Sunday, January 20, 2019

கோவை மாநகர்... அன்றும் இன்றும் ...


——    துரை.சுந்தரம்


முன்னுரை:
          கவிஞர் புவியரசு. கோவை வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பேரூர் சாந்தலிங்கர் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் பட்டம் பெற்ற தமிழாசிரியர். கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நாடகங்கள் என இதுவரை 106 நூல்களை எழுதியுள்ளவர். சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவர். தேசியத் திரைப்பட வளர்ச்சித்துறையில் பணியாற்றியவர். இவ்வாறு, இயற்றமிழ், நாடகத்தமிழ் ஆகிய இரண்டிலும் வல்ல இத்தமிழறிஞர், கோவை விழா நிகழ்ச்சிகளின் தொடராக, 11-01-2019 அன்று கோவை வாணவராயர் அறக்கட்டளைச் சிறப்புச் சொற்பொழிவொன்றை ஆற்றினார். கோவையைப் பற்றித் தம் வாழ்க்கையோடு இயைந்த அனுபவங்களையும், கோவையைப் பற்றிய பல்வேறு செய்திகளையும் சுவையோடு பகிர்ந்துகொண்டார். கோவையின் பழமை எவ்வாறிருந்தது என்பதை இன்றைய தலைமுறை அறிந்து மகிழும் வண்ணமும், பழங்கோவையின் சாயலை, ஓரளவு தம் சொந்த வாழ்வில் கண்ட சில மூத்த குடிமகன்களின் நினைவைக் கிளறி மகிழவைக்கும் வண்ணமும் அமைந்த அவரது சொற்பொழிவிலிருந்து சில துளிகள் இங்கே.

சொற்பொழிவாளரின் இளமைப்பருவம்-கல்விச் சூழல்:
          கவிஞர் புவியரசு தம் இளமைப்பருவத்தை நினைவு கூர்ந்தமை, நாம் அன்றைய கோவை நகரின் சூழலையும், அன்றைய கல்விச் சூழலையும் அறிந்துகொள்ளப் பெரிதும் துணை செய்தது. அவரே கூறியது போல அவரது உரை வெறும் புள்ளி விவரம் அல்ல; அது ஓர் அனுபவம். உடுமலைக்கருகில் ஒரு சிறிய கிராமத்தில் பிறப்பு. முதல் வகுப்பு படிக்கும் காலத்தில், கோவை நகரில் இருப்பு. கோவையில் இன்றும் “மாட்டாசுபத்திரி”  என்ற பெயரில் வழங்கும் கால்நடை மருத்துவமனையின் அருகில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆசிரியர் அடித்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். ஓராண்டுகூட நிறைவுறவில்லை. ஏதோ காரணம்பற்றி, இரண்டாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான காலகட்டத்தில் பள்ளி செல்லவில்லை. பின்னர், இடையர் வீதியில் இருந்த எஸ்.ஆர். சந்திரன் பள்ளியில் (S. R. CHANDRAN PREPARATORY SCHOOL) ஆறாம் வகுப்பில் சேர்ந்தார்.  ஐந்து வகுப்புகள் படிக்காத நிலையில் பாடங்கள் எவையும் படியவில்லை. இந்நிலையில், கோவையில் “பிளேக்” (PLAGUE) என்னும் கொள்ளை நோய் பரவியது. படிப்பு நின்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நகராட்சிப் பள்ளியில் (CITY MUNICIPAL HIGH SCHOOL)  நேரடியாக எட்டாம் வகுப்பில் சேர்க்கை. இப்பள்ளி, பெரும் விளையாட்டு வீரர்களைத் தந்திருக்கிறது. இவருக்குக் கணக்குப்பாடம் தெரியாது. ஆனால், கணக்கு ஆசிரியர் ஒவ்வொரு கணக்கையும் தாமே போட்டுக் காண்பித்துக் காண்பித்து மாணவர்களுக்குக் கணக்குப் புகட்டினார். கணக்கு ஆசிரியரை மறக்கவியலாது. காரணம் செந்தமிழில் பேசுவார். கோவையின் கல்விச் சூழல் பற்றி ஒரு குறிப்பு.  கோவையில், 1860-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியக் கிறித்தவச் சபையாரின் செயிண்ட் மைக்கேல் பள்ளியில் (ST.MICHAEL’S)  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிறித்தவரல்லாதார் அப்பள்ளியில் சேர இடம் கிடைக்காத சூழலில், கோவையின் நாயுடு வகுப்புச் செல்வர் ஒருவர் கோவை பீளமேட்டில், 1924-ஆம் ஆண்டு, அனைத்துச் சமயத்தாரும் கல்வி பயிலப் பள்ளி ஒன்றை அமைத்தார். சர்வ ஜன உயர்நிலைப்பள்ளி என அதற்குப் பொருத்தமானதொரு பெயரையும் இட்டார்.

