Thursday, February 14, 2019

இராஜசிம்மேசுவரம் - காஞ்சி கைலாசநாதர் கோயில்


——    துரை.சுந்தரம்முன்னுரை:
            நண்பர்கள் திரு. வீரராகவன், திரு. சுகவன முருகன் ஆகிய இருவரின் தொல்லியல் சார்ந்த பணிகளில், கல்லூரி மாணவர்களுக்குக் கல்வெட்டு எழுத்துகள் பயில்விக்கும் பணியும் ஒன்று. அண்மையில், அவர்கள் காஞ்சியில் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் நடத்திய கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளில் கட்டுரை ஆசிரியரையும் ஈடுபடுத்தினர். கிரந்த எழுத்துகளை மாணவர்க்கு அறிமுகம் செய்துவைக்கும் பணி. அது போழ்து, காஞ்சியில் உள்ள கைலாச நாதர் கோயிலின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் கூறும் நோக்கில் மாணவர்களை அழைத்துச் சென்ற நிகழ்வில், கட்டுரை ஆசிரியருக்கும் காஞ்சிக்கோயிலையும் அங்கிருக்கும் கிரந்தக் கல்வெட்டுகளையும் கண்டு மகிழும் வாய்ப்பு கிட்டியது. அது பற்றிய ஓர் பகிர்வு இங்கே.

உதவி : இணையம்

கல்வெட்டியல் அறிஞர் ஹுல்ட்ஸ் (E.HULTZSCH):
            1886-ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள், 21-ஆம் நாள்; முன்னாள் மதராஸ் அரசின் கல்வெட்டு ஆய்வாளராக (EPIGRAPHIST TO THE GOVERNMENT OF MADRAS) ஹுல்ட்ஸ் (E.HULTZSCH) அவர்கள் பணியேற்றதும், அடுத்த ஆண்டே 27-09-1887 முதல் 19-10-1887 வரை காஞ்சியில் தங்கியிருந்து கைலாசநாதர் கோயில் கல்வெட்டுகளைத் தாமே படியெடுத்ததாகக் குறிப்பிடுகிறார். 1883-ஆம் ஆண்டு டாக்டர் பர்கஸ் (Dr. BURGESS) அவர்கள் இக்கோயிலைக் கண்டு சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அதுவரை, மற்ற கோயில்களோடு ஒப்பிடுகையில் அவ்வளவு முதன்மை பெறாத நிலையில் கருதப்பட்ட கைலாசநாதர் கோயில் பல்லவர் கலைப்பாணியில் கட்டப்பெற்றது என்பதோடு, பெரும் எண்ணிக்கையில் பல்லவர் எழுத்தில் (கிரந்தம்) சமற்கிருத மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளைப் பெற்றிருக்கிறது எனக்கூறியுள்ளார். 1884-85 –ஆம் ஆண்டில் எஸ்.எம். நடேச சாஸ்திரி அவர்கள் இக்கோயிலின் பல்லவர் கல்வெட்டுகளைப் படியெடுத்துள்ளார்.  ஹுல்ட்ஸ் (E.HULTZSCH) அவர்கள், நடேச சாஸ்திரியார் எடுத்த படிகளை 1887-ஆம் ஆண்டில் படித்து  எழுத்துப்பெயர்ப்பு (TRANSLITERATION), மொழிபெயர்ப்பு (TRANSLATION) ஆகிய பணிகளைச் செய்துள்ளார்.  அவர் இங்குள்ள கல்வெட்டுகளைப் பற்றிக் கூறும் பல்வேறு செய்திகளைக் கீழே ‘கோயிலின் கல்வெட்டுகள்’  தலைப்பில் காண்க.

