Showing posts with label முனைவர். ஒளவை அருள். Show all posts
Showing posts with label முனைவர். ஒளவை அருள். Show all posts

Monday, January 10, 2022

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே !

முனைவர் ஔவை ந. அருள்
இயக்குநர் (மொழிபெயர்ப்பு)
தலைமைச்செயலகம்



நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து சிறந்து பொலிவதற்கு அதன் தொன்மைத் தன்மையும் முதன்மையான காரணமாகும். ஒரு மொழியின் தொன்மையைப் போல அதன் இளமையும், எளிமையும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

இங்கு, இளமை என்பது, இன்றைய சூழலுக்கும் அம்மொழிக்கும் இடையேயான உயிரோட்டம் நிறைந்த உறவையே குறிக்கிறது. இதன் அடிப்படையில், தொன்மை, இனிமை, வளமை, செம்மை, வியன்மை போன்ற எண்ணற்ற சிறப்புகளை ஒருங்கேயுடைய தமிழ் மொழியை என்றும் குன்றாத இளமை மொழியாகவும் மிளிரச் செய்வதற்கு, சொல்லாக்கம் மிகவும் இன்றியமையாததாகிறது.

தமிழில் எழுத்துகளின் வகைகள், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற பாகுபாடு யாவுமே திட்டமிட்டு மரபாக்கப்பட்டன. குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பவை தமிழுக்கு உரிய மரபு தான். நாய்க்குட்டி, கோழிக்குஞ்சி என்று இன்றும் கூறுவதற்கு மரபே அடிப்படையாகும்.

ஆண் யானையைக் களிறு என்றும், பெண் யானையைப் பிடி என்றும் கூறினர். மேற்புறத்தில் வலிமை உடைய மூங்கிலைப் புல்லினம் என்றனர். உட்பகுதியில் வைரம் கொண்டதை மரம் என்றனர்.  தாழை மடல், தென்னை ஓலை, வாழை இலை என்று கூறியதற்கும் மரபே அடிப்படையாகும்.  கண்ணி, தெரியல், தொங்கல், தொடை, கோதை என்று காரணத்தின் அடிப்படையிலான மாலையைப் பற்றிய சொற்கள் பிறகு மரபாக அமைந்தன.

ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் வளர்ச்சியடைந்துள்ள மொழியை அறிவியல் மொழியாகவும், நாளும் மாறிவரும் புதிய உலகிற்கான வளமொழியாகவும் வன்மை பெறச் செய்வதற்குச் செழுமையான சொற்களஞ்சியம் அம்மொழியில் இருத்தல் வேண்டும். பண்டைய காலத்திலிருந்தே, செழுமையான சொற்களைத் தமிழர்கள் உருவாக்கினர்.
            “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
            சொல்லி னாகும் என்மனார் புலவர் "
                                - (தொல். பெய.2)
எனச் சொல்லின் பொருட்தன்மையைத் தொல்காப்பியர் விளக்கினார். பொருண்மையும் சொன்மையும் தெரிதலோடு, ஒவ்வொரு சூழலுக்கும், பண்புக்கும், இடத்திற்கும், பயன்படும் முறைக்கும் ஏற்றவாறும் அக்காலத் தமிழர்கள் சொல்லாக்கம் செய்துள்ளனர்.

எடுத்துக்காட்டாகச் சோற்றை “அவிழ் பதம்" எனக் குறித்தனர்.  அவிழ்தல் என்பதற்கு, மலர்தல், விரிதல் எனப் பல பொருளுண்டு.  சோறு, அரிசி எனும் நிலையிலிருந்து மாறி, நீரில் பதமாக வெந்து மலர்வதை அவிழ்பதம் என அழகாகச் சொல்லாக்கம் செய்துள்ளனர்.  தமிழர்களின் சொல்லாக்கத் திறனுக்கு இதுபோன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை முன்வைக்கலாம்.

ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியும் அறிவியல் புனைவுகளும் மிகுந்து காணப்படுகிற இன்றைய சூழலில் அழகிய தமிழ்ச்சொற்களை நாம் மேலும் உருவாக்க இயலுமா ?  அவ்வாறு உருவாக்கினாலும், அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஏலுமா ?  ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல் ஓரிரு வாரங்களில் வழக்கத்தில் வந்துவிடுகிறது. செய்தி ஊடகங்களும், சமூகத் தொடர்பியங்களும் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விடுகின்றன,

ஆனால் தமிழ்ச்சொற்கள் வழக்கத்திற்கு வர ஆண்டுள் பல காத்திருக்க வேண்டியுள்ளது. சில சொற்கள் “அகராதி" அளவிலேயே நின்று விடுகின்றன. மின்சாரம் என்ற சொல் நடைமுறைக்கு வரவே  24 ஆண்டுக் காலம் கழிந்ததாகக் கூறப்படுகிறது.

'கண்டேன் கற்பினுக்கணியினை' என்று தன்  சொல்லால் சீதையின் பெருமையை உணரச் செய்த அனுமனைச் "சொல்லின் செல்வன்" என்று கம்பர் அழைத்தார். மொழியியலின் பிற பிரிவுகளைக் காட்டிலும் இலக்கணத்துடன் நெருங்கிய தொடர்புடையது சொல்லாக்கம்.

பயிருடன் சேர்ந்து வளரும் களையை நீக்கப் பயன்படும் கருவிக்குக் களைக்கொத்தி என்று பெயர். பேசும் வழக்கில் களை என்ற சொல்லில் இருக்கும் 'ஐ' எனும் உயிர் ஒலியும் கொத்தி எனும் சொல்லில் இருக்கும் 'ஓ' எனும் உயிர் ஒலியும் மயங்கிக் களாத்தி என்ற புதிய சொல் உருவாகியது.  

புதிதாக உருவாக்கப்படும் சொல்லானது, பொருள் மாறாமலும், சுருக்கமாகவும், இலக்கண மரபு பிறழாமலும் இருக்க வேண்டும். ஆனால், அண்மைக் காலமாகச் சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ள சில சொற்கள் இலக்கண மரபை மீறியுள்ளதாகவே தெரிகிறது.  எடுத்துக்காட்டாக, " Eraser " எனும் ஆங்கிலச் சொல்லுக்கு " அழிப்பான் " எனும் தமிழ்ச்சொல் தற்போது வழக்கத்தில் உள்ளது.  ஆனால், அஃறிணைப் பொருளுக்கு 'அன்' விகுதி சூட்டப்படலாமா ?  புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும் காரணத்தால், இச்சொல் விரைவாக வழக்கத்தில் வந்துவிட்டது.  'Bicycle' எனும் சொல்லுக்கு " ஈருருளி " என்று அழகாகச் சொல்லாக்கம் செய்யப்பட்டிருப்பினும், " மிதிவண்டி " என்ற சொல்லே வென்றது.

பிரேசில் நாட்டில் விளைந்த காப்பிக்கொட்டை ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருந்த காரணத்தால், பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பியைக் " குளம்பி " எனும் சொல்லால் குறித்தார்.   ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் அச்சொல் இன்றளவும் பலரைச் சென்றடையாதது வருத்தத்திற்குரியதே.

நாளும் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிக்கும் இக்காலத்தில், அவற்றோடு தொடர்புடைய புதிய சொற்களை உருவாக்குவது மொழியின் வளர்ச்சிக்கான இன்றியமையாப் பணியாகும். அதே வேளையில், நம் முன்னோர்கள் உருவாக்கிய அழகிய தமிழ்ச்சொற்களை இன்றைய  தலைமுறையினரிடம் கொண்டு செல்வதும் நம் பெருங்கடமையாகும்.  

ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, அம்மொழியில், தொடர்ந்து புதிய சொற்கள் அவ்வப்போது உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய சொற்களை உருவாக்கும் பணியில், மூத்த தமிழறிஞர்களோடு இன்றைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் பங்கேற்று இலக்கண நெறி மாறாமலும், தமிழின் சுவையும் பொருளும் குன்றாமலும் நாளும் புதிய கலைச்சொற்களைச் செம்மொழியாம் தமிழ்மொழிக்குச் சேர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் சொல்லாக்கப் பணியைத் தொழுது மேற்கொள்வோம். தமிழின் சிறப்பைப் பாரெங்கும் பறைசாற்றுவோம்.



நன்றி:  
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வெளியீடான
2021  திசம்பர்த் திங்கள் மின்னிதழ்  -  "சொல்வயல்" 

-----



Wednesday, January 27, 2021

அழகு பொருந்திய பாமாலை


-- முனைவர்.  ஒளவை அருள்


பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தில் பன்னிரண்டாது நூலாக தித்திப்புப் பாடல்கள் நிரம்பிய திணைமாலை நூற்றைம்பதிலிருந்து  ஒருசில பாடல்களின் சுவை அறிவோம்…

திணைமாலை நூற்றைம்பது- அறிமுகவுரை

‘திணை’ என்ற சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்பது ஒரு பொருள்.  இச்சொல்லை, திண்+ஐ என்று பிரிக்கலாம்.  நிலைமொழியாகிய ‘திண்’ என்பதற்கு, ‘உறுதி’ என்று பொருள்.  வழிமொழியாகிய ‘ஐ’ என்பதற்கு, ‘அழகு’ என்று பொருள்.  (ஐ என்பது, இரண்டாம் வேற்றுமை உருபாகவும், அசைச் சொல்லாகவும், இடைச்சொல்லாகவும் கொள்ளப்படும்).  இங்குத் ‘திணை மாலை’ என்பதற்கு ‘உறுதியுடைய அழகு பொருந்திய பாமாலை’ என்று கொள்ளலாம்.  நூற்றைம்பது என்பது, எண்ணிக்கையைக் குறிக்கும்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையெனும் ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் ஒழுகலாற்றை வகுத்துத் தொகுத்துக் கூறுவது இந்நூல்.  கீழ்க்கணக்கு நூல்களில், அகநூல்களாக ஆறு உள.  அவற்றுள் நான்கு நூல்கள், ‘திணை’ என்ற பெயரோடு அமைந்துள்ளன.  அவற்றுள்ளும் மிகுதியான பாடல்களை உடையது இந்நூல்.

ஒழுக்கம், உரிப்பொருள் எனப்படும்.  குறிஞ்சி-புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.  முல்லை-இருத்தல் இருத்தல் நிமித்தமும், மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.  இவற்றின் அடிப்படையிலேயே பாடல்கள் அமைந்துள்ளன

பாடல் 132-ன் மூன்றாமடியில் நான்காஞ்சீரும், பாடல் 146 -ன் முதலடியில் இரண்டாஞ்சீரும் சிதைந்துள்ளன.

இந்நூலின் ஆசிரியர், ‘கணிமேதாவியார்’.  ஏலாதி என்னும் நூலின் ஆசிரியரும் இவரே.  ‘கணிமேதை’ என்றும் இவரைக் கூறுவர்.  இவர், சோதிடக்கலை வல்லவரெனவும், சமணச் சமயத்தாராகக் கொள்ளத்தக்காரெனவும், ‘ஏலாதி’ அறிமுகவுரையில் கண்டனவே,


குறிஞ்சித்திணை
(தலைமகளும் தோழியும் ஒருங்கிருந்த வழிச்சென்ற, தலைமகன், தோழியை மதியுடம்படுத்தது)
            நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
            உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் – பிறையெதிர்ந்த
            தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ
            ஏமரை போந்தன ஈண்டு. (1)