          கவிஞர் புவியரசு அவர்கள் பின்னர் அரசு கலைக் கல்லூரியில் இடைநிலைப் பட்டம் (Intermediate) பெற்றார். இராமச்சந்திர ஐயர் என்னும் ஆசிரியர் கல்லூரியின் ஆய்வுக்கூடப் பொறுப்பாளராக இருந்தார்; ஆய்வுக்கூடப் பொருள்களில் கண்ணாடிப்பெட்டி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த, பதப்படுத்தப்பட்ட மனிதத்தலையும் ஒன்று. சக மாணவர்களின் மிரட்சிக்கிடையில், அதை அச்சமின்றிக் கையில் எடுத்துக் காண்பித்த அனுபவம் கவிஞருக்குண்டு. ஆய்வுக்கூடத்தில் இருந்த இன்னொரு பொருள் மனித எலும்புக்கூடு. கைகளும், கால்களும் சிறு சிறு பகுதிகளாகத் திருகு ஆணிகளால் மூட்டப்பெற்றவையாக இருந்ததால், கவிஞர், நாள்தோறும் கைகளை வெவ்வேறு நிலைகளில் பொருத்தி வைத்து மகிழ்வாராம். ஒரு நாள் கை குவித்து வணங்கும் மனித எலும்புக்கூடு மறுநாள் வேறொரு தோற்றத்தில். இன்னொரு ஆசிரியர் சுப்புரத்தின ஐயர்; தலை முழுக்க முடியற்ற தோற்றம். உச்சியில் ஒரு சிறு குடுமி. புவியியல் (GEOGRAPHY) கல்விக்கான ஆசிரியரான அவர் தன் தலையையே பாடத்துக்கான கோளமாக வடிவமைத்துக்கொண்டு உலக நாடுகளைக் காட்டிக் கல்வி பயிற்றுவார் எனக் கவிஞர் கூறுகையில் அவையில் சிரிப்பலைகள்.

          அக்காலக் கோவையில் கல்வி, தரம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. எல்லாரும் படித்தனர். மணி மணியான ஆசிரியர்கள். கல்விக்குப் பெரிய மரியாதை இருந்த காலம் அது. இன்று அந்த மரியாதை காணாமல் போயிற்று. அக்காலக் கோவையில், பிச்சைக்காரர்கள் கூடப் படித்தவராயிருந்தனர். பக்திப் பாடல்களைப் பாடிப் பிச்சை எடுத்தனர்.


source:   https://www.quora.com/What-are-some-rare-pictures-of-Coimbatore


          கவிஞரின் சிரு பிள்ளைப் பருவத்தில் கோவை நகரம் மிக அமைதியான இடமாக இருந்தது. வெறிச்சோடிய சாலைகள். எங்கோ ஒலிக்கும் மிதிவண்டியின் மணிச் சத்தம். அல்லது குதிரை வண்டிகளின் சத்தம்.

கோவையின் மையப்பொருள்-பருத்தி:
          கோவையின் இயக்கம் பருத்தியை மையமாகக்கொண்டே சுழன்றது. ஒரு பக்கம் பஞ்சாலைகள்; ஒரு பக்கம் நெசவாளர்கள். கருங்கண்ணி, கம்போடியா என இருவகைப் பருத்தி. பருத்திச் செடிகள் அழகான மலர்களைக் கொண்டிருந்தன. பருத்தியிலிருந்து, விதை தனியாகவும் பஞ்சு தனியாகவும் பிரிக்கும் பணிக்கு ஜின்னிங் ஆலைகள் (GINNING MILL). அதை அடுத்து, நூல் நூற்கும் பணிக்கு நூற்பாலைகள் (SPINNING MILL). பின்னர் நெசவாலைகள். கோவை எங்கும் கைத்தறி நெசவு. நெசவுத் தொழில் நடக்கும் இடங்கள், பேட்டைகள் எனப் பெயர் கொண்டன. கோவையின் மையப்பகுதியில் தெப்பக்குளம் மைதானம் அமைந்திருந்தது. மைதானத்திலும், தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களிலும் பாம்பு போல் நீண்டு கிடக்கும் சேலை வடிவில் விரித்து வைத்த நூல் பாய்கள்.

