Wednesday, January 12, 2022

தொ.பரமசிவனின் அழகர் கோயில்


-- அ.முத்து சிவகாமி,
மகாலட்சுமி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பெரியாரியச் சிந்தனையாளரான தொ. பரமசிவன் அவர்கள் பண்பாடு வரலாறு மற்றும் சமயத் துறையில் ஆய்வுகளை செய்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.   ஆய்வு வரலாற்றினை கீழிருந்து மேல் நோக்கி ஆராய்வதாகும்.   வரலாற்றை மக்கள் வாழ்வியலில் இருந்து ஆராய்வதை  வானமாமலை அவர்கள் துவக்கிச் செய்து வந்துள்ளார்.  அவருடைய வழியிலேயே தொ. பரமசிவன் அவர்களும் ஆய்வினை செய்து வந்துள்ளார்.  அவரது ஆய்வு நூல்கள் தொகுக்கப்பட்டு பண்பாட்டு அசைவுகள், பரண், விடுபூக்கள், தெய்வம் என்பதோர்,  அறியப்படாத தமிழகம், இந்து தேசியம் முதலான படைப்புகளாக வெளிவந்துள்ளது.  அழகர் கோவில் என்பது தொ. பரமசிவன் அவர்கள் முனைவர் பட்ட ஆய்விற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உரைகளின் தொகுப்பு.  இந்நூலை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தார்  வெளியிட்டுள்ளனர்.

thopa.azhagarkoyil.book.jpg

கோயில் பற்றிய ஆய்வுகள் நாட்டு வரலாற்று ஆய்வாக மட்டுமன்றி சமூக, பண்பாட்டு ஆய்வுகளாகவும் விளங்கும் திறன் உடையன. தமிழ்நாட்டில் கோயில்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலை சிறப்புகள், கல்வெட்டு தரும் சிறப்புகளுமே பெரிதும் ஆராயப்படுகின்றன. கே. கே. பிள்ளையின் சுசீந்திரம் கோயில், காஞ்சி கே.வி ராமனின் காஞ்சி வரதராச சுவாமி கோயில் ஆகிய நூல்களும், சி.கிருஷ்ணமூர்த்தியின் திருவெற்றியூர் கோயில் என்னும் அச்சிடப்படாத ஆய்வு நூலும் வரலாறு குறித்த முக்கியமான நூல்கள்.

ஒரு கோயிலுக்கும் அதனை வழிபடும் அடியவர்க்கும் உள்ள உறவு, கோயிலைப் பற்றி சமூகத்தில் வழங்கும் கதைகள், பாடல்கள், வழக்கு மரபுச் செய்திகள், கோயிலை ஒட்டி எழுந்த சமூக நம்பிக்கைகள், திருவிழாக்களில் அவை வெளிப்படும் விதம் ஆகியவை பற்றிய ஆய்வுகள் தமிழ்நாட்டில் பெருகி வளரவில்லை. பினாய் குமார் சர்க்கார் என்பவர் கிழக்கிந்தியப் பகுதிகளில் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்கள் கஜல், கம்பீரா என்னும் இரண்டு திருவிழாக்களை மட்டும் ஆராய்ந்து இந்துப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கூறுகள் எனும் ஆங்கில நூலை 1917இல் எழுதினார். இவ்வகையான ஆய்வு நெறி தமிழ்நாட்டில் இன்னும் பிள்ளைப்பருவமாகத்  தவழ்ந்த நிலையிலேயே உள்ளது.

அழகர் கோயில் எனும் நூல் இரண்டு வகையான திறனாய்வின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. அவை மதிப்பீட்டு முறை,  விளக்க முறை என்பன;  மதிப்பீட்டு முறை என்பது  தனக்கு முன்பே ஆராய்ந்து வெளிவந்து இருக்கிற ஆய்வுகள் கல்வெட்டு சிற்பங்கள் செப்பேடுகள் மூலம் கிட்டும்  செய்திகளை கள ஆய்வு செய்து ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வருவது.  திரு. ஹட்சன் ஆய்வு,  மயிலை சீனி வேங்கடசாமியின் அழகர்கோவில் பற்றிய ஆய்வு வழிகளைத் தமது ஆய்வுப் பயணத்தை நடத்திச் செல்லத் துணையாகக்  கொண்டிருக்கின்றார் தொ. பரமசிவன் அவர்கள். விளக்க முறை திறனாய்வு வழியில் ஆய்வாளர் தான் நேரில் கண்டறிந்து அச்செய்திகளை ஏற்க செய்வது. தொ. பரமசிவன் அவர்கள் கள ஆய்வு செய்த காலம் 1977இல் 1979 வரை. இன்று கோயில் வழக்குகளிலும்,வழிபாடுகளிலும் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

ஆய்வின் நோக்கம்:
அழகர்கோயில் மதுரைக்கு வடகிழக்கே பன்னிரண்டு மைல் கல் தொலைவில் உள்ளது.கோயில்கள் வழிபடும் இடங்களாக மட்டும் இருப்பதில்லை. அவை சமூக நிறுவனம். எனவே சமூகத்தில் எல்லாத் தரப்பினரோடும் கோயில் உறவு கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட கோயிலோடு அரசர்களும் உயர் குடிகளும் கொண்ட உறவினை போலவே எளிமையும்  இனிமையும் நிறைந்த அடியவர்கள் கொண்ட உறவும் ஆய்வுக்குரிய கருப்பொருளாக முடியும்.  அழகர்கோயில் அடியவர்கள், குறிப்பாக நாட்டுப்புறத்து அடியவர்கள் கொண்டுள்ள உறவினை விளக்குகின்றது.  அழகர்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவத் திருப்பதிகளில் பழமை சார்ந்த ஒன்றாகும். இந்தக்  கோயிலுக்கு மதுரை மாவட்டத்தில் முகவை மாவட்டத்தில் தெற்கு கிழக்குப் பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான நாட்டுப்புற அடியவர்கள் வருகின்றனர். மண்சார் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உடைய பிரிவினரோடு நிறுவன மயமாக்கப்பட்ட சமயக் கோயில் தெய்வங்கள் கொண்டுள்ள உறவின் தன்மையினை விளக்க முற்படுகின்றது அழகர்கோயில் ஆய்வு.

