-- முனைவர் ஆனந்த் அமலதாஸ், சென்னை
இலக்கியத்தை ஒரு வரலாற்று நூலாகவும் வாசிக்கலாம்; இலக்கியத்தை இலக்கியமாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு வரலாற்று நூலாகவும் வாசிக்க வேண்டிய நிலை தற்சமயம் உருவாகியுள்ளது. அது ஒரு தேவையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், இலக்கியம் ஒரு கற்பனையின் புனைகதை மட்டும் அல்ல. அது ஒரு வரலாற்றுச் சூழ்நிலையில் எழுகின்றது. அந்தப் படைப்பின் ஆசிரியர் வரலாற்றுத் தரவுகளைத் தொடாமல் அல்லது தொடர்பில்லாமல் எதையும் எழுதவோ பாடவோ முடியாது. அந்தப் பாடல்களில் வரும் உவமைகள், சொல்லாடல்கள், சுற்றுச்சூழல் பற்றிய தொகுப்புக்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலநிலையைச் சுட்டிக்காட்டும் என்பது தெரிந்ததே. ஆசிரியர் சொல்லும் கதை மட்டும் அல்ல, அவர் கையாளும் மொழியும் அவரைக் கண்ணாடிபோல் காட்டிக் கொடுக்கும். அதனால் இலக்கியத்தில் வரலாற்றுத் தரவுகளைத் தேடுவது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு வழிமுறைதான்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்து பணிபுரிந்த வீரமாமுனிவர் பல நூல்களைத் தமிழில் படைத்துள்ளார். அவர் எழுதிய காப்பியத்தை, கலம்பகத்தை, அம்மானையை அலசிப்பார்த்து அங்குக் காணும் வரலாற்றுத் தரவுகளைத் தேடுதல்தான் இதன் நோக்கம்.
தேம்பாவணி வீரமாமுனிவர் எழுதிய முக்கியமான நூல். 36 படலமாகப் பிரித்து, 3615 பாடல்களோடு அமைந்த ஒரு காப்பியம். விவிலியத்தில் வரும் வளனாரை (சூசையை/Joseph) காப்பியத் தலைவனாகக் கொண்டது. இறுதிப் படலத்தில் சூசையின் முடி சூட்டுதலோடு காப்பியம் முடிவு பெறுகிறது. இங்குத் திடீரென ஆஸ்திரியப் பேரரசர் லியோபோல்டு (Leopold I, Holy Roman Emperor) பற்றிக் குறிப்பிடுகிறார். லியோபோல்டுவின் ஆட்சியில் (1658 -1705) துருக்கியரோடு (ஓட்டோமன் பேரரசு) நடந்த போரில் லியோபோல்டு வெற்றி பெற்றதால் ஐரோப்பாவில் கத்தோலிக்கக் கிறித்தவ உலகம் அவரை இலக்கியத்திலும், ஓவியங்களிலும், பாடல்களிலும் பாராட்டிச் சிறப்புச் செய்தனர்[1]. போர் முடிந்த பிறகு லியோபோல்டு ஆஸ்திரிய நாட்டை புனித வளனாருக்கு அர்ப்பணிக்கிறார்.
வீரமாமுனிவர் அவரைத் தமிழ் அரசர்க்குரிய மரபோடு அறிமுகப்படுத்துகிறார்.
அயப் போது அலர் வேலி அணிந்து, அழியா
நயப்பு ஓகை ரோமையின் நாடு இனிது ஆள்,
வியப்போடு வணங்கு இகல் வெம் படை வெல்,
லெயு போல்து எனும் நாம வெள் வேல் இயலான். [2]
(தேம்பாவணி: முடிசூட்டு படலம், 36, 50)
ஆஸ்திரிய அரசருக்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறது. இங்கிலாந்தின் “ஈஸ்ட் இண்டியா கம்பெனி” போல ஆஸ்திரியாவும் நெதர்லாந்தும் சேர்ந்து ஒரு வணிகத்துறை தொடங்கியது (ஓஸ்டென்ட் கம்பெனி). ஆஸ்திரியக் கப்பல் மெட்ராஸ் துறைமுகத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கித் தமிழகக் கடற்கரைப் பகுதியில் வணிகம் நடத்தி வந்தது. (1722-1724) [3].
அப்பொழுது வீரமாமுனிவர் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள கோணாங்குப்பத்தில் தங்கியிருந்து தேம்பாவணி காப்பியம் எழுதியதாக வரலாறு கூறுகிறது. அப்படியானால் வீரமாமுனிவர் ஆஸ்திரியக் கப்பலைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அது அவருக்கு அரசன் லியோபோல்டுவை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். இதுதான் காரணம் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஆனால் இந்த வரலாற்று நிகழ்வுக்கும், தேம்பாவணியில் லியோபோல்டுவுக்கு இடம் கொடுத்தற்கும் தொடர்பு ஏதும் இல்லை என்றும் சொல்லவும் முடியாது. இது இன்னும் ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுத் தரவு.
தரங்கம்பாடியாருக்கும் வீரமாமுனிவருக்கும் இடையே எழுந்த பூசல்:
வீரமாமுனிவர் ஏலாக்குறிச்சியில் இருந்து பணி செய்த போது தரங்கம்பாடியார் விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்கள். அவர்களது மொழிபெயர்ப்பை வீரமாமுனிவர் குறைகூறினார். இருவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளைக் கோட்பாட்டளவில் விமர்சனம் செய்தார்.
