Sunday, January 9, 2022

மாட்டுப் பொங்கலும், கரகாட்டப் பாடல்களும்...


மதுரை மண் மணக்கும் ரசனையுடன் -
மாட்டுப் பொங்கலும்,  கரகாட்டப் பாடல்களும்...


-- ச.சுப்பாராவ்


நிற்காது ஓடும் வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். பண்டிகைகள், நாள்,  கிழமைகள் வரும் போதுதான் சற்றே நின்று, இளைப்பாறி, அந்தக் காலத்தில் இந்தப் பண்டிகையை நாம் எப்படிக் கொண்டாடினோம் என்று நாம் எல்லோருமே பார்ப்போம். அடுத்த தலைமுறையிடம், இந்தப் பண்டிகைக்கு என் அப்பா இப்படிச் செய்வார், அம்மா இப்படிச் செய்வாள், தாத்தா, பாட்டி இப்படியிப்படிச் செய்வார்கள் என்றெல்லாம் சொல்வோம். யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு பண்டிகையும் அன்றைய கொண்டாட்டத்திற்காக மட்டுமன்றி,  மலரும் நினைவுகளுக்காகவும் சேர்ந்தே வருவதாகத் தோன்றுகிறது.


pongal2.jpg

பெரு நகரமும் இல்லாத, சிறு கிராமமும் இல்லாத இரண்டுங் கெட்டான் ஊரான மதுரையில் என் சிறுவயது பொங்கல் கொண்டாட்டம் பற்றி ஒவ்வொரு பொங்கலுக்கும் நினைத்துக் கொள்வேன். நகரத்துப் பொங்கல் என்பதால் பொங்கல் ஒரு பொது நிகழ்ச்சியாக என்றும் இருந்ததில்லை. அழகழகான பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி  நண்பர்களுக்கு அனுப்புவதோடு பொங்கல் ஆரம்பிக்கும்.  அத்தனை நுணுக்கமாக, ஓவியம் தீட்டும் அந்தக் கலைஞர்கள் எல்லாம் என்ன ஆனார்களோ? என்று இப்போது நினைக்க வேதனையாக இருக்கிறது.  அஞ்சலகங்களில் மலையளவு வாழ்த்து அட்டைகள் குவிந்தன... தபால் ஊழியர்கள் திண்டாட்டம் என்று தினத்தந்தியில் செய்தி படித்த நினைவும் இருக்கிறது.

madurai tnt.jpg 

ஆனாலும் எங்கள் தெருவில்  சிங்காரம் ஞாபகார்த்த ஏழு ரோஜா எவர்ஜாலி கபாடிக் குழு என்ற பழம்பெரும் கபாடிக் குழுவின் ஆண்டு விழா பொங்கல் நாளில் வருவதால், போகி முதல் மாட்டுப் பொங்கல் வரை மூன்று நாட்கள் குழாய்களில்  பாடல்கள் அலற பொங்கல் பொது நிகழ்ச்சியாக மாறியது. இந்தக் கபாடிக் குழு மிகப் பழமையானது.  இப்போது எழுபத்தாறு வயதான என் சித்தப்பா, அறுபத்தேழு வயதான என் அண்ணன் ஆகியோர் விளையாடிய குழு அது. அதன் விளையாட்டு வீரர்கள் பலரும் பல பள்ளி, கல்லூரிகளில் கபாடி கோச்சாக இருந்தவர்கள். கபடியை வைத்துப் பல பெரிய நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றவர்கள்.  