அழகர் கோயிலின் அமைப்பு:
அழகர் கோயிலின் அமைப்பு எனும் முதல் இயலில் கோயிலில் அமைந்துள்ள நிலப்பரப்பின் தொன்மை கோயிலில் கட்டிடங்கள் மண்டபங்கள் முதலியவை கல்வெட்டுச் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. கோயிலின் தோற்றம் என்னும் இரண்டாவது இயலில் இக்கோயிலைப் பற்றிய மயிலை சீனி வேங்கடசாமியின் கருத்து மதிப்பிடப்படுகிறது. இக்கோயில் பௌத்தக் கோயிலாக இருந்தது என 1940இல் அவர் வெளியிட்ட கருத்து கோயில் ஆய்வாளர்களால் ஏற்கப்பட்டதும் இல்லை. மறுக்கப்பட்டதும்  இல்லை. இவ்வியலில் சீனி வேங்கடசாமியின் கருத்து மதிப்பீடு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலக்கியங்களில் அழகர் கோவில்:
மூன்றாவது இயலில் இக்கோயிலைப் பற்றிய பரிபாடல் பாட்டு ஒன்றும், ஆழ்வார்களின் பாசுரங்களும்,  பாசுரங்களுக்கான உரையும் இக்கோயில் மேல் எழுந்த குறவஞ்சி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், அந்தாதி மாலை ஆகிய பலவகைப்பட்ட சிற்றிலக்கியங்களும் ஆராயப்படுகின்றன. மேலும் கோயில் இறைவன் பெயர், மலைப் பெயர், விமானம், தலவிருட்சம் முதலிய செய்திகள் இத்தளம் குறித்த பாசுரங்களில் காணப்படும் பிற மத எதிர்ப்புணர்ச்சி முதலியவையும் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளன.

ஆண்டாரும் சமயத்தாரும்:
ஆண்டாரும் சமயத்தாரும் என்ற நான்காவது இயலில் ஆய்வாளர்கள் கள ஆய்வில் கண்ட அமைப்புமுறை விளக்கப்பட்டுள்ளது. ஆண்டார் என்பது இக்கோயில் தல குருவாக மதிக்கப்பெறும் பணிப்பிரிவொன்றின் பெயராகும். இப்பணி பிரிவினருக்கு மதுரை முகவை மாவட்ட கிராமங்களில் சமயத்தார் எனப்படும் பிராமணரல்லாத 18 பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள் நாட்டுப்புற மக்களை வைணவ அடியார் ஆக்கி ஆண்டவரிடம் சமய முத்திரை பெறச்செய்வர். பெருமளவு  சிதைந்து விட்ட இந்த அமைப்பு முறை கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.

கோயிலும் சமூகத் தொடர்பும்:
அழகர் கோயிலோடு மேலை நாட்டுக் கள்ளர், இடையர், பள்ளர், பறையர் அழகர் கோயிலை ஒட்டிய சிற்றூர்களில் வாழும் வலையர் கொண்டுள்ள உறவு மதிப்பிடப்பட்டுள்ளது.
திருவிழாக்கள் என்ற ஆறாவது இயலில் சித்திரைத்திருவிழா தவிர்ந்த பிற திருவிழாக்கள் விளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சமூக தொடர்புடைய சில திருவிழாக்கள் விரிவாக விளக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.  இக் கோயில் சித்திரைத் திருவிழா  7, 8, 9  ஆகிய மூன்று இயல்களில் விளக்கப்படுகின்றது. சித்திரைத் திருவிழாவும் பழமரபுக்கதையும் என்னும் ஏழாவது இயலில் சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகள் விளக்கப் பெறுகின்றன.

வர்ணிப்பு பாடல்கள் என்னும் எட்டாவது இயலில், அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவில் பாடப்பெறும் வர்ணிப்பு பாடல்கள் ஆராயப் பெறுகின்றன. நாட்டுப்புற மக்களால் பாடப்பெறும் இவ்வகை பாடல்களின் தோற்றமும் மதுரை வட்டாரத்தில் அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவினால் இவை வளர்க்கப்பட்ட செய்தியும் விளக்கப்படுகின்றன.
நாட்டுப்புறக் கூறுகள் என்னும் 9 ஆவது இயலில் இக்கோயில் சித்திரைத் திருவிழாவில் நாட்டுப்புற அடியவர்கள் வேடமிட்டு வழிபடும் முறைகள் காணிக்கை செலுத்துதல் போன்றவை வினா பெட்டி வழியாக பெற்ற செய்திகளைக் கொண்டு விளக்கப்படுகின்றன. கோயில் பணியாளர்கள் என்பது 10 ஆவது இயலில் கோயில் பரம்பரை பணியாளர் பற்றிய ஆவணச் செய்திகளும் நடைமுறைகளும் விளக்கப்படுகின்றன.

பதினெட்டாம்படி கருப்பசாமி என்னும் 11 ஆவது இயலில் இக்கோயிலில் அடைக்கப்பட்ட ராஜகோபுர வாசலில் உள்ள கருப்பசாமி என்னும் தெய்வம் பற்றிய செய்திகள் ஆராயப்படுகின்றன. இக்கோயில் கோபுரம் அடைக்கப்பட்ட செய்தி, கருப்பசாமியின் தோற்றம் முதலிய செய்திகள் ஆராயப்படுகின்றன.  முடிவுரை என்னும் இறுதி இயலில் ஆய்வு முடிவுகள் தொகுத்துத்  தரப்பட்டுள்ளன.

