Friday, December 24, 2021

எஸ்.பொ. இன்றி நவீன ஈழத்தமிழ் இலக்கியம் இல்லை

-- க. நவம்


குறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர் க. நவம், இதழியலாளர், கனடா அவர்கள் வழங்கிய சிறப்புரை.  


எஸ்.பொ.வுக்கும் எனக்கும் இடையிலான ஊடாட்டம் - ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரது வகிபாகம் - அவரது இலக்கியம் சார் கருத்துநிலை - என எல்லை வகுத்து, எனது கருத்துக்களைச் சுருக்கமாக முன்வைக்கிறேன்.

நவீன ஈழத்தமிழ் இலக்கியப் புத்தகங்களைப் பள்ளிக் காலத்திலேயே படிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியிருந்தது. எஸ்.பொ.வின் ‘சில புத்தகங்கள்’ அப்போதைய என்னைப் போன்ற சின்னஞ் சிறிசுகளின் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ, வீட்டில் புத்தகங்களோடு புத்தகமாய்ப் புதைத்து வைக்கப்பட்டிருந்த காலமது. விளங்கினது பாதி – விளங்காதது பாதியென, அசுமாத்தம் ஏதுமின்றி அவசர அவசரமாகப் படித்துவிட்டு, மீண்டும் கிடந்த இடத்தில் அப்படியே அவற்றை நானும் பதுக்கி வைத்த ஞாபகம். ஆனாலும் தொடர்ந்து அவ்வப்போது எஸ்.பொ.வைப் படித்துவந்த எனக்கு, அவரது எழுத்தில் காரணம் தெரியாத ஒரு கவர்ச்சி இருந்து வந்தது. அவரை என்றைக்காவது ஒருநாள் காணவேண்டும் என்ற ‘காதல் மனதில் பெருகி இருந்தது’ என்றுகூடச் சொல்லலாம்.

1973 அல்லது 74ஆக இருக்க வேண்டும் - கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் நான் ஆசிரியப் பணியாற்றிவந்த தருணம், அகில இலங்கைத் தமிழ்த் தினவிழா மிகப்பெரும் ஏற்பாடுகளுடன் அங்கு நடைபெற்றது. அதன்பொருட்டு எஸ்.பொ. உட்பட, கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளிகள் பலரும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அன்றுதான் நான் எஸ்.பொ.வை முதன்முதலாகக் கண்டேன். சற்றே காலம் கடந்த காட்சிப் படிமத்துடன் கூறுவதாயின், ‘மாமேரு மலையை அண்ணாந்து பார்த்த மலைப்புடன்’ அவரைத் தூர நின்று பார்க்கக் கிடைத்ததே தவிர, துரதிருஷ்டவசமாக அவருடன் பேசவோ பழகவோ எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

எண்பதுகளின் ஆரம்பத்தில் என்னினத்தவர்க்கும் எனக்கும் இலங்கையில் விளைவிக்கப்பட்ட இன்னல்கள் காரணமாக - நாடுகள், கடல்கள், கண்டங்கள் கடந்து, பரதேசியாக கனடா வந்து சேர்ந்திருந்தேன். ஆனாலும், எஸ்.பொ.வின் வார்த்தைகளில் சொல்வதாயின், நீண்ட பயணங்களிலும் அவற்றையும் மீறி, நெடிதுயர்ந்த ஆய்க்கினைகளிலும், அமோக இழப்புக்களிலும் ‘நான் தமிழன்’ என்ற பிரக்ஞையை மட்டும் கனடாவில் தொலைக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை இங்கு கலை இலக்கிய முயற்சிகள் தவிர, மனதுக்கு இதந்தரும் வேறெந்தப் பொதுக் காரியங்களாலும் என் ஏதிலி வாழ்வின் தழும்புகளை என்னால் முற்றாக மூடிமறைக்க முடியவில்லை. இவைகளே எனது மனதுக்குக் குதூகலம் அளித்தன; வாழ்வுக்கு அர்த்தத்தை வழங்கின. ஆகையால், அவ்வப்போதான சிறுசிறு அஞ்ஞாதவாசம் தவிர, இத்துறைகளுடனான சிநேகிதம் இங்கும் தொடர்ந்தது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் வெளியிட்டுவந்த ‘நான்காவது பரிமாணம்’ கலை இலக்கிய இதழினூடாக, சென்னையில் தமது இலக்கிய ஊழியத்தை மேற்கொண்டுவந்த எஸ்.பொ.வுக்கும் எனக்கும் தொடர்புகள் ஏற்பட்டன. புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களே புத்தாயிரத்தில் தமிழ் இலக்கியத்திற்குத் தலைமை தாங்குவார்கள் என ஒரு வெற்றுப் புலம்பலாய் அல்லாமல், ஆறுகோடி தமிழ் மக்கள் வாழும் சென்னைத் தலைநகரிலே ஒவ்வொரு சொல்லினது அர்த்தமும் உணர்ந்து பிரசித்தம் செய்தவர், எஸ்.பொ. அந்த நம்பிக்கையின் அடையாளமாக, புலம்பெயர்ந்த கதைஞர்களின் 39 புதுக் கதைகளை ‘பனியும் பனையும்’ என்ற மகுடத்துடன் தமது மித்ர வெளியீடாக 94இல் வெளியிட்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க, கனடாவிலிருந்து கதைகளைத் திரட்டி அனுப்பியவர்களுள் நானும் ஒருவன்.
['பனியும் பனையும்' நூலினை 'நூலகம்' தளத்தில்  - வாசிக்க... http://noolaham.net/project/01/65/65.pdf]

