Sunday, January 9, 2022

ரேக்ளா: தொடரும் தமிழர் பாரம்பரியம்


-- முனைவர் த. ஜான்சி பால்ராஜ்


தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் பண்டிகையில் மகிழ்ச்சியை அதிகரித்துக் குதூகலமாக்குவதில் விளையாட்டுகளின் பங்களிப்பு மிக அதிகம். அதிலும் நம் பழந்தமிழரின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான மாட்டுவண்டிப் பந்தயம் (ரேக்ளா ரேஸ்) இன்றுவரை மக்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது. பொங்கலுக்குச் சில நாட்களுக்கு முன்பே இந்த மாட்டுவண்டிப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே நடத்தப்படுகின்றன. குறிப்பாக, மதுரையில் அவனியாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடியைச் சுற்றியுள்ள பகுதிகள், நாகர்கோவில் போன்ற இடங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது.





தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, கரூர் போன்ற இடங்களிலிருந்து மாட்டுவண்டிப் போட்டியாளர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு, தமிழ்ச் சமூகத்தின் தொன்றுதொட்டு வரும் கலாச்சாரத்தை இன்றும் வளர்த்துவருகின்றனர். இப்போட்டிகள் மிக அதிக அளவில் மாட்டுப் பொங்கலன்று நடைபெறுகின்றன.

மனித நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலிய எதேச்சையான, மிக முக்கியக் கண்டுபிடிப்புகளுள் மாட்டுவண்டியும் ஒன்று. பாரம் சுமப்பதற்கும் தூரம் கடப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டிகள், மக்களின் வேலைகளை எளிமையாக்கி நேரத்தை மிச்சப்படுத்தின. இதன் மூலம் மக்களின் வாழ்க்கை முறையில் சிறப்பான மாற்றங்கள் நிகழ்ந்தன.

நாட்கணக்கில் நடந்தே கடந்த பெருந்தொலைவுகளையும் எளிதில் கடக்க முடிந்ததோடு வணிகமும் தழைத்துச் சமூகப் பொருளாதார நிலையும் மேம்பட்டது. இதனால், சமூகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வுகளை மக்கள் அதிக அளவில் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். மக்களின் இந்நிலைக்குக் காரணமான மாட்டுவண்டியும் அதனை இயக்கப் பயன்படுத்திய மாடுகளும் சமூகத்தின் மிக முக்கிய அங்கமாகின.

செய்யும் தொழிலையே தெய்வமாகக் கருதும் தமிழர்கள், ஆண்டு முழுவதும் உழைக்கும் மாடுகளை அன்றாடப் பணிகளிலிருந்து விடுவித்துப் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஈடுபடுத்தி மகிழ்ந்தனர். ஆரம்பத்தில் தங்கள் பயன்பாட்டுக்கு வைத்திருந்த மாட்டுவண்டிகளை விவசாய நிலப் பகுதிகளில் ஓடவிட்டு, முந்தி இலக்கை அடையும் வண்டிக்கு வெற்றிவாகை சூடி ஆரவாரித்தனர். மக்களுக்கு இதன்மீது ஏற்பட்ட அலாதிப் பிரியத்தால் தொடர்ந்து அடிக்கடி இப்போட்டியை நடத்தத் தொடங்கினர். குறிப்பாக, மக்கள் ஒன்றுகூடும் திருவிழாக்களில் போட்டிகள் நடத்தித் தங்கள் விழாக் கால மகிழ்ச்சியை அதிகப்படுத்திக்கொண்டனர். நாளடைவில் பொங்கல் மற்றும் கிராமப்புறப் பெண் தெய்வ வழிபாட்டு விழாக்களில் மாட்டுவண்டிப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட ஆரம்பித்தன. காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களோடு சிறப்பான முறைகளில் இப்போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. பொழுதுபோக்கு நிகழ்வுகள் அதிகம் இல்லாத அக்காலகட்டத்தில், இப்போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் சமூகத்தில் ஏற்படுத்தின. இதனால், போட்டிகளுக்கென்றே வண்டிகள் வடிவமைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட காளைகள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன.