பல்லவ மன்னன் இராஜசிம்மனும் கைலாசநாதர் கோயிலும்:
            காஞ்சி கைலாசநாதர் கோயில் பல்லவ மன்னன் இராஜசிம்மன் கட்டுவித்தது. மகேந்திரவர்மன் முதன்முதலில் செங்கல், சுண்ணம், மரம், உலோகம் ஆகியவை இன்றிக் கோயில் கட்டுவித்த பெருமையைக் குடைவரைக் கோயில் எழுப்பிப் பெற்றான் எனில், முதல் கட்டுமானக் கற்கோயிலைக் கட்டிய பெருமையை இராஜசிம்மன் கைலாசநாதர் கோயிலைக் கட்டுவித்துப் பெறுகிறான். இக்கட்டுமானக் கோயிலின் காலம் கி.பி. 685-705. கோயிலின் அடித்தளம் (அதிட்டானப்பகுதி) கருங்கல்லால் அமைக்கப்பெற்றது. அதன்மேல் எழுப்பப்பட்ட கட்டுமானமும், பிற சிற்பங்களும் மணற்கல்லால் அமைக்கப்பட்டவை. சுற்றாலை முழுதுமாக ஐம்பத்தெட்டு திருமுன்களை (சன்னதி) உடைய தனிக்கோயில்களைக்கொண்டு தனித்த அழகு பெற்ற கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. கட்டுமான அழகும், சிற்பக் கலை அழகும் பெற்ற இக்கோயிலின் தோற்றத்தில் மகிழ்ந்துபோன சோழப்பேரரசன் முதலாம் இராசராசன் இக்கோயிலுக்குப் பலமுறை வருகை தந்ததாகவும், தஞ்சைப் பெருங்கோயிலை எழுப்ப இக்கோயிலே ஓர் உந்துதலை அவனுக்கு அளித்ததாகவும் கூறுவர். கோயிலில் உள்ள கோட்ட அமைப்பும், கோட்டங்களில் காணப்பெறும் சிற்பங்களும் இக்கூற்று மெய் என்பதாக நம்மை உணரவைக்கின்றன.  தஞ்சைக் கோயில் சிற்பங்களைக் காண்பதுபோல உணர்கிறோம். பல்லவ அடிச்சுவட்டைச் சோழன் தொடர்ந்தமை கண்கூடாகத் தெரிகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில், இக்கோயிலின் பெயர் “இராஜசிம்ம பல்லவேசுவரம்” என்றும், “இராஜசிம்மேசுவரம்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

            ஐம்பத்தெட்டு தனிக்கோயில்களையும் சுற்றிவருகையில் ஒரு வெள்ளோட்டப் பார்வையாகவே சிற்பக் கலை அழகினைக் கண்டு மகிழ முடிந்தது. முழுதும் கண்டு மகிழப் பல நாள்கள் வந்து போகவேண்டும். ஒரு கலைக்கருவூலமாகத் திகழும் இக்கோயிலில் பல்லவப்பாணியை நிலை நிறுத்தும் சிம்மச் சிற்பங்களும், இரு சிம்மங்களுக்கிடையில் உள்ள சிறு இடைவெளியில் அமைக்கப்பட்ட சிற்பங்களும், கோட்டச் சிற்பங்களும் – கோட்டச் சிற்பங்களில் சிவனின் பல்வேறு தோற்றங்களும், தொல்கதைகளில் வரும் நிகழ்ச்சிகளை விளக்கும் வேறு பல சிற்பங்களும் -  நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. சிற்பங்கள் அனைத்தையும் ஆய்வு நோக்கில் பார்வையிட்டுப் பலர் நூல்கள் எழுதியிருப்பர். அவற்றைப் பெற்று அவற்றின் துணையுடன் கோயிலின் முழு அழகையும் சிறப்பையும் கண்டுணரக் காலம் வேண்டும்.

கோயிலின் கல்வெட்டுகள்:
            கோயிலின் அதிட்டானப்பகுதி முழுதும் கருங்கல்லால் அமைக்கப்பட்டது முன்னரே சுட்டப்பட்டது. இக்கருங்கல் பகுதி முழுதும் பெரும்பாலும் கல்லெழுத்துகள் காணப்படுகின்றன. இக்கருங்கல் பகுதி ஜகதி என்னும் உறுப்பாகவும், இதன் மேல் பகுதி – மணற்கல்லால் அமைக்கப்பட்டது -  குமுதப்பகுதியாகவும் தோன்றுகிறது. (இந்தக் குறிப்புகள் உறுதி செய்யப்படவேண்டியவை. பார்வையிடும் நேரத்தில் விரைவாகக் கல்வெட்டுப் பகுதிகளையும், ஆங்காங்கே சில பல சிற்பங்களையும் ஒளிப்படம் எடுக்கும் ஓர் ஓட்டத்தில், கட்டிடக் கலை நுணுக்கங்களில் எல்லாம் உள்ளம் ஊன்றவில்லை.) கல்லெழுத்துகள் அனைத்தும் கிரந்த எழுத்துகள் என்பதே இங்கு குறிக்கப்படவேண்டுவது. பல்லவ கிரந்த எழுத்துகள் தனித்தன்மையைப் பெற்றவை.  தொடக்கத்தில் காணப்படும் சில கல்வெட்டு எழுத்துகள், எழுத்துகளாகத் தோற்றம் காட்டா. ஓவிய வடிவில் அவை உள்ளன. மற்ற கல்வெட்டுப்பகுதிகள், படிக்கும் வண்ணம் எழுத்துகளைப் பெற்றிருந்தாலும், அவையும் ஓர் ஓவிய வடிவைக்கொண்டுள்ளன எனலாம்.

