Wednesday, December 1, 2021

தமிழகத்தின் சிற்பக்கலையும் ஆடற்கலையும்

  --  கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை


மனிதன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று சிற்பக்கலை. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் முக்கியமானது சிற்பக்கலை.

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகிறது. கண்ணால் கண்ட உருவங்களையும், கற்பனை உருவங்களையும் சிற்பங்களாக வடிவமைத்து சிலைகளாக வடித்தனர். சிற்பங்கள் கல், மண், மரம், செம்பு,  செங்கல், தந்தம், மெழுகு ஆகியவை கொண்டு வடிக்கப்பட்டன. கல்லில் கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு ஏற்றனவாகக் கருதப்பட்டன.

திருக்கோயில்களில் வழிபாட்டிற்குரிய சிற்பங்களை வடிக்கும்பொழுது தேர்ந்தெடுக்கப்படும் கற்களை சிற்பிகள் நன்கு பரிசோதித்து எடுப்பார்கள். மலைகள், நதிக்கரை, பால்மரத்தடி, வனங்கள் ஆகியவற்றில் கிடைக்கும் கற்கள் சிறப்பானவை. மேலும் அதன் நிறத்தை கொண்டும் வகைப்படுத்துவர். கற்களில் ரேகை, புள்ளிகள் இல்லாதவாறு தேர்ந்தெடுப்பர். கற்களின் வலிமை - உறுதியைக் கொண்டு ஆண் கல், பெண் கல், (அலிக்கல்) வலிமையற்ற கல் எனவும் வகைப்படுத்தி சிற்பிகள் சிற்பங்களை வடித்தனர்.

விசிறிப்பாறை:
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே கல்லிலே சிற்பம் வடிப்பதை தமிழர்கள் உணர்ந்திருந்தனர். 

thay deyvam.jpg

விழுப்புரம் அருகில் உடையாநத்தம், திருவண்ணாமலை அருகில் மோட்டூர் என்ற இடத்திலும் பறவை போன்ற அமைப்புடைய கல்லாலான சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை "விசிறிப்பாறை' என மக்கள் அழைக்கின்றனர். சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தாய், தெய்வ வழிபாட்டிற்கு இச்சிற்பங்கள் முன்னோடி என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

நடுகற்கள்:
இதற்கு பின்னர் வரலாற்றுக் காலமாகிய சங்ககாலத்தில் போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரர்களுக்கு மற்றும் ஊருக்கு ஏற்படும் துன்பங்களைப் போக்க போரில் இறந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட கற்கள் "நடுகற்கள்' எனப்படும். 

nadukal.jpg

அக்கல்லில் வீரனது உருவத்தைச் செதுக்குவர்.  அதற்கு அடியில் வீரனின் பீடும், பெயரும் பொறிப்பர் என சங்ககால இலக்கியச் செய்திகள் கூறுகின்றன. இத்தகைய நடுகற்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றை இன்றும் மக்கள் போற்றி வழிபாடு செய்கின்றனர். வேடியப்பன் என அழைத்து போற்றுகின்றனர்.

பல்லவர்:
பல்லவ மன்னர்கள் காலத்திலிருந்து கல்லிலே தான் கோயில்கள் அமைக்க தொடங்கிவிட்டனர். கட்டடக்கலையும் சிற்பக்கலையும் வளர்ச்சி பெற்றன. பல்லவர்கள் குடைவரைக்கோயில், ஒற்றைக்கல் கோயில்களை பாறைகளைச் செதுக்கி அமைத்தனர். கட்டடக் கோயில்களையும் எழுப்பினர். 
siva-seeyamangalam.jpg
குடைவரைக் கோயில்களில் சுவர்களில் (தாய்ப்பாறைகளில்) சிற்பங்களை அமைத்தனர். இதற்கு புடைப்புச் சிற்பங்கள் எனப் பெயர். மண்டகப்பட்டு, தளவானூர், வல்லம், திருச்சிராப்பள்ளி, மாமண்டூர், மாமல்லை போன்ற பல இடங்களில் குடைவரைக் கோயில்களைக் காணலாம். 

சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் சிற்பக்கலை மேலும் வளர்ச்சி அடைந்தது. சுவரில் இருந்து வெளிவரும் புடைப்புச் சிற்பங்களும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும் சிற்பங்களையும் அமைத்தனர். இவ்வகை முழு வடிவ சிற்பங்களும் திருக்கோயில்களில் இடம்பெற்று வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உற்சவத் திருமேனிகளும் முழு வடிவ சிற்பங்கள் ஆகும்.

சிற்பிகள்:
அழகுமிக்க சிற்பங்களை கல்லிலே வடிக்க திறமையான சிற்பிகள் இருந்தனர். பல்லவ மன்னர்கள் காலத்தில் இருந்து நாயக்க மன்னர்கள் காலம் வரை சிற்பங்களை, திருக்கோயில்களை அமைத்த சிற்பிகள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் அவர்களது சிற்ப வடிவங்களையும் பல கோயில்களில் காண முடிகிறது. இவர்கள் பண்டைய சிற்ப நூல்களின் அடிப்படையில் அழகு மிக்க சிற்பங்களை கல்லிலே வடித்தனர்.

ஆடற்கலை இலக்கணம்:
தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள். அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். சிற்பம் - ஆடற்கலை இரண்டுமே திருக்கோயில்களில் போற்றி வளர்க்கப்பட்டன. சிற்ப வடிவங்கள் நின்ற வடிவில் காட்சி அளித்தாலும், அமர்ந்திருந்தாலும், புராணக்கதைகளை எடுத்துக்காட்டும் வகையில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்துடன் அமைந்திருப்பதைக் காணலாம். 

Gajasamharamurti-Darasuram-Sreedharan.jpg

உதாரணமாக சிவபெருமான் காலனைக் கடிந்த நிலையிலும், ஆனை உரித்த எம்பிரானாகக் காட்சித்தரும் போதும் அச்செய்கை ஆடற்கலை இலக்கணத்தை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கும்.  இச்சிற்பங்களை சிற்பிகள் வடிக்கும்பொழுது ஆடற்கலை இலக்கணத்தை நன்கு அறிந்து கலை உணர்வு கலந்து அமைத்ததால் கலை அழகுடன் அவை காட்சி தருகின்றன. மேலும் சிற்பிகளின் திறமையையும் எடுத்துக்காட்டுகின்றன.

தமிழகச் சிற்பங்கள்:
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மாமல்லபுரம் சிற்பங்கள், பாண்டியர் கால கலைப்படைப்புகள், திருவரங்கம், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தாடிக்கொம்பு போன்ற பல திருக்கோயில்களில் காணப்படும் விஜயநகர நாயக்கர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ளன. 

siva-kangai konda sozhapuram.jpg
சோழ மன்னர்கள் காலத்தில் புள்ளமங்கை, குடந்தை நாகேசுவரர் சுவாமி கோயில் சிற்பங்கள், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் போன்றவை சோழர் கால சிற்பக் கலையின் உயர்ந்த நிலையை எடுத்துக் கூறுகின்றன.

மேலும் தமிழகச் சிற்பக்கலை மராட்டிய மன்னர்கள், மற்றும் செட்டிநாட்டு கோயில்களில் மிகச் சிறப்புடன் விளங்குவதையும் காணமுடிகிறது.

தமிழர்களின் சிற்பக்கலை தொடர்ந்து பல சிற்பிகளின் கைவண்ணத்தைக் திறமையினாலும் தொடர்ந்து சிறப்பு பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றதையும் காணமுடிகிறது. தமிழகம் பெருமை கொள்கிறது.


No comments:

Post a Comment