அழகர் கோவிலின் அமைப்பு:
அழகர் கோவிலின் அமைப்பு குறித்த ஒரு பூகோளச் சித்திரம். கோவிலின் பெயரே ஊரின் பெயராக கொண்ட இந்தப் பகுதியில் பணியாளர் குடியிருப்புகளைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர் பகுதி என்று எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. பிராமணர் கோவில் பணியாளர்கள் கூட தல்லாகுளம் என்னும் ஊர் பகுதியில் வசித்தனர். இந்த அழகர்கோவில் ஊராட்சி மேலூர் வட்டத்தில் அமைகின்றது.   இந்நிலப்பகுதியில் தென் கிழக்கிலிருந்து வடகிழக்கு திசை நோக்கிச் செல்லும் ஒரு மலையும் கிழக்கே இருந்து வரும் ஒரு மலையும் சந்திக்கின்ற இடத்தில் தென்திசையில் மலைச்சரிவில் கிழக்கு திசையினை நோக்கியதாக அழகர் கோயில் எனப்படும் கோயில் அமைந்துள்ளது. இதிலிருந்து மக்கள் புழங்காத மலையடிவாரத்தில் உள்ள கோவில் அழகர் கோவில் என்று அறியலாம். அழகர்கோவில் இரண்டு கோட்டைகள் உள்ளன ஒரு கோட்டை வெளி கோட்டை அழகாபுரி கோட்டை என்று அழைக்கப் படுகின்றது உட்கோட்டை இரணியன் கோட்டை என்றும் அழைக்கப்படுகின்றது. பெரியாழ்வார் மதில் சூழ் சோலை மலை என்று இத்தலத்தினை பாடுகின்றார். அதனால் இக்கோயிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டும்.

அழகர்கோயிலின்  வெளிக்  கோட்டை 14ஆம் நூற்றாண்டில் வாணாதிராயர் களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று இரா நாகசாமி கருதுவர். எனவே ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த பெரியாழ்வார் குறிப்பிடும் மதில் இரணியன் கோட்டை எனப்படும் உட் கோட்டை மதில் ஆகத்தான் இருக்க முடியும். கோவிலின் ராஜ கோபுர வாசல் எப்பொழுதும் மூடப்பட்டு இருக்கும் திறக்கப்படுவது இல்லை. அதன் முன்னர் பக்கச் சுவர்களுடன் கூடிய இரட்டை மரக்கதவுகள் உள்ளன.  இவையே பதினெட்டாம்படி கருப்பசாமியாக  வழிபடப்படுகின்றன. ஆனால் வருடத்தில் ஒரே ஒருமுறை மட்டும் சக்கரத்தாழ்வார் வைபவத்தின்போது   மட்டும் பதினெட்டாம்படி கருப்பசாமி வாசல் இராஜகோபுர வாசல் திறக்கப்படுகிறது. மதிலின் வட எல்லையில் மற்றொரு பகுதியில் மக்களும் இறைவனின் பல்லக்கும் போய் வருவதற்காக வண்டி வாசல் அமைக்கப்பட்டிருக்கும். கருவறை வட்ட வடிவம் கொண்டது. மிகப் பழமையானது புதுக்கோட்டை நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் அழகர்கோவில் போன்றே வட்டவடிவக் கருவறையைக் கொண்டது. இறைவனைச் சுற்றி அமைந்த வட்ட சுற்றுக்கான பெயர் நங்கள்குன்றம் என்று அழைக்கப்படும். பெரியாழ்வாரின் பாசுரத்தில் நங்கள்குன்றம் என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது.

கருவறையில் உள்ள இறைவன் திருமால் அழகர் சுந்தரராஜன் என்று அழைக்கப்படுகின்றார். இறைவன் நின்ற கோலத்தில் இருக்கிறார். அவரின் மேல் கைகளிலே சங்கும், சக்கரமும் இருக்கின்றது. கீழ்க்கைகளில் வாளும், கதையும் இருக்கின்றன. ஒரு போர்க்கோல வடிவத்தில் இருக்கின்றார் அழகர். அவர் கையில் இருக்கக் கூடிய சக்கரம் வைணவக் கோயிலில் இல்லாதபடி வித்தியாசமாக இருக்கின்றது. சக்கரத்தைப்  பிரயோகம் செய்யும் நிலையில் பாவனையில் இருக்கின்றார். வெளிக்கோட்டையின் மேற்புறத்தில் ஒரு குளம் இருக்கின்றது. இது ஆராமத்துக் குளம்  என வழங்கப் படுகின்றது.  சங்கராமம் என்பது  பௌத்த பிக்குகள் தொடர்பைக் காட்டுகிறது. இந்தக் குளத்துக்கு வடக்கே ஒரு நந்தவனம் இருக்கின்றது.  அது பெரியாழ்வார் நந்தவனம் என்று அழைக்கப்படுகின்றது. இறைவனுக்குத்  திருமாலை கட்டித்தரும் பணியில் பெரியாழ்வார் ஈடுபட்டிருந்ததால் கோயில் நந்தவனத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது போலும்.  அழகர் கோவில்  பெருந்தெய்வக்  கோயிலாக இருந்தாலும் கிராமத்து மக்களின் வழிபாட்டுத்தலமாகவே நாட்டுப்புறச் சிறுதெய்வ வழிபாட்டு முறைகளை ஏற்றுள்ளது. பெரிய கோவில் சிறு தெய்வ வழிபாட்டினை ஏற்றுக் கொள்வதாகும்.

