Friday, December 24, 2021

எஸ்.பொ.: இரண்டெழுத்தில் ஓர் ஆளுமை

எஸ்.பொ.: இரண்டெழுத்தில் ஓர் ஆளுமை

-- அ.பாலமனோகரன், டென்மார்க்



குறிப்பு:  அக்கினிக்குஞ்சு' அவுஸ்திரேலியா இணைய இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு - ஜெர்மனியும் இணைந்து நடத்திய,   ஈழத்தமிழ் எழுத்தாளர் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களின் நினைவுப் பேருரை மெய்நிகர் நிகழ்ச்சியின்  இரண்டாம்  நாளன்று (18.12.2021) எழுத்தாளர் அ.பாலமனோகரன், டென்மார்க் அவர்கள் வழங்கிய தலைமையுரை.  


Espo.jpg

டென்மார்க்கில் வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் மூத்தவன் நான் என்பதாலேயே எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன். இந்த நிகழ்வில் மூதறிஞர் எஸ்.பொ. அவர்களுடன்  மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தவர்களும், அவருடைய ஆக்கங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்த அறிஞர்களும், அவருடைய அன்பு இரசிகர்களும் எனப் பல பேராசிரியர்களும், கல்விமான்களும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர். அவர் வளர்த்துவிட்ட எழுத்தாளர்களும் இவர்களுள் அடங்குவர்.  இந்த வரிசையில் வருவதற்கு எனக்குள்ள தகுதி மிகவும் குறைந்ததுதான். ஆனாலும் ஓர் ஈழத்தமிழ் எழுத்தாளன் என்ற வகையில் அமரர் அவர்களுடன் எனக்குப் பழகக் கிடைத்த ஒரு சில சந்தர்ப்பங்களை எண்ணிப் பார்க்கின்றேன்.

எஸ்.பொ. என்ற இரண்டெழுத்து ஆளுமை உலகத் தமிழ் இலக்கிய உலகில் மாத்திரமன்று, அரசியல், சமுதாய ஏற்றத் தாழ்வுகள், பொதுவுடைமை தனியுடைமை தத்துவங்கள், உளவியல் உண்மைகள், உறவுச் சிக்கல்கள், முரண்பாடுகள் போன்ற எண்ணற்ற பரந்துபட்ட துறைகளில் தனது ஆளுமையை மிக ஆழமாகப் பதிந்துள்ளது.

உலகத் தமிழ் இலக்கியப் பூங்காவில் பல நினைவுத் தூபிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் எமது மனங்களில் பிரமாண்டமாக எழுந்து நிற்பது வள்ளுவருக்கு குமரிமுனையில் அமைக்கப்பட்ட அவருடைய சிலைதான். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களையும் இவர் ஒருவரா எழுதினார் என மேல்நாட்டு அறிஞர்கள் பலர் அதிசயப்பட்டதாகவும் அறிகின்றோம்.

என்னுடைய எண்ணத்தில் அமரர் எஸ்.பொ. அவர்களும் உலகத் தமிழ் இலக்கியப் பூங்காவில் நிமிர்ந்து நிற்கும் ஒரு நினைவுத் தூபியாகவே தெரிகின்றார். வெறும் தூபியாக மட்டுமல்லாமல் அவர் ஒரு கோபுரமாகக் காட்சியளிக்கின்றார். அந்தக் கோபுரத்தில் அவருடைய அத்தனை ஆக்கங்களும் சிலைகளாக அமைந்துள்ளன. அவருடைய எழுதுகோல் சித்தரிக்காத துறைகளே இல்லை என்பதுபோல் பலநூறு படைப்புக்கள் அந்தக் கோபுரத்தில் மிளிர்கின்றன. இந்த மெய்நிகர் நினைவேந்தல் நிகழ்வில், பல அறிஞர்களும் பேராசிரியர்களும் என்னுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்தக் கோபுரத்தைச் சுற்றிவந்து காட்டியது போன்று நான் உணர்ந்தேன். இவர்களில் சிலர் 'தோள் கண்டார் தோளே கண்டார்' எனக் கம்பன் கூறியதுபோல் தத்தமக்குப் பிடித்த சிலைகளையே சித்தரித்து மகிழ்ந்தனர். அமரரின் 'தீ', சடங்கு' போன்ற படைப்புக்களை மட்டுமே கஜுராஹோச் சிற்பங்களைப் போல் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.

ஆனால் பல பேராசிரியர்களும், அறிஞர்களும் அமரர் எஸ்.பொ.வின் ஏனைய பல, தனித்தன்மை வாய்ந்த வல்லமைகளை வியந்து, விபரமாக எனக்கு அறியத் தந்தனர். அப்போதுதான் சதாவதானி என்ற சொல் எனது நினைவுக்கு வந்தது. எந்த ஒரு விசயத்தைக் குறிப்பிட்டாலும் அதையிட்டுத் தனது, தனித்தன்மை வாய்ந்த கருத்தைச் சொல்லவும், எழுதவும், கவி புனையவும் கூடிய ஆற்றலையும்  கொண்டவர் எஸ்.பொ. அவர்கள் என எனக்குத் தெரியவைத்தனர். பல்துறை அவதானி என்று அழைக்கப்பட வேண்டியவர் எஸ்.பொ. அவர்கள். அவருடைய எழுதுகோல் தொடாத துறையே இல்லை என்று துணிந்து கூறமுடியும்!

