Showing posts with label சேசாத்திரி சிறீதரன். Show all posts
Showing posts with label சேசாத்திரி சிறீதரன். Show all posts

Friday, March 8, 2019

அடிமைகள் பற்றிய கொறுக்கை வீரட்டேசுவரர் கோயில் கல்வெட்டு



——   சேசாத்திரி சிறீதரன்


40 குடும்பத்து 105 அடிமைகள் பற்றிய கல்வெட்டு:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கொறுக்கை என்னும் தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள வீரட்டேசுவரர் கோயில் மகாமண்டபம் வடக்கு சுவர் கல்வெட்டு. இது மூன்றாம் இராசராசனின் 19 ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1235) வெட்டிய கல்வெட்டு என்பது எழுத்தமைதியால் கணிக்கப்பட்டுள்ளது. 


இதில் மக்கள் குடும்பம் குடும்பமாக அடிமைகளாகக் கோவிலுக்கும் தனி ஆள்களுக்கும் விற்றுக் கொண்ட செய்தி உள்ளது. இவர்களுக்குள்ள உறவுமுறையும் குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடன்வாங்கித் திருப்பி செலுத்த முடியாமல் ஓட்டாண்டி (திவால்) ஆகி அடிமைசெய்வாராக ஆனார்களா? அல்லது சாதி நீக்கி ஊராரால் ஒதுக்கப்பட்டு அடிமையாக வந்தார்களா? அல்லது ஏதேனும் நேர்த்திக்கடன் செலுத்த அடிமை ஆனார்களா? அல்லது கோவில் சலுகை ஒன்றைப் பெற அடிமை ஆனார்களா? இப்படி எந்த முடிவும் கொள்வதற்கு இடம் தரும்படியாக கல்வெட்டில் எந்த ஒரு துப்பும் இல்லை. சிலர் இறைவனுக்கு அடிமையாய் தாமே ஒப்புக்கொண்டவர், விலைக்கு விற்றுக் கொண்ட அடிமைகள் சிலர், இன்னும் சிலர் விலைக்கு வாங்கி தானம் கொடுக்கப்பட்ட அடிமைகள்.

இதற்கும் முற்பட்ட இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் அடிமையானோரும் இக்கல்வெட்டின் பிற்பகுதியில் குறிக்கப்படுகின்றனர். விந்தையாக இந்த அடிமைகளின் பெயர்களை உற்று நோக்கும் போதும்; இதில் குறிக்கப்பட்டுள்ள அகமுடையாள் என்ற பிராமணர் வீட்டில் புழங்கும் சொல்லையும் நோக்க இந்த அடிமைகள் பலரும் பிராமண குடும்பத்தவர் என்று தெரிகின்றது. சில அரசுகுடியோர் பெயரும் இடம்பெறுகின்றது. இணைப்பில் உள்ள 2/1994 கல்வெட்டின் இறுதியில் சில பிராமணர்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அதைக் கொண்டு இவர்கள் பிராமணர் என முடிவுகட்டப் பட்டது. கல்வெட்டு பாடத்தைப் படிக்கும் முன் அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிக்குவரி விளக்கத்தைப் படித்தால் இதன் பொருளை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். பின்பு கல்வெட்டு பாடத்தைப் படித்தால் எளிதாகப் பொருள் புரியும்.  

