Showing posts with label முனைவர் தி.சுரேஷ்சிவன். Show all posts
Showing posts with label முனைவர் தி.சுரேஷ்சிவன். Show all posts

Saturday, January 30, 2021

பசித்திரு, தனித்திரு, விழித்திரு

 பசித்திரு, தனித்திரு, விழித்திரு


- முனைவர் தி.சுரேஷ்சிவன்


'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வரிகள் ராமலிங்க வள்ளலார் உள்ளத்தில் எழுந்த உணர்வை நமக்கு காட்டுபவை. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னால், பறப்பன, நடப்பன, நீந்துவன என சக உயிர்களை கொன்று தின்றும் வழக்கத்தை முற்றிலும் எதிர்த்தவர் வள்ளலார்.  இறந்த உயிரினத்தின் உடலை புதைப்பதற்கு என் வயிறு இடுகாடு இல்லை என்று சொன்னவர். 

ராமலிங்கம் எனும் இயற்பெயருடைய வள்ளலார், தனது வாழ்வில் மூன்று நிலைகளை கடந்தவர். முதலில் நடராஜ வழிபாடு. 'அருட்சோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்' அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்'என்று பாடியவர். பின்னர் அருவுருவ வழிபாடு, சிவலிங்கம் மற்றும் ஜோதி வழிபாட்டினை செய்து திருநீறு பூசி நின்றார். பிறகு சுத்த சன்மார்க்கம் என்ற நெறியில் எந்த சின்னமும் இடாமல், அன்பு எனும் சக்தியை உயிர்களிடத்தில் செலுத்த அறிவுறுத்தி நின்றார். 

சிறுவயதில் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் ஆன்மிக கல்வியை படித்த வள்ளலார், கந்தக் கோட்டம் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு தெய்வப் பிறவியாக உருவெடுத்தார்.  பின்னர் வடலுார் சென்று 'தரும சாலை' தொடங்கி ஏழை எளியோருக்கு இலவசமாக உணவளித்தார். இன்றளவும் அந்த அன்னதானம் தொடர்ந்து வருகிறது.

ஜாதிய பாகுபாடுகளை சாடினார். எல்லா மதத்தினைரையும் அரவணைத்து 'சர்வசமய சமரச சுத்த சன்மார்க்கம்'என்ற மார்க்கத்தை தோற்றுவித்தார். வள்ளலாரின் சிந்தனை, அவர் காலத்தில் பலருடைய ஒப்புதலை பெறவில்லை என்பதால், 'கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்றும் வருத்தப்பட்டார்.  ஆனால் தற்போது உலகம் எங்கும் இவருடைய பாடல்கள் பாடப்படுகின்றன, சீர்திருத்தங்கள் பின்பற்றப்படுகின்றன.

திருவருட்பா:
இவருடைய பாடல்கள் மொத்தம் ஆறாயிரம். இவை ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டு உள்ளன. இன்றும் தமிழிசை வாணர்களால் இசையரங்குகளில் பாடப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டில் வள்ளலார் பற்றி அறியோதோரே இல்லை என்றளவுக்கு 'திருவருட்பா' புகழ் பெற்ற நுாலானது.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் படித்தே, வள்ளலார் இத்தகைய நிலையடைந்தார். சைவ சமய நெறியில் தொடக்க காலத்தில் இருந்து பின்னர், தனி வழியாக தமக்கென சன்மார்க்க நெறியை உருவாக்கினார்.

வள்ளலாரின் முக்கிய இரண்டு குறிக்கோள்கள் 1. ஜீவ காருண்யம், 2. மரணமிலாப் பெருவாழ்வு, எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருப்பது மட்டுமல்லாமல், ஆன்மிக வழியில் நின்று அறப்பணி செய்து மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

வள்ளலார் ஜோதியாக கலந்தார் என்று சொல்லுவர். தன்னுடைய உடலை யோக நெறியில் நிலைப்படுத்தி காற்றில் கரைந்து போகும் வண்ணம் ஒரு பேறினை பெற்றார் வள்ளலார். தைப்பூச நாளில் வடலுாரில் அவர் அடைந்த முக்தி நிலையை இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர். 

