Sunday, January 9, 2022

ஓசைக்கும் ஒலிக்கும் என்ன வேறுபாடு?

-- தேமொழி 


பன்நெடுங்காலத்திற்கு முன்னர் ஓசை என்பது உருவாக்கப் படுவதற்கும்; ஒலி என்பது அதைக் கேட்பதற்குமான சொற்களாக தெளிவாகப் பிரித்து வேறுபாடு காட்டும் ஒரு முறை இருந்திருக்கக் கூடும். 

 sound.jpg

இப்பொழுது மலர், அலர் எல்லாமே பூ என்று ஒரே பொருளில் நாம் கையாள்வது போல, காலப் போக்கில் ஓசை, ஒலி என்ற சொற்கள் ஒரு பொருட் பன்‍மொழி என்ற ஒரு நிலைக்குப் பயன்பாட்டில் மாறியிருக்கக் கூடும்.  

எழுப்பப்படுவது அல்லது உருவாக்கப்படுவது "ஓசை"; கேட்கப்படுவது "ஒலி"
என்ற எடுகோளை(Hypothesis) ஆய்வு செய்ய;
சங்க இலக்கியம் - தொடரடைவு தளத்தில் தரவுகள் சேகரிக்கப்பட்டது (நன்றி முனைவர் ப. பாண்டியராஜா).

(I) தரவுகளின்  ஆய்வெல்லை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
(http://tamilconcordance.in/sangconc-1-oo1.html)
'ஓசை'  என்ற சொல் கீழ்க்காணும் 10 இடங்களில் சங்க இலக்கியப் பாடல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

    ஓசை (7)
நெடுநெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை - நற் 4/10
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது - நற் 154/6
உகிர் நுதி புரட்டும் ஓசை போல - குறு 16/3
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய - பரி 10/7
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார் - அகம் 171/9
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் - புறம் 36/9
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புது கண் மாக்கள் செது கண் ஆர - புறம் 261/8,9
 
    ஓசையின் (1)
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் - அகம் 267/12
 
    ஓசையும் (1)
களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு - அகம் 261/13
 
    ஓசையொடு (1)
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் - அகம் 94/11
__________________________________________

(1)
நற் 4/10
நெடுநெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை
- நீண்ட வரிசையான வண்டிகள் மணலைத் தேய்த்து "எழுப்பும் ஓசை"

(2)
நற் 154/6
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
- யாவரும் அஞ்சுமாறு "முழங்கும் ஓசை" கேளாது

(3)
குறு 16/3
உகிர் நுதி புரட்டும் ஓசை போல
- நக நுனியிலே புரட்டுதலால் "உண்டாகிய ஓசையைப்" போல

(4)
பரி 10/7
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய
- ஆராய்ந்து அளவிடமுடியாத பல்வேறு "ஓசைகள் ஒலிக்க"

(5)
அகம் 171/9
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்
- கொல்லுதல் வல்ல கரடி ஏற்றின் "ஒலியினை உணர்வதற்காக"

(6)
*புறம் 36/9
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப
- காவல் மரங்களை வெட்டுமோசை (எழுப்பப்படுகிறது) தன்னுடைய ஊரின்கண் நெடிய மதிலெல்லையில் தனது காவலையுடைய கோயிற்கண்ணே சென்றொலிப்ப (கேட்கப்படுகிறது)
அதாவது ஓசை ஒலிக்கப்படுகிறது

(7)
புறம் 261/8,9
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர
- நெய்யில் ஆட்டு இறைச்சி "வறுப்பதால் எழும்  ஓசை" கேட்டுக் கொண்டே இருக்கும். புதியவர்கள் இதைக் கண்டு கண் பூப்பர்

(8)
அகம் 267/11,12
வெதிர்படு வெண்ணெல் வெவ்வறைத் தாஅய
உகிர்நெரி யோசையிற் பொங்குவன பொரியும்
- மூங்கிலில் விளைந்த வெள்ளிய நெற்கள் வெப்பம் மிக்க பாறையில் உதிர்ந்து பரந்து நகத்தை நெரிப்பது போன்ற "ஒசையுடன்" பொங்கிப் பொரிந்திடும்

(9)
அகம் 261/13
இரும்புலி களிறு அட்டுக் குழுமும் ஓசையும்
- பெரிய புலியானது களிற்றினைக் கொன்று "முழங்கும் ஓசை"யினையும்

