Wednesday, December 22, 2021

புதுக்கோட்டைக் குடைவரைகள்


-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


வெள்ளாற்றை மையமாகக் கொண்டது புதுக்கோட்டை. வெள்ளாற்றின் கரையே சோழ பாண்டிய நாட்டு எல்லை ஆக இருந்தது என பழைய பாடல் ஒன்று கூறுகிறது.
        “வெள்ளாறது வடக்காம் மேற்குப்பெருவழியாம்*
        தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
        ஆண்டகடல் கிழக்காம் ஐம்பத்தறுகாதம்
        பாண்டிநாட்டெல்லைப்பதி.”

வெள்ளாறு வட எல்லையாகவும், மேற்கு எல்லையாகப் பெருவழியும், தெளிந்த நீர் கொண்ட கன்னி(குமரி) தென் எல்லையாகவும்,  (பல பாண்டிய மன்னர்களாலும்  துறைமுகமாகக் கொண்டு) மனநிறைவுடன் ஆட்சி செய்யப்பட்ட கடல்  கிழக்கு எல்லையாகவும், இந்த ஐம்பத்தாறு காதம் வரை விரிந்துள்ள நிலமே பாண்டிநாட்டின் எல்லைக்கு உட்பட்ட இடமாகும்.
(*பெருவழி என்பதற்குப் பதில் பெருவெளி என்ற பாட பேதமும் உண்டு).

சங்ககாலம் முதல் பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், அவர்களுக்குக் கீழே இருந்த குறுநிலத் தலைவர்கள், முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர்கள், வழுதூர் பல்லவராயர்கள்,  சிற்றரசர்கள் ஆகியோர் புதுக்கோட்டையை கிபி 15 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு உள்ளார்கள். கிபி 17 ஆம் நூற்றாண்டு முதல் 1948 வரை புதுக்கோட்டையானது ஒரு  தனியரசாக ஒன்பது மன்னர்களால் ஆட்சி செய்த பகுதியாக இருந்துள்ளது. 

Pudukkottai Cave Temples.jpg
குறிப்பிடத்தக்க வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல குடைவரைகள் புதுக்கோட்டைப்பகுதியில் உள்ளன. 


1.  மலையடிப்பட்டி குடைவரை:
Pudukkottai Cave Temples1.jpg

Pudukkottai Cave Temples2.jpg
கீரனூருக்கு வடபுறம் இரண்டு குடைவரைகள் உள்ளன. ஒன்று சிவனுக்கு மற்றொன்று விஷ்ணுவுக்கு. நந்திவர்ம பல்லவனால் எடுக்கப்பட்ட இக்கோயிலில் தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்ட நந்தி உள்ளது. மேலும் சப்தமாதர்கள் ஆயுதங்களுடனும், சிம்ம வாகனத்தில் உள்ள காளியும் சிற்பங்களாகக் காட்சி தருகின்றனர். மேற்குப் புறம் திருமால் பாம்பணையில் துயில் கொள்வது போலவும் தேவர்கள் போன்றோர் விஷ்ணுவைப் பார்ப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் கிடந்த கோலத்தில் அவரது நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா வருவது போலவும்,  மேலும் நின்ற அமர்ந்த கோலங்களிலும்,  நரசிம்ம அவதாரத்தின் இரண்யவத சிற்பங்களும்  இங்கு உள்ளன. தந்திவர்மப்  பல்லவனின் கல்வெட்டு கொண்ட பல்லவர்கால குடைவரை இது.
 
2.  குன்றாண்டார் குடைவரை:
Pudukkottai Cave Temples4.jpg

இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கல்வெட்டுகள் இரண்டு இங்கு உள்ளது என்பதால் இது பல்லவர் காலத்துக் குடைவரையாகும். பாறையிலேயே இருக்குமாறு மூலவர் லிங்கத் திருமேனி கருவறை உள்ளே உள்ளது. துவாரபாலகர்கள் மனித உருவச் சிற்பமும் தாய் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர் சிற்பங்களும்  இங்கு உள்ளன. பல்லவர்களுக்குப் பிறகு பாண்டியர், சோழர் முன் மண்டபத்தை ஏற்படுத்தியுள்ளனர்

3.  நார்த்தாமலை குடைவரை:
நகரத்து ஊர் மலை என்பது நார்த்தாமலை என மருவியது. பழியிலி ஈஸ்வரம் முத்தரையர் குடைவரை இது. சிறியநங்கை என்ற பெண் நந்தி  வைக்க ரிஷபக் கூட்டை ஏற்படுத்திய செய்தி நிருபதுங்கன் கல்வெட்டு ஆக உள்ளது. அருகே சமணக் குடைவரை தெற்கு வடக்காக நீள் சதுர வடிவத்தில் கருவறை, முன் மண்டபம் என தாய்ப்பாறையிலேயே உள்ளது.

4.  பதினெண் பூமி விண்ணகரம் குடைவரை:
பதினெண் பூமி என்ற வணிகக் குழு விஷ்ணுவின் 12 சிற்பங்களைத் தாய் பாறையிலேயே செதுக்கி உள்ளனர். பதினெண் பூமி விண்ணகரம் என்ற பெயர் கொண்டதாக கல்வெட்டு கூறுகிறது.

