Sunday, December 12, 2021

தமிழில் கடன் சொற்களுக்கு என விதிமுறைகள் உண்டு

-- முனைவர் செ. இராஜேஸ்வரி


அண்மையில் ஒரு வெளிநாட்டு நகைச்சுவைத் துணுக்கு ஒன்று சமூக வலைத் தளத்தில் பரவியது. ஓர் ஆசிரியரிடம் மாணவன் 'ஏன் மேடம் hour, horse போன்றவற்றில் ‘h’ silent ஆக இருக்கிறது என்பான்?'  அதற்கு அந்த ஆங்கில ஆசிரியை,  'ஆமாம் அது அப்படித்தான் என்பார்'.  மதிய உணவு இடைவேளையின் போது அந்த ஆசிரியை அதே மாணவனை அழைத்து தன் லஞ்ச் பாக்சை கொடுத்து heat  என்பார். அவன் சிறிது நேரம் கழித்து அந்த பாக்சை கொண்டு வந்து அவரிடம் கொடுப்பான்.  திறந்து பார்த்தால் அதில் ஒன்றும் இருக்காது, அதிர்ச்சி அடைவார் அந்த ஆசிரியை. 'என்னப்பா இது? உன்னை உணவைச் சூடு படுத்திக் கொண்டு வர சொன்னேன். இப்போ பாக்சில் ஒன்னும் இல்லையே. நான் சொன்னது புரியலயா?  எங்கே என் சாப்பாடு?'  என்பார். அதற்கு அந்தப் புத்திசாலி மாணவன் 'மேடம் ‘h’ silent தானே அதனால் நான் eat என்று புரிந்துகொண்டேன். உணவைச் சாப்பிட்டு முடித்துவிட்டேன்', என்பான்.
 
இன்றைக்குப் பல ஆசிரியர்கள் நிலை இதுதான். மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரிவதில்லை. ஆங்கிலத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம். ஆங்க்லோ சேக்சன் மொழி என்பது ஆங்கிலத்தின் தாய் மொழி. அந்த ஆங்க்லோ சேக்சனில் அறிவியல், தத்துவ இயல் (religion and philosophy) துறைகளில் சொற்கள் இல்லை. அதனால் ஆங்க்லோ சேக்சன் மொழி, கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலிருந்து இந்தச் சொற்களை கடனாகப் பெற்றது. பண்பாடு மற்றும் நிர்வாகத் துறை சார்ந்த சொற்களைப் பிரஞ்சு மொழியிலிருந்து ஏராளமாகக் கடன் வாங்கியது. கடன் வாங்கி, கடன் வாங்கி அதன் மொத்த உருவமும் மாறிவிட்டது. அதனால் அதற்குப் பிறகு மாறிய அந்த புது மொழி  'ஆங்கிலம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த மொழிக்கென்று எழுத்து வடிவமும் கிடையாது.  எனவே அது இலத்தீன் மொழி எழுதப்பட்டு வந்த உரோமன் எழுத்துக்களையும் (Roman script) கடனாகப் பெற்றது.

மொழியில் கடன் வாங்குவதில் ஒரு வரைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆனால் தொடக்கக் காலத்தில் சொற்களைக் கடனாக பெற்ற போது பழைய பிரெஞ்சு மொழியிலிருந்து hour, honest, heir போன்றவற்றை ஆங்கிலம் அப்படியே ஏற்றுக்கொண்டது. இந்தச் சொற்களில் ஹெச் ஒலி ஒலிக்கப்படுவதில்லை. இதை மொழியியலாளர் ஒலிப்பிலா ஒலி (overt phoneme) என்பர். கடன் வாங்கியபோது இந்த சைலென்ட் ஒலிகளை ஆங்கிலம் நீக்கியிருக்க வேண்டும். இடையில் வரும் தேவையற்ற ஒலிப்பிலா ஒலிகளை(சைலென்ட்);   (அதாவது, calm என்பதில் உள்ள l, psychology இல் முதலில் உள்ள p, river இல் கடைசியில் வரும் r போன்றவற்றை) நீக்கி ஆங்கிலத்துக்கு ஏற்ப மாற்றியிருக்க வேண்டும். அப்படியே எடுத்துக்கொண்டதால் இப்போது கேள்வியும் மாற்றமும் தவிர்க்க இயலாததாயிற்று.