இவ்வாறு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்கள் முனிவரின் படைப்பைக் கணிக்கும் முறையிலும் காணலாம். எடுத்துக்காட்டாக பெரிய அறிஞரான கால்டுவெல் கூட ஒருதலைப்பட்சமாக முனிவரை மதிப்பிடுவதைக் காணலாம். கால்டுவெல் ஒருபக்கம் வீரமாமுனிவரின் படைப்பைப் பாராட்டுகிறார். ஆனால் அடுத்த நொடியிலேயே தேம்பாவணியைக் கடுமையாக விமர்சிக்கின்றார். “இந்து மக்களோடு இணக்கமாய் வாழவிரும்பி விவிலிய வரலாற்றைச் சிதைத்து விட்டார், அதாவது, இந்துமய மாக்கிவிட்டார்” என்பது அவரது தீர்ப்பு [4]. வீரமாமுனிவர் விவிலிய வரலாறு எழுத தமிழகம் வரவில்லை. விவிலியத்தில் வரும் ஒருவரை மையமாக வைத்து ஒரு காப்பியம் படைக்கின்றார். மில்ட்டனும் (பாரடைஸ் லாஸ்ட்) தாந்தேயும் (டிவைன் காமெடி) விவிலிய வரலாற்றைச் சிதைத்ததாக குறை சொல்லாதவர்கள் வீரமாமுனிவரை மட்டும் ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்குப் பதில் தெரியவில்லை.
வீரமாமுனிவர் பயிற்சி கொடுத்த வேதியர்களில் பலர் தரங்கம்பாடியருடன் சேர்ந்து விட்டனர். இது அவருக்குப் பெரிய வேதனையாகவும்; ஏமாற்றமாகவும் இருந்தது. இத்தகைய பூசல் வீரமாமுனிவர் அன்னை மரியாளைப் பாடும் முறையிலும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவது கவனத்திற்குரியது. பல பூக்களில் தேன் குடிக்கும் தேனீக்களைப் பார்த்து ஒரு கேள்வியை வைக்கிறார். திருக்காவலூர் பூஞ்சோலையில் உள்ள தேனுக்கு ஈடாக வேறெங்கும் உண்டோ என்று கேட்பது போல் அமைந்துள்ளது. யாரையோ கேட்க வேண்டிய கேள்வியைத் தேனீக்களிடம் கேட்கிறார். இதற்குத் தேனீக்கள் பதில் சொல்ல முடியாது. வரலாற்று ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும்.
தரங்கம்பாடி சென்று மதமாறியவர்களுள் பலர் திரும்பிக் கத்தோலிக்கச் சபைக்கு வந்துவிட்டதாகவும் வரலாறு கூறுகிறது. அவர்களை இவ்வாறு கேட்பதுபோல் அழகாய் அமைந்துள்ளது இப்பாடல். திருக்காவலூர் கலம்பகம் (23):
காந்தள்கை கஞ்சத்தாள் காவிக்கண் ஆம்பல்வாய்
வேய்ந்தலர்ந்த காவலூர் மென்கொடியே – ஈய்ந்தமது
வுண்ணளிகாள் சொல்மின் நீர் ஒத்துளதோ பூவுலகிற்
பண்ணளிபூந் தீந்தேன் பனித்து.
(திருக்காவலூர் கலம்பகம் -23) [5]
தமிழ் இலக்கியத்தில் ‘ஆரிய’ என்ற சொல்லின் பின்னணி:
‘ஆரிய’ என்ற சொல் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரிய சர்ச்சைக்குரியது. இந்தச் சொல் சங்க இலக்கியத்திலேயே எட்டு முறை இடம் பெறுகிறது (எடுத்துக்காட்டு: 'எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்' - அகம் 386/5). பக்தி இலக்கியத்திலும் கூட சில இடங்களில் காணலாம். சித்தர் பாடல்களில் வரும் இச்சொல் கேலியாகத்தான் வருகிறது. “ஆரியக் கூத்தாடி” என்ற சொல்லாடல் அதைத் தெளிவு படுத்துகிறது.இருப்பினும் கம்பன் காப்பியத்தில் பல முறை வருவதில் வியப்பு இல்லை. ஏனெனில் கம்பன் சொல்லும் கதையே வடநாட்டுக்கதை.
வீரமாமுனிவரும் தேம்பாவணியில் ஆரிய என்ற சொல்லைப் பலமுறை பதிவு செய்கிறார். அதுவும் பெருமைக்குரிய, உயர்குலத்தைச் சார்ந்த என்ற பொருளில் இந்தச் சொல் இடம் பெறுகிறது. பாயிரத்தின் தொடக்கத்திலேயே “ஆரிய வளன்” என்று சூசையை அறிமுகப்படுத்துகிறார். மீண்டும் பாயிரத்தின் இறுதிப்பாடலில் “ஆரியனூரில் தேம்பாவணி எனப் பிணித்தல் செய்வோம்”, என்று பதிவு செய்துள்ளார். இதை வரலாற்றுத் தரவாகப் பார்க்க வேண்டிய தேவை எழுகிறது. அப்பொழுது அவர் தங்கியிருந்த இடம் கோணாங்குப்பம். அந்த ஊருக்கு ஆரியனூர் என்று பெயர் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று ஆர். பாலகிருஷ்ணன் (ஐ.ஏ.எஸ்) பதிவு செய்கிறார்.
அந்தப்பகுதியில் வாழ்ந்த - இன்னும் வாழ்கின்ற - மக்கள் வன்னியர் குலமரபைச் சார்ந்தவர்கள். அவர்கள் வாழும் மற்றைய பகுதிகளிலும் ஆரியனூர், ஆரியங்காவு (விழுப்புரம் அருகில்), ஆரியநல்லூர் (திண்டுக்கல்லுக்கு அருகில்) என்ற பெயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் இனத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டும் வகையில் இப்பெயர் எழுந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. இதுவும் ஆராய்ச்சிக்கு உட்பட வேண்டிய தரவு.[6]
கித்தேரி அம்மாள் அம்மானையில் வரலாற்றுக் குறிப்பு:
வீரமாமுனிவர் தேம்பாவணி காப்பியம் எழுதிய பிறகு, சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் அளவில் நாட்டுப் புற மரபில் அம்மானை பாடல் ஒன்று எழுதுகிறார். 1716 - ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதராக உயர்த்தப்பட்ட கித்தேரியின் வாழ்வை மூலமாக வைத்து எழுதப்பட்ட அம்மானைப்பாடல். கித்தேரி 130 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டில் அவளது தந்தையாகிய அரசன் காயனால் தலையைக் கொய்து கொலை செய்யப்பட்டாள். கித்தேரி அவள் தந்தையின் சொற்படி கிறித்தவ நம்பிக்கையைக் கைவிடவும், திருமணம் செய்யவும் மறுத்ததால் அவளுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தக் கதையை மையமாக வைத்து 1100 அம்மானைப் பாடல்களும் 38 விருத்தப்பாடல்களும் உள்ளடங்கிய ஒரு பாமாலையாக, அணிகலமாக வீரமாமுனிவர் கித்தேரிக்கு அளிக்கின்றார். இதன் நோக்கம் புனித கித்தேரியைப் போல கிறித்தவ நம்பிக்கையில் மக்கள் திடமாக இருக்க வேண்டும் என்பது. ஏலாக்குறிச்சியில் அவர் வாழ்ந்த காலம் என்பது, மராட்டிய ஆட்சியாளர்களிடம் இருந்து ஒரு பக்கம், தரங்கம்பாடியாரிடம் இருந்து மறு பக்கம் எனப் பெரிய நெருக்கடியைச் சந்தித்த காலக்கட்டம். அதனால் புனித கித்தேரியம்மாள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக, துன்புறும் நேரத்தில் நம்பிக்கை இழக்காமல் இருக்கப் பாதுகாவலாகவும் முன்வைக்கப்பட்டாள்.
