்குப் பாடுபடுவதாகக் கூறிவரும் நேருவின் நாட்டில், ஒரே நாளில் 3 லட்சம் பேர் இந்து மதத்தைத் துறக்கும் அளவிற்கு, இன்னமும் தீண்டாமையின் கொடுமை இருந்து வருகிறது என்றுதான் உலக மக்கள் முடிவு கட்டுவர். 

அந்தக் கருத்தை மாற்ற நேருவின் பஞ்சசீலப் பேச்சும், இந்திய அரசியல் சட்டச் சமரசப் பூச்சும், இந்தியத் தேசிய ஏடுகளின் தூற்றல் கணைகளும், பயனற்றவையாகும். 

தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு, தாழ்வு போன்ற மிகமிகக் கொடிய தொற்று நோய்க்கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப் பட்ட அரண்மனையாக இருந்தாலும், டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் அங்கு வாழ ஒப்ப மாட்டார்கள்.  வெளியேறித்தான் தீருவர். 

டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுகளுக்கும் உரியதாகும்." என்று கருத்தோவியம் தீட்டினார் அண்ணா.நன்றி: புதிய கோடாங்கி 

Sunday, October 10, 2021

வலங்கை இடங்கைப் பிரிவினைச் சச்சரவுகள்


-- கே.ஆர்.ஏ. நரசய்யா


மதராசபட்டினத்து ஆரம்ப வருடங்களில் வலங்கை இடங்கை ஜாதிச் சச்சரவுகள் எழுந்தன. இந்த பாகு பாடு எப்படித் துவங்கினதெனத் தெரிந்து கொள்ள நாம் பல நூல்களை ஆராய வேண்டியுள்ளது. தவிரவும் சற்று பின்னோக்கிப் போகவேண்டியுமுள்ளது.  இந்த பேதத்தைப்பற்றிய நூலொன்று இடங்கை வலங்கையர் வரலாறு என்ற பெயரில் டாக்டர் எஸ். சௌந்தரபாண்டியன் என்பவரால் தொகுக்கப்பட்டு, திரு நடன. காசிநாதன் (அன்றைய இயக்குநர், தொல் பொருள் ஆய்வுத்துறை, சென்னை) அவர்களால் பதிப்பிக்கப்பட்டு, தமிழ் நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பதிப்புரையில் இவ்வாறு ஆசிரியர் கூறுகிறார்.

"அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் உள்ள கீழ்வரும் நான்கு சுவடிகளின் பிரதியே இந்த நூல்:-
1. இடங்கை வலங்கை புராணம் (டி. 2793)
2. வலங்கைச் சரித்திரம் (
3. இடங்கை வலங்கை சாதி வரலாறு (டி. 2751)
4. புதுவை இடங்கை வலங்கைச் சாதியர் வரலாறு (டி. 3196)

இவற்றில் டி. 2751 டி. 2793 ஆகியன ஓலைச் சுவடிகள், மற்ற இரண்டும் தாள் சுவடிகள். 

"கல்வெட்டுகள் பதிப்புப் பெற்ற முறையிலேயே இந்த வரலாறுகளும் இங்கு பதிப்பிடப் படுகின்றன. அஃதாவது, மூலச்சுவடியில் என்ன வடிவில் உளதோ அதே வடிவு, இயன்றவரையில், இங்கு காப்பாற்றப்பட்டுள்ளது. மூலத்தில் உள்ள வடிவை வரலாற்று ஆசிரியர்கள் அப்படியே பெறுவதே, மேலாராய்ச்சிகளுக்கு வழி வகுக்கும். . . . 

"முதலில் வருவது இடங்கை வலங்கைப் புராணம்: இது செய்யுளில் அமைந்த புராணம் அல்ல. இச்சுவடியின் தொடக்கம், 'ராப்புள்ளையனுக்கு ஒழிகரெ நாட்டுப் புன்னப்பன் எழுதிக் கொடுத்த பட்டயம்' என்று தொடங்குகிறது. இச்சுவடி தெலுங்கு எழுத்தில் முழுவதும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகும்.

"வலங்கைச் சாதி பத்து என்று தான் இந்த சுவடி கூறுகிறது. தவிரவும், சிவனும் தேவேந்திரனும் இடங்கைக்கு உரியவர்கள் என்றும், பிரும்ம தேவனும் பிருகு முனியும் வலங்கைக்கு உடையவர்கள் என்றும் இச்சுவடி சொல்கிறது.   

"இரண்டாவது சுவடி வலங்கைச் சரித்திரம். இது தஞ்சை வேதநாயக சாஸ்திரி என்னும் கிறிஸ்துவப்புலவர் மெக்கன்சிக்காகத் தொகுத்தளித்து. ஆசிரியர் கூற்றுப்படி இதில் கிறிஸ்துப் பார்வை தென்படுகிறது. அவர் சொல் படி, "வலங்கை யென்கிறது, வெள்ளாளரையும் அவர்களைச் சேர்ந்த சகல சாதியாரையுஞ்சார்ந்து நிற்கும். இடங்கையென்றால், கம்மாளரையு மவர்களைச் சேர்ந்த சகல சாதியாரையுங்காட்டும்.

"இப்போ இருக்கிற சரபோசி மகராசாவின் நாளிலே 1798 வருஷத்திலே துவக்கி இரண்டு மூன்று வருஷக்காலம் இருதரத்தாரும் வழக்கிலே கிடந்து நெய்யிலே கையிட்டுக் கொண்டார்கள்" என்று வேதநாயகர் எழுதுவதால், இந்தச் சுவடி (டி. 462) எழுதப்பட்ட  காலம் கி. பி. 1798-ஐ ஒட்டியது என்று அறியலாம் என்று நூலாசிரியர் கருதுகிறார்.

வலங்கையார் என்பதற்குப் பொதுவான இவரது கருத்து, "எந்தெந்த சாதி யுயர்ந்த கையா யிருந்ததோ, எவர்கள் காரியக்காரரோ அவர்களெல்லாம் வலங்கைத் தங்களோடே சேர்ந்தவர்களென்றார்கள்" என்பது வேதநாயகனாரின் கருத்து.

மூன்றாவது இடங்கை வலங்கைச் சாதி வரலாறு எனும் சுவடி. நூலாசிரியர் இந்த சுவடி மிகவும் இன்றியமையாதது என்கிறார்.  இதில் தான் இடங்கைச் சாதிகள் தொண்ணூற்றியெட்டும் வலங்கைச் சாதிகள் அதே எண்ணிக்கையில்  உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு உண்டான அடையாளங்களும் தரப்பட்டுள்ளன. ஆசிரியர் சொல் படி, "பண்டைக்காலச் சமுதாயம் தொழில் வழிச் சமுதாயம். சாதிகள் பிரிந்ததே தொழில் அடிப்படையில்தான் என்பர். அவ்வகையில் ஆய இச்சுவடி பயனுள்ளது"

நான்காவது சுவடி புதுவை இடங்கை வலங்கைச் சாதியர் வரலாறு என்ற சுவடி. பல சாதிகளுக்கு இருந்த மதிப்பை இந்தச் சுவடி கூறுகிறது. எடுத்துக்காட்டாக,, விசுவகர்மருக்கு வெள்ளைக்குடை பிடிக்கும் மரியாதை புதுவைப் பகுதியில் இருந்திருக்கிறது.  வலங்கைச்சாதிகளுக்கு அவர்கள் வீடு விழாக்களில் இன்ன குடை பிடிக்கவேண்டும், இன்னவகைக் கோல் பிடிக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருந்திருக்கின்றன என்பதையும், அதே போல இடங்கைச் சாதிகளுக்கும் வரையறைகள் இருந்திருக்கின்றன என்றும் இந்த நூல் தெளிவாக்குவதாக ஆசிரியர் கருதுகிறார்.

ஆசிரியர் கூறுகிறார்: "வெள்ளாளர், அகம்படியர், இடையர், கவரை, கோமுட்டி, கைக்கோளர், சேடர், சேணியர், இவர்கள் சவுக்கழி பிடிக்கவும், வெள்ளைக் குதிரை ஏறவும் சுதந்திரமுண்டு . . . . . .தேவடியார்களிலேயும் இடங்கைத் தேவடியார்கள், வலங்கைத் தேவடியார்கள் என்ற இரு பிரிவுகளை இச்சுவடி குறிப்பிடுகிறது. 

"பொதுவாக இந்த நான்கு சுவடிகளும் கி. பி. 18ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் தமிழ் நாட்டில் இருந்த இடங்கை வலங்கைச் சாதிப்பிரிவுகளைப் பேசுகின்றன. இவற்றால் அச்சாதிகளிடையே அடிக்கடி சிறு பூசல்கள் நிகழ்ந்த உண்மையும் அறிய இயலுகிறது.

"1876 ல் கியார்ண்ஸ் என்பவர்  இடங்கை வலங்கைச் சாதிகள் பற்றிய ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதில், விசுகர்மருக்கும் பிராமணருக்கும், புரோகிதத் தொழில் தொடர்பான பூசலை விலக்கி அந்தப் பூசல் இறுதியில், சோழன், தன்னை ஆதரிப்போர் வலங்கையர் என்றும், விசுவகர்மரை ஆதரிப்போர் இடங்கையர் என்றும் வரையறுத்ததாகக் கூறுகிறார்"

ஆசிரியர் தொடர்கையில், "அதே போல  இடங்கை வலங்கை வரலாறும்  பேசப்படுகிறது. ஜெர்மன் நூல் ஒன்றில், இடங்கைச் சாதிகளாக ஒன்பதும், வலங்கைச் சாதிகளாகப் பதினெட்டும் குறிக்கப்படுகின்றன. வேடர், நெசவாளர், செட்டிகள் (வியாபாரிகள்), முதலானோர் இடங்கையர். குயவர், வண்ணார், பல்லக்குத் தூக்குவோர், முகம்மதியரில் ஒரு பிரிவினர் முதலியோர் வலங்கையர். இப்பிரிவுகளைச் ஜெர்மன் நூல் தருகிறது" என்கிறார்.

சமீப காலத்தில், இந்த ஜாதிப் பிரிவினைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள பல அயல் நாட்டினரும் முயன்றுள்ளனர். அவர்களில் முக்கியமான இருவர் பர்ட்டன் ஸ்டெயின், மாட்டிசன் மைன்ஸ் ஆவர். இவர்களைத் தவிர பல ஆய்வாளர்களும் இதில் கவனம் செலுத்தியுள்ளனர். திருமதி கனகலதா முகுந்த் எனபவரும் தமது "த வ்யூ ஃப்ரம் பிலோ" என்ற நூலிலும் இதைப் பற்றி நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார்.  

ஒய். சுப்பராயுலு எனபவர் இந்த ஜாதி பாகுபாடுகளைக் குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்துள்ளார். அவர் கருத்துப்படி இந்த வேறுபாடுகள் சோழர் காலத்திலிருந்தே இருந்தவனெனத் தெரிகிறது. தமது நூலான சோழர் காலத்துச் சரித்திரத்தில் "சமூக மாற்றங்களும், வலங்கை இடங்கை பிரிவுகள்" என்ற தலைப்பில் அவர் கூறுவதைப் பார்க்கலாம்.

