Saturday, January 22, 2022

நகைச்சுவை ஒரு “கேட்கத்தக்க எதிர்ப்பு,” தமிழர்கள் அதிகம் சிரிக்க வேண்டும்

— முனைவர் ஆனந்த் அமலதாஸ்




ஒரு குறிப்பிட்ட சமுகத்தைச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை அந்தச் சமூகத்தின் உறவு முறையை அதிகம் வெளிப்படுத்தும். அவர்களின் நகைச்சுவைத் தொகுப்பிலிருந்து அந்தச் சமுதாயத்தின் இயல்பைப் புரிந்து கொள்ள முடியும்; அளவிடவும் முடியும்; அதாவது அந்தச் சமூகத்தில் உள்ளடங்கிய பூசல்கள், அவர்கள் அறிவு அல்லது சமூகவாழ்வு நிலையைக் கணிக்க முடியும். எனவே ஒரு சமுதாயத்தைப் புரிந்து கொள்ள அங்கே எப்படிப்பட்ட நகைச்சுவை அவர்களைச் சிரிக்க வைக்கிறது என்பதும் ஒரு வழி என்று சொல்லலாம். 

படித்தவர்கள் அல்லது நகரத்தில் வாழும் மக்கள் கிராமத்து மக்கள் நகைச்சுவையைச் சுவைக்க மாட்டார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் எல்லாப் பண்பாட்டிலும் மக்களிடம் நகைச்சுவை உணர்வு உண்டு. அது மொழி சார்ந்த சிலேடையாக இருக்கலாம், மதத்தலைவர்களின் முரண்பாடான வாழ்வியலைக் கேலி  செய்வதாக இருக்கலாம் (போதிப்பது ஒன்று செயல்படுவது வேறொன்று), அல்லது செல்வாக்குடைய நிலக்கிழார்களின் பாலியல் உறவின் இரட்டை வேடமாக இருக்கலாம். இது அச்சமுதாயத்தில் மறைந்திருக்கும் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தும். அதனால் ஒதுக்கப்பட்ட ஏழை மக்கள் தங்கள் எஜமானரைப் பற்றிக் கூறும் நகைச்சுவையை அங்கே காணலாம். இத்தகைய நகைச்சுவை ஓரங்கட்டப்பட்ட ஏழைகளின் எதிர்ப்பு ஆயுதம்.

சமஸ்கிருத நாடகங்களில் வரும் நகைச்சுவை பாத்திரத்தை (விதூஷகா) பற்றி அதிகம் ஆய்வுக் கட்டுரைகள் உண்டு. தெனாலி இராமன் கதைபற்றி அதிகம் கேட்டிருக்கிறோம். ஆனால் தமிழ் மரபில் நகைச்சுவை பற்றிய வரலாற்றை அதிகம் ஆவணப்படுத்தவில்லை. 1992-இல் காப்ரியெல்லா பெரோ-லுட்சி (Gabriella Eichinger Ferro-Luzzi, The Taste of Laughter) என்ற ஆய்வாளர் தமிழ் நகைச்சுவையின் சில அம்சங்கள் என்ற நூலை வெளியிட்டார். தமிழின் சமகால இலக்கியங்களை அலசிப்பார்த்து - அதாவது அகிலன், புதுமைப்பித்தன், மரினா போன்றவர்களின் நூல்களிலிருந்தும், ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களிலிருந்தும் நகைச்சுவைத் துணுக்குகளைச் சேகரித்து, ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கிறார். 

இந்த நூலின் முன்னுரையில் மேற்கத்திய நாட்டுச் சிந்தனையாளர்கள் உருவாக்கிய கோட்பாடுகளை விமர்சனம் செய்து அவைகள் முழுமையானது அல்ல என்றும் பதிவு செய்துள்ளார். நவீனக் காலத்தில் அறிவியலோ, தர்க்கமுறை அல்லது மெய்யியலோ அரிஸ்டாட்டிலையும் அவரது மாணவர்களையும் மையமாக வைத்துத்தான் வளர்ச்சி காண முடியும். எடுத்துக்காட்டாக “கதார்சிஸ்” (Catharsis) என்ற கருத்து கிரேக்க துன்பக்கதை மையங்கொண்ட நாடகங்களைப் பார்த்து விட்டு யாருடைய ஆன்மா தூய்மையாக்கப்பட்டது என்று சொல்லச் சான்றுகள் ஏதுமில்லை. அந்தக் கருத்தின் நீண்ட கால வெற்றி அந்தக் கிரேக்கச் சொல்லின் ஈர்ப்பாக இருக்க வேண்டும். சாமானியர்களின் சொற்களஞ்சியத்தில் இல்லாத வார்த்தை அதனுடைய ஞானத்தைக் கண்டு திகைத்துப் போயிருக்க வேண்டும்.