இது நாட்டுப் புறப்பாடலாக இருந்தாலும் பல வரலாற்றுத் தரவுகளை உள்ளடங்கியது. எடுத்துக்காட்டாக இந்தப் பாடலில் போர்த்துக்கல் நாட்டு அரசன் ஐந்தாம் ஜான் என்பவரை அறிமுகப்படுத்துகிறார். “அருள் ஏந்தும் நாமம் உடை ஐந்தாம் கோன் ஆங்கு உதிப்பான்.” (9, 33). அவர் 1706 முதல் 1749 வரை போர்த்துக்கல் நாட்டில் ஆட்சி செய்தவர். அப்பொழுது போர்த்துக்கீசியர் தமிழகத்தில் சந்தா சாகிப்போடு சேர்ந்து ஆட்சி புரிந்தனர். சந்தா சாகிப்பின் தோல்விக்குப் பிறகு அரசியல் சூழ்நிலை தமிழகத்தில் மாறியது.
தேம்பாவணியில் ஆஸ்திரிய அரசன் லியோபோல்டுவை வீரமாமுனிவர் அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். இங்கு போர்த்துக்கல்லின் அரசரைப்பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. இதன் உள்நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் கிறித்தவத் தமிழ் இலக்கியத்தில் இத்தகைய வரலாற்றுத் தகல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வீரமாமுனிவர் கிறித்தவ மறைப்பணி செய்ய தமிழகம் வந்தவர். ஒருவேளை கிறித்தவத்திற்குச் சாதகமான ஓர் அரசன் இங்கு ஆட்சிக்கு வருவான் என்று கனவு கண்டிருக்கலாம். ஐரோப்பாவில் லியோப்போல்டு கிறித்தவ அரசனாய் இருந்தது போல, ஐந்தாம் ஜான் போர்த்துக்கல் நாட்டில் கிறித்தவத்தை நிலைநாட்டியது வரலாறு. கித்தேரியம்மாள் அம்மானையில் வரும் சில வரிகள் இதற்குச் சான்றாக உள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கித்தேரியை மையமாகக் கொண்ட பாடலில் லூசித்தானிய நாடு கிறித்தவ நெறிக்கு வரும் என்று முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. “அந்நாடு என் நாடாக ஆளும் முதற்கோன் அவனே” (9, 23) என்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேம்பாவணியில் இத்தாலிய நாட்டு வருணனை, புரோகிதப்படலம்:
தமிழ் இலக்கியத்தில் முதன் முறையாக இத்தாலிய நாட்டு வருணனை இடம் பெறுகிறது. தமிழ் மரபிற்கேற்ப அதை வீரமாமுனிவர் பதிவு செய்கிறார்.
“செல் நாகம் நீர் பொழியத், தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப,
கல் நாகம் நீர் உமிழக், கவி நாகம் வெருண்டு அஞ்ச, கல் ஊடு ஊர்ந்த
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓடக், கொழுஞ் செய் வாய்ப்ப,
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டுப் பொலிவு இது அன்றோ. (32, 22)
“விரைவாய்ப் பூந்தாழை உலாம் வெள்வளை ஈன்ற
பூவயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற
கரை வாய்ப் பூஞ் சுனை பூப்பக், கனி யாழ் வண்டு இமிர்ந்து,
ஒகரம் களி கூர்ந்து ஆடும்
சுரை வாய்ப் பூம் பொழில் காய்ப்ப, ஈர் அறமும்
முச் சீரும் சுகம் ஓர் ஏழும்
நிரை வாய்ப் பூங் குடியாக நிமிர்
இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ. (32, 23)
“பொருள் ஈன்ற பெருஞ் செல்வப் பொலிவு ஒழிக்கும் வளம் புணரப் புகன்ற நாடு,
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து, மறை என்று ஓதும்
தெருள் ஈன்ற நூல் ஒருங்கே திரு விளக்கு என்று ஏற்றி, எலாத் திக்கும் தானே
அருள் ஈன்ற விளக்கு ஆகி, அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ.(32, 24)
வீரமாமுனிவரும் சமத்துவ நம்பிக்கையும்:
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறள் (972) வைதிகத்தில் மையம் கொண்ட சாதிப் பிரிவினையை விமர்சனம் செய்வது குறிப்பிடத் தக்கது. சமத்துவம் இடம் பெறாத ஆன்மீகம் முரண்பாடானது, முழுமை பெறாதது. இது போன்ற குறள் கூறும் கருத்துக்கள் கிறித்தவம் நிலைநாட்ட விரும்பும் பார்வைக்கு உடன்பாடாய் அமைந்துள்ளன. அதனால், இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தைக் குறளோடு இணைத்துப் பார்க்க இடம் தருகிறது.
இயேசுசபை மரபில் பயிற்சி பெற்ற வீரமாமுனிவர் தனது 'தொன்னூல் விளக்கத்தில்' (சூத்திரம் 183) சமத்துவம் பற்றி விமர்சனம் செய்கின்றார்.