அவர் கண்டதின்படி, இந்தப் பிரிவுகள் சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலேயே காணப்படுகிறது. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மறுபடியும் இந்த சர்ச்சை அதிகமாகக் காணப்படுவது, ஆங்கிலேயர் காலத்தில் தான். அதுவும் சிறப்பாக 18-19 நூற்றாண்டுகளின் காலகட்டத்தில் தான். இந்தக் காலத்தில் இந்த இரு பிரிவினரும் எதிர்த்துக் கொண்டு கலவரங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. இதைப் பற்றிச் சமீப காலத்தில் நன்றாகவே ஆராய்ச்சி செய்த அயல் நாட்டவர் பர்ட்டன் ஸ்டெயின் ஆகும். அவர் முடிவில் கூறியிருப்பது, இந்தப் பிரிவுகள், ஜாதிகள் அடிப்படையில் இல்லாது, அவ்வப்போது ஏற்பட்ட சமூக மாறுதல்களால் தான் என்பதாகும். 

டாக்டர் இரா. நாகசுவாமி இதைப்பற்றித் தமது நூலொன்றில் விளக்கியுள்ளார் 

"வலங்கை இடங்கை:
"கி. பி. 10 - ம் நூற்றாண்டிலிருந்து மற்றுமொரு பிரிவைக் காண்கிறோம். இப்பிரிவு தமிழக வரலாற்றில் ஒரு சமூகப் புரட்சியாக சற்றேறக்குறைய அண்மைக்காலம் வரை நிலவி வந்தது. இது வலங்கை இடங்கை என்று பிரிக்கப்பட்ட குடிகளாகும். தஞ்சைப் பெருங்கோயிலில் இராஜராஜனின் பல பெயர்களால் வலங்கை வேளைக்காரர்கள் இருந்திருக்கிறார்கள். 

1. இராஜராஜ தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
2. அரிதுர்க்க லங்கனத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
3. மூர்த்த விக்ரம்பாரண தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
4. இரணமுகராமத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
5. இராஜ கண்டிவத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
6. சத்ருபுஜங்கத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
7. அழகிய சோழத் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
8. க்ஷத்திரிய சிகாமணித் தெரிஞ்ச வலங்கை வேளைக்காரர்.
எனப் பல வலங்கை வேளைக்காரர் இருந்தனர் என்று அறிகிறோம். வலங்கை வேளைக்காரர் என்பது படை என்றும் அவற்றில் பல குடியினர் இருந்தனர் என்றும் அறிகிறோம். இராஜராஜனின் படையில் வலங்கை வேளைக்காரனாக வெள்ளாளன் இருந்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. (238/ 17). 'இவ்வூர் இருக்கும் வெள்ளாளன் ஸ்ரீராஜராஜ தேவர் படை ஜநநாத தெரிஞ்ச வலங்கை வேளைக்காரரில் வண்ணக்கன் ஐய்யாறனாகிய சித்திரையாளி' என்று கல்வெட்டு கூறுவதால், இதை அறியலாம். அதிராஜேந்திர சோழனுடைய கல்வெட்டில் (4 / 8) 'வலங்கை இடங்கை மகமை' என்று குறிக்கப்படுகிறது. இதிலிருந்து வலங்கை இடங்கை என்னும் பாகுபாடு 11 - ம் நூற்றாண்டிலேயே நிலைத்து விட்டது என்பது தெளிவு.

"கைவகுத்தல் (வலங்கை இடங்கை தோற்றம்):
"வலங்கை இடங்கை என்னும் பாகுபாடு எவ்வாறு தோன்றியது என்று தெளிவாகத் தெரியவில்லை. பெரும் பாலும் படை அரசனின் வலக்கைப் புறத்தும் இடங்கை புறத்தும் வகுத்து நிறுத்தப்பட்டதிலிருந்து இது தோன்றியிருக்கலாம் என்று கொள்ளலாம். ஏனாதிநாதர் தனது படையை பாகுபடுத்தி நிறுத்தியதை 'கை வகுத்து' என்று பெரிய புராணம் கூறுகிறது. இதிலிருந்து படை வகுப்பது 'கைவகுத்தல்' எனப் பெயர் பெற்றது என்பது தெளிவு. சிறந்த திறன் மிக்கப் போர் புரிவோர் அரசனின் வலப்புறத்தும் அவர்களுக்குக் களத்தில் படைக்கலங்களை நீட்டித்தருதல் முதலிய பணி புரிவோர் இடப்புறத்தும் நிறுத்தப்பட்டிருக்கக் கூடும். போர்ப்புறத்து வீரர்கள் முதலிடமும், வேல் வடித்துக் கொடுத்தல் முதலிய தொழில் புரிவோர் இரண்டாவது இடமும் பெறுவதில் வியப்பில்லை. தங்கள் உயிரை மதியாது போரிட்ட வீரர்களுக்கு உயர் இடம் அளித்தது இயல்பே. உயர் இடத்தைக் குறிப்பதற்காக வலப்புறமும் இரண்டாம் இடத்தைக் குறிக்க இடப்புறமும் கொள்ளப்பட்டன். ஆதலின் காலப்போக்கில் வலங்கையினர் இடங்கையாரைக் காட்டிலும் ஜாதியில் உயர்ந்தவர் என்று கருதிக் கொள்ளத் தலைப்பட்டனர். 

"எல்லா ஜாதியினரும் போர் வீரர்களாகப் பணி புரிந்திருக்கின்றனர் என்று முன்னரே கண்டோம். ஆதலில் எல்லா ஜாதியிலும் வலங்கை இடங்கை என்னும் பாகுபாடு காணப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்குள் இப்பாகுபாடு காணப்படவில்லை. 

"கல்வெட்டுகளில் வலங்கை இடங்கையினருக்கு பல சலுகைகள் அரசனால் அளிக்கப்பட்டவை குறிக்கப்படுகின்றன. சக வருடம் 1340-ல்  (கி. பி. 1418) திருவண்ணாமலையில் வலங்கை இடங்கை வகுக்கப்பட்டது என்றும் வலங்கைக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்ன என்பதும் குறிக்கப்படுகின்றன. 'திருவண்ணாமலையில் வலங்கை இடங்கை இல்லை. திருவண்ணாமலையில் இரண்டு தெருவில் கைக்கோளருக்கு முன்பு பூர்வம் நடந்து போந்த சங்கு, தண்டு, ஆனை, சாமரம், மற்றும் வலங்கைக்கு உரிய வரிசைகள் எல்லாம் நடக்கக்கடவதாக' என அரசன் ஆணையிட்டதைக் கல்வெட்டு கூறுகிறது. (155 / 8) சக வருடம் 1350 - ல் (கி.பி. 1428) திருவையாற்றில் வலங்கை சாதி 98 ம் இடங்கை ஜாதி  98 ம் குறிக்கப்படுகின்றன. 'பொய்கை நாட்டு தென்கால சபையாரும் வலங்கை 98 ஜாதியும், இடங்கை 98 ஜாதியும் நிறைவற நிறைந்து குறைவற குவிந்து' என்று குறிக்கிறது. இதிலிருந்து கி. பி. 15 ம் நூற்றாண்டில் சற்றேறக்குறைய 98 ஜாதிகள் வலங்கையிலும் இடங்கையிலும் இருந்ததாக அறியலாம் இதிலிருந்து ஒவ்வொரு ஜாதியிலும் வலங்கையும் இடங்கையும் இருந்தனர் என்பது தெளிவு. செல்வத்தாலும் செல்வாக்காலுமே இப்பிரிவு ஏற்பட்டுப் பின்னர் ஜாதி அடிப்படையில் அமைந்தது என்றும் கருதலாம். வலங்கை என்பது அரசனால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் தெளிவு."   

கம்பெனி காலத்தில் சாதாரணமாக அறியப்பட்டது, ஒரு பக்கம் விவசாயம் செய்பவர்களுக்கும், மறுபக்கம் கைத்தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களுக்கும் இடையில் தான்  அடிக்கடி இம்மாதிரியான பேதங்கள் இருந்தன என்பதாகும். ஆனால் சில காரணங்களுக்காக இந்த எண்ணம் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார் சுப்பராயுலு. முதல் காரணம், 14- 15 நூற்றாண்டு கல்வெட்டுச் சாசனங்கள் இடங்கை பற்றியவை, பள்ளி அல்லது வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் சரித்திரத்திற்குத் தெரிந்த சில ஆயிரம் ஆண்டுகளில் வணிகத்தொழிலோ கைத்தொழிலோ செய்தவர்களல்ல; இந்தக் குலம் முதன் முதலாகக் குறிப்பிடப்படுகையில், போர்வீரர்களாக 11ம் நூற்றாண்டுக் காலத்தில் அறியப்பட்டார்கள். இவர்கள் சோழர்களது படைகளில் இருந்தனர். ஆனால் பிற்காலத்தில், விவசாயத் தொழிலுக்குச் சிறிது சிறிதாக இரண்டு நூற்றாண்டுகளுக்குள் மாறினர். அப்போதிருந்து அவர்கள் நிலை மாறவில்லை. இரண்டாவதாக, அய்யவோலே வணிகக்குழு சாசனங்களில், (11-13 நூற்றாண்டுகளில்) அவர்கள் வலங்கைக் குழுக்களாகத்தான் அறியப்படுகிறார்கள்.

நத்தம் கோயில்பட்டி வணிகக் குழு சாசனத்தில், (11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது) இவ்வாறுள்ளது:
நாட்டுச் செட்டிகளும், தன்ம செட்டிகளும், சேம்பியன் சேனாபதி ஆண்டான், வைகுண்ட நாடாள்வான் என்கிற வலங்கை மீகாம வீரகங்க பிள்ளை. . . என சொல்லப்படுகிறது. இதிலிருந்தும் வணிகர்கள் வலங்கைக் குழுவில் இருந்ததாகத் தெரிகிறது. 

சுப்பராயுலு தொடர்கிறார்:
"சரித்திர பூர்வமாக, வலங்கை-இடங்கை பெயர்கள் சோழர் காலத்திலிருந்து இருப்பது தெரிகிறது. முதல் முதலாக வலங்கை என்ற சொல், 10வது நூற்றாண்டின் பிற்பகுதியில், ராஜராஜன் (985-1014) காலத்துச் சாசனங்களில் காணப்படுகிறது. தென்னிந்திய அரசர்களில், ராஜராஜன் தான் முதன் முதலாக போர்ப்படைகளைப் பெரிய அளவில் உருவாக்கினதாக அறிகிறோம். அதன் பிறகு, 11 வது நூற்றாண்டில், வரி ஒன்றைக் குறித்துப் பேசுகையில், வலங்கை இடங்கை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவற்றில் எவரெவர் இருந்தனர் என்று குறிப்பிடப்படவில்லை. ஆகையால் இவர்கள் போர்ப் படையினரெனக் கொள்ளுதலில் தவறிருக்காது. 11 வது நூற்றாண்டில் தான் முதன் முறையாக இடங்கை குறிப்பிடப்படுகிறது. அப்போது கூட வலங்கை போர்ப் படையாளர்கள் தனியாகக் குறிப்பிடப் பட்டுள்ளனர். உதாரணமாக, 1073 ம் ஆண்டு கல்வெட்டு, (கோலார் ஜில்லா) வலங்கை-மஹாசேனா, சோழமண்டலத்திலிருந்து வந்த, ஒரு பெரிய வேளாண் கூட்டம் கூடியபோது, அங்கு இருந்ததாகக்  குறிப்பிடுகிறது.  . . ."