மணம் மிகுந்த சந்தன மரங்களை வேருடன் வெட்டியெடுத்துச் சீரமைத்து, நலமிகு நாளதனில், பருவமழை பெய்யுங்காலத்தையும் எதிர்கொண்டு வித்திட்டதனால், முதிர்ச்சியடைந்த திணைப்பயிர் விளைந்துள்ள மலைப்புனத்தைக் காவல் செய்யும் தலையணி வகையினை நிகர்க்கும் தாமரை மலர் போன்ற அழகு முகத்தையும், நீண்டு வளர்ந்துள்ள கூந்தலையும் பெற்றுள்ள மெல்லிய நீண்டு வளர்ந்துள்ள கூந்தலையும் பெற்றுள்ள மெல்லியரே!  இப்போது இவ்விடத்தில் திணைப்புனம் காவல் செய்வதைக் காண்பீராக!

 
(இராக்குறி வேண்டிய தலைமகளுக்குத் தோழி, மறுத்துச் சொல்லியது)
            கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து
            நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் – முறிவளர்
            நன்மலை நாட! இரவரின் வாழாளால்,
            நன்மலை நாடன் மகள். (7)

தலைவன், தலைவியைப் பகற்பொழுதில் காணவரின், ஊரானது அலர் தூற்றும்.  அடுத்தபடி, இரவுப்பொழுதில்தான் காணவர வேண்டும்  அந்தப் பொழுதையும் ஆராய்ந்து பார்ப்பின், காட்டில் ஐந்து தலை நாகங்களும், யானைகளும் நிறைந்துள்ளன.  பதினாறடி பாயக்கூடிய வேங்கைப் புலிகளும் திரியும்.  ஆகையால் தலைவனைத் தோழி, இரவில் வர வேண்டாமெனக் கூறுகிறாள்.  இரண்டு பொழுதுகளும் வேண்டாமென்றால், என்னதான் செய்வது ?  எனவே, தலைவியை விரைந்து மணம் செய்துகொள்ள வருமாறு கூறுகிறாள்.

 
(தோழி, படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது)
            பனிவரைநீள் வேங்கை பயமலைநன் நாட
            இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் – முனிவரையுள்
            நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
            ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று. (27)

‘வேங்கை மரங்கள் சூழ்ந்த பனிபடர்ந்த மலை நாட்டுக்குத் தலைவனே!  இதுவரை தலைவியை மணம் செய்து கொள்ளாமல், களவுக் காலத்தை நீளச் செய்தாய்.  இனியும் அவ்வாறு நீளச் செய்ய மாட்டாய் என்றெண்ணி உனக்குச் சொல்வேன்.  நீ இந்த மலைச்சாரலில் வந்து செல்வதை என் அன்னை அறிந்தனள்.  இனியும் தலைவி, இற்செறிப்புக்கு ஆளாக வேண்டா.  எனவே, விரைவாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  இல் வாழ்வை மேற்கொண்டு, இருவீரும் துன்பற்ற இன்ப வாழ்வை மேற்கொள்வீராக! ‘  என்று, தோழி கூறினாள்.

 
நெய்தல் திணை
(தலைமகனைத் தோழி, வரைவு கடாயது)
            திரைபாக னாகத் திமில்களி றாகக்
            கரைசேர்ந்த கானல் படையா – விரையாது
            வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள்
            ஆய்ந்து வரைதல் அறம். (52)

நெய்தல் நிலத் தலைவனாம், கடற்கரைக் கானலைச் சேர்ந்தவனுமாகிய தலைமகன், திருமணம் செய்து கொள்வதை நீட்டித்து வருகின்றான்.  தலைவியைச் சந்திக்கப் பகலின் வருவதாயின், ஊரார் அலர் தூற்றுவர்.  இரவில் வருவதாயின், இடர்ப்பாடுகள் பலவும் உண்டு.  எனவே, அவனைத் தலைமகளின் தோழி எதிர்கொண்டு, நல்ல நாளொன்றைத் தேர்ந்தெடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றாள்.  அவ்வாறு வரைவினை மேற்கொள்வதே அறமுமாகும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றாள்.


