முனைவர் ஔவை ந. அருள்
இயக்குநர் (மொழிபெயர்ப்பு)
தலைமைச்செயலகம்
நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி இன்று செம்மொழியாக உயர்ந்து சிறந்து பொலிவதற்கு அதன் தொன்மைத் தன்மையும் முதன்மையான காரணமாகும். ஒரு மொழியின் தொன்மையைப் போல அதன் இளமையும், எளிமையும் பெருமைக்குரிய ஒன்றாகும்.
இங்கு, இளமை என்பது, இன்றைய சூழலுக்கும் அம்மொழிக்கும் இடையேயான உயிரோட்டம் நிறைந்த உறவையே குறிக்கிறது. இதன் அடிப்படையில், தொன்மை, இனிமை, வளமை, செம்மை, வியன்மை போன்ற எண்ணற்ற சிறப்புகளை ஒருங்கேயுடைய தமிழ் மொழியை என்றும் குன்றாத இளமை மொழியாகவும் மிளிரச் செய்வதற்கு, சொல்லாக்கம் மிகவும் இன்றியமையாததாகிறது.
தமிழில் எழுத்துகளின் வகைகள், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற பாகுபாடு யாவுமே திட்டமிட்டு மரபாக்கப்பட்டன. குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பவை தமிழுக்கு உரிய மரபு தான். நாய்க்குட்டி, கோழிக்குஞ்சி என்று இன்றும் கூறுவதற்கு மரபே அடிப்படையாகும்.
ஆண் யானையைக் களிறு என்றும், பெண் யானையைப் பிடி என்றும் கூறினர். மேற்புறத்தில் வலிமை உடைய மூங்கிலைப் புல்லினம் என்றனர். உட்பகுதியில் வைரம் கொண்டதை மரம் என்றனர். தாழை மடல், தென்னை ஓலை, வாழை இலை என்று கூறியதற்கும் மரபே அடிப்படையாகும். கண்ணி, தெரியல், தொங்கல், தொடை, கோதை என்று காரணத்தின் அடிப்படையிலான மாலையைப் பற்றிய சொற்கள் பிறகு மரபாக அமைந்தன.
ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் வளர்ச்சியடைந்துள்ள மொழியை அறிவியல் மொழியாகவும், நாளும் மாறிவரும் புதிய உலகிற்கான வளமொழியாகவும் வன்மை பெறச் செய்வதற்குச் செழுமையான சொற்களஞ்சியம் அம்மொழியில் இருத்தல் வேண்டும். பண்டைய காலத்திலிருந்தே, செழுமையான சொற்களைத் தமிழர்கள் உருவாக்கினர்.
“பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லி னாகும் என்மனார் புலவர் "
- (தொல். பெய.2)
எனச் சொல்லின் பொருட்தன்மையைத் தொல்காப்பியர் விளக்கினார். பொருண்மையும் சொன்மையும் தெரிதலோடு, ஒவ்வொரு சூழலுக்கும், பண்புக்கும், இடத்திற்கும், பயன்படும் முறைக்கும் ஏற்றவாறும் அக்காலத் தமிழர்கள் சொல்லாக்கம் செய்துள்ளனர்.
எடுத்துக்காட்டாகச் சோற்றை “அவிழ் பதம்" எனக் குறித்தனர். அவிழ்தல் என்பதற்கு, மலர்தல், விரிதல் எனப் பல பொருளுண்டு. சோறு, அரிசி எனும் நிலையிலிருந்து மாறி, நீரில் பதமாக வெந்து மலர்வதை அவிழ்பதம் என அழகாகச் சொல்லாக்கம் செய்துள்ளனர். தமிழர்களின் சொல்லாக்கத் திறனுக்கு இதுபோன்ற எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை முன்வைக்கலாம்.
ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியும் அறிவியல் புனைவுகளும் மிகுந்து காணப்படுகிற இன்றைய சூழலில் அழகிய தமிழ்ச்சொற்களை நாம் மேலும் உருவாக்க இயலுமா ? அவ்வாறு உருவாக்கினாலும், அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஏலுமா ? ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல் ஓரிரு வாரங்களில் வழக்கத்தில் வந்துவிடுகிறது. செய்தி ஊடகங்களும், சமூகத் தொடர்பியங்களும் அவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விடுகின்றன,
ஆனால் தமிழ்ச்சொற்கள் வழக்கத்திற்கு வர ஆண்டுள் பல காத்திருக்க வேண்டியுள்ளது. சில சொற்கள் “அகராதி" அளவிலேயே நின்று விடுகின்றன. மின்சாரம் என்ற சொல் நடைமுறைக்கு வரவே 24 ஆண்டுக் காலம் கழிந்ததாகக் கூறப்படுகிறது.
'கண்டேன் கற்பினுக்கணியினை' என்று தன் சொல்லால் சீதையின் பெருமையை உணரச் செய்த அனுமனைச் "சொல்லின் செல்வன்" என்று கம்பர் அழைத்தார். மொழியியலின் பிற பிரிவுகளைக் காட்டிலும் இலக்கணத்துடன் நெருங்கிய தொடர்புடையது சொல்லாக்கம்.
பயிருடன் சேர்ந்து வளரும் களையை நீக்கப் பயன்படும் கருவிக்குக் களைக்கொத்தி என்று பெயர். பேசும் வழக்கில் களை என்ற சொல்லில் இருக்கும் 'ஐ' எனும் உயிர் ஒலியும் கொத்தி எனும் சொல்லில் இருக்கும் 'ஓ' எனும் உயிர் ஒலியும் மயங்கிக் களாத்தி என்ற புதிய சொல் உருவாகியது.
புதிதாக உருவாக்கப்படும் சொல்லானது, பொருள் மாறாமலும், சுருக்கமாகவும், இலக்கண மரபு பிறழாமலும் இருக்க வேண்டும். ஆனால், அண்மைக் காலமாகச் சொல்லாக்கம் செய்யப்பட்டுள்ள சில சொற்கள் இலக்கண மரபை மீறியுள்ளதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டாக, " Eraser " எனும் ஆங்கிலச் சொல்லுக்கு " அழிப்பான் " எனும் தமிழ்ச்சொல் தற்போது வழக்கத்தில் உள்ளது. ஆனால், அஃறிணைப் பொருளுக்கு 'அன்' விகுதி சூட்டப்படலாமா ? புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும் காரணத்தால், இச்சொல் விரைவாக வழக்கத்தில் வந்துவிட்டது. 'Bicycle' எனும் சொல்லுக்கு " ஈருருளி " என்று அழகாகச் சொல்லாக்கம் செய்யப்பட்டிருப்பினும், " மிதிவண்டி " என்ற சொல்லே வென்றது.
பிரேசில் நாட்டில் விளைந்த காப்பிக்கொட்டை ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருந்த காரணத்தால், பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பியைக் " குளம்பி " எனும் சொல்லால் குறித்தார். ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் அச்சொல் இன்றளவும் பலரைச் சென்றடையாதது வருத்தத்திற்குரியதே.
நாளும் புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிக்கும் இக்காலத்தில், அவற்றோடு தொடர்புடைய புதிய சொற்களை உருவாக்குவது மொழியின் வளர்ச்சிக்கான இன்றியமையாப் பணியாகும். அதே வேளையில், நம் முன்னோர்கள் உருவாக்கிய அழகிய தமிழ்ச்சொற்களை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதும் நம் பெருங்கடமையாகும்.
ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, அம்மொழியில், தொடர்ந்து புதிய சொற்கள் அவ்வப்போது உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய சொற்களை உருவாக்கும் பணியில், மூத்த தமிழறிஞர்களோடு இன்றைய தலைமுறையினரும் ஆர்வத்துடன் பங்கேற்று இலக்கண நெறி மாறாமலும், தமிழின் சுவையும் பொருளும் குன்றாமலும் நாளும் புதிய கலைச்சொற்களைச் செம்மொழியாம் தமிழ்மொழிக்குச் சேர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
மொழியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் சொல்லாக்கப் பணியைத் தொழுது மேற்கொள்வோம். தமிழின் சிறப்பைப் பாரெங்கும் பறைசாற்றுவோம்.
நன்றி:
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வெளியீடான
2021 திசம்பர்த் திங்கள் மின்னிதழ் - "சொல்வயல்"

-----
No comments:
Post a Comment