Saturday, August 20, 2016

ஒற்றுமை காண்போம் ..... அதில் வெற்றியும் காண்போம் .....

-- தேமொழி




அடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா?
அஞ்சி அஞ்சிக் கிடந்த காலம் மறந்து போனதா?
கொடுமை தீர்ந்து வாழ வந்தும் ஒருமை இல்லையே -ஒரு
குலத்தைப் போல வாழ்வதென்ற பொறுமையில்லையே!
மாநிலங்கள்தோறும் என்ன பிரிவினை?
நாம் மறந்துவிட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை
ஒற்றுமை காண்போம்  ..... அதில் வெற்றியும் காண்போம்  .....

ஒருவரது நாட்டுப்பற்று உணர்வு  எழுச்சி பெறும் விதமாக அமைந்த  இந்தப் பாடலின் வரிகளை  1970 ஆண்டு சுதந்திரதினத்திற்கு வெளிவந்த "ராமன் எத்தனை ராமனடி" என்ற படத்திற்காக கண்ணதாசன்  எழுதியிருந்தார்.  இந்தியா தனது 24 ஆவது சுதந்திரதின நாளைக் கொண்டாடிக்  கொண்டிருக்கும் பொழுது,  அதுவும், தொடர்ந்து மறு  ஆண்டே  கால்நூற்றாண்டு என்ற பெருமைமிகு எல்லையை அடைவதைக்  கொண்டாட இருக்கும்பொழுது எழுதப்பட்ட ஒரு  பாடலின் கருத்து "ஒற்றுமை காண்போம்  ..... அதில் வெற்றியும் காண்போம்  .....". 

ஏன் அந்நாளில்  இந்திய நாட்டில் இந்த ஒற்றுமை குறைந்த நிலை என்பதை  அக்கால இந்திய அரசியலை திரும்பிப் பார்த்தால் தெரியும், அதனை அப்பாடலின் வரிகளே விளக்கும்.


திரைப்படத்தில்  பள்ளி மாணவர்கள் நடத்தும்  ஒரு கலைநிகழ்ச்சியில்  அவர்கள்  சிறைக்கைதிகளுக்கு  நடித்துக்காட்டுவதாக   இப்பாடலை இடைச்செருகல் செய்து  பொருத்தமாக அமைத்திருந்தார்கள்.  பாடலின் வரிகள் கீழே:

தமிழக மக்கள்:
சேர சோழ பாண்டிய மன்னர் ஆண்ட தமிழ்நாடு
ஆண்ட தமிழ்நாடு
திராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது
ஆள்வதென்பதேது
தேனைப் போன்ற தமிழிருக்க வேறு பாஷை எதற்கு
வேறு பாஷை எதற்கு
தேசீயம்  என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு
தேசீயம்  என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு
தமிழ்நாடு தமிழருக்கே ..... தமிழ்நாடு தமிழருக்கே .....
தமிழ்நாடு தமிழருக்கே .....

ஆந்திர மக்கள்:
ஆந்திரதேசம் ஆந்திரருக்கே .....
கிருஷ்ணதேவருடன் ராமராயர் எமை
ஆண்ட தேசம் இது ராமையா
ராமையா ..... ராமையா .....
பரததேசம் எனும் பேரில் நீங்கள்  அதைச்  சேர்த்து வைத்தது என்ன தீமையா .....
தீமையா ..... தீமையா .....

தெலுங்கானா மக்கள்:
ஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய் வாழ்வது முறைதானா
வாழ்வது முறைதானோ
அடிப்போம் பறிப்போம் பிரிப்போம் எமக்கு வேண்டும் தெலுங்கானா
வேண்டும் தெலுங்கானா .....

ஆந்திரதேசம் ஆந்திரருக்கே ..... ஆந்திரதேசம் ஆந்திரருக்கே .....

மகாராஷ்டிரா மக்கள்:
மகாராஷ்டிரம் நமதே .....
சிவாஜி ஆண்ட இம்மராட்டி தேசத்தில் விரோதி வரலாமா?
விரோதி வரலாமா?
விடாமல் துரத்து போராட்டம் நடத்து எழுவோம் ஒரு சேனா
எழுவோம் ஒரு சேனா
கட்டுப்பட்டுச் சுமந்தது போதும்
போதும்
பட்டுப்பட்டுப் பயந்தது போதும்
போதும்
மாரைத்தட்டு வீரம் கொட்டு வாழ்க போராட்டம் .....

