-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
திருக்குறளும், திருவள்ளுவரும் தெரியவந்த காலத்திலிருந்தே அவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சியானது தொடங்கிவிட்டது. திருக்குறளின் கருத்துக்களைக் கொண்டும் அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையிலும் உருவங்கள் உருவாக்கப்படலாயின.
1. கிபி பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் திருவள்ளுவமாலை என்பது 55 பாடல்கள் கொண்டு 53 புலவர்களால் திருக்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூல் ஆகும். திருவள்ளுவர் பற்றிய பல்வேறு புலவர்கள், அறிஞர்களின் சித்தரிப்புகளைக் கொண்டு அவரை காட்சிப்படுத்த இந்நூல் முயல்கிறது.
2. சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலினை அகழ்ந்த போது கிடைத்த சிலையானது கிபி 10-15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் சா. கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். இச்சிற்பம் பீடம் மீது அரை பத்மாசனத்தில் வலக்கையில் சின்முத்திரையுடன் இடக்கையில் ஓலைச் சுவடி ஏந்தி, உச்சிக் கொண்டை போட்டு தாடியுடன், நீண்ட காது வளர்த்து உடலில் ஓடும் பட்டையான ஆடையுடன் இடை ஆடையும் அணிந்த மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
3. கிபி 1792 இல் மெக்கன்சி சுவடிகள் வேதநாயகம் பிள்ளை எழுதின சுவடிகளில் இதற்கான விரிவான சித்தரிப்புகள் காணக்கிடைக்கின்றன. இதில் பூணூல் அணிந்து காணப்படுகிறார் திருவள்ளுவர்.
4. கிபி 1810- 1815 காலத்தில் 4 தங்க நாணயங்களில் திருவள்ளுவர் உருவத்தை அன்றைய சென்னை ஆட்சியராக இருந்த எல்லிஸ் துரை வெளியிடுகிறார். அவற்றின் ஒரு பக்கத்தில் இருந்த உருவமானது ஒரு பீடத்தின் மீது பத்மாசனமிட்டு வலது கை தொடை மீதும் இடது கையில் ஓலைச்சுவடியும், இடையில் வேட்டியும், இடது தோளில் மடித்துப் போட்டு துண்டும் அணிந்து, மழித்த தலை, தலைக்கு மேலே ஒரு குடை, பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரத்துடனும், நாணயத்தின் மறுபுறம் நட்சத்திரப் புள்ளிகளால் ஆன வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.
5. கிபி 1752 இல் வெளிவந்த ஆனந்த நாயனார் என்ற நூலில் ஒரு புகைப்படம் வெளிவந்து உள்ளது. அதில் தாடி மீசை இல்லாமல் வலது கை சின்முத்திரை இடது கையில் ஓலைச்சுவடியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.
6. 1958ல் பண்டிதர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்ட நூல் மற்றும் 1962இல் கே.எம் பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்ட நூலிலும் திருவள்ளுவரின் படம் இடம் பெற்றுள்ளது.
7. கிபி 1904இல் தமிழ் பண்டிதர் கோ. வடிவேலு செட்டியார் திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் என்ற நூலில் திருவள்ளுவநாயனார் என அச்சிடப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஜடா முடி, தாடி, மீசையுடன் மார்புக்குக் குறுக்காக யோக பட்டை, துண்டு அணிந்து, நெற்றியில் பட்டை நடுவில் குங்குமம், வலது கையில் சின்முத்திரையுடன், இடதுகையில் ஓலைச்சுவடியும் ஏந்தியவாறு உள்ளது. நாயனார் சொரூபஸ்துதி என்ற பாடலை அடிப்படையாக வைத்து இந்த உருவம் கொடுக்கப்பட்டதாக விளக்கமும் அந்நூலில் உள்ளது. இதன் ஆங்கிலப் பதிப்பில் திருவள்ளுவர் படம் கோட்டுருவமாகவும் சைவ சமய அடியார் போன்று கரங்களில், நெற்றியில் விபூதி பட்டையுடன் மரத்தடியில் இரண்டு அடியார்கள் தொழுவது போல் உள்ளது.
8. கிபி 1935இல் வினோதன் பத்திரிக்கை, கிபி 1949இல் புலவர் குழந்தை எழுதிய நூலில் திருவள்ளுவர் புகைப்படம் வெளிவந்துள்ளது.
9. 1950க்குப் பின் சேலம் காமாட்சி பட்டியைச் சேர்ந்த ஓவியர் வேணுகோபால் சர்மா ஒரு திருவள்ளுவர் ஓவியம் வரைகிறார். தூய்மை நிறைந்த உள்ளம் ,தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு ஆகியவற்றைத் திருவள்ளுவர் கொண்டிருப்பதால் அவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தியும், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரை சுற்றி மரம், செடி, கொடிகள் வீடுகள் ஏதும் இல்லாமல் அவரை சுற்றி அறிவொளி மட்டும் இருக்கும்படியாகவும் இவ்வுருவம் உருவாக்கப்பட்டதாகும் தன்னுடைய சிந்தனை, செயல், ஆடை ஆகியவற்றை அழுக்கு தீண்டாமல் இருக்க ஒரு சிறிய மரப்பலகை மீது இருப்பது போன்று அமைக்கப்பட்டதாகவும் திருக்குறள் திருவுருவப்பட விளக்கம் என்ற சிறு வெளியீட்டில் திரு கே ஆர் வேணுகோபால் சர்மா விளக்கியுள்ளார்.