கல்வெட்டு பாடம்:
1.   ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜ தேவற்கு யாண்டு பத்தொன்பதாவது விருதராஜ பயங்கர [வளநாட்டுக்] குறுக்கை நாட்டுத் திருக்குறுக்கை உடையார் திருவீரட்டானமு[டை]யார் மூலபிருத்தியரான சண்டேசுர தேவ[ற்]கு [திருவாய்மொழிந்]தருளின திருமுகப்படி பெற்ற அடிமைக்கும் பலர் பக்கலும் விலைகொண்ட அடிமைக்கும் தானத்தால் பெற்ற அடிமைக்கும் கல்வெட்டினபடி திருமுகப்படி   ஆழ்வாரடிமையாய் பெற்ற ஆச்சபிடாரன்,  இவன்  அகமுடையாள் சோழி. இவன் மகன் எழுவடியான் இவந் தம்பி தேவன் இவன் தம்பி திருவெண்காடு டையான் இவந் தம்பி வள்
2.   ளல். இந்த ஆச்சபிடாரன் மகள் ஆளுடையாள். இவள் மகன் திருவெண் காடுடையாந் இவந் தம்பி மணவாளன். இவந் தங்கை ஆண்ட நங்கை இவள் தங்கை செல்வம். வீரவிநோத வேளான் இவந் தம்பி சிங்க பிரான். இவன் தங்கை மண்டையாண்டி அழ[கி]யாந் மகந் வ _ _ _ [த]ங்கை செல்வம். இவள் மகன் பெருமாள். இவன் தங்கை ஆண்டாள். சிவசரணத்தின் அகமுடையாள் மண்டை இவள் மகந் பெருங்காடந் இவந் தம்பி வேங்கடம் இவந்தம்பி வள்ளல் இவந் தங்கை பெற்றாள். இவள் _ _ _  உடையாந் இவன் தங்கை பெரியாள். இந்தப் பெருங்காடந் சிறிய தாய் ஆழ்வா நங்கை. இவள் மகந் வடையாந் இவந்தம்பி பெருமாள். இவந் தங்கை பெரியாள். இவள் மகள் ஆண்டாள் இ
3.   ப்பெரியான் தங்கை செல்வம். இவள் ம[க்]கள் உமையாண்டாள் சீவேதவனப் பெருமாள் நங்கை. இச்செல்வத்தின் தங்கை பொற்சாத்தி. தாழஞ்சேரிக் கம்பந் மருமகன் திருவீரட்டானமுடையான். கோவிந்தன் ஆச்சபிடாரன் உடப்பிறந்தாள் நாராயணி. இவள் மகள் செல்வம். இவள் மகந் திருவெண் காடுடையாந். இவந்தம்பி செல்வந் இவந்தம்[பி உய்]யவந்தாந் இவந் தம்பி இருள்நீக்கி. கவிணிந உத்தம சோழந் சூரிய தேவர் தாநம் பண்ணி[னபே]ர், ஆடவலாந் கொத்தில் செல்வி. இவள் மக்கள் இவள் தங்கை பெற்றாள் கொத்து. இவள் தங்கை திருச் சிற்றம்பல முடையாள். சடையன் அகமுடையாள் செல்லகொத்து. வெண்ணைக் கூத்தந் அகமுடையாள் பெருங்காடி. மகந் கோவிஞ்சி கொத்து இவள் தங்[கை] மந்றமுடையாள் கொத்து. இவ
4.   ள் தம்பி திருச்சிற்றம்பலமுடையாந். நாற்பத்தெண்ணாயிரம் பிச்சந் அகமுடையாள் நங்கை கொத்து. சந்திரந் அ[க]முடையாள் திருவிந் கொத்து. கீர்த்தி நாராயணஞ் சிங்கப் பிராந் பக்கல் தாநத்தால் பெற்ற சந்திரசேகர திருவெண்காட்டு நங்கை. இவள் மகந் சோறுடையான் இவன் தங்கை பெற்றாள். கவிணியன் சூரியதேவந் தெக்ஷணாமூர்த்தி  பக்கல் விலை கொண்டுடைய பெருங்காடனந் கெங்கை இவன் மகந் திருச்சிற்றம்பல முடையாந் பெருங்காடி பாரத்துவாஜி. தில்லை நாகந் பெரியநம்பி பக்கல் கொண்டுடைய வீரட்டந் சொறி. இவள் மகந் பிடாரந் தவுமியந் வெண்காடு தேவந். சோமாசி _ _ _ மா[றனும்], கண்ணுவநந் கருமாணிக்கம் சீரிளங்
5.   கோ பட்டநும் பக்கல் கொண்ட வீரட்டந் பெற்றாள். கவிணியந் சூரிய தேவந் திருச்சிற்றம்பல முடையாந் பக்கல் விலை கொண்ட பெருங்காடந் சோறுடையான். தவுமியந் வெண்காடு தேவந், திருச்சிற்றம்பல முடையாந் பட்டசோமாசியார் பக்கல் கொண்ட தத்தபட்டன் திரு. இவள் மகந் அற்ப சந்தோஷி வீரட்டந் இவந் தங்கை ஆண்டமை. பிரமதேச ராஜராஜச் சருப்பேதி மங்கலத்து பாரத்துவாஜி திருவிக்கிரமனும், இவந் தம்பி உ[மா சகி]தந் திருச்சிற்றம்பல முடையானும் பக்கல் கொண்டுடைய கூத்தாடி சூற்றிய தேவி இவள் மகள் மண்டையாண்டி. இவள் தம்பி கண்ணந் இவள் தங்கை
6.   பெற்றாள். இவந்தம்பி இராம தேவந். இவந் தங்கை உமையாண்டாள் இவள் தம்பி திருநட்டப் பெருமான். பெற்ற கோவில் சோழ விழுப்பரையன் பக்கல் கொண்ட கேசவந் சீ _ _ _ _. இவன் மகந் பெற்றாந் கேசவந் வேதம் உடைய பிரான். இவன் தங்கை அவையம் புக்காள் இ _ _ _ _ கள் கூத்தாடி நங்கை. இவன் தங்கை _ _ _  க்குடுத்தி. திருமங்கலத்து அரயந் அரயந் நாகந் பிள்ளையாழ்வாந்நாந குலோத்துங்க சோழக் கெணியாத ராயர் பக்கல் விலை கொண்ட அரயந் உடையாண்டி. இவள் மகள் அம்மச்சி. நித்தந் திருவடியும், நித்தந் சிங்கனூரானும் பக்கல் கோயில் கொண்டு இவன் பக்க
7.   ல் பெற்ற நித்தந் னம்பி. இவந் தம்பி சிங்கப்பிரான். தவுமியந் வெண்காடு தேவந், ஆதித்த தேவந் பக்கல் கொண்ட வீரட்டந் சோறுடையாள். இவள் மகள் ளாசு பாரத்துவாசி. இரவிதாஸந் சக்கரபாணி, பிராம்மணி வாழ்வி தாட்சானி  பக்கல்   கொண்ட பிராந்தக தேயந் ஸ்ரீகிருஷ்ணந். திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு ஒன்பதாவது கவினிய நாகனூர் ஆதி சண்டேசுர தேவர்கு விற்ற அடியாள் ஆவாள். இவ்வூர் கவுணியன் சூரிய தேவன் திருச் சிற்றம்பல முடையான் பக்கல் விலை கொண்டுடையநாய் இத்தேவர் சிவநாமத்து இக்கவிணியன் நாகனூரன் சூற்றி பெருங்காடி பின்பு இவன் பெற்ற மகள் உ  
8.   டையள். இவன் தங்கை பெரியாள். இவள் தம்பி சூற்றி. இவன் தங்கை சோறாண்டி. இவன் தம்பி தியம்பகன்.இ பெண்களில் பெரியாள் மகன் சூற்றி. இஎவாண்டை நாளில் வரகூரான ஜயஸிம்ஹ குலகாலச் சருப்பேதி மங்கலத்து காஸ்யபந் தவதேவிசந் _ _ _ _ பட்டநாந அருமாரி  நம்பி  ஆதிசணேடேசுவர தேவற்க்கு விற்றுக் குடுத்த அடிமையாளாவாள் பொற்ப்பா _ _ _ யும், இவள் மகள் உய்யவந்தாளும். இவள் தங்கை செல்வமும் [கல்வெட்டு எண் 2] திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜாயிராஜ தேவற்கு யாண்டு ஏழாவது நாளில் விருதராஜ பயங்கர வளநாட்டுக் குறுக்கை நாட்டு ஆற்றூராந ராஜநாராயணச் சருப்பேதி மங்கலத்து திருபுவன மாதேவிச்சேரி குரவிசிரின வீரட்டந்
9.   பிராமணி உய்ய வந்தாள் சாநி கோமுத்தந் மகன் குரவிநாராயண பட்டநை  முதுகண்ணாகக் கொண்டு இவ்வுய்யவந்தாள் [சா]நி பக்கல் காசு 60 காசு அறுபதுக்கு  விலைகொண்ட நங்கை மகள் அம்மையாண்டாள். இவள் மகள் பெரியாண்டாள் இவள் தங்கை நித்த[கல்யா]ணப் பிச்சந் _ _ _ _ இவள் தங்கை குளுந்தாள், இவ[ள்] தங்கை னங்கை. திரிபுவநச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க தேவற்கு யாண்டு பத்தாவது செயங்கொண்டு சோழ வளநாட்டு விளைநாட்டு விளைநகரான நித்த விநோதச் சருப்பேதி மங்கலத்துப் பாலாசிரி[ய]ந் இளைய சங்[கர]ச் சிவனும், இவந் பிந்நோ நாத்தமையன் மகந் சிவந் சங்கரநும் பக்கல் பத்தொந்பது காசுக்கு விலைகொண்ட [அடிமை] அரை
10. யா நாகமுடையாள். இவள் மகள் சோறுடையாள் செல்வி. இவள் மகள் சோறுடையாள் சீதேவி நங்கை. இவள் மகள் சோறுடையாள் ஆழ்வாந் நங் _ _ _ _ ள் மகன் சோறுடையான் பெருங்காடன். இவன் மகன் சோறுடையாந் புற்றிடங் கொண்டான்.

