Showing posts with label இரா.நாறும்பூநாதன். Show all posts
Showing posts with label இரா.நாறும்பூநாதன். Show all posts

Wednesday, January 13, 2021

அதுவொரு காலம்! பொங்கும் பொங்கல் நினைவுகள்

 -- இரா.நாறும்பூநாதன்


மேல பஜார் தெய்வு அண்ணன் கடையில் தான் விதவிதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள் கிடைக்கும். ஆனால் கடையில் நின்று கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவருக்கு பழியாய்க்கோபம் வரும்.

"இங்கன பாரு..சும்மால்லாம் வேடிக்கை பாக்கதுக்கா அடுக்கி வச்சுருக்கோம்..வாங்க வர்றவங்களை மறிச்சுக்கிட்டு நின்னா எப்படிடே..ஒரு ஓரமா நின்னு பாருங்கன்னு சொல்லியாச்சு..கேப்பனான்கியோ.."  

தெய்வு அண்ணன் வார்த்தைகள் எல்லாம் எங்களுக்குப் பழகிப் போச்சு. டிசம்பர் மாசம் கிருஸ்துமஸ் தொடங்கும் முன்பே வாழ்த்து அட்டைகள் வாங்கி கடையைச் சற்றே முன்பக்கம் நீட்டி விட்டு, பார்க்கும் வசத்தில் அடுக்கி வைத்திருப்பார்.

ஏசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் படுத்திருப்பது..மூன்று ஸ்டார்கள்..மரியம்மை, வெறும் சிலுவை..ஏசுநாதர் நெஞ்சைத் திறந்து காட்டுவது போல..
இவை ஒருபக்கம் இருக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள் அட்டைகள் இன்னொரு பக்கம்..
தகதகக்கும் சூரியன் ..நேதாஜி,நேரு படங்கள் தாங்கிய அட்டைகள்..
பொங்கல் வாழ்த்து அட்டைகள் தாம் நிறைய. பொங்கப்பானை, கரும்பு,ஜோடி காளை மாடுகள்..மஞ்சள் குலை..
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் காளையர்கள்..கோலம் போடும் அம்மாக்கள்..
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி பொங்கல் வாழ்த்து சொல்லும் படங்களும் உண்டு. சிவாஜி, பத்மினி படங்கள்...

பக்கத்துக்கு வீட்டு ஹிந்தி பண்டிட் சார் வந்தால் அஞ்சு நிமிசத்தில் பத்து போஸ்ட் கார்டுகளை மாத்திரம் வாங்கி விட்டுப் போய் விடுவார். ஒரு கார்டு பத்து பைசா மேனிக்கு ஒரு ரூபாயில் வேலையை முடித்துக் கொண்டு செல்வார். அந்தப் பத்து கார்டுகளைக்கூட கடைக்காரரையே தேர்வு செய்யச் சொல்வார். தெய்வு அண்ணன் ஒரே மாதிரி கார்டுகளை எடுத்துத் தருவார். " பத்தும் பத்து வெவ்வேறு ஆட்களுக்குத்தானே போகுது..அதனாலே என்ன.." என்பார்.

நான் எம்.ஜி.ஆர்.படங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பேன். விலை எல்லாம் கூட கேட்டு விடுவேன். மறுநாள் வந்து பார்த்தால், அவை இருக்காது. " குடியிருந்த கோவில்", " தனிப்பிறவி" படங்கள் அதிகமாக இருக்கும்.

வீட்டில் அண்ணன்மார்கள் எல்லோரும் போஸ்ட் கார்டுகளில் இந்தியன் இங்க் கருப்பு மையால் அழகாய் பொங்கல் பானை,கரும்பு வரைந்து பெரியப்பா பையன்கள்,மாமா பையன்கள் எல்லோருக்கும் அனுப்பி விடுவார்கள். ஆறு பைசா கார்டு விலையோடு முடிந்து விடும். சுய படைப்பு வேற...ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு தான், அதே மாதிரி படம் வரைஞ்சு அனுப்புற பழக்கம் எனக்கு வந்தது.

ஒரு பக்கம் படமாய் இல்லாமல், விரித்துப் பார்த்தால், உள்ளே 9 எம்.ஜி.ஆர்.சிரித்தபடி வெளியே வரும் படியாய் ஒரு வாழ்த்து அட்டை உண்டு. அதில் படகோட்டி எம்.ஜி.ஆர்.நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர்.விவசாயி எம்.ஜி.ஆர். என பல்வேறு படங்களின் தோற்றங்கள் பலவண்ணத்தில் இருக்கும். அதெல்லாம் பயங்கர விலை அப்போது..(ஒரு ரூபாய் பத்து பைசா ).