(‘இப்பொழுது வாரல்!’ என்று, வரைவு கடாயது)
            பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
            இரவரின் ஏதமும் அன்ன – புகஅரிய
            தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே
            ஏழை நுளையர் இடம். (59)

இரவுக் குறியிலும், பகற்குறியிலுமென இரண்டு குறியிடங்களிலும் வரவேண்டா என மறுத்துரைப்பது இடம்பெற்றுள்ளது.  தலைமகன் பகற்பொழுதில் வருவதாயின், ஊர்மக்களின் பழிச்சொல் உண்டாகும்.  அதை விடுத்து இரவுப் பொழுதில் வருவதாயின், பகற்பொழுதைப் போன்றே துன்பங்கள் பலவும் உண்டாகும்.  பகற்பொழுதின் பழிச்சொல்லானது, தலைமகனுக்கும், தலைமகளுக்குமானது.  இரவுப்பொழுதின் இடர்ப்பாடுகள், தலைமகனுக்கானது.  மேலும், ஓயாது அலைவீசிக் கொண்டிருக்கும் நெய்தலங்கானத்தில், தாழைகளோ மிகவும் செறிவாக மண்டிக்கிடக்கும்.  வந்து செல்வது, மிகவும் அரிய செயல்.  எனவே, ‘இனிமேலும் வரவேண்டா.  வரைந்து கொள்வதே வேண்டற்பாலது’ என்று தோழி அறிவுறுத்தினாள்.


பாலைத்திணை
(பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது)
            உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன்
            வெருவிவீந்து உக்கநீள் அத்தம் – வருவர்
            சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
            இறந்துகண் ஆடும் இடம். (80)

கண் துடித்தல் என்பது, ஒருவகைச் சகுனமாகும்.  மகளிர்க்கு இடக்கண் துடிப்பதென்பது, நன்மையைச் செய்யுமென்பர்.  நெடிய பாலை நில வரியாகப் பொருள்தேடச் சென்ற தலைமகன், இன்றேனும் வருவானென்று தலைவி, நம்பிக்கை கொள்கின்றாள்.  அதனைக் குறிக்கும் சகுனமாகத் தலைவியின் இடக்கண் துடிக்கின்றது.  இதனைத் தோழியானவள், வேலைப் பழிக்கின்ற விழிகளைக் கொண்ட தலைமகளிடம் கூறி, பருவங்காட்டி வற்புறுத்தினாள்.


(தலைமகள் இற்செறிப்புக் கண்ட பின்னை, அவள் நீங்கிய புனங்கண்டு, ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது.  சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் சொல்லிய தூவம் ஆம்)
            கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர்
            நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் – சென்றாளுக்(கு)
            என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாட்(கு) என்னுரைத்தீர்க்(கு) என்றுரைத்தாள்
            மின்னுரைத்த பூண்மிளிர விட்டு? (81)

சுரத்திடைச் சென்ற செவிலித்தாய், தலைவியின் பொருட்டாக, ஆங்குள்ள கொன்றை, குருந்தம் ஆகிய மரங்களையும், முல்லைக் கொடியையும் எதிர்கொண்டு பின்வருமாறு வினவுகின்றாள்.  “தலைவியைக் காட்டி, கண்டு, நீங்கள் என்னதான் சொன்னீர்கள்?  அதற்குத் தலைவியும் என்னதான் சொன்னாள்?  மீளவும் அவளிடம் நீங்கள் என்னதான் சொன்னீர்கள்?  அதன் பிறகும் தலைவி என்னதான் சொன்னாள்?”

