Showing posts with label நூ த லோ சு. Show all posts
Showing posts with label நூ த லோ சு. Show all posts

Monday, February 19, 2018

உனகோடி கைலாசகர் சைவத்தலத்தின் பண்டைய பெருஞ்சிற்பங்கள்


——   நூ.த.லோக சுந்தரம்.


கிழக்கு ​இந்தியாவின் ஓர் மாநிலமான​ ​​​'தி​ரிபுரா​'​​ ​வில், ​ ​ 11 நூற்றாண்டு ​'​ பால​'​* மன்னர்  பரம்பரை​யின் பண்டைய பெருஞ்சிற்ப இறை உருவங்களை  "உனகோடி" மாவட்டத்து கைலாசகர் சைவத்தலத்தில் காணலாம். மாமல்லபுரம் அருச்சுனன்​ த​ப​​​சு ​எனும் ​பெரும்பாறைமுகப்பு பொளிப்பு (bas-relief) ​ களுக்கு ​இணையான பெரிய அளவினதாகவும் வனப்புடனும்  காணப்படுகின்றன.




உனகோடி என்றால் கோடிக்கு ஒன்று குறைவு என்பது பொருள். பார்வதி ஓரிரவில் கோடி சிலைகளைப் படைக்குமாறு 'குல்லு கம்ஹார்' என்ற சிற்பிக்கு ஆணையிடுகிறார்.  ஆனால் எவ்வளவு முயன்றும் சிற்பியால் அக்கட்டளையை நிறைவேற்றமுடியாமல் கோடிக்கு ஒரு சிற்பம் குறைவாகவே உருவாக்கப்பட்டதால் இச்சிற்பத் தொகுதி உனகோடி என்று (வங்காள மொழியில்) அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு.

பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களும், கல் சிற்பங்களும் மிகப் பெரியன. சுமார் 30 அடியைவிட உயரமான, ​நெற்றிக்கண் உடைய சிவனின் தலையின் மீது உள்ள சடைமுடி மட்டுமே பத்தடி  உயரம் கொண்டது. தலையின்  இரு பக்கங்களிலும் தேவியர் சிலைகள் உள்ளன.   சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை அவர்களில் ஒருவர். 





தாழும் அருவிகளின் கீழேதான் சடைமுடியுடன் கூடிய சிவனை, ​சீரிய கலை உணர்வுடன் ​பொ​ளித்திருக்க வேண்டும்.  ஆனால், இந்நாளில் அருவி சிறிதே விலகி பக்கத்தில் ஓடுகின்றது. 






எதிரில்  அரைப்பகுதி தரையில் புதைந்துள்ள நந்தி சிலையும் உள்ளது. விநாயகர், மாறன்கணை,​ ​கங்கை தாங்கிய சடைமு​டி, திரிபுரம் எய்த​ சிவ​ன்,  காளி எனவும்  இவை யாவும் புராணங்களை விளக்குபவை.  ஆதலால், இச் சிலைகளின் தொகுப்பு அப்பகுதியில் ​ சைவ-காளி  வழிபாடு இருந்தமையைக் காட்டுகிறது.  ​

இந்த மிக அரிய  தொல்லியல் கல் சிற்ப வளாகம்  இந்தியத்தொல்லியல் துறையினால் பராமரிக்கப்பட்டாலும் விளம்பரப்படுத்தப்படாமல் உள்ளது.  இந்திய பெருநாட்டில் போக்குவரத்து  மிக மிகக் குன்றிய ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதும் ஓர் இடர்பாடு தான்.  மேலும்,  UNESCO பட்டியலின் கீழ் தொல்லியல் வளாகத்தைக் கொணர்ந்தாலும் சுற்றுலாத்துறை வளரலாம்.