அவர் கருத்துப்படி முதலில் போர்ப் படையாளர்களைக் குறிப்பிடத்தான் இச்சொற்கள் பயன் பட்டு வந்தன என்பதாகும். ஆனால் பிற்காலத்தில் முற்றிலும் மாறி அவ்வப்போது சமூக நிலைமையைக் குறிக்கும் சொற்களாக மாறி விட்டன. 

மதராசபட்டினத்திலிருந்த வலங்கை இடங்கைக் குழுக்களுள், அவ்வப்போது, பேதங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. இவை கட்டுக்கடங்காமல் பல தடவைகள் குழப்பமூட்டிக் கொண்டிருந்தன. அப்போது அறிந்திருந்த படி, பேரி செட்டிகள், கைவினையாளர்கள், நெசவாளிகள், தோல் பதனிடுவோர் முதலானோர் இடங்கைக் குழுவில் இருந்தனர். வெள்ளாளர்கள், ஆரிய வைசியர்கள் (கோமுட்டிகள்), வன்னியர்கள், ஆதி திராவிடர்கள், வலங்கையினராக இருந்தனர். இவர்களுள் சண்டைகள் மூண்டதற்குக் காரணம், திருமணம் போன்ற நல்லவை நடக்கும் போதும் சாவு ஊர்வலம் போன்றவை நிகழும் போதும், அந்நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதைகள் குறித்தும், அவைகளுக்கான ஊர்வலங்கள் செல்லும் வழிகள் பற்றியும் தான்! 

இரண்டு குழுவினரும் அணியும் உடைகளில் கூட சில உரிமைகள் கொண்டாடப்பட்டன. அதே போல அவர்களது விழாக்களின் போது அமைக்கப்படும் பந்தல்கள் கூட அவர்களுக்குள் சச்சரவை ஏற்படுத்தின. கிட்டத்தட்ட அயர்லாந்து ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் இருந்த இடைக்காலப் பிரச்சினைகள் போலத்தான் இவையும் இருந்தன என்பது தான் உண்மை. அங்கும் இதே போல மிகச் சிறிய பிரச்சினைகள் பெரியவையாக்கப்பட்டு, அவற்றால் போர்களே மூண்டிருக்கின்றன எனப் பார்க்கையில் இவை போன்ற பிரச்சினைகள் தமிழ் நாட்டில் மட்டும் நடந்ததாக சொல்ல இயலாது.

ஆங்கிலேயரின் மதராசபட்டினத்து வருகை, ஒரு புதிய வணிக எழுச்சியை உண்டாக்கிற்று. இந்த அயல் நாட்டு வணிகத்தால் ஈர்க்கப்பட்ட தென்னிந்தியர்கள் பல இடங்களினின்றும் மதராசபட்டினம் வந்து சேர்ந்தனர். அன்றிருந்த நிலையில் ஆங்கிலேயர்களுடன் வணிகம் செய்து பொருளீட்டும் வர்க்கம் சமூகத்தில் ஒரு தனி அந்தஸ்தையும் பெற்றது. ஆகையால் அவர்கள், தமது ஜாதிகளைப் பிரித்துக்கொண்டு இடங்கை வலங்கையினராகப் பிரிந்த போது,  அவர்களுள் உயர்வு தாழ்வு பேதமும் தலை தூக்கலாயிற்று.  

தென்னகத்தில், பல இடங்களிலிருந்தும் வந்த வணிகர்களும் அவர்களுக்கு உதவ வந்த பல தொழில் விற்பன்னர்களும் ஆங்கிலேயர் வந்த சில வருடங்களுக்குள் மதராசபட்டினத்தை நோக்கிப் புலம் பெயர்ந்தனர். சிறு குப்பங்களாக மீனவர்களுடன் மட்டுமேயிருந்த இந்த ஊர் ஜனத்தொகையிலும், பரப்பளவிலும் பெருக ஆரம்பித்தது. அவ்வாறு பெருகுகையில் பல சமூகப் பிரச்சினைகளும் எழுந்தன. அதில் முக்கியப் பிரச்சினை சமூக நியதிகளும் உரிமைகளும் அவற்றால் உண்டான குழப்பங்களும் தாம். 

மதராசபட்டினத்தின் ஆங்கிலேயர் காலத்து முதல் பிரிவுப் பிரச்சினை 1652-53 ல் தான் ஏற்பட்டது. இதன் பிறகு அரசு கொடுத்த ஆணைப்படி பொதுவாக, இந்தியர் வாழ்ந்து கொண்டிருந்த ஊர்ப்பகுதியின் கிழக்குப் பாகம் இடங்கையினர் இருக்கும் பாகமாகவும், மேற்குப் பாகம் வலங்கையினர் வாழும் பாகமாகவும் ஆக்கப்பட்டது.  

இரு பிரிவினருக்கும் இடையில், 1707 ல் ஒரு பெரிய பேதம் உருவாயிற்று. இதில் பொருட்சேதமும் உண்டாயிற்று. அது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குத் தொடர்ந்தது. சண்டை மூண்டதற்குக் காரணம், பெத்தநாயக்கன் பேட்டையிலுள்ள சில தெருக்களைப் பயன் படுத்துவதில் தான்! கலகத்தை அடக்க இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். அப்போது பேமாஸ்டராக இருந்த ராவொர்த் எனபவர் கலகத்தைக் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டார். அப்போது வலங்கைப் பிரதிநிதியாக சேரப்பாவும் நாராயணன் எனபவரும், இடங்கைப் பிரதிநிதிகளாக காலவாய்ச் செட்டியும், வெங்கட செட்டியும் அழைக்கப்பட்டனர். ஜூலை மாதத்தில் ராவொர்த் ஒரு வரைபடம் தயாரித்து அதில் இரு பிரிவினர்கள் இடங்களும் குறிப்பிட்டார். மேற்குப் பாகம் முழுதும் வலங்கையினரால் குடியேறப்பட்டிருந்தது. ஆனால் அதில் இரண்டு வீதிகளில் (பிரிட்ஜ் கேட் வீதி, பெத்தநாயக் வீதி) இடங்கையினர் இருந்தனர். இந்த வீதிகளில் சில வலங்கையினர் இருந்தனர் அரசு அம்மாதிரி இருந்த இடங்கையினரை அவ்விடங்களை விட்டுக் காலி செய்து கிழக்குப் பக்கம் செல்லுமாறு உத்தரவிட்டனர். அங்கு அரசு எல்லைக் கற்களை நட்டுவிக்கவும் ஏற்பாடு செய்தது. இந்த ஆணை 17, ஜூலை 1707 ல் இடப்பட்டது. 

ஆனால் அம்மாதிரி நடப்பட்ட கற்களில் ஆகஸ்டு மாதம் சில அரசுக்கு விரோதமான வாசகங்கள் எழுதப்பட்ட காகிதங்கள் ஒட்டப்பட்டிருந்தன! தவிரவும் வலங்கையினர் அவர்கள் தடுக்கப்பட்ட இடத்தில் ஒரு திருமணம் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் அவர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை சௌல்ட்ரி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அப்போது பழைய நிலைமைகளை எடுத்துக்கூறி அரசுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இதற்குள், பல வலங்கையினர் சாந்தோமுக்கு ஓடிவிட்டனர். மற்றவர்கள் தமது இல்லங்களுக்குள் தம்மையே அடைத்துக் கொண்டுவிட்டனர். கவர்னர் பிட் இதில் ஃபிரேசர் எனபவருக்குச் சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகித்து, அவர் மீது குற்றம் சாட்டினார். ஃபிரேசரோ தம்மீது சாட்டப்பட்ட குற்றங்களை நிரூபிக்கக் கேட்டார். கவுன்சில் கவர்னர் வேண்டுகோளுக்கிணங்கி, ஃபிரேசரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்தது.   

ஆகஸ்ட் 25ம் நாளன்று கவர்னர் பிட் இருதரப்பினரையும் அழைத்து அந்தப் பிரதிநிதிகளை ஓர் அறையில் தனியே இருத்தி அவர்களுக்குள் இருக்கும் பேதத்தைப் பற்றித் தீர்மானிக்கச் சொன்னார். அப்படி அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, பெத்தநாயக்கன்பேட்டை முற்றிலுமாக வலங்கையினருக்கும், முத்தியால்பேட்டை முற்றிலுமாக இடங்கையினருக்கும் ஒதுக்கப்பட வேண்டுமென ஆயிற்று. ஆனால் கரையோரம் வாழும் மீனவர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாதெனவும் தீர்மானிக்கப்பட்டது. எல்லா மாற்றங்களும் 1708 ஜூன் முதல் தேதிக்குள் செய்து விட வேண்டுமெனவும் தீர்மானித்தனர். ஆனால் சாந்தோம் சென்ற பலரால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அங்கேயே இருந்தனர். அப்போது கவுன்சில், சூரப்பா, வெரொனா, சுங்கராமா மற்றும் ஆதி செட்டி எனபவர்களை வலங்கைக்காகவும், கால்வே செட்டி, வெங்கட செட்டி, பீதாம்ப செட்டி மற்றும் கார்னப்பா செட்டி முதலானோரை இடங்கைக்காகவும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் இவர்கள் 25ஆம் தேதியன்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அங்கீகரித்து கம்பெனிக்கு ஒத்துழைப்பதாக அறிவித்தனர். அரசு, அவ்வாறு ஊரை விட்டுச் சென்றவர்களில், செப்டம்பர் 10ந் தேதிக்குள் திரும்பி வந்து விடுகிறவர்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு அளிப்பதாகவும் அறிவித்தது. அந்த நாளுக்குள் அந்தக் கற்கள் அகற்றப்பட்டு விட்டன. ஆனால் ஊரை விட்டு ஓடியவர்களிடமிருந்து, கடுமையான பதில் தான் வந்தது. அவர்கள் அதில் கம்பெனியைச் சரியாக மற்றொரு முறை பழைய ஆவணங்களைப் பரிசீலிக்குமாறு கூறினர். செப்டம்பர் 14ம் தேதியன்று, பெர்சியர்கள், பட்டான்கள், மற்றும் ஆர்மேனியர்கள் தாங்கள் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வதாக முன் வந்தனர். நாராயணன், மற்றும் முல்லா, பாப்பா பிராமணி மூவரும் இதற்காக சாந்தோம் நோக்கிச் சென்றனர். ஆனால் அவர்கள் சாந்தோம் வாயிலிலேயே நிறுத்தப்பட்டனர். சின்ன கேப்டன் என்று அவர்களால் அழைக்கப்பட்ட ஃபிரேசர் அங்கு வர வேண்டுமெனவும் அவரின்றி ஒரு முடிவும் எடுக்கப்பட மாட்டாதெனவும் அங்கு கூடிய மக்கள் கூக்குரலிட்டனர்.  