கோயிலின் ஒரு கல்வெட்டு பல்லவர் குடிவழியைக் குறிப்பிடுகிறது...
[பிரம்மன்]
ஆங்கீரஸ
பி3ருஹஸ்பதி
ச0ம்யு
ப4ரத்3வாஜ
துரோண
அச்0வத்தாமன்
பல்லவ   (பல்லவர் குடிமரபின் முதல் தோன்றல்)

            இதே கல்வெட்டு, இரணரஸிக(ன்) என்னும் அரசனை அழித்தவன் உக்3ரத3ண்டன் எனவும், உக்3ரத3ண்டனின் மகன் இராஜசிம்மன் எனவும் குறிக்கிறது.  இன்னொரு கல்வெட்டு, முதல் துணைக்கோயிலின் பெயர் ”நித்ய விநீதேச்0வர(ம்)”  என்று குறிக்கிறது. மற்றொரு கல்வெட்டு, சிவனுக்கான சிறு கோயிலைக் (மூன்றாம் துணைக்கோயில்) கட்டுவித்தவர் ”ரங்கபதாகை” என்பதாகவும், இவர் ”காலகாலா”  என்னும் விருதுப்பெயரையுடைய பல்லவ அரசன் ”நரசிம்மவிஷ்ணு”வின் அரசியார்  என்பதாகவும் குறிக்கிறது. மீதமுள்ள கல்வெட்டுகள், இராஜசிம்மனின் நூற்றுக்கணக்கான விருதுப்பெயர்களைத் தாங்கியுள்ளன. இவ் விருதுப்பெயர்கள் நான்கு அடுக்குகளில் பொறிக்கப்பட்டுள்ளன. கருங்கல் பகுதியில் ஓர் அடுக்கும், மணற்கல் பகுதியில் மூன்று அடுக்குகளும் இப்பெயர்களைக் கொண்டுள்ளன. கருங்கல் அடுக்கிலும், மணற்கல் அடுக்குகளில் ஒன்றிலும் மட்டும் எழுத்துகள் படிக்கும் வண்ணம் உள்ளன. மற்றவை  அழிந்துவிட்டன. 

இராஜசிம்மனின் விருதுப்பெயர் தாங்கிய கல்வெட்டுகள்:
            அதிட்டானப்பகுதியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இராஜசிம்மனின் விருதுப்பெயர்களைத் தாங்கியுள்ளன. மொத்தம் இருநூறு விருதுப்பெயர்களுக்கு மேல் உள்ளன. அனைத்தும் சமற்கிருதப் பெயர்கள்; பல்லவ கிரந்தத்தில் எழுதப்பட்டவை. எடுத்துக்காட்டுக்காகக் கீழே சில பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 