பஞ்சாப் மக்கள்:
பஞ்சாப் நமதே .....
பஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும் பாஞ்சால தேசமடி
பகைவரை எதிர்த்து பட்டாளம் சேர அஞ்சாத தேசமடி
சண்டிகர் என்னும் பொதுநகர் எங்கள் தலைநகர் ஆகுமடி
தரமாட்டோம் அதைவிடமாட்டோம் எனத் துணிந்து  சபதம் செய்யடி

ஹரியானா மக்கள்:
ஹரியும் சிவனும் எனப் பிரிந்து பிரிந்து நாம் வாழ்வோம் ஹரியானா
அந்தத் தலைநகரம் எங்கள் தலைநகரம் பஞ்சாப் பெறலாமா?

பிற மாநில மக்களும் தொடர்வர் என்ற கணிப்பு:
வங்காளம் நமதே  .....
கர்நாடகம் நமதே  .....
கேரளம் நமதே  .....
சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத்  .....

காந்தி:
இந்திய தேசத்து செல்வங்களே இணையாதிருக்கும் உள்ளங்களே
சிந்திய ரத்தம் போதாதோ? தேசம் நாசம் ஆகாதோ?
அங்கே தெலுங்கானா .....  அப்பப்பா இங்கே ஹரியானா .....
நடுவில் பலசேனா  ..... இங்கே நடப்பது சரிதானா  .....

நேரு:
அடிமையாக வாழ்ந்த காலம் மறந்து போனதா?
அஞ்சி அஞ்சிக் கிடந்த காலம் மறந்து போனதா?
கொடுமை தீர்ந்து வாழ வந்தும் ஒருமை இல்லையே -ஒரு
குலத்தைப் போல வாழ்வதென்ற பொறுமையில்லையே!
மாநிலங்கள்தோறும் என்ன பிரிவினை?
நாம் மறந்துவிட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை
ஒற்றுமை காண்போம்  ..... அதில் வெற்றியும் காண்போம்  .....
ஒற்றுமை காண்போம்  ..... அதில் வெற்றியும் காண்போம்  .....

பாரதி:
ஒன்றுபட்டால் உண்டு  வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு
வந்தே மாதரம் என்போம்   .....
நாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம்  ..... 
வந்தே மாதரம் என்போம்  ..... 
நாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம்  ..... 
வந்தே மாதரம் என்போம்  ..... 
நாம் பாரதத்தாயை வணங்குதும் என்போம்  ..... 
 - கண்ணதாசன்
(ராமன் எத்தனை ராமனடி திரைப்படம்; 1970 சுதந்திர தின வெளியீடு)
காணொளி: https://www.youtube.com/watch?v=1kF8D5HWKPg

இந்தியா சுதந்திரம் பெற்று 20 ஆண்டுகள் கழித்தும் இருந்த நிலைமை இது.   இதன் துவக்கம் இந்தியாவை மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரித்த காரணம் என்று கருதுவோர் உளர். ஆனால், மொழி அடிப்படையில் மாநிலங்களைப்  பிரிப்பது அரசு  நிர்வாகத்தைத் திறம்படக் கையாளும் ஒரு முறை.  ஒரு குறிப்பிட்ட அடிப்படைப் பண்புகளைக்  கொண்டவர்களை  குழுக்களாக பிரித்துக் கொண்டால்  தகவல் தொடர்பு எளிமையாக அமையும்.  நிர்வாகம் சீராக அமையும், மக்களுக்குச் சிறந்த சேவையை அளிக்க இயலும்.   வட்டார மக்களின் மொழியில் நீதிமன்றங்கள், அரசு நடவடிக்கைகள் யாவும் அமைய வேண்டும் என்பதும் இதில் அடங்கும் என்பதை இன்றும் அரசு புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.