கிரேக்க மொழியிலும் ஹெச் ஒலி ஒரு எழுத்துக்கு மேல் ஒரு கமா குறியீடு வலது பக்கம் திரும்பி இருந்தால் ஒரு ஒலியும், இடது பக்கம் திரும்பி இருந்தால் ஒரு ஒலியுமாக  ஒலிக்கப்பட்டது. இந்தச் சொற்களையும் அப்படியே கடனாகப் பெற்ற ஆங்கிலம் எந்த மாற்றமும் செய்யாமல் வைத்துக்கொண்டது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  ஒலி வரலாற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். ‘ஏன் calm என்ற சொல்லில் l ஒலிக்கப்படவில்லை?’ என்று மாணவர்  கேட்டால் "அது அப்படித்தான்". என்று சொல்வது பொறுப்பற்ற பதில். ஏன் river, water போன்ற சொற்களில் கடைசியில் வரும் r ஏன் ஒலிக்கப்படுவதில்லை என்று மாணவர்  கேட்டால் "அது அப்படித்தான் போய் படி. நூறு கேள்வி கேட்டுக்கிட்டு; ஒழுங்கா படிக்க துப்பில்ல; கேள்வி கேட்க வந்துட்டான்" என்று மாணவர் மீது பழி சுமத்தக் கூடாது. உயிரொலிக்கு அடுத்து  வரும் இடங்களில் l , r, போன்றவை ஒலிக்கப்படாமல் சைலென்டாக வரும் என்று கூறி palm, harm, farm, warm  போன்றவற்றைச் சான்றுகளாகக்  காட்ட வேண்டும். அப்போது ஆசிரியர் மீது மதிப்பு உயரும். சிலவற்றிற்கு விளக்கம் இருக்காது அப்போது அதையும் சொல்லியாக வேண்டும். ஏனெனில் மொழி என்பது பல நேரங்களில் இடுகுறி வடிவமாக இருக்கின்றது.

ஜப்பானியர் தன் மொழியை, கலாச்சாரத்தை உயிராக மதித்தனர். கலை இலக்கிய பண்பாட்டுக் களங்களில் அவர்கள் பழமையை போற்றினர். மொழி தன் தூய்மையை இழக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். அந்த மொழியில்  தனித்தனியாக மூன்று வகை எழுத்தினங்கள் உண்டு. 'காஞ்சி' என்பது சீன மொழியிலிருந்து கடனாகப் பெற்ற பெயர் சொற்களையும் வினைச் சொற்களையும் எழுதுவதற்குப் பயன்படுகிறது. 'ஹிராகானா' என்ற எழுத்து வகை, வேற்றுமை உருபுகள், கால இடைநிலை போன்ற இடைச் சொற்களை அல்லது ஒட்டுக்களை (clitics)  எழுதப் பயன்படுகிறது. 'கதகனா' என்ற எழுத்து வகைக் கடனாகப் பெற்ற பிறமொழிச் சொற்களை எழுதப் பயன்படுகிறது.  இவ்வாறு கடனாகப் பெறும் சொற்களைக் கூட அவர்கள் தமது ஒலிக்கு ஏற்ப மாற்றிவிடுகின்றனர். இதனால் இவை தனது மொழி சொற்கள் போலவே ஒலிக்கும்.