அழகர் கோயிலின் தோற்றம்:
அழகர் கோவில் தோன்றிய வரலாறு கோயிலின் தோற்றம் பற்றிக் கூறுவது. அழகர்கோவில் தோற்றம் குறித்த முதலில் பரிபாடலைக் கொண்டு தொடங்குகின்றார் தொ. பரமசிவன்.  ஏனென்றால் பழமை வாய்ந்த அழகர்கோவிலில் தோற்றம் குறித்த செய்திகள் கல்வெட்டுகளிலோ, செப்பேடுகளிலோ ஆதிகாலத்துச் செய்திகள் எதுவும் இல்லை. எனவே இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு வழித்தடத்தில் உற்றுநோக்கினால்,  சங்கப்பாடலில் ஒன்றான பரிபாடல் இக்கோவிலை இருங்குன்றம் என்று அழைக்கின்றது. இந்தக் கோயிலில் திருமாலோடு பலராமனும் வழிபட்ட செய்தியினையும் கூறுகின்றது.   ஆழ்வார்களுடைய பாசுரங்களில் இருங்குன்றம் குறித்த செய்தியோ, பலராம வழிபாடு நிகழ்ந்த வழிபாடு செய்தியோ, குறிப்புகளோ  காணப்படவில்லை.   மயிலை சீனி வேங்கடசாமி கருத்து;  அழகர் மலை என்று வேறு பெயர் உள்ள திருமாலிருஞ்சோலை வைணவ திருக்கோயிலில் ஒன்றாக இருந்தாலும் முற்காலத்தில் அது  புத்தக் கோயிலாக இருந்திருக்கலாம்  என்று கூறுகின்றார்.  

பெரியாழ்வார் நந்தவனத்திற்கு எதிரே உள்ள கோவிலின் ஆராமத்துக்குளம் என்று கூறப்படுவது  பௌத்தப் பிக்குகள் வசிக்கும் சங்கராமத்தைக் குறிக்கும்.   இந்தக் கோயிலில் தலவிருட்சம் போதிமரமாக (அரச மரமாக) இருந்து இருக்கின்றது. ஆகவே பண்டைக் காலத்தில் இக்கோயில் புத்தக் கோயிலாக இருந்திருக்கும் என்று கூறுகின்றார். தமிழகக் கோவில் வரலாற்றில் ஒரு சமயத்துக்கு உரியதாக இருந்த கோயில் வேறொரு சமயத்திற்கு உரியதாக மாறுவதும்  வழக்கமே. சிக்கல், கீழ்வேளூர், புதுக்கோட்டை நார்த்தாமலை குடைவரை கோவில்கள்  சைவ-வைணவ கோயில்களாக  மாற்றப்பட்டுள்ளன. ஆராமம் என்பது தமிழ்ச்சொல் இல்லை இது ஒரு பாலி மொழிச் சொல். பௌத்த சங்கத்திற்கு உரிய குளம் உடைய நந்தவனத்தினை இச்சொல் குறிக்கும் என்ற சீனி வேங்கடசாமியின் கருத்துக்கு தொ. பரமசிவன் அவர்கள் உடன்படுகின்றார். ஆராமம் சூழ்ந்த அரங்கம் என்ற தொடருக்கு மற்றைய கோயில்களால் சூழப்பட்ட அரங்கம் என்றும் நாலாயிர திவ்ய பிரபந்த அகராதிப் பொருள் கூறுகின்றது. எனவே ஆராமம் என்ற சொல் தோட்டமும் சோலையும் கோயிலும் இணைந்த ஒரு பகுதி. பௌத்த சங்கத்தை பற்றி எழுதும் உ.வே சாமிநாதையர் ஸ்ரீ பிக்குகளுக்கு ஏதேனும் குற்றம் நேரிடும் ஆயின் அதற்குப்  பரிகாரம் நந்தவனத்திற்கு நீரிறைக்கையென்று  தெரிகின்றது.  இதனைப் பிக்குகளுக்குப்  பிழை புகுந்தாற் பிராயச்சித்தம் புத்தர் கோயில் முற்றத்து மணற்சுமக்கை பஷினிகளுக்கு நந்தவனத்துக்கு நீர் இறைத்தல் (நீலகேசி -அருக்கத்தி வாதம் சருக்கம் 25ஆம் பாட்டுரை).   எனவே, மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் கூற்றுப்படி குளமுடைய நந்தவனங்கள் புத்தர் கோவிலில் இருந்த செய்தி தெளிவாகிறது.

பண்டைக் காலத்தில் தமிழகத்தில் சமணம் பௌத்தம் ஆகிய இரண்டு மதங்களின் செல்வாக்கும் இருந்திருக்கின்றது. பிற சமயங்களின் போராட்டத்திற்கு பின்புதான் வைணவர்களால் அழகர்கோவிலைத் தனதாக்கிக் கொண்டிருக்க முடியும். பரிபாடல் அழகர்கோவில் குறித்து பகைவர்களை வெற்றி கொண்டவன் உடைய இருங்குன்றத்துக்கு பெற்றோரோடும், பிறந்தாரோடும்,உறவினரோடும் செல்லுங்கள் என்பது இப்பாடல் தரும் செய்தி.  பிரச்சார நோக்கில் அமைந்த இந்தப்  பாடல் மூலம் இருங்குன்றம் சமய போராட்டக் களமாக இருந்தது என்ற குறிப்பும்,  கோயிலுக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட வைணவம் முயன்றது என்ற செய்தியையும் நாம் அறிந்து கொள்ளலாம்.  பகைவர்களிடம் பெரியாழ்வார் அழகர் கோவிலை நங்குன்றம் என்று உரிமை பாராட்டுகின்றார். வைணவர்கள் பௌத்தர்களிடமிருந்து வெற்றிகொண்டதை  உரிமை பாராட்டவே  திருமங்கை ஆழ்வாரும், ஆண்டாளும், நம்மாழ்வாரும் உரிமை பாராட்டுகிற பாணியிலேயே நமது கோயில் என்று கூறுகின்றனர்.ஒன்பதாம் நூற்றாண்டு திருமங்கை ஆழ்வார் பாசுரத்தையும்  மேற்கோள் காட்டுகிறார்.

அழகர்கோவிலில் வைணவர்களுக்கு  எதிராக சமணர்கள் இருந்தார்களா இல்லை பௌத்தர்கள் இருந்தார்களா என்பதைப் பற்றி ஆராய  தொ. பரமசிவன் பிராமி கல்வெட்டுகளை  ஆராய்கிறார்.  அதில் சமணர்கள் (அச்சணந்தி முனிவர்) வாழ்ந்தனர் எனும் குறிப்பு காணப்படுகின்றது. எனவே தமிழ் வாழ வைக்கும் முன்னரே வைணவம் பௌத்தர்களை வெற்றி கொண்டுள்ளது எனும் செய்தியை  அறிந்து கொள்ளலாம்.   பிற மதத்தவரை எதிர்க்கும் பொழுதெல்லாம் வைணவர்கள் நரசிம்ம மூர்த்தியை வழிபடுவர். அழகர் கோயிலும் நரசிம்ம வழிபாடு தனித்தன்மையுடன் விளங்குவதன் காரணம் புறமத எதிர்ப்பு என்று கூறுகின்றார்.