5.  திருகோகர்ணம்:
சதுர ஆவுடையாராக லிங்கத் திருமேனி இருப்பதாலும் மாறன் சடையன் கல்வெட்டு இங்கு உள்ளதாலும்  இக்குடைவரை பாண்டியர்களுக்கானது. மலையின் சிறு பகுதியில் கருவறை, முன் மண்டபம் தாய்ப்பாறையிலேயே உள்ளது. கங்காதரர், வலம்புரி விநாயகர் சிற்பங்களும்  இங்கு உள்ளன.

6.  சித்தன்னவாசல் குடைவரை:
Pudukkottai Cave Temples3.jpg
மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் குடைவரை செதுக்கி ஓவியம் தீட்டியதாக கல்வெட்டுச்  செய்தி இருப்பதால் இக்குடைவரை பாண்டியர்களுக்கானது. இங்கு அஜந்தா ஓவியத்துக்கு இணையான ஓவியம் உள்ளது. கருவறை, முகமண்டபம் மூன்று சமணர்களின் புடைப்பு சிற்பமும் இங்கு உள்ளன.

7.  குடுமியான்மலை மேல் தளி:
இக்குடைவரை குடுமிநாதர் கோயில் எனக் கல்வெட்டு கூறுகிறது. சதுர ஆவுடையாக லிங்கத் திருமேனி மற்றும் கோமாறன் சடையன் கல்வெட்டு இருப்பதால் இது பாண்டியர்களுக்கானது எனத் தெரிகிறது. இங்கு ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும்   பல்லவகிரந்தத்தில் வெட்டப்பட்ட  இசைக் கல்வெட்டு வீணை குறித்த குறிப்பைக் கொண்டுள்ள சங்கீதக் கல்வெட்டு உள்ளது. புடைப்புச் சிற்பமாக  வலம்புரி விநாயகரும்,  துவாரபாலகர்கள் அருகிலேயே தெற்கு பார்த்து மனித வடிவமாக உள்ளனர்.

8.  தேவர்மலை:
திருமயம் தாலுகாவில் கோட்டூர் அருகே, பேரையூர் மேற்கே காட்டிற்குள் சிறுமலையில் உள்ளது. சதுர ஆவுடை கொண்ட லிங்கத் திருமேனி, மற்றும் துவாரபாலகர்கள் மனித உருவத்தில்  உள்ளனர். இங்கே அரிட்டாபட்டியில் உள்ளது போல லகுலீசர் சிற்பம் உள்ளது. மற்ற இடங்களில் காணப்படும் லகுலீசர் சிற்பம் உதிரி சிற்பமாக உள்ளவை.

9.  திருமயம்:
மலைமேல் திருமயம் கோட்டைக்குள் சதுர ஆவுடையார் லிங்கத்திருமேனியும்,  ‘பரிவாதிநிதா’  என்ற கல்வெட்டும்  உள்ளது. இது ஏணிப்படிகளில் ஏறிப் பார்க்குமாறு இந்தியத் தொல்லியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு  பாதுகாக்கப்படும் பாண்டியர் காலக் குடைவரையாகும்.

10.  திருமயம் மலை மேற்குக் குடைவரை:
அடிவாரத்தில் மேற்கு குடைவரையில்  கிழக்கு நோக்கி சிவன் லிங்கத் திருமேனியாக தாய்ப்பாறையிலேயே சதுர ஆவுடையார் கொண்டும், மனித உருவில்  துவார பாலகர்களும் தாய் பாறையிலேயே செதுக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் இங்கும் ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும்  கல்வெட்டும்  சிறு குறிப்புடன் இங்கும் உள்ளது, மிகப் பெரிய லிங்கோத்பவர் உருவம் தாய்ப்பாறையில் புடைப்புச் சிற்பமாக  உள்ளது.

11.  திருமயம் மலை கிழக்குக் குடைவரை:
அடிவாரத்தில் கிழக்கே விஷ்ணு குடைவரைக் கோயிலும் பாம்பணையில் விஷ்ணு சயன கோலத்திலும்,  மேலே தேவர்கள் அகத்தியரும் உள்ளது போலவும்,  பூமாதேவியை  தூக்குவதற்கு வரும் அரக்கர்களை விரட்ட பாம்பு விஷத்தைக் கக்கி தாக்குவது மாதிரியும்,  அவர்கள் பயந்து ஓடுவது மாதிரியாகவும் சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வருடம் ஒருமுறை இதற்கு தைலக்காப்பு நடைபெறும்.  சைவ வைணவ வழிபாட்டுச் சண்டையைக் கருத்தில் கொண்டு  13ஆம் நூற்றாண்டில்  ஹொய்சாள மன்னர் வீர சோமேஸ்வரனின் தண்டநாயகன் இருபகுதிக்கும் இடையே நடுவில் எழுப்பிய  'கையுருவிச் சுவாரால்' இப்பகுதி பிரிக்கப்பட்டு தனித்தனி வழிபாட்டிற்காக  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