மரங்கள் தலைவியைப் பார்த்து, “எங்களையெல்லாம் விட்டுவிட்டுச் செல்லத் துணிந்துவிட்டாயா?” என்றன.  தலைவி மரங்களைப் பார்த்து, “உங்களைப் பிரிந்து செல்லத் துணியவில்லை.  தலைவனிடம் உடன்போக்கு மேற்கொள்கின்றேன்”  என்றாள்.  மரங்கள், “உன் தாய் தேடிவரின், என்ன சொல்வது?”  என்றன.  தலைவி, “இவ்வழியாகத் தான் தலைவி உடன்போக்கு மேற்கொண்டாள்.  அவள் மகிழ்ச்சியுடன்தான் காணப்பட்டாள்.  நீங்களும் வருந்தாமல் வீடு திரும்புங்கள்” என்றாள்.  இவ்வாறு நடந்திருக்குமென்பது, செவிலித்தாயின் கற்பனை.


முல்லைத்திணை
(பருவங்கண்டு அழிந்த கிழத்தி, தோழிக்குச் சொல்லியது)
            வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
            வண்டினம் வாய்வீழா மாலையும் – வண்டினம்
            ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
            வாராத நாளே வரும். (101)

தலைமகன் தோழியை நோக்கி, ‘தேன்வண்டுக் கூட்டம், கவர்ந்து கைப்பற்றிக் கொள்ளாத புல்லாங்குழல் என்பதன் மூலம் அல்லி மலரையும், வாய் மடுக்காத மாலைப் பொழுதைச் சுட்டாத மலர் மாலையையும் குறித்தன. வௌவாத ஆம்பல், வாய் வீழா மாலை, ஆராத பூந்தார் என்பனவற்றுள், வௌவாத, வீழா, ஆராத என்பவை, எதிர்மறை முகத்தான் கூறப்பட்டன.  அவற்றைப் போலவே, ஈற்றடியை ‘வாராத நாளே வரும்’ என்று, தலைவியின் உருக்கத்தை உணர்த்தியுள்ளார் புலவர்.  ‘வண்டினம்’ என்பது, மூவிடங்களில் வந்து நரே பொருள் தந்தமையால், ‘சொற்பொருள் பின்வருநிலை’ யாகும்.  ‘வௌவாத’, ‘வாய் வீழா’, ‘ஆராத’ என்பன, ‘பொருள் வருநிலை’ யாகும்.


மருதத்திணை
(பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது)
            மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை
            எங்கட்(கு) உரையாது எழுந்துபோய் – இங்கண்
            குலம்காரம் என்(று(அணுகான் கூடும்கூர்த்(து) அன்றே
            அலங்கார நல்லார்க்(கு) அறை. (127)

‘மென்மையான கண்ணோட்டமுடைய வளமையான மருதநிலத் தலைவன், தன்னுடைய உள்ளத்துணர்வினை எங்களிடம் சொல்லாமல் எழுந்து போனதுடன், இவ்விடத்தில் குடிகொண்ட சினமென்றெண்ணி, எம்மை நெருங்காதவனானான்.  அச்செயலானது, அளவற்ற அதிசயமானதென்ற, சிறப்புடைய தலைவனுக்கு எடுத்துரைப்பாயாக!’ என்று, பாணனிடம் தலைவி கூறினாள்.

            பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
            மாலையாழ் ஓதி வருடாயோ? – காலையாழ்
            செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
            நையும் இடமறிந்து நாடு. (133)

‘பாலைப் பண்ணை இசைக்கும் பாணனே! முன்பு உன் தலைவனுக்கு அந்திவேளை யாழிசைத்து, வருடியதில்லையோ?  வைகறையில் யாழிசைக்கும் இடத்தை அறியமாட்டாய் போலும்!  இப்போது வந்துள்ள உனது பொய்மைச் சொல்லுக்கு, எங்கே இரங்குவாரோ, அந்த இடத்தை அறிந்து கொண்டு, அங்குச் செல்வாயாக!’ என்று, தலைவனுக்காகத் தலைவியைக் காண வந்த பாணனிடம் தலைவி மொழிந்தாள்.