தமிழகம்:
ஆங்கிலேயர் ஆட்சியில் ஒருங்கிணைந்த சென்னை மாகாணமாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு  ஆகிய திராவிட மொழிகள் பேசிய மக்களைக்  கொண்ட பகுதிகள் முறையே இக்கால தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் (தற்பொழுது பிரிந்துவிட்ட அக்கால) ஆந்திரா ஆகிய மாநிலங்களாயின.  ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தை பாகிஸ்தான் போல, "திராவிடநாடு" எனத்  தனிநாடாகப் பிரிக்க வேண்டும் என்ற தென்னக அரசியல் கட்சியான திராவிடக் கழகத்தின் கோரிக்கை நிறைவேறவில்லை.  விடுதலை பெற்ற 15 ஆண்டுகளுக்குப்   பிறகு,  தேசீயம் என்ற கொள்கையாக  1965 இல் இந்தியாவின் அலுவலக மற்றும் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது.   இந்த நிகழ்வினால்  நாட்டின் விடுதலைக்கு  முன்னர் 1930 களில் தமிழகத்தில் நடந்த ஒரு  இந்தி எதிர்ப்புப் போராட்டம் போலவே மீண்டும் ஓர் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் துவங்கியது.

முன்னிருந்த திராவிடம் என்ற பழங் கருத்து, மொழிவாரியாக 1953 இல்  மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்குப் பிறகு பொருத்தமற்றுப் போயிருந்தது.   எனவே,  திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு "தமிழ்நாடு தமிழர்களுக்கே" என்று  தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் தனது கொள்கையை மாற்றியமைத்துக் கொண்டது.  தமிழ்நாடு தமிழருக்கே, தேசீயம் என்ற பெயரில் நடுவண் அரசு ஏய்க்கிறது என்று போராட்டம் துவங்கியது.  இந்திய  நடுவண் அரசு  16 வது திருத்தச் சட்டமாக "பிரிவினைவாத தடைச்சட்டம்" என்ற சட்டத்தை இயற்றி,  இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைத்து,  சட்டத்தை நிறைவேற்றி பிரிவினைவாத கருத்துக்களை செயலற்றுப் போகச் செய்தது.  சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கமுடியாமல் மொழியையும் கலாச்சாரத்தையும் காப்பது என்பதை  தங்களது கொள்கையாக அறிவித்து,  மாநில சுயாட்சி கொள்கை எனப் போராட்டத்தை  மாற்றிக் கொண்டனர் அன்றைய தமிழக அரசியல்வாதிகள்.  

இக்காலகட்டத்தில்  இருந்த இந்த நிலைமையை கண்ணதாசன் தனது  பாடல் வரிகளில் இவ்வாறு விளக்கினார்...
சேர சோழ பாண்டிய மன்னர் ஆண்ட தமிழ்நாடு
திராவிடத்தை வேறு யாரும் ஆள்வதென்பதேது
தேனைப் போன்ற தமிழிருக்க வேறு பாஷை எதற்கு
தேசீயம்  என்ற பெயரில் ஏய்ப்பதுங்கள் கணக்கு
தமிழ்நாடு தமிழருக்கே ..... தமிழ்நாடு தமிழருக்கே .....

இது அக்கால தமிழகத்தின் நிலையாக இருந்தது.   இருப்பினும்,  காலம் மாறினாலும் சுதந்திரம் பெற்று  இப்பொழுது அரைநூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்டாலும்  "தமிழ்நாடு தமிழருக்கே ....." என்ற பழைய போராட்டம்  இக்காலத்தில்  "தமிழ்த்தேசியம்" என்ற பெயரில் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைய போராட்டம் தமிழ்நாடு தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும்.  வேற்று மாநிலத்தை  பூர்வீகமாகக் கொண்டவர்கள், தமிழகத்தில் வாழ்ந்தாலும் வேற்று மொழியைத் தாய்மொழியாக பேசிக் கொண்டிருப்பவர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று புதிய திசையில் திருப்பப்பட்டுள்ளது.  அன்றைய நாளில்  தமிழ் மொழிக்குக் காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலோரை  "வந்தேறிகள்" என  அடையாளப்படுத்தி அவர்கள் கையில் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற  முயலும் ஒரு போராட்டமாக இந்நாளில் மாறிவிட்டிருக்கிறது.  இரண்டு  காலகட்டத்தின்  போராட்டங்களும் வெவ்வேறு வகையில்  அமைந்து  "தமிழர் நலனுக்காக" எனக் கூறப்படும்  "உரிமைப் போராட்டங்கள்" போன்ற தோற்றத்தைத் தருகின்றன.   தமிழ்த்தேசியப் போராட்டத்தைப் பற்றிய பல்வேறு கருத்துகள் நிலவினாலும்  திராவிடத் தமிழ் தேசியராக அடையாளம் காணப்படும் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள்  கீழ்காணும் வகையில் "தமிழ்த்தேசியம்" என்ன என்ற அவரது கோணத்தை விளக்குவது கருத்தில் கொள்ளத் தக்கது. 
   
