Friday, December 24, 2021

எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்

எஸ்.பொ. வுடனான எனது அனுபவங்கள்

-- திரு. தியாகலிங்கம், நோர்வே



குறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர்  திரு. தியாகலிங்கம், நோர்வே அவர்கள் வழங்கிய உரை.  


எஸ்.பொ. வுடன் எனக்கு இருந்த தொடர்புகள், அனுபவங்கள் பற்றி மிகவும் சுருக்கமாகக் கூறுவதென்றால்,  எஸ்.பொ. வுடனான பழக்கம் என்பது எனது வாழ்வில் கிடைத்த இலக்கிய, குருகுல, மனிதநேயக் கணத்துளிகள் என்றுதான்  நினைக்கிறேன்.  அழிவின் அழைப்பிதழ்  என்கின்ற நாவலை நான் காகிதத்தில் கிறுக்கி வைத்திருந்த காலம் அது. நோர்வேயின் வடதுருவத்தில் தனிமையாக இருக்கும் பொழுதே அந்தப் பணி நடந்தது. அதை வெளியிட வேண்டும் என்கின்ற பேராசையுடன் அலைந்து திரிந்தேன். அப்போது என்னோடு வசித்து வந்த குகனேரியப்பன் என்பவர் அவஸ்ரெலியாவில் வசித்து வந்த எஸ் கிருஷ்ணமூர்த்தி என்பவரைத் தொடர்புகொண்டு எஸ்.பொ.வை அறிமுகப்படுத்தினார். அதன் பின்பே 1994 ஆண்டு அவரைச் சந்திக்க சென்னை சென்றேன்.  அழிவின் அழைப்பிதழ் எனது முதலாவது நாவலாக அச்சேறியது. அது மித்ர பதிப்பகத்தின் நாலாவது பதிப்பும், முதலாவது நாவலுமாகும்.

ஒரு மதியம்போல கோடம்பாக்கத்தில் இருக்கும் பாலத்திற்குக் கீழே, மசூதியோடு இருந்த மித்ர அச்சகத்திற்குப் போயிருந்தேன். அப்பொழுது எஸ்.பொ, இளம்பிறை ரஹ்மான் இருவரும் அங்கே இருந்தார்கள். இருவரும் மிகவும் மென்மையாக அன்பாகப் பேசினார்கள். எஸ்.பொ கதைத்தால் அதில் நிறையத் தமிழ் இலக்கியக் கூறுகள், நெளிவு சுளிவுகள், எள்ளல்கள், பொதிந்து இருக்கும். நட்பு அதில் உறவாடும். முதல் சந்திப்பிலிருந்தே எனக்குப் பிடித்துக்கொண்ட விடயம் அது. அவரது பேச்சுத் திறமைக்கு அவரே நிகர் என்பதே சத்தியம்.   சிலர் அவரை ஈழத்துப் பாரதி, ஈழத்து ஜெயகாந்தன் என்றெல்லாம் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைத் தமிழுலகு மொத்தத்திற்குமான ஈடுயிணையற்ற படைப்பாளி அவர் என்று நினைக்கிறேன். வானத்தில் இருக்கும் நட்சத்திரம் போன்றவர். அவருக்கு ஈழம் என்று அணை போடக்கூடாது என்று நினைக்கிறேன். எப்படி பாரதி தமிழ் உலகு முழுமைக்கும் சொந்தமான, நிகரற்ற படைப்பாளியோ, அதைப்போலவே எஸ்.பொ. என்பது என் கருத்து.

கோடம்பாக்கத்தில் அவரைச் சந்தித்த போது அவரின் வயதிற்கு என்னால் அவரை ஒரு குருவாக, அல்லது அப்பா போன்ற ஸ்தானத்திலேயே வைத்துப் பார்க்க முடிந்தது. அதுவே எனது இறுதி வரையுமான எஸ்.பொ பற்றிய தரிசனமாக இருந்தது என்பதே உண்மை. ஆனால் நான் பார்த்தவரை அவர் எல்லோரையும் வயது வித்தியாசம், தகமை வித்தியாசம் இல்லாமல் நட்பாகவே நடத்துவார். நண்பர் போலவே பழகுவார். பாரியாரோடும் (ஈஸ்வரம்) மிகவும் தோழமையாகப் பழகுவார். சிறு குழந்தைகளுடனும் அதைப் போலவே பழகுவார்.