பாடல்கள்:
வள்ளலார் பாடல்களும், அவர்தம் கொள்கைகளும் மனதிற்கு இதம் தரும்.
'ஒருமையுடன் நினது திருமலரடி
நினைக்கின்ற உத்தமர் தம் உறவு  வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை  வேண்டும்'

என்று மனமுருகப்பாடி, இறைவனிடம் நம் மனது சேராவண்ணம் தடுக்கும் கருவிகளை (சக்திகளை) பட்டியலிடுவார் வள்ளலார். சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் சமய சொற்பொழிவாளராகவும் விளங்கிய வள்ளலார், நூலாசிரியராக மொழி ஆய்வாளராக விளங்கியது தான் வியக்கவைக்கும் தன்மை. வெண்ணிற ஆடையை உடுத்துவதை வழக்கமாகக் கொண்ட வள்ளலார், கடவுளை ஜோதி வடிவாகக் கண்டு வழிபாடு செய்தார். 

பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற உபசேதத்தை செய்த வள்ளலார், எல்லா உயிர்களையும் நேசிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்து காட்டியவர். 'நமக்கு பசி என்ற ஒன்று இல்லாவிட்டால், யார் இறைவனை நினைப்பார்கள்' என்று கேட்டு, உணவை கண்டவுடன் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவதை சுட்டிக்காட்டி 'உணவை' கடவுளைப் போன்று போற்ற வேண்டும் என்று கூறி அதே நிலையில் வாழ்ந்து காட்டியவர்.

இளமை பற்றி வள்ளலார்:
இந்த உடம்பில் தோன்றும் இளமை கொஞ்சகாலம் கழித்து அழிந்து விடுகிறது. உடலில் தோன்றி மறையும் இந்த இளமையானது பகலில் கொண்ட மாறுவேடம் பளிச்சென்று வெளியாகி விடுவதுபோல் அழியக்கூடியது. வஞ்சனை நெடுநாள் மறைந்திடாமல் வெளிப்படுவது போல அழியக்கூடியது.கடற்கரையின் மீதேறிய கடலின் அலைநீர் வற்றி விடுவதுபோல இளமை அழியக்கூடியது.

மாலை நேரத்தின் முன் வெளிச்சத்தில் மஞ்சள் வெயில் தோன்றிச் சிறிது நேரத்திலேயே மாறிவிடுவதுபோல இளமை அழியக்கூடியது. மேகத்தில் தோன்றும் வானவில் சற்று நேரத்திலேயே விரைந்து மறைவதைப்போல இளமை அழியக்கூடியது என வர்ணிக்கிறார் வள்ளலார்.

'நீரில் தோன்றி உடன் மறையும் நீர்க்குமிழிபோல அழியக்கூடியது இளமை. இப்படி நிலையில்லாமலிருக்கும் இளமைப் பருவத்தை நிலையெனக் கருதி, உறுதியாகப் பற்றிக் கொண்டு அழகிய பெண்கள் மீது ஆசை கொண்டு அவர்களுடைய கண்பார்வையாகிய வலையில் சிக்கி, அறிவு மயங்கி, ஆற்றல் மழுங்கித் தீய செயல்களைப் பலமுறை செய்கின்றேன்.  சிறிதளவுகூட உன் திருவடியில் அன்பு வைத்து வணங்காது அறியாமையில் திளைக்கிறேன். அனுபவம்மிக்க அருளாளர்களிடம் ஞானநுால் தத்துவங்கேட்டுச் சிந்தித்துத் தெளிவுபெற்ற மெய்யுணர்வாளர்கள் அழியக்கூடிய இளமையை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பாத அந்த நிலையா இளமையை நிலையென்று கருதிப் பெரிதும் அவதிப்படுகிறேன். அந்தச் சிறுமையை அகற்றி என்னை நல்வழிப்படுத்திக் காத்தருள வேண்டும்' என்கிறார் ராமலிங்க அடிகள்.