பள்ளி ஓவிய ஆசிரியர் ஈஸ்வரன் சார் வந்தால் மாத்திரம், பார்த்துப் பார்த்து வாங்குவார். பெரும்பாலும் ஓவியர் மாதவன் வரைந்த படங்களாக இருக்கும்.(மாதவன் என்ற பெயரை அவரே முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் ) அவற்றில் இருக்கும் நுட்பங்களைப் பார்த்துப் பார்த்து ரசிப்பார்.

5.jpeg

2.jpeg

1.jpeg

3.jpeg

6.jpeg

4.jpeg

7.jpeg

வாழ்த்து அட்டைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்ததினால், அதில் உள்ள ஜிகினா தூள்கள் கைகளில் ஒட்டிக் கொள்ளும். பொங்கலையொட்டி சைக்கிளில் வரும் போஸ்ட்மேனிடம் " எங்களுக்கு பொங்கல் வாழ்த்து இருக்கா..?"  என்று கேட்டபடி பின்னாலேயே செல்வதுண்டு. 

கோவையிலிருந்து சிவானந்தம் அண்ணன் அனுப்புவார். வாகைக்குளத்தில் இருந்து திருமலை அத்தான் சமயங்களில். திருவெண்காட்டில் இருந்து திருநாவுக்கரசு அண்ணன்..நெய்யூரில் இருந்து போஸ் அத்தான்..அப்பாவின் நண்பர்கள் சிலர். இப்படியாய் வாழ்த்து அட்டைகள் நமக்கு மகிழ்ச்சியைச் சுமந்து வரும்.

greetings.jpeg

குறுஞ்செய்தி,வாட்ஸ்அப் வாழ்த்துக்கள் வந்து விட்டன இப்போது.
இப்போதும் வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம்..யார் வேண்டாம் என்று சொன்னது ?


வீட்டிற்கு வெள்ளையடிக்க எப்போதும் முருகேசன் அண்ணாச்சி தான் வருவார். அவருக்கு வயசு அம்பதுக்கு மேல் என்றாலும் எங்களுக்கு அண்ணாச்சி தான். வீட்டில் உள்ள சாமான்களை அவரே ஒதுங்க வச்சு வெள்ளை அடிச்ச்சபிறகு அவரே அதது இருந்த இடத்தில வச்சு விடுவார். நாம கூடமாட ஒத்தாசைக்கு இருந்தால் போதும். 

வீடு வெள்ளை அடிக்கும்போது,  சுவரில் மாட்டி இருக்கும்  பிரேம் போட்ட படங்களை எல்லாம் கழட்டி தூசி துடைச்சு ஈரத்துணியால் இன்னொரு முறை அழுத்தி துடைத்து மாட்ட வேண்டியது என்னுடைய வேலை. வெள்ளை அடிக்கும்போது தான் ஆறு மாசத்திற்கு முன்னால தொலைச்ச பொருட்கள் எல்லாம் கிடைக்கும். 

வீட்டில் இருக்கும் எல்லா சேலைத்துணிகளையும் அம்மை மூட்டை கட்டி வைத்து விடுவாள். அதுவே அம்பாரி மாதிரி குமிஞ்சு கிடக்கும். அதிலே ஒய்யாரமாய் படுத்துக் கொண்டு படங்களை துடைப்பதுண்டு.  தொலைஞ்ச தீப்பெட்டி படங்கள், கோலிக்குண்டுகள், கலர் குச்சிகள், என சிலவற்றை தேடி எடுத்துத் தருவாள் அக்கா. ஒரு புதையல் கிடைத்த சந்தோசத்தோடு அவற்றை தடவிப் பார்க்க சொல்லும். 

" ராசா..கொஞ்சம் நகந்துக்கிறீகளா.." என்று முருகேசன் அண்ணாச்சி பட்டாசாலை வந்து சத்தம் கொடுப்பார். சுண்ணாம்பு கொதிப்பதை பார்த்துக் கொண்டிருந்தால், " உனக்கு அங்கன என்ன வேல..கையில பட்டு பொத்துப் போகப்போகுது.."  என்று அப்பா வாசலில் நின்று குரல் கொடுப்பார். 