மாறுவேடப் போட்டி, பானை உடைக்கும் போட்டி, பெண்களுக்குக் கோலப் போட்டி, சாக்கு ரேஸ், ஸ்பூன் ரேஸ் என்று வழக்கமான எல்லா போட்டிகளும் உண்டு. போகியன்று புதுப் பாடல்களாகப் போடும் மைக் செட் காரர் மீனா எலக்ட்ரிகல்ஸ் கருப்பையா , இரண்டாம் நாள் சற்று நடுத்தர பழைய பாடல்கள், மூன்றாம் நாள் மிக மிகப் பழைய பாடல்கள் என்று பின்னோக்கிச் செல்வார். பதினாறு வயதினிலே படம் வந்த ஆண்டு அதன் வசன ஒலிச்சித்திரத்தை மூன்று நாட்களுக்கும் மும்மூன்று முறை போட்டார்கள். விதி படம் பிரபலமாக ஓடிய ஆண்டும் இதே கதைதான். படம் பார்க்காமலேயே படம் பார்த்த உணர்வைத் தரும் படியான ஒலிச்சித்திரம். இன்றைய தலைமுறை இழந்தவற்றில் இது மிக முக்கியமானது என்ற கூடத் தோன்றுகிறது !

ஆனால், என் பதின்பருவத்தில் பொங்கல் நாளை விட மாட்டுப் பொங்கல் நாள் தான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. அதற்குக் காரணம் எங்கள் தெருப் பகுதிகளில் கோனார் சமூகத்தினர் அதிகம் இருந்ததும்,  அதன் விளைவாக பொங்கலை விட மாட்டுப் பொங்கல் வெகு சிறப்பாக நடந்ததும் தான்.    என் உயிர் நண்பன் கண்ணனின் அடுத்த வீடு எங்கள் பகுதியில் மிகவும் வசதிபடைத்த, செல்வாக்கான பாலுக் கோனாரின் வீடு. அவரது குடும்பத்தினரும், அவர்கள் வீட்டோடு இருந்து வேலை பார்த்த அவர்களது உறவினர்கள் சிலரும் எங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளை மாதக் கூலிக்குப் பராமரித்து வந்தார்கள். மாட்டுப் பொங்கலன்று அவர்களது பராமரிப்பில் இருக்கும் மாடுகள், அவர்களது சொந்தத் தொழுவத்தில் இருக்கும் மாடுகள் அனைத்தையும் அலங்கரித்து பூஜை செய்து, நையாண்டி மேளம், கரகம் எல்லாம் வைத்து எல்லா மாடுகளையும் ஊர்வலமாக நடத்திச் சென்று அந்தந்த உரிமையாளர் வீட்டில் விட்டு விட்டு வருவது வழக்கம்.  அதற்கு அந்தந்த உரிமையாளர்கள் பாலுக் கோனாருக்கு மரியாதை செய்வார்கள். மாட்டுப் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே அவர்கள் வீடு பரபரப்பாகி விடும்.  

தெருவில் என்னையும், கண்ணனையும், என் மற்ற இரு நண்பர்களான ரவி, பாலனையும் பார்க்கும் போதெல்லாம் பாலுக் கோனார் ‘சாமி, மாட்டுப் பொங்கலுக்கு நம்ப வீட்டுக்கு வந்துருங்க... ஐயர விட்டு தா பொங்கல் போடச் சொல்லியிருக்கேன்,‘ என்று அழைத்துக் கொண்டே இருப்பார்.  தெருக்காரர்கள் பெரும்பாலானோர் கபாடிக் குழுவின் போட்டிகளில் இருக்க, நானும், எனது நண்பர்கள் மூவரும் மட்டும் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் போய் விடுவோம்.  மாட்டுப் பொங்கலன்று  எல்லா வீட்டு மாடுகளையும் வைகையாற்றில் வைத்துக் குளிப்பாட்டுவார்கள். இப்போது போலன்றி, அக்காலத்தில் ஆற்றில்,  ஏதோ ஓரளவுக்குத்  தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பிறகு கொம்பிற்கு பெயிண்டிங்.   பெயிண்டிங் என்றால் ஏதோ பிரஷ் வைத்துக் கொண்டு அடிப்பதல்ல. குளிப்பாட்டப் பட்ட மாடு கரை ஏறும் இடத்தில் ஒரு வாளியில் சிவப்புப் பெயிண்டோடு ஒருவரும், பச்சைப் பெயிண்டோடு ஒருவரும் நிற்பார்கள்.  மாடு அவர்கள் எதிரில் வந்து நிற்கும். சிவப்புப் பெயிண்ட் கோனார் வாளியில் கையை முக்கி, அப்படியே கொம்பின் அடிப்பாகத்திலிருந்து கையை மேல்நோக்கி இழுக்க அந்த கொம்பு சிவப்பு நிறமாகிவிடும். அதே சமயம் பச்சைப் பெயிண்ட் கோனாரின் கை வண்ணத்தில் அடுத்த கொம்புக்குப் பச்சை நிறம் தீட்டப்பட்டுவிடும்.  அடுத்தவர் மஞ்சளைக் கரைத்து வைத்துக் கொண்டு, உடல் முழுக்க மஞ்சள் பொட்டை வேகவேகமாக வைப்பார். நெற்றியில்  பொட்டு, கழுத்தில் மாலை. மாடு அலங்காரம் முடிந்தது ! அந்த பெயிண்ட் டப்பாவைப் பிடித்துக் கொண்டு நின்றவன் யார் என்று உங்களுக்கே தெரியும் ! எல்லா மாடுகளும் வரிசையாக நிற்க, பாலுக் கோனார் பட்டு வேட்டி சட்டையில், பூஜை செய்து, எல்லா மாடுகளுக்கும் தீபாராதனை காட்டுவார். தீபாராதனை காட்டும் போது, அருள் வந்து பயங்கரமாக ஓர் ஆட்டம் போடுவார்.  பின் நையாண்டி மேளத்தோடு எல்லா மாடுகளும் தத்தம் வீடு திரும்பும்.  ஐயர் சமைத்த பொங்கலை எல்லோரும் சாப்பிடுவோம்.