யாரிடம் வேண்டுகிறார்:
சிறுமை அகற்றும் சீராளனாகத் திகழும்  கந்தகோட்டத்துள் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமாகத் திகழும் முருகப்பனிடம்தான் வேண்டுகிறார்.

கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத விப்பெருங்
        கன்ம வுடலிற் பருவம் நேர்
        கண்டழியு மிளமைதான் பகல் வேடமோ புரைக்
        கடனீர் கொலோ கபடமோ
    உற்றொளியின் வெயிலிட்ட மஞ்சளோ வானிட்ட
        ஒருவிலோ நீர்க் குமிழியோ
        உலையனல் பெறக் காற்றுள் ஊதும் துருத்தியோ
        ஒன்றுமறியே னிதனை நான்
    பற்றுறுதியாக் கொண்டு வனிதையர்கண் வலையினில்
        பட்டுமதி கெட்டுழன்றே
        பாவமே பயில்கின்ற தல்லாது நின்னடிப்
        பற்றணுவு முற்றறி கிலேன்
    சற்றையகல் சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.
               (தெய்வமணிமாலை)

புண்ணியச் செயல்கள்:
எனவே நில்லாதனவற்றை நிலையாகக் கருதி ஏமாந்து போகாமல் நிலையான இறையருளைப் பெற வேண்டும்; அதன்வழி புண்ணியச் செயல்களைப் புரிதல் வேண்டும். அவ்வாறு வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்களே வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படுவர் என்னும் திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப வாழ வேண்டும்.

நல்ல கருத்துக்களை அள்ளி வழங்கும் வள்ளலாரின் தெய்வமணிமாலையை நாளும் வாசிக்க வேண்டும். வள்ளலார் பாடியுள்ள தெய்வமணிமாலைப் பாடல் ஒவ்வொன்றும் படிப்போரை ஈர்த்து இசைவித்து, பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் தன்மையது. நீதிக் கருத்துக்களையும் புராணக் கதைகளையும், உவமைகளையும் உணர்த்துவது.


கலைமாமணி முனைவர் தி.சுரேஷ்சிவன்
செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை
தினமலரில் பதிவு செய்த நாள்: 29.1.2021











Thursday, October 8, 2020

கோயில்களில் கல்லிலே இசைவண்ணம்

கோயில்களில் கல்லிலே இசைவண்ணம் 

-- முனைவர் தி.சுரேஷ்சிவன்


கல்லினைக்  குடைந்து பல கலை வண்ணங்களைக் கண்டவர்கள் தமிழர்கள்.  கல்லினால் பல அரிய சிற்பங்களை, கோயில்களைக் கட்டிய பெருமையில் இந்தியா முழுவதும் உள்ள கலைஞர்களுக்குப் பங்கு உள்ளது என்றாலும், தென்னிந்தியா கல் சிற்பங்கள், கல்தூண்கள், கட்டிடங்களில் முன்னோடியாகத் திகழ்கிறது. பாறை என்று குறிக்கப்படும் கல்லில் தமது மதிநுட்பத்தால் பல்வேறு கலைத்திறன் மிக்க சிற்பங்களை உருவாக்குவதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். குறிப்பாக இசைத் தூண்கள் மிக அரியதாகக் கருதப்படுகிறது.

