Saturday, February 9, 2019

ஆற்றுப்படையும் ஆறுபடையும்— முனைவர் ச.கண்மணி கணேசன்  முன்னுரை:
            முருகக் கடவுளுக்கு உரிய படைவீடுகள் ஆறு என்னும் கொள்கை தமிழ்ச்  சமுதாயத்தில் இன்றும் நிலவுகிறது. இக்கொள்கையை அடியொட்டியே ‘ஆண்டவன் கட்டளை’ என்னும் திரைப்படத்தில் ‘ஆறு மனமே ஆறு’ என்னும் பாடல் அமைந்தது. பழனிமலை, சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணிகைமலை, பழமுதிர்சோலைமலை என்ற ஆறு தலங்களும் முருகனுக்குரிய  ஆறுபடைவீடுகள் என்னும் கருத்து அப்பாடலில் இடம் பெறுகிறது. ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘கந்தன் கருணை’ என்னும் திரைப்படத்தில்  பொதுமக்களின் அதே கருத்தை அடியொட்டி ‘அறுபடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடல் இடம்பெற்றது. இப்பட்டியலில் உள்ள திருத்தணி என்ற தலத்தைச் செவ்வியல் இலக்கியங்கள் எதிலும் காண இயலவில்லை. பின்னர் தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘தெய்வம்’ என்னும் திரைப்படம் ஏழாவது படைவீடாக கோயம்புத்தூர் அருகில் உள்ள மருதமலையைக் கூறலாம் என்று கருத்து உரைத்தது.

சிலப்பதிகாரம் சுட்டும் முருகத்தலங்கள்:
“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் 
ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே”-(பா - 8)
என்னும் குன்றக்குரவை  நான்கு முருகத்தலங்களை வரிசைப்படுத்துகின்றது. இத்தலங்கள் எவை என்று அடையாளப்படுத்துவதில் அறிஞரிடையே காலந்தோறும் கருத்து வேறுபாடுகள்  நிலவி வந்துள்ளன. 

            'செந்தில்' என்பது திருச்செந்தூர் என்பதில் இன்றுவரை கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. 

            'செங்கோடு' என்பது மேற்குமலைத் தொடரில் உள்ள சுருளி மலையின் ஒரு  பகுதி ஆகும். இப்பதியை இளங்கோவடிகள் தன் நூலில் ஆங்காங்கு நெடுவேள் குன்றம் என்றும், மஞ்சுசூழ் சோலைமலை என்றும், வெண்வெலான்  குன்று என்றும், செங்கோட்டு உயர்வரை என்றும் தொடர்புடைய பல பெயர்களால் அழைக்கிறார். இம்மலைத் தொடரில் உள்ள செங்குன்று ஒன்றின் தலைப்பாக அமைந்த உயர்மட்டத் தாழ்வரையில் அடர்ந்த காடுகளிடையே பழைமையான முருகன் கோயில் உள்ளது என்று சி.கோவிந்தராஜன் கூறுகிறார்.1 அரும்பதஉரைகாரர் சேலம் மாவட்டத்துத் திருச்செங்கோடு என்று குறிப்பிடுவதை  உ.வே.சாமிநாதையர் ஏற்கிறார்; அடியார்க்கு நல்லார் மறுக்கிறார்2.  

            அரும்பதவுரைகாரரும், புலவர் மு.சுப்பிரமணியனும்; குறமகளிர் பாடும் 'வெண்குன்று' இன்றைய சுவாமிமலை என்கின்றனர்.3 இன்றைய சென்னைக்கு 80கி.மீ. மேற்கில் உள்ள தவளகிரி என்னும் குன்றையும், அதன்  அடிவாரத்தில் உள்ள வெண்குன்று என்னும் சிற்றூரையும், குன்றின் மேலுள்ள இரண்டு குகைக் கோயில்களையும், கார்த்திகையன்று வெகுவிமரிசையாகக் கொண்டாட்டம் நிகழ்வதையும், கன்னோசி மன்னன் தன்  தாயோடு வந்து வழிபட்டமைக்குக் கல்வெட்டுச் சான்று இருப்பதாக பிலோ இருதயநாத் கூறுவதையும்4 கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

