Sunday, January 9, 2022

தமிழ்த் தொண்டு செய்த மேலைநாட்டு நல்லறிஞர் வீரமாமுனிவர்

-- ஆலடி எழில்வாணன்


குறிப்பு: ஜனவரி 9, 2022 அன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு  இணையவழி நடத்திய "'சித்திரக் கதைகள்' மற்றும்  'வீரமாமுனிவர்' - நூல்கள் திறனாய்வு" உரை நிகழ்ச்சியில் திரு. ஆலடி எழில்வாணன் வழங்கிய உரை

 
book veeramamunivar.jpg

ஜெர்மனியிலிருந்து வரலாற்று ஆய்வு செய்யும் முனைவர் க.சுபாஷினி மற்றும் முனைவர் ஆனந்த் அமலதாஸ் அவர்களின் சீரிய முயற்சியால் “வீரமாமுனிவர்” புத்தகம்,  ஒளிவண்ணனின் எழிலினி பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது. மொழிகளின் தாயான தமிழை உலகில் பரப்பி உயர்த்திப் பிடித்த முக்கிய ஆளுமைகளில் சிறப்பிடம் பெற்றவர் இத்தாலியை சேர்ந்த Constantine Joseph Beschi (November 8, 1680 –  February 4, 1747). இவர் பின்னாளில் வீரமாமுனிவர் என அழைக்கப்பட்டு தமிழர்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.

பல மாதங்கள் கப்பலில் பயணம் செய்து 1710ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் கிருத்துவத்தைப் போதிக்க இத்தாலியில் இருந்து அருட்தந்தை அர்னால்டுடன் கோவா வந்தடைந்தார். உடன் வந்தவர் மலபார் பகுதியான கேரளம் செல்ல, இவர் 1711ல் மதுரை வந்தடைந்தார். மக்களோடு மக்களாகக் கலந்து இறைப்பணி மற்றும் மதபோதகம் செய்ய அந்த ஊரின் மொழி அறிதலின் அவசியத்தை உணர்ந்தார் வீரமாமுனிவர். தெலுங்கு, சமற்கிருதம் மற்றும் தமிழ் கற்றார். இதில் தனக்குச் சிறந்ததாக, மொழி கட்டமைப்பில் தனக்குத் தெரிந்த இலத்தீன், போர்ச்சுக்கீசு மொழியின் ஒற்றுமை உள்ளதாக இருந்த தமிழை இன்னும் தீவிரமாகப் பயின்றார். அவர் வாசிக்காத தமிழ் காப்பியங்களே இல்லை எனலாம்.

18ஆம் நூற்றாண்டில் கல்விக்கூடங்கள் மற்றும் தேவாலயங்கள் பல அமைத்து மதக் கோட்பாடுகளை தமிழகத்தில் காலூன்ற வைத்த காலங்களில் வீரமாமுனிவருக்கு தமிழ் மீதான அதீத பற்றுதல் பன்மடங்கு கூடியது. 1726ல் அவரது முதல் படைப்பான மேரிமாதாவை போற்றிப் புகழும் காப்பியமான தேம்பாவணி வெளியானது. 3615 பாடல்கள், அதற்கு 1729 தெளிவுரைகள் என, தான் வாசித்த தமிழ் பெரும் காப்பியங்களுக்கு இணையாக தேம்பாவணியைப் படைத்தார்.

அந்நாள் வரை Constantine Joseph Beschi தமிழகத்தில் 'தைரியநாதசாமி' என்ற பெயரில் உலவினார். தேம்பாவணி படைத்து முழு மொழி ஆளுமை பெற்றபிறகு தைரியநாதசாமி சரியான தமிழ் பெயரல்ல அது சமற்கிருதம் எனத் தெளிவு பெற்று 'வீரமாமுனிவர்' (Great Champion Devotee) என்றானார். தமிழ் மொழியை காப்பியம் மற்றும் இறை வழிபாடுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் தனது படைப்புகளில் தமிழர் வாழ்வியலைக் கலந்து படைத்தார்.