முதல் பஞ்சாலையும் பஞ்சாலைப் போராட்டமும்:
          நூலிழை அறுந்து போகாமல் இருக்கும்படி சரியான அளவில் ஈரப்பசை இருக்கும் பகுதி கோவைப்பகுதி. எனவே, பஞ்சாலை அமையத் தகுதியான இடமாகக் கோவை இருந்தது. கோவையின் முதல் ஆலை ஸ்டேன்ஸ் பஞ்சாலை. உரிமையாளர் ஸ்டேன்ஸ் துரை. அவருக்குப் பஞ்சாலைக்கான நிலம் கொடுத்தவர் சேலம் நரசிம்மலு நாயுடு என்பவர். “விக்டோரியா அச்சகம்”  என்னும் பெயரில் முதல் அச்சகத்தை நிறுவியவர். தொண்ணூற்றாறு நூல்களை எழுதியவர். ஸ்டேன்ஸ் பஞ்சாலை இயங்கியபோது, சொற்பொழிவாளர் கவிஞர் புவியரசு அவர்கள், ‘சிட்டி யூனியன்’ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஸ்டேன்ஸ் பஞ்சாலையைத் தொடர்ந்து கோவையில் மொத்தம் நூற்றுப்பத்து ஆலைகள் தொடங்கப்பட்டு இயங்கின. நூறாம் எண் பருத்தி இழை கோவையில்தான் முதன்முதலில் நெய்யப்பட்டது.

Stanes mill

source:   https://www.quora.com/What-are-some-rare-pictures-of-Coimbatore


          பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு முறை நடந்தது. போராட்டம் வலுத்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியும் இங்கு நடந்தது. போராட்டத்துக்கு ஆதரவாக இரயில் வண்டி ஓட்டுநர் ஒருவர் இரயிலை நிறுத்திவிட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது.

திரைப்படக் கலையும் கோவையும்:
          திரைப்படக் கலைக்கு முன்னோடி கோவையே. பிரஞ்சுக்காரன் ஒருவன் திரையில் படம் காட்டும் ஒரு கருவியோடு திருச்சி-பொன்மலையில் சலனப் படக்காட்சிகளைத் திரையில் ஓடவிட்டதைப் பார்த்து அதில் மனதை ஈடுபடுத்திய வின்சென்ட் அவர்களை இங்கு நினைவு கூரவேண்டும். அந்தக் காலத்தில் ஆறாயிரம் ரூபாய்ப் பணம் கொடுத்து அந்தப் பிரஞ்சுக்காரனிடம் திரைப்படக் கருவியை (PROJECTOR) விலைக்கு வாங்கித் தம் தோள்களில் சுமந்தவாறு ஊர் ஊராய் அலைந்து சலனப்படத்தை மக்களிடம் காட்டியவர் அவர். ஆப்கானிஸ்தான் வரை அவர் சென்றதாகக் கேள்விப்படுகிறோம்.


