Saturday, February 2, 2019

திருசூலம் ஓர் தேவாரவைப்புத்தலம்


—— நூ.த.லோக சுந்தரம்


"நாடும் நகரமும் நற்திருக்கோயிலும்
            தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப்பணிமின் பணிந்தபின்
            கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வானே"
                        — திருமூலர்

   
         சென்னையில் வானூர்தி போக்குவரத்து மிக்க உள்ள மீனம்பாக்கத் தளத்தின் மிக அருகில் பல்லவ மன்னன் குடைவறைக்கோயிலுள்ள பல்லவபுர மலையின் வடகிழக்குமுக அடிவாரத்தில் குறுகுன்றுகள் சூழ அமைந்துள்ளது திருசூலம். 'திருசுரம்' எனவே அத்திருக்கோயில் 1000 ஆண்டு தொன்மை கொண்ட கல்வெட்டுகளில் பொளிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வாய்வழக்கில் திருசூலம் என்றே  பல நூற்றாண்டுகளாக வழங்கிவருகின்றது. புதிதாக எழுந்த மின்இரயிலடியும் அவ்வழியே வழங்கப் பட்டுள்ளது. கோயில் இறைவனும் இன்றும் திருசூலநாதர் எனவே உள்ளார் இறைவியும் இணையாக  திருப்புரசுந்தரி தான்.

            சென்னை கடற்கரை தாம்பரம் மின்மய திருசூலம் இரயிலடியிலிருந்து கிழக்காக வெளிவந்து தெற்காக சென்று இரு குன்றுகளுக்கு  இடையே உள்ள சாலையில் கிழக்காகத் திரும்பி  ஏறக்குறைய மொத்தம் 2 கிமீ சென்றால்,  நடுத்தர மற்றும் கூலித்தொழிலாளிகள் மட்டும் அங்கும் இங்கும்  மலைகளின் பாறை களை ஒட்டியும் வாழும் சிற்றூர் உள்ளது.   பேருந்து தொடர்பு ஏனோ இன்னும் வரவில்லை.   சிதிலமான பழம் வரவேற்பு வளைவும் உள்ளது. பழங்கால  சன்னதிதெரு  இடது மூலைமுனையில் பாழான கல்மண்டப சத்திரமும் காணலாம்.  பலர் காரில் வருகின்றனர் கோயில் வாயிலில் பூக்கடை உள்ளது. 


            பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை பெருநகரத்துக் கட்டிடம் சாலைகள் மற்றும் இருப்புப்பாதை தேவைகளுக்கான கருங்கல் அருகிலுள்ளதால் இம்மலைகளில் இருந்து பெறப்பட்டிருந்தது. இப்போது நிறுத்தப்பட்டிருந்தாலும் முன்பு பயனில் இருந்த 300 ஆண்டுக் காலத்தில், அப்போது சிதிலமாய் இருந்த  திருச்சூல கோயிலின்  பகுதிகள் மண்டபம் முதலியனவற்றின் பாகங்களே கருங்கல் தேவைகளுடன் கலந்து சென்றள்ளமை உறுதியாகத் தெரிகின்றது. ஏனெனில், இப்போது சென்னைமாநகரத்து பெருங்கோயில்களாக விளங்கும்  மயிலைக் கபாலீசுவரர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில்களில் இந்த திருசூலத்துக் கல்வட்டுத்துண்டுகள் குறைந்தது 7 அங்கு பயன்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் படி எடுத்தமை 
 'சென்னை மாநகர கல்வெட்டுகள்' - தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியீட்டு நூல்காட்டுகின்றது.  அதனிலிருந்து மேலும் திருவான்மியூர் கோயில் கல்வெட்டுகளுடன்  கூடிய துண்டுகள்  மயிலையில் வேறு சில சிறு கோயில்களில் பயன்பட்டுள்ளதாகவும் பதிவாகி உள்ளமை து தெரிகின்றது. 