“ஒரு தேசிய இனத்தின் அடிப்படையாக இரண்டு செய்திகளைப் பார்க்க முடியும். தன்னுடைய அடையாளத்திற்கான போராட்டம். இன்னொன்று சமத்துவத்திற்கான ஜனநாயகப் போராட்டம். பொதுவாக தேசிய இனப்போராட்டம் என்பது வர்க்கப் போராட்டம் அல்ல. அது ஒரு ஜனநாயகப் போராட்டம்தான். அந்த அடிப்படையில் தமிழுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், தமிழர்கள் அடையாள அடிப்படையிலும், ஜனநாயக அடிப்படைகளிலும் நம் நாட்டில் உருவாக வேண்டிய தேசியம் தமிழ்த் தேசியம்தான்.”   
- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்


ஆந்திரம்:
1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் மொழிவாரி மாநிலங்கள் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு, இந்தியாவை மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரிக்க திட்டமிடப்பட்ட பொழுது, ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழிருந்த 9 தெலுங்கு மொழி பேசப்படும் மாவட்டங்களும், ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் கீழிருந்த 12 தெலுங்கு பேசும் மாவட்டங்களும், ஒன்றியப் பகுதியாக  (அல்லது யூனியன் பிரதேசம்) பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த ஏனாம் பகுதியுடன்  இணைக்கப்பட்டு  22 மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்களை உள்ளடக்கிய ஆந்திரப்பிரதேசம் என்ற மாநிலம் அமைக்கப்பட்டது. பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் ஆந்திரம் என்ற மொழி அடிப்படையிலான  மாநிலம் அமைவதில் பெறும் பங்கு வகித்தார். ஆயினும், 1950 களில் இருந்தே நிஜாம் ஆட்சியின் கீழிருந்த மாவட்டங்கள், தெலுங்கு மொழி உருவானது தங்கள் பகுதி என்றும், தெலுங்கானா என்ற தங்கள் பகுதி, ஒரே மொழி பேசுபவர்கள் என்ற அடிப்படையில் ஆந்திராவுடன் இணைக்கப்படக்கூடாது எனக் கருதினர். இரு பிரிவுகளுக்கும் சமமாக அதிகாரம் பகிர்ந்து கொடுக்கும் உடன்படிக்கை போடப்பட்டு தற்காலிகமாக அமைதி உருவாக்கப்பட்டது. இந்த உடன்படிக்கை 1969 இல் காலாவதியாகும் நிலையில் அதை நீட்டிக்கக் கோரி தெலுங்கானா மக்கள் இயக்கம் மீண்டும் உயிர்பெற்று போராட்டங்கள் வெடித்தது.  ஒஸ்மானியா  பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்று 360  மாணவர்கள் உட்படப் பலர் உயிரிழந்தனர். 

இதனை;
ஆந்திர மக்கள்:
ஆந்திரதேசம் ஆந்திரருக்கே .....
கிருஷ்ணதேவருடன் ராமராயர் எமை
ஆண்ட தேசம் இது ராமையா
ராமையா ..... ராமையா .....
பரததேசம் எனும் பேரில் நீங்கள்  அதைச்  சேர்த்து வைத்தது என்ன தீமையா .....
தீமையா ..... தீமையா .....

தெலுங்கானா மக்கள்:
ஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய் வாழ்வது முறைதானா
வாழ்வது முறைதானோ
அடிப்போம் பறிப்போம் பிரிப்போம் எமக்கு வேண்டும் தெலுங்கானா
வேண்டும் தெலுங்கானா .....
என்று கண்ணதாசன் இப்போராட்டத்தை எழுதினார்.

