Showing posts with label ஆர்.பாலகிருஷ்ணன். Show all posts
Showing posts with label ஆர்.பாலகிருஷ்ணன். Show all posts

Sunday, February 21, 2021

தாய்மொழி என்ற தாய்ப்பால்

 தாய்மொழி என்ற தாய்ப்பால்


--ஆர். பாலகிருஷ்ணன். இ. ஆ. ப. 



"ஆட்சி மொழி"

அது
அரண்மனையின் மொழி.
ஆட்டிப் படைக்கும்
ஆதாயம் கொடுக்கும்.
தூக்கி விடும்.
சில நேரம்
தொலைந்தும் விடும்.
பாரசீகம் எங்கே?
---
"ஆலய மொழி"

பூசாரிகள்
சாமியிடம்
மறைவாகப் பேசும்
மறைமொழி.
தைரியம் கொடுக்கும்.
தட்சணை கேட்கும்.
"எந்த மாவட்டத்தில்
எல்லோரும் பேசினார்கள்?"
என்றால்
"சாமியே பேசினார்" என்று
சரிக்கட்டும்..
---
"வணிக மொழி"

ஏற்றுமதி இறக்குமதியைப்
பொறுத்தது
ஏற்ற இறக்கம்.
எடை போடும்.
அளந்து பேசும்.
மகசூலைப் பொறுத்தது
மவுசு.
விலை போனால் வெளிச்சம்.
உண்மையில்
வியாபாரிகள் தான்
பன்மொழியாளர்கள்.
பற்று வரவைப் பொறுத்தது
பற்று.
சிந்துவெளி மொழி எது?
---
"தாய் மொழி"

தாய் மொழி
என்பது
உண்மையில்
ஒரு
தனிமொழி அல்ல.
தாய்ப்பால் என்பது
தனியான
பால் வகையா?
ஆவின் கன்றுக்கு
ஆவின் பாலென்ன
'ஆவின்பாலா'?
அதன்
அன்னையின் பால்...
தாய் மொழி
என்பது
தாய்ப்பால் போலவே
குருதியின் கொடை.
அது நம்
குரல்வளை.
காதலர் தினம்
பார்த்தா
காதல் வரும்?
ஆனால்
தாய்மொழியே
ஆட்சி மொழியாகவும்
ஆலய மொழியாகவும்
வணிக மொழியாகவும்
வளர்ச்சி பெறும்போது தான்
நிறைவு வரும்!




Thursday, January 17, 2019

வரலாற்றுக்கான உரிமை...


——  ஆர்.பாலகிருஷ்ணன், இஆப



"வரலாறு கிடக்கிறது
அது என்ன 
வாழ்வாதாரமா?" என்று
கடந்து செல்லலாம்
கண்டு கொள்ளாமல்...

ஆனால் அப்படி
கடந்து செல்லவேண்டாம்.

வரலாறு
வாழ்ந்ததற்கான ஆதாரம்...

யார் யாரோ 
அரியணை ஏறிய தேதியும்
அமரரான‌ தேதியும்
அவர்களின்
அந்தப்புரத்து மக்கள் தொகையும்
அல்ல நமது அக்கறை.

இது நமது வரலாறு.
நமக்கான வரலாறு.
வேர்கள் பற்றிய
விசாரணை.

எத்தனை மலைகள்
ஏறி‌ இறங்கினார்கள்
பாரியின், ஓரியின்
முன்னோர்கள்..

எத்தனை‌‌ தலைமுறைகளின்
கதைகளை 
கருவில் வைத்து 
கடத்திவிட்டார்கள் 
அவ்வைப் பாட்டிகள்...

இதோ 
நோகாமல் நொங்கு
எடுக்கிறார்கள்
போலி வரலாற்றுப்
பொய்த் தரகர்கள்.

எழுதி "வைத்தது" தான்
வரலாறு என்றால்
23 ஆம் புலிகேசிகள் தான்
எப்போதும் நாயகர்கள்.

இதோ.
மொகஞ்சதாரோவின்
'நடன மங்கை' யின்
வளையல் கைகளில்..
இன்னும் வாசிக்கப்படாத
"வரலாற்றின்"‌வசீகரம்.

கீழடியின் 
ஆழ அடுக்கில் 
அகழ்ந்தெடுத்த‌ பானையில்
இன்னும்
மிச்சம் இருக்கிறது 
பொங்கலின் வாசம்.

இது 
வெறும் பெருமை அல்ல
நமது
வரலாற்றுக்கான உரிமை...



source: https://en.wikipedia.org/wiki/Dancing_Girl_(sculpture)#/media/File:Dancing_girl.jpg


— ஆர்.பாலகிருஷ்ணன், இஆப.,  புவனேஸ்வரம்.

Saturday, January 5, 2019

சிந்துவெளி கொற்றவை





படைப்பில் தன்னை
பார்வையாளனாக மட்டும்
ஆண் உணர்ந்து
பயந்திருந்த காலம்.
வேட்டையாடித்
திரிந்தவன்..
பிறப்பின் ‌ரகசியம்
புரிந்தவன் அல்ல.
காட்டில் "இனிஷியல்"
வைத்துத் திரிந்தது
எந்தப் புலி...?
பெண்ணே
ஆணையும் பெற்றாள்
என்பதில்
ஆரம்பித்தது அவன் அச்சம்.
மாதக்குருதி
அவனை‌ மட்டுமல்ல
அவளையும் கூட
பயமுறுத்தியது..
அது ஒரு மாயம் போல
வந்து மறைந்தது.
கர்ப்பிணிகளின்
பெருத்த வயிறு
படைப்பு நிகழ்த்தும்
பானையாய்..
பனிக்குடம் உடைத்து
ரத்தச் சகதியில்
விழித்து அழுதது
தொப்புள் கொடி தாங்கி
இன்னொரு தலை...
கொற்றவையாய்
கொல்லிப்பாவையாய்
அணங்காய் துணங்காய்
ஆடித்தீர்த்தாள் அன்னை.
சிந்துவெளியில்
அவள்
எதைத் தொலைத்தாள்
கீழடியில் எதை மீட்டாள்?
கண்ணகி முலை அறுத்தாள்
காரைக்கால்
முலை தொலைய
வரம் கேட்டாள்.
கேரளத்தில்
இன்னொருத்தி
முலையறுத்துக் கொடுத்தாள்
வரித்தொகையாய்.
இவை.
ஆறும் சினம் அல்ல
என்று
அடிக்கோடிட்ட
ஆறாச் சினம்.
இதோ..
சேரர் பூமியில்
மகளிர் எழுப்பிய
மதிலில்
யுகங்களுக்கான
கேள்விகளும் ‌பதில்களும்..
கொற்றவை சிரித்தாள்
கொல்லிமலையில்...
பால் கொடுத்த புலியின்
பக்கத்தில் நின்று...
ஆர்.பாலகிருஷ்ணன்
05/ 01/ 2019