மதியம் மூன்று மணிக்குக் கரகாட்டக் கோஷ்டி வந்துவிடும். பாலுக் கோனார் வீட்டு மாடியில்தான் மேக்கப். மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு பபூன்.  அந்த மூன்று பெண்களில் யாரோ ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் என்பார்கள். யார் என்று எங்களுக்குக் கண்டுபிடிக்கத் தெரியாது.  கரகம் ஆடும் பெண்கள் ஏன் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பது இன்றுவரை எனக்குப் புரியாத ஒரு புதிர். நல்ல உயரம். தொட்டு இட்டுக் கொள்ளலாம் போன்ற ஒரு மைநிறம்.  பெரிய தொப்பை. சிறிய மார்பு.  உள்ளே சின்ன கறுப்பு டிராயர் போட்டு மேலே சின்னதாக ஒரு குட்டைப் பாவாடை. குட்டைக் கை வைத்த, சமிக்கி வைத்துத் தைத்த குட்டை ரவிக்கை.  ஒரு கற்பனைக் கோட்டிற்கு மேலே பிரவுன் நிறத்திலும், அந்தக் கோட்டுக்குக் கீழே மைக் கறுப்பிலும் தெரியும் திண்மையான கை... பெரிய கொண்டை. அதைச் சுற்றி வெள்ளை நிறத்தில் ஏதோ இறகுகளை வட்டமாகச் சுற்றியிருப்பார்கள். பின்னாலிருந்து பார்க்க அந்தக் கொண்டை பிளாக் அண்ட் ஒயிட் சூரிய காந்திப் பூ போல இருக்கும். சரோஜா தேவி போல் குருவி வால் மையிட்ட கண்கள். ரத்தச் சிவப்பு லிப்ஸ்டிக்கில் உதடுகள்.