            பின்வந்த அருணகிரிநாதரோ சுவாமிமலையைத் 'திருவேரகம்' என்கிறார் (திருப்புகழ்- 217). திருவேரகம் என்பது மலைநாட்டகத்தே ஓர் பதி என்பார் நச்சினார்க்கினியர்.5  தென்கன்னட மாவட்டம் புத்தூர் வட்டத்திலுள்ள குமார பர்வதமே திருவேரகம் என்பார் மா.இராசமாணிக்கனார்.6  குமரி மாவட்டத்தில் தக்கலைக்கு அருகில் உள்ள குமாரபுரமே திருவேரகம் என்றும், நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் தான் திருவேரகம் என்றும் பொதுமக்களிடம் பல கருத்துக்கள் நிலவுகின்றன.7 

            வெண்குன்று எதுவாக இருப்பினும்; திருவேரகம் எதுவாக இருப்பினும்; செங்கோடு எதுவாக இருப்பினும்; இவ்வரிசையிலுள்ள முருகத்தலங்கள் நான்கு என்பதை மறுக்க இயலாது. பொதுமக்கள் தாமறிந்த முருகத்தலங்களை எல்லாம் முருகனின் படைவீட்டில் ஒன்று என்று கூறும் ஆர்வமுள்ளவர்கள் என்பதையும் மறுக்க இயலாது.

நக்கீரர் சுட்டும் முருகத்தலங்கள்:
            திருமுருகாற்றுப்படையில் முருகவழிபாட்டிடங்களை அவ்விடத்தே பின்பற்றும் வழிபாட்டு முறைகளை அடியொட்டி நக்கீரர் வகைப்படுத்துகிறார். பாட்டின் முதற்பகுதியில் சில தலங்கள் பெயர் சுட்டிப் பட்டியலிடப்பட்டுள்ளன. 

            பட்டியலில் முதலில் இடம் பெறுவது 'திருப்பரங்குன்றம்' (அடி-12-77). இத்தலத்து முருகன் கடம்பமலர் அணிந்த தோற்றத்துடன் புடைப்புச்சிற்பமாகக் காட்சியளிப்பதும், அதையே நக்கீரரும் விதந்தோதுவதும்; பல நூற்றாண்டுகளின் அழியாத வரலாறு. இக்குன்றின் குகைக்கோயிலில் உள்ள முருகனைக் குன்றம்பூதனார் பரிபாடலில் போற்றுகிறார்(பா-18). அதே தொகைநூலில் நப்பண்ணனார் பாண்டியமன்னன் தன் தேவியரோடும், அமைச்சரோடும், பொதுமக்களோடும் இக்குன்றை வலம்வந்து வணங்கினான் என்கிறார்(பா-19). மன்னனால் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட்ட  இத்தலம் மக்களாலும் வழிபடப்பட்டமையால் இது நகர் என்னும் வகையைச் சேரும் தலமாகும்8. கேசவனார்,  நல்லழிசியார், நல்லந்துவனார், நல்லச்சுதனார் போன்ற பலரும் திருப்பரங்குன்றத்து முருகனைப் போற்றி உள்ளனர் (மேற்.-6,8,9,14,17,21& பரிபாடல் திரட்டு 11). 

            'அலைவாய்',' ஆவிநன்குடி', 'ஏரக'ம் ஆகிய மூன்று தலங்களிலும் வைதீக நெறிப்படி வழிபாடு நடந்தது என்று வருணிக்கிறார்.

            'அலைவாய்' இன்றைய திருச்செந்தூர் ஆகும். வங்காள விரிகுடாவின் கரையில் ஆறுமுகங்களுடன், பன்னிரு கரங்களுடன் எழுந்தருளிக் கிழக்கு நோக்கி இருக்கும் சண்முகப்பெருமானின் ஒரு முகம் தீமுறை வழிபாட்டை நோக்கிக் கொண்டிருந்தது என்பது நீண்ட வருணனையில் இடம்பெறும் கூறு (திருமுருகு.-அடி-77-124). அகநானூறு (பா-266), புறநானூறு(பா-55), பரிபாடல்(பா-5), சிலப்பதிகாரம் (குன்றக்குரவை-பா-8), இறையனார் அகப்பொருள் ஏழாம் சூத்திரஉரை9, தொல்காப்பியக் களவியலின் 23ம் சூத்திர உரை10 அனைத்தும் இத்தலத்தைச் செந்தில் என்று சுட்டுகின்றன. இன்றும் இங்கு எழுந்தருளி இருக்கும் முருகனுக்கு செந்திலாண்டவர் என்று பெயர்.