            திருசூலத்தில் இப்போதுள்ளது மிகப்பழமையான கருங்கல் பணியிலான தூங்கானைமாடக்கோயில் அதிட்டானப் பட்டைகளில் கல்வெட்டுகள் உள்ளன இரு வேறு குறுநில மன்னர்களின் உருவங்கள் உபயதாரர் எனும் நிலையில் சுற்று மண்டபத்தூண்களில் காணப்படு கின்றன இணைப்புப் படங்களைக்காண்க.
 
திரிசூலம் குறிக்கும் தேவாரம்:
            "கோலக்காவில்  குருமணியைக், குடமூக்(கு) உ றையும் விடமுனியை,
            ஆலங்காட்டில் அலம்தேனை, அமரர் சென்னி  ஆய்மலரைப்,
            பாலில் திகழும் பைங்கனியைப், பராய்த் துறைஎம் பசும்பொன்னைச்,
            சூலத்தானைத்து இணையிலியைத், தோளைக் குளிரத் தொழுதேனே"     4.15.5

            இப்பாடல் திருநாவுக்கரசர் தேவாரம் நாலாம் திருமுறை பாவநாசதிருப்பதிகம் ஐந்தாம் பாடல்  இதனில் 'சூலத்தானம்' என ஓர் தலம் குறிக்கப்படுகின்றது. நெய்த்தானம் உசாத்தானம் மூலத்தானம் போன்றும் 'மாதானம்' எனும் மற்றொரு வைப்புத்தலம் போன்றும் தானம் எனும் பெயர் ஈறு  பெற்றுள்ள ஓர் தலம்.  

            மேற்படி பாடலில் கோலக்கா, குடமூக்கு, ஆலங்காடு, சென்னி, பாலில், பராய்த்துறை எனும் ஆறிலும் உறையும் இறைவன் சிறப்புப் பெயர்கள் முறையே குருமணி, விடமுணி அலந்தேன் ஆய்மலர் பைங்கனி பசும்பொன் எனக்காட்டப்படுதல்போல்,  சூலத்தானத்து உள்ள இறைவனையும் இணையிலி எனக்காட்டுதலால் சூலத்தானம் ஓர் தலமே யாகும் என்பது ஐயமற விளங்குகின்றது. அறுபது ஆண்டுகளுக்கு , முன்பே சென்னை நகரம் இந்நாள் போல் பெரிதாக வளராது போல் திருசூலமும் ஒரு மிகச் சிறு கிராமமாக இருந்த போது தந்தையாருடன் கறவைப்பசு வாங்க கால்நடைசந்தைக்கு உடன் அழைத்துச் சென்ற நினைவு.   அதனால் அப்பக்கம் செல்ல வாய்ப்பு கிட்டிய போது  வழிபட மனம் கொண்டிருந்தேன்.   மூன்று  வாரம் முன்பு தான் வழிபட முடிந்தது (இப்போது வயது 79 செல்கின்றது) படங்கள் வைத்துள்ளேன். 

            தனக்கென குறைந்தது ஓர் முழுப்பதிகம் பெறாமல் மற்ற பதிகப்பாடல் அல்லது பொது பதிகப்பாடல்களில் சிவனுறையும் கோயிலாகக் காட்டப் பெறுபவனதான் தேவார வைப்புத்தலம் என்பது பலரும்  அறிவர்.  தேவார பாடல்பெற்றவை 276 ல் இந்தியாவில் இல்லாதது 3 தவிர எல்லாவற்றையும் வழிபட்டுள்ள  என்னுடைய இக்கால முதிர்ந்த  நிலையில் பன்முறை தலைமுறைத் தவிர தேவாரத் தல ஆய்வினில் சில வைப்புத்தலங்களுக்கும் பிற மாநில சிவத்தலங்கள் 12 சோதிலிங்கம் எனவும் வழிபட்டுள்ளேன்.