இசைத்தூண்கள்
பொதுவாக சிற்பிகள் மனதில் உதித்த சிந்தனையைச் சிற்பமாக ஆக்குபவர். உரிய பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பணிகளைச் செய்வது சிற்பிகளின் வேலைத்திறமைகளைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் காணமுடியும். இசைத்தூண்கள் கட்டிடக்கலையின் இரு அம்சமாகவும், அமைவதால் செய்வதற்கும், கேட்பதற்கும் மிக நுட்ப அறிவு இதற்குப் பயன்படுகிறது. தமிழ்நாட்டில் பாண்டிய நாட்டை சேர்ந்த ஊர்களில் இசைத்தூண்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பெரும்பாலான இசைத்தூண்கள் ஒரே கல்லிலே வடிவமைக்கப்பட்டிருக்கும். பருமன் குறைவான தூண்கள் நான்கு, ஐந்து பருமன் அதிகம் உள்ள இரு தூணைச் சுற்றியுள்ளதாக இவை அமைக்கப்பட்டிருப்பதை நாம் இன்று காண முடியும். தென்னிந்தியாவில் பல்வேறு கோயில்களில் இசைத்தூண்களைக் கொண்ட நாட்டிய அரங்குகளும் உள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கூடலழகர் கோயில், அழகர்கோயில், ஆழ்வார்திருநகரி, நெல்லையப்பர் கோயில், தாடிக்கொம்புசுசீந்தரம்ஹம்பி, ஆவுடையார் கோயில் போன்ற இடங்களில் இன்றும் இசைத்தூண்கள் உள்ளன.

கோயில் கட்டடக்கலை மரபு: 
கட்டடக்கலையின் வாயிலாக இரு நாட்டின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் சிறப்பை அறியமுடியும். தமிழக கட்டடக்கலையில் சிறப்பிடம் பெறுவது திருக்கோயில் கட்டடங்களாகும். பண்பாட்டுச் சின்னமாக விளங்கும் கோயில் கட்டடக்கலையின் தூண்கள் என்பன தொன்மையான கலை வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கின்ற பகுதியாகும். திராவிடக்கலை எனப் பேசப்படும் தமிழகக் கோயில் தூண்களின் அமைப்பு தனித்துவம் உடையது எனக் கருதலாம். திராவிடக் கலையில் 16ம் நூற்றாண்டில் போற்றுதற்குரிய இரண்டு வளர்ச்சி நிலைகள் ஏற்பட்டன. இன்று வெளியமைப்பிலுள்ள கோபுரம் மற்றொன்று உட்பகுதியில் இடம் பெற்ற தூண்களாகும். தமிழகக் கட்டடக்கலை அமைப்பில் போற்றுதலுக்குரிய இருவகைத் தொழில்நுட்பம் தூண் நிர்மாணக் கலையாகும். இதன் அமைப்பும் கலைநுட்பமும் நாயக்கர்களுடைய காலத்தில் சிறப்பு பெற்றன. அத்தகைய கலைத்திறனுடைய படைப்பில் இன்று இசைத்தூண்களாகும்.

மரபில் தோன்றியவை: 
தமிழகத் தூண்களின் அலங்காரமும் வகைகளும் பொதுவாக மரபில் தோன்றியவையாகும். சங்க காலத்தில் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. தூண்களில் காணப்படும் சிற்பங்கள், நடனம், இசை, வாத்தியம், அலங்கார சிற்பம், தெய்வத் திருமேனி சிற்பம், ஆண், பெண் சிற்பமென அனைத்தும் பலதரப்பட்ட சைவ, வைணவ கோயில்களில் காண முடிகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல இடங்களில் இசைத் தூண்கள் உள்ளன. வடக்கு கோபுர வாசல் இறங்கிச் செல்லும் இரு புறங்களில் இசைத்தூண்களில் ஸரிகமப என்ற ஐந்து ஸ்வரங்கள் கேட்கும். கோயிலுக்குள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இசைத்தூண்கள் ஏழு ஸ்வரங்களையும் சொல்லும். சுவாமி சன்னதியில் கொடி மரம் உள்ள மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சிற்பத்தின் கீழே ஐந்து சிறிய தூண்கள் இசையைப் பேசுகின்றன. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தாயார் சன்னதியின் மண்டப முன்பகுதியில் இருபுறமும் இசைத்தூண்கள் ஸ ரி க ம என்ற நான்கு ஸ்வரங்களைச் சொல்லுகிறது. அழகர் கோவில் தூண்கள் இத்தகைய  இசையை எழுப்பக் கூடியன. நடுவில் இரு தூணும் அதைச் சுற்றி மூன்று அடிகள் உயரமான தூண்களும் உள்ளன.