வன்னியர் மன்னர் வணிகர் சூத்திர
ரென்னிவர் நால்வர்க் கியல்வன வுரைக்கில்
ஓதற் றொழிலுரித் துயர்ந்தோர் மூவர்க்கும்
அல்லாத கல்வி யெல்லார்க்கும் உரித்தே.
“சமுதாயத்தில் மக்களை வன்னியர் (பிராமணர்), மன்னர், வணிகர், சூத்திரர் என நான்கு வகையாகப் பிரித்து, ஓதுதல் முதல் மூன்று வகையினருக்கு மட்டும் தகுதி என்று விதித்தாலும், கற்பது எல்லோருக்கும் உரிமை.” கல்வி பொதுவாக இருக்க வேண்டும் என்பது வீரமாமுனிவரின் விளக்கம்.
கவிஞர் தாசோவின் தாக்கம்:
இத்தாலிய நாட்டுக் கவிஞர் தாசோ (1544-1595) தனது “செருசலேமின் மீட்பு” என்ற காப்பியத்தில் ஐரோப்பியக் கிறித்தவர்கள் மேற்கொண்ட முதலாம் சிலுவைப்போரின் பின்னணியைச் சித்தரிக்கிறார். இது ஒரு வரலாறு தழுவிய நூல். அதில் நான்காம் காண்டத்தில் பேய்கள் கூடி கிறித்தவப் போர்த் தளபதிகளைத் திசை திருப்பத் திட்டமிட்டதாக தாசோ விமர்சிக்கின்றார். கிறித்தவ போர்த்தளபதியரிடையே எழுந்த பூசல்களும், குழப்பமும், ஒற்றுமை யின்மையும் அவர்கள் மேற்கொண்ட குறிக்கோளுக்கு இடையூராக இருந்தது வரலாற்று உண்மை. ஆனால் தாசோ அவற்றை வெளிக்கொணர கவிதை வடிவில் பேயின் சூழ்ச்சி என்று வடிவமைத்துள்ளார்.
வீரமாமுனிவர் தேம்பாவணியில் (23 - ஆம் படலம்) இதைப் புகுத்துகிறார். சூசையும் மரியாளும் எகிப்து நாட்டில் தங்கியிருக்கும் பொழுது யாரையும் அவர்கள் மனம் திருப்பி விடக்கூடாது, அங்கே அவர்களின் தாக்கம் ஏதும் தங்க விடாமல் தடுக்க பேய்கள் திட்டமிட்டதாகக் குறிப்பிடுகிறார். வீரமாமுனிவர் காலத்தில் கிறித்தவ மறைப்பணியாளர்கள் தமிழகத்தில் எதிர் கொண்ட நெருக்கடிகள் அதிகம். இந்த எதார்த்த நிலைக்குக் காப்பிய வடிவில் பேய்கள் கூடித் திட்டமிட்டு சமய மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக தேம்பாவணியில் கூறுகிறார். இது முனிவரின் கனவுலகை நிரந்தரமாக்கும் கற்பனையா அல்லது வரலாற்று நிலையின் எதிரொலியா என்பது நம்மைச் சிந்திக்க அழைக்கும் ஒரு பகுதி.
கிறித்தவப் பக்தி சின்னத்தின் இடம் பெயர்ப்பு:
தேம்பாவணியில் பாலஸ்தீன நாடும் செருசலேம் நகரும் தமிழகத்தின் ஒரு பகுதிபோல் வருணனை அமைகிறது. தமிழ் பெருங்காப்பிய மரபில் ஒரு நாட்டையும் ஒரு நகரத்தையும் வருணனை செய்து தொடங்குவது போல வீரமாமுனிவர் தனது காப்பியத்தைத் தொடங்குகிறார். தேம்பாவணியின் தொடக்கத்தில் மேகங்கள் மழைபொழிய தமிழக நிலப்பிரிவுகட்கு ஏற்ப மழைநீர் மலைகளிலிருந்து (குறிஞ்சி), காடுகள் வழியாக (முல்லை), விளை நிலங்களை (மருதம்) நிரப்பி, கடற்கரையை (நெய்தல்) வந்தடைகிறது.
பாலை நிலம் பற்றிப் பின்பு சூசையும் மரியாளும் எகிப்துக்குப் பயணம் செய்யும் பொழுது சீனாயி பாலைவனத்தைக் கடந்து சென்றதாக அமைகிறது. பாலஸ்தீன நாட்டில் உள்ள மரங்களையும் செடிகளையும் மிக நுணுக்கமாக வரிசைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“ஓலைகள் கிடந்தநீண் கமுகொடும்பனை
பாலைகள் மாமகிள் பலவு சுள்ளிகள்
கோலைகள் சந்தனம் குங்கு மம்பல
சோலைகள் கிடந்தன தொகுப்ப வண்ணமோ”
(நாட்டுப்படலம் 1.37)
தமிழ் இலக்கியத்தில் நிலப்பரப்பு அகம்-புறம் கோட்பாட்டோடு அமையும். ஆனால் இங்குக் காடும் மலையும் காதலர்கள் உறவோடும், ஊர்ப்பகுதிகள் திருமணத்தோடும் முடிவதில்லை. இயற்கை கிறித்தவக் கடவுளோடு இணையும் தளமாக இங்கு அமைகிறது. படைப்பின் மேல் கொண்ட அன்பெல்லாம் படைத்தவனை நோக்கிப் பார்க்கிறது; இறைவன் திட்டப்படி எல்லாம் அசைகிறது என்பது உட்கருத்து.
தேம்பாவணியின் முதல் இரண்டு படலத்திலும் - நாட்டுப்படலம், நகரப்படலம் - வீரமாமுனிவர் இயற்கையின் காட்சியை இறைவன் படைப்பின் குறிக்கோளில் பங்கெடுப்பதாக புனைகிறார். இதற்கு இரண்டு இலக்கியச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார். ஒன்று, உவமைகள் வழியாக. இது ஏற்கனவே சைவ மரபில் அதிக அளவில் முக்கியத்துவம் பெற்ற முறை. எடுத்துக்காட்டாக மாணிக்கவாசகரின் திருக்கோவையார் பாடலைக் குறிப்பிடலாம். அதாவது, அகத்தினை மரபை பக்திவழியில் விளக்கம் கூறுவது.