12.  நச்சாந்துபட்டி மலையக் கோவில்:
பொன்னமராவதிக்கு ஒரு கிலோ மீட்டர் வடக்கில் மலையக் கோவில் இருக்கிறது. இங்கு நச்சாந்துபட்டி அருகே, இம்மலையின் அடிவாரத்தில் வடபுறத்தில்  சிவன் குடைவரை கோயில் உள்ளது. அதில்  கருவறையில் எட்டுப் பட்டைகளுடன் உள்ள ஆவுடையாருடன் லிங்கத் திருமேனியாக மூலவர் உள்ளார். இங்கு உள்ள அபிஷேகம் நீர் செல்லும் பாதையானது சிங்கம் முகமாக உள்ளது. இங்கும் ‘பரிவாதிநிதா’ என்று தொடங்கும்  கல்வெட்டு உள்ளது.

13.  தெற்கு குடைவரை:
இதே பகுதியில், தெற்கு குடைவரையில், கருவறை முன், மண்டபம் எனவும் மூலவர் எட்டுப்பட்டை ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனியாக, புடைப்புச்  சிற்பமாக உள்ளார். தூணின் தொகையானது தரங்கப் போதிகைகள் கொண்டு உள்ளது.  எதிரே வலம்புரி விநாயகர் புடைப்பு சிற்பமாக தாய்ப்பாறையிலேயே உள்ளார்.

14.  பூவாலக்குடி குடைவரை:
பொன்னமராவதிக்குக் கிழக்கே இருக்கும் பூவாலக்குடி என்ற ஊருக்குத் தெற்கே உள்ள ஒரு சிறிய மலையில், ஆவுடையாரும் லிங்கமும் கொண்ட கருவறை உள்ளது.   அமரூன்றிய முத்தரையன் என்ற 8 ம் நூற்றாண்டு மன்னனால் உருவாக்கப் பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. பின்னர்  இந்தக் குடைவரைக் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் மண்டபம் கட்டி  விரிவு படுத்தப் பட்டுள்ளது.

15.  குலாலகோட்டையூர் குடைவரை:
திருமயம் - இராயவரம் வழியில், ராயவரத்திற்கு மேற்கே குலாலகோட்டையூர் என்று அழைக்கப்படும் கோட்டையூர் இராயவரம் சிவன் குடைவரைக் கோயில் உள்ளது.  இந்த  இராயவரம் குலாலகோட்டையூர் குடைவரையில் சுற்றுப்பாதை இல்லாமலேயே அமைந்த அரை வட்ட வடிவ ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனியாக மூலவர் அமைக்கப்பட்டுள்ளார். இது வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும்.

16.  ஆயிங்குடி குடைவரை:
இராயவரம் நேர் தென்புறத்தில் ஆயிங்குடியில் உள்ள மலைக்குடைவரையில்  பாறையிலேயே லிங்கத் திருமேனியாய் மூலவர் உள்ளார். பின்பு நகரத்தார்களால் முன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. முத்தரையர்கள், பல்லவர்கள் பாண்டியர்கள் மேன்மையை ஏற்றுக் கொண்டு ஆட்சி செய்ததால் தங்களுக்குச் சாத்தான் மாறன் என்ற பெயர் வைத்துக் கொண்டனர். பல்லவர்கள் முதலாம் மகேந்திரவர்மனின் வீணை பரிவாதினி என்ற கல்வெட்டு கிடைக்கின்றது.

நார்த்தாமலைக்குத்  தெற்கே பல்லவராட்சி இருந்ததற்கான சான்றும் இல்லை. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் கல்வெட்டு, பெரும்பிடுகு முத்தரையர், மடைசெய்த கல் தூண் கல்வெட்டு,  முத்தரையன் என்னும் கல்வெட்டு, நாமனூர் குளத்தில் வட்டெழுத்து  அவனீஸ்வர கல்வெட்டு என கிட்டத்தட்ட ஆயிரம் கல்வெட்டுகள் புதுக்கோட்டையில் சமீப காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.




முனைவர். ப. தேவி அறிவு செல்வம் 

குறிப்பு: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  நடத்தும் இணையவழி திசைக் கூடல் உரைத்தொடர் நிகழ்ச்சி வரிசையில், டிசம்பர் 11, 2021  அன்று,  புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் தலைவரும், கல்வெட்டு அறிஞருமான திரு. கரு. ராசேந்திரன் அவர்கள் "புதுக்கோட்டை மாவட்ட குடைவரைக் கோயில்கள்" என்ற தலைப்பில் வழங்கிய உரையிலிருந்து  முனைவர். ப. தேவி அறிவு செல்வம் அவர்கள் தொகுத்த தரவுகள் கட்டுரை. 
படங்கள் உதவி: முனைவர் க. சுபாஷிணி. 
கூகுள் வரைபடத்தில் இடக்குறிப்பு உதவி: முனைவர் தேமொழி


புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைக் கோயில்கள்: திரு. கரு. ராசேந்திரன்
உரை-யூடியூப் காணொளியாக:
https://youtu.be/XDSob-c3_k0







No comments:

Post a Comment