கணினியை ஜப்பானியர் கம்ப்யூத்தோ என்பர். ஏன் தெரியுமா? அவர்கள் மொழியில் 'ட' ஒலி கிடையாது. ஆகவே, கம்ப்யூட்டர் என்பதை 'கம்யூத்தோ' என்கின்றனர். இது ஜப்பானிய மொழி சொல் போலவே ஒலிக்கும். இது போல shirt என்பதை 'ஷாத்சு' என்பர். ஜப்பானியச் சொற்கள் உயிரொலியுடன் அல்லது nasal ending எனப்படும் ன், ம் போன்றவற்றுடன் முடியும். இந்தியாவை அவர்கள் 'இந்தோ' என்பர். இந்தியர் என்றால் இந்தோஜின். இவ்வாறு ஒலியையும் தமக்குரியதாக்கி எழுத்திலும் கதகனா வைப் பயன்படுத்தி கடன் சொற்களை வேறுபடுத்தி வைத்துள்ளனர். ஆங்கிலத்திற்கோ இந்த முறை கிடையாது. முன்பு ஆங்கிலப் பதிப்புகளில் மட்டும் சில குறிப்பிட்ட கிரேக்கம், இலத்தீன் கலைச்சொற்கள் italics எனப்படும் எழுத்துருவில் (font) அச்சிட்டப்பட்டன.

தமிழில் கடன் சொற்களுக்கு என விதிமுறைகள் உண்டு:
நடைமுறை வழக்கில் மொழிக்கலப்பு என்பது இயற்கையும் இயல்புமாகும். மொழித்தூய்மை என்பது தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒரு தொடர் பணி. இதை அன்று தொட்டு இன்று வரை தமிழ் ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.  இவ்வாறு கடன் சொற்களைத் தன்வயப்படுத்துதல் (adaptation) மொழி நீடித்து நிற்க உதவும் உத்தி ஆகும். அதற்காகத்தான்,  'தற்சமம்',  'தற்பவம்' என்ற மொழியாக்க வரைமுறைகளை ஏற்படுத்தினர். இதனால் தான் தமிழ் இன்றும் மூல திராவிட மொழியின் தன்மையை அதிகம் இழக்காமல் மற்ற சொற்களின் வரவால் பெரிய அளவில் மாற்றம் அடையாமல் என்றுமுள தென்றமிழாகவே இருக்கின்றது.   எனவே தமிழை உலகின் முதல் மொழி என்றும் ஆதிமனிதனின் மொழி என்றும் அழைக்கின்றனர்.

தமிழ் மொழியில் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு சோழர் காலத்தில் சமஸ்கிருத மொழி சொற்கள் கலந்தபோது நம் இலக்கண ஆசிரியர்கள் உடனே சில விதிமுறைகளை வகுத்தனர். அவை தற்சமம் தற்பவம் எனப்பட்டன. இரண்டு மொழிகளுக்கும் சமமான ஒலிகளாலான சொல் என்றால் அது 'தற்சமம்' எனப்படும்.   அதாவது, 'காரணம்', 'கமலம்' போன்றன.   'தற்பவம்' என்பவை வேறுவகை.   சில ஒலிகள் தமிழ் ஒளிப்புகளுக்கு  ஒவ்வாததாக இருந்தால் அவற்றைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றி அமைப்பதாகும். எடுத்துக்காட்டு: 'வருஷம்' – வருடம் (ஆண்டு); 'பக்ஷி' – பட்சி (பறவை); 'சர்ஸ்வதி' – சரசுவதி (கலைமகள்); கார்யம் – காரியம் (செயல்) ரத்னம்  -  ரத்தினம் (மணி) போன்றன.  