19-ஆம் நூற்றாண்டில் “பிரசர் குக்கரை” முன் மாதிரியாக வைத்து பல்வேறு கருத்தியல்கள் எழுந்தன. அதன்படி நகைச்சுவை மனநிலை சமூக நிலையின் பணியாகும் என்று சொன்னார்கள். பிராய்டுவின் கருத்துப்படி நகைச்சுவை அடைத்து வைக்கப்பட்ட உணர்வுக்கு விடுதலை கொடுக்கிறது. அதாவது, அவர் இதன் மூலம் குறிப்பிடுவது பால் உணர்வையும், பகைமை உணர்வையும் என்பது   எல்லோரும் அறிந்ததே. ஆனால் பாலுறவு தவிர்த்தலும் அமைதி நிலையும் அதிக மனவழுத்த நிலையை விளைவிக்கிறது என்ற கருத்துக்குச் சான்று ஏதும் கிடையாது. நகைப்பு-விகட பேர்வழிகளும்,  நகைப்பையும் கேலிக்கூத்தையும்  செய்யாதவர்களை விடவும்  நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. 

இந்த “கத்தார்ட்டிக்” - “ஹைட்ராலிக்” - உவமைகள் உணர்ச்சியின் தேவைகளைவிட அறிவுத் திறனின் தேவையை விளக்கப் பயன்படலாம். அப்படியானால் நகைச்சுவைக்குப் பகுத்தறிவு ஆதிக்கத்திலிருந்து தற்காலிகமாக ஒரு விடுதலை கொடுக்கலாம். இத்தகைய கருத்தியல்கள் பகுத்தறிவுச் சிந்தனையின் ஆளுமையை மிகைப்படுத்துகின்றன. நெடுநேரச் சிந்தனையால் உண்டாகும் களிப்பைப் பகுத்தறிவு சிந்தனைகளோடு குழப்பி விடுவதாகத் தெரிகிறது. 

மன அழுத்தமும் அதன் விடுதலையும் என்ற அடிப்படையில் எழுந்த உவமை நமது வரையறை  தாண்டிய மனநிலை குறித்து பொருத்தமாக விளக்கம் தரலாம். அப்படிப்பட்ட பணி சார்ந்த நகைச்சுவை கருத்தியல்களைத் தவறென்றும் நிரூபிக்க முடியாது. இதைச் சமூக கட்டமைப்பு வகை சார்ந்த நகைச்சுவைகளை அலசிப்பார்க்கும் பொழுது இந்தக் கருத்தின் அடித்தளம் அற்றவை என்பது தெளிவாகிறது. உலக அளவில் சிறுபான்மையான சமூகங்களே  இத்தகைய சமூகக் கட்டமைப்பு சார்ந்த நகைச்சுவையில் ஈடுபட்டுள்ளனர் என்பதால் பெரும்பான்மையான சமூகங்கள் இதன் பலன் இன்றி எப்படிச் சமாளிக்கின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக கத்தோலிக்கப் பகுதி ஜெர்மனியில் “கார்னிவல்” கொண்டாடப்படுகிறது. புராட்டஸ்டண்ட் பகுதி ஜெர்மனியில் இந்த விழாவைக் காணமுடியாது. ஆனால் இங்கும் சமூகக் குழப்பமும், மனநிலைக் கோளாறும் அதிகமாகக் காணப்படுகிறது. தென் இந்தியாவில் ஹோலி திருவிழா கொண்டாடப்படுவதில்லை. வட இந்தியாவில் மக்கள் சமூகமாக சேர்ந்து களியாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனால் பாதுகாப்பு மூடிகள் தடுப்பு (அடைப்புத் தடுக்கு - Safety Valves) அடிப்படையில் நகைச்சுவையை விளக்கும் கருத்தியல்கள் இதைக் கவனிக்க வேண்டும். 
     