பொங்கலுக்கு முதல் நாள் காவிப் பட்டை அடிக்க, முருகேசன் அண்ணாச்சியிடம்  இருப்பதில் பரவாயில்லாமல் இருக்கும் மட்டையை வாங்கி வைப்பேன். காவிப்பவுடரை தண்ணியில் கரைச்சு வெள்ளையடித்திருக்கும் படிச்சுவர்களில் முதல் நாள் இரவு கோலாகலமாக அடிக்கும் கொண்டாட்டங்கள். பிசிறின்றி அடிப்பது பெரிய கலை தான். சொட்டுப் போடாமலும் இருக்க வேண்டும். ரொம்பத் தண்ணியாய் கரைசல் இருந்தாலும் காவிப்பட்டை பளிச்சென்று இருக்காது. 

white washed wall.jpeg

மார்கழிக்குப்போடும் கோலத்திற்கு சற்றும் குறைவின்றி,  பொங்கல் திருநாளுக்கு பெரிய கோலமாய் போடும் முயற்சியில் அம்மை ஈடுபட்டிருப்பாள். அப்போது ரங்கோலி எல்லாம் கிடையாது. கோலப்பொடி கோலம் தான்.   சிறுவீட்டுப் பொங்கல் இடுவதற்கு வீட்டின் கிழக்கு முனையில், களிமண் வைத்து சின்னதாக வீடு அமைக்கப்பட்டிருக்கும். அதில் சமையலறை, பட்டாசாலை, தார்சா, படுக்கையறை எல்லாம் இருக்கும். அதில் சிறுபருப்பு பாயாசம் வைத்துக் கும்பிடுவோம். 

வெள்ளையடித்து முடித்தவுடன், வீட்டு உரிமையாளர் திருமேனி செட்டியாரின் மருமகன் வந்து வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு " முருகேசன் ஒழுங்காதான் அடிச்சுருக்கான்..வீட்டை உங்க வீடு மாதிரி பாத்துக்கோங்க.." என்று சொல்லி விட்டுப் போவார்.  எதிர்வீட்டின் வாசலில் குத்த வைத்திருக்கும் முருகேசன் அண்ணாச்சி அவசர அவசரமாய் தனது சொக்கலால் பீடியை அணைத்தபடி எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லுவதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.



Wednesday, September 23, 2020

பனை மரமே ! பனை மரமே !

பனை மரமே ! பனை மரமே !

-- இரா.நாறும்பூநாதன்


தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில், "பனையும்,முருங்கையும் " பற்றி பேசும் இந்தக் கருத்தரங்கில், பண்பாட்டு ஆய்வாளர் ஐயா ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய " பனை மரமே, பனை மரமே " என்ற நூல் தரும் அரிய செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பனை மரம் என்றவுடன், நமக்கு உடனே நினைவுக்கு வருவது, பள்ளிக்காலத்தில் படித்த பாடல் தான் :
" பனை மரமே பனை மரமே !
  ஏன் வளர்ந்தாய் பனை மரமே !
  நான் வளர்ந்த காரணத்தை
  நானுனக்குச் சொல்லுகிறேன் "
இனிமையான நாட்டுப்புறப்பாடல் அது. இப்போது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை.

அது தவிர, தென் தமிழகத்தில் பயணம் வந்தால், கோடைக் காலங்களில், சாலையோரங்களில் மரத்தடியில், பதநீர், நுங்கு வாங்கி, பனை மட்டையில் ஊற்றிக்குடித்த இன்பமான நினைவுகள் உதட்டோரம் நிற்கும். சிலர் பனம்பழங்களைச் சுவைத்திருக்கக்கூடும். பனை மரம் குறித்து வேறு என்ன செய்திகள் நாம் அறிந்திருப்போம் ?

உலகின் தொன்மையான மரபுகளைக்கொண்ட தமிழ்ச்சமூகத்தில் பனை வகிக்கும் வகிபாகம் முழுவதையும் அறியத்தக்க வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
  • 12  இயல்களில் பனையின் பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
  • 5000  ஆண்டுகளுக்கும் மேலாகப் பனை மரம் என்பது, தமிழர் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது.
  • தமிழக வரலாற்றின் தொன்மை தொடங்கி, கல்வெட்டு,சங்க இலக்கியங்கள், சைவம், கிறிஸ்தவம் காலனியம் ஊடாக, இன்றைய உலகமயம் வரை பனை பற்றிய செய்திகளை முழுமையாய் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
  • 800க்கும் மேற்பட்ட பயன்பாடுகளைக்கொண்ட பனைக்கு, நூற்றிற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன.
  • தமிழகத்தில் 5.19  கோடி பனைமரங்கள் உள்ளன.
  • இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் இது 50  விழுக்காடு.
  • தமிழ்நாட்டிலும், தென்மாவட்டங்களில் தான் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம் முதலிடம்.
ஒரு மரம் என்றால், அது தரும் கனி, மருத்துவ குணங்கள் போன்றவை நம் நினைவுக்கு வரும்.  இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி, தமிழர்களின் பெருமைக்குரிய இலக்கிய நூல்கள் அனைத்தும் பனை ஓலைகளில் தான் எழுதப்பட்டுள்ளன என்பது மிக முக்கியமான செய்தி. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டோடு பனை கொண்டிருந்த தொடர்பை இதைவிட வேறு எப்படிச் சொல்லிவிட இயலும் ?