ஒரு நாவலை எழுதிவிட்டால் அதை வெளிக்கொண்டு வராது வைத்திருப்பது இயலாத காரியம். என்னிடம் சில நாவல்கள் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் விடுமுறை கிடைக்கும் போது சென்னை பயணமாவேன். ஆண்டுவாரியாகப் பட்டியல் இட முடியாத நிலையில் உள்ளேன்.  1994 – 1999 இடையில் அவரை சில முறைகள் சந்தித்து இருக்கிறேன். அவருடன் ஒரு புத்தக அறிமுக விழாவிற்கு Book point இற்குச் சென்ற ஞாபகம் உண்டு. அப்படி ஒரு நிகழ்வில்; சிவசங்கரி, மாலன், அம்பிகைபாகன், பிரபஞ்சன், கணேசலிங்கம் மற்றும் பல இலக்கியப் பிரபலங்களை அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  கவிஞர் இன்குலாப்பை மித்திர அச்சகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் தான் மாத்திரம் உயரத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணாது மற்றவரையும் அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் சிந்தனை கொண்டவர் என்பதை நான் கண்டேன்.

Espo1.jpg
சென்னையில் அவரைச் சந்தித்தபோது வெறுமனே எனது நாவல்களைப் பிரசுரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாது, அதை எப்படிச் செப்பனிடுவது (editing செய்வது) என்று எனக்குப் பயிற்சி தந்தார் என்பதை நான் என்றும் மறக்க முடியாது. நான் அதற்காகக் கோடம்பாக்கத்தில் அவரது பதிப்பகத்திற்கு அருகே இருந்த விடுதியில் தங்குவேன். அவர் அப்போது மாலை வேலைகளில் அங்கே வந்து, நாவலில் என்ன என்ன மாற்றம் செய்ய வேண்டும், எப்படி மெருகூட்ட வேண்டும் என்பதை அழகாகப் பயிற்றுவிப்பார். உண்மையில் நான் அச்சேற்றுவதற்குத் தயாராக இந்த நாவல்களை அங்கே கொண்டு சென்றது இல்லை. அதை அச்சேற்றுவதற்குத் தயாராக்கியதே அவர்தான். இதைச் சொல்வதற்கு நான் பின்னிற்கவோ வெட்கப்படவோ இல்லை. அன்று அவர் தந்த பயிற்சி இன்று எனக்கு உதவுகிறது என்பது உண்மை. ஆகக்குறைந்தது எனது படைப்புக்களையாவது நானே சொந்தமாக இயன்ற அளவு செம்மைப்படுத்தி வெளியிட முடிகிறது.

எஸ்.பொ, பாரியார் ஈஸ்வரம் அவர்களோடு ஒஸ்லோவுக்கு 2000 ஆண்டு இலக்கியப் பயணமாக வந்திருந்தார். எனது நாளை நாவலை வெளியிட்டதோடு ஒஸ்லோவில் இலக்கியச் சந்திப்பும் நடந்தது. அப்போது எனது இல்லத்திற்கும் வருகை தந்திருந்தார். அது எனது வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.  எஸ்.பொ. வுக்கு பல அவமதிப்புகள் ஏற்பட்டதான வருத்தம் அவரிடம் இருந்தன. அது உண்மையும் கூட. ஈழத்திலும் சரி, புலம் பெயர்ந்த தேசங்களிலும் சரி சிலர் தங்களை மேதாவிகளாகக் காட்டிக் கொள்வதற்காக, அல்லது கருத்தியல் ரீதியாக வெல்ல முடியாத காழ்ப்பில் அவருக்கான மதிப்பை அளிக்கத் தவறிவிட்டார்கள் என்பது என் எண்ணம். இன்றும் அதைப் பலர் ஒத்துக்கொள்ள முடியாது இருக்கிறார்கள். அவர் வார்த்தையில் சொல்வதென்றால் 'எலியோட்டம் ஓடுகிறார்கள்'.  