சில கருத்தியல்கள் நகைச்சுவையை “சரி செய்யும் மூடியாக,” “சமாளிக்கும் கருவியாக” பார்க்கின்றன. அதாவது, சோகமாக உள்ளவரைத் தட்டிக்கொடுத்து அவருடைய வருத்தத்தை அகற்ற முடியும். ஒரு கேலி விகடம் சொல்வது பல வழிகளில் ஒன்று. தானாகவே ஒருவர் தனது துயரத்தைப் பற்றி கேலிக்கூத்து செய்கிறார் என்பது வண்டி இழுக்கும் குதிரைக்கு முன் வண்டியை வைப்பது போல் இருக்கிறது. தனது துயர நிலைபற்றி நகைத்துப் பேசுவது என்றால் ஏற்கனவே அவர் தனது சோக நிலையைச் சரிசெய்து கொண்டார்,  அல்லது தான் அவ்வாறு வெற்றிகண்டார் என்று வெளிக்காட்ட விரும்புகிறார். அழுபவர் யாரும் “ஜோக்” சொல்வதில்லை. நகைப்பூட்டிப் பேசுபவர் அப்பொழுதுள்ள நிகழ்விலிருந்து ஒரு நுட்பத்தைப் பெறுகிறார். அது மகிழ்ச்சியானதாகவோ, துயரமானதாகவோ, சமநிலையாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, மழையில்லா காலத்தில் வறட்சியைப் பற்றி ஒருவர் நகைத்தால் அவர் அந்தச் சூழ்நிலையை விளக்குகிறார் என்று பொருள். அதில் அவர் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர்  கேட்பவரின் துயரத்தை நீக்குவதற்காக நகைச்சுவை விகடத்தைச் சொல்கிறார் என்பதற்குச் சான்று இல்லை. 

உலக அளவில் பல்வேறு சமூகத்தினர் அவர்கள் மரபில் நகைச்சுவை எந்த அளவில் இடம் பெற்றிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக யூத மரபில் நகைச்சுவையின் பங்கை பீட்டர் பெர்கர் (Peter L. Berger) என்பவர் தனது நூலில் (மீட்பளிக்கும் நகைச்சுவை, 1997) வெளியிட்டுள்ளார். ஏன் யூதர் மத்தியில் அதிக நகைச்சுவை வரலாறு உண்டு என்பதற்கு அவர் கூறும் காரணம் கவனிக்கத்தக்கது.

முதலில், நகைச்சுவையைச் சாதுரியமாகச் சொல்லத் தெரிய வேண்டும். யூத மரபினர் சொல்வடிவம் கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள்; இரண்டாவது, யூதர்கள் வரலாற்றில் மிகவும் ஓரங்கட்டப்பட்டவர்கள் - அதனால் அதிகம் துயருற்றவர்கள். அத்துயரைச் சமாளித்து வாழ்வை எதிர்கொள்ள நகைச்சுவை உதவியது. இந்த வரம்பு நிலை அம்சம் நகைச்சுவைக்கு இடம் கொடுத்தது என்கிறார்.

விவிலியத்தில் வரும் ஆபிரகாமின் மனைவி சாரா “யாவே” கொடுத்த வாக்குறுதியைக் கேட்டுச் சிரித்தாள் என்று பதிவாகி உள்ளது. அதாவது, 90 வயதான கிழவி, மலடி என்று சமூகம் பழித்த ஒருத்தி  அந்த வாக்குறுதியைக் கேட்டுச் சிரித்தாள் என்று கூறுகிறது. விவிலிய அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக சாரவை கடவுள் வார்த்தையில் நம்பிக்கை இழந்ததாகக் குறைகூறி வந்தனர்.