கரகம் , நையாண்டி மேளத்துடன் பாலுக் கோனார் வீட்டுச் சொந்த மாடுகளை அழைத்துக் கொண்டு  இரவு ஒன்பது மணியளவில் ஊர்வலமாகக் கிளம்புவோம்.  கோனாரின் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு வரிசையாகச் சென்று மரியாதை பெற்றுக் கொண்டு அதிகாலை மூன்று மணியளவில் அவரது வீடு வந்து சேர்வோம். அலங்கரிக்கப்பட்ட அவர் வீட்டு மாடுகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வோம்.  எல்லா வீடுகளிலும், பாலுக் கோனாருக்கு வேஷ்டி, துண்டு, பணம், வெற்றிலை, பாக்கு தந்து மரியாதை செய்வார்கள்.  முதல் முறையாக இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் போது, என் சக்திக்கு, என் வீரத்திற்கு ஏற்றபடி, ஒரு சிறு கன்றை அழைத்துச் செல்லும் பொறுப்பைத் தருமாறு பாலுக் கோனாரைக் கேட்டேன். அவர், ‘ கண்டுக் குட்டிண்டா, கொட்டுச் சத்தத்துக்கு வெறிக்கும், குதிக்கும், உங்களுக்குப் பிடிக்க முடியாது. பெரிய மாடுண்டா, வெறிக்காம எனக்கென்னா...ண்டு வரும். அதுனால பெரிய மாட்ட பிடிச்சுட்டு வாங்க சாமி,‘  என்று ஒரு பெரிய மாட்டின் வடத்தை என் கையில் தந்தார்.  நான் வீரமாக அதை அழைத்துச் சென்றேன். அது நான் ஒரு ஜீவராசி அதன் கயிற்றைப் பிடித்திருப்பது பற்றிய உணர்வே இன்றி, என்னை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் சாவகாசமாக நடந்து வந்தது. ஆனால், அதைப் பார்த்த எங்கள் தெருவாசிகளோ  நான் ஏதோ அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டில் ஒரு பெரிய காளையை அடக்கி அதை சாதுவாக்கி நடத்திச் செல்வது போல் அதிசயமாகப் பார்த்தார்கள்.  மாட்டுடன் நடப்பதற்குப் பழக வேண்டும். அதன் குளம்பு நம் காலைப் பதம் பார்த்து விட்டால் அவ்வளவுதான்.. கால் கூழாகிவிடும். அதன் குளம்பால் மிதிபடாமல் கவனமாக நடக்க வேண்டும்.

ஒவ்வொரு தெரு முக்கிலும், கரகாட்டக் காரர்கள் நின்று ஆடுவார்கள். அப்போது, அந்தந்தத் தெரு பெரிசுகள் யாராவது வந்து இந்தப் பாட்டப் பாடு, அந்தப் பாட்டப் பாடு என்று உத்தரவு போடுவார்கள். அந்தப் பாட்டைப் பாடும் போது கரகாட்டக் காரிகளின் ரவிக்கையில் ரூபாய் நோட்டை குத்திவிடுவார்கள். அவர்களும் பாடிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, ரூபாய் நோட்டை குத்தியவரை வாழ்த்தி இரண்டு வரி பாடிவிட்டு பிறகு தங்கள் கதைப் பாட்டைத் தொடர்வார்கள்.
 
எங்கள் ஊர்வலம் மணிநகரம் ரயில்வே லைனுக்கு அடியில் உள்ள பாலம் பகுதிக்குப் போனதும் (அதை கர்டர் பாலம் என்பார்கள்) அந்தப் பகுதி பெரியவர்கள் நிறுத்தி சரஸ்வதி பள்ளிக் கூடம் பாட்ட படிங்க என்று உத்தரவிடுவார்கள். பாடுங்க என்பதை படிங்க என்று சொல்வது மதுரையில் தொன்று தொட்டு வரும் பழக்கம். அந்தப் பக்கத்தில் அந்தக் காலத்தில் (1964ல்) சரஸ்வதி பள்ளிக்கூடம் என்று ஒன்று இருந்திருக்கிறது.  மோசமாகக் கட்டப்பட்ட கட்டிடம்.  பாலத்தில் ரயில் போன அதிர்ச்சியில் கட்டிடம் இடிந்து விழ முப்பத்தாறு சிறு குழந்தைகள் பரிதாபமாக இறந்து போனார்கள். கும்பகோணம் பள்ளி தீவிபத்தைப் போன்ற ஒரு கோரமான விபத்து. மதுரை தத்தனேரி மயானத்தில் இந்தக் குழந்தைகளின் கல்லறைகள் வரிசையாக இருப்பதை இப்போது பார்த்தாலும் துக்கம் பொங்கும். இந்தப் பாடலை கரகம் ஆடும் ஆண்களும் பெண்களும் அப்படியொரு சோகமான குரலில் பாட, நையாண்டி மேளத்தில் அதை வாங்கி வாசிப்பார்கள்.

