Wednesday, January 12, 2022

புலம்பெயர் மலேசியத் தமிழர்களின் நிலை !?

  --  மணிக்கவிஞர் பாதாசன், மலேசியா



தமிழ் வாழ்த்து
ஞாலமெலாம் பாலமின்றி நாளெல்லாம் ஓடுகிற
வானூர்தி வண்டமிழ்க்கு வாழ்த்து !

தமிழக முதல் அமைச்சருக்கு வாழ்த்து
முயலென ஓடி வேக
   முயற்சிகள் பலவெ டுத்தே
அயலகத் தமிழர்க் காக
   அன்புடன் பரிவு கொண்டு
நயத்துடன் தமிழர் திருநாள்
   நடத்திடும் தமிழ கத்தின்
அயர்விலா முதல மைச்சர்
   அதிசய ஸ்டாலின் வாழ்க !
 
அரங்கத் தலைவருக்கு  வாழ்த்து
கைரம்பம் போலறுக்கும் காண் ; தமிழ்க் கூற்றை
வைரமுத்து பாட்டின் வரி

பாடுபொருள்
சென்றுதேய்ந்திறுதல்எனும் நன்னூல் கூறும்
  தேறாத இலக்கியத்தின் குற்றம் போல
அன்றுபாய்ந் திந்நாட்டில் சம்பா தித்தே
  அரசனைப்போல் வாழ்ந்திடவே கனவு கண்டோர்
இன்றுதேய்ந் திருக்கின்றார் ஆண்டி யாக !
  என்றவர்க்கு விடிவுவரும்; யாரோ சொல்வார் ?
கன்றுபாய்ந் தேபசுவின் பால்கு டிக்கக்
  களித்தவர்க்கோ பால்குடிக்க வசதி இல்லை

ஆயிரத்து நாற்பத்தொன் றாம்ஆண் டில்தான்
  அரசன்இரா ராசேந்தி ரன்வந் தாராம் !
பாயிரமாய் மட்டுமஅஃ தின்றும் உண்டாம் !
  பாவிஅந்த மன்னனிங்கு வந்தான்; சென்றான் ;
கோயில்செய்தான்; சொல்கின்றார்! ஆனால்,இங்கே
  தன்னின் புலிக்கொடியை நாட்டி டாமல்
பாய்மரத்துக் கப்பலிலே பறந்த தாலே
  பாவத்தைச் சுமந்திங்கே வாழ்கின் றோமே !
 
அன்றுமட்டும் கடாரத்தில் ஆழ மாக
  அவன்தன்றன் புலிக்கொடியை நாட்டிச் செல்லின்
இன்றுள்ள தமிழருக்கே உரிமை யான
  இடமாகக் கடாரம்தான் இருக்கும்! இங்கே
ஒன்றுமட்டும் உரைக்கின்றேன்! புலம்பெ யர்ந்தோர்க்(கு)
  ஓருருவம் ஒருநாமம் ஒன்றுமி லார்க்கே
உண்டுருவம் திருநாமம் பலவென் றாப்போல்
  ஒருநாடில் லை,எனினும்; பலநா டுண்டே  !

"யாரங்கே வாருங்கள் பூங்குன் றன்வாய்க்(கு)
  இரண்டுகிலோ சீனிதனைக் கொட்டிப் போங்கள்!"
போரங்கே என்றறியின் குகைகி டந்த
  புலிபோலப் புறப்பட்ட புறநா னூற்றின்
வீரனெங்கே? அவன்வித்தும் அழிந்தா போச்சு?
  வீடுநிலம் வருமானம் செழிப்புக் காகச்
சூரனைப்போல் புலம்பெயர்ந்த தமிழர் இன்று
  சோகத்தின் கல்வெட்டாய் வாழ்கின் றோமே !

ஒருகாலம் பினாங்குநகர் வந்தே அங்கே
    ஓகோவென்(று) உயர்ந்திருந்தார் தமிழர், உண்மை !
பெருங் ‘காராம் மெர் செடிசும்'வைத்தி ருந்த
  பெருமையதும் அவர்களுக்கே உண்டாம்; நானும்
அரும்படமாய்க் கண்டேன் ; அச் செழிப்பெல் லாமும்
  அருகியதேன்; சந்ததியார் என்ன ஆனார்?
பெருகிவரும் கண்ணீரைத் தவிர வேறு
  பேச்சின்றிச் சிந்தனையில் உழல்கின் றோமே !

வணிகத்தைக் குலத்தொழிலாய்க் கொண்ட செட்டி
  மக்களுள்ளே, மலாக்காவில் தமிழ்ம றந்தே
தனித்துள்ளார்; இன்றுவரை மலாயில் பேசி,
  தமிழ்முருகன் தனைவேண்டிக் கிடக்கின் றார்கள் !
குனிந்தவர்கள் பால்மரத்தைச் சீவு தற்காய்
  நிமிரவில்லை என்பதுதான் தோட்டமக்கள்
பனித்திருக்கும் கண்கள் இன்றும் சொல்லும் சேதி !
  பால்மரத்தார் கதையிலுண்டே இன்னும் மீதி !

புலம்பெயர்ந்தோர் அன்றோடு தங்கள் வாழ்வின்
  நலமிழந்தார்; வளமிழந்தார் ; பொருளைச் சேர்க்கும்
களமிழந்தார்; கண்டார்வாய் இகழ்ந்து பேசக்
  காரணமாய் ஆகியுள்ளார்; ஒற்று மையின்
பலமிழந்தார்; தமிழ் குறைத்தார்! ஏதோ கொஞ்சம்
  பக்குவமாய் நாணல்போல் வாழு கின்றார் !
பலவகையில் புலம்பெயர்ந்தோர் படும்துன் பத்தைப்
  பல்குத்தி முகர்வதுவா ? சீச்சீ ! போங்க !

குறிப்பு:
12.1.2022 புதன்கிழமை காலை  10.00 மணி (தமிழக நேரம்) முதல் நாள் முழுதும் நடைபெற்ற அயலகத் தமிழர்களின் தமிழர் திருநாளில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றான - கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நடந்தேறிய கவியரங்கில் மலேசியாவின் சார்பில் பங்கு பெற்று  மணிக்கவிஞர் பாதாசன், மலேசியா அரங்கேற்றிய கவிதை

----------------










No comments:

Post a Comment