பனை மரத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் குறிப்பிடத்தக்கதாக தமிழகத்திலிருந்துள்ளதை பல்வேறு கல்வெட்டு ஆதாரங்களைக்கொண்டு ஆசிரியர் நிறுவுகிறார். சோழர் காலத்தில், ஊரின் எல்லையில் பனை, தென்னை வளர்ப்பதற்கான உரிமையைச் சோழ மன்னர்கள் வழங்கி உள்ள செய்தியும்,  புதிய ஊர்களை உருவாக்கும்போது பனை தொழில் புரிவோரை அப்பகுதியில் குடியேறச் செய்துள்ள செய்திகளும் குறிப்பிடத்தக்கன.

தமிழ்நாட்டின் முக்கிய சாதிகளில் ஒன்றான நாடார் சாதியில், ஒரு பிரிவினர் பனைத்தொழிலை மேற்கொண்டிருந்தார்கள்.

பனை பற்றிய சில செய்திகள் :
வெப்ப மண்டலத்தில் வளரும் மர வகைகளுள் பனையும் ஒன்று. இதன் விதை, பனங்கொட்டை. செம்மண் நிலத்தில் இருக்கும் பனையின் பதநீர், நுங்கு,பனங்கிழங்கு மிகவும் சுவையாய் இருக்கும். தனி மரமாக இன்றி, கூட்டமாகவே பனை மரங்களைக் காண முடியும்.

பனை மரத்திற்குக் கிளைகள் ஏதும் இல்லை. 50  அடி முதல் 100  அடி வரை பனை மரங்கள் வளரும். பனையின் வயது 100  முதல் 120  வருடங்கள் வரை. மரத்தின் வேர், தூர்ப்பகுதி, மரத்தின் நடுப்பகுதி, காம்பு (மட்டை ), இலை(ஓலை ), சுரக்கும் இனிப்பான சாறு என மரம் முழுமைக்கும் மனிதருக்குப் பயன்படுகிறது.

பனை மரத்தில் நுங்கு கிடைக்கும். நுங்கை வெட்டாமல் விட்டு விட்டால்,அது பழுத்து பனம்பழம் ஆகி விடும். பழம் நன்றாகப் பழுத்து விட்டால், கீழே உதிர்ந்து விடும். பறித்த பனம்பழங்களைச் சாக்கினால் ஒரு வாரம் மூடி வைக்க வேண்டும். பின்பு பழத்தின் சதைப்பகுதியை நீக்க வேண்டும். உள்ளே ஒன்று முதல் மூன்று கொட்டைகள் வரை இருக்கும். இந்த கொட்டைகளை வெயிலில் உலர வைக்க வேண்டும். தேர்வு செய்த கொட்டைகளை, பத்தடி இடைவெளியில் குழி வெட்டி, கொட்டையின் கண்பாகம் கீழ்நோக்கி இருக்கும்படி நட வேண்டும். குழியின் ஆழம் ஒன்று முதல் ஒன்றரை அடி வரை இருக்கலாம். முதல் நான்கு மாதங்களில், பனங்கொட்டையில் உள்ள தவண் என்ற பகுதியை உணவாகக் கொண்டு பனை வளரும்.(இந்த தவண் சாப்பிட ருசியானது). நான்கு மாதம் கழித்து குருத்து போன்ற பனை ஓலை பூமி மீது வெளிப்படும்.இதை " பீலி " என்பார்கள்.  ஓராண்டு கழித்து இரண்டு பீலிகளின் மத்தியில் இன்னொரு பீலி வெளிப்படும். இந்த பருவத்தை, "வடலிக்கன்று " என்பர். தொடர்ந்து 25  ஆண்டுகள் வேகமாய் வளரும். வடலிப்பருவ பனையில், பக்கவாட்டில் தோன்றும் கருக்கு மட்டைகளை வெட்டி அகற்றுவார்கள். வடலிப்பருவம் கடந்து 30  ஆண்டுகள் கழித்து, மரத்தின் உட்பகுதி வலுவடையத் தொடங்கும். இதை வைரம் பாய்தல் என்பர். 90  ஆண்டுகளுக்குப் பிறகு பனையின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாய் குறையும்.