            ‘பாண்டி நகரமாம் மதுரையில் நடந்த
            பள்ளிக் கூட விபத்து
            மனமுருகும் பயங்கறமான விபத்து
            இந்த பறிதாப வறலாற விறிவாக சொல்லி வாறேன்
            பாடலாகப் படித்து.... இங்கே
            பாடலாகத் தொடுத்து....‘
என்று உருமி எஃபெக்ட்டுக்காக 'ர' வரும் இடத்தில் எல்லாம் 'ற' போட்டு பெண்கள் பாட, தவில், உருமி எல்லாம் மிருதங்கம் போல் சர்வலகுவாக அனுசரணையாக மெதுவாக வரும். அவர்கள் பாடலாகத் தொடுத்து... என்று முடித்ததும் நாயனக்காரர் அதே வரிகளை எடுக்க இப்போது தவிலும், பம்பையும், உருமியும் வெறி கொண்டு உறுமும்...

            சினிமாவில் நடிக்கிற சிவாஜி கணேசன்
             பாலும், பழமும் கொடுக்க,
             பிள்ளைகளுக்கு பாலும், பழமும் கொடுக்க,
            எம்.ஜியாரு பத்தாயிரம் கொடுக்க...
என்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திரை நட்சத்திரங்கள் செய்த உதவி பாடலில் வரும்.  கல்விக் கண் திறந்த காமராசர் சம்பவத்தைக் கேள்விப்பட்டுக் கண்கலங்கியது வரும். இந்தப் பாடலின் ஹைலைட், கடைசியில், ஆண் .....
            ‘இம்புட்டு நடந்திருக்கே...  
            இந்த ஊர்ல ஒரு மகாராணி இருக்குதே....
            அது என்ன செஞ்சுச்சு?‘
என்று கேட்பதுதான்.

பெண்ணுக்கு முதலில் புரியாது. பிறகு புரிந்து கொண்டு,
            ‘அது என்னத்த செஞ்சுச்சு?
            அது பாட்டுக்கு பட்டாபிசேகம் செஞ்சுக்குறும்...
            திக்குவிஜயம் போகும்....
            கல்யாணம் கட்டிக்கும்,‘
என்று  நிந்திப்பாள்.   36 சின்னஞ்சிறு குழந்தைகள் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்து இறந்ததற்காக,  அதைத் தடுக்காது வேடிக்கை பார்த்ததற்காக, அரசி மீனாட்சியை மதுரை மக்கள் இன்று வரை மன்னிக்கவில்லை.

எங்கள் ஊர்வலம் அப்படியே புட்டுத்தோப்பு திருக்கண் மண்டபம் வரை போகும். மண்டபத்திற்கு வாசலில்  கரகாட்டக் கோஷ்டி சின்னதாக ஒரு டான்ஸை போடும். அப்போது ஒரு சண்டியர், ‘டேய்.... மணிக்குறவெ பாட்டப் படிக்காம என்ன டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க?‘ என்று சவுண்டைக் கொடுப்பார். நையாண்டி மேளம் சட்டென்று நிற்கும். ஆண் ஆட்டக்காரர், கணீரென்ற குரலில்,
            ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
            அன்புடன் கல்வி கற்றுத் தந்ததோர்
            குரு அடுத்ததொரு தெய்வம்
            பின்னே நம் குடும்பத்தின் வாழ்க்கையை
            பெருமைப் படுத்த வந்த பெண்சாதி தெய்வம்
            இந்த பேரான உலகமது நேராக நின்றுமே
            நம் பேரைச் சொல்ல வந்த பிள்ளையும் தெய்வம்
            இது அன்னாளின் முன்னோர்கள் அறிவித்த பழமொழி
            அது போலத் தானய்யா இந்த மண்ணான பூமியில் மாது சிரோண்மணி
            அரிஜன வம்சம் அன்புள்ள பெண்மணி
            பூரணக் குறத்தி புண்ணிய தவத்தால்
            சீராகப் பெற்று செல்லமாய் வளர்த்திட்ட
            வீரனாம் மணிக்குறவன் வெட்டுப்பட்டு மாண்ட கதை கேளய்யா....‘
என்று தொகையறா பாடி,