            பெயர்முறை திருமுறை எனும் மற்றும் ஓர் வகையைத் தொகுத்தும் வருகின்றேன்.  திருமுறைகளின் ஊடே  ஓர் பெயரால் சிவபெருமான் போற்றப்படுதல் கொண்டு தொகுக்கப்படுவது எடுத்துக்காட்டாக மயிலைக் கபாலி எனும் பெயர் போற்றப்படும் (108+) பாடல்கள் மற்றும் கற்பகம் என விளிவருவனவும் பசுபதி கயிலாயன்  போன்ற தொகுப்புகளும் உள்ளன. இதன் பயன்: தேவாரம் பாடல் பெறாதவையும் இப்பாடல்களில் அத்தல இறைவன் பெயர் பொருத்தமே காரணம் என தேவாரத்தின் தொடர்பு காட்டி பயன்கொள்ளலாம் என்பதுவே.

            இவ்வழிதான் இங்குக்காணும் சூலத்தான் திருமுறை 26 பாடல்கள் காண்க  சூலத்தான் சூலத்தார்  எனும் சொற்களில் சூலம் என்னும் இடத்தில் அமர்ந்தவன் என பொருள் கொள்ள முடியும் என்பதால் அவ்வண்ணம் தொகுக்கப்பட்டுள்ளன.  

இதனுக்கு இணையாக உடன் காட்டிய மற்றொரு தலம் சென்னி = சென்னிமலை  பதியினயதாக கொள்ளவும்.  சென்னித் திருமுறை என தொகுத்துள்ளேன்.  இதனில் சென்னி எனும் சொல் 12 திருமுறைகளில் 314 பாடல்களில் காணப்பட்டாலும் அவைபெருமானின் உருவ உறுப்பினைக் (சென்னி=தலை) காட்டுவன நீக்கி பெருமான் உறையும் ஓர் தலம் எனக் கொள்ளத் தக்கன மட்டும் உள்ளன.


பெயர்முறைத் திருமுறை
சூலத்தான்   திருமுறை
01
கல்நவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
சொல்நவிலும் மாமறையான் தோத்திரம் செய் வாயினுளான்
மின்னவிலும் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினில்
கொல்நவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே            1.62.7

02
மாவின் உரிவை மங்கை வெருவ மூடிமுடிதன் மேல்
மேவு மதியும் நதியும் வைத்த விளைவர் கழல் உன்னும்
தேவதேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே      1.68.3

03
கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோல் ஆடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்தில்
சூலத்தான் என்பார்பால் சூழாவாம் தொல்வினையே              2.46.4

04
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே           2.66.7

05
நீலத்தார் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேலுற்ற கண்ணினார் பற்று
சூலத்தார் சுடலைப்பொடி நீறணி வார்சடையார்
சீலத்தார் தொழுதேத்தும் சிற்றம்பலம் சேர்தலால் கழல்சேவடி கைதொழக்
கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே                      3.1.3

06
நஞ்சினை உண்டிருள் கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூவிலைச்  சூலத்தர்   வீழிமிழலையார்
அஞ்சனக் கண் உமை பங்கினர் கங்கைஅங்கு ஆடிய
மஞ்சனச் செஞ்சடை யார் என வல்வினை மாயுமே                3.9.3

07
பாடு இளம் பூதத்தி னானும் பவளச்செவ்வாய் வண்ணத்தானும்
கூடு இளமென் முலையாளைக் கூடிய கோலத்தினானும்
ஓடு இள வெண்பிறையானும் ஒளிதிகழ் சூலத்தினானும்
ஆடு இளம் பாம்புஅசைத் தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே 4.4.1

08
தரியா வெகுளியனாய்த் தக்கன் வேள்வி தகர்த்துகந்த
எரியார் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கட்
பெரியான் பெரியார் பிறப்பறுப்பான் என்றும் தன்பிறப்பை
அரியான் அடிநிழல் கீழதன்றோ என்றன் ஆருயிரே                 4.8.3

09
மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன்
கை உலாவிய  சூலத்தன்   கண்ணுதல்
ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்
உய்ய லாம் அல்லல் ஒன்றிலை காண்மினே                         5.7.12

10
புனைபொன்  சூலத்தான்   போர்விடை ஊர்தியான்
வினைவெல் நாகத்தன் வெண்மழு வாளினான்
நினைய நின்றவன் ஈசனையே எனா
வினை இலார் தொழும் வீழிமிழலையே                                 5.12.3