பனையில், ஆண்பனை, பெண்பனை உண்டு. ஆண் பனையில் குரும்பைகள் இருக்காது. எனவே, இதில் நுங்கும், பனம்பழமும் கிடைக்காது.  ஆனால், இதில் உருவாகும் பாளையைச் சீவி, கள், பதநீர் இறக்கலாம். இன விருத்தி செய்ய ஆண் பனை அவசியம். பெண்பனை நுங்கும், பனம்பழமும் தரும். தொடர்ந்து பெற, இம்மரத்தின் பாளையைச் சீவி, கள் அல்லது பதநீர் இறக்காமல் இருக்க வேண்டும்.

பனை மரத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. நெஞ்சணைத்து ஏறுதல், கைக்குத்தி ஏறுதல், இடை கயிற்றால் ஏறுதல், குதித்துக் குதித்து ஏறுதல் எனப் பல வகைகள் உண்டு. இத்தொழிலுக்குத் தேவையான தொழிற்கருவிகள் உண்டு. நெஞ்சுத்தோல், தளைநார்,கால்தோல், முருக்குத்தடி, பாளை அரிவாள், அரிவாள் பெட்டி, கலக்கு மட்டை ஆகியன.

பாதுகாப்பு பெட்டகமாய் திகழ்ந்த பனை :  
ஒரு சுவையான தகவல் ஒன்றை ஆசிரியர் சொல்கிறார். நாயக்கர் ஆட்சிக்குப்பிறகு, தென் மாவட்டங்களில் பல கொள்ளை சம்பவங்கள் நடந்தன. பனை மரங்களின் ஊடாக அமைந்திருந்த குடியிருப்புகள் பாதுகாப்பின்றி இருந்தன. எனவே இப்பகுதி மக்கள், தங்களின் நகை,பணம் போன்றவற்றைப் பனை மரங்களின் உச்சியில் மட்டைகளுக்கிடையில் பாதுகாத்து வந்தனர். குருத்தோலைகளுக்கு இடையில் ஒளித்து வைத்திருந்ததாகச் சொல்லும் தகவல் வியப்பை அளிக்கக்கூடியது. பனை நார்க்கட்டில், பனை ஓலைப்பெட்டிகள்,கடவாய்ப்பெட்டிகள், பனை விசிறி போன்ற பயன்பாடுகள் நாம் அறிந்த ஒன்று. சிறுவர்கள் விளையாட்டுகளில் காற்றாடி விடுதல் அனைவருமே விளையாடிய ஒன்று.

ஓலை :
தமிழர்கள் எளிய எழுதுபொருளாகப் பனையோலையைப் பயன்படுத்தியது வெளிநாட்டினரை வியப்பூட்டியது. பறித்த பனை ஓலையை உடனடியாக பயன்படுத்த இயலும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டு எழுத்தாணி கொண்டு எழுதுவர். இப்போதும் கூட, குமரி மாவட்டத்தில் நாடார் சமூக மக்கள் குழந்தை பிறந்தவுடன் சாதகத்தைப் பனை ஓலையில் தான் எழுதி வருகிறார்கள். ஒரு ஓலையில் எழுதி பலகாலம் ஆகிவிட்டால், அது சிதிலமாகிவிட வாய்ப்புண்டு. எனவே, அதை மீண்டும் நகல் எடுத்து எழுதுவார்கள். நமது தமிழ் இலக்கிய நூல்கள் இப்படிப் பல காலம் நகல் எடுக்கப்பட்டு வந்தாலே பாதுகாக்க முடிந்திருக்கிறது. கம்பராமாயணத்தைப்  படியெடுத்துக்கொடுப்போர் தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, நாங்குநேரி, திருக்குறுங்குடி போன்ற வைணவ தலங்களில் 1925  வரை இருந்திருக்கிறார்கள்.