Variety Hall Theater

source:   https://www.quora.com/What-are-some-rare-pictures-of-Coimbatore


         பிரிட்டிஷ் மகாராணியாரின் அரண்மனையின் தோற்றத்தை ஒத்த வடிவத்தில், “வெரைட்டி ஹால்”  (VARIETY HALL)   என்னும் பெயரில் திரைப்பட அரங்கு ஒன்றை அவர் கட்டுவித்தார்.  அதில் சலனப்படங்களை ஓடவிட்டார். பேச்சொலி இல்லாத ஊமைப்படங்கள். ’கார்ட்டூன்’ படங்கள் வெளியிடப்பட்டன. MEGAPHONE என்னும் ஒலிபெருக்கி மூலம் படங்களின் கதையை, உரையாடல்களைக் கலைஞர் ஒருவர் திரைக்கு முன் உள்ள மேடைப்பகுதியில் நின்றுகொண்டு பேசிக் காட்சிகளை விளக்குவார். “வெரைட்டி ஹால்”  (VARIETY HALL)   என்னும் பெயருக்கேற்ப அந்த அரங்கில் சலனப்படத்தைத் தவிர்த்து, ஆங்கிலோ-இந்திய மக்களின் “BALL”  என்னும் உள் அரங்க நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்தத் திரையரங்கு இருக்கும் அதே வீதியில் பின்னர் “எடிசன்” என்னும் பெயரிலும் ஒரு திரையரங்கு கட்டப்பெற்றது. சலனப்படத்தின் அடிப்படையைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனை நினைவூட்டும் வண்ணம் இப்பெயர் இடப்பெற்றது எனலாம். பின்னாளில், இந்த அரங்கு “சாமி தியேட்டர்” என்னும் பெயரில் இயங்கி இன்று மறைந்து போனது. மலையாளப் படங்களுக்கென்றே “சீனிவாஸ்”  திரையரங்கும்,  ஆங்கிலப்படங்களுக்கென்றே “ரெயின்போ”  திரையரங்கும் இயங்கின. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  கட்டுரை ஆசிரியர் கோவையில் 1964-ஆம் ஆண்டு, கல்லூரிப்படிப்புக்காகக் கோவை வந்தபோது, இந்த “சீனிவாஸ்”  திரையரங்கு முற்றிலும் ஆங்கிலப்படங்களைத் திரையிடும் அரங்காக மாறிவிட்டிருந்தது. அத் திரையரங்கு, திரையரங்குக்கான பெரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கவில்லை ஒரு சிறிய மாளிகை  (BUNGALOW) போன்றிருக்கும். ஒரு வீட்டுக்குள் அமர்ந்து படம் பார்க்கும் உணர்வே ஏற்படும். 1964-ஆம் ஆண்டில் அத்திரையரங்கில், ஆங்கிலப்பட இயக்குநர் ALFRED HITCHHOCK- இன்   “THE BIRDS”  என்னும் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்ததை மறக்க இயலாது.)

          வின்சென்ட் அவர்கள், பின்னர்  ”லைட் ஹவுஸ்”  (LIGHT HOUSE) என்னும் பெயரில் ஒரு திரையரங்கத்தைக் கட்டுவித்தார். கலங்கரை விளக்கத்தைக் குறிக்கும் இப்பெயருக்கும் கலங்கரை விளக்கத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. திரை அரங்கின் உட்புறக்கூரை முழுதும் வானத்தைப்போலக் காட்சிதரும் வண்ணம் நிலா, விண்மீன்கள்  ஆகியன விளக்கொளிகளின் மூலம் காணுமாறு அழகூட்டப்பெற்றிருந்தது. அரங்கின் பக்கவாட்டுப் பகுதிகளில் அமைக்கப்பட்ட சிலைகளின் மீதும் விளக்கொளி பட்டு மிளிர்ந்தது. எனவே, ‘விளக்குகளின் மாளிகை’  என்னும் பொருளில் திரையரங்குக்கு இப்பெயரிடப்பட்டது இன்று பலருக்கும் தெரியாது. அந்தத் திரையரங்கு பின்னாளில் “கென்னடி தியேட்டர்”  என்று இயங்கித் தற்போது இல்லாமலே மறைந்த பின்னும், திரையரங்கு இருந்த வீதி இன்றளவிலும் ‘லைட் ஹவுஸ்” வீதி என்றே வழங்கி வருகிறது.

          கோவை, திரைப்படக்கலையில் முன்னோடியாகத் திகழ்ந்தது பற்றி முன்னரே குறிப்பிட்டோம். கோவையில், ”பட்சிராஜா”, ”சென்ட்ரல்”  ஆகிய படப்பிடிப்பு நிலையங்கள் பெரிய வளாகங்களுடன் இருந்தன. பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். போன்ற பல நடிகர்கள் நடமாடிய நகரம் கோவை. கோவையைச் சேர்ந்த வேல்சாமிக் கவிராயர் என்பார், அக்காலத்தே சேலம் “மாடர்ன் தியேட்டர்ஸ்”   படப்பிடிப்பு நிலையத்தில் இயக்குநராய் இருந்தார். சிறப்பானதொரு நிலைக்கு உயர்ந்த அவர், பின்னாளில், அன்னார் ஒருவர் இருந்தார் என்ற தடயமே இல்லாமல் வீழ்ச்சியுற்றார்.