ஆழ்வாரடிமை – இறைஅடிமை; அகமுடையாள் – மனைவி (பிராமணர் வழக்கு); பட்டன் – சமஸ்கிருத அறிஞனான வேத பிராமணன்; வேளான் – அரசன், அரசமரபினர்; பிடாரன் – ஆசிரியர், மருத்துவர்; பக்கல் – சார்பாக, on behalf; சாநி – பிராமணப் பெண் பெயர்ப் பின்னொட்டு; முதுகண் – supervisor, caretaker, கங்காணி; 




விளக்கம்: 1 - 2 வரிக்கு > பிராமணன் ஆச்சபிடாரன் குடும்பம் அவன் மகள் குடும்பம் என இரு குடும்பத்தில் பேரன், பேத்திகள் உட்பட 7 ஆடவர், 4 மகளிர் இறைவனுக்கு தம்மை அடிமை ஆக்கினர். வீரவிநோத வேளான் அரசகுடியினர் ஆவார். இவரது பேரன், பேத்திகள் உட்பட இரு குடும்பத்தில் 4 ஆடவர், 3 பெண்கள் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர். பிராமணர் சிவசரணத்தின் பேரன் பேத்திகள் உள்ளிட்ட 5 குடும்பத்து உறவினர் 6 ஆடவர், 9 மகளிர் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர்.

விளக்கம்: 3 – 4 வரிக்கு > 1 மருமகன். பிராமணர் ஆச்சபிடாரன் உடன்பிறந்தாள் பேரன், பேத்தி உட்பட 3 குடும்பத்து 5 ஆடவர் 2 மகளிர் தம்மை இறைவனுக்கு அடிமை ஆக்கினர். சூரியதேவர் தானமாகக் கொடுத்த அடிமைகள், கொத்தில் செல்வி குடும்பத்தில் 3 மகளிர். சடையன் மனைவி ஒருத்தி. வெண்ணைக் கூத்தன் 2 குடும்பத்தில் 2 ஆடவர், 2 மகளிர். நாற்பத்தெண்ணாயிரம் பிச்சன் மனைவி குடும்பத்தில் இருவர். சந்திரன் குடும்பத்தில் மனைவி ஒருத்தி. சிங்கப் பிராந் சார்பாக ஒரு குடும்பத்து 1 ஆண், 2 மகளிர் தானமாகத்  தரப்பட்டனர். தக்ஷிணாமூர்த்தி சார்பாக விலை கொடுத்துப் பெற்ற ஒரு குடும்பத்துப் பிராமண அடிமைகள் 2 ஆடவர். பெரியநம்பி சார்பாக விலைக்குப் பெற்ற அடிமை ஒரு குடும்பத்து 1 ஆண், 1 பெண். 

விளக்கம்: 5 -6 வரிகள் > சோமாசி & கண்ணுவந் ஆகிய இருவர் சார்பாக விலைக்கு வாங்கிய ஒரு குடும்பத்து அடிமை 1 ஆண். கவிணியன் விலையால் கொண்ட ஒரு குடும்பத்து அடிமை 1 ஆண். பட்டசோமாசியார் சார்பாக விலைக்குப் பெற்ற ஒரு குடும்பத்துப் பிராமண அடிமைகள் 2 ஆடவர், 1 மகளிர். பிராமணர் திருவிக்கிரமன், தம்பி உமாசகிதன் இருவர் சார்பில் ஒரு குடும்பத்து 4 ஆடவர், 3 மகளிர் விலைக்கு வாங்கப்பட்டனர். அரசகுடி விழுப்பரையன் விலையாகக் கொண்ட 2 குடும்பத்து அடிமைகள் 3 ஆடவர், 2 மகளிர். அரசகுடி அரயன் பிள்ளையாழ்வான் ஒரு அரசகுடும்பத்து அடிமைகளான 2 பெண்ணை விலைக்கு வாங்கினான்.