மாடுகளால் இலகுவாக இழுக்கத்தக்க விதத்தில் இரண்டு பேர் மட்டுமே அமரும்படியான வண்டிகள் உருவாக்கப்பட்டன. இரண்டு முதல் மூன்று வயது வரையிலான மாடுகளுக்கான சிறிய அளவிலான ஒற்றைப் போல் வண்டிகளும் நான்கு வயதுக்கு மேலான மாடுகள் இழுக்கத்தக்க பெரிய அளவிலான இரட்டைப் போல் வண்டிகளும் தயாரிக்கப்பட்டன. இத்தோடு பயணத்துக்குப் பயன்படுத்தப்படும் வில்வண்டிகளும் போட்டிகளில் பங்கேற்கின்றன. பந்தயங்கள் பெரும்பாலும் புறவழிச் சாலைப் பகுதிகளில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினரின் அனுமதியுடனும் உதவியுடனும் நடைபெறுகின்றன.

பந்தய வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளாக நல்ல உடல் வலிமையும் கம்பீர தோற்றமும் உடைய காங்கேயம், ஒட்டங்காளை போன்ற நாட்டுமாடுகள் இளங்கன்றிலிருந்தே வளர்க்கப்படுகின்றன. இதற்கென்றே ஒன்றரை வயது முதல் இரண்டு வயதுக்குள் மாடுகளை வண்டியிழுக்கப் பழக்குவிக்கின்றனர். முதலில் குறைந்த எடையுடைய சிறிய வண்டிகளில் இளங்கன்றுகளை இணைத்துப் பழக்குகின்றனர். பின்னர், குறிப்பிட்ட தொலைவை அவற்றின் இயல்பான வேகத்தில் இழுத்துச்செல்லப் பயிற்றுவிக்கப்படுகின்றன. தொடர்ச்சியான பயிற்சிகளால் காளைகள் போட்டிகளுக்குத் தயாராகிவிடுகின்றன. காளைகள் பந்தய வண்டிகளை வேகமாக இழுத்துச் செல்லக் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஆரோக்கியமும் இருப்பதற்காக போட்டி தொடங்குவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அவற்றின் உணவு முறைகளிலும் பயிற்சிகளிலும் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.

பந்தயத்தில் ஈடுபடும் காளைகள் வயது மற்றும் அவற்றின் உயரத்தின் அடிப்படையில் பெரியவை, நடுத்தரம், கரிச்சான், பூஞ்சிட்டு மாடுகள் எனத் தரம்பிரிக்கப்பட்டுப் போட்டிக்கான தூரம் தீர்மானிக்கப்படுகிறது. பெரிய மாடுகளுக்கான தூர அளவு 15 அல்லது 16 கிமீ, நடுத்தர மாடுகளுக்கு 12 கிமீ, கரிச்சான் மாடுகளுக்கு 10 கிமீ, பூஞ்சிட்டு மாடுகளுக்கு 7 கிமீ என்று தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு பந்தய வண்டியிலும் இரண்டு பேர் பொறுப்பாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள். ஒருவர் வண்டியின் உரிமையாளர், மற்றொருவர் உதவியாளர். வண்டியை இலக்கை நோக்கி ஓட்டுபவராக வண்டியின் உரிமையாளர் அமர்ந்திருக்க, உதவியாளர் காளைகளைத் துரத்தியபடி ஓடுவார். இவ்விருவரது சாமர்த்தியமான உந்துதலே காளைகளின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும். ஏற்கெனவே பயிற்சியால் பழக்கப்பட்ட காளைகள் இவர்களின் மன ஓட்டத்தை உணர்ந்து, வேகமெடுத்து இலக்கை அடைவதில் தீவிரம் காட்டும். 

குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் வண்டிகள், வெற்றிபெற்ற வண்டி உரிமையாளர்கள், மாடுகளுக்குச் சிறப்புகளும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மாட்டின் கொம்புகளில் வெற்றி சால்வைகள் சுற்றப்பட்டும் மாலைகள் அணிவிக்கப்பட்டும் அக்காளைகள் கௌரவிக்கப்படுகின்றன. வெற்றியை வண்டி உரிமையாளரின் ஊரார் அனைவருமே தங்களது வெற்றியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழர்களின் பண்பாட்டுச் சின்னங்களுள் ஒன்றான மாட்டு வண்டியின் பயன்பாடு குறைந்துவிட்டபோதிலும் தென்மாவட்டங்களில் ரேக்ளா ரேஸ் என்று அழைக்கப்படும் மாட்டுவண்டிப் பந்தயம் மக்களின் வரவேற்பை அதிகமாகவே பெற்றுவருகிறது.



நன்றி: இந்து நாளிதழ் 







No comments:

Post a Comment