நாடகக் கலையும் கோவையும்:
          நாடகக் கலை என்பது அற்புதமான ஒரு கலை. அது, கோவையில் சிறப்புற்றிருந்தது. எம்.ஆர்.இராதாவின் நாடகங்கள் அரசியல் பரப்புரைக்காகப் பெயர்பெற்றவை. நாளும் நாடகத்தில், அரசியல் தொடர்பான சாடல்களுடன் உரையாடல்கள் அமைந்திருக்கும். முதல் நாள், குறிப்பிட்ட சாடலுக்காகக் காவல்துறையினர் நெருக்கடி அளித்தால், அடுத்த நாள் வேறொரு உரையாடல் மூலம் சாடல் தொடரும். நாடகம் ஒன்றே. கதை ’தூக்குத் தூக்கி’ யாக இருக்கும். ஆனால் அரசியல் உரையாடல்கள் இடை புகும். மக்களின் பேச்சு இலக்கியப்பேச்சல்ல.  நாடகப்பேச்சாகவே இருக்கும். டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவின் பணி குறிப்பிடத்தக்கது. டி.கே. சண்முகம் அவர்கள் கோவையில் “சண்முகா”  நாடக அரங்குக் கட்டிடத்தைக் கட்டுவித்தார். அரங்கின் மேடை பெரியதொரு மேடை. நாடகக் காட்சிகளில் மெய்யாகவே வண்டிகள் மேடையில் வரும். இரவோடிரவாக நாடகக் கதையை உருவாக்கிய நாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். அறிஞர் அண்ணாவும் அவ்வாறு எழுதிய “ஓர் இரவு”  நாடகம் இங்கு அரங்கேறியுள்ளது. சொற்பொழிவாளர் கவிஞர் புவியரசு அண்ணாவுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தார்.

          முன்னர்க் குறிப்பிட்டவாறு, கவிஞர் புவியரசு அவர்களும் ஒரு நாடக ஆசிரியரே. ஆண்டு முழுதும் இருபத்தைந்து நாடகங்களுக்குக் குறையாமல் நாடகங்கள் அரங்கேறும். நாடகங்களின் போட்டியும் பரிசுகளும் உண்டு. புவியரசு அவர்களின் ஒரு நாடகம் பதினாறு முதற்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. “சலங்கை” என்னும் பெயரில் புவியரசு அவர்கள் எழுதிய நாடகம் (தேவதாசிகள் பற்றியது) வாதங்களுக்கு இடமளித்ததும், பெரும் கண்டனங்களுக்கு உள்ளானதும் நிகழ்ந்தன. புவியரசு அவர்கள், பின்னர் நாடகப்போட்டியின் நடுவராக இயங்கியதும் உண்டு. “செம்மீன்”  திரைப்படப் புகழ் நடிகை ஷீலா, கோவையில் போத்தனூரில் வாழ்ந்தது, அவரைப் புவியரசு அவர்கள் நாடகத்துக்கு அழைத்தது ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். நாடகச் சம்பளமாக எழுபது ரூபாய்ப் பணமும், போக்குவரத்துக்கான குதிரைவண்டிக் கூலியாகப் பணம் ரூபாய் பதினைந்தும், முன்பணமாக முப்பது ரூபாய்ப் பணமும் ஷீலாவுக்குக் கொடுக்கப்பட்டது.

(கட்டுரை ஆசிரியர் குறிப்பு :  நடிகை ஷீலா, கோவையில் தங்கி நாடகங்களில் நடித்து வந்தார் என்று புவியரசு அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டபோது, கட்டுரை ஆசிரியரும் தம் பள்ளி நாள்களில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார். இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளின் காலம். கட்டுரை ஆசிரியரின் சொந்த ஊரான அவிநாசியில் அவரது சிற்றப்பாவான “அன்புவாணன்”  என்பவர் -  இடைநிலை ஆசிரியர் (SECONDARY GRADE TEACHER) பயிற்சிப்பணி  -  அவிநாசியில் இருந்த நாடக ஆர்வலர்களைக் கொண்டு “பொன்விலங்கு”  என்னும் புதுமைத் தலைப்பில் நாடகம் ஒன்றை ஆக்கி, அதில் நடிகை ஷீலாவைக் கோவையிலிருந்து வரவழைத்து நாடகம் நிகழ்த்தினார். அந் நாடகத்தை நேரில் பார்த்த நினைவும், நாடகத்தின் இடை நேரத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், டி.ஆர். இராமச்சந்திரனும் நாடகத்தைச் சிறிது நேரம் பார்த்துப் பாராட்டிவிட்டுக் கோவை நோக்கிப் பயணப்பட்டதைக் கண்ட நினைவும் கட்டுரை ஆசிரியருக்குப் பசுமைப் பதிவு. பொன்விலங்கு என்னும் புதுமைத் தலைப்பை முதலில் அறிமுகப்படுத்தியவர் அன்புவாணன் அவர்களே. பின்னாளில், இந்தத் தலைப்பில் நா.பார்த்தசாரதி அவர்கள் நாவல் ஒன்றை எழுதினார் என்பது நாம் அறிந்ததே.)