10. 1964 மார்ச் 23 இல் தமிழகச் சட்டமன்றத்தில் திரு. பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த போது துணை குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் இப்படத்தைத் திறந்துவைத்தார். பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இப்படம் அரசுப் பேருந்தில் இடம் பெற்றது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படமாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
11. 1968ல் சுவாமி சுத்தானந்த பாரதியார் திருக்குறள் உரைநடையை உலகத் தமிழ் மாநாட்டில் அரங்கேற்றினார். திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது.
12. 1955இல் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட திருக்குறள் நூல்நயம் புத்தகத்தின் அட்டையில் திருவள்ளுவர் புகைப்படம் ருத்ராட்சம், விபூதி பட்டை, சின்முத்திரையுடன் காணப்படுகிறது.
13. 1968ல் மெரினா கடற்கரையில் நின்ற நிலையில் எழுத்தாணி, ஓடி தாடி, மீசை என உள்ள உருவத்தை அப்போதைய கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த திரு நெடுஞ்செழியன் சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் திறந்துவைத்தார்.
14. 1990 செப்டம்பரில் கன்னியா குமரி வள்ளுவர் சிலையானது உருவாக தொடங்கி 2000 ஜனவரி 1 இல் திறக்கப்பட்டது கணபதி ஸ்தபதியால் 133 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டது. இதில் நின்ற நிலை வைஷ்ணவ ஸ்தானம் எனப்படும் சாத்வீக பாவத்தை உணர்த்துவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
15. 1996ல் லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் அமர்ந்த நிலையில் தாடி, மீசை ,எழுத்தாணி, ஓலைச்சுவடி உடன் திருவள்ளுவர் சிலையானது காணப்படுகிறது.
16. ஆஸ்திரேலியா சிட்னியில் ஸ்தபதி நல்லதாணு அவர்களால் வடிவமைக்கப்பட்ட சிலையானது இன்று நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
17. சிங்கப்பூரில் 4 இடங்களில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், முனீஸ்வரர் ஆலயம், MDIS வளாகம், புக்கிட் பாஞ்சாவ் முருகன் திருக்குன்றம் ஆலய திருமண மண்டபத்திலும் உள்ளன.
18. மொரீசியஸ் மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் திருவள்ளுவர் திருவுருவம் உள்ளது.
19. மியான்மார் தட்டோன் நகரில் 5 அடி உயர பளிங்குச் சிலை உள்ளது.
20. மணிப்பூர் மோரே தமிழ்ச் சங்கத்தில் மூன்றரை அடி உயரச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
21. ஜெர்மனியில் லிண்டன் அருங்காட்சியகத்தில் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளையால் 2019 இல் அமைக்கப்பட்டது.
22. மேலும் வி.ஜி.பி தமிழ்ச் சங்கம் சார்பில் தென்னாப்பிரிக்கா டர்பன், அமெரிக்க வாஷிங்டன், அந்தமான் போர்ட் பிளேயர், மலாய் கோலாலம்பூர், சீனா தைவான், மகாராஷ்டிரா நவிமும்பை, ஆந்திர விசாகப்பட்டினம், அலகாபாத், சுவிஸ் கல்கத்தா, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
23. மேலும் இலங்கை புத்தளம் இந்துக் கல்லூரி, மன்னார் சித்திவிநாய இந்துக் கல்லூரி, முள்ளிவளை வித்தியானந்தா கல்லூரி, கிளிநொச்சி தமிழ்ச்சங்கம், தென்மராட்சிக் கலாமன்றம், வவுனியா புத்தளம், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், மேற்கு மாகாணம், கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி என இலங்கையின் முக்கிய இடங்களிலும் திருவள்ளுவரின் திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் காரைத்தீவு யாழ் உரும்பிராய் இலும் உள்ளன.
24. இந்தியாவில் புதுச்சேரி, டெல்லி, பெங்களூர், ஹரித்துவார் போன்ற இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
25. இது தவிர்த்து ஆசிரியை கோ.ப செல்லம்மாள் சென்னை கோட்டூரில் தன் வீட்டு வாசலில் திருவள்ளுவர் சிலை வைத்துள்ளார்.
26. பஞ்சாப்பைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் தனது சென்னை வீட்டில் உள்ள சந்தனம் மற்றும் மாமரத்தில் திருவள்ளுவர் சிலையினை அவரே செதுக்கி வைத்துள்ளார்.
27. திருப்பரங்குன்றம் மேம்பாலத்திற்கு அருகே திருவள்ளுவர் மற்றும் நந்தனார் இருவரும் ஒரே பலகைக் கல்லில் அமர்ந்த மாதிரியான சிற்பமும் உள்ளது.
28. வள்ளுவர் கோட்டத்தில் வலது கையில் திரிசூல ஹஸ்தத்தில், இடது கையில் ஓலைச்சுவடி யுடன் இருப்பது மாதிரியான உருவம் வடிக்கப்பட்டுள்ளது.
படங்கள் உதவி - நன்றி:
ஜெர்மனியில் திருவள்ளுவர் விழா மற்றும் ஐரோப்பியத் தமிழர்கள் நாள் சிறப்பு மலர்.
இணையம்
No comments:
Post a Comment