விளக்கம்: 7 – 8 வரிகள் > நித்தன்திருவடி & சிங்கனூரன் இந்த இருவர் சார்பாக கோயில் பெற்ற அடிமைகள் ஒரு குடும்பத்து 2 ஆண்கள். தவுமியன் & ஆதித்தன் இந்த இருவர் சார்பாக பெற்ற அடிமை ஒரு பிராமண குடும்பத்து 2 பெண்கள். சக்கரபாணி & பிராம்மணி என்ற பிராமணர் சார்பாக 1 குடும்பத்து அடிமை 1 ஆண். இதற்கு முன்பு மூன்றாம் குலோத்துங்கன் 9 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1187) விலைக்கு வாங்கி இறைவனுக்கு உரிமையாக்கி விடப் பட்டவர் குறிக்கப்படுகின்றனர். நாகனூர் கவுணியன் ஒரு குடும்பத்து ஒரு பெண்ணை இறைவனுக்காக விற்றான். சூரியதேவன் சார்பாக பெற்ற அடிமை 2 குடும்பத்து 5 ஆடவர், 2 மகளிர் ஆவர். அருமாரி நம்பி இறைவனுக்கு விற்றுக் கொடுத்த அடிமை 1 குடும்பத்து 3 மகளிர் ஆவர்.

விளக்கம்: 9 – 10 வரிகள் > இரண்டாம் இராசராசனின் 7 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1153) பிராமணி சாநி சார்பாக கோவிலுக்குத் தானமளிக்க அவள் மகன் மேற்பார்வையில் 1 குடும்பத்து 5 மகளிர் 60 காசுக்கு வாங்கப்பட்டனர். மூன்றாம் குலோத்துங்கன் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1188) பாலாசிரியன் & சங்கரசிவன் சார்பில் 19 காசுக்கு 3 குடும்பத்து 2 ஆடவர், 3 மகளிர் விலைக்கு வாங்கப்பட்டு கோவிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டனர்.

ஆக நான்கு வெவ்வேறு காலங்களில் மூன்று வேந்தர் ஆட்சியில் 40 குடும்பத்து 48 ஆடவர், 57 மகளிர் என 105 அடிமைகள் கோவிலுக்கு தம்மைத் தாமே தானமாகத் தந்தும், பிறரால் பணம் கொடுத்து வாங்கப் பெற்று கோவிலுக்குத் தானமாகத் தரப்பட்டவர்களும் ஆவர். இந்த அடிமைத்தனம் ஏதோ ஒரு நம்பிக்கையின் காரணமாக நடந்தேறியதாகவே தோன்றுகிறது. எண்ணிப் பார்க்கையில் சிறுபிள்ளை விளையாட்டாகவே உணரமுடிகிறது. ஆனால் பலரும் இக்கல்வெட்டுகளைப் பலவராகப் புரிந்துகொண்டு திட்டிதீர்த்து வெறுப்பை உமிழ்கிறார்கள்.



பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பக். 202-205, 2004, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.





தொடர்பு: சேசாத்திரி சிறீதரன் - Seshadri Sridharan (sseshadri69@gmail.com)






Tuesday, April 10, 2018

திருவாலங்காடு இரத்தினசபை



——   சேசாத்திரி சிறீதரன்


வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில். 

                                                                            
இது ஒரு பாடல்பெற்றத் தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களை தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனைக் கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித் தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாக கல்வெட்டுகளைத் தேய்த்துக்கரைத்து அழித்துவிட்டனர்.  இரத்தினசபை வாயிலைத் தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்குக் கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதே நேரம் அந்த இரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்கு சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.  


கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள்


கோயில்தூண்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி புடைப்புச்  சிற்பங்கள் ஏதும்  இல்லை. இலை, மரம், பூ ,தெய்வவடிவுகள் தாம் உள்ளன. இக்கோயிலிலும் விசயநகர ஆட்சியில் குதிரை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரேயொரு சிற்பம் மட்டும் புராண நிகழ்வை குறிக்கிறது.  அரக்கர் மதிமயங்கி அமிர்தம் உண்பதை மறந்து மோகினிக்காக  ஏங்கித்தவிக்க திருமால் மோகினியாக உருவெடுத்து தேவர்களை மட்டும் அமிர்தத்தை உண்ண  அனுமதித்தபோது அவர்களுக்கு மட்டும் ஏன் மதி கிறுகிறுக்கவில்லை? அவர்கள் உணர்வு அற்றவர்களா? என்ற கேள்வி என்னில் பலகாலம் ஒலித்தபடியே உள்ளது. சிலை வடித்த சிற்பியே கிறுகிறுத்து போய்தான் சிற்பம் வடித்துள்ளான் என்றால் நேரில் மோகினியைக் கண்ட அரக்கர்கள் மட்டும் அமைதியாகவா இருக்கமுடியம்? நீங்களும் அந்த மோகினியைக் காணுங்களேன் ஒருகணம். அடுத்து மோகினி சிற்பம் உள்ள குதிரை மண்டபம்.  