விருதுப்பெயர் பெயரின் விளக்கம்
அத்யந்தகாம எல்லையற்ற விருப்பு
ரணஜய போரில் வெற்றி
அபி4ராம அன்பு
அபராஜித வெல்லற்கரிய
அமித்ரமல்ல பகைவருக்கு மல்லன்
அதிரணசண்ட போரில் கடும் வலிமை
ஆஹவ கேசரி போரில் சிங்கம்
காஞ்சி மகாமணி காஞ்சியின் அணிகலன்
நித்யவர்ஷ (என்றும்) மழை போல் கொடை
ஸங்க்ராம ராம போரில் இராமன்
கலாசமுத்3ர கலைகளில் கடல்
பார்த்த விக்ரம வலிமையில் பார்த்தன் (அர்ஜுனன்)
பு4வநி பா4ஜந உலகுடைய
அச்0வப்ரிய புரவிப் பிரியன்
இதிஹாசப்ரிய புராண, இதிகாசங்களில் விருப்பு
ஆதோத்3ய தும்பு3ரு இசைக்கருவிகளில் தும்புருவை ஒத்த
நாக3ப்ரிய யானைப் பிரியன்
காவ்யப்ரபோ3த4 காவியங்களுக்கு உயிரூட்டும்
வீணா நாரத3 வீணையில் நாரத3ர்
ச0ங்கர ப4க்த சிவனடியான் 
ஈச்0வர ப4க்த சிவனடியான்
இப4வத்ஸராஜே யானையைப்பற்றிய அறிவில் வத்சராசனை ஒத்த
இப4வித்4யாத4ர யானையைப்பற்றிய அறிவில் வல்ல

பார்வையிட்ட சில கல்வெட்டுகள்:
            கோயிலில் நேரடியாகப் பல கல்வெட்டுகளை  ஒளிப்படம்   எடுத்தவற்றுள் சில கல்வெட்டுப் பொறிப்புகளை ஹுல்ட்ஸ் அவர்களின் மொழிபெயர்ப்புச்சொற்களில் இனம் காண இயன்றது. அவை இங்கு சிறியதோர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

1.   ஸ்ரீ அத்யதா3ர

ஸ்ரீ அத்யதார            “அத்யதா3ர”  என்னும் விருதுப்பெயரை “The extremely Noble”  என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.  “அத்ய”  என்பது நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் “அதிகம்”  என்னும் சொல்லின் வடிவம் என்று புலனாகிறது.

            பல்லவ கிரந்தம் தனித்தன்மை பெற்றது என முன்னரே பார்த்தோம்.  ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களும் அவ்வெழுத்துகளில் உண்டு.  “அ” எழுத்தும் இரு வகையாக எழுதப்படுகின்றது. கீழே காண்க.


            
            இவை எளிய, இயல்பான  வடிவங்கள்;  கைலாசநாதர் கோயில் கல்வெட்டு எழுத்துகள் மிகவும் அழகுணர்வோடு ஓவியத்தின் வடிவ அழகினைச் சேர்த்து எழுதப்பட்டவை.

            பல்லவர் வடபுலத்துச் சாதவாகனருடன் தொடர்பு கொண்டவர்கள். சாதவாகனரின் மேலாண்மையை ஏற்று அவரின் கீழ் ஆட்சி செய்த குறு மன்னர்கள்.  சாதவாகனரின் எல்லைப் புறக் காவலர்களாகவும் பதவியில் இருந்தவர்கள்.  காஞ்சியைக் கைப்பற்றிய பின்னரும் பல்லவ அரசர்கள் வடபுலத்துத் தலைநகர்களில் இருந்தவாறே  பல செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர். இச்செப்பேடுகள் பெரும்பாலும் சமற்கிருத மொழியில், வடபுலத்தில் வழக்கிலிருந்த எழுத்துகளில் எழுதப்பட்டவை. இவ்வெழுத்துகள் கி.பி. நான்காம் நூற்றாண்டு அளவில்  வழக்கில் இருந்தவை. அசோகர் பிராமி எழுத்துகள் வளர்ச்சியுற்று வடிவ மாற்றம் பெற்ற எழுத்துகள். கி.பி. நான்காம் நூற்றாண்டில் குப்தர்கால  எழுத்துப் பட்டியல் பல்லவர் பயன்படுத்திய எழுத்துகளோடு ஒத்துப்போகின்றன. மகேந்திர பல்லவனுக்கு முன்பு இந்நிலைமை. அவ்வகையில், கி.பி. நான்காம் நூற்றாண்டில், தமிழ் பிராமியின் வளர்ச்சி நிலையைக் கட்டிலும் வடபுலத்துப் பிராமியின் வளர்ச்சி மிகுதி என்பது புலனாகிறது. இந்த வடபுலத்து எழுத்துகளின் தாக்கத்தாலேயே கிரந்த எழுத்துகளைப் பல்லவர் உருவாக்கியுள்ளனர் எனலாம்.  இந்த ஒற்றுமையைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகள் ஒருவாறு உணர்த்தும்.2.   ஸ்ரீ உக்3ரப்ரதாப

உக்ரப்ரதாப            ஸ்ரீ உக்3ரப்ரதாப என்னும் விருதுப்பெயரை “He who is endowed with terrible   bravery”  என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.  உக்கிரம், பிரதாபம் ஆகியவை நம் இயல்பு வாழ்க்கையில் நமக்கு அறிமுகமாயுள்ள சொற்களே.