மேற்கூறியவற்றை விடவும் அவரிடம் வேறு சில கவலைகள் இருந்தன. அதைப்பற்றியும் என்னுடன் கதைத்தது ஞாபகம் இருக்கிறது.  ஒன்று கோடம்பாக்கம் பாலத்திற்குக் கீழே இருந்த பதிப்பகத்தை மாற்ற வேண்டி வந்தபோது ஏற்பட்ட சிக்கல். அதில் அவர் மனமுடைந்து போய் இருந்தார். அது மிகவும் கரடுமுரடாக நடந்திருப்பதாக நான் உணர்ந்தேன்.  அதன் பின்பு பதிப்பக உரிமையில் அல்லது செயற்பாட்டில் ஏற்பட்ட சிக்கலிலும் மனமுடைந்து போய் இருந்தார். அதைப் பற்றிக் கதைக்கும் போது 'உங்கள் நேரம் என்பது தமிழ் உலகிற்கானது. அதை அற்ப விஷயங்களுக்கு நீங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்' என்று கூறினேன். தமிழை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்கின்ற கோபமும் அவரிடம் இருந்தது. அதைச் சில முன்னீடுகளிலும் காணலாம்.

எஸ்.பொ. வுக்குச் சென்னையில் போகுமிடங்களில் நல்ல மதிப்பும், மரியாதையும் இருந்தன. அவரது பேச்சில் பலர் ஈர்க்கப்பட்டு இருந்தார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். சபையில் துணிவோடு, மிகவும் இயல்பாக அவரால் பேசமுடியும். அவர் பேசத் தொடங்கினால் அரங்கம் தானாகக் கட்டுண்டு கிடக்கும். கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகத்திடம் இருந்து ஒரு விருது கிடைத்தது. அதற்கு நானும் சென்றிருந்தேன். எதற்கு என்பது எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. மது அருந்துவதைப் பற்றி எஸ்.பொ.வின் பாரியாருக்கு மிகுந்த கவலை இருந்தது. மது அருந்தாமலிருந்தால் இன்னும் அதிக காலம் இருப்பாரே என்றும், அதனால் தமிழுக்கு மேலும் ஊழியம் செய்ய முடியுமே என்று கவலைப்படுவார். அவர் வீட்டில் எனக்கும், ஓவியர் புகழேந்திக்கும், யுகபாரதிக்கும் ஒரு நாள் விருந்து கொடுத்தார். அப்போது இந்தியாவில் திருமணம் செய்திருந்த மகன் உயிரோடு இருந்த காலம். மித்ரவுக்கு அடுத்ததாக அதுவும் அவருக்குப் பின்னாளில் மிகுந்த கவலையைத் தந்த விடயமாகும்.

இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் காலையும் மாலையும் அலுவலகத்திற்கு வந்து, தனது தமிழ் ஊழியத்தை யாகம் செய்வது போலச் செய்வார். தொடக்கத்தில் சென்னையில் வாட்டி எடுக்கும் வெப்பத்திற்குள், ஒரு சிறிய இடத்தில் அது நடந்தது. பின்னாளில் அது விஸ்தரிக்கப்பட்டுக்  குளிரூட்டப்பட்டது. எது எப்படி இருந்தாலும் ஒவ்வொரு கணமும் தமிழ் இலக்கியம் என்று வாழ்தல் அவர் வாழ்க்கையாக அமைந்தது. அதைப்போல ஈழத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களிலும் பலர் உண்மையான தமிழ் ஊழியம் செய்வது பற்றி அவர் பெருமைப்படுவார்.