இரயிலடி 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அதிலும் அடிக்கடி super fast local விடுவதால் சாதாரண கட்டணத்தில் இங்கு வரமுடிகிறது. காலை 5.30 மணிக்கு சென்ட்ரலில் தொடங்கி 6.45மணிக்கே இரயில் திருவாலங்காடு வந்துவிடுவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்குச் சென்னையில்  இருந்து வருகிறார்கள். வேலூரில் இருந்தும் வருகிறார்கள். ​
https://www.google.co.in/maps/place/Kosasthalaiyar+River/@13.2995634,80.1086905,11z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a527956dec6497b:0xb572296a37c13b17!8m2!3d13.2996017!4d80.2487789


சிவன்கோயில்கள் தோற்றத்திலும், அளவிலும் மாலியக்கோவில்களை விடவும்  கம்பீரமாகவுள்ளன. அதிக கல்வெட்டுகளையும்  பெற்றுள்ளன. பொதுவாக பண்டு அரசர்கள், வேந்தர்கள் கோயில்களை ஆறுபாயும் இடங்களில் தான் ஊரமைத்து கோயில் கட்டினார்கள். அந்தவகையில் பார்த்தல் இக்கோவில் உள்ள ஊரில் ஏதேனும் ஒரு ஆறு பாயவேண்டும் ஆனால் என்னவோ கொசத்தலையாறு தான்  சில கிலோ  மீட்டர் தள்ளிக்  கிழக்கில் பூண்டி அணை நோக்கி ஓடுகிறது. பண்டு கொசத்தலை இவ்வூர் அருகே ஓடியிருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் எளிய மக்களிடம் காசு புழக்கம் இல்லாத பண்டைக் காலத்தில் கோவிலின் தடையற்ற இயக்கத்திற்கும், கோயில் பணியாளர்க்கும்  கூலியாக விளைநிலங்களை ஒதுக்கி அதில் பயிர் செய்து  பிழைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவை என்பதால்  தான் ஆற்றின் அருகே ஊர் அமைப்பும் , கோவில் கட்டுமானமும் மேற்கொள்ளக் காரணம். கொசத்தலை ஆறு பாயுமிடங்களில் 12க்கு மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளன என்கின்றனர். இன்று திருவாலங்காட்டில் கோவிலுக்கு அருகில் அரசு கரும்பாலை அமைந்து உள்ளது. இருப்பினும்  இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான். சென்னைக்  கோயம்பேடு, வில்லிவாக்கம் சந்தைகளுக்கு இங்கிருந்து தான் அதிக காய்கறிகள் அன்றாடம் செல்கின்றன.   நிலக்கொடைகள் குறித்த கோயில் கல்வெட்டுகளும் இங்குள்ளன.

கல்வெட்டு படம் -1

கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் -1
1  (மண்ட)லத்து மணவிற்கோட்டத்து மேன்மலைப் பழைய..
2 (ச)ண்டேசுரப் பெருவிலை ஆகத் திருநாமத்துக்காணி
3 ...கோலாலளந்து கண்ட குழி இருநூற்றுக்கும் 
4 ர  சோழர(ச)...க்கு விற்றுக்குடுத்துக் கைக்கொ(ண்ட)

விளக்கம்:  
திருவாலங்காடு, மணவில் கோட்டம், மேல்மலைப் பழையனூர் நாட்டுப்பிரிவில் இருந்த குறிப்பு இக்கல்வெட்டின் முதல் வரியில் காணப்படுகிறது.  கோயிலுக்கு நிலங்களைக் கொடையாக அளிக்கும்போது (சில கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளவாறு)  இறைவன்  பெயரில் உரிமை பதிவு செய்யப்படும். இவ்வகை நிலங்கள், திருநாமக்காணி என்று வழங்கும். 
அதாவது, இறைவன் நாமம்; காணி=உரிமை.
இவ்வாறு, திருநாமத்துக்காணியாக இருந்த கோயில் நிலம் ஒன்று,ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல விற்பனை, சண்டேசுரப்பெருவிலை  என்று வழங்கப்படும். ஏலத்தின்  மூலம் கிடைக்கப்பெறும் உயர்வான ஒரு விலைப்பணம் கோயிலுக்கு அமுதுபடி, திருப்பணி, திருவிழா ஆகிய செலவினங்களுக்குப் பயன்படும். கல்வெட்டு, இவ்வாறான ஒரு நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. நிலத்தின் அளவு, இருநூறு குழி. நிலம், இருநூறு குழி என்று ஒரு அளவீட்டுக் கோல் மூலம் அளக்கப்படுகிறது. இவ்வகையான அளவீட்டுக் கோல்கள், 12 அடிக்கோல், 16 அடிக்கோல், 18 அடிக்கோல் எனப்பலவகை இருந்தன. இக்கோல்களுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றும் அறிகிறோம். சில கோயில்களில், கல்வெட்டுகளுக்கிடையில், கோலின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

கல்வெட்டு படம் - 2
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 2
யுடைய (முழான்)....ராயன் 
..........ட்டை (ஸ்ரீ) ..க்கோ ...... காச்யபன்
.....திருவாலங்காடு..........(சாவா) மூவாப்



கல்வெட்டு படம் - 3
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 3
...ராயன்   வடுகநாதன் ....நத
காச்யபன் திருச்சிற்றம்பல பட்ட(னும்)
சாவா மூவாப்பெரும் பசு (4?)  இ



கல்வெட்டு படம் - 4
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 4
வரங்கில் அண்டமுற் ந...
பட்டனும் ஆத்ரேயன்  ச



கல்வெட்டு படம் - 5
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 5
......கோட்டத்து ...
ண்டமுற்  ந... மாந்த..
ஆத்ரேயன் சந்த்ரசேகர (பட்டனும்)



கல்வெட்டு படம் - 6
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 6
...பழையனூர் நாட்டு...
ளிய  நாயநார் திருமு(ன்)
(ப0ட்டனும் காச்யபன் கா..

