-- இரா. முத்துநாகு
பண்டிகைகள்தான் தனித்தனித் தீவுகளாய் இருக்கும் மனிதர்களை இணைக்கும் பாலங்கள். மனிதர்களுடன் கால்நடைகளையும் இணைக்கும் பண்டிகை என்றால் அது, பொங்கல் திருநாள் மட்டுமே. இதனால்தான், தங்களைக் காக்கும் கடவுளுக்கு விழா எடுத்துக் கொண்டாடுவதைப் போல தங்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் ஆடு, மாடுகளையும் கொண்டாடுகின்றனர்.
வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்து செம்மண் செஞ்சாந்து வண்ணமிடும் வழக்கம் சிமென்ட் பெயின்ட் வருகையால் நிறம் மாறிவிட்டாலும், கால்நடைகளை கொண்டாடுவதில் சமரசம் செய்துகொள்வதில்லை கிராமத்து எளிய மக்கள். இவர்களின் அந்தக் கொண்டாட்டத்தில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.
மலைகளில் தொழு அமைத்து மேய்ந்திடும் மாடுகளை தை மாதம் முதல் நாள் தங்கள் ஊரில் உள்ள தம்பிரான் கோயிலுக்கு ஓட்டி வருவதுடன் தொடங்குகிறது அந்தக் கொண்டாட்டம். அடுத்து, மாடுகள் அனைத்துக்கும் மூங்கில் இலை, வெள்ளைப் பூண்டு, சுக்கு நெருஞ்சி இலை, வெற்றிலை, மிளகு, கோழிமுட்டை தலைசுருளிவேர், உயிருடன் உள்ள கோழிக்குஞ்சு, யானை நெருஞ்சி, வேலமரத்துப்பட்டை மஞ்சள், பெருங்காயம் இவைகளை வேப்பெண்ணெய் ஊற்றி அரவை செய்து அதை உருண்டையாக திரட்டுகிறார்கள். இது கால்நடைகளுக்கான மருந்து உருண்டை மருந்து அரைப்பதை ஆணும் பெண்ணும் பாகுபாடின்றி செய்கின்றனர்.
உருண்டை திரட்டுதல் முடிந்ததும், அந்த மருந்து உருண்டைகளைத் தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி செங்கரும்பால் பந்தலிட்ட தம்பிரான் கோயில் வாசலுக்குச் சுமந்து வருகின்றனர் பெண்கள், பூசாரி மருந்து தட்டுகளை இறக்கி வைக்கவும், அனைவரும் மருந்து உருண்டைகளையும், தம்பிரான் கோயிலுக்குள் அடைத்து வைத்துள்ள மாடுகளையும் வணங்குகின்றனர்.
ஊர் பெரியவர்கள் சாமி கும்பிட்டு முடிக்கவும், சாமியை மீண்டும் வணங்கி மருந்து உருண்டைகளை எடுத்துக் கொடுக்கிறார் பூசாரி. காளைகளை வளர்ப்பவர்கள், அதை வாங்கி 'தம்பிரான் காளை' என்ற கோயில் காளையின் வாயில் திணிக்கிறார்கள். பின்னர் அனைத்து மாடுகளுக்கும் கொடுக்கிறார்கள். கன்றுகளுக்கு மருந்தினை தண்ணீர் ஊற்றிக் கலக்கி, கொட்டம் என்ற மூங்கில் தூம்பான பாத்திரத்தின் உதவியுடன் கடைவாயில் திணித்து ஊற்றுகின்றனர். மருந்து கொடுப்பதை யாரும் பார்க்கக்கூடாது என்பதால் திரைச்சீலையின் பின்தான் இது நடக்கும்.
இந்த நிகழ்வின்போது கோயில் முன்பாக வரிசையாக அமர்ந்துள்ள பெரியவர்கள் புல்லாங்குழல் இசைக்கின்றனர். இசைக்கு மாடுகளும் இசையும்தானே. மருந்து கொடுக்கும் போது திமிறும் மாடுகள், குழலிசை கேட்டதும் உருகி அமைதியாகின்றன. இதன் பின்னர் தொழுமாடுகளுக்குச் சாம்பிராணி புகை காட்டும் பூசாரி, விபூதியை மாடுகள் மீது திணித்து, 'பிணி நீக்கட்டும்' என்று அருள்வாக்கு சொல்வதோடு நிறைவடைகிறது இந்தத் திருவிழா.
"விவசாய வேலைக்கான மாடுகளை மலை மாடுகளிலிருந்தே தை மாதப் பிறப்பன்று தேர்ந்தெடுக்கிறோம். அன்றைய தினம் ஈன்ற காளை கன்றுகளை தம்பிரான் காளைக்காக நேர்ந்து விடுவோம். ஆண்டுக்கு ஒருமுறை இந்த மருந்தைக் கொடுப்பது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. இந்த மருந்தைக் கொடுப்பதால் மாடுகளுக்கு எந்த நோய்த் தாக்குதலும் வருவதில்லை. அதேபோல் மனிதர்களுக்கும் தம்பிரான் கோயில் முன்பாக கிண்டப்படும் மருந்துக்கழியை சாப்பிட்டால் நோய் வராது என்பது எங்களது நம்பிக்கை" என்கிறார் தேனி மாவட்டத்தில் இருக்கும் வீரச் சின்னம்மாள்புரம் ஊர் பெரியவரான சீனிவாசன். உண்மைதான் என்பதுபோல் மணிகள் குலுங்கத் தலையசைக்கின்றன அருகில் நிற்கும் மாடுகள்.
-----
No comments:
Post a Comment