அவரது வாழ்நாளின் பிற்பகுதியில் வீரமாமுனிவரால் படைக்கப் பெற்ற படைப்புகள்:
செய்யுள் - 9
உரைநடை - 10
அகராதி - 5
இலக்கணம் - 4
உரைகள் - 5
பஞ்சாங்கம் - 2
மொழிபெயர்ப்பு - 9
இலத்தீன் - 3
எழுத்து சீர்திருத்தம் - 4
ஆக மொத்தம் 51 நூல்கள்

இதில் குறிப்பாக திருக்குறள் உள்பட பல தமிழ் காப்பியங்களுக்குத் தெளிவுரை எழுதியது, இலத்தீன் பிரெஞ்சுக்கு மொழி மாற்றம் செய்தது, தமிழ் - லத்தீன், தமிழ் - பிரெஞ்சு அகராதிகள் படைத்தது, சுவாரசியமாக பஞ்சாங்கம் மற்றும் சோதிட நூல்களை சமற்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்தது இவருடைய சாதனைகள். மிக முக்கியமாக சதுரகராதி என்பது பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி மற்றும் தொடை அகராதி என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மொழி சீர்திருத்தத்தில் முன்னோடியாகத் திகழ்பவர் வீரமாமுனிவர் என்பதும் வியப்பே. குறிப்பாக எழுத்துகளுக்கு மேல் புள்ளி வைப்பது, துணைக்கால் போல் எழுதி கீழ் இழுப்புக் கோடு ‘ர’ வீரமாமுனிவரின் தமிழ் மொழிப் பங்களிப்பு. பாடல்களாகவே இருந்த காப்பியங்களை உரைநடைத் தமிழ் (Father of Tamil Prose) என மாற்றிய பெருமை இவரையே சாரும்.

1730க்கு பிறகு அரியலூர் மற்றும் தரங்கம்பாடி பகுதிகளில் இயேசுசபை நிர்வாகியானார். இப்பகுதி அந்நாளில் ஆற்காடு நவாப் கட்டுப்பாட்டில் இருந்தது. நவாப்களிடத்தில் நட்பாக இருந்துள்ளார் வீரமாமுனிவர். தமிழ் துறவிகளைப் போல் சாதாரண வாழ்வையே வாழ்ந்தார், சைவ உணவையே உண்டார், ஒரு பொழுது மட்டுமே உணவருந்தினார், இல்லத்தில் இருக்கும்போது காவி உடையில் இருந்தார். முக்கிய நிகழ்வுகளுக்கு வெளியே செல்லும் போது நவாப் அரசர் போன்று உடையணிந்தார் என்பது வியப்பாக உள்ளது. இதனை புத்தகத்தின் அட்டைப் படத்தில் பார்க்கலாம்.

பல இடங்களில் இந்து சமயத்தின் வர்ணாசிரமப் பிறப்பு படிநிலைக் கோட்பாட்டை இடித்துரைத்துள்ளார் வீரமாமுனிவர். ஒரே பிரம்மனின் உடலின் வெவ்வேறு பாகத்தில் இருந்து பிறந்ததால் பிராமணன்-சத்திரியன்-வைசியன்-சூத்திரன் எனப் பிரிக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்வைத்தார். Son of man without an equal, I worship the newly blown flower of thy feet. இவரால் ஐரோப்பியர்கள் பலர் தமிழ் கற்றனர், தமிழ் மொழி ஆய்வுகளை மேற்கொண்டனர் என்பது கூடுதல் செய்தி. இப்படிப்பட்ட ஆளுமையின் மரணம் ஒரு சாதாரண சம்பவமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது கவலையான செய்தியாக உள்ளது.

பதிப்பாசிரியர்கள் முனைவர் க.சுபாஷினி மற்றும் முனைவர் ஆனந்த் அமலதாஸ் இருவரும் மறுபதிப்பு செய்த இந்த நூல் வரலாற்றுச் சிறப்புமிக்கது.  வீரமாமுனிவர் ஒரு வரலாற்றுக் காலப் பெட்டகம். இந்தப் புத்தகத்தில் அவரின் வரலாறு வாசிப்பவருக்கு ஆச்சரியத்தைத் தரும். தமிழ் மொழி மீது பற்றுள்ளவர்கள் வாசிக்க வேண்டிய நன்னூல்.


வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi)
நூல் ஆசிரியர்: முத்துசாமி பிள்ளை
பதிப்பாசிரியர்கள் முனைவர் க.சுபாஷினி மற்றும் முனைவர் ஆனந்த் அமலதாஸ்
பதிப்பகம்: எழிலினி பதிப்பகம்
விலை: ₹350/=
https://www.emeraldpublishers.com/veeramamunivar/
நூல்  திறனாய்வு: ஆலடி எழில்வாணன்

--No comments:

Post a Comment