Wednesday, January 5, 2022

நம் ஊர் நம் பெருமை!



  -- முனைவர்.க.சுபாஷிணி


குறிப்பு: இக்கட்டுரை, டிசம்பர் 11-12, 2021 இல் நடைபெற்ற 'அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகத்தின் ஆண்டு விழா' மலருக்காக நான் அனுப்பியது; முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

ஊர் பெருமை பேசுவது என்பது நம் எல்லோருக்குமே இயல்பாக நடப்பது தான். எங்க ஊரில் ஓடுகின்ற ஓடையில் உள்ள தண்ணீரைக் குடித்தால் அமிர்தமாக இருக்கும்.. என்று சொல்வோர் சிலர். எங்க ஊர் அக்கா கடை இட்லி மாதிரி வேறு எந்த ஊரிலாவது கிடைக்குமா.. என்று கூறுவர் சிலர். எங்கள் ஊர் கோயில் கோபுரம் போல வேறு எந்த ஊரில் இருக்கிறது, என்று கட்டிடக்கலையை ரசிப்போர் சிலர். எங்க ஊர் தறியில செய்த சேலை போல வருமா, என்று தங்கள் சேலையைச் சுட்டிக் காட்டி பெருமை பேசும் மங்கையர் பலர். இப்படி மிக இயல்பாகவே நாம் பிறந்து வளர்ந்த ஊர் சார்ந்த சிறப்புகளைப் பிறரிடம் கூறி விவரித்து பெருமை பேசி அதில் மகிழ்ச்சி காணும் இயல்பு நம் எல்லோருக்குமே உண்டு.




`நம்ம ஊர் ஏதாவது ஒரு பெருமையைத் தன்னுள்ளே வைத்துக் கொண்டிருக்கும்`, என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அந்தப் பெருமைகளை நமது நண்பர்களிடமும் சுற்றத்தாரிடமும் அயலாரிடமும் பேசி மகிழும் சுகம் அலாதியானது. 

முன்பெல்லாம் ஊர் பெரியவர்களும் வீட்டுப் பெண்களும் திண்ணையில் அமர்ந்து தங்களுக்குத் தெரிந்த தங்கள் ஊர் பெருமையைப் பேசி பெருமை கொள்வார்கள். இளைஞர்கள் ஊர் மத்தியில் அல்லது முச்சந்தியில் உள்ள அரச மரம், ஆல மரம்  அடியில் அமர்ந்து  தங்கள் ஊர் பெருமையைப் பேசிக்கொள்வார்கள். திருமணம், காதுகுத்தல் போன்ற குடும்ப சடங்குகள் நிகழும் விழாக்களுக்குச் செல்பவர்களும் அங்கு உறவினர்களுடனும் நண்பர்களுடனும் அமர்ந்து தம் ஊர் பெருமைகளைப் பேசி மகிழ்வார்கள். 

இன்று நமக்கு இணையமும், கணினி தொழில்நுட்பமும் கதை பேச ஒரு புதிய வெளியை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்த இணைய யுகத்தில் இணையம் வழியாக நமக்குத் தெரிந்த செய்திகளை நாம் ஒருவருக்கு மற்றொருவர் எனப் பகிர்ந்து கொள்ள வெவ்வேறு வகைச் சமூக ஊடகங்கள் நமக்குக் கிடைக்கின்றன. ஒருவகையில் சொல்லப்போனால் சமூக ஊடகங்கள் இல்லாமல் நாம் இல்லை எனும் அளவிற்கு இணையத் தொழில்நுட்பம் கைபேசி, கணினி போன்ற கருவிகளைத் துணையாகக் கொண்டு நாம் சலிக்காமல் அலுக்காமல் கதை பேசவும் நம் ஊர் பெருமையைக் கூறிக் கொள்ளவும் பெரியதொரு வாய்ப்பை நமக்கு வழங்கியிருக்கின்றது. 