அது போல வீரமாமுனிவர் கூறுவது ஒரு எடுத்துக்காட்டு.
“மலையின் நேர்அறல் மலியநால் திணையருந்தியபின்
அலையின் நேர்உறல் அவனிதன் மகர்க்கெலாம் ஊட்டி
முலையின் ஏர்உறீஇ விஞ்சுபால் முடுகலில் உடுத்த
கலையின் ஏர்உறீஇக் களிப்போடு சிந்துவ போன்றே.”
(தேம்பாவணி – நாட்டுப்படலம் 1, 9. Virgo lactans)
மற்றொரு வழி தற்குறிப்பேற்றவணி – ஒரு பொருளின் குணத்தை அல்லது பணியை மற்றொன்றின் மேல் இணைப்பது. எடுத்துக்காட்டாக நகரப்படலத்தில் செருசலேம் வருணனையைக் கூறலாம்.
“பூவுலகு இயல்பன்று அம்பொன் பொலிமணி நகரம் பெண்ணார்
தேவுலகு உரித்தென்று அங்கண் தெளிந்து புக்கிடுமென்று ஆழி
தாவுலகு இருந்த வெள்ளித் தாள்தளை இட்டதே போல்
கோவுலகு இஞ்சி சூழ்ந்த குவளைநீள் அகழித் தோற்றம்.”
(தேம்பாவணி – நகரப்படலம் 2, 8)
இதன் கடைசி இரண்டு வரிகள் செருசலேம் நகரைச் சுற்றிய சுவர்களுக்குக் கீழ் அமைந்த ஆழியில் வளர்ந்த குவளை மலர்கள் நினைத்ததாக கற்பனை உருவெடுக்கின்றது. இந்த நகரம் இந்த உலகை விட்டுப்பிரிந்து தனக்கே சொந்தமான விண்ணகம் சென்றுவிடுமோ என்று அஞ்சி வெள்ளிக் கம்பிகளால் கட்டிக்காப்பது போல என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடல் ஒருவேளை புனித அகுஸ்தீனார் கருத்தான விண்ணக செருசலேமைக் குறிக்கலாம். இந்தப்பாடல் உண்மையில் தன்னைப் படைத்த இறைவனைப் புகழும் இயற்கை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
மற்றுமொரு எடுத்துக்காட்டு;
“கோதகன்று அளிக்குவார் அருந்திக் கொள்கைபோல்
தீதகன்று அருந்திரு நுகரச் சென்மினென்று
ஏதகன்று அணிக்குலத்து இலங்கு மாடங்கள்
மீதகன்று அசை கோடி விளிப்ப மானுமே.”
(தேம்பாவணி – நகரப்படலம், 2. 19)
உயர்ந்த வீடுகளின் மேல் அசைந்தாடும் கொடிகள் மக்களை வரவேற்பது போல் தோன்றின. இப்பாடலின் முதல் வரி தாராள மனத்தோடு மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் பண்பைக் குறிக்கிறது. பிறர்க்குதவி செய்தல் கிறித்தவ அறத்தின் முக்கிய அம்சம். இது திருக்குறள் கூறும் இரண்டு அதிகாரத்தோடு (22-23: ஒப்புரவு அறிதல், ஈகை) இணைந்த பண்பையும் நினைவூட்டுகிறது.
கடைசி இரண்டு வரிகள் விருந்தினரை வரவேற்கும் வகையில் மாளிகையின் மேலே அசைந்த கொடிகள் தோன்றின. இது சிலப்பதிகாரத்தின் நிகழ்வை நினைவூட்டுகிறது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும்பொழுது இங்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கும் பொருள்படத் தோன்றியது என்பது தெரிந்ததே. இவ்வாறு தேம்பாவணி கிறித்தவப் பார்வையை முன்வைத்து இயற்கையின் நிகழ்வுகளுக்கு விளக்கம் தருவது குறிப்பிடத் தக்கது.
பண்பாட்டுப் பரிமாறல் - புனித வீடு (Santa Casa) புலம் பெயர்தல்:
“சாந்தா காசா” என்பது நசரேத்தூரில் மரியாளும், சூசையும், சேசுவோடு வாழ்ந்த வீடு. கிறித்தவ மரபின்படி இஸ்லாமியர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது விண்ணகத் தூதர்கள் அதைக் காப்பாற்றினார்கள். முதலில் அதை இன்றைய குரோவாசியவிற்குத் தூக்கிச் சென்றார்கள். இறுதியாக, அது இத்தாலியில் உள்ள லொரேட்டோ மலை நகரத்தை வந்தடைந்தது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து அங்கு செங்கல்ளால் கட்டப்பட்ட ஒரு வீடு இருந்தது. பிறகு இது ஒரு முக்கிய திருப்பயண மையமாக மாறியது.
இது வீரமாமுனிவருக்கு முக்கிய இடமாக இருந்திருக்கிறது. அதை வருங்காலத்தில் நிகழவிருக்கும் இத்தாலியின் பெருமையை சேசு சூசைக்கு முன்னறிவித்ததாக தேம்பாவணியில் பதிவு செய்கிறார். (32, 25-26)
“ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயிலெனக்கு உலகில் ஆகிப்
பாராழி ஒன்றிணையாய்ப் படர்செல்வ நாட்டியல்யான் பகர்வது என்ன
நீராழி கடந்தங்கண்; இம்மனைசென்று அடைக்கலமே நிலத்தில் செய்தாங்கு
ஓராழி இரவியின் இவ் இல் இலங்கச் செயும் இத்தாலியநாடு அன்றோ”
வீரமாமுனிவர் திருக்காவலூரையும் மரியாளையும் தமிழகத்தின் மிக முக்கிய அடைக்கலத் தலமாகக் கருதினார். அதனால் லொரேட்டோவில் உள்ள வீட்டை இடம்பெயர்த்து காவிரிக்கரைக்குக் கொண்டுவருகிறார். அவரது பாடல் திருக்காவலூர் கலம்பகம் (15) இதைத் தெளிவுபடுத்துகிறது.