‘மணிக்குறவன் கதயக் கேட்டு மருகுதுல்ல சனங்களெல்லாம் ‘ என்று ஆரம்பிக்கும் போது தவிலும், பம்பையும், உருமியும் மெல்ல சேர்ந்து கொள்ளும்.  மணிக்குறவனின் வீர சாகசம், வஞ்சனையால் அவன் கொல்லப்பட்டது என்று ஒவ்வொரு கட்டத்திற்கும் கூட்டம் ஆஹாகாரம் செய்யும்.  பொதுவாக  உலகில் ஆண் ஊர் சுற்றுபவன். உலக விவகாரங்கள் அறிந்தவன். பெண் வீட்டில் அடுப்பூதிக் கொண்டிருப்பவள். ஆண் மூலம் உலக விஷயங்களை அறிந்து கொள்பவள். ஆனால் மதுரையில் எளிய குடும்பங்களில் ஆண் வேலைக்குப் போவான். வேலை இல்லாத நேரங்களில் வீட்டு வாசலில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டு, தூ.. தூ... என்று துப்பிக் கொண்டிருப்பான். அவனுக்கு உலக விவகாரம் எதுவும் தெரியாது. எல்லாம் வீட்டின் ‘பொம்பளயாளுகளுக்குத்‘ தான் தெரியும்.  மீனாட்சி பட்டணத்தின் இந்த விதிக்கு ஏற்றாற் போல், கரகாட்டக் கதைப் பாடல்களில் எல்லாம் ஆண் ஒன்றும் அறியாத அப்புராணியாக,  என்ன நடந்தது? எப்படி? ஏன்? என்று கேள்விகளாகக் கேட்க, பெண்தான்  நாலு விஷயம் அறிந்த அறிவாளியாக, பதில் சொல்வாள்.

மணிக்குறவன் மாண்டதோடு கதை முடிந்து விடாது. ஆண்....
            ‘சுந்தரியே! இந்த சேதி சொல்லி உனக்கு தந்தது யாரு?
            சந்தேகத்த சொல்ல வேணும் அங்கம்மா
            சபையோருக்குத் தெரியும் படி ரங்கம்மா‘
என்று கேட்பான்.
உடனே பெண்,......
            ‘பேர மாத்தி படிப்பவர பிடிச்சு வெச்சு புத்தி சொல்லும்
            கருணையுள்ள என் குரு அங்கப்பா
            கவிராயர் எஸ்.பெருமாள் ரங்கப்பா‘
என்பாள்.  

பொதுவாக பாடல் வரிகள் பாடப்படும் போது தவில், பம்பை, உருமி எல்லாம் மிருதங்கம் போல் மென்மையாக வரும் என்று முன்பே சொன்னேன் அல்லவா? இந்த கவிராயர் எஸ். பெருமாள் என்ற வரிகளை அந்தப் பெண் பாடும் போது மட்டும் எல்லாம் பயங்கரமாக உருமும். அடி பின்னி எடுத்துவிடுவார்கள். கேட்கும் பெருசுகளும்  ‘அப்படிப் போட்றா‘ என்று உற்சாகமாகக் கூவுவார்கள்.

தியாகராஜரும், தீட்சிதரும், சுவாதித் திருநாளும் தான் தாம் எழுதிய பாடல்களில் தம் பெயர் வருமாறு எழுதி முத்திரை பதிக்க வேண்டுமா என்ன? மதுரையின் வீதிகள் தோறும் கரகாட்டம் நடக்கும் இடங்களில் எல்லாம் பாடப்படும் பாடல்களை எழுதிய பெருமாள் கோனார் தன் முத்திரையைப் பதித்திருப்பது சரிதானே?