இந்த நல்வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா? 
நம் ஊர் பெருமையை நாமும் அறிந்து மற்றவரும் அறியும் வழி சமூக ஊடகங்களில் செய்திகளைப் பரவலாக்கம் செய்யும் முயற்சியை நாம் சரியாக மேற்கொள்கின்றோமா? 
நாம் பிறந்து வளர்ந்த மண்ணின் பெருமையைச் சரியாக உலகுக்கு எடுத்துக் கூறும் பணியை நாம் செய்கின்றோமா? 
இப்படி நாம் பெருமை பேசி மகிழும் நமது செயல்களினால் நமது ஊருக்கு நன்மைகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? 
இந்தக் கேள்விகளை நாம் நம்மை நோக்கிக் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும்.

நமது ஊர் பெருமை பேசும் பேச்சு வெட்டிப் பேச்சாக இல்லாமல் ஆக்ககரமான செயலுக்கு முன்மாதிரியாகவும் உந்துதலாக அமைந்திருக்க வேண்டும். இதனை எப்படிச் செய்வது?

ஓர் ஊர் இருக்கின்றது என்றால் அந்த ஊர் உருவாக்கம் பெற்ற கதை, செவிவழிச் செய்திகள், அதன் வரலாறு, அந்த ஊரில் இருக்கின்ற வழிபாட்டுத்தலங்கள், ஆறுகள், குளங்கள், குட்டைகள், மலைகள், குன்றுகள், குகைகள், கோட்டைகள், சாலைகள், தெருக்கள் மட்டுமன்றி என்றோ ஒரு நாள் நமது மூதாதையர்கள் உருவாக்கிச் சென்ற நடுகல் கல்வெட்டுகள், தொல்லியல் எச்சங்களாக இருக்கின்ற கற்படுக்கைகள், கல் வட்டங்கள், பாறையின் மேல் கீறப்பட்ட குறியீடுகள், பாறையில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள், ஊரின் எல்லையில் இருக்கும் எல்லைச்சாமி, ஊரில் மக்கள் இளைப்பாற நெடுநாள் வளர்ந்து நிற்கும் நிழல் கொடுக்கும் மரங்கள் என நம் ஊரின் சிறப்புக்குப் பங்களிக்கும் ஒவ்வொரு விசயத்தையும்  நாம் உலகுக்கு எடுத்துச் சொல்லி, அதைப் பற்றிய ஓர் ஆவணப்பதிவை உருவாக்கி வைக்க வேண்டியது அவசியமல்லவா? இதனை எத்தனை பேர் செய்கிறோம்? 

`வாய்ச்சொல்லில் வீரரடி` என்ற கூற்றிற்கு ஒப்ப வீண் பெருமை மட்டும் பேசுவதால் நம் ஊரின் பெருமையை நம்மால்  பாதுகாத்து விட முடியாது. இதற்கு முறையான திட்டமிடல் என்பது அடிப்படையான ஒரு தேவை அல்லவா?

முதலில் நாம் பிறந்து வளர்ந்த ஊர், அதன் வரலாறு என்ன எனத் தெரிந்து கொள்ள நாம் அனைவரும் முற்பட வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும் என்று நாம் யோசிக்கலாம்? நமது பெற்றோரும், அவர்களது பெற்றோர்களும், அதே கிராமத்தில் பிறந்து வளர்ந்து நீண்ட காலம் வாழ்கின்ற நமது உறவுகளும், சுற்றத்தாரும் தான் இதற்கு முதல் நிலை தரவுகளைத் தரக்கூடிய முக்கிய நபர்கள். நம்மைச் சுற்றியுள்ள வயதில் மூத்த நம் உறவுகளையும் சுற்றத்தாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும்போது நமக்குப் பல புதிய விஷயங்கள் நம் ஊரைப் பற்றியே அறிந்து கொள்ள முடியும்.

எத்தனையோ முறை நாம்  ஒரு சாலையில் கடந்து சென்றிருப்போம். தினம் தினம் ஒரே சாலையில் சென்றிருப்போம் ஆனால் அந்தச் சாலையின் மூலையில் மண்ணில் புதையுண்டு தலை மட்டுமே தெரிகின்ற நடுகல்லை நமது கண்கள் கண்டிருக்குமா?