ஆனால் சமகாலப் பெண்ணிய வல்லுநர்கள் அதற்கு வேறு ஒரு விளக்கம் கொடுத்து சாராவை மீட்டெடுத்துள்ளார்கள். சாராவின் சிரிப்பு நம்பிக்கையோடு கொண்டிருந்த எதிர்ப்புக் குரல் என்பர். இத்தனை ஆண்டுகளாக சமூகத்தில் மலடி என்று இழிவுபடவைத்த இறைவனிடம் தனது சிரிப்பால் தனது எதிர்ப்பையும் சுட்டிக் காட்டுகிறாள் என்பது இதன் புதிய விளக்கம்.

இந்த விளக்கம் தமிழர்களான நமக்கு ஒரு பாடமாய் அமையும் என்பதற்காக இந்த விவிலிய எடுத்துக்காட்டு இங்கு இடம் பெறுகிறது. நகைச்சுவையும் நம்பிக்கையும் இணைந்துபோகலாம். ஓரங்கட்டப்பட்டவர்களின் சிரிப்பு அவர்கள் துயரத்தை எதிர்கொள்வது, நம்பிக்கையை உள்ளடக்கியது. நம்பிக்கை இழந்தவர் சிரிக்க மாட்டார்கள்.

தமிழர்கள் விஜயநகர ஆட்சிக்காலம் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முழுவதும் அடிமையான நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். சுதந்திரம் பெற்ற பிறகும் அவர்கள் நிலை பெரிதாக மாறிவிடவில்லை. கீழ்வெண்மணியூரில் ஐம்பது பேர்கள் எரிக்கப்பட்டது நமது காலத்தில் நடந்த நிகழ்வு.  2009-இல் தமிழருக்கு நடந்த இனப்படுகொலை நாம் அறிந்த ஒன்று; அமைதியாகப்  போராடிய தூத்துக்குடி மக்கள் அலங்கோலமாய்ச் சுட்டுக்கொல்லப்பட்டதை மறந்து விட முடியாது. இந்தப்பட்டியல் மிக நீண்டது. 

இன்றைய அளவில் தமிழ் நாட்டில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு? இந்தச் சூழ்நிலையில் “ஆறுவது சினம்” என்று ஒளவையாரைத் துணை தேடுவது பொறுப்பற்ற மனநிலை. இதெல்லாம் தமிழருக்கு எச்சரிப்புத் தரவுகள். இதற்குப் பதில் நம்பிக்கையற்ற நிலை அல்ல. நம்பிக்கையோடு சேர்ந்த சிரிப்பு தேவை. மீண்டெழ முடியும் என்ற நம்பிக்கை. அதன் வழியாக எழுவதுதான் நகைச்சுவை. பொழுது போக்குக்காக சினிமா உலகிற்குத் திரும்புவதை ஏற்றுக் கொள்ள முடியாதது.

முரண்பாட்டைப் புரிதலில் நகைச்சுவை எழும் என்பர். ஆனால் பலர் இந்த முரண்பாட்டு நடைமுறையைப் புரிந்து கொள்வதில்லை. “தமிழ் வாழ்க” என்று கார்ப்பரேசன் கட்டிடத்தில் எழுதிவிட்டு சென்னையில் வாழ்வோரில் மூன்றில் ஒரு பங்கு சேரியில் வாழ்ந்தால் எப்படித் தமிழ் வாழும்? சென்னையின் “கானா” பாடகர்களுக்குப் பரிசு கொடுத்துப் பெருமைப்படுவது ஒரு முரண்பாடு. அவர்கள் வாழ்வது கல்லறையின்/சுடுகாட்டின் பாதையோரங்கள். அவர்கள் பாடல் பயிற்சி பெற்றது இறந்தவரை எடுத்துச்செல்லும் ஊர்வலத்தில் கேட்கும் இசைக்கருவிகளின் முழக்கம். இது தமிழரின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும்.

தமிழ்மொழி உலகின் தொடக்கம் என்று பாடுவது ஒரு பக்கம். இந்தமொழி ஆட்சித்துறையில், நீதித்துறையில், கோவில் மொழியில் இடம் பெறவில்லை, ஆனால் எதிர்க்கப்படுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் எல்லோர் செவியிலும் ஒலிக்கிறது. இருப்பினும் தீண்டாதவர் என ஒதுக்கப்பட்டோர் நிலை வற்றாத நதிபோல் வரலாறு ஓடுகிறது.