“நாணி பூட்டிய சாப மேந்திய வீர வெங்கர வேடனார்
நாணி வுட்சுடு தீய சொற்கொடு நம்மை யெள்ளின ராரடா
சேணி பூட்டிய கொம்ப ரேந்திய தேற லூட்டிய காவலூர்
சீரினாளொரு தேவ மானொரு சீய மேகரு வுற்றகாற்
பாணி பூட்டிய வெங்க டார்மலை பற்றி யெங்குடி லெய்தினாள்
பாத மூன்றிய வாயிறாமரை பூத்த காடென வாயடா
தூணி பூட்டிய வம்பு போலவள் புக்க சிற்றில லர்ந்தபூ
தூய தேனுக வின்னும் வாடில சூழ்ந்து வாழ்த்திட வண்டரோ.”
இப்பாடல் முதலில் வேடர்கள் வாழும் மலையிலுள்ள ஒரு குடிலில் மரியாள் தான் கர்ப்பிணியாக இருக்கும்பொழுது அடைக்கலம் புகுந்தாள் என்பதையும், சேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததையும் சுட்டிக் காட்டுகிறது. இப்பாடலின் இரண்டாவது பகுதியில் ஒரு சிறிய இல்லத்தில், அதாவது நசரேத்தூரில் வாழ்ந்ததைக் குறிக்கிறது.
இங்குப் புதிதாக புகுத்தியிருப்பது “சாந்தா காசா” தமிழகத்தில் மறவர் வாழும் மலைப் பகுதி. பாலஸ்தீனத்திலிருந்து இத்தாலிக்கு வந்த “சாந்தா காசா” தொடர்ந்து பயணம் செய்தது. சேசு சபையினர் தாங்கள் பணிசெய்யச் சென்ற நாடுகளுக்கெல்லாம் இந்த உருவத்தை எடுத்துச்சென்றனர் – வடக்கு, மத்திய, தெற்கு அமெரிக்காவில் கோவில் கட்டினர். இந்தப் பக்தி முறையைப் பல இடங்களில் பரவச்செய்தனர். அதுபோல திருக்காவலூரில் எழுப்பப்பட்ட கோவிலும் இன்னுமொரு லொரேட்டோவாக அமைந்தது.
தேம்பாவணியில் காணும் நிலப்பரப்பும் இயற்கை வருணனைகளும் இலக்கிய முறையில் மட்டும் எழுந்த காப்பியப் படைப்பல்ல. தமிழகத்தின் மலைகளிலும், நதிகளிலும், நிலப்பரப்பிலும் கிறித்தவக் கண்ணோட்டத்தோடு ஆன்மீக வழியில் சிந்திக்க வைக்கும் வருணனைகள்.
தமிழகத்தில் கத்தோலிக்கக் கவிதை:
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதியர் தேம்பாவணியை வாசித்த முறை: -
1721 சனவரி 12ஆம் தேதி பிரான்சு நாட்டு சேசுசபை குரு நோவேல் தே பூர்ஜெஸ் பாரிஸில் இருந்த எத்தியென் சூசெவுக்கு எழுதிய கடிதத்தில் வீரமாமுனிவரை “பூக்களின் தந்தை” என்று குறிப்பிட்டு அவருக்காகப் பல வகையான பூக்களின் விதைகளை வாங்கி அனுப்பியதாகப் பதிவாகியுள்ளது. இந்தியாவில் சேசுசபையினர் வாழ்ந்த பல இடங்களில் அழகுக்காகவும் மருந்துக்காகவும் தோட்டங்களை அமைத்தனர். ஏனெனில் அவர்கள் ஆன்மீக அளவிலும் உடல் அளவிலும் குணமளிப்பவராகப் பணிசெய்து வந்தனர்.
ஏலாக்குறிச்சி என்ற ஊரில் வேதியர்களோடு வாழ்ந்த வீரமாமுனிவர் இவ்வாறு வெளிநாட்டிலிருந்து பெற்ற விதைகளை வைத்து என்ன பயன் அனுபவித்தார்? தேம்பாவணியில் வரும் பாடல்கள் இதற்குக் கொஞ்சம் புரிதல் அளிக்கின்றன. (ஐயம் நீங்கு படலம் 8, 50-53.)
நீமம் உடைத் திங்கள் துடைத்து ஒளியைப் பாய்ந்த
நேர் அடியாள், நேர் அற, விள்ளா வண்ணம்,
காமம் உடைத்து, ஒளி உடுத்து, சுடரில் தூய
கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே,
தாமம் உடைத் தண் தாது மடு உடைத்துச்
சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி,
ஏமம் உடைத் தனி விருது என்று, அலர் சுவேத
இலீலி எனும் மாலை, பதத்து, ஒரு நூறு, உய்த்தார். (50)
இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள்,
இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்சக்
கருதி, எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை
கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே,
குருதி, எழில் படுத்திய செந்தாது உலாவும்
கொழுந் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு,
பருதி எழில் படுத்திய சீறு அடியைப் போற்றிப்
பணி ஆக முன் படைத்தார், ஒரு நூறு அன்றோ. (51)
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள்,
விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்பு உற்று உய்ய,
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும்
கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே,
நீடு அவிழ்த்த வாய் இடத்துப் பிரிந்து ஓடும் பல்
நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த
தோடு அவிழ்த்த விரைக் கமலம் மாலை மாற்றி,
சூடிய தாள் தொழுகின்றார், ஒரு நூறு அன்றோ. (52)
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞானத்
துறை அன்னாள், மாசு அறு நல் உணர்வின ஈர்த்து,
மறை கெழு நூல் வழி வழுவா, கடவுள் நல் தாள்
மாறு இல மெய்ஞ் ஞான நலம் அமைந்ததற்கே,
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின்
முடுகு வழி விடா திரியும் இரவிக் காந்தம்,
அறை கெழு நூல் வழித் தொடை போல் தொடையல் ஆக்கி,
அருச்சனை செய்து, அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ. (53)
இந்தப்பாடல்கள் சூசை கண்ட காட்சியின் ஒரு பகுதி. இது சூசையின் சந்தேகத்தை நீக்குகிறது. மரியாள் தூயவள் என்று ஏற்றுக்கொள்கிறார். அந்தக்காட்சியில் வானதூதர்கள் மலர் தூவி மரியாளை வணங்குவதைக் காண்கிறார். இது தென்னிந்தியாவில் உள்ள மரபோடு இணைந்தது.