ஒரு முறை ஒரு நாவலை வாசித்தால் பின்பு வரிவரியாக எங்கெங்கே என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுமளவிற்குக் கிரகிக்கும் அபார சக்தி அவரிடம் இருந்தது. அது என்னை வியப்பில் ஆழ்த்தும். அதைவிட அரசியலா, வரலாறா, பொது அறிவா, எது என்றாலும் ஆழமாக, துல்லியமாக அவர் நினைவில் நிலைத்து நிற்பதைப் பார்த்து அதிசயப்பட்டு இருக்கிறேன். அப்படியான விடயங்களை வாசித்து அறிந்து கொள்ளவும் அவர் ஊக்குவிப்பார். எனக்கும் சிலவற்றைப் பிரதி எடுத்துத் தந்திருக்கிறார். அத்தோடு எந்தெந்த படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்கின்ற தன் கருத்தையும் தெரிவிப்பார்.

நான் அவரைப் பார்த்துக் கற்றுக்கொண்டது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்றாலும் எழுதுவது. ஒவ்வொரு நாளும் சிறிதாவது எழுத முயல்வது. எஸ்.பொ. இறுதிக் காலத்தில் தனது படைப்பைவிட மற்றவர்களின் படைப்பிற்கு அதிக நேரம் செலவு செய்திருக்கிறார். அதை நாங்கள் என்றும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். தமிழ் உலகே அதற்கு நன்றி செலுத்த வேண்டும். எஸ்.பொ. வின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதைப் பலர் அறிந்திருப்பார்கள். அது மட்டுமல்ல, அவர் வெளியிட்ட ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு தனி வடிவமைப்புடன், தனிக் கலையழகுடன் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். பதிப்பாசிரியராக நிச்சயம் அவர் கௌரவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

அவர் எழுதிய முன்னீட்டில் ஒரு பகுதி தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவை முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.  எனக்காக  1994 இல் இருந்து 2014 வரையும் ஒன்பது புத்தகங்களை வெளியிட்டுத் தந்ததிருக்கிறார். நான் அதற்கு என்றும் நன்றியுடையவன் ஆவேன். அதைச் சாத்தியமாக்க ஒத்துழைத்த அவரது துணைவியாருக்கும் குடும்பத்திற்கும் எனது நன்றிகள்.  ஒருகட்டத்தில் மித்ர அச்சகத்தை எடுத்து நடத்தும்படி கேட்டுக்கொண்டார். என்னால் நோர்வேயில் இருந்து குடிபெயர முடியாத இக்கட்டான நிலையிலிருந்ததால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது போயிருந்தது.  எஸ்.பொ. வுடன் பல முறை தொலை பேசியில் கதைக்கும் வாய்ப்பும், சில கடிதப் பரிமாற்றங்களும் எனக்குக் கிட்டியிருந்தன. அவையும் எனக்குக் கிடைத்த அற்புதமான நினைவுகளே.

எஸ்.பொ. வின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் இழப்பு என்பது யாவரும் அறிந்ததே. என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒரு நல்ல ஆசானின், ஒரு நல்ல குருவின், ஒரு நல்ல தந்தை போன்றவரின் இழப்பாகும். எஸ்.பொ. அவர்கள் இலக்கியம் மட்டும் படைக்கவில்லை. பல புதிய எழுத்தாளர்கள் உருவாக ஊக்கமளித்தார். அவர்களை மேலும் செழுமைப்படுத்தினார் என்பதும் மறக்க, மறைக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.  அவர் இன்று இல்லாவிட்டாலும் அவர் படைப்புகள், அவர் ஆற்றிய தமிழ் ஊழியம் என்பன என்றும் அவரை ஞாபகம் கொள்ள வைக்கும் கல்வெட்டுக்கள். எஸ்.பொ என்றால் எஸ்.பொ. தான். அவருக்கு இணையாக யாரையும் ஒப்பிடத் தேவையில்லை. அவராக, அவரின் உச்சம், அதை யாரும் தொடமுடியாது என்று எண்ணுகிறேன்.

----




No comments:

Post a Comment