அப்படி ஏற்படுத்தப்பட்ட குழப்பம் அரசுக்கு,  ஃபிரேசர் மேலிருந்த சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதாய் இருந்தது! அப்போது அங்கு வந்திருந்த நவாபின் பிரதிநிதியும், கவர்னர் பிட்டைச் சென்று பார்த்துத் தனது சந்தேகத்தையும் கூறியிருப்பார் போலும். 

ஆகையால் அவரும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் பின்னிருந்து மூட்டிவிட்டவர் ஃபிரேசர் என்பது தெரிந்து விட்டதாகச் சொன்னார். ஆகையால் ஃபிரேசர் கைது செய்யப்பட்டார். அப்போது புதிதாக சாந்தோம் கவர்னராக நியமிக்கப்பட்ட ஒரு வலங்கை ஹிந்து மனிதரின் போக்கு தான், படைபலத்தைப் பயன் படுத்தி கலகக்காரர்களை அடக்க நினைத்த அரசின் முயற்சியை நிறுத்தியது. நவம்பர் ஆரம்பத்தில் இடங்கைப் பிரிவினர் தாங்கள் அமைதியான வாழ்க்கை  நடத்திக்கொண்டிருப்பதாகவும், கருப்பு டவுனுக்குச் சுவர் கட்ட தாங்களே ஒரு பகுதி வரி கட்டுவதாகவும் தெரிவித்தனர். அதன் படி முத்தியால்பேட்டை அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமெனவும், பெத்தநாயக்பேட்டை வலங்கைக்கு அளிக்கப்படலாமெனவும் தெரிவித்தனர். அப்போது, நெசவாளிகளும், எண்ணெய் தொழிலாளர்களும் தமது பிரிவுகளைப் பற்றிச் சரியாக அறிந்திருக்கவில்லை. 1708, ஜனவரி 17 அன்று நெசவாளிகள், தாம் இடங்கையைச் சேர்ந்தவராகவும், எண்ணெய்த் தொழிலாளிகள்  வலங்கையைச் சேர்ந்தவர்களாகவும், அறிவித்தனர் இது ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது ஏற்பட்ட புதியதொரு ஒப்பந்தத்தின் படி, கிட்டத்தட்ட 500 வீடுகள் இரு வகுப்பினரிடையே மாற்றிக்கொள்ளப்பட்டன. அதன் படி பெத்தநாயக்கன் பேட்டையின் சில பகுதிகள் இடங்கையினரால் பயன் படுத்தப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் கவர்னர் பிட் ஆமோதிப்புடன் ஆணையாக ஆயிற்று. 

ஆயினும் 1716ல் திரும்பவும் சச்சரவுகள் உண்டாயின. அப்போது இடங்கைச் செட்டிகள், வலங்கை கோமுட்டிகள் மீது பழி சுமத்தினர். அதன்படி, வலங்கையினர், தமது பட்டங்களை பயன் படுத்துவதாகவும், தமது தெய்வங்களுக்கு முன்னால் சில பூஜைகள் செய்து விட்டதாகவும் குறை கூறினர். அப்போது கவுன்சில், இருதரப்பினருக்கும் ஓர் ஆலோசனையை அளித்தது, அதன் படி, இரு தரப்பினர்களும், சம எண்ணிக்கையிலான பிராமணர்களைத் தமது பிரதிநிதிகளாக வைத்துக்கொண்டு அவர்கள் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு முடிவு காணலாம் என்றிருந்தது. ஆங்கிலேயர்கள் சாதாரணமாகப் பிராமணர்கள் பாரபட்சமின்றி முடிவெடுப்பார்கள் என நம்பியிருந்தனர். இது அந்த சமயத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், அந்த முயற்சி தோல்வி அடைந்தது. சில நாட்களில் வீட்டு வேலை செய்பவர்களெல்லோரும் (சமையற்காரர்கள், தண்ணீர் சுமப்பவர்கள், கூலிகள், பல்லக்குத் தூக்கிகள் முதலானோர்) தமது வேலையைத் துறந்து விட்டு, கையில் கண்ட ஆயுதங்களுடன், கருப்பு (இப்போதைய ஜார்ஜ் டவுன்) டவுனில் பெரிய கோஷத்துடன் வலம் வந்தனர். அங்கே வரும் நீரைக் கூட வர விடாது தடுத்தனர். அவர்களில் தலைவர்களாகக் கருதப்பட்டவர்களை அரசு, சங்கிலியால் பிணைத்துச்  சிறையில் அடைத்தது. அதே வருடம் டிசம்பரில், செட்டிமார்களும், தமது எதிர்ப்பைக் காட்ட, தங்கள் கடைகளை மூடி விட்டனர். அதன் பயனாக இடங்கைப் பணியாளர்கள் வேலைகளும் நின்று போயின. தமது தேவைகளின் கருத்தையும் மனத்தில் கொண்டு, காலத்தின் அவசியம் கருதி, அரசு இதில் தலையிட முன் வந்தது. அவர்கள் பிராமணர்கள் முடிவையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் கவர்னர் பிட் கூறியது போலவே இரு வகுப்பினரையும் பிரித்து வைத்து, அவர்களுக்குள் சண்டைகள் வராது பார்த்துக்கொள்ள வேண்டி அவர்களது கோவில்களை அவரவர்களே பார்த்துக்கொள்ளவும் எனவும் சொல்லித் தாற்காலிகச் சமாதானம் அரசு ஏற்படுத்தி வைத்தது.  அது அப்போதைக்கு ஒரு வழியாகக் காணப்பட்டாலும் அந்தப் பிரிவினை சமாதானத்தை நிலை நிறுத்தவில்லை. 1787 லிலும், 1790 லிலும் மறுபடியும் சண்டைகள் உண்டாயின. ஒரு விதமாக முதல் சச்சரவு நிறுத்தப்பட்டது அதற்காக ஆகஸ்ட் 1786 5ம் நாள் ஓர் அரசு ஆணை வெளியிடப்பட்டது. அதன் படி, "இனி சச்சரவுகள் வராமலிருக்க, இடங்கை வலங்கை சாதியினர் தமக்குரிய உரிமைகளின் படி தமது விழாக்களைக் கொண்டாடலாம். ஒருவர் விஷயத்தில் மற்றவர் தலையிடலாகாது. எஸ்பிளனேட் பொது இடமாகையால் இருவகையினரும் கம்பெனியின் விதி முறைகளின் படி அவ்விடத்தைப் பயன் படுத்திக் கொள்ளலாம்" என்றிருந்தது.

ஆனால், சில மாதங்களிலேயே இரு வகுப்பினருக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டாயிற்று. இது திருவொற்றியூர் கோவில் சம்பந்தமானது. இந்த வேறுபாட்டைக் குறித்துப் புரிந்து கொள்ள முதலில் இந்தக்கோவிலைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். திருவொற்றியூர் ஆங்கில மேலாண்மைக்கு அப்பாற்பட்டிருந்தது. இந்த கிராமம், 1708 ல் தான் வேறு ஓர் இடத்தில் கூறியுள்ளபடி, ஆங்கிலேயர் கைக்கு வந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் வரி வசூலிக்க, தமது இந்திய வணிகர்களையே பயன் படுத்தினர். அம்மாதிரியான பணிக்கு இந்த கிராமம், ஆங்கிலேயர்களால், பேரி செட்டி சமூகத்தைச் சேர்ந்த தம்பு செட்டி எனபவருக்கு உரிமையாக அளிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த தியாகராஜ ஸ்வாமி கோவில் நிர்வாகமும் அவருக்கு ஒப்படைக்கப்பட்டது. இது ஒரு புராதனமான சிவன் கோவில். அவர் அக்கோவிலுக்குத் தர்மகர்த்தாவாகச் செயல் பட்டார். சில வருடங்களில் அவரது வணிகம் குறைந்து அவரது செல்வாக்கும் ஒடுங்கியபோது, இந்த உரிமை, லிங்கி செட்டி என்ற மற்றொரு பேரி செட்டிக்குத் தரப்பட்டது. அவர் கைக்கு இந்த கிராமம் 1741ல் வந்தது. லிங்கி செட்டி, தங்க வியாபாரம் செய்து வந்தவர். ஆகையால் அவருக்கு கம்பெனியின் தங்கசாலையும் தரப்பட்டிருந்தது. தவிரவும் இந்த லிங்கி செட்டி தான் கம்பெனியின் முக்கியமான துணி வணிகர். 1757 நவம்பரில் இந்த மனிதர் காலமானபோது, அவருடைய குமாரனான செப்பெருமாள், (தெப்பெருமாள் என்றும் அழைக்கப்பட்டவர்) திருவொற்றியூருக்கு வரி வசூலிக்க நியமிக்கப்பட்டார். ஆகவே  இடங்கை வகுப்பைச் சேர்ந்த தெப்பெருமாள் செட்டி மேற்பார்வையில் இவ்விடம் செயல் பட்டுக்கொண்டிருந்து. ஆனாலும் இடங்கை வலங்கை என்ற இரு வகுப்பினராலும் தொழப்பட்டுக் கொண்டிருந்த கோவிலாகவே இருந்தது. 

1786ம் வருடத்து ஆகஸ்டு மாதத்தில், ஒரு நாள் இடங்கை வகுப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களது பணிகளில் வலங்கையினர் குறுக்கிடுவதாக முறையீடு செய்தனர். தவிரவும், அவர்கள் வகுப்பைச் சேர்ந்த குப்பு செட்டி எனபவரை வலங்கையினர், தாக்கினதாகவும் புகார் எழுந்தது. 'கொண்டைக்கட்டி வெள்ளாளர்களா'ல் மற்ற வலங்கையினர் துணையுடன், "சுமார் ஆயிரம் பறையர்களை ஏவி, பூசாரியின் தீவட்டி வராமல்" செய்தனர் தவிரவும் இடங்கையினரின் தலைவர்களில் ஒருவரான, குப்பு செட்டி என்ற சொக்கப்ப செட்டியின் சகோதரரை "இந்தப் பறையர்கள்" தாக்கினதாகவும் குறை கூறினர்.  வலங்கையைச் சேர்ந்தவர்கள் தான் கலகத்தை ஆரம்பித்ததாகவும் தெரிந்தது. 