ஆனால் வானதூதர் மரியாளுக்குச் சமர்ப்பிக்கும் மலர்கள் தமிழகத்தில் வழக்கமாகச் சொல்லக்கூடிய வகைகள் அல்ல- - வெள்ளை இலீலி (சுவேத இலீலி - Lilium canditum in Latin)- கத்தோலிக்க மரபில் மரியாளின் கற்பையும், தூய்மையையும் குறிப்பது@ அது தமிழ் நாட்டில் இல்லாதது; இரண்டாவது மலர் இரோசு, இதுவும் தமிழ் மரபில் இல்லாதது; பிறகு இஸ்லாமிய மரபோடு சேர்ந்து தமிழகத்தில் தோன்றியதாகச் சொல்வதுண்டு. ஆனால், கமலம் - தாமரை தமிழகத்தில் நன்கு அறியப்பட்டது. ஏலாக்குறிச்சியில் மரியாள் “அடைக்கல மாதா” வாக அறிமுகமாகிறாள். மரியாள் வருந்தி வருவோர்க்குத் தஞ்சம் கொடுப்பவள் என்று பொருள்.
தேம்பாவணி எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனி ஒரு காப்பியமாக எழுதப்படவில்லை. 1720 – ஆண்டளவில் வீரமாமுனிவர் இரண்டு முக்கிய நூல்களை எழுதினார் – திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை. கலம்பகம் அன்னை மரியாளைத் திருக்காவலூரின் அடைக்கல மாதாவாக சிறப்புச் செய்யும் பாடல். தமிழகத்தில் உள்ள தலபுராணம் போல அமைந்துள்ளது. இப்பொழுது அக்கோவிலைச் சுற்றிய மதில்களில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் வளாகத்தின் மூலையில் கித்தேரி அம்மாளுக்கு ஒரு சிறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வீரமாமுனிவர் கித்தேரியை ஒரு கிராம தெய்வமாக, குருதி சிந்திய தேவதையாக கற்பனை செய்து அம்மானை பாடல் எழுதி அவளுக்குச் சிறப்புச் செய்கிறார். திருக்காவலூர் ஒரு கிறித்தவ பக்தியைக் கற்பிக்கும் மையமாக நிலை நாட்ட வீரமாமுனிவர் தொகுத்த கனவுக்காட்சியின் சின்னங்கள்தான் இந்த இரண்டு பாடல்களும். இவையெல்லாம் தேம்பாவணியோடு தொடர்பு கொண்டவை. அதாவது, தமிழ், இலத்தீன், இத்தாலியப் பண்பாடு, மற்ற கிறித்தவ அம்சங்கள் கலந்த ஒரு காப்பியம்தான் அவர் எழுதிய தேம்பாவணி.
தேம்பாவணியின் தாக்கம்:
தமிழ் இலக்கிய உலகில் கிறித்தவர்களுக்கு நிலையான அடையாளம் கொடுத்தது வீரமாமுனிவர். அவருக்கு முன்பு பல கிறித்தவப் பணியாளர்கள் தமிழில் எழுதினார்கள். ஆனால் அவையெல்லாம் இலக்கியமாக தமிழ் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ் கிறித்தவம் உண்டு என்று சொல்லும் நிலைக்கு அடிக்கல் நாட்டியவர் வீரமாமுனிவர். அவர் 1747-இல் இறந்தார். அதன் பின் என்ன நிகழ்ந்தது? எப்படி கிறித்தவம் தமிழகத்தில் தொடர்ந்தது என்ற கேள்வி எழுகிறது.
சேசு சபை தொடங்கி (1542) 200 ஆண்டுகளில் அவர்கள் உலகெங்கும் சென்று பணிசெய்து புகழ் தேடினர். பிறகு திடீரென்று அவர்கள் வாழ்வில் காற்று எதிர் திசையில் பலமாக வீசியது. 1759-இல் போர்த்துக்கீசிய அரசு சேசு சபைக்குத் தடை விதித்தது. 1764-இல் பிரான்சு நாடும், 1767- இல் இஸ்பானிய நாடும் தடை விதித்தன. பிறகு 1773-இல் திருத்தந்தை (The Pope) உலகெங்கும் சேசு சபையினரைத் தடைசெய்தார்.
இத்தகைய தடை அவர்கள் வாழ்வுக்கு ஒரு முடிவு கட்டியது. தென்னிந்தியாவில் இருந்த சேசு சபையினர் தங்கள் உரிமையை இழந்தனர். அவர்களுக்கு இலக்கியம் படிக்கவோ புதிதாக நூல்கள் எழுதவோ நேரம் இல்லை. தங்களைப் பாதுகாக்க மற்ற துறவியரிடமும், ஆட்சியாளரிடமும் தஞ்சம் புகுந்தனர். தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையும் வெகு விரைவில் மாறிக்கொண்டிருந்தது. 1740- ஆண்டுகளில் தமிழகம் 72 பாளையமாகப் பிரிக்கப்பட்டு குறு நில மன்னராட்சி போல நிகழ்ந்தது. பிறகு ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்தது.
இக்கால கட்டத்தில் மறைப் பணியாளர்கள் கவிதை எழுதவில்லை. ஆனால் வீரமாமுனிவர் பயிற்றுவித்த வேதியர்கள் முன்வருகின்றனர். சவரிமுத்து பிள்ளை வடக்கண்குளத்தில் தேம்பாவணியை ஓலை ஏடுகளில் பிரதி எடுக்கிறார். சுவாமிநாத பிள்ளை மெட்ராசில் வாழ்ந்து கொண்டு வீரமாமுனிவர் வழியில் காப்பியமும் கலம்பகமும் எழுதுகிறார். வீரமாமுனிவரின் வரலாறு எழுதிய முத்துசாமி பிள்ளை பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவரின் நூல்கள் கத்தோலிக்கச் சமுதாயத்திற்கு வாழ்வு கொடுக்கும் ஆதாரமாக விளங்கின என்று பதிவு செய்கிறார். அவரது பாடல்களைப் படித்தும் பாடியும் அவரது நூல்களைப் பரப்பி வந்தார்கள்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது எப்படி மறைப்பணி பொதுமக்கள் எடுத்துச் செய்தார்கள் என்பது. குருக்கள் யாரும் இல்லாத நிலையில் இவர்கள் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கினர். கத்தோலிக்க பொது மக்கள் கிறித்தவ நம்பிக்கை சார்ந்த பாடல்களும் காப்பியங்களும் எழுதத் தொடங்கினர்.