3.   ஸ்ரீ உந்நதராம

ஸ்ரீ உந்நதராம            ஸ்ரீ உந்நதராம  என்னும் விருதுப்பெயரை “The exalted and lovely” என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார். இங்கு, “ராம”  என்னும் சொல், இராமனைக் குறிக்கவில்லை என்றாகிறது.

4.   ஸ்ரீ உக்3ரவீர்ய்ய
          
ஸ்ரீ உக்ரவீர்ய்ய


            ஸ்ரீ உக்ர வீர்ய்ய என்னும் விருதுப்பெயரை ”He who possesses terrible prowess. “  என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.  வீரியம் என்னும் சொல்லும் நமக்கு அறிமுகமாயுள்ள சொல்லே.

5.   ஸ்ரீ உதி3தோதி3த
ஸ்ரீ உதிதோதித


            ஸ்ரீ உதிதோதித  என்னும் விருதுப்பெயரை  " He who is rising ever and ever"  என ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.  உதித் என்பது உதயம் என்னும் எழுச்சியைக் குறிக்கும் வட சொல். இரண்டு முறை “உதித்”  என்பதால் மீண்டும் மீண்டும் எழுச்சியுறுகின்ற என்னும் பொருள் அமைந்துள்ளது எனலாம்.

6.   ஸ்ரீ அநுநய ஸாத்4ய
  
ஸ்ரீ அநுநயஸாத்ய


            ஸ்ரீ அநுநயஸாத்4ய  என்னும் விருதுப்பெயரை "He who is to be conquered (only) by submissiveness"  என  ஹுல்ட்ஸ் மொழியாக்கம் செய்துள்ளார்.

7.   ஸ்ரீ ராஜஸிம்ஹ   -    ஸ்ரீ அத்யந்த காம

ஸ்ரீ ராஜசிம்ஹ - ஸ்ரீ அத்யந்தகாம


            இக்கல்வெட்டுப்படத்தில், மணற்கல்லின் தேய்மானம் காரணமாக முழுச் சொற்களும் புலப்படவில்லை. 

8.   ஸ்ரீ ராஜஸிம்ஹ
ஸ்ரீ ராஜசிம்ஹ


            இக்கல்வெட்டை  அடையாளம் காட்டியவர் கோயிலில் காவல் பணியில் இருந்த தனியார் காவலர் ஆவார்.  கட்டுரை ஆசிரியர் சுற்றாலையில் கல்வெட்டுகளை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து,  ’ராஜஸிம்ஹன்’ பெயர் காணப்படுகின்ற கல்வெட்டைக் காண்பிப்பதாக அழைத்துச் சென்று காட்டினார்.  இது எப்படி அவரால் முடிந்தது என்னும் கேள்விக்கு அவர் தந்த விடை வியப்பை அளித்தது. தொல்லியல் அறிஞர்

திரு. நாகசாமி அவர்கள் இக்கல்வெட்டைச் சுட்டிக்காட்டி விளக்கியதை நேரில் கண்டு உள்ளத்தில் பதிவு செய்துவிட்டார் அக்காவலர் !!!

9.   ஸ்ரீ உந்நதராம

ஸ்ரீ உந்நதராம
பூவேலைப்பாடுகளுக்கிடையே எழுத்துகள்  (ஒளிப்படம் உதவி : swamisblog)


மாணவர்களுடன்துணை நின்ற நூல்கள்:
1     தென்னிந்தியக் கல்வெட்டுகள் - தொகுதி-1
2    INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS - By C. SIVARAMAMURTI
3    HISTORY OF THE PALLAVAS OF KANCHI - By R.GOPALAN
தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.

No comments:

Post a Comment