48 இசைத்தூண்கள், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னிதியில் உள்ள தூண்கள் மிக அருமையாக இசை எழுப்பக்கூடியன. நடுவில் பெரிய தூணும் அதைச் சுற்றிலும் 48 சிறிய இசைத்தூண்களைத் தட்டினால் இனிய இசையைக் கேட்க முடிகிறது. பாண்டியர் கால கோயிலான ஆழ்வார்திருநகரியில், இரண்டு வகையான இசைத்தூண்கள் உள்ளன. இன்று தட்டும் போது ஒலியெழுப்பக்கூடியது. (இசைத்தூண்களைத் தட்டுவதற்கு மரத்தில் ஆன உருண்டை வடிவ சுத்தி போன்ற அமைப்பில் உள்ள கருவி தேவை), மற்றொன்று, துளை இசைத்தூண்கள். மிக நுட்பமாகக் கையாள வேண்டியவை இரண்டு துளைகள் உள்ள இத்தூணில் வாய் வைத்து ஊதினால் இசை பிறக்கிறது.

திருவாரூரில் உள்ளது போல இங்கேயும் "கல் நாதசுரமும்" உள்ளது. அபூர்வமான வேலைப்பாடுகள்நிறைந்த ஆழ்வார்திருநகரியைப் போலவே சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலிலும் இசைத் தூண்கள் காணக்கிடைக்கின்றன. குணசேகர மண்டபத்தில் வடக்கு பக்கம் 24 சிறிய தூண்களும், தெற்கு பக்கத்தில் 33 சிறிய இசைத்தூண்களும் உள்ளன.

இளைய தலைமுறைக்கு நாம் நேரில் சென்று பார்த்து உணர்ந்து இது போன்ற கலை வடிவங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளியில் சிறிய சுற்றுலா ஏற்பாடு செய்து இசைத்தூண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தலங்களுக்குச் சுற்றுலா செல்வது என்பது முக்கிய அங்கமாகவே இருந்தது. தற்போது குறைந்து விட்டது. திருக்கோயில் தல யாத்திரை சென்றால் பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாகச் சிற்பம், ஓவியம், இசை பற்றிய அறிவு கிடைக்கும்.

கும்பகோணம் தாராசுரம் கோயில் இரு சிற்ப கலைக்களஞ்சியமாக உள்ள இடம். கோயிலின் நுழைவு வாசலில் சிறு மண்டபம் போன்ற வடிவத்தில் இசை படிக்கட்டுகள் உள்ளன. இதில் ஒலி  எழுப்பினால் சங்கராபரணம் எனும் ராகத்தின் ஸ்வர ஸ்தானங்கள் பேசுகின்றன. சுமார் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹம்பி என்ற ஊர் கர்நாடகாவில் உள்ளது. முழுவதும் செந்நிற பாறைகள் நிறைந்த இவ்விடத்தில் விட்டல கோயில் ரங்க மண்டபத்தில் 56 தூண்களில் இசை பிறக்கிறது. இப்படி தென்னிந்தியா முழுவதும் சிற்பக்கலைக்கும் கட்டிடக் கலைக்கும் எடுத்துக் காட்டாய் திகழ்கின்றது. மனம் பண்பட கலைகளே உறுதுணை. கண் வழி சிற்பங்களைக் கண்டு ரசித்து செவி வழி இசையைக் கேட்கும் நம் தமிழ் மண்ணின் மரபுகளைப் பாதுகாப்போம்.


முனைவர் தி.சுரேஷ்சிவன்,  செம்மொழி இசைத்தமிழ் அறிஞர். 

நன்றி - தினமலர்