அந்தக் கலகம் அடக்க முடியாமல் போகவே, அது மதராசபட்டினத்திற்கும் பரவியது. சொக்கப்ப செட்டியின் தலைமையில் ஓர் இடங்கைக் கூட்டம், வலங்கையினரைத் தாக்கியது. அங்கே கலகத்தை அடக்குவதற்காக அனுப்பப்பட்ட சிப்பாய்களும் இடங்கையினரால் தாக்கப்பட்டனர். இது ஆங்கிலேயர்களுக்கு ஆத்திரத்தையூட்டியது. ஆதலால், அவர்களால் மிகவும் தீவிர முயற்சியெடுக்கப்பட்டு, அப்போதைக்குக் கலகம் நிறுத்தப்பட்டது. 

ஆனால் இம்மாதிரியான சச்சரவுகள் மறுபடியும் வரத்தான் செய்தன! நாற்பது வருடங்களுக்குப் பின்னர், 1828-ல், மற்றொரு கலகம் உண்டாயிற்று. இதுவும் கோவிலைப் பற்றியது. இதே கோவிலின் குருக்கள் தர்மகர்த்தாவுக்கு எதிராகச் செயல் பட்டதாகப் புகார் எழுந்தது. அங்கிருந்த ஒரு விக்கிரகம் அந்தக் குருக்களால், வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப் பட்டதாகவும் அதனால் நவராத்திரி விழா ஒத்திப்போட வேண்டியதாயிற்று எனவும் அவர் மீது குற்றம் சாற்றப்பட்டது. ஆங்கில அதிகாரம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முற்பட்டது. 1831 ல் தர்மகர்த்தாவுக்கும் மற்ற கோவில் பணியாளர்களுக்கும் இடையில் மோதல் உண்டாயிற்று. இத்தடவை இதற்குக் காரணம், கோவிலில் நடனமாடும் பெண்கள் தடுக்கப்பட்டது தான். அப்போது கலெக்டராக இருந்த சி. ஆர். காட்டன் சட்ட ரீதிகளுக்கிணங்க, தர்மகர்த்தா அதிகாரம் மதிக்கப்பட வேண்டியது என்பதை அறிவுறுத்தினார். ஆனால் அந்த தர்மகர்த்தா முதலில் சரியான முறையில் நியமிக்கப்பட்டாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. 

அந்தக் குற்றச்சாட்டிற்கு ஒரு காரணம் இருந்தது. 1750 வருடங்களில் இந்த தர்மகர்த்தா அதிகாரம் வலங்கையினர் கையில் இருந்தது. ஆனால் அவர்கள் பணமுடையினால் கோவில் நிர்வாகம் சரி வரச் செய்ய இயலாது போனார்கள். அப்போது நிதி உதவி செய்து, கோவிலின் பணிகள் தொடர்ந்து நடக்க உதவி புரிந்தவர் இடங்கையைச் சேர்ந்த லிங்கி செட்டி ஆவார். அப்போதிருந்து இடங்கையினரே அந்தக் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்துள்ளனர். காட்டன் காலத்தில் இருந்த தர்மகர்த்தா அருணாசலச் செட்டி எனபவர் இந்த லிங்கி செட்டியின் மூன்றாவது தலைமுறையினராவார். ஆகையால் காட்டன் இவரைத் தான் தர்மகர்த்தாவாக இருக்க விரும்பினார். தவிரவும் காட்டன் சொற்படி, அருணாசல செட்டி தமது சொந்தச் செலவிலேயே கோவிலுக்குப் பல நற்பணிகள் புரிந்துள்ளதாகவும் அறியப்பட்டது. தொடர்ந்து ஆங்கில மேலாண்மை அவரது பரிந்துரையையே ஏற்றுக் கொண்டது. 

மதராசபட்டினம் முன்னரே பார்த்தது போல, சில வருடங்கள் ஆங்கில அரசால், கடலூர் கோட்டை ஆளுமைக்குக் கீழ் தான் செயல் பட்டு வந்தது. திரும்பவும், 1752, பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியன்று, கோட்டை தனிப்பட்ட ஆளுமையை அடைந்தது என்பதையும் கண்டோம். அப்போது ரிச்சர்ட் பிரின்ஸ் எனபவர் இரண்டாவது நிலையில் இருந்தார். அவர் எதிர்கொண்ட பிரச்சினைகளில் இடங்கை வலங்கை பூசல்களும் ஒன்றாகும். அந்தப் பிரச்சினை, பிரெஞ்சுக்காரர்கள் மதராசபட்டினத்தை விட்டுச் சென்ற பிறகு, வட பகுதியில் இருந்த நிலத்தைப் பற்றியது. 1725 ல் கட்டப்பட்ட (முத்தியால் பேட்டையில், அரண்மனைக்காரத் தெருவில்)  கச்சாலீஸ்வரர் கோயில், நிர்வாகம், இவ்விரு பிரிவினருக்கும் இடையில் கருத்து வேற்றுமையை உண்டாக்கியிருந்தது. வலங்கையினர், துளசிங்கச் செட்டியின் தலைமையில், ஒரு கருத்தை வைத்தனர். அதன் படி பிரெஞ்சுக்காரர்கள், தரை மட்டமாக்கிவிட்ட அவ்விடம், முன்பே போல வீதிகளுடன் அமைக்கப்பட வேண்டும்; தவிரவும், இடங்கையினர் வலங்கையினர் இடத்தில் வரக்கூடாது என்பதாகும். அதே போல, கச்சாலீஸ்வர கோயில் தெருவில், முன்பே போல பிராமணர்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு ஷரத்தாக இருந்தது. இந்த இடம் பிரெஞ்சுக்காரர்கள் ஆளுமையில் நாட்டியப் பெண்களுக்குத் தரப்பட்டிருந்தது. இடங்கையினர் வீரண்ணா மற்றும் சிலர் தலைமையில், தரை மட்டமாக்கப்பட்ட அந்த இடம், பொது இடமாக அறிவிக்கப்பட வேண்டுமென்றனர். அதற்கு அவர்கள் தந்த காரணம், அவர்களால், கோட்டைக்குச் செல்கையில், அது பொது இடமாக இருந்தால் தான் வலங்கையினர் இடங்களைத் தவிர்த்துச் செல்ல முடியும். கவுன்சில் இவற்றையெல்லாம், தீர விசாரித்து, பிட் காலத்து முடிவுகளையும் மனதில் கொண்டு, மோர்ஸ் எனபவரின் ஆலோசனையையும் ஏற்று, ஒரு குறிப்பு தயாரித்தது. (ஆவணம் மார்ச் 3, 1749/50 தேதியிடப்பட்டது).

"கோட்டையின் மத்தியப்பகுதி கதவு மூடப்பட்டு விட்டதால், இடங்கையினரால், வெள்ளை டவுனுக்கு வர வேண்டுமெனில், வலங்கையினரின் இடங்களைத் தாண்டாமல்  வர இயலாது. அதை வலங்கையினர் அனுமதிப்பதில்லையாதலால் ஒரு வீதி கட்ட வேண்டியுள்ளது. இதற்காக 40 அடி அகலமான இடம் ஒதுக்கப்பட வேண்டும். இந்த இடம் இருவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இது சௌல்ட்ரி கேட்டிலிருந்து கடலை நோக்கி இருக்கும். அதனால், இடங்கையினர், பெருமாள் கோயிலிலிருந்து நேராக, வெள்ளை டவுனுக்கு வரலாம். அங்கே திரும்புமிடத்தில் வலது பக்கமாகத் திரும்பாமல் இடது பக்கமாகத் திரும்பினால் திருவல்லிக்கேணி கோயிலுக்குப் போகலாம். வலங்கையினரும், இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். "ஆனால் இரு பிரிவினருக்கும் சண்டை சச்சரவு வராமலிருக்க இந்தப் பொது வீதியில் ஒரு விதமான ஊர்வலங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது."

நாட்டியப் பெண்கள் கச்சாலீஸ்வரர் கோயில் வீதியில் குடியிருக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஆங்கிலேயர் கூறினர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, எஸ்பிளனேட் வீதியும் இரு பிரிவினருக்கும் பொதுவானது என அறிவிக்கப்பட்டது. இந்தக் கோயிலைப் பற்றிய ஒரு குறிப்பு: 1728 நவம்பர் 4ஆம் தேதியினது உள்ளது. அதில் இந்தக் கோயிலில் வந்த சச்சரவை ஜேம்ஸ் மேக்ரே கோட்டையில் அப்போது தலைவராக இருந்தவர் சமாளித்ததாகக் கூறுகிறது

"இடங்கையினர் சமீபத்தில் கச்சாலீஸ்வரர் கோயில் என்ற ஒரு கோயில் கட்டியுள்ளனர். முத்தியால்பேட்டையில் உள்ள காலவாய்ச் செட்டிக்குச் சொந்தமான தோட்டத்தில் இது கட்டப்பட்டது. ஆனால் அதன் ஒரு பகுதி வலங்கையினருக்குச் சொந்தமான இடத்தில் ஊடுருவியதாகத் தெரிந்தது. ஆகையால் குழப்பம் ஏற்பட்டது. அக்குழப்பம் தீவிரமாவதற்கு முன்னரே மேக்ரே குறுக்கிட்டு, அமைதியை உண்டாக்கி, இடங்கையினருக்கு நுழைவாயில் தனியாக கட்ட ஏற்பாடு செய்தார். அதற்காக அவர் அமைத்த குழுவில், கோஜா பெட்ரஸ், கோஜா சர்க்கிஸ், பெத்தநாயக் மற்றும் சில முசல்மான்கள் இருந்தனர். இவர்களது தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டது"  இந்த ஆவணத்திலிருந்து நமக்கு கச்சாலீஸ்வரர் கோயில் கட்டிய ஆண்டு தெளிவாகிறது.  
 
கபாலீஸ்வரர் ஆலயத்திலும் இரு பிரிவினருக்கும் இடையில் ஒரு கலகம் எழுந்தது. காரணம் அங்கு எழுப்பப்பட்ட தோரணங்கள், பூப்பந்தல்கள் பற்றியது. 1789 ல் வலங்கையினர், தாங்கள் கோவில் விழாவிற்காக அலங்காரத்திற்கு எழுப்பியிருந்த தோரணங்களையும் பூப்பந்தல்களையும் இடங்கையினர் அழித்ததாகக் குற்றம் சாட்டினர். அப்போதிருந்த ஆங்கில அதிகாரியின் கட்டளைகளையுங்கூட இடங்கையினர் சட்டை செய்யவில்லை! ஆகையால் வலங்கைப் பிரிவைச் சேர்ந்த தோட்டக்காரர்கள், மற்றும் பல தொழிலாளிகள் வேலை செய்ய மறுத்ததினால் கம்பெனியின் வணிகத்திற்கு இடையூறு விளையும் என்று சாந்தோமிலிருந்த முத்துப்பிள்ளை ஆங்கிலேயர்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் இடங்கையினர் விடுவதாக இல்லை. அவர்கள் குற்றச்சாட்டு இவ்வாறிருந்தது.       
"1. இடங்கையினருக்கு ஐந்து வர்ணங்கள் பயன் படுத்தும் அதிகாரம் உள்ளது. வலங்கையினரோ வெள்ளை வர்ணம் மட்டும் தான் பயன் படுத்தலாம். இந்த நியதியைக் கடந்து வலங்கையினர் பல வர்ணங்களைப் பயன் படுத்தியுள்ளனர்.