இக்காலக் கட்டத்தில் வாழ்ந்த முக்கிய எழுத்தாளர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை (1826-1889);. சமுகச் சீர்திருத்தவாதி, பெண்கள் கல்விக்காகப் போராடியவர், முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர். கத்தோலிக்கக் கிறித்தவராக சிற்றிலக்கியங்கள் பல இயற்றினார்.
பிறகு 1814- இல் சேசு சபையினருக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. 1834- இல் ஐரோப்பாவிலிருந்து தமிழகம் வந்த சேசு சபையினர் எப்படி கிறித்தவ இலக்கியம் கத்தோலிக்கரை ஒன்றிணைத்துத் தொடர்ந்து வழிநடத்தியது என்பது கண்டு வியந்தனர்.
சுருங்கச்சொல்ல வேண்டுமானால், சேசு சபையினர் மறைப்பணி திட்டங்கள் தோல்வியில் முடிந்தன. ஆனால், வீரமாமுனிவர் தொடங்கிய இலக்கியப் பணி, அவர் ஏலாக்குறிச்சியில் பயிற்றுவித்த வேதியர் குழு எல்லாத் தடைகளையும் எதிர்கொண்டு நிலைத்து நின்றது.
இதற்கான காரணங்களைத் தேட வேண்டும். ஏன் கத்தோலிக்கச் சிந்தனையாளர்கள் தமிழ் நூல்களில் பெரிய அளவுக்கு ஈடுபாடு கொண்டிருந்தனர்? இந்த நூல்கள் அவர்களுக்கு எந்த வகையான அழுத்தம் கொடுத்தது?
கிறித்தவ மறைப்பணியாளர்கள் தங்கள் ஆன்மீக, பண்பாட்டு, பொருளாதார அதிகாரத்தை வேதியர்களிடம் ஒப்படைத்தபோது இத்தகைய வரலாற்றுத் தொடர்புக்கான விதையைப் பயிரிட்டார்கள். சேசு சபையினர் அவர்கள் பயிற்றுவித்த வேதியர்களுடன் தமிழ் இலக்கியத்திற்குள் கிறித்தவ நூல்களை இணைத்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக தேம்பாவணி அமைந்துள்ளது.
ஏலாக்குறிச்சியில் தொடங்கிய அத்தகைய பயிற்சி வீரமாமுனிவரும், அவரது தோழர் ஞானப்பிரகாசியாரும் (பெர்த்தோல்டி) எழுதிய நூல்கள் ஒரு புதிய கண்ணோட்டத்தை முன் வைக்கின்றன. வேதியர்கள் ஞானமுயற்சி, வேதியர் ஒழுக்கம் போன்ற நூல்களைப் படித்துத் தியானிக்கும் பொழுது தமிழ் உலகத்தைக் கிறித்தவக் கண்ணோடு பார்க்கக் கற்றுக் கொண்டனர். அதோடு இயற்கைக் காட்சியெல்லாம் கிறித்தவக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நூலாக வாசிக்கத் தொடங்கினார்கள்.
“கண்ட(து) எலாம் கர்த்தாவைக் காட்டிய கண்ணாடி எனக்,
கொண்ட(து) எலாம் மெய்ஞ்ஞானம் கூறியவாய் ஆயினவே.”
(கித்தேரியம்மாள் அம்மானை, 2 13)
அதன் தொடர்ச்சியாக ஒரு சமுதாய உணர்வை அனுபவித்தனர்- நரகத்தின் முன் அச்சமும், விண்ணகம் நோக்கிய ஆவலும், தீயவை கண்டு அருவருப்பும், தவறுகளை நினைத்து வெட்கமடையவும், தானாக சொந்த முயற்சியால் மீட்படையலாம் என்பது ஆணவம் என்றும் உணரத் தொடங்கினர். இந்தக் கண்ணோட்டத்தைத்தான் ஏலாக்குறிச்சியில் கற்றுக்கொண்டனர். இத்தகைய பார்வை தமிழ் மரபோடு, சித்தர், வள்ளுவர் உலகோடு இணைந்து இருந்தது என்பதுதான் அதன் சிறப்பு.
(துணை நின்ற நூல், Margherita Trento, Writing Tamil Catholicism. Literature, Persuasion and Devotion in the Eighteenth Century. Leiden: Brill, 2021)
Additional Notes:
[1]
Cf. Maria Goloubeva, The Glorification Of Emperor Leopold I In Image, Spectacle And Text, 2000.
[2]
There was a king with the white spear in hand by name Leopold,
He could conquer the wicked enemy and make them surrender,
He ruled joyfully the glorious land of Rome,
Which was surrounded by the fields with water flowers. (Tempavani, 3532)
[3]
Baguet, Jelten. 2015. “Politics and commerce: a close marriage? The case of the Ostend Company (1722-1731).” TSEG/ Low Countries Journal of Social and Economic History 12, 3. DOI: 10.5117/TSEG2015.3.BAGU
[4]
Robert Caldwell, A Compartive Grammar of the Dravidian, 1875, 155.
[5]
Your hands are the glory-lily,
Your feet are the lotus flower,
Your eyes are the blue-lotus,
Your mouth is the red-lily,
All these flowers bloom in unison in Tirkkāvalūr.
You are the tender garland,
The bees drink its honey,
This is the best one,
The sweet honey from the flowers on this earth cannot equal this.
Tell us, o bees. (23)
[6]
வீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம் (https://www.hindutamil.in/news/spirituals/197827-.html)
..
No comments:
Post a Comment