Espo3.jpg


உலகச் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு, 2000ஆம் ஆண்டு செப்ரெம்பரில் எஸ்.பொ. கனடா வந்து, 2 வாரம் தங்கியிருந்தபோதுதான் அவரைச் சந்தித்து நேரடியாகப் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொள்கை அடிப்படையில் நாமிருவரும் முரண்பட்டவர்கள் தான்; ஆனாலும் இங்கு இடம்பெற்ற பல சந்திப்புகளின் போதெல்லாம் என்னோடு பயணிப்பதையே அவர் தமது விருப்புக்குரிய தேர்வாகக் கொண்டிருந்தார். மொன்றியால் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்புக்கென, ஒருநாள் காலை புறப்பட்டு, அது முடிந்த கையோடு மீண்டும் அன்று மாலையே ரொறன்ரோ திரும்பினோம். எங்கள் இருவரதும் மனைவியர்கள் வாகனத்தின் பின் இருக்கைகளில் அமர்ந்துகொண்டு, தத்தமது வீடுகளில் ‘கோழி குட்டி போட்ட கதைகளையும் –  ஆடு குஞ்சு பொரித்த கதைகளையும்’ அந்நியோன்யமாக்கப் பரிமாறிக்கொண்டு வந்தனர்.


ஆனால் அந்த 12 மணிநேரக் கார்ப் பிரயாணத்தில் இடம்பெற்ற, ‘குருஷேத்ர கீதா உபதேசத்தின்போது’, தொடர்ந்து வினாக்களைத் தொடுத்த பார்த்தனாக நானிருந்தேன். கீதாசிரியன் கண்ணனாக இருந்து அலுக்காமல், சலிக்காமல் எனது வினாக்களுக்கான விடைகளாக அவர் மனம் திறந்து என்னோடு பகிர்ந்துகொண்ட செய்திகள், தகவல்கள், அனுபவங்கள், அறிவுரைகள் விலைமதிப்பற்றவை. தமது வாழ்வியல் அனுபவங்களை இளைய படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்வதை, இலக்கியச் சகாயத்திற்கு உதவும் ஒரு சல்லாபமாக மதிக்கும் அவரது அன்றைய பகிர்வுகள் ஓர் அருமந்த நூலாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய தகுதியுடையவை. அதேயாண்டு, மார்கழி மாதம் கனடாச் சிறப்பிதழாக, கணையாழி வெளிவந்தமைக்கும், அதன் தொகுப்பாசிரியராக நான் பங்காற்றியமைக்கும், எஸ்.பொ.வின் முன்னெடுப்பும் முயற்சியுமே முழு முதற்காரணங்கள். அதன் பின்னர் அவர் மறையும்வரை, சில கடிதங்கள், தொலைபேசி உரையாடல்கள் மூலமாக மட்டுமே அவருடனான உறவும் தொடர்பும் நீடித்திருந்தன.