--



Wednesday, September 30, 2020

மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்!

மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்! 

-  முனைவர் ந. அருள்  
 
இந்நாளில் ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன. ஆண்டுதோறும் சாகித்திய அகாதெமி இருபத்தியிரண்டு மொழிகளில் படைப்பு நூல்களுக்குப் பரிசளிப்பதோடு அந்த நூல்களுள் வரவேற்கப்பெறும் நூல்களை அறிவுரைஞர் குழு மதிப்பிட்டு இந்திய மொழிகளுக்குள்ளே பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் செய்து ஊக்கம் தருகின்றது.

"மொழி', "பெயர்ப்பு' எனும் இருசொற்களின் இணைவில் தோன்றுவது மொழிபெயர்ப்பு. "மொழியென்பது பேசுவோரின் குரலில் பிறந்து பொருளுடைய அறிகுறிகளாக அமைந்து கேட்போரால் பொருள் உணரப்படும் ஒலிவகை எனலாம். அது பெரும்பாலும் பேசுவோர், கேட்போர் ஆகிய இரு திறத்தாருக்கு இடையே நிகழ்ந்து ஒருவர் உணர்ச்சியையோ கருத்தையோ மற்றவர் உணர்வதற்குப் பயன்படுவது' என்று பேராசிரியர் மு. வரதராசனார் மொழிபெயர்ப்புக்கு விளக்கம் தருகிறார்.

பெயர்ப்பு, பெயர்த்தல், பெயர்ச்சி என்பன பொருள் தொடர்புடைய சொற்களாகும். 

பொது நிலையில் மூலநூலின் முழு உணர்வினையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும், அதிகப்படுத்தாமலும், மாற்றாமலும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலை உண்மையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம். 

ஆயின், "கூட்டியும், குறைத்தும், சுருக்கியும், விரித்தும் பெயர்த்து அமைப்பதையும் மொழிபெயர்ப்பாகக் கொள்வாரும் உளர்' என்று அறிஞர் மு. கணபதிப் பிள்ளை  "மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்' என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வண்ணமே ஒரு மொழியின் கருத்துகளை மற்றொரு மொழியில் உணர்த்தல் எனும் நோக்கில் மொழிபெயர்ப்பில் இம்மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்றனர் எனலாம். மற்றும் பொதுவாகப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் மொழிபெயர்ப்பாளரின் கருத்துக்கு ஏற்பக் கூடியும் குறைந்தும் வருதலும் இம்மரபினை ஏற்றுக் கொள்கின்றனர் என்ற கருத்துக்கு இடந் தருகிறது.  

உடனடி மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுணுக்கமான கலையாகும். சில வேளைகளில் சிந்திப்பதற்கு நேரமின்றி மிக விரைவாக மொழிபெயர்க்க வேண்டுவதனால் மொழிபெயர்ப்பாளர் இருமொழிகளிலும் மிகத் திறமையானவராக இருப்பது தேவையானதாகும். இங்கு மூல மொழியினைக் கூட்டியோ குறைத்தோ மாற்றியோ மொழிதற்கு வாய்ப்பில்லை. 

மூலமொழியின் கருத்தினின்று மொழிபெயர்ப்பாளர் மாறுபடின் மொழிபெயர்ப்பாளரின் அறியாமையைத்தான் உணர்த்தும். ஒருவர் கருத்தை மற்றொருவர் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இடையிலுள்ள மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்து உதவ வேண்டும் என்பதுதான் உடனடி மொழிபெயர்ப்பின் நோக்கமாகும். தன் விருப்பிற்கு மொழியும் உரிமை மொழிபெயர்ப்பாளர்களுக்கு இல்லை.

