Sunday, December 19, 2021

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி



-- பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்



               ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி
                              ஆதியும் அந்தமும்
               இல்லா அரும்பெருஞ்
                              சோதியை யாம்பாடக்
               கேட்டேயும் வாள்தடங்கண்
                              மாதே! வளருதியோ?
               வன்செவியோ நின்செவிதான்?
                              மாதேவன் வார்கழல்கள்
               வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
                              வீதிவாய்க் கேட்டலுமே
               விம்மிவிம்மி மெய்ம்மறந்து
                              போதார் அமளியின்மேல்
               நின்றும் புரண்டிங்ஙன்
                              ஏதேனும் ஆகாள்
               கிடந்தாள் என்னே! என்னே!
                              ஈதே எங்தோழி
               பரிசேலோர் எம்பாவாய்!

விளக்கம்:
எந்நாட்டவராலும் எக்  காலத்தவராலும் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு என்றும் நிலைத்த பண்புகளையோ, உண்மைகளையோ நெறிகளையோ சிந்தைக்கும் செவிக்கும் இனிய செஞ்சொற்களால் உரைப்பதே சிறந்த இலக்கியமென இலக்கண வரம்பு வகுப்போமானால் மணிவாசகர் அருளிய திருவாசகம் தலைசிறந்த தமிழ் மாமறையாகத் திகழ்வதாகும்.

திருவாசகத்தில் பேசப்பெறும் செய்தி, காலம், இடம் என்னும் பாகுபாடுகளைக் கடந்த, சிந்தை செல்லாச் சேணகத்ததாய்  முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும்  பின்னைப் புதுமையாய்ப் பிறங்குகின்ற பேரருட் பிழம்பைப் பற்றியதும், அவ்வருள் ஒளியை நாடிக் கலந்த ஒரு சிற்றுயிர்க்குற்ற பலதிறப்பட்ட நிகழ்வுகளைப் பற்றியதுமாகும்.

இன்னினிய பண்ணினிமையும், பொருட்செறிவும், கலை நலமும் வாய்ந்த சொற்களால் கற்பவர் பயிற்சிக்கும் உணர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்பப் பொருள் பொலியுமாறு வளவிய பாடல்களை வழங்கிய வள்ளன்மை திருவாசகத் திறமாகும்.

திருவாசகப் பதிகங்களிடையே ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக‘ எனப் பாராட்டப் பெற்ற பகுதி திருவெம்பாவையாகும்.

மனங்கவர் திருவெம்பாவையை மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் தங்கியிருந்த காலத்தில் அருளிச் செய்ததாகக் கடவுள் மாமுனிவர் தாம் எழுதிய “திருவாதவூரர் புராணத்தில்“ குறித்துள்ளார்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் தமது “திருப்பெருந்துறைப் புராணத்தில்“ அக் கருத்தையே ஏற்றுள்ளார்.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் திருவெம்பாவையைத் தில்லையில் அருளிச் செய்ததாகக் கருதி ஓர் ஆசிரியப்பா பாடியுள்ளார்.

இவர்களுக்கெல்லாம் காலத்தில் முற்பட்டவராகிய பெரும்பற்றப்புலியூர் நம்பி தமது “திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில்“ திருவெம்பாவையைத் திருப்பெருந்துறையிலே அருளிச்  செய்ததாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு திருவண்ணாமலையிலும், தில்லையிலும், திருப்பெருந்துறையிலும் தெய்வ நலம் கற்பார் உள்ளத்தைக் கனிவிக்கின்றது.

பழந்தமிழ் நூல்கள் காட்டும் பாவைப்பாட்டு என்னும் வகையைச் சார்ந்தது திருவெம்பாவை.  

நீர்த்துறையில் சீர்இள மகளிர் பாவையமைத்து நீராடி வணங்கும் நீர்மையைப் பொருளாகக் கொண்டது இப்பாட்டு.

பழங்காலத்தில் முழுத் திங்கள் வழியாக மாதங்கள் கணக்கிடப்பெற்றன.

அதனால் மாதத்தைத் திங்கள் என்று குறிப்பது வழக்கம்.

பழந்தமிழ் நூல்களில்  மாதம் என்ற சொல் காணப்படாது திங்கள் என்றே கூறப்படும்.

நாம் இப்போது வழங்கும் மார்கழித் திங்கள் மார்கழி முழுமதியோடு முடியும்.

மறுநாள் தொடங்கும் தைத் திங்கள் தை முழுமதியோடு முடியும்.

எனவே இம்மார்கழி நீராட்டைத் தைந்நீராடல், தையில் நீராடிய தவம் எனச் சங்கச் சான்றோர் குறித்தனர்.

இன்று ‘இவ்வூராரெல்லாம் தை நீராடுப, மருவூரார் தை நீராடினார்‘ என்னும் இலக்கணச் சொற்றொடர்களும் பாவை நோன்பு புரிந்திருந்த பாங்கைச் சுட்டிக் காட்டுகின்றன.

வெப்பம் மிகுந்த நாடுகளில் தண்புனலுக்குத் தனிச் சிறப்பு உண்டாவதும், நீராடுதலே விழாவாதலும் ஆகும்.

அவ்வகையில் பாவைப் பாட்டு நீராடுதலை அடிப்படையாகக் கொண்டிருத்தலும் இயல்பாகும்.

இப்போதைய தாய்லாந்து எனும் சயாம் நாட்டில் நடைபெறும் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஓதப்பெறுவது தமிழ் நாகரிகம் உலகளாவிப் பரவியிருந்த மாட்சிமைக்குச் சாட்சியாகும்.