திருமுன்பு வைத்த சந்(தியா தீபம்)
கா...பட்டனும்

விளக்கம்:   
​திருவாலங்காடு கல்வெட்டுகளைப்  படித்ததில் கிடைத்தவை.
கோயிலில் நந்தா தீபம் எரிக்கப் பசுக்கொடை  அளித்தது பற்றிய கல்வெட்டு.  கோயிலில் எழுந்தருளிய நாயநார் (இறைவர்) திருமுன்பு (கருவறையில்) நந்தா விளக்கு எரிப்பதற்காக (நான்கு?) பசுக்கள் கொடையளிக்கப்படுகிறது. இப்பசுக்கள் சாவா மூவாப்பெரும்பசுக்கள் என்று குறிக்கப்படுகின்றன. 
கல்வெட்டுகளில் கொடையாகக் குறிக்கப்பெறும் ஆடு, பசு ஆகியவற்றைச்”சாவா மூவா’” என்னும் அடைமொழி கொண்டு குறிப்பது வழக்கம்.  இந்தக் கால்நடைகள்  இடையர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்வதால் இறப்புகள் நேர்ந்தபின்னும் புதிய கால்நடைகளின் பிறப்பால், அவற்றின் எண்ணிக்கை குறையாதிருக்கும் என்பதால், “சாவா மூவா”  என்னும் குறிப்பு கொடையாளி,  உயர் அதிகாரிகளில் ஒருவனாக இருக்கவேண்டும். அவனுடைய முழுப்பெயர் கல்வெட்டில் புலப்படவில்லை எனினும், “யுடைய முழான்.... ராயன் வடுகநாதன்    என்னும் துண்டுச் சொற்கள் கொடையாளி ஒரு பெரிய அதிகாரி என்று உணர்த்துகின்றன.  

கொடைப்பொருட்கள், கோயிலின் பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணர் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அச் சிவப்பிராமணர்கள், காச்யப கோத்திரத்துத் திருச்சிற்றம்பல பட்டன், ஆத்ரேய கோத்திரத்து சந்திரசேகர பட்டன்  முதலியோர் ஆவர்.  இன்னொருவர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனும் காச்யபன் கோத்திரத்தான் எனத்தெரிகிறது. திருவாலங்காட்டின் இருப்பிடம் பழையனூர் நாட்டுப்பிரிவு எனத்தெரிகிறது.   இப்பழையனூர் நாட்டுப்பிரிவு,  மேல்மலைப் பழையனூர் எனவும், மணவில் கோட்டத்தைச்சேர்ந்தது எனவும் குறிப்பிடப்படுகிறது.





நன்றி: 
திரு. துரை சுந்தரம், கோவை. கல்வெட்டை வாசித்துப்  பொருள் கூறியவர். 

பின் குறிப்பு: 
மணவில் இன்று மணவூர் என்ற பெயரில் வழங்குகிறது [https://en.wikipedia.org/wiki/Manavur]
இங்குள்ள கோவிலிலும் கல்வெட்டுகள் நிரம்ப உண்டு என்று தெரிகிறது [https://soki.in/manavoor-tiruvelangadu-thiruvallur]
அன்று மணவூரில் திருஆலங்காடு இருந்தது. இன்று திருவாலங்காட்டில் மணவூர் அடங்கிவிட்டது.

​ 

________________________________________________________________________
தொடர்பு: சேசாத்திரி சிறீதரன் (sseshadri69@gmail.com)





Thursday, February 2, 2017

பாணாவாளி அகழாய்வு சிந்து முத்திரையில் ஏறு தழுவல் விளையாட்டு

--- சேசாத்திரி சிறீதரன் 


ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது. 
பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு 

Impression of a Banawali seal  from c.2300 – 1700 BCE, showing an acrobat leaping over a bull. Source: UMESAO 2000:88, No. 335
​
வேல் - மா, I  -ன, மாடு - ன்.  இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.



​

மூன்று கிளை மரம் - ந, நாற்கோடு - ன்,  hypen போன்ற கோடு - அ, மீண்டும் நாற்கோடு - ன், இரு கோட்டு மீன் - சா, இருபுறமும் மும்மூன்று கோடு U - கே,  U நடுவில் கோடு - ன, கோட்டின் இருபுறமும் மும்மூன்று கோடுகள் - த்த, வைரவடிவம் - ன். இதில் உள்ள எழுத்துக்கள்        நன்அன் கேனத்தன் என்பன. நன்னன் கேனத்தன் செப்பமான பெயர்.             


​

எருமை உரு பொறித்த இந்த முத்திரையில் முதல் இரு சிறுகோடு - அ, இரு பெரிய கோடுகள் - ண, இருகோடுகளின் கீழ் கவிழ்த்த A - ங்க, வட்டத்துள் வைரம் - ன். இதில் உள்ள எழுத்துகள் அணங்கன்  என்பன.  




___________________________________________________________
 

சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
___________________________________________________________
 

Monday, February 8, 2016

ஆதி மொழி தொல்காப்பியம் பாணினீயம் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு நூல் - நூல் மதிப்புரை