இப்படித் தெருத் தெருவாகச் சுற்றிவிட்டு, பாலுக் கோனார் வீடு திரும்புவோம்.  மாடுகள் நேராக தொழுவம் செல்லும் வகையில் கொல்லைப் புறக் கதவைத் திறந்து வைத்திருப்பார்கள்.  தொழுவத்தின் கதவின் நிலைப்படியில் உலக்கையைப் போட்டு அதன் மேல் வைக்கோலைப் போட்டு வைக்கோலில் கங்கைப் போட்டு புகைய விட்டிருப்பார்கள். மாட்டைப் பிடித்துக் கொண்டு நாம் நிற்க கோனார் வீட்டின் பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் வீரத் திலகம் இடுவார்கள்.  கோனாரின் மனைவி, மருமகள்கள், கல்யாணமாகாத மகள்கள் என்று ஒவ்வொருவராக எடுப்பார்கள்.

இன்று அதை நினைக்கும் போது, இது போன்ற மாட்டுப் பொங்கல் ஒன்றின் போது ஒரு நையாண்டி மேளக் கலைஞன் வாசித்த ‘நெஞ்சினிலே.... நினைவு முகம்... ‘ பாடல்தான் மனதில் முட்டுகிறது.   ‘ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதியில்லை....‘ என்று உச்சியில் கொண்டு போய் நிறுத்திவிட்டு,   ஒரு மிகச் சின்ன இடைவெளி விட்டு, மிகவும் கீழிருந்து, ‘நெஞ்சினிலே....ஏ...  நினைவு முகம்...‘ என்று எடுத்து என்னைக் கண்கலங்க வைத்த அந்த முகம் தெரியாத நாயனக்காரரும் சேர்ந்து நினைவிற்கு வருகிறார்.

பாடல்களை எல்லாம் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன்...  தமிழ் இலக்கியம், இசை பற்றிய புரிதல்கள் ஏதுமற்ற அந்த இளம் வயதில் மாட்டுப் பொங்கல்தான்  எனக்கு  இசையில் மேட்டுக்குடி இசை, எளிய மக்களின் இசை எல்லாம் ஒன்றுதான். எல்லாம் பொதுவான இசைதான் என்ற புரிதலையும், மேட்டுக்குடி இலக்கியத்திற்கு எந்தவகையிலும் வாய்மொழி இலக்கியம் குறைந்ததல்ல என்பதையும் புரிந்து கொள்ள  வைத்தது.

நாற்பதாண்டுகளுக்கு முன் மதுரை மக்கள் எத்தனை எளிமையானவர்களாக, ஜாதி பெருமிதங்கள் அற்ற சாதாரண மனிதர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்க வியப்பாக இருக்கிறது. கலைகளையும் நல்ல நோக்கங்களுக்காகவே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது மற்றொரு வியப்பு.  காலம் எல்லாவற்றையும் திருப்பிப் போட்டுவிடுகிறது.

இன்று இணையத்தில் கரகாட்டப் பாடல்கள் என்று தேடினால் ஆபாச நடனங்கள் தான் வருகின்றன. பெருமாள் கோனார் பாடல்கள் என்று போட்டால் வீரன் அழகு முத்துக் கோன் பற்றி... சாதிச் சங்கம் , அதன் பெருமை பேசும் பாடல்கள்... என்று தேடல் தரும் விடைகளைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.  அரிசன இளைஞனின் வீரத்தைப் பாடிய பெருமாள் கோனார், அதை விரும்பி விரும்பி நேயர் விருப்பமாகக் கேட்ட மதுரை மக்கள் இருந்த அந்தப் பொற்காலம்.... இப்போது மாட்டுப் பொங்கலன்று மணிக்குறவன் பாடல் பாடுகிறார்களா? இல்லை அழகுமுத்துக் கோன் பாடல்களா?  மாட்டுப் பொங்கலன்று சோபாவில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டு நேரலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இந்தக் கேள்விகள் தான் மனதைக் குடைந்து கொண்டே இருக்கின்றன.


நன்றி : இந்து தமிழ் திசை 2022 - பொங்கல் மலர் இதழ்


--------

No comments:

Post a Comment