            'ஆவிநன்குடி' இன்றைய பழனித்தலம் ஆகும். முருகன் சிறையிட்ட பிரம்மனைச் (வேத மந்திரங்கள் ஓதும் தகுதி பெற்றவன்) சிறையிலிருந்து விடுவிக்க திருமால் வந்து முருகனை வழிபடும் தலம் இது என்றும், நூறு வேள்விகளைச் செய்து பதவி பெற்ற இந்திரனும் இங்கு வந்து வழிபடுகிறான் என்றும் பெருமைப்படுத்துகிறார். இது வைதீகம் போற்றப்படும் தலம் என்பதைக் குறிப்பாகச் சுட்டுகிறார்(திருமுருகு.-அடி.-126-176). குன்றின் மேல் குமரன் கோயிலுடன்; அடிவாரத்தில் ஆவிக்குடி என்னும் ஊரும் இத்தலமே ஆவிநன்குடி என்று நிறுவத் துணை செய்கின்றன.

            இருபிறப்புடன் முத்தீப்பேணி பிரம்மச்சரியத்தை மேற்கொண்ட அந்தணர் ஈர ஆடையுடன் தலைமேல் கூப்பிய கைகளை உடையவராய்  ஆறெழுத்து மந்திரத்தை ஓதித் திருவேரகத்தில் வழிபட்டனர் (திருமுருகு.-அடி.-176-189).

            மேற்சுட்டிய நான்கு தலங்களை அடுத்து; மக்கள் கள்ளருந்திக் குரவை அயர்ந்து; வேலன் தெய்வமேறி ஆடும்  வெறியாட்டு நிகழும் மலைப்புறங்களில் எல்லாம் முருகன் எழுந்தருளுகிறான்(திருமுருகு.- அடி.- 190- 217) என்கிறார்.

            அடுத்து இடம்பெறுவது முருகன் அருள் வழங்கும் இடங்களின் நீண்ட பட்டியல் ஆகும். முச்சந்திகள், நாற்சந்திகள், ஆற்றங்கரைகள், குளத்தங்கரைகள், காடுகள், சோலைகள், ஊர்மன்றங்கள், பொதியில்கள், புதிதாகப் பூத்த கடம்ப மரங்கள், நீர்த்துருத்திகள், வழிபாட்டிற்குரிய தூண்கள் என எங்கெல்லாம் முருகனுக்கு விழா எடுக்கிறார்களோ; அங்கெல்லாம் முரசு அறைய, கொம்பு ஊத, விழாக்கால் நாட்ட, சேவற்கொடி உயர, மணிகள் ஒலிக்க, மணப்புகை கமழ, மலரலங்காரம் விளங்க; ஆடு, தினை, பூக்கள் முதலிய பலிப்பொருள்களைப் படைக்க; அவன்  எழுந்தருளுகிறான்; வேலன் தெய்வமேறி ஆடுகிறான் (திருமுருகு.- அடி.- 218- 249) என்கிறார். 

            முடிவாகப் 'பழமுதிர்சோலை'மலையின் வளத்தை வருணித்து முருகன் அத்தலத்திற்கும் உரியவன் (திருமுருகு.-அடி.-295-317) என்கிறார்.

            எவ்வாறு நோக்கினும் திருமுருகாற்றுப்படை ஐந்து தலங்களின் பெயரை மட்டுமே சுட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆறுபடைவீடு என்ற கொள்கை:    
ஆறுபடைவீடு என்ற கொள்கை தோன்றியது எங்ஙனம் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்ச் சொற்றொடர்களைப் பிரித்து எழுதுங்கால்;  

சோற்றுத்திரள் ---> சோறு + திரள் 
வேற்று மனிதன் ---> வேறு + மனிதன் 
நூற்றுக்கால்(மண்டபம்) ---> நூறு+கால்(மண்டபம்)
என்றாவது போல;  

ஆற்றுப்படை --->ஆறு+படை
ஆற்றுப்படுகை  --->ஆறு+படுகை 
ஆற்றுக்கால் (பகவதி அம்மன்)--->ஆறு+கால்(பகவதி அம்மன்) 
என்றாகிறது. 