--- சேசாத்திரி சிறீதரன் 






சட்டம்பி திருவடிகள் சுவாமி (1853 - 1924) கேரளத்தில் குமுக சீர்திருத்தத்திற்கு வித்திட்ட சிறீ நாராயண குருவிற்கு குருவாய் அமைந்தவர். தமிழிலும் சமற்கிருதத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் இவர்1915 இல் இயற்றிய மொழியியல் ஒப்பாய்வு நூல் தான் ஆதி மொழி என்பது. அரிதினும் அரிதாக இதுகாறும் எவரும் செய்திராத வகையில் இந்நூலில் தமிழ் சமற்கிருதம் ஆகிய மொழிகளின் முதன்மையான இலக்கண நூல்களான தொல்காப்பியம் பாணினீயம் ஆகியவற்றை ஒப்பிட்டு இம்மொழிகளின் அமைப்பில் உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் சிறந்த முறையில் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். இவற்றோடு நில்லாமல் தமிழ், பிராகிருதம், சமற்கிருதம் ஆகியவற்றின் தொன்மையைப் பற்றிக் கூறும் போது தமிழ் இம்மூன்றில் மூத்த முதுமொழி என்றும் பிராகிருதம் தமிழுக்குப் பின்னது என்றும் சமற்கிருதம் பிராகிருதத்திற்கும் பிற்பட்டது என்றும் நிறுவியுள்ளார். சமற்கிருத இலக்கணத்தினும் தமிழ் இலக்கணம் பழமையானது என்று கூறுகிறார். https://en.wikipedia.org/wiki/Chattampi_Swamikal


176 பக்கங்கள் கொண்ட இந்நூல் வித்தியாதிராச தரும சபையால் கடந்த 31/01/2016 அன்று அவ்வை திரு நடராசன் அவர்களால் வெளியிடப்பட்டது. நான் ஆனந்த மார்க்க பிரச்சாரக சங்கத்தில் ஊழ்கம் பயின்றுவந்த நாளில் 9 ஆண்டுகள் முன்னம் அதில் உறுப்பினராக இருந்த திரு பி. சுப்பிரமணியம் பிள்ளை என்ற மலையாளி தந்த குறுநூல் ஒன்றில் இந்த சட்டம்பி திருவடிகள் இயற்றிய ஒப்பாய்வு நூல் "ஆதிபாஷா" தமிழையே ஆதிமொழி எனக் குறிப்பதாக இருந்த செய்தியால் ஈர்ப்புற்று வித்தியாதிராச தரும சபையின் பொதுச் செயலர் திரு சி.கெ. வாசுக் குட்டன் அவர்களைத் தொடர்பு கொண்டு 1998 இல் கெ. மகேசுவரன் நாயரால் மலையாளத்தில் வெளியிடப்பட்ட இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதைப் பேரா இரா. மதிவாணன் நல்ல முறையில் செய்யவல்லவர் என்று கூறி இருவருக்கும் தொடர்பை ஏற்படுத்திவைத்து சில மாதங்களில்(2007 இல்) மொழிபெயர்ப்பு முடிவடைந்தது. பல்வேறு காரணங்களால் நூல் வெளியீடு தடைப்பட்டு எமது தொடர்ந்த வற்புறுத்தலால் 2016 சனவரி இல் வெளியானது.


இந்நூல் தமிழார்வலர்கள், தமிழ் சமற்கிருதம் அறிந்த அறிஞர்கள், அயலக பல்கலையில் பயிலும் மாணவர்கள் கற்றுவிக்கும் பேராசிரியர்கள் ஆகியோருக்குப் பெரிதும் உதவியாய் இருக்கும். விலை உரூ. 180/-

உள்ளடக்கம்

1. தொடக்கம் - பிராரம்பம்

2. எழுத்தியல் - அட்சர நிரூபணம்

3. புணரியல் - சந்தி நிரூபணம்

4. சொல்லியல் - பத விவஸ்தா நிரூபணம்

5. பால் இயல் - லிங்க நிரூபணம்

6. எண் இயல் - வசன நிரூபணம்

7. வேற்றுமை இயல் - விபக்தி நிரூபணம்

8. அடிச்சொல் இயல் - தாது நிரூபணம்

9. தமிழ் சமற்கிருதம் ஒற்றுமை வேற்றுமைகள்

10. ஆதி மொழி - ஆதிபாஷா

தொடக்கம் பக்கம். 2

வீசிதரங்க நியாயம்: தொடக்கத்தில் ஒரு அலை புறப்பட்டு கரையைத் தொடுவதற்கு முன்பே அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து வந்து அலையடுக்குகளாக உருவெடுக்கின்றன. அது போல் முதலில் தோன்றிய ஒரு மொழியின் விளைவாக அடுத்தடுத்து பல மொழிகள் உருவெடுக்கும் வரலாற்றுக்கு அலை அடுக்கு முறை என்பது உவமையாகிறது.

கதம்ப மூல நியாயம்: கடம்ப மரத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு சேர மொட்டுகள் அரும்பி அவை ஒரு சேர மலரும். இதைப் போலவே ஒரு நேரத்தில் உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு மொழிகள் தோன்றியிருக்கக் கூடும் என்பதற்கு இது உவமையாகக் கூறப்படுகிறது.


எழுத்தியல் பக்கம் 25 - 26:

பிராகிருதம் சமற்கிருதமயமாக்கப்படாத தனக்கே உரிய முந்து எழுத்து வடிவங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதால் சமற்கிருதத்தைவிடப் பிராகிருதம் காலத்தால் மிக மிக முந்தையது என்பது பெறப்படுகிறது.

மேலும் சமற்கிருதம் ஒருமை இருமை பல என்னும் எண்பாகுபாடு உள்ளது. அதனை வசனத்ரையம் என்கின்றனர். ஆனால் பிராகிருதத்தில் "த்விவசனஸ்ய பஹுவசனம்" எனக் கூறப்பட்டிருப்பதால் ஒருமை பன்மை எனும் இரண்டல்லாது இருமை (த்விவசனம்) என்பது அறவே இல்லை.

சமற்கிருதத்திலிருந்து பிராகிருதம் தோன்றியிருந்தால் சமற்கிருதம் ஏற்றுக் கொண்ட இருமை எண் (த்விவசனம்) இல்லாமலிருக்கக் காரணமில்லை.