2. இரண்டாவதாக, வலங்கையினரை, சாந்தோம் வணிகரான முத்துப் பிள்ளை ஆதரிப்பதற்குக் காரணம் அவரும் வலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் தான். தவிரவும் கோட்டையில் துபாஷிகளாக இருக்கும் அகமுடையார்களும் ஆதரிக்கின்றனர்.

3. இந்த விதமாக, ஒருவிதமான அதிகாரப் பூர்வமான ஆதரவும் எங்களுக்கு இல்லை. ஆகையால் ஆங்கிலேய மேலாண்மை இதைக் கவனிக்க வேண்டும்."
(எட்கர் தர்ஸ்ட்டன் அகராதிப் படி, அகமுடையார்கள் விவசாயிகள் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தம்மை வெள்ளாளர் எனக் கூறிக்கொண்டதாகவும் தெரிகிறது.)

இதற்கு ஒரு தீர்வு காணவேண்டி ஆங்கில மேலாண்மை அப்போதிருந்து இரு வகுப்பினருமே, கோட்டைக் கொடியின் சிவப்பு வெள்ளை வர்ணங்களை மட்டுமே தமது கொடிகளில் பயன் படுத்தலாம் என உத்தரவிட்டது. இம்மாதிரி உத்தரவுகள் ஏற்கனவே இருந்தன என்றாலும் அவைகள் மதிக்கப்படவில்லை!
 
அப்போது தாற்காலிகமாக அந்தக் கலகம் ஒடுக்கப்பட்டு சமாதானம் நிலவியது. ஆனால் அடுத்து, சாந்தோமில், 1789 நவம்பரில், ஒரு கோவில் திருவிழாவின் போது கொடிகள் பயன் படுத்தப்பட்ட விதத்தில் தகராறு உண்டாயிற்று. 1790, ஏப்ரல் 13ம் தேதியிட்ட ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் படி, "வலங்கை இடங்கையினரிடையில் சமீபத்தில் சாந்தோமில் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக இனி அம்மாதிரி சண்டைகள் வராதிருக்க வேண்டி, எந்தப் பிரிவும் தமது விழாக்களின் போது கொடிகள் பயன் படுத்தக்கூடாதென அறிவிக்கிறோம்" என்று கூறப்பட்டது. ஆனால், இந்த ஆணை எதிர் பார்த்த பலனை அளிக்கவில்லை. அதே வருடம் செப்டம்பர் மாதம் 5 ம் தேதியன்று, வலங்கையினர் வெள்ளைக்கொடியை ஏற்றியது மட்டுமின்றி, இடங்கையினர் தமதெனக் கொண்டாடிய வண்ணக் கொடிகளையும் வலங்கையினர் பயன் படுத்தினர்!  உடனே ஆங்கில மேலாண்மை அவர்களது கொடியான செயிண்ட் ஜார்ஜ் கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியும் எந்த விழாவின் போதும் கொடியேற்றப்படக் கூடாதென அறிவித்தனர். அதே போல கூட்டம் கூடுவதும் தடுக்கப்பட்டது. அப்போது தலைவராக தாற்காலிகப் பணி செய்து கொண்டிருந்த மார்கன் வில்லியம்ஸ், 17, 18 20 தேதிகளில் இவர்களிடையில் கூட்டம் போட்டுப் பேசி, சமாதானப்படுத்த முயன்றார். வலங்கையினர் தமது வீடுகள் சூறையாடப்பட்டது மட்டுமின்றி தமது மக்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் குறை கூறினர். தவிரவும், இடங்கையினர் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், அவர்களுக்கு ஆங்கிலப் படையின் உதவி அளிக்கப்பட்டதாகவும் கூறினர். ஆனால் இடங்கையினரோ, வலங்கையினர் பல அட்டூழியங்கள் செய்ததாகக் குறை கூறினர். 

அப்போது கவர்னருக்குத் துபாஷியாக இருந்தவர் தெலசிங்கப் பிள்ளை (சில இடங்களில் இவரது பெயர் தெலசிங்கச் செட்டி என்றும் கூறப்படுகிறது. இது சற்றே முரண்பாடாக உள்ளது. ஏனெனில் செட்டி ஜாதி, இடங்கையைச் சேர்ந்தது பிள்ளையோ வலங்கையைச் சேர்ந்தவர்கள்) அவரது துணையுடன்தான், ஆங்கில மேலாண்மை, மேலே கூறிய "இனி எந்தப் பிரிவும் செயிண்ட் ஜார்ஜ் கொடியைத் தவிர வேறு எந்தக் கொடியும் பறக்கலாகாது" என்று உத்திரவிட்டு, சமாதானத்திற்கு வழி செய்தது. ஆனால் இடங்கையினர், தமது பிரிவினரில் 89 பேர் சிறையில் இருப்பதாகவும் அவர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டுமெனவும் விண்ணப்பித்தனர். வலங்கையினர், கொலைக்காக நீதி வழங்கக் கோரினர். தம்பி செட்டி எனபவர் இடங்கையினருக்காக 20,000 பகோடாக்கள் செலுத்தி கையெழுத்துமிட்டார். அப்போது அவர்கள் செய்த முறையீடு இவ்வாறிருந்தது: "இதற்கு முன்பு கவர்னர் சாண்டர்ஸ் அப்போதிருந்த கோவில்கள் தமது பழக்க வழக்கங்களை வைத்துக் கொள்ளலாமெனவும் அரசு உத்தரவின்றி புதுக் கோவில்கள் கட்டப்படக்கூடாதெனவும் எழுப்பியிருந்த உத்தரவை மீறி, வலங்கையினர் கிருஷ்ணஸ்வாமி கோவில் எழுப்பி, அங்கு விழாக் கொண்டாடுகையில் தான் இந்தக் கலவரம் வந்தது. மாறாக இடங்கையாயினர் வழிபடும் காளஹதீஸ்வரா கோவில், சுமார் நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்னரே எங்களது மூதாதையரால் கட்டப்பட்டது. அங்கு நாங்கள் எங்கள் விழாக்களைக் கொண்டாடுகிறோம்". 

அதே நேரத்தில், வலங்கையினர் சார்பாக, பாலகிருஷ்ண செட்டி, எஸ். கிருஷ்ணசாமி செட்டி என்ற இருவரால் கையெழுத்திடப்பட்ட முறையீடும் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அவர்கள் கவர்னர் பிட் காலத்திய வரையறுத்தல்களையும் எடுத்துரைத்திருந்தனர். தவிரவும் சமீபத்திய சண்டைகளில் அவர்கள் அடைந்த நஷ்டத்திற்கு ஈடும் கேட்டனர். இவற்றையெல்லாம் ஆராய்ந்து அரசு இவ்வாறு ஆணையிட்டது (21 செப்டம்பர் 1790). 

"கருப்பு (ஜார்ஜ்) டவுனில் எழும் சச்சரவுகளுக்கெல்லாம் காரணம் கொடிகள் பற்றியது தான். முன்னரே நாங்கள் ஆணையிட்டது போல, கொடிகள் பறக்கவிடுவதைப்பற்றி ஆராய ஒரு கூட்டம் கூட்டப்படும். . ."

1795ல் மறுபடியும் வலங்கையினருக்கும் இடங்கையினருக்கும் இடையில் சச்சரவேற்பட்டது. ஆலங்காத பிள்ளை கட்டிய ஏகாம்பரேஸ்வரர் கோவில் நிர்வாகியான வைத்தியநாத பிள்ளை எனபவர், இந்த கோவில் இரு பிரிவினருக்கும் பொதுவானதெனவும், முன்னரே கண்டபடி கோயிலில் இரு வகுப்பினரும் தொழுது கொண்டிருந்தனர் என்றும் கூறினார்.  100 வருடங்களாக திருவிழாக்களும் ஊர்வலங்களும் தொந்தரவின்றி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். 29 மார்ச் அன்று, இடங்கையினர் கூட்டமொன்று, அந்தக் கோவிலின் நாட்டியப் பெண்கள் மீது மஞ்சள் நீர் தூவ முயன்றது.  அடுத்த நாளே அவர்கள் கத்தி கபடாக்களுடன் வந்து வருடாந்திர கோயில் திருவிழாவை நடக்கவொணாது தடுத்தனர். ஆனால் பெத்தநாயக்கன்பேட்டை, கடை வணிகர்களோ வலங்கையினர் தான் வந்து தாக்கியதாகப் பழி சுமத்தினர். அரசாங்கம், கேப்டன் அலெக்ஸாண்டர் ஆலன் எனபவரை அனுப்பி கலகத்தை அடக்க ஏற்பாடு செய்தது. அந்த மனிதர் சமாதான அறிக்கைகளைத் தெரிவிக்க அனுப்பிய தண்டோரா போடுபவர்கள் தாக்கப்பட்டார்கள்! 31 மார்ச் 1795 ல் எழுதப்பட்ட குறிப்பொன்றில், இவ்வாறு காணப்படுகிறது.

"இடங்கைப் பிரிவின் தலைவர்களான, தம்பு செட்டி, காவல்சேரி பொன்னப்ப செட்டி, சின்ன தம்பு நாயக், நல்ல மூத்த ஆசாரி மற்றும் சுங்க பட்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது நண்பர்கள், குழப்பம் உண்டாக்கினவர்கள், அவர்களது மனிதர்கள் இல்லையென்றும், அவர்கள் சாதாரணக் கலகக்காரர்கள் என்றும் கூறி அவர்களை விடுவித்தனர். அதற்குப்பிறகு சமாதானம் நிலவியது".

இடங்கை வலங்கை ஜாதிகளைப்பற்றி சி. எஸ். ஸ்ரீனிவாசாச்சாரி என்பவர் தீவிரமாக ஆராய்ந்து, ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அவர் கருத்துப்படி, "மதராசபட்டினத்து மக்கள் பல நூற்றாண்டுகளாகத் தமது முக்கிய இரண்டு ஜாதிப் பிரிவுகளைக் கொண்டிருந்தனர். மிகவும் சிறிய குழப்பம் போதும், அயர்லாந்தின் ஆரஞ்ச்மென், ரிப்பன்மென் அல்லது வெரோனாவின் மாணடேக்ஸ் காபுலெட்ஸ் மக்கள் போல சண்டைகள் உண்டாக்கிக் கொண்டனர். சாதாரணமாக, வலங்கையினர் எல்லா மேற்குடி மக்களாலும், ஆதி திராவிடர்களையும் கொண்டதாக இருந்தது. இடங்கையினரோ பாஞ்சாலர்கள் எனப்படும் ஐந்து வகைத் தொழிலாளர்களையும், சக்கிலியர்களையும், மற்றும் சில கீழ் ஜாதியினரையும் கொண்டதாக இருந்தது. பிராமணர்கள், சில வெள்ளாள ஜாதியினர் மற்றும் சில மேற்குடியினர் நடு நிலை வகித்தனர். வலங்கையினர், தமது திருமணச் சடங்குகளில், 12 கால்கள் கொண்ட மண்டபம் அமைப்பதற்கு உரிமை கொண்டவர்கள். இடங்கையினர் குதிரைச் சவாரி செய்யவோ ஹனுமான் கொடியைப் பறக்கவிடவோ உரிமையற்றவர்கள் என்று வலங்கையினர் நம்பினார்கள். ஆனால் இடங்கையினரோ தமக்கு இந்த உரிமை காளி மாதாவே வழங்கியிருப்பதாகச் சொன்னார்கள். 