இலக்கியங்களில் அழகர் கோவில்:
சங்க இலக்கியத்தில் பெயர் சூட்டப் பெறும் ஒரே ஒரு வைணவத் தலம் இதுவேயாகும். பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் தலத்தினை மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகின்றார். பரிபாடல் திருமாலுடன் பலராமன் வழிபாடும் உடையது என்று கூறுகின்றது. சிலப்பதிகாரம் இக்கோயில் அமைந்த மலையினைத் திருமால் குன்றம் என வழங்குவதோடு,  இக்கோயிலினையும் குறிப்பிடுகின்றது. பூதத்தாழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் 108 பாசுரங்களில் இக்கோயிலைக் குறித்துப் பாடுகின்றனர். பூதத்தாழ்வார் அழகர் கோயிலை இருஞ்சோலை மலை என்று குறிப்பிடும் பொழுது மற்ற ஆழ்வார்கள் திருமாலிருஞ்சோலை,  மாலிருஞ்சோலை என்று குறிப்பிடுகின்றனர்.   பிற்காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்கள் இந்தப் பெயர்களை எல்லாம் தவிர்த்து இன்று வடமொழிப் பெயரைக்  கூறுகிறது இம்மலைக்கு மேற்குறித்த பெயர்கள் தவிர பெருவழக்கு பெற்றுள்ள புராணப் பெயர் விருஷபாத்ரி என்பதாகும் ரிச பாத்திரி, இடப மலை, விடை மலை என பல்வேறு வடிவங்களில் வழங்கும் இப்பெயராலேயே கோயில் தலபுராணம் விருஷ பாதிரி மகாத்மியம் என வழங்கப்படுகின்றது. அழகர் கிள்ளைவிடுதூது,  வருமதர்ம தேவன்முன் தவம்புரி வாய்மையால் திருநாமம் இடபாத் திரியெனப் புகல்வார் என்கிறது.

ஆண்டாரும் சமயத்தாரும்:
ஆண்டார் என்பவர் கோயிலின் ஆன்மீக அதிகாரத்தை வைத்திருக்கக்கூடிய ஆச்சாரிய பீடத்தில் இருப்பவர்கள். அவர்கள் பிராமணச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஆண்டார் தோழப்பர் என்றும் இரண்டு நிர்வாகத்தினர் தனது அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு செயல்பட்டு இருக்கின்றனர். இந்த நிர்வாகப் பிரிவு இப்பொழுது சிதைந்து அழிந்துவிட்டது என்று கூறலாம்.நிர்வாகத்தினர் இரண்டு பேருமே பிராமணர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களது அடியவர்களாக (சமயத்தவர்களாக) ஆக எல்லாச் சாதியினரையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  ஆண்டார் பரம்பரை வாக்கில் வருகின்றனர்.தொ. பரமசிவன் அவர்கள் ஆய்வு செய்யும் பொழுது 34வது வாரிசு இருந்துள்ளனர் என்று கூறுகின்றார். சித்திரைத் திருவிழாவின்போது இந்த ஆண்டார்கள் சமயத்தோடு பல்லக்கில் வருவர். இவர்களின் பணி என்று பார்க்கும்பொழுது ஆலயத் தூய்மை, பாசுரங்களை எழுதுதல், தனது அடியவர்களுக்கு முத்திரை ஆசி வழங்குதல் போன்றவை யாதும். ஆரம்பத்தில் பூமாலை கட்டுவது தான் இவரது பணியாக  இருந்திருக்கும் என்று தொ. பரமசிவன் அவர்கள் கூறுகின்றார். சமயத்தவர்கள் தங்கள் இனத்தவரை வைணவத்திற்கு மாற்றக்கூடிய ஒரு பணியைச் செய்கின்றனர். அடியவர்கள் தம் சமயத்தாரைச் சந்தித்து அவரிடம் முத்திரை பெறுவர் சமயத்தார் கையாலோ, பூ இதழ்களாலோ குங்குமத்தைத் தொட்டு நெற்றியில் திருமண் குறியிடுவார்.இதற்குப்  பூ முத்திரை என்று பெயர். அக்கினி முத்திரை பெரிய முத்திரை என்றும் கட்டி முத்திரை என்றும் வழங்கப்பெறும்.  இது கோயிலில் மட்டும் நடைபெறு.  சங்கு சக்கர அச்சுகளை நெருப்பிலிட்டுச் சுட்டு அடியவர் இரு தோளிலும் வைப்பர் சுட்ட புண் ஆறிய பின்னும்  சங்கு சக்கரத் தழும்புகள் அடியவர்கள் சாகும் வரை உடலில் மாறாது இருக்கும்.
             தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தேதின்
             கோயிற் பொறியாலே ஒற்றுண்டு
எனப் பெரியாழ்வார் திருப்பல்லாண்டு இதனைக் குறிப்பர்.  சமயத்தார்கள் ஆண்டாருக்குக்  கோமாளியாகவும் இருந்து தங்களது பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கோவிலும் சமூகத் தொடர்பும்:
அழகர் கோயிலோடு மேலை நாட்டு கள்ளர், இடையர்,  பள்ளர், பறையர் ஆகியோர் அழகர் கோயிலை ஒட்டிய சிற்றூர்களில் வாழும் பறையர் சாதியார் கொண்டுள்ள உறவு விளக்கி மதிப்பிடப்பட்டுள்ளது.  அழகர்கோயில் இறைவன் கள்ளழகர் என்ற பெயரிலேயே இன்று அழைக்கப்படுகின்றார் மதுரைக்குச் சித்திரைத்  திருவிழாவிற்கு அவர் பூண்டு வருகின்ற கோலம் கள்ளர் கோலம். தல்லாகுளம் பகுதியில் இந்தக்  கோலம் களையப்பட்டு பெருந்தெய்வ வேடத்தைப் புனைந்து கொள்கிறார்.  கள்ளர் சமூகத்தோடு அழகர்கோயிலுக்கு உள்ள உறவு என்ன என்பதைப்  பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய ஓர் இயல் இதுவாகும்.  