மூலத்தை வென்ற மொழிபெயர்ப்பு இது என்று கூறும்படியாக எதுவும் இல்லை. பொதுவுடைமைத் தந்தை காரல் மார்க்சின் "மூலதனம்' மலையாளத்தில் நாற்பது மொழிபெயர்ப்புகளும் தமிழில் எட்டு மொழிபெயர்ப்புகளும் இந்தியில் ஒன்பது மொழி பெயர்ப்புகளும் வந்த பிறகும் கூட வாகைசூடிய மொழிபெயர்ப்பு என்று எதுவும் இல்லை. "ஊசியின் காதில் ஒட்டகம்  நுழைவது' என்ற விவிலியத் தொடர் ஒரு பிழையான மொழிபெயர்ப்பு. இப்படிப் பிழையான மொழிபெயர்ப்புகள் பல நிலைத்து விட்டன.

மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெற்ற வெற்றியை வேறு எவரும் பெற்றதில்லை. "எனது நூல்கள் மராத்திய மொழியில் விற்பனையானதை விட, தமிழின் மொழிபெயர்ப்பு நூல்கள்தான் அதிகம் விற்பனையாகி மாபெரும் வெற்றி பெற்றன' என்று வி.எஸ். காண்டேகர் மனமுருகி எழுதினார்.

இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் "விவிலியம்' மொழிபெயர்க்கப்பட்டது. 1774}இல் ஜே.பி. பாப்ரிஷியஸ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டார். 1874}இல் தலைமைச் செயலக மொழிபெயர்ப்பாளர் வி. விசுவநாதப் பிள்ளை ஷேக்ஸ்பியரின் "வெனீஸ் வர்த்தகன்' நூலை முதலில் தமிழில் மொழி
பெயர்த்தவராவார். 

மொழிபெயர்ப்பு என்பது சிக்கலுடையது என்ற கருத்திலேயே மூலநூலின் பொருண்மையை முழுவதுமாக எடுத்து மொழிவது பற்றிக் கம்பர் "வையம் என்னை இகழவும் மாசு எனக்கு எய்தவும் இது இயம்புவது யாது எனின், பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே' என்று குறிப்பிட்டார்.

புரட்சிக் கவிஞரின் "மாந்தோப்பில் மணம்' என்ற பாடல் மாந்தோப்பின் நிழலில் நிகழ்ந்த காதல் மணத்தைக் குறிக்கும். இதை "நறுமணம்' என்று மொழி பெயர்த்து விட்டார்கள். பல்லவர் காலத்தில் பெருந்தேவனார் மகாபாரதத்தினைத் தழுவி "பாரத வெண்பா' என்று மொழிபெயர்த்தார். வில்லிபுத்தூராரும் நல்லாப் பிள்ளையும் மகாபாரதத்தைத் தழுவி தமிழில் இயற்றினர்.

நூற்றுக்கு நூறு கல்வி வளமும் நூற்றுக்கு எண்பது பேர் இருமொழிப் புலமையும் நூற்றுக்கு எழுபது பேர் உலகளாவிய சிந்தனையும் பெற்றால் அயல்மொழிகளின் மொழிபெயர்ப்புச் செல்வாக்குப் பெறலாம். கதை, நெடுங்கதை, வாழ்க்கை வரலாறு, பயணக் குறிப்புகள் இந்தக் கணக்கில் சேரும். 

சுத்தானந்த பாரதியார் மொழியாக்கம் செய்த "ஏழை படும் பாடு' மிகப் பெரிய ஆர்வத்தை எழுப்பியது. பின்னர் அது திரைப்படமாகவும் வந்தது. வங்கக் கதைகள் பெற்ற வெற்றிக்காக அக்காலத்தில் கதை தேடி கல்கத்தா செல்லாத இயக்குநர்களே இல்லை.

தமிழக அரசு ஆண்டுதோறும் மொழிபெயர்ப்புக்கு மட்டுமே 11 விருதுகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

செப்டெம்பர்  30 - உலக மொழிபெயர்ப்பு நாள்.

கட்டுரையாளர்: முனைவர் ந. அருள் 
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,  தமிழ்நாடு அரசு.