டாக்டர் மெக்ளீன் குறிப்புப்படி அவர் காஞ்சீபுரத்திற்குச் சென்று பார்த்த போது கூட இந்த இரு பிரிவினருக்கும் தனித்தனி மண்டபங்கள் இருந்தனவாம். பிரச்சினை என்னவெனில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சமயங்களில் சாதிகள் தங்களுக்குள் பிரிவுகளை மாற்றிக்கொண்டன! ஆகையால் சரியாக எந்த ஜாதி எந்தப் பிரிவைச் சார்ந்தது என்று கூறுவது சாத்தியமில்லாததாக இருந்தது. 

எல்லா நூலாசிரியர்களும் இதே போலத்தான் அபிப்ராயப்படுகின்றனர். ஆகையால் சுலபமாக, எந்த ஜாதியினர் எந்தப் பிரிவைச் சேர்ந்திருந்தனர் என்பது, காலத்தையும் இடத்தையும் பொறுத்துத்தான் இருந்திருக்கிறது! 

இந்தப் பிரிவுகளின் இடையில் எழுந்த சச்சரவுகளைக் குறித்து நோபொரு கராஷிமா தனது நூலில் மிக விவரமாக எழுதியுள்ளார். அந்த விவரம் தென்னகத்து எல்லா இடங்களையும் குறித்துச் சொல்லப்படுகிறது. ஆனால் அது மதராசபட்டினத்தில் வேறு விதமாகத் தான் உருவெடுத்தது. அதைத் தமது ஆளுமையால் தமக்குச் சாதகமாகவும் ஆங்கிலேயர்கள் கையாண்டார்கள் என்பது தெளிவு! இதைப் பிற்காலத்தினர் சமூகப் பொருளாதாரப் பிரச்சினையாகத் தான் கண்டார்கள்.

------காண்பன யாதும் தமிழே--ந.சுந்தரராஜன்


காண்பன யாதும் 
தமிழே
கற்பனவும் தமிழே
பாராளும் ஆங்கிலத்திற்கும்
பண்டைய கிரேக்கத்திற்கும்
இலத்தீனுக்கும்
செம்மை செய்த வடமொழிக்கும்
முந்தையது 
யாதுமாகி நின்ற தமிழ்

பரவிக்கிடக்கும்
பாறைகளில்
அறுபதாயிரம்
கல்வெட்டாக
ஆயிரம் செப்பேடுகள்
பல்லாயிர
பனை ஓலைகளில்
விரவி யாதுமாகி
நிற்பது தமிழ்

தேமதுர
கொங்கு தமிழாய்
பாசக்கார
மதுரை தமிழாய்
எலெ என விளிக்கும்
நெல்லை தமிழாய்
மக்கா என 
செப்பும்
குமரி தமிழாய்
யாதுமாகி
முக்காலமும் ஆகி
நின்ற நிற்கும்
தமிழ்ந.சுந்தரராஜன்
சென்னை அரசு அருங்காட்சியகத்தின் நாணயவியல் பிரிவு காப்பாட்சியர்----

Thursday, October 7, 2021

காதலுக்குமுன்

-- தீனதயாளன் 


காதலுக்குமுன் 
எதுவும் பெரிதல்ல
எதுவும் ஒரு பொருட்டல்ல 

அன்பு சுகம்  வேண்டி
தானேயே  ஒழியும்
கண்ணீரைப் பொழியும் - ஏன் 
செந்நீரையும் சொரியும். 

துணைநலம் ஏங்கி
உடலைத் துடிக்கவிடும்
உயிரைத் தவிக்கவிடும் - ஏன்
வாழ்வையும் தொலைத்துவிடும். 

காதலின் உயர்வுக்கு - பிற
எல்லாம் சிறிதே!
எல்லாம் குறுந்துகளே!

வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு


-- முனைவர் ப.தேவி அறிவு செல்வம்


பொ.ஆ 2 முதல் பொ. ஆ13 வரை தமிழகத்தில் இருந்த எழுத்துமுறை வட்டெழுத்து. இவற்றுடன் கிரந்த எழுத்து கலந்ததுதான் மலையாள எழுத்து வடிவம். அவ்வாறான வட்டெழுத்துக் கல்வெட்டு மதுரை அருகே அருள்மிகு மணிகண்டீசுவரர் திருக்கோயிலில் உள்ளது.  

Devi1.jpg
கோயில் அமைப்பு:
இக்கோயிலில், அருள்மிகு மணிகண்டீசுவரர், அருள்மிகு உமா மகேஸ்வரி, அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரமாணிக்க பெருமாள் ஆகியோருக்கென மூன்று சன்னதிகள் தனித்தனியாக உள்ளன.  இக்கோயிலானது விமானம் இல்லாத கற்றளியாக உள்ளது. சிவன் கோயிலில் பெருமாளுக்குத் தனி சன்னதி உள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். 

வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு:
Devi.jpg
இக்கோயிலில் எஞ்சியுள்ள  வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று கூறும் செய்தி:
தூணி...விருநாழியும்..ம் நில்லிரு குறுணி தயி...(ரா)ணட்டு மந்த் ராதி...ணிரு தூணிய்ங் நெல்லு நூற்றிரு
(நன்றி தொல்லியல் மூத்த அறிஞர் திரு.ராஜகோபால்) 

பொ.ஆ950 வாக்கில் சோழருடன் போரிட்டு சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் கல்வெட்டு இது. அவனுடைய அதிகாரி கண்டன் சாத்தன் என்பவர் திரு மாத்தூரில் ஸ்ரீகண்ட ஈசுவரம் என்ற கற்றளி எடுத்து, நிலம் கொடுத்து, அதில் ஒரு பங்கில் வரும் நெல்லினை கோயில் வழிபாட்டுப் பொருள்களைப் பிரித்துக் கணக்கிட்டுக் கொடுத்துள்ளார். இவ்விவரங்களைச் சொல்லும் கல்வெட்டின் ஒரு பகுதியாக இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது(Ref SII 5No.864-866).

---

மாற்றம் தேடும் மாற்றுச் சிந்தனைகள்


 -- அ.குமரேசன்


தலைவன் தோழன்
ஆசிரியன் மாணவன்
என்று வராமல்
தலைவி தோழி
ஆசிரியை மாணவி
மட்டுமே வருகையில்
தலைவர் தோழர்
ஆசிரியர் மாணவர்
ஆக மாற்றுகிறது.

தாத்தனை அப்பனை
மாமனை அண்ணனை
அவனென்று சொல்லாமல்
பாட்டியை அம்மையை
அத்தையை அக்காளை
அவளென்று சொல்வது
உறவின் உரிமை
எனப்படுவதை மறுத்து
அவரென்று திருத்துகிறது.

மனுசியும் பூமியில்
எழுந்ததை மறைத்து
எல்லோருமாய் எழுந்தும்
பழக்கத்தின்பெயரால்
மனிதன் எழுந்தான்
என்றே கூவிடும்
வழக்கத்தை மாற்றி
மனிதர் எழுந்தாரென
சரிப்படுத்த முயல்கிறது. 

எழுத்துப் படிகளில்
பிழை திருத்துகையில்
என் கை
கொஞ்சம் மிகை?

 -- அ.குமரேசன்Wednesday, October 6, 2021

வ.உ.சி.யின் திரிசூலம் -- ஆ.சிவசுப்பிரமணியன்


voc5.JPG

இந்திய விடுதலை இயக்கத்தின் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவரான வ.உ.சிதரம்பரனார் (1872-1936) தனித்துவமான போராட்டங்களை மேற்கொண்டவர். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, வேறு யாரும் சிந்திக்காதது. அது ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ (சுதேசி நாவாய்ச் சங்கம்) என்கிற கப்பல் நிறுவனம். இந்திய கம்பெனி சட்டப்படி 16.10.1906-ல் இந்நிறுவனம் பதிவுசெய்யப்பட்டது. இதன் தொடக்க மூலதனம் ரூ.10 லட்சம். ரூ.25 முக மதிப்புள்ள பங்குகளின் விற்பனை மூலம் இது பெறப்பட்டது. 10,000 பங்குகளை விற்பது என்கிற வரம்பையும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தே பங்குத்தொகையைப் பெறுவது என்ற முடிவையும் இந்நிறுவனம் எடுத்திருந்தது. இதன் அலுவலகம் தூத்துக்குடியில் செயல்பட்டது.

voc2.JPG


இந்நிறுவனத்தை நடத்துவதற்கு இயக்குநர் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. நிறுவனத் தலைவராக பாலவநத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் நியமிக்கப்பட்டார். நான்காம் தமிழ்ச் சங்கம் என்றழைக்கப்படும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவியவர் இவர். வ.உ.சி. உதவிச் செயலாளராக இருந்தார், இக்கப்பல் நிறுவனம் ஆதாயம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வணிக நிறுவனமாக அமைக்கப்படவில்லை. இந்நிறுவனத்தின் நோக்கங்கள் குறித்த விவர அறிக்கை இவ்வுண்மையை அறியத் தருகிறது:

 - இந்தியர்களையும் இலங்கையர்களையும், ஆசியா கண்டத்து ஜாதியார்களையும் கப்பல் நடாத்துந் தொழிலில் பழக்குவித்து அதன் மூலம் வரும் லாபத்தை அடையும்படிச் செய்தல்.
 - கப்பல் நடாத்துந் தொழிலையும் கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையுஞ் செய்து காட்டிக் கற்பித்தல்.
 - மாணவர்க்கு கப்பலோட்டுந் தொழிலையும் கப்பல் நிர்மாணஞ் செய்யும் தொழிலையும் சாஸ்திர சம்பந்தமாகக் கற்பிக்கும் கலாசாலைகளை ஏற்படுத்தல்.
 - ஸ்டீமர்கள், ஸ்டீம்லாஞ்சுகள், படகுகள் முதலியன நிர்மாணஞ் செய்வதற்கும் அவைகளைச் செப்பனிடுவதற்கும் துறைகளேற்படுத்தல்.
 - கம்பெனியார் தீர்மானிக்கும் சுதேசியக் கைத்தொழில்களையும் வியாபாரங்களையும் நடத்துதல்.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் இக்குறிக்கோள்கள் வ.உ.சி.யின் தொலைநோக்கான பார்வையை வெளிப்படுத்துபவை. முதற்படியாக மும்பை சென்று இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கினார். ‘எஸ்.எஸ்.காலியோ’, ‘எஸ்.எஸ்.லாவோ’ என்கிற பெயரிலான இரண்டு கப்பல்களும் தூத்துக்குடிக்கு 1907 மே மாதம் வந்துசேர்ந்தன. ஒவ்வொன்றிலும் 42 முதல் வகுப்புப் பயணிகள், 24 இரண்டாம் வகுப்புப் பயணிகள், 4,000 மூட்டை சரக்கு செல்ல முடியும்.
voc1.JPG