இதனைத் தொடர்ந்து ஆந்திர ஆட்சியைக் கைப்பற்ற விரும்புபவர்கள் தனி தெலுங்கான உருவாக்க ஆதரவு தருவாகக் கூறி மக்களைக் கவர முற்படுவது வழக்கமாகிப் போனது. இறுதியாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் (ஜூன் 2, 2014) ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழிருந்த பகுதியைக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி இந்தியாவின் 29-வது மாநிலமாக தெலுங்கானா என்ற மாநிலமாகப் பிரிக்கப்பட்டு தனியே செயல் படத் தொடங்கியது.


மகாராஷ்டிரம்:
பால் தாக்கரேவால்  1966 ஆம் ஆண்டு  தோற்றுவிக்கப்பட்டது சிவசேனா என்ற அரசியல் கட்சி.  அந்நிய ஆக்கிரமிப்பை ஒழித்துக் கட்டிய மராட்டிய மன்னன்  சத்திரபதி சிவாஜியின்  சேனை என்ற பொருளில் சிவசேனா என அழைக்கப்பட்டது. 'மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே' என்பது 1960 களில் இப்போராட்டத்தின் முழக்கமாக இருந்தது. தென்னிந்தியர்களுக்கு எதிராக எழுந்த பல போராட்டங்களுக்கும் இது காரணமாக அமைந்தது.

மகாராஷ்டிரம் நமதே .....
சிவாஜி ஆண்ட இம்மராட்டி தேசத்தில் விரோதி வரலாமா?
விடாமல் துரத்து போராட்டம் நடத்து எழுவோம் ஒரு சேனா
கட்டுப்பட்டுச் சுமந்தது போதும்
பட்டுப்பட்டுப் பயந்தது போதும்
மாரைத்தட்டு வீரம் கொட்டு வாழ்க போராட்டம் .....
என்னும் அவர்களது முழக்கத்தை  தனது பாடல்வரிகள் மூலம் காட்டினார் கண்ணதாசன்.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவின் 2008 ஆண்டு  தலையங்கம்  ஒன்று  அமிதாப் பச்சன் போன்ற பாலிவுட் நடிகர்கள்,  பிறமாநிலங்களில் இருந்து மும்பை வந்து குடியேறி தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள். இவர்கள்   மராத்தியர்களுக்காகவும், மகாராஷ்டிரத்தின் நலனுக்காகவும்  அக்கறை செலுத்துவது இல்லை என்று குற்றம் சாட்டியது. இக்குற்றச்சாட்டு   பரபரப்பை ஏற்படுத்தியதால் பலரது கவனத்தைக் கவர்ந்தது.


பஞ்சாப்:
பஞ்சாபி மொழி பேசும் மக்கள் வாழும்  மாநிலம் பஞ்சாப்.  1966 ஆம் ஆண்டில் ஹரியான்வி மொழியினர் அதிகமுள்ள  பஞ்சாப் மாநிலத்தின்  கிழக்குப் பகுதி ஹரியானா எனப் பிரிக்கப்பட்டது.  இந்த இரு மாநிலங்களுக்கும் இடையே சண்டிகர் நகரம் அமைந்திருக்கிறது.  இரு மாநிலங்களுமே  சண்டிகர் நகரத்திற்கு உரிமை கொண்டாடி போராட்டத்தில் இறங்கின.

இதனை கண்ணதாசனின் கீழ்வரும் வரிகள் காட்சிப் படுத்துகிறது ....
பஞ்சாப் மக்கள்:
பஞ்சாப் நமதே .....
பஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும் பாஞ்சால தேசமடி
பகைவரை எதிர்த்து பட்டாளம் சேர அஞ்சாத தேசமடி
சண்டிகர் என்னும் பொதுநகர் எங்கள் தலைநகர் ஆகுமடி
தரமாட்டோம் அதைவிடமாட்டோம் எனத் துணிந்து  சபதம் செய்யடி

ஹரியானா மக்கள்:
ஹரியும் சிவனும் எனப் பிரிந்து பிரிந்து நாம் வாழ்வோம் ஹரியானா
அந்தத் தலைநகரம் எங்கள் தலைநகரம் பஞ்சாப் பெறலாமா?

இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்கும் சண்டிகர் நகரின் உரிமைகோரி இருமாநிலங்களும் கிளப்பிய சர்ச்சையின் காரணமாக,  இந்நகரம் இந்திய அரசின்  தனி ஒன்றியப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.  இப்பொழுது இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல.

காஷ்மீர்:
இந்தியாவின் பகுதியாக காஷ்மீரை இணைத்த துவக்கக் காலத்தில் இருந்தே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் காஷ்மீரின் மீதான உரிமைப் போராட்டமும் துவங்கியது.  1965ஆம் ஆண்டில் நிகழ்ந்த  இந்திய-பாகிஸ்தான் போர் இந்த உரிமைப் பிரச்சனையின் அடிப்படையில் நிகழ்ந்த இரண்டாவது இந்திய-பாகிஸ்தான் போர் என்பது குறிப்பிடத் தக்கது.  காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என  காஷ்மீர் மக்களில் சிலரும் தனிப்பட்ட கருத்து கொண்டிருந்தனர். "சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத்" என்ற அவர்களின் முழக்கத்தை கண்ணதாசனின் வரிகளும் காட்டுகின்றன.   ஆனால் இன்றுவரை காஷ்மீரில் அமைதி நிலவவில்லை.


1965 -1969 வரை நாட்டின் ஒற்றுமையைக் கேள்விக்குறியாக்கிய  நிகழ்வுகளின் தாக்கத்தில் கண்ணதாசன் இப்பாடலை எழுதினார். அப்பாடல் எழுதப்பட்டு  அரை நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இந்திய நாட்டில் உரிமைப் பிரச்சனைகள், பிரிவினைவாத முழக்கங்கள் தொடர்கின்றன.

தன்னைப்போல ஒரு இந்தியராக இருந்தாலும் வெளிமாநிலத்தின் மக்களிடம் நேசக்கரம் கொடுக்கத் தயங்கும் மனநிலை மக்களிடம் காணப்படுகிறது.  சாதி, மத, மொழி சச்சரவுகளுக்கோ குறைவுமில்லை.  கண்ணதாசன் பாடலில் இறந்துபோன தலைவர்களான காந்தி, நேரு, பாரதி ஆகியோருக்கு  உயிர் கொடுத்து அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறுவது போல அமைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் ஒரே மொழி பேசினால் ஒற்றுமை வளரும் என்று வாதம் செய்து வருபவர் இங்குக்  கவனிக்க வேண்டியது ...

ஒரே தெலுங்கு மொழி பேசிய மக்களால் ஏன் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. 
எதனால் இறுதியில் மாநிலங்கள் ஆந்திரா தெலுங்கானா எனப் பிரிந்து  போவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது?

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆட்சி மொழியான மராட்டியுடன், அங்கு இந்தி, குஜராத்தி, பார்சி மொழி, கன்னடம்,  உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகளும் மக்களால் பேசப்படுகிறது. பள்ளிகளில் மராட்டிய மொழி, ஆங்கில மொழியுடன் இந்தி மொழியும் கற்பிக்கப்படுகிறது, உருதும் கற்பிக்கப்படுகிறது.  பல மொழி மக்கள் வாழ்ந்தும்,  பலமொழிகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டும்  அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்ததாகவும் தெரியவில்லை.  பிற மாநில மக்கள் குறித்த கசப்புணர்வு  சிவசேனாவின் நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.

எல்லோரும் இந்தி கற்பதால், அல்லது எல்லோரும் ஒரே மொழி பேசுவதால் இந்தியாவில் ஒற்றுமை வருமா? 
அல்லது பிறர் உரிமையை மதித்து அனைவரும் இந்தியர் என்று அவர்கள் அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் ஒற்றுமை வருமா?
இவை  சிந்திக்கப்பட  வேண்டிய கேள்விகள்.

ஒற்றுமை காண்போம்  ..... அதில் வெற்றியும் காண்போம்  .....


ஜெய்ஹிந்த் 




______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
______________________________________________________________________

No comments:

Post a Comment