11
கைகொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர்
மைகொள் கண்டத்தர் ஆகி இருசுடர்
செய்ய மேனி வெண்ணீற்றர் செம்பொன்பள்ளி
ஐயர் கையது ஓர் ஐந்தலை நாகமே                                        5.36.7

12
விழுது  சூலத்தான்   வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான்
பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே                                 5.41.3

13
மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில்
மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்
மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே                            5.89.3

14
ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும்
கோலத்தானைக் குணப்பெருங் குன்றினை
மூலத்தானை முதல்வனை மூவிலைச்
சூலத்தானை கண்டீர் தொழற்பாலதே                                    5.94.7

15
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யாப் பேதப்படுகின்ற பேதைமீர்காள்
இணம் புல்கு சூலத்தர் நீலகண்டர் எண்தோளர் எண்நிறைந்த குணத்தி னாலே
கணம் புல்லன் கருத்துகந்தார் கச்சி உள்ளார் கழிப்பாலை மேய கபாலப்பனார்
மணம் புல்கு மாயக்குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே  6.12.7

16                                                                                                 
இயல்பாய ஈசனை எந்தை தந்தை என்சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியைத் தீர்த்தமான தியம்பகன் திரிசூலத்தன் நகையன்
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலிக் கழிப்பாலை மேய கபாலப் பனார்
மயலாய மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே     6.12.8

17                                                                                                  
பொன்மணிய பூங்கொன்றை மாலையானைப் புண்ணியனை வெண்ணீறு பூசினானைச்
சின்மணிய மூவிலைய சூலத்தானைத் தென்சிராப்பள்ளிச் சிவலோகனை
மன்மணியை வான்சுடலை ஊராய்ப் பேணி வல்எருதொன்று ஏறும் மறை வல்லானைக்
கல் மணிகள் வெண்டிரை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காண லாமே  6.22.7

18                                                                                                     
கைம்மான மதகளிற்றின் உரிவையான் காண் கறைக்கண்டன் காண் கண்ணார் நெற்றியான் காண்
அம்மான் காண் ஆடரவு ஒன்று ஆட்டினான் காண் அனலாடி காண் அயில்வாய்ச்  சூலத்தான்   காண்
எம்மான் காண் ஏழுலகும் ஆயினான் காண் எரிசுடரோன் காண் இலங்கு மழுவாளன் காண்
செம்மானத்து ஒளியன்ன மேனியான் காண் திருவாரூரான் காண்என் சிந்தையானே     6.24.1

19                                                                                                    
மலைவளர்த்த மடமங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண்
இலை வளர்த்த மலர்க் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறிதிரைநீர் நஞ்சு உண்டான் காண்
கொலை வளர்த்த மூவிலைய  சூலத்தான்   காண் கொடுங்குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண்
சிலை வளர்த்து சரம் துரந்த திறத்தினான் காண் திருவாரூரான் காண் என் சிந்தையானே 6.24.9

20                                                                                                       
தொட்டிலங்கு சூலத்தர் மழுவா ளேந்திச் சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டி வெள்ளேறேறிப் பலியும் கொள்ளார் பார்ப்பாரைப் பரிசழிப்பார் ஒக்கின்றாரால்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக் கருத்தழித்து வளை கவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேதநாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே     6.35.6

21                                                                                                     
மின் அளந்த மேல்முகட்டின் மேலுற்றான் காண் விண்ணவர்தம் பெருமான் காண் மேவில் எங்கும்
முன் அனளந்த மூவர்க்கும் முதலானான் காண் மூவிலைவேல் சூலத்து என் கோலத்தான்  காண்
எண்அனளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏவலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மாகடல்சூழ் கோகரணம் மன்னினானே 6.49.7

22                                                                                                         
இலையாரும்  சூலத்தான்   எண்தோளானே எவ்விடத்தும் நீயலாது இல்லை என்று
தலையாரக் கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மாமேரு கையில் வைத்த
சிலையானே திருவானைக்காவுள் மேய தீயாடீ சிறுநோயால் நலிவுண்டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால் அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே 6.62.8