இவ்விரு கப்பல்களின் வருகையால் மகிழ்ச்சியடைந்த பாரதியார், தாம் நடத்திவந்த ‘இந்தியா’ இதழின் (26 மே1927) முகப்பில் கருத்துப் படம் வெளியிட்டதுடன், “வெகு காலமாய்ப் புத்திரப் பேறின்றி அருந்தவம் செய்துவந்த பெண்ணொருத்தி ஏக காலத்தில் இரண்டு புத்திரர்களைப் பெற்றால், எத்தனை அளவற்ற ஆனந்தத்தை அடைவாளோ, அத்தனை ஆனந்தத்தை நமது பொதுமாதாவாகிய பாரததேவியும் இவ்விரண்டு கப்பல்களையும் பெற்றமைக்காக அடைவாளென்பது திண்ணமே” என்று குறிப்பும் எழுதினார். அக்குறிப்பில் வ.உ.சி.க்கும் அவருக்கு உதவியவர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

தூத்துக்குடியில் ஏற்கெனவே செயல்பட்டுவந்த ஆங்கிலேயக் கப்பல் நிறுவனமான ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்கிற ஆங்கிலேயக் கப்பல் நிறுவனம், சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வருகையால் ஆதாய இழப்புக்கு ஆளானது. இவ்விழப்பானது, 1907-ம் ஆண்டின் இறுதியிலும் 1908-ன் தொடக்கத்திலும் மாதம் ஒன்றுக்கு முப்பதினாயிரம் முதல் நாற்பதினாயிரம் வரை இருந்ததாக வரலாற்றறிஞர் இராசேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மக்களிடையே நிலவிய சுதேசி இயக்க உணர்வே இதற்குக் காரணம்.
voc3.JPG

1908 மார்ச் மாதம் கைதாகி விசாரணைக் கைதியாக இருந்த வ.உ.சி. அதே ஆண்டு ஜூலையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தண்டனைக் கைதியாகி கோவைச் சிறைக்குச் சென்றார். இதன் பின் ஆஷ் என்கிற ஆங்கிலேய அதிகாரி கொடுத்த நெருக்கடிகளை எதிர்கொள்ள இயலாது, சுதேசிக் கப்பல் கம்பெனி ஆங்கிலேயர்களிடமே விற்கப்பட்டது.

தொழிலாளர் இயக்கம்:
1907-ல் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய வ.உ.சி., அடுத்த ஆண்டில் தூத்துக்குடியில் இயங்கிவந்த ஆங்கிலேயர் நடத்திய ‘கோரல் மில்’ என்கிற நூற்பாலையில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, சுப்பிரமணிய சிவாவின் துணையுடன் வேலைநிறுத்தத்தை 1908 பிப்ரவரி 27-ல் தொடங்கினார். (1) ஊதிய உயர்வு, (2) வார விடுமுறை, (3) இதர விடுமுறை வசதிகள் என்பனவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக நடந்த வேலைநிறுத்தம் 07.03.1908 நண்பகலில் முடிவுற்றது.

50% ஊதிய உயர்வு, பணி நேரத்தில் உணவருந்த அனுமதி, ஊதியமில்லா விடுமுறை என்பனவற்றை ஆலைத் தொழிலாளர்கள் பெற்றனர். இன்று எளிதானதாகத் தோன்றும் இவ்வுரிமைகளைப் பெறுவதற்குக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்தப் போராட்டம் நிகழ்ந்துள்ளது.

இப்போராட்ட நிகழ்வு, இந்திய அளவில் பேசுபொருளானது. வேலைநிறுத்தக் காலத்தில் உணவின்றித் தவித்த ஆலைத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பை வ.உ.சி. மேற்கொண்டிருந்தார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழும் ‘சுதேசமித்திரன்’ தமிழ் நாளிதழும் இந்தச் செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. வங்கத்தின் அரவிந்தர் தமது ‘வந்தேமாதரம்’ இதழில் வேலைநிறுத்த நிகழ்வு குறித்து விரிவான முறையில் செய்தி வெளியிட்டுவந்தார். வேலைநிறுத்தம் வெற்றிபெற்றவுடன் ‘தூத்துக்குடி வெற்றி’ (The Tuticorin Victory) என்கிற தலைப்பில் நீண்ட தலையங்கமே எழுதியுள்ளார்.

ரஷ்யாவை ஜார் மன்னன் ஆட்சிபுரிந்துவந்தபோதுதான் இவ்வேலைநிறுத்தம் நடந்துள்ளது. இக்காலத்தில் ஜார் மன்னருக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. எனவே, இந்தியாவில் நடக்கும் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதில் ஜார் மன்னருக்கு ஆர்வம் இருந்தது. இதன் அடிப்படையில் மும்பையில் ரஷ்யாவின் தூதுவராகப் பணியாற்றிவந்த செக்கின் என்பவர், தூத்துக்குடியில் நிகழ்ந்த வேலைநிறுத்தம் குறித்து ஜாருக்கு அறிக்கைகள் அனுப்பிவந்துள்ளார். அதில் ஓர் அறிக்கையில் தூத்துக்குடியில் நிகழ்ந்த வேலைநிறுத்தம் குறித்து, “இது திறம்பட நடத்தப்படும் வேலைநிறுத்தம். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு உணவு படைக்க வேலைநிறுத்தத்தை நடத்தும் தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்போராட்டத்தின்போது தூத்துக்குடி நகரின் பொதுமக்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். தொழிலாளர் போராட்டம் ஒன்றை அரசியல் போராட்டமாக மாற்றுவதில் சிவாவும் வ.உ.சி.யும் வெற்றிபெற்றுவிட்டனர். இவ்வகையில் இந்தியாவில் நிகழ்ந்த தொழிலாளர்களின் முதல் அரசியல் வேலைநிறுத்தமாக இவ்வேலைநிறுத்தம் அமைந்தது.

பண்பாட்டுப் பார்வை:
வ.உ.சி. தன் அரசியல் குருவாகத் திலகரை ஏற்றுக்கொண்டவர். 1907-ல் நடந்த ‘சூரத் காங்கிரஸ் மாநா’ட்டில் திலகரைத் தலைவராகத் தேர்வுசெய்ய பாரதியாருடன் இணைந்து செயல்பட்டதைப் பற்றி வ.உ.சி. எழுதியுள்ளார். சிறையிலிருந்து 1912-ல் விடுதலையாகி வந்த பின்னர், கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் நாளேடு ஒன்றில் ‘திலக மகரிஷி’ என்கிற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொடராகவும் எழுதிவந்தார். ஜெர்மனியில் இயங்கிவந்த இந்தியப் புரட்சிக் குழு ஒன்றிடமிருந்து வந்த ரகசியச் செய்தி ஒன்று குறித்து விவாதிக்க வ.உ.சி.யை திலகர் அழைத்துள்ளார். வ.உ.சி.யும் அந்த அழைப்பை ஏற்று திலகரைச் சந்தித்துள்ளார். இந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு இருந்துள்ளது. வ.உ.சி. சென்னையில் வாழ்ந்தபோது திலகரை சென்னைக்கு வரவழைத்து, அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றோரில் வ.உ.சி.யும் உண்டு. இந்த அளவுக்கு திலகரின் மீது அன்பும் நெருக்கமும் கொண்டிருந்தாலும், பண்பாடு குறித்த திலகரின் அணுகுமுறையிலிருந்து வ.உ.சி. இறுதிவரை மாறுபட்டே இருந்தார்.

இதுபோல் அழுத்தமான சைவராக இருந்து ‘சிவஞானபோதம்’ நூலுக்கு உரை எழுதியபோது, பல மதக் கோட்பாடுகளையும் அவற்றின் மீதான கண்டனங்களையும் எழுதுவதை வ.உ.சி. தவிர்த்தார். அத்துடன் நாஸ்தீகரது இயற்கையைத்தான் ஆஸ்தீகர்கள் கடவுள் என்று கூறுகின்றனரென்றும் ஆஸ்தீகரது கடவுளைத்தான் நாஸ்தீகர்கள் இயற்கையென்று கூறுகிறார்களென்றும் விளக்கமளித்தார்.

‘‘1,330 குறளையும் பொருளுடன் உணர்ந்திராத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும் என்னைப் பெற்ற தந்தையேயாயினும் யான் பெற்ற மக்களே யாயினும் யான் இவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை நேசிப்பதுமில்லை’’ என்ற இவரது கூற்று, தமிழரின் பண்பாட்டு அடையாளமாகத் திருக்குறளைக் கருதியதை உணர்த்துகிறது. 1927-வது ஆண்டில் சேலத்தில் நடந்த காங்கிரஸ் மகா சபை மூன்றாவது அரசியல் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையில் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை ஆதரித்து அவர் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

திரிசூலம்:
மூன்று கூர்முனைகளைக் கொண்ட ஓர் படைக்கருவியே திரிசூலம். இப்படைக்கருவியைக் கொண்டிருப்பதாக நம்புவதன் அடிப்படையில் எமனுக்கு திரிசூலன் என்ற பெயருண்டு. ஒரு நாட்டு மக்கள் தம் முன்னேற்றத்துக்காக அரசியல் போராட்டம், பொருளாதாரப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் என மூன்று வகையான போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இவற்றுள் எவற்றையும் ஒதுக்கிவிட முடியாது. அதேநேரத்தில், பொருளாதாரப் போராட்டத்திலும் பண்பாட்டுப் போராட்டத்திலும் அரசியல் மறைந்துள்ளது. இம்மூன்று போராட்டங்களின் தேவையை வ.உ.சி. நன்கு உணர்ந்திருந்தார். அவரது தொடக்க கால சுதேசி இயக்க அரசியலை உள்வாங்கியே ஏனைய இரண்டு போராட்டங்களையும் அவர் நடத்தினார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்றும் தனித்தனியாக இருப்பதுபோல் தோன்றினாலும் அவற்றுக்கிடையே உள்ள உறவு திரிசூலம் போன்றது. இதுவே வ.உ.சி. வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி.


- ஆ.சிவசுப்பிரமணியன், 
மூத்த ஆய்வாளர் மற்றும் மார்க்சிய அறிஞர்
நன்றி - இந்து தமிழ் திசை 


---------