எனது எழுத்தாசான் அமரர் மூதூர் வனா அனா அவர்கள்தான், தனது ஆத்ம இலக்கிய நண்பன் எஸ்.பொ. அவர்களையிட்டு எனக்குக் கூறியவர். ஒரு வரியிலேயே, இலக்கண வழு எதுவுமின்றி ஒரு சுவையான சிறுகதையை எழுதியவர் எஸ்.பொ. அவர்கள் என அறியத் தந்தார். இதைப் போன்றே அவரையிட்ட பல அரிய சங்கதிகளை அவர்மூலம் தெரிந்து கொண்டேன்,

நோபல் பரிசுபெற்ற வங்கக் கவிஞர் தாகூரைப் போன்று மகாகவி பாரதி உலகளவில் பிரசித்தம் பெறாது போனமைக்குக் காரணம் அவருடைய ஆக்கங்கள் ஆங்கிலத்திலே வெளிவராமையே என்று சொல்வார்கள். ஆனால் அமரர் எஸ்.பொ. அவர்கள் ஆங்கிலத்திலேயும் பல ஆப்பிரிக்க நாவலாசிரியர்களுடைய ஆக்கங்களை நமக்கு அளித்திருக்கின்றார்.

இவ்வளவு அற்புத ஆற்றல்கள் கொண்ட, மிக எளிமையான குணம் படைத்த எஸ்.பொ. அவர்கள் ஈழத் தமிழ் இலக்கிய உலகுப் பிரபலங்கள் சிலரால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதும் உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டில் அவருக்கு அபரீதமான புரிதல் தமிழறிஞர் மத்தியில் இருந்தமை யாவரும் அறிந்ததே.

தர்மன் தர்மகுலசிங்கம் அவர்கள் நிகழ்வில், எஸ்.பொ. அவர்களைப் பற்றிய விரிவான ஓர் ஆராய்ச்சி நூலை பிஎச்டி பட்டம் பெறுவதற்கு எழுதி அதனை உலகறியச் செய்ய யாராவது முன்வந்தால் அதற்கான பொருளாதார உதவியைத் தானே வழங்கமுடியும் என்று அறிவித்திருந்தார். இக் கனவு நனவாகவேண்டும்.

எனது இரண்டு நாவல்களைத் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எஸ்.பொ. அவர்கள் தமது மித்ரா பதிப்பகத்தில் வெளியிட்டிருந்தார். அந்த நூலுக்கு அவர் எழுதிய முன்னீட்டில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"மண்பற்றை ஒரு வெறியாகத் தன்னுள் வளர்த்து, கிழக்கிலங்கைக் கதைக்கலையின் பிதாமகராய் வாழ்ந்த வ. அ. வை ஆதர்சமாகவும், குருவாகவும் சம்பாவனை செய்யும் வன்னிக் கதைஞருடைய இரண்டு நாவல்களையும் கடந்த பத்து நாள்களுக்கிடையில் மூன்று தடவைகள் எழுத்தெண்ணி வாசித்திருக்கின்றேன். அத்தகைய வாசிப்பு ஒரு பதிப்பாசிரியர் ஒருவரின் கடமையாகும். அப்பணி பல சமயங்களில் சுமையாக இருக்கும். ஆனால், இங்கு அக்கடமை மகா சுகமாக அமைந்தது குறிப்பிடத் தக்கது."

என்னை 'வன்னிக்கதைஞர்' என அமரர் எஸ்.பொ. குறிப்பிட்டதை நான் மிகவும் உயர்வாகவே கருதுகின்றேன். வசிட்டர் வாயால் பிரம்மரிசி என அழைக்கப் பட்டமை போன்று!

தமிழ் இலக்கியப் பூங்கா போன்றே பலதுறைகளில் நினைவுப் பூங்காக்களும் நினைவுத் தூபிகளும் ஏராளமாக உள்ளன. எமது காலத்தில் இவற்றில் ஒரு சிலதையே தரிசிக்கும் வாய்ப்பு எமக்குக் கிட்டுகின்றது. வானவெளியிலே ஒளிவீசும் எண்ணற்ற விண்மீன்களைப் போன்றும், கடற்கரைகளிலே கொட்டிக் கிடக்கும் கோடிக்கணக்கான மணற் துகள்கள் போன்றும் எண்ணுக்கடங்காத் தூபிகளும், கோபுரங்களும், நடுகற்களும் நிறைந்து கிடக்கின்றன.

இந்தப் பூங்காக்களின் தரையிலே, காலை தோன்றி மாலையில் மடிந்துவிடுகின்ற ஆயிரமாயிரம் புற்பூக்களும் உண்டுதான். இவை புற்பூக்கள் என்பதனால் அவை சமானியமானவை அல்ல! மன்னன் சாலமன்கூட அத்தகைய வண்ண ஆடைகளை அணிந்ததில்லை என்று இயேசு ஒரு சமயம் கூறியிருக்கிறார்.

இந்த உலகில் காலத்தைக் கடந்தும் வாழ்கின்ற ஆக்கங்களை எஸ்.பொ. அவர்கள் போன்ற மகாமனிதர்கள் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கும் விட்டுச் சென்றுள்ளனர். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் அறியப்படும் என்பது பொய்யாமொழிப் புலவர் எமக்குக் கூறியது. எச்சம் என்பதை ஒருவருடைய பிள்ளைகள் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் மட்டுமல்ல அவர்கள் வீட்டுச் செல்லும் ஆக்கங்களும் அவர்களுடைய எச்சங்கள்தான்!

எஸ்.பொ. அவர்களின் எச்சங்களாகிய அவருடைய ஆக்கங்களும் அவருடைய தகமையை எமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றன!


மூதறிஞர் எஸ்.பொ.வின் நினைவுப் பேருரை:
முதல் நாள் நிகழ்ச்சி - https://youtu.be/jhdCoGC3qoA
இரண்டாம் நாள்நிகழ்ச்சி - https://youtu.be/Xm4426tMVis

--

No comments:

Post a Comment