கள்ளர் கோலம்:
ஒரு கையில் வளைதடி எனப்படும் வளரித் தடி, மற்றொரு கையில் வளரித் தடியும் சாட்டைக்கம்பும்  ஆண்கள் இடுகின்ற ஒருவகையான கொண்டை,  தலையில் உருமால் காதுகளில் அடிப்புறத்தில் கல் வைத்துக் கட்டிய வளையம் போன்று கடுக்கன் இவற்றோடு கங்கன் எனப்படும் ஒரு கருப்பு புடவை சுற்றப்பட்டிருக்கும்.  கணுக்கால் தொடங்கி இடுப்புவரை அரை ஆடையாகவும்,  இடுப்புக்கு மேல்  ஆடையாகவும் சுற்றப்பட்டிருக்கும் இதுவே கள்ளர் திருக்கோலத்தின் தோற்றமாகும். வளரி என்ற ஆயுதம் கள்ளர் சமூகத்தினர் பயன்படுத்திய ஓர் ஆயுதம்.  1801 இல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி அதிகாரத்தின் போது இந்த ஆயுதம் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. மதுரை நாயக்கர் அரசு கடைசிவரை வெற்றி கொள்ளாதது கள்ளரைத் தான்.இவர்கள் நாயக்கர் அரசுக்குத்  தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது வரலாற்றில் உள்ளது. திருமலை நாயக்கர் மட்டும்தான் அழகர்கோயிலையும் மதுரை மீனாட்சி திருவிழாவையும் இணைத்த மன்னர்.  

அவர் காலத்துக்கு முன்பிருந்தே கள்ளர்களும்  கோவிலுடன் நல்லுறவைப் பேணி வந்திருக்கின்றனர். கள்ளர்களுடன்  ஒவ்வாத உறவுள்ள ராணிமங்கம்மாள்,  விஜயரங்க சொக்கநாத காலத்திலும்  கள்ளர் ஆதிக்கம் அதிகமாக செயல்பட்டு அழகர் ஊர்வலத்தை மறிக்கக்கூடிய அளவில் தொடர்ந்து ஆட்சியை எதிர்க்க கூடியவர்களாக வரலாற்றுப் பதிவு உள்ளது என்று தொ. பரமசிவன் அவர்கள் கூறுகின்றார்.  அதற்குப் பிறகு விஜயரங்க சொக்கநாதர் காலத்தில் உடன்பாடு ஏற்பட்டு அழகருக்குக் கள்ளர்களின் கோலத்தைத் தரித்து கள்ளரோடு உறவினைப் பேணி இருக்க வேண்டும். தங்கள் பகுதியிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் கள்ளர்கள் காவல் என்றொரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.  அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் தங்கள் உடமைகள் களவு போகாமல் இருக்க கள்ளரில் ஒரு சிலரைக் காவலராக ஏற்க வேண்டும்.  அதற்காக வரி கூட இவர்களுக்குச்  செலுத்தவேண்டும்.  கள்ளர் நாட்டு பகுதிகளைக்  கடந்து செல்லும் பயணிகளிடமும் அவர்கள் கட்டாயம் வரி வசூலித்தனர்.  பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் இடம் கூட இவ்வாறு வசூல் செய்தனர் எனக்  கூறுகிறது  இந்திய இம்பீரியல் கேசட் டியர்.இது இந்நாட்டின் மிகப்பெரிய போலீஸ் முறையில் எச்சம் என்றும் குறிப்பிடுகின்றது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பரகாலன் என்னும் திருமங்கை ஆழ்வார் கள்ளர் சாதியைச் சார்ந்தவர்.  திருமணக்கோலத்தில் மனிதனாய் வந்த திருமாலை வழிமறித்துக் கொள்ளையிட முனைந்த போது திருமால் இவருக்கு திருவடிப்பேறு காட்டி அடியாராக்கினார் என்னும் செய்தியையும் கூறுகின்றார் திருமங்கையாழ்வார்.  வேடுபறி என்னும் திருவிழா நிகழ்ச்சி பெரிய வைணவ கோயில்களில் நடந்து வருகிறது கள்ளருக்கும் கோயிலுக்கும் இவ்வளவு நெருங்கிய உறவு இருந்தாலும் முத்திரை பெற்ற வைணவ அடியார் ஆகி வைணவ சமய எல்லைக்கும் புகுவதில் இச்சாதியினர் நாட்டம் கொள்ளவில்லை. திருமாலை விடவும் பதினெட்டாம்படி கருப்பசாமி இவர்களின் வழிபாட்டுக்குப் பெரிதும் உரியவராக விளங்குகின்றார் என்று தொ. பரமசிவன் அவர்கள் கூறுகின்றார்.   கள்ளர் நாட்டிலேயே கருப்பசாமி பெரிதும் வழிபடப் பெறுகிறார்கள் என்பது ஹட்சனின் கருத்தும் கூட.   கிபி 1775 திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் விக்ரகங்களை ஆற்காட்டு நவாபின் படைகளும் ஆங்கிலப் படைகளும் கொள்ளையடித்துக் கொண்டு போய்விட்டன.  மீண்டும் படைகள் திரும்ப வடக்கு நோக்கிச் செல்லும்போது திருமோகூர் விக்கிரகங்களைக் கள்ளர்கள் கை வசப்படுத்திக்கொண்டு கோவிலில் கொண்டு வந்து சேர்ந்தவர்கள் என்று மதுரை தல வரலாறு கூறுகின்றது.   இதன் பயனாக திருமோகூரில் தேர் இழுக்கும் உரிமை கள்ளர்களுக்கே வழங்கப்பட்டது.   அழகர்கோயில்,  திருமோகூர் ஆகிய இரண்டு கோவில்களிலும் கள்ளர் வேடமிட்டு வந்தாலும் அழகர் கோயில் காலத்தால் முந்தையது என்று தொ. பரமசிவன்  அவர்கள் கூறுகின்றார்.   கோயிலும் இடையரும் அழகர்கோயில் இறைவனை வழிபடும் அடியவரின் இடையர் சாதியினரும் ஒருவர்.
             வாடா சீர் தென்னவன்
             தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய
             நல்லினத்து ஆயர்
என்று கலித்தொகை பாடல் இவர்கள் பாண்டியரோடு தோன்றியதாக இச் சாதியினரின் தொன்மையைக் குறிக்கிறது.   கோயில்கள் கற்றளிகளாக பெரிய அளவில் தமிழ் நாட்டில் எழுந்த பொழுது இச்சாதியினர் கோயிலோடு கொண்டுள்ள தொடர்பு மிகவும் நெருக்கம் ஆயிற்று.  ஏனெனில் கோயிலில் நந்தா விளக்கேற்ற விரும்புபவர்கள் தரும் ஆடு மாடுகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  பாண்டியர் கல்வெட்டு இந்தப் பணியாளர்கள் வெட்டிக்குடி என்று அழைக்கப் படுகின்றனர் என்று கூறுகின்றது.   தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் முதலாம் இராசராசன் காலத்தில் இவ்வாறு நெய் வழங்க ஒப்புக் கொண்டு ஆடு மாடுகளைப் பெற்ற நூற்றுக்கணக்கான இடையர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒருமுறை அழகர் மதுரைக்குச் சித்திரைத் திருவிழாவிற்காக வந்துகொண்டிருந்தார்.  வழியில் தல்லாகுளம் மாரியம்மன் கோயில் அருகில் ஓர் இடைச்சி மோர் விற்றுக் கொண்டிருந்தார்.   களைப்பு தீர அவளிடம் மோர் வாங்கி குடித்தார் அழகர்.  திருவிழா முடிந்து திரும்பும்போது குடித்த மோருக்குக்  காசு தருவதாக சொன்னார்.  ஆனால் திரும்பும்போது கையில் காசில்லாததால் கள்ளர் வேடம் போட்டுக் கொண்டு தப்பியோடி விட்டார்.கள்ளர் வேடக்  கதை இது.   இந்தக்  கதை பிறப்பிற்கு இடையர்கள் கூறும் ஒரு காரணம் உண்டு.   அழகரின் கள்ளர் வேடம் கள்ளர்சாதி யாரோடு தொடர்பு கொண்டது.   கள்ளர் வேடம் காரணமாக அழகருக்கும் கள்ளர் சாதியாருக்கும் ஏற்பட்ட நெருங்கிய உறவினை வைணவப் பற்றுள்ள  இடையர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவே கள்ளர் அழகர் வேடம் போடுவதற்கான காரணத்தினை தங்கள் சாதியுடன் இணைப்பதற்கு அவர்கள் முயன்று இருக்க வேண்டுமென்று தொ. பரமசிவன் அவர்கள் கூறுகின்றார்.  