நம் ஊர் வயதான `பெருசுகள்` அவ்வப்போது சில பாடல்களை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பாடல்கள் ஒரு தலைவனைப் பற்றியோ, ஒரு நிகழ்வைப் பற்றியோ சொல்வதாக இருக்கும். அத்தகைய பாடல்களைப் பற்றி அமர்ந்து, நிதானித்து, யோசித்து அந்தப் பாடல் சொல்லும் செய்தி என்ன என்று அறிய நாம் முற்பட்டிருப்போமா?

நம் ஊரில் பாழடைந்த ஒரு கற்கோயில் இருக்கும். அதில் ஆங்காங்கே சில கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அந்தச் சிதிலமடைந்த கோவிலின் தூண்களில் சிற்பங்கள் சில செதுக்கப்பட்டிருக்கும். இத்தகைய கட்டுமானங்களைக் கண்டும் காணாமல் நாம் எத்தனையோ முறை அதனைக் கடந்து சென்றிருப்போம். அந்தக் கோயில் சொல்லும் வரலாற்றையும் நாம் கடந்தே சென்றிருப்போம்!

உலகின் பண்பாட்டு வளம் மிக்க நிலப்பகுதி என எடுத்துக்கொண்டால் கிரேக்கம், இத்தாலி, துருக்கி, எகிப்து போன்ற நாடுகளின் வரிசையில் தென்னிந்திய நிலப்பகுதியும் முக்கியத்துவம் பெறும் ஒரு பகுதியாகும். மிக நீண்ட காலமாக மனிதக் குலம் வாழ்ந்து, பண்பாட்டில் வளம் பெற்று, கலைகளை வளர்த்து, விவசாயம் செய்து, வணிகம் செய்து பொருட்செல்வமும் கலைச்செல்வமும் வளர்த்த நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட பண்பாடு தமிழ்ப் பண்பாடு. அத்தகைய பண்பாட்டு எச்சங்கள் எப்போதும் பெருநகரங்களில் மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொரு சிறு கிராமமும், ஒவ்வொரு சிற்றூரும் தமிழர் வரலாற்றின் எச்சங்களைத் தாங்கிய வரலாற்றுத் தரவுகளைக் கொண்டிருக்கும் முக்கிய இடங்களாகத் தான் திகழ்கின்றன.

ஏன் செய்கின்றோம், எனத் தெரியாமல் ஊர் பெருமை பேசிக் கொள்ளும் நாம், நம் ஊரின் உண்மையான பெருமைகளை நேரில் சென்று கண்டறிந்து அவற்றைப் பற்றி சிறிது நேரத்தைச் செலவு செய்து, ஆய்வு செய்து, அவற்றின் வரலாற்றை ஊர் மக்களுக்கும் எடுத்துச் சொல்லி, சமூக ஊடகங்களின் வழியாக இணையத்தில் செய்திகளைப் பகிர்ந்து நம் ஊர் பெருமையை உலகுக்கு வெளிக் காட்டலாமே? ஒவ்வொரு நபரும் தங்கள் ஊர் பெருமையை  வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் முயற்சி செய்தால் தென்னிந்திய நிலப்பகுதியில் தமிழர் வரலாற்றைப் பறைசாற்றும் எண்ணற்ற புதிய கண்டுபிடிப்புகளை நாம் வெளி உலகுக்குக் கொண்டு வரலாம். தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்திற்கு அதனை நாம் கொண்டு செல்லலாம். இதன்படி விடுபட்ட கோடுகளை இணைக்கும் புள்ளிகளைக்  கண்டுபிடித்து வரலாற்றில் விடுபட்ட செய்திகளை இணைத்து தமிழர் வரலாற்றிற்கு வளமும் பலமும் சேர்க்கலாம்.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு `நம் ஊர் நம் பெருமை` எனும் இயக்கத்தின் வழியாக இணையம் வழியாக வலைப்பக்கத்தில் நம் ஊர் பெருமைகளைப் பதிந்து வைக்க தகவல் களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இத்தகைய அமைப்புகளுடன் இணைந்த வகையிலும் உங்கள் ஊர் பெருமைகளை ஆவணப்படுத்தி நாம் நம் ஊருக்குப் பெருமை சேர்க்கலாம் நாமும் பெருமை அடையலாம்.

நம் ஊர் நம் பெருமை!

  

1 comment:

  1. i am reading your blog regularly.Nama ooru namma perumai excellant

    ReplyDelete