Avinashi Road

Now :

source:   https://www.quora.com/What-are-some-rare-pictures-of-Coimbatore


கோவை இன்று எவ்வாறு இருக்கிறது?
          படைப்பிலும் கலையிலும் எழுச்சிபெற்ற அந்தக் கோவை இன்று எங்கே? நூற்றுப்பத்து ஆலைகள் இருந்தனவே; அவை என்னவாயின?  எப்படி மறைந்தன? நெசவால் செழித்த, நெசவாளர்களால் உருவாக்கப்பெற்ற நகரம் இன்றைக்கு என்னவாயிற்று?  பெரியதொரு கேள்வி. விடை காண இயலவில்லை. இன்று, இரண்டும் கெட்டானாய் போய்க்கொண்டிருக்கிறது. நாசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை வேறு புலத்திலிருந்து மக்கள் பெயர்ந்து கோவைக்கு வருதல் நிகழ்ந்துகொண்டு வருகின்றது. கோவைக்கென்று ஒட்டுமொத்தமான கருத்து, தெளிவு என்பது காணப்படவில்லை. சொற்பொழிவாளர் நகைச் சுவையாகச் சொன்ன ஒரு கருத்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இன்றையத் திரைப்படத்துறையினர் கூறுவதுபோலத் திரைப்படங்கள் பற்றிய கோவை மக்களின் கணிப்பைப் புரிந்து கொள்ள இயலவில்லை. கோவை இன்று பெரியதொரு மருத்துவ நகரமாகத் திகழ்கிறது. உண்மை. ஆனால் மருத்துவச் செலவு?  எந்த ஒரு நாடு மருத்துவத்தையும், கல்வியையும் இலவசமாக வழங்குகிறதோ அந்த நாடுதான் மெய்யான “ஜனநாயக”  நாடு. பிரிட்டனும், ஜெர்மனியும் அத்தகைய நாடுகள்தாமே.

கோவை நாளை எவ்வாறிருக்கும்?
          நாளை என்பது எவ்வாறிருக்கும்?  நம் வீட்டில் செவிட்டுப் பிள்ளைகள் பிறப்பார்கள். நாம் உண்மையில் கால்களைக்கொண்டு நடக்கிறோமா?  நம் கால்களின் விரல்கள் மண்ணில் பதிகின்றனவா? இல்லை. நாளை, கால் விரல்கள் இல்லாப் பிள்ளைகள் பிறப்பார்கள். பயன்படுத்தாத விரல்களுக்குப் படைப்பு இருக்காதல்லவா? மக்கள், தனித்தனியே பறப்பார்கள்.

          அறம் இருக்காது. ஒழுக்கம் இருக்காது. அநியாயத்தை நியாயப்படுத்துவோம். கைப்பேசிகள் என்னும் செல்பேசிகள் நமது சாத்தான்களாய் மாறிவிட்டிருக்கும் காலம் இது. இவற்றால் நிச்சயம் நமக்கு நன்மை நிகழாது.

          முப்பது ஆண்டுகளுக்கு மேல் உலகம் இருக்காது; அழிந்து போகும். இதைக் கவிஞர் சொல்லவில்லை. மூளைப்பகுதியைத் தவிர உடம்பின் அத்தனை வெளி உறுப்புகளும் வளைந்து மடிந்து முடங்கிப்போன நிலையில், சிந்தனை மட்டுமே உயிரோட்டமாய், ஒரு நாற்காலியில் சுருண்டு கிடந்த ஒரு சிறந்த அறிவியல் மேதை -  அண்மையில் மறைந்து போனாரே - ஸ்டீபன் ஹாக்கின்ஸ் (STEPHEN HAWKINS) அவர் சொன்னது. உலகம் அழியும்; ஆனால் நாய்கள் சாகா.

முடிவுரை :
          மனிதனுக்கு மரணம் அருகில் இருக்கும்போது மனிதம் இருக்கும்.





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.

No comments:

Post a Comment