கோயிலும் பள்ளர் பறையரும்:
பழங்குடியினராக இருக்கும் பள்ளர் பறையர் இரு சாதியினரும் வயல் வேலை செய்பவர்கள் என்று ஹட்சன் குறிப்பிடுகிறார்.   தொல்காப்பியம் உழுதொழில் செய்வோரின் தெய்வமாக இந்திரனைக் குறிப்பிடுகின்றது.   சங்க இலக்கியத்தில் இந்திர வழிபாடு குறித்த செய்தி இல்லை.  ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூர் எடுத்த காதையில் இந்திர விழா குறித்த செய்தியை அறிய முடிகிறது.   சிலப்பதிகாரத்தில் இந்திர விழா அரசரும் வணிகரும் நடத்திய விழாவேயன்றி மருத நில உழவர்களுக்கு அந்த விழாவில் பங்கு இல்லை. சிலம்பின் காலத்திலேயே இந்திர வழிபாட்டில் இருந்து நீக்கிவிட்டனர்.   விஷ்ணுபுரத்தில் கிருஷ்ணனின் இந்திர எதிர்ப்பும்,  தமிழகத்தில் பலராம வழிபாட்டின் அறிமுகமும் மருதநிலத்து உள்ளவரை இந்திர வழிபாட்டில் இருந்து கிருஷ்ண வழிபாட்டுக்கு இழுக்கும் முயற்சி பரிபாடல் காலத்திலேயே தமிழகத்தில் தொடங்கி விட்டது என்பதற்குச் சான்றுகள் ஆகும்.    

அழகர்கோயில் தான் தமிழ்நாட்டில் பலராம வழிபாட்டின் மையமாகத் திகழ்ந்திருக்கவேண்டும்.   கலப்பை ஏந்திய பலராமனைக் காட்டி இந்திரவிழா வழிபாட்டினரான அவர்களைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியைத் தமிழ்நாட்டு வைணவம் மேற்கொண்டிருக்கிறது.   ஆழ்வார் பாசுரங்களில் பலராம வழிபாடு குறித்த எந்தக் குறிப்பும் இல்லை.   ஆழ்வார்களின் காலத்திற்கு முன்னரே இத்தலத்தில் பலராம வழிபாடு கிருஷ்ண வழிபாட்டில் கலந்து மறைந்து விட்டது.   தமிழ்நாட்டு வைணவம் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த வரை தம் சமய எல்லைக்கு ஈர்த்துக் கொள்வதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு.   வைணவ சமய சீர்திருத்தவாதியான ராமானுஜருக்கு முன்னரே ஆளவந்தாரின் மாணவர்களில் ஒருவரான மாறனேரி நம்பி என்பவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்.   இராமானுசர் அந்நெறியைத் தொடர்ந்தார். தாழ்த்தப்பட்டவரைச் சக மனிதராக பாவித்து அவர்களோடு தோழமை பூண்டது தமிழ்நாட்டு வைணவத்தின் சிறப்பு என்றாலும் தென்னிந்தியாவில் பிராமணர் வருகைக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆக கருதப்படும் இவர்கள் பிராமணர்கள் பெற்றிருந்த இடத்தைப் பெற்று இருந்தனர்.   அவர்கள்  நில உடைமையாளர் ஆகவும் அரசர்களுக்கும் ஆலோசனை வழங்குபவராக சமயத் தலைவர்களாகவும் முதன்மை பெற்றவர்களாக திகழ்ந்தனர்.   அவர்களின் உயர்வு குறித்த தொல்லெச்சங்கள் நம்மிடையே இன்றளவும் காணப்படுகின்றன.  மதுரை கள்ளர்களே தெய்வ வாக்கு சொல்பவராகவும் இருந்தனர்.