இவற்றிற்கெல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லாமலில்லை, இருந்தாலும் சமஸ்கிருத ஆக்கம் என்ற பெயரில் (இப்போது நாம் ஆங்கிலம் கலந்து பேசுவது போல);  அன்று, ஆங்கிலேயர் காலத்தில் சிலர் சமஸ்கிருதத்தைத் தமிழில் கலந்து அதற்கு மணிபிரவாள நடை (முத்தும் பவளமும் கலந்தது) என்று பெயரிட்டு மேட்டுக்குடியினரின் மொழியாக பேசி வந்தனர். இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் கூட சமஸ்கிருதமுமாயின, 'வேட்டி', வேஷ்டி ஆயிற்று. இதைப் பார்த்த மற்ற மக்களும் தேவையில்லாத இடத்தில் எல்லாம் ஷ, ஸ, ஜ போன்ற ஒலிகளை தமிழில் புகுத்திப் பேசினர். பி. சுசிலா பாடல்களில் ச என்ற ஒலி தொடர்ந்து ஷ என்றே ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம். இது ஒரு காலத்திய உயர்மொழி வழக்கு. இப்போது ஆங்கிலம் பேசுவதாக நினைத்துக் கொண்டு சிலர் தேவையில்லாத இடங்களில் எல்லாம் f, b, j போன்ற ஒலிகளை பயன்படுத்துகின்றனர் அல்லவா. அது போன்ற செயல்பாடுதான் அது.

ஒரு மொழியில் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே கடன் வாங்க வேண்டும். அவ்வாறு கடன் வாங்கும்போது அதை நம்முடைய ஒலி வடிவத்துக்கும் எழுத்து வடிவத்துக்கும் ஏற்ப தகவமைக்க வேண்டும். இல்லையென்றால் இன்று பிரிட்டிஷ் ஆங்கிலம் தன் கடன் சொற்களை அமெரிக்க ஆங்கிலத்தின் மூலம் ஒலிமாற்றத்துக்கு உள்ளாவது போல (photo > foto, Cheque > chek, programme > program, colour >color) தானே மாற்றம் பெறும். அதற்கு மக்கள் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும்.  சமூக வலைத்தளங்களில்  புழங்கும் ஆங்கிலத்தை மொழியியல் அறிஞர் கிரிஸ்டல் டேவிட் நெட்லிஷ் என்கிறார்.  இந்த 'நெட்லிஷ்' (netlish or netlanguage) என்ற ஆங்கிலம் வலைத்தளங்களில் பயன்படும்போது அதன் மூலத்தன்மையை இழந்துவிடுகிறது. இந்த நெட்லிஷ் ஒலிக்கேற்ப எழுதப்படுகிறதே என்று ஆங்கில மொழிமரபின் மீது பற்றுக் கொண்ட மொழி ஆர்வலர்கள் துடிக்கின்றனர்.

ஆனால் தமிழைப் போல ஜப்பானிய மொழியைப் போல ஆங்கிலேயர் முதலிலேயே கடன் சொற்களை மாற்றாததால் காலம் இப்போது அந்தப்பணியைச் செய்கிறது. அவசரத்துக்கு அள்ளி போட்டது போல அந்தக் காலத்தில் ஆங்க்லோ சேக்சன் மொழி பிற மொழிச் சொற்களை அள்ளி அள்ளி போட்டுக்கொண்டது. இப்போது முதல் பத்திக்கு வருவோம். அந்த மாணவன் தன் ஆசிரியை தன்னிடம் 'ஹீட்' (heat) என்றதை 'ஈட்'  (eat) எனப் புரிந்துகொண்டதாக குறும்பு செய்தது ஏன் என்று புரிந்ததா? ஆசிரியர்களுக்கு எதாவது தெரியாவிட்டால் அதைத் தெரிந்துகொண்டு வந்து சொல்கிறேன் என்று மாணவரிடம் சொல்ல வேண்டும். பின்பு அதைப் படித்துத் தெரிந்துகொண்டு வந்து சொல்ல வேண்டும். கேள்விகேட்கும் மாணவர்களே சுய சிந்தனை உள்ளவர்கள்.   அவர்களை வளர்த்துவிடுவது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தத்துவச் சிந்தனைகள் வளர வழி வகுக்கும்.


முனைவர் செ. இராஜேஸ்வரி (https://www.facebook.com/rajeshwari.chellaiah),  மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 1987ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்புப்  பணியில் ஈடுபட்டு வருகிறார்.

-------------





No comments:

Post a Comment