 ‘ஆணவக் காரிருளில் அழுந்தி உறங்காமல் அருள் வெள்ளத்தில் நீராட வருக‘ என அழைப்பதே திருப்பாவையின் உட்பொருள் என ஆன்றோர் கூறுவர்.
நாடு மழையால் நலம் பெறவேண்டும்.
வீடு சிறந்த கணவனால் வளம் பெறவேண்டும் என, நாடும் வீடும் செழித்தோங்கப் பாடும் பாவையர் பொய்கையருகே கூடிப் பரவுகின்றனர்.
 வெள்ளி முளைப்ப விடியல் வந்ததும் வீடுதோறும்  நாடி ஒருவரையொருவர் சென்று எழுப்புகின்றனர்.
எம் பாவாய் என அன்போடு அழைக்கின்றனர்.
இன்னுமா இருள் உறக்கம்!
எப்போது உனக்கு அருள் பிறக்கும் !  உண்டாக வேண்டாமா உருக்கம்!
அப்படியென்ன தூக்கத்தில் ஆசை ! அங்கே கேட்கவில்லையா எங்கள் பாட்டு ஓசை! என்றெல்லாம் பேசுகிறார்கள்.
பரம்பொருளை நினைத்து மகிழ்கிறார்கள்.
திருவருளின் பெருங்கருணைக்கு நெகிழ்கிறார்கள்.

இப்படி மகளிர், தமக்குள் பேசிக்கொள்வது இளமைக்குரிய ஏச்சா! வெறும் பேச்சா?
இல்லை பெரும் மூச்சு – ஞான உரை வீச்சு எனக் காட்டப் பெறுகிறது.
இவ்வண்ணம் எழுந்த பாவைப்பாட்டு இதோ வீதி வாய்க் கேட்கிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை அவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள்.

உலகின் எல்லாப் பொருளுக்கும் முதலும் முடிவும் உண்டு.தோற்றமும் இறுதியும் உண்டு. எல்லாப் பொருளும் தோன்றவும் மறையவும் இடந்தருகின்ற  -  காண்பதற்கு அருமையும் உரைப்பதற்குச் சொல்லி முடியாத பெருமையும் பூண்ட பொருளாகிய – இருள் நீக்கித் தெளிவும் ஒளியும் ஊட்டுகின்ற பேரொளிப் பிழம்பாகிய சோதியின் நலங்களை உன் தோழியராகிய நாங்கள் பாடிப் பரவுகின்றோம்.

எங்கள் பாட்டொலி கேட்டும்  விழித்து எழவில்லையே நீ !
நீண்ட ஒளியும் நெறியான அளவும் பொலிவான அழகும் பொங்கி மிளிர்கின்ற விழியழகி நீ !
உன் காதென்ன கேட்காத காதா? மற்றொரு  தோழியோ பெருந் தேவனாகிய பரம்பொருளின் திருவடிகளை வணங்கிப் பரவும் எங்கள் குரலொலியைத் தெருமுனையில் கேட்ட அளவிலேயே உணர்வு மிகுந்து, உள்ளம் நெகிழ்ந்து மனங்கரைந்து தேம்பித் திகைத்துத் தன்னை மறந்து செயலற்று மெத்தென்ற அமளியிலிருந்து பொத்தென்று வீழ்ந்து புரண்டு செயல் மறந்து கிடக்கின்றாள்.

இத் தோழியின் உருக்கவியல்பு இப்படி உள்ளதே !  
இதனை எண்ணிப் பாராய் !
எம் பாவாயே !

ஒன்பது சக்திகள் ஒருவரை ஒருவர் எழுப்பும் வகையில் மனோன்மணியாகிய சக்தி சர்வபூத தமனியை எழுப்புவதாகத் துயில் எழுப்பும்  எட்டுப் பாக்களுக்கும் நுண்பொருள் கூறுபவருண்டு.

உயிர்கள் விழிப்புற்றுத் திருவருள் நலத்தில் மூழ்கி எழுந்து தெளிவு பெறுவது என்றும், அடியவர்கள் பலராகச் சேர்ந்து அருள் வழிபாடியற்றுவது என்றும் இப் பகுதிக்குப் பொருள் கூறலாம்.

இத் திருப்பாட்டில் கேவல நிலையிலுள்ள உயிர், பாடிக் கேட்டும் துயிலெழாமல் ஆணவத்தால் கட்டுண்டு இருண்முடி இறைவனை நினையாது வாளா கிடக்குமெனவும், சுத்த நிலையிலுள்ள உயிரோ இறையருட் பாடலைக் கேட்ட போதே அன்பின் பெருக்கினால் தன்னுடலை மறந்து உலகுநெறி விட்டுச் சிவநெறி புகுந்து சிவானந்தத்தில் மூழ்கித் திளைத்து நிற்கும் இயல்புடையதெனவும், இடைப்பட்ட சகல நிலையிலுள்ள உயிரோ விரதங் காப்பதோடு ஆண்டவனை அருட் பாடல்களால் துதித்தும் வழிபாடு செய்தும் புண்ணியப் பேற்றினையடைதற்கு முயலுஞ் சிறப்புடையதெனவும் உணர்த்தப்படுவதாகவும் நலம் உய்த்தறியலாம் என மூவகை இயல்பும் இப் பாடலில் குறிக்கப்பட்டன.

-----




No comments:

Post a Comment