இனி, ஈழத்து இலக்கிய வரலாற்றில் அவரது வகிபாகம் என்ன என்பதை ஒரேயொரு வரியில் சொல்வதாயின், எஸ்.பொ. என்ற இந்த மகத்தான இலக்கிய ஆளுமை இன்றி, ஈழத்து நவீனத் தமிழ் இலக்கிய வரலாறே இல்லை. சிறுகதை, உருவக்கதை, நாவல், நாடகம், கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, கல்வி, வானொலி, சினிமா என்று அவர் அகலக் கால் பதிக்காத துறையே இல்லை. அபிமன்யு, அம்யுக்தன், கொப்பன் கணபதி, கொண்டோடிச் சுப்பர், புரட்சிப்பித்தன், பழமைதாசன், ராஜ்மித்ரா, ராஜபுத்ரா என்ற மாறுவேடங்களுடன் எழுத்துலகில் நடமாடிய இவர், சிறுகதை மன்னன், ஈழத்து ஜெயகாந்தன், நடைச்சிற்பி என்றெல்லாம் விதந்துரைக்கப்பட்டவர்.

நவீன ஈழத்தமிழ் இலக்கிய உலகை ஒருகால் வழிநடத்திக்கொண்டுவந்த மாபெரும் இயக்கமொன்றைத் தமது வீரியம் மிக்க எழுத்தாற்றலைக் கொண்டும் - கரு, நடை, உத்திமுறை என்பவற்றைக் கையாளும் தமக்கேயான தனித்துவத்தினைக் கொண்டும் எதிர்த்து நின்ற துணிச்சலாளர். எதையும் புதிது புதிதாகச் செய்து பார்த்து, அதன் வெற்றி தோல்விகள் மீது மீண்டும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக, சக எழுத்தாளர் பலருடன் இணைந்து மத்தாப்பு, மணிமகுடம் போன்ற மேலும் பல கூட்டு முயற்சி இலக்கியங்கள் தோன்றக் கால்கோளமைத்தவர். ஆங்கிலப் புலமையாலும் - ஆசிய, ஆப்பிரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் வாழ்ந்தமையால் கிட்டிய பட்டறிவினாலும் - ஒரு பண்பட்ட படைப்பாளிக்குரிய பரந்துபட்ட பார்வையினையும் ஆழ்ந்தகன்ற நுண்ணுணர்வையும் தனதாக்கிக் கொண்டவர். இவ்வாறாக, தாம் சென்ற இடமெல்லாம் தமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, இலக்கியத்தை, தனித்துவத்தைப் பெருமையுடன் வெளிக்கொணர்ந்து வந்த பெருமகன், அவர். ஒரு யாழ்ப்பாணத்தவனாகப் பிறந்து, யாழ்ப்பாண வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை உட்கொண்டு, அதே சமயம் ஒட்டுறவற்ற ஒரு துறவு மனப்பக்குவத்துடன் யாழ்ப்பாண வாழ்க்கையை உற்றுநோக்கியதன் பெறுபேறாகவே ‘நனவிடை தோய்தல்’ என்னும் புதிய இலக்கிய வடிவம் உட்பட, அலாதியான படைப்புக்கள் பலவற்றை ஆக்கி அளித்தவர்.

மலிவான பிரசுர களங்கள் என்னும் போர்வையுடன், புலம்பெயர்ந்த தமிழனின் குருதியும் வியர்வையும் உறிஞ்சிச் சுகிக்கப்பட்டு வந்த ஒரு காசாசைக் காமாலை நோய்ச் சூழலில், மித்ர வெளியீடு என்ற அழுத்தகம் ஒன்றை ஆரம்பித்து, அவனதும் ஏனைய பலரதும் படைப்புகள் நூலுருப் பெறுவதற்கு ஆவன செய்தவர். இவ்வாறாக ஈழத்தமிழ் இலக்கியத்தில் அவர் வகித்த பாகங்களின் விபரங்களைத் தொடர்ந்து அடுக்கிக்கொண்டே போகலாம்.

எஸ்.பொ. ஒருமுறை சொன்னார், “தமிழ் ஊழியம் என்னைப் பொறுத்தமட்டில் ரோஜாமலர்ப் படுக்கையாக அமையவில்லை. அது முள்முடி தரித்த, சிலுவை சுமந்த யாத்திரை! ஏன் இந்த ஆய்க்கினைகள்? என் தமிழ்ச் சேவிப்பிலே சதா புதிதுகளைத் தேடுகிறேன். அதுவும் இடையறாத ஓய்வில்லாத தேடல். அது இருட்டு அறையிலே கறுப்புப் பூனையைத் தேடுவதல்ல. அன்றேல் காரட் தொங்கும் தடிக்குப் பின்னாலான கழுதை ஓட்டமுமல்ல! அது உண்மையின் உள்ளொளி நாடிய தேடல்.” எஸ்.பொ.வினது இலக்கியக் கருத்துநிலையினைக் கோடிட்டுக் காட்டுவதற்கு அவரது வாய்வழி வந்த இந்த ஒப்புதலை விட வேறென்ன வாக்குமூலம் வேண்டிக் கிடக்கின்றது?