மோயிசன் செங்கடலைக் கடந்து இஸ்ரயேல் மக்களை மீட்டார் என்பது விவிலியத்தில் கூறும் பெரிய சாதனை என்பர். ஆனால் நமது நாட்டு நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஒரு பெரிய சாதனை அல்ல. நமது நாட்டின் சில தெருக்களில் அடித்தளச் சமமாக நடந்து போவது அதைவிடக் கடினமானது. இந்நிலை நம்மைச் சிரிக்க வைக்க வேண்டும். நம்மிடம் திறமைகளோ அதற்கான வழிமுறைச் சொத்துக்களுக்கோ பஞ்சமில்லை. நம்மிடம் நகைச்சுவை உணர்வுக்குக் குறைவில்லை. அது ஏதோ மேலெழுந்த வாரியாக, பொழுதுபோக்காக அமைந்து விட்டது. சிந்திக்கத் தூண்டவில்லை. தன்னம்பிக்கையுடன் சிரிக்கத் தூண்டவில்லை. அதனால்தான் நாம் நம்பிக்கையோடு அதிகம் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அழகியலின் சுருக்கம்:
அழகியல் என்றதும் மூன்று அம்சங்களை நினைவூட்டுகிறது. 
ஒன்று: அழகை விரும்பிய ஆர்வமான தேடல்;
இரண்டு: நகைச்சுவையால் அடிக்கடி மனம் விட்டுச் சிரித்தல்; 
மூன்று: நெருக்கமான உறவு தேடும் தீர்க்கமுடியாத தாகம். 
எந்த ஒரு சமூகமும் - நம்பிக்கை வாதிகளோ அல்லது பகுத்தறிவுவாதிகளோ - மறுக்க முடியாத ஒரு வாழ்க்கை அனுபவம்.

அழகைத் தேடும் உணர்வு என்பது சிதறிக்கிடக்கும் வாழ்வு அம்சங்களின் பின்னால் புதைந்து மறைந்திருக்கும் முழுமையைக் காணும் திறமை என்று பொருள். உண்மையான அழகின் அனுபவம் நமது புலன்களை மழுங்கும் அளவிற்கு மயக்கத்தில் தள்ளுவதல்ல. மாறாக அழகிய பொருட்கள், எழில்மிகு இயற்கை சூழ்நிலையில் பதுங்கியிருக்கும் முரண்பாடான அசிங்கத்தைக் கண்டுணர நமது புலன்களைக் கூர்மையாக்குகிறது. அழகைக் கண்டு அனுபவிக்கத் திறமை கொண்டவர்தான் அதற்கு முரணான அநாகரிகத்தை, அநீதியை, அடிமைப்படுத்தும் தீயசக்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் கூட நமது அழகு அனுபவத்தைச் சீர்படுத்துவதற்கு நகைச்சுவை இயல்பும் வேண்டும். வரலாற்றில் சர்வாதிகாரிகள் அனைவரும்; நகைச்சுவையாளரை, கேலிச்சித்திரம் வரைபவரை அடக்கி வைப்பார்கள். ஏனெனில்; அவர்கள் அழகு வடிவத்தில் தோன்றும் மனித விலங்கின் ஆடையற்ற அம்மணமான நிலையை வெளிக்காட்டி விடுவார்கள்.

நமது அழகு தேடும் உணர்வு சிறப்பான எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்வது என்று புரிந்து கொண்டால், நமது தோல்விகளையும், வாழ்வின் பின்னடைவுகளையும் வென்று விடலாம் என்ற நிச்சயமான நிலையைக் கொண்டாடும் நம்பிக்கையைக் கொடுப்பதுதான் நகைச்சுவை. ஆனாலும் கூட அன்புதான் இவற்றை நிறைவு படுத்தும், நெருங்கிய நட்புதான் அதற்கு முழுமை தரும். அன்பில்லை (காதல்) என்றால் இசையும் கூட ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் ஆகும். 

No comments:

Post a Comment