            ஆறு என்னும்  சொல் வழி என்னும் பொருள் தரும்போது ஒருஉருபன்; நதியைக் குறிக்கும் போது இன்னொரு உருபன். ஆறு என்னும் எண்ணுப்பெயரைக் குறிக்கும் போது வேறு ஒரு உருபன். மக்கள் ஆறு என்னும் சொல்லை நெறி/வழி என்று புரிந்து கொள்ளாமல்; எண்ணுப்பெயராகத் தவறாகப் புரிந்து கொண்டதால் முருகனுக்கு ஆறு படைவீடுகள் உண்டு என்று சொல்லத் தலைப்பட்டனர் எனலாம். 

            அரசன் மக்களுக்காகக் கட்டிய தலத்திலாயினும், வேத மந்திரங்கள் ஒலிக்கும் கோயில்களிலாயினும், குன்றுதோறும் குறிஞ்சிக் குறவர் ஆடும் வெறியாட்டயர் களங்களிலாயினும், விழா எடுக்கும் எவ்விடமாயினும்; மனதார முருகனை வழிபட்டால் அவனருள் கிடைக்கும் என்று ஆற்றுப்படுத்துகிறார் (திருமுருகு.- அடி.- 250- 294) நக்கீரர். இந்த நோக்கம் மறக்கப்பட்ட போது ஆற்றுப்படை; ஆறு படை ஆனது என்பதே பொருந்தும்.

 

குறிப்புகள்:
1) சி.கோவிந்தராசன் - ‘கண்ணகி கோட்டம்’- தமிழரசு -ஆகஸ்டு 1-1972-ப.-45-49
2) சிலப்பதிகாரம் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்- உ.வே.சா (ப.ஆ.)- ப.- 51
3) மேலது& மு.சுப்பிரமணியன்- சிலம்புச் செல்வம்-  ப.- 45
4) பிலோ இருதயநாத்-மக்கள் வணங்கும் ஆலயம்- ப.-ii -34
5) பத்துப்பாட்டு- முதற்பகுதி-திருமுருகு.- ப.- 77 
6) மா.இராசமாணிக்கனார்- பத்துப்பாட்டாராய்ச்சி-ப.- 130
7) தொ.பரமசிவன்- அழகர் கோயில்- மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பட ஆய்வேடு- 1980- பின்னிணைப்பு.
8) பார்க்க- சிலப்பதிகாரம் காட்டும் வழிபாட்டிடங்கள்- மின்தமிழ் மேடை- காட்சி 14- ஜூலை 2018
9) களவியல் என்ற இறையனார் அகப்பொருள்- நக்கீரர்(உ.ஆ.)- ப.-70
10) தொல்காப்பியம்- நச்சினார்க்கினியர்(உ.ஆ)- ப.-19


துணைநூற் பட்டியல்:
1. இறையனார் அகப்பொருள்- நக்கீரர் (உ.ஆ.)- கழக வெளியீடு-1976
2. இராசமாணிக்கனார்,மா.- பத்துப்பாட்டாராய்ச்சி- முதல் பாதிப்பு- 1970 
3.  கோவிந்தராசன்,சி.- ‘கண்ணகி கோட்டம்’- தமிழரசு-ஆகஸ்டு1972
4. சிலப்பதிகாரம் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்-உ.வே.சா. (ப.ஆ.)8ம் பதிப்பு- 1968
5. சுப்பிரமணியன்,மு.- சிலம்புச் செல்வம்- முதற்பதிப்பு-1973
6. தொல்காப்பியம்- நச்சினார்க்கினியர் (உ.ஆ.)- கழக வெளியீடு- 1972
7. பத்துப்பாட்டு- முதற்பகுதி- கழக வெளியீடு- 1973
8. பரமசிவன்,தொ.- அழகர் கோயில்- ம.கா.ப. முனைவர் பட்ட ஆய்வேடு-1980 
9.    பிலோ இருதயநாத்- மக்கள் வணங்கும் ஆலயம்- முதல் பதிப்பு- 1965
10. மின்தமிழ் மேடை- காட்சி 14- ஜூலை 2018தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)


No comments:

Post a Comment