கைதேர்ந்த எழுத்துநடை வேறுபாடுகளுக்கும் அப்பால், தமது எழுத்துக்களில் உயிராக - ஊடுபாவாகப் பரவியிருப்பது இலக்கியச் சத்தியமே என்பதை "There was something in common in the diversity of styles which I employ" என ஆங்கிலத்தில் அழகாக ஒருமுறை கூறியிருக்கின்றார்.

படைப்பாளிகள் சத்தியத்திற்கு முன்னுரிமை கொடுத்துப் படைக்க வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தும் எஸ்.பொ., இந்தப் படைப்புச் சத்தியத்திற்கு உண்மையே அழகு; பொய்மைக்குத்தான் பூ வேலையும் பூச்சு வேலையும் தேவை எனச் சொல்லியிருக்கின்றார்.

மேலும், “இலக்கியத்தில் சமூக முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உள்ளடக்கமே பிரதானமானது என மார்க்சியவாதிகள் கருதுகின்றனர்” எனக் கூறும் எஸ்.பொ., இலக்கியத்தில் இந்த உருவம், உள்ளடக்கம் என்ற பகுப்புமுறை கொச்சையானது என எதிர்வினையாற்றி வந்துள்ளார்.

இவ்விதமாக, இஸங்கள், கோட்பாடுகள், தத்துவங்களின் அடிப்படையில் வாழ்வியலை உற்று நோக்கும் வழிமுறையை விடுத்து, படைப்பு மொழியைத் தனது போக்கில் நகரவிட்டு எழுதும் கட்டற்ற எழுத்து முறையை அவர் கையாண்டவர். மூடி மறைக்கப்படும் மானுட நடத்தை குறித்த உண்மையை உண்மையாகச் சொல்ல வேண்டும் என்ற வேட்கையுடன், ஒரு சராசரி மனிதனது ஆழ்மன விருப்புக்களையும் சபல சஞ்சலங்களையும் இலக்கியமாக்கித் தந்தவர்.

மேலும், மண்வாசனையுடன் கூடிய ஈழத்து வட்டார மொழி வழக்குகளை, அட்ஷர லட்ஷணம் பிசகாதபடி, அவற்றிற்கே உரிய அழகியல் நுட்பங்களுடன் கையாண்டு வெற்றி கண்டவர் என்றும், ஒரு கைதேர்ந்த இலக்கியப் படைப்பாளிக்குரிய கட்டற்ற நுட்பமான கதைகூறு முறை கைவந்த கலைஞர் என்றும் விமர்சகர்களால் புகழ்ந்து கொண்டாடப்பட்டவர். ஒரு சிறுகதையையோ அல்லது ஒரு நாவலையோ படைக்க முற்படும்போது, அதில் தாம் சித்தரிக்கவிருக்கும் கருப்பொருளுக்கு ஏற்ற பொருத்தமான எழுத்து நடையையும் உருவத்தையும் கொடுக்க வேண்டும் என்று நம்பும் எஸ்.பொ., தம்மை அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படைப்பாளி என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்கின்றார்.

சர்ச்சைக்குரிய ஒரு படைப்பாளியாக தம்மை இனங்காட்டிக்கொண்ட அவர், எதன் பொருட்டும் சலுகை காட்டாமல் தன்னளவில் கண்ட உண்மைகளைத் துணிந்து சொல்லவும் எழுதவும் ஒருபோதும் தயங்கியதில்லை. அதன் உடனடி விளைச்சலாக ஏககாலத்தில் எதிர்ப்பையும் ஆதரவையும் சம்பாதித்துக் கொண்டவர். தமது செழுமை மிக்க மொழி வல்லபத்தினாலும் ஆக்கத்திறனாலும் நெருக்கமான உறவுகளையும், அதேவேளை ஆழமான பிளவுகளையும் எதிர்கொண்டவர். ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அது இல்லாதவன் ஒரு படைப்பாளியே அல்ல. நுண்ணுணர்வு உள்ளமையால் தான் மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை அவனால் பார்க்க முடிகிறது. அதேவேளை, அந்த நுண்ணுணர்வுதான் அவனை எதிர்வினை ஆற்றுபவனாகவும் ஆக்கிவிடுகின்றது. அதன் விளைவாக அவன் ஏகப்பட்ட புறந்தள்ளலுக்கும் ஆளாகின்றான். அது எல்லாப் படைப்பாளிகளுக்கும் ஏற்படக்கூடிய ஒரு பேரவலம், சாபக்கேடு. இந்நிலையில், நுணுக்கரிய நுண்ணுணர்வு கொண்ட எஸ்.பொ. மட்டும் எப்படி இந்த நியதியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்!