கள், பதநீர் :
கள்ளில் இடம்பெற்றுள்ள போதைத்தன்மையானது, பீரில் உள்ள போதையை விடக் குறைவு தான். கள்ளின் போதைத்தன்மை 7 % வரைதான். ஆனால், அந்நிய நாட்டு மதுவகைகளில் போதைத்தன்மை 43 % வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. பாளையிலிருந்து வடியும் இனிப்பான சாறு, கள் என்ற பெயரில் மதுவாக மாறுவதைத் தடுத்து உருவாவதே பதநீர் ஆகும். சாறு வடியும் கலயத்தில் சுண்ணாம்பைத் தடவி விட்டால் பதநீராக மாறும். சேகரிக்கப்பட்ட பதநீரை அடுப்பில் காய்ச்சி உருவாக்குவதே கருப்பட்டி. கற்கண்டு தயாரிப்புக்கும் மூலப்பொருளாக விளங்குவது பதநீர் தான் .

தல விருட்சம் : 
தமிழ்நாட்டில் உள்ள திருப்பனங்காடு,திருப்பனந்தாள், திருப்பனையூர், திருமழபாடி, திருவோத்தூர், புரவார் பனங்காட்டூர் போன்ற ஊர்களில் பனை மரமே ஸ்தல விருட்சமாக உள்ளது. இவ்வளவு பெருமைகள் இருந்தபோதிலும், சைவக்கோவில்களில் ஒரு உணவுப்பொருளாகக் கருப்புக்கட்டி நுழைய அனுமதியில்லை. மடப்பள்ளிகளில் கருப்பட்டியைப் பயன்படுத்த மாட்டார்கள். புளியோதரையில் பயன்படுத்தப்படும் மிளகாய் வற்றலும், தயிர்ச் சாதத்தில் உள்ள மிளகாயும் போர்ச்சுகீசியர்களால் கொண்டுவரப்பட்டவை. பஞ்சாமிர்தத்தில் உள்ள பேரீச்சம்பழமும், ஆப்பிளும் கூட வெளி நாட்டிலிருந்தே வந்தவை. பாரசீகத்திலிருந்து வந்த ரோஜாவிலிருந்தே பன்னீர் எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த மண்ணின் பாரம்பரிய இனிப்பான கருப்பட்டியோ விலக்கப்பட்ட பொருளாக முத்திரை இடப்படுகிறது. இதில் உள்ள அரசியல் நோக்கத்தக்கது. கருப்பட்டியின் மூலப்பொருள் கள்ளாகக் கருதியதின் வெளிப்பாடே கோவில்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

பனை ஓலையும், கிறிஸ்தவ மதமும் :
வீரமாமுனிவர், சீகன்பால்கு போன்ற வெளிநாட்டு மிஷனரிகள் ஓலைச்சுவடிகளில் தான் தங்கள் சமய நூல்களை எழுதினர். குருத்தோலை திருநாளில் பனை ஓலைக்குருத்தைப் பயன்படுத்தும் பழக்கம் இன்றும் உண்டு.

அழிவை நோக்கி பனை மரங்கள் :
பனை மரத்தில் ஏறுவது குறித்த பனையேறி என்ற சொல் கூட இழிவான சொல்லாக மாற்றப்பட்டு விட்டது. கருப்பட்டி, கற்கண்டு தவிர, பதநீரை நீண்டநாட்கள் இருப்பில் வைக்க இயலவில்லை. அதற்கு விரிவான சந்தை இல்லை. செங்கல் சூளைக்காகவும் கட்டிடம் காட்டும் பணிக்காகவும் பனைகள் வெட்டப்படுகின்றன.  

செய்ய வேண்டியவை :
நீர் நிலைகளில் கரை அரிப்பைத் தடுக்க நமது முன்னோர்கள் பனை மரங்களை வளர்த்தார்கள். எனவே, மீண்டும் நாம் பனங்கொட்டைகளை ஊன்றி வளர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
முதிர்ச்சி அடையாத பனை மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது.
பனங்கிழங்கு மாவு தயாரித்தல், காற்றுப்புகா பெட்டிகளில் நுங்கு, பனம்பழ சாறு போன்றவை அடைத்து விற்பனை செய்யும் வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
குப்பிகளில் அடைத்து பதநீர் விற்பனை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.
கலப்படமில்லாத கள்ளை விற்பனை செய்ய அனுமதிக்கலாம்.
கருப்பட்டியிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளைப் பரவலாக அறிமுகம் செய்தல் வேண்டும்.

இன்னும் பல செய்திகளை இந்த நூலில் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தொகுத்துள்ளார். இன்றைய சூழலில், மிகவும் முக்கிய பனை மரமே பனை மரமே என்ற நூலைக் காலச்சுவடு பதிப்பகம் கொண்டு வந்துள்ளது.