Wednesday, January 12, 2022

பொங்கலோ பொங்கல்!!!

-- முனைவர். செங்கை பொதுவன்


பொங்கல் தமிழர் வீடுகளில் கொண்டாடப்படும் ஒரு திருநாள். தை மாதம் முதல் நாளில் வீடுகளில் இது கொண்டாடப்படுகிறது.   இதற்கு முதல்நாள் போகி. இந்த நாளில் பொங்கல் கொண்டாட்டத்திற்குக் காப்பு கட்டுவர். வீட்டு வாயிலிலும், வயல்களின் சனி மூலையிலும் (வடகிழக்கு) காப்பு கட்டுவர். பூலாப்பூ, ஆவாரம்பூ, பாலைத்தழை மூன்றையும் சேர்த்துச் செருகுவது காப்பு கட்டுதல் எனப்படும்.  

சென்னை பழவந்தாங்கலில் குடியேறியபோது இங்குள்ள சிறுவர்கள் போகிநாள் அதிகாலையில் சிறுபறை முழக்கிக்கொண்டு தெருத்தெருவாகச் செல்வதையும், பழைய பொருள்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவதையும் 1970-களில் பார்த்தேன்.

உழவர் கொண்டாட்டத்தில் தை முதல்நாள் கொண்டாடப்படுவது வாசல்-பொங்கல். வட இந்தியாவில் இதனைச் சங்கராந்தி என்று கூறுவர். சங்கரன் என்பவன் சிவன். உழவர் வாசல் பொங்கலைச் சூரியனுக்குப் படைப்பர்.   இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். ஆடு மாடு வைத்திருப்போர் அன்று வைக்கும் பொங்கலைத் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு ஊட்டி மகிழ்வர்.

pongal2.jpg

பொங்கல் வீட்டில் புதிய பானையில் புத்தரிசி போட்டுச் சமைக்கப்படும் பால்சோறு. சருக்கரைப் பொங்கலும் வைக்கப்படும், பொங்கலை முதலில் சாமிக்குப் படைப்பர். சாமியை அவரவர், அவரவர் வீடுகளில் செய்துகொள்வர். மாட்டுச் சாணத்தையும், குழைத்த மஞ்சளையும் லிங்கம் போலப் பிடித்து அதன் தலையில் அருகம்புல்லைச் செருகிப் பிள்ளையார் சாமி என்று வைத்துக்கொள்வர். அவரவர் வீட்டில் அவரவர் செய்த சாமிக்குப் படைப்பதே பொங்கல் திருநாள் படையல். இதனை ஊரே கொண்டாடும்.

வாசல் பொங்கல் காலையில் கொண்டாடப்படும். மாட்டுப்பொங்கல் மாலையில் கொண்டாடப்படும். கார்த்திகை விளக்குத் திருநாளைச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. பொங்கல் பற்றி அடியேன் அறிந்த வரையில் பிற இலக்கியங்களிலும் குறிப்பு இல்லை.   திருமுருகாற்றுப்படை குறிப்பிடும் ஆறு படைவீடுகளில் ஒன்று குன்றதோறாடல். ஊர் மக்களோடு கை கோத்துக்கொண்டு முருகன் குரவை ஆடுவது குன்றதோறாடல். இதனைக் குன்றக் குரவை என்று சிலப்பதிகாரம் பாடுகிறது. முருகாற்றுப்படுத்தல் என்னும் வெறி விழா ஏதாவது ஒரு வீட்டில் நிகழும். இவற்றைப் பொங்கல் விழாவோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது நல்லது.

மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளுக்குக் கொண்டாட்டம். மாடுகளைக் குளிப்பாட்டிப் பொட்டு வைத்துக் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மணி கட்டி, சல்லி என்னும் மாலை கட்டி, அழகுபடுத்தி, பொங்கலைப் படைப்பர். பூலாப்பூ, ஆவாரம்பூ, பாலைத்தழை, மஞ்சள் கொத்து, மூங்கில் தழை ஆகியவை அடுத்தடுத்து வருமாறு  கட்டிய மாலையைச் சல்லி என்பர். இது மாடுகளின் கழுத்தில் கட்டப்படும்.  

சமைக்கும்போது சோறு பொங்கி வரும்போதும், மாடுகளுக்கு ஊட்டும்போதும் "பொங்கலோ பொங்கல்" என்று பலரும் சேர்ந்து முழங்குவர். இந்த ஒலி மாட்டுப்பொங்கல் நாளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் இடையறாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். இவை 1950-களில் என் ஊர் செங்காட்டுப்பட்டியில் நான் கொண்டாடி மகிழ்ந்த பேறு. மாட்டுப் பொங்கலுக்கு மறுநாளை உழவர் கரிநாள் என்பர். இது வேடிக்கை பார்க்கும் திருநாள். தமிழ்நாடு அரசு இதற்குத் திருவள்ளுவர் நாள் என்று பெயர் சூட்டியுள்ளது.

பொங்கலோ பொங்கல்!!!!



முனைவர். செங்கை பொதுவன் M.A., M.Ed., Ph.D.
மின்னஞ்சல் : podh...@gmail.com
தமிழ்த்துளி
https://vaiyan.blogspot.com/

----------------

No comments:

Post a Comment