2000ஆம் ஆண்டு அவர் கனடா வந்திருந்த சமயம், ஒருநாள் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, நான் கேட்டேன் – “பிரேம்ஜியும் கனடாவிலதான் தன்ர பிள்ளையளோட வாழ்ந்துகொண்டிருக்கிறார், தெரியுமோ?” “ஓமடா தம்பி… கேள்விப்பட்டனான்” என்று எஸ்.பொ. சுருக்கமாகப் பதில் சொன்னார்.

“நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போறன். நீங்கள் ஏன் அவரை ஒருக்கால் சந்திக்கக் கூடாது?”

ஒரு கணநேர தாமதத்தின் பின் எஸ்.பொ. சொன்னார் -  “அதுக்கென்ன, சந்திக்கலாம்…”

உடனே பிரேம்ஜியைத் தொலைபேசியில் அழைத்து “எஸ்.பொ. உங்களைச் சந்திக்க விரும்புறார். கூட்டி வரட்டுமா?” எனக் கேட்டேன். “எனக்கொரு பிரச்சினையும் இல்லை, நவம்.” மறுமுனையிலிருந்து பதில் வந்தது. உடனடியாக நானும் எஸ்.பொ.வும் புறப்பட்டுச் சென்றோம்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆயுட்காலப் பொதுச் செயலாளராக இருந்தவர், பிரேம்ஜி. கோட்பாட்டு ரீதியில் கைலாசபதியையும் சிவதம்பியையும் பிரேம்ஜியையும் எஸ்.பொ.  தன் பரமவைரிகளாக வரிந்துகட்டிக்கொண்டிருந்தமை ஊருலகறிந்த ரகசியம்.

அதே பிரேம்ஜியின் வீட்டை நாங்கள் சென்றடைந்தபோது, அவர் வாசலில் எமக்காகக் காத்து நின்றார். இருவரும் இன்முகத்துடன் ஒருவரை ஒருவர் வரவேற்றனர். இலக்கியக் கோட்பாட்டு முரண்பாடுகளையும் மன முறுகல்களையும் மறந்து, தேநீர் அருந்தி அன்போடு அளவளாவினர். சுமார் ஒரு மணித்தியால உரையாடலின் பின்னர் அதே மலர்ந்த முகத்துடன் பிரேம்ஜியிடமிருந்து விடைபெற்று என்னுடன் புறப்பட்டு வந்தவர், எஸ்.பொ.

இது மட்டுமன்றி, இதே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளையின் செயலாளர் தெணியானின் தம்பிதான் நான் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தும், என்னோடு எந்தவிதக் கோபதாபமும் இன்றி, சம்பிரதாயம் ஏதுமற்ற அன்போடும் அளவிறந்த மரியாதையோடும் உறவாடிப் பழகி வந்தவர், எஸ்.பொ.

என்னதான் கொள்கை ரீதியான மோதல்களும் முரண்பாடுகளும் இருந்தாலும், காலம் பூராவும் கறாரான விமர்சனங்களையும் கண்டனங்களையும் அள்ளிக் கொட்டினாலும், நேருக்கு நேர் காணக் கிடைக்கின்றபோது நயத்தக்க நாகரிகத்துடனும், இனிமை தோய்ந்த இங்கிதத்துடனும் பேசிப் பழகும் மனப் பக்குவம் பெற்றவர் எஸ்.பொ. அவர்கள் என்பதற்கான இருசிறு உதாரணங்கள் இவை. முடிவாக -

ஷேக்ஸ்பியர் தனது காதலிக்கு எழுதிய கவிதையில் இப்படிச் சொன்னாராம் –
‘So long as men can breath or eyes can see,
So long lives this, and this gives life to thee’
அதுபோலவே, மனித இனம் வாழும்வரை எஸ்.பொ.வின் படைப்புகளும் வாழும்; அவரது படைப்புகள் வாழும்வரை அவரும் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்வார்.  

-----------





No comments:

Post a Comment