புணரியல் பக்கம் .48

ஏனைய உலக மொழிகளில் இல்லாத சொற்புணர்ச்சி (சந்தி) இலக்கணம் தமிழிலும் சமற்கிருதத்திலும் மட்டும் காணப்படுகின்றன.


சொல்லியல் பக்கம் 67

சமற்கிருதத்திலுள்ள சொற்கள் யாவும் 'கிரியா தாது' எனும் வினைச் சொற்களிலிருந்து தோன்றியவை. ஆனால் முன்னொட்டுகள் பெறாத தனித்த வினைச் சொற்கள் சமற்கிருதத்தில் இல்லை.

பக்கம் 69 - 70
சமற்கிருதத்தில் எல்லாச் சொற்களும் தாதுக்கள் எனும் சொல்லடியில் தோன்றினாலும் இந்த வடிவத்தில் வினைச் சொற்கள் ஆவதில்லை. அவற்றோடு முன்னொட்டுகள், பின்னொட்டுகள் சேர்ந்தால் தான் வினை வடிவம் பெறும். தமிழில் வினைச் சொற்களுக்கு முன்னொட்டு பின்னொட்டுப் போன்றவை அறவே தேவையில்லை. இவற்றை உற்று நோக்கும்போது தமிழ் சமற்கிருதம் எனும் இரண்டு மொழிகளுக்கும் இடையே உள்ள வலுவான பெரிய வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது.

பக்கம் 71 சமற்கிருதம் பேசப்படும் பேச்சு மொழியாக இல்லாததாலும் பல திசைகளிலிருந்தும் சொற்கள் வந்து சேரும் வாய்ப்பு இல்லை எனக்கருதி திசைச்சொல் என்னும் வகைப்பாட்டைச் சமற்கிருத இலக்கணத்தில் சேர்க்கவில்லை எனச் சிலர் கூறுகின்றனர். எனினும் தன்சொல் பிறசொல் எனும் இருவகை அதில் இல்லை என வாதிட முடியாது.


பால் இயல் பக்கம் 101
சமற்கிருதத்திலுள்ள பால் வேறுபாடுகள் குழப்பமும் பிழைபாடும் கொண்டவை என்பதைச் சமற்கிரதத்தத்தில் மாபெரும் புலமையாளராகவும் சமற்கிருதத்திற்கு அதிகாரிகளாகவும் உள்ள சமற்கிருத பெரும் பண்டிதர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.


எண் இயல் பக்கம் 107
தமிழிலுள்ள உயர்திணை அஃறிணைப் பிரிவுகள் சமற்கிருதத்தில் இல்லை. இவை காலங்கடந்து தமிழில் சேர்க்கப் பட்டவை என்று கூறுவதை ஏற்க முடியாது. உயர்திணை முன்பு வகுக்கப்பட்ட பின்னரே உயர்திணை அல்லாதது எனும் அஃறிணை காரணம் கருதிப் பெயரிடப்பட்டுள்ளது. ஆதலால் தமிழிலுள்ள உயர்திணை அஃறிணை வேறுபாடு தொடக்க காலத்திலேயே உண்டாகியிருக்க வேண்டும். இதுவே உத்திக்கும் பொருந்தியுள்ளது.

பக்கம் 109
சமற்கிருதத்தில் எண்ணிக்கையை வசனம் என்றும் பிறப்பு வழி ஆண் பெண் வேறுபாட்டை லிங்கம் என்றும் வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் தமிழில் இந்த இருவகைக்கும் வேறுபாடு காட்டாமல் பொதுவாகப் பால் எனப் பெயரிட்டது ஏன்?

இவற்றுக்குக் காரணம் என்னவெனில் வடமொழியிலக்கணப்பாங்கு ஏற்படுவதற்கு முன்பே மிகு தொன்மைக் காலத்தில் தமிழிலக்கண வகைப்பாடுகள் தோன்றிவிட்டனவாதலால் அவற்றை மாற்றமின்றித் தமிழிலிணக்க வல்லுநர் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதேயாகும்.


ஆதிமொழி பக்கம் 175

பல்வேறு உயிரினங்கள் எங்குத் தோன்றினவோ அங்குதான் மாந்த இனமும் தோன்றியிருக்க முடியும். முதல் மாந்தன் எங்குத் தோன்றினானோ அங்குத்தான் உலக முதன் மொழியும் தோன்றியிருக்க முடியும். அந்த மாந்தனின் மொழிகள் அவனுக்குப் பிறகு தோன்றிய மாந்த இனத்துக்கும் தாய்மொழியாக அமைந்திருக்கும்.

இலங்கை தொடங்கிய அடுத்தடுத்துள்ள நிலப்பகுதிகள் இன்னும் திராவிட மொழிகளின் ஊற்றிடங்களாக உள்ளன. தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாக உள்ள தமிழே பழந்திராவிட முதல் தாய்மொழியாக இருந்திருக்கும் என்னும் உண்மை இதனால் நிலை நாட்டப்படுகிறது. இப்பகுதியிலிருந்து உலக முழுவதும் பரவிய உலகமொழிகள் அனைத்துக்கும் தமிழே தாய்மொழி என்பது உறுதிப்படுவதால் தமிழை ஆதிமொழி என்று அழைக்கலாம்.



நூல் கிட்டும் முகவரி:

சிறீ வித்தியாதிராச தரும சபை ,
எண் F - 13, BBC Westend,
9A, கே. கே. சாலை,
சாலிக்கிராமம்,
சென்னை - 600 093.
அலைபேசி: 98414 28004 (வாசுகுட்டன்)

விலை உரூ. 180/-
___________________________________________________________
 

சேசாத்திரி சிறீதரன்
sseshadri69@gmail.com
___________________________________________________________