 திருவாரூர் கோயில் திருவிழாவில் ஒரு பறையர் யானை மீதேறி வருவதையும்,  சென்னை வாணிக சாதியினரில் தன்னுடைய வீட்டுத் திருமணத்திற்கு அவர்களிடம் அனுமதி பெறுவதையும் மாரியம்மன் கோயில் - பறையர்கள்  கோயில் மணமகனாக இருப்பதையும்,  கேரளத்தில் பகவதி கோயில்களில் ஆரியப் பிராமணர்கள் வருகைக்கு முன்னர் பகவதி கோயில்களில் அவர்களே பூசை செய்பவராக இருந்திருக்க வேண்டும் என்று கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகின்றார்.  தொ. பரமசிவன் அவர்கள் பார்ப்பானுக்கும் பறையன்  மூப்பு.   பறையன்  கேட்பார் இல்லாமல் கீழ்சாதி ஆனான்  என்னும் சொலவடை தென் மாவட்டங்களில் பெருக வழங்குகின்றது என்று கூறுகின்றார்.  இந்த வழக்கு மரபு அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை உணர்த்துகின்றது.  உயர்ந்த நிலையிலுள்ள பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டதால் சாதி அடுக்குகளிலிருந்து அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.   பின்னுக்குத் தள்ளப்பட்டன அவர்களின் உரிமையை வலியுறுத்த எவரும்  இல்லாத காரணத்தால் கோவிலில் நுழைவதற்குக் கூட அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. அழகர்கோயிலில் , பறையர் கொண்ட ஈடுபாடு அவரிடமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிவட்டம் மரியாதை கூடத் தொல்லெச்சங்களில் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்கிறார்.

கோயிலும் வலையரும்:
அழகர் மலையை ஒட்டிய கிராமங்களில் கள்ளர் சாதியினரை அடுத்து வலையர் என்னும் சாதியினர் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர் தங்களுடைய அழகர்சாமி மற்றவர்கள் பறித்துக் கொண்டார்கள் என்ற கோபம் இச் சாதியினருக்கு இருக்கிறது.   கோயிலோடு இவர்கள் கொண்டுள்ள தொடர்பை வரலாற்றுப் போக்கில் அறிய வேறு நடைமுறை சான்றுகள் இல்லை.   ஒரே ஒரு எழுத்து சான்று மட்டுமே கிடைத்துள்ளது.   1591 இல் வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் திருமலைநாயக்கர் வழங்கிய பட்டயம்.  அழகர்கோயில் தங்கள் சாதியினருக்கு உரியது  எனும் நோக்கில்  ஒரு கதையை அவர்கள் தங்களுக்குள் வழங்கிக் கொள்கின்றனர்.   மலையடிவாரத்தில் கிழங்கு தோண்டும் பொழுது வலையன் ஒருவனால் கண்டெடுக்கப்பட்டது தான் அழகர்சாமி. போர்க் குணம் நிறைந்த வலிமை படைத்த கள்ளர்களை ஏற்றுக்கொண்ட அழகர்கோயில் உலகியல் அறிவு குறைந்த வலிமையற்ற அவர்களை எளிதாகப்  புறம்தள்ளியது என்று கூறுகின்றார் தொ. பரமசிவன்.  

திருவிழாக்கள்:
கோயிலுக்கும் சமூகத்திற்குமான உறவைக் காத்தும் வளர்த்தும் மறுவினை திருவிழாக்கள் திருவிழாக்கள் தொலைவில் உள்ள மக்களையும் ஈர்த்து நல்லுறவை வளர்க்கும் ஆற்றல் மிகுந்தவை சமூக தொடர்புடைய திருவிழாக்கள் சமூக தொடர்பு இல்லாத திருவிழாக்கள் என்று இரு வகையான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன சித்திரைத்திருவிழா கோயிலுக்கும் சமூகத்திற்குமான தொடர்பு வாயில்களாக அமைந்து சுற்றுவட்டார மக்களை ஈர்க்கும் தன்மை உடையவையாக விளங்குகின்றன

முடிவுரை:
கோயில் பற்றிய ஆய்வுகள்  நாட்டு வரலாற்றாய்வாக மட்டுமன்றி சமூகத்தின் பண்பாடுகளை விளக்கக்கூடிய திறமுடையன என்பதை அறிந்து இனி வரும் இளம் ஆய்வாளர்கள் கோயில்கள் குறித்த ஆய்வுகளில் வெறும் கட்டிடக்கலை சிற்பக்கலை சிறப்புகளை மட்டுமே ஆராய்வதைத் தவிர்த்து கோயிலை ஒட்டி எழுந்த சமூக நம்பிக்கைகள் திருவிழாக்கள் சமூகத்தில் உள்ள அடியார்களுடைய உறவுகள் ஆகியவற்றை விளக்கக்கூடிய வகையினில் தொ.பரமசிவன் அவர்களின் இந்த ஆய்வின் அடிப்படையில் இன்னும் பல்கிப் பெருக வேண்டும் என்பதே இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.


----




No comments:

Post a Comment