23                                                                                                           
இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடும் சடையானை விடையானைச் சோதி எனும் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்த அணிமலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகல் துறையின் அருகே
கரும்புயர்ந்து பெருஞ் செந்நெல் நெருங்கி விளைகழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே. 7.40.3

24                                                                                                            
நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பும் என இங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல் பொய் அன்பர் போக்குமிக்க
விருப்புறு வோரை விண்ணோரின் மிகுத்து நண்ணார் கழியத்
திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திருநுதலே                   8.2.315

25
இருந்தனம் எய்தியும் நின்றும் திரிந்தும் கிடந்து அலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போக நெஞ்சே மடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்இயல் சூலத்து எம்மான்
திருந்திய போது அவன் தானே களையும் நம் தீவினையே                11.185

26
கணக்கிட்டுக் கொண்டிருந்து காலனார் நம்மை
வணக்கி வலைப்படா முன்னம்-பிணக்கின்றிக்
காலத்தால் நெஞ்சே கயிலாயம் மேவியநல்
சூலத்தான் பாதம் தொழு                                                                     11.358


            சென்னி, பாலில்   இவை இரண்டும் கூட தேவார வைப்புத்தல வரிசையில் வரவேண்டியவை.  சென்னி என்பது சென்னிமலை திருச்செங்கோடு ஈரோடு திருப்பூர் முதலியவற்றின் அருகு  குன்றில் மேல் உள்ள முருகன் கோயில் அதனுள்  பழநியில் உள்ளது போல் சிவன் கோயிலும் உள்ளது திருப்புகழ் பெற்றது தொடரும்  தனி கருத்துரை காண்க.

            பாலில் என்பது செந்தில் அன்பில் இடைமருதில் மயிலர்ப்பில் போல் இல் ஈற்று இடப்பெயராகும் பாலி என்பது ஓர்ஆறு அல்லது இன்றுள்ள பாலாறே ஆகலாம்  திருமாற்பேறு எனும் பாடல்பெற்றத் தலம் பாலியின் தென்கரையில் உள்ளதாகவும் வடமுல்லைவாயில் திருவேற்காடு பாலியின்  வடகரையில் உள்ளதாகவும் சேக்கிழார் குறித்துள்ளார்.  சங்கநூல் புறநானூறு 387 சேரமான் செல்வக்கடுங்கோ என்னும் மன்னனை குண்டுக்கண் பாலி ஆதனார் எனும் புலவர்  பாடியுள்ளார்.  இங்கு பாலி என்பது ஓர் இடப்பெயரே.  திரு நள்ளாற்றுப்புராணம் பாடிய புலவர் நாரதர் நளனிடம், "தென்னாடு சென்று தீர்த்தமாட வினைதீரும் எனக்காட்டும்  பகுதியில் காளிந்தி சோணை ஆறுகள் காசி காளஞ்சனம் கலிங்கேச்சரம் அநந்தீசரம் துருசுஅறு பாலிவாய் சுரக்கண்டீசரம் கழுக்குன்றம் அண்ணமலை சிறீசயிலம் கவுதமீச்சரம் விருத்தாசலம் தீர்த்தகிரி முக்கூடல் சிதம்பரம் சீர்காழி புள்ளிருக்குவேளூர் திருவேண்காடு திருப்பனந்தாள் கடையூர் கோகர்ணம்"  எனும் தலங்களைக் குறிக்கின்ற இடத்து பாலிவாய் சுரக்கண்டீசரம் என ஓர் தலத்தினைக் குறித்துள்ளதில் பாலிவாய் (=பாலிவாயில்/பாலிவாசல்) கண்டீச்சரம் எனும் ஈசன் கோயில் உள்ள ஓர் தலம் எனத்தெரிகின்றது. தொடர்பு:  மயிலை நூ த லோ சு / நூ.த.லோக சுந்தரம் (selvindls61@gmail.com)


              

No comments:

Post a Comment