(10)
*அகம் 94/11
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
 - (தினைப்புனக் காவலர் ஊதும்) பெரிய கொம்பின் "ஓசையொடு கலந்து வந்து ஒலிக்கும்"
__________________________________________


(II) தரவுகளின்  ஆய்வெல்லை சங்கமருவிய நூல்களான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
(http://tamilconcordance.in/PATHINENconc-1-oo1.html)
'ஓசை'  என்ற சொல் கீழ்க்காணும் 5 இடங்களில் சங்கமருவிய காலப் பாடல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

    ஓசை (5)
ஓசை அவிந்த பின் ஆடுதும் என்று அற்றால் - நாலடி:34 2/2
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா - இன்னா: 40:35/2
சிறு குழல் ஓசை செறிதொடி வேல் கொண்டு - ஐந்: 50:7/3
மடி செவி வேழம் இரீஇ அடி ஓசை அஞ்சி ஒதுங்கும் அதர் உள்ளி ஆர் இருள் - ஐந்:50:16/2,3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் - குறள்:3 7/1
__________________________________________

(1)
நாலடி:34 2/2
பெருங்கடல் ஆடிய சென்றார், ஒருங்குடன் ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
- பெருங்கடலிலே நீராடுவது குறித்துச் சென்றவர்கள், இக்கடலின் "ஒலி  அடங்கிய" பின்னர் நாம் நீராடுவோம்’ என்று கருதினால்

(2)
இன்னா: 40:35/2
குழலி னினியமரத் தோசைநன் கின்னா
- குழலோசை இல்லாது  இயமரம் என்ற தோற்கருவியில் முழக்கப்படும் வெறும் தாள ஓசை துன்பம்.

(3)
ஐந்: 50:7/3
சிறு குழல் ஓசை, செறிதொடி! வேல் கொண்டு எறிவது போலும் எனக்கு.                  
- ஊதும் சிறிய புல்லாங்குழின் ஓசையானது, வேல் கொண்டு வீசுவது போல உள்ளது.

(4)
ஐந்:50:16/2,3
மடி செவி வேழம்-இரீஇ, அடி ஓசை அஞ்சி, ஒதுங்கும்
-மடிந்த காதுகளையுடைய யானையானது,   பின்வாங்கி, தன் நடையால்  உண்டாகும் ஓசையானது, (புலிக்குக் கேட்குமோ என்று,)  பயந்து மெதுவாக நடக்கும்

(5)
ஐந்:50:16/2,3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
-  உலகமானது. உண்டுணரும் சுவையும், கண்டுணரும்  ஒளியும், தொட்டால் உணரும் ஊறும். "ஓசை - (கேட்டுணரும்) ஒலியும்", மோந்துணரும் வாசனையும், என்று சொல்லப் படுகின்ற, ஐந்தின் திறத்தினை ஆராய்ந்தறிந்தவனிடத்திலேயே அடங்கிக் கிடக்கும் (பேரா. சுந்தரசண்முகனார்). i.e., Vulluvar mentions 'Inducing Source' of the senses

'ஓசை' என்பது பெயர்ச்சொல், அது குறித்துச் சுட்டும் பொழுது ஓசை என்பதைத் தொடர்ந்து ஒலிக்க, எழுப்ப, இசைக்க போன்ற சொற்கள் மேலும் விளக்கமாக கொடுக்கப்படுகிறது.
எடுத்துக் காட்டாக;
"கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப"
"கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்"
ஓசை "தோன்றும் இடமும்" தவறாமல் குறிக்கப்படுகிறது.  

மாறாக;
'ஒலி' என்பது பெயர்ப்பொருளாக மட்டுமின்றி  வினைப்பொருளாகவும் வரும் பண்பு கொண்டது.  
பெயர்ப்பொருள் - ஒலி = ஆரவாரம்,பேரிசை
வினைப்பொருள் - ஒலி = சப்தி, ஆரவாரி  
(பார்க்க: தமிழ்ச்சொல் விளக்கம்,   முல்லை முத்தையா (2004) - https://ta.wikisource.org/s/5hhg)
இதற்கு சங்கப் படல்களிலேயே எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் உள்ளன.

எனவே மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியங்கள்,   சங்கம் மருவிய கால இலக்கியங்களில்  ஓசை என்பது உருவாக்கப்படும் இடத்துடன் தொடர்பு கொண்டே வருவதாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.

---

No comments:

Post a Comment