 

குறிப்பு:
*பால (= பால்) எனும் சொல்லிற்கு காப்பாற்றுபவன்/இறைவன்,  அதாவது ஓர் மன்னன் தலைவனின் கடமை/தொழில்  தனது  நாட்டுக் குடிகளை ஓம்புதல் ஆகும்  (காட்டாக: கோ'பால்' = கறவை மாடுகளை ஓம்புகின்றவன், தன'பால்' = செல்வத்தினை காப்பாற்றுகின்றவன், தரம் 'பால்' = அறத்தைப் பேணுபவன் , மகி 'பால்'  ' = பெண்களைப் போற்றுபவன் என அறியப்படும்). இன்றும் பால் எனும் குடும்பப் பெயர்/பட்டப்பெயர் கொண்டோர் 
 வங்காளத்திலும் அக்கம்பக்கத்து நாடுகளிலும் வாழ்கின்றனர். 



படங்கள்: நன்றி இணையப் பக்கங்கள்



________________________________________________________________________
தொடர்பு: நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்)

Friday, February 9, 2018

கோயிலின் விமானங்கள்

——   நூ.த.லோக சுந்தரம். 




    கோயிலின் சுற்று தளம் செவ்வக வடிவுடையதாகவும், தூங்கானை மாட விமானம்  கொண்டதாகவும், படத்தில் காண்பது போல  சில கோயில்கள் அமைந்திருப்பதுண்டு.  இதன் காரணம், கோயிலின்  பழங்காலத்திய  கருவறை  விமானம்  கருங்கல்லால்  ஆகாமல்  சிதிலமடைந்ததால்   பின்னாளில்  அந்நாளைய (current) புதுமை, பெருமை  தாங்கும்  வகையில்  ஆனதான  தூங்கானை  மாடமாக  விமானம்  மட்டும்  அமைக்கும்  ஒரு  முயல்வு  இதுவாகலாம்,  இது  ஓர்  சிறப்பு  தனி  நிலை  எனல்  வேண்டும்.    அதான்று,  இது  இருநிலை  மாடக்கோயில்  உச்சியில்  இருக்கும்  இரண்டாம்  தளம்தான்  தூங்கானை  மாட  விமானமாகும்  என்பதையும்  கவனிக்க  வேண்டும்.   பல  தூங்கானை   மாடங்கள்  போல்  அல்லாது  அடிமட்டத்திலிருந்தே  தூங்கானை   வடிவாகக்  கட்டுமானம்  அமையாமல்  உள்ளது.

    இன்று  சாதாரண  நிலையில்  உள்ள  ஊர்களில்  அரச,  ஆல  மரத்தடியில்  பிள்ளையார்,  அம்மன்  சிலைகளை  மேடைமீது  அமைத்து  வழிபடுவதும்,  இதுவே ஊர்மன்றம்  எனவும்  ஊர்ப்பொதுக்காரியங்கள்  பேசுமிடம்  ஊர்த்தலைவர்  சந்திக்குமிடம்  எனவும்  உள்ளமை  நன்றே  அறிவோம்.   இவ்வகை  வழிபாட்டு  இடம்  நாகரீகம்  மேற்படும்போது  அதன்  கூரைகள்  ஓலைகளாகவும்,  பின் செங்கல்லாலும்,  பின்  பொலிவுமிக்க  கவின்பெரு  கருங்கற்களால்  சிற்பங்களுடன்  கூடியதாகவும்,   கற்றளி  எனவும்  பரிணமித்தது  என்பது  இயல்பான  வரலாற்றுப்பாதை  ஆகும்.   ஆனால்,  பல்லவர்கள்  அமைத்த  குடைவரைக்கோயில்கள்  இவ்வகைத்தது  ஆகாமல்  முற்றும்  வழிபாட்டுத்தலமாக  மட்டும்  எழுந்தவை  ஆகும்.

    விமானம்  எனும்  சொல்  வானம்/கூரை - தலைக்கு  மேலுள்ள  அமைப்பு  தொடர்புடையது.  விதானம்  எனவும்  வழங்கும்.   விண்ணகர் எனப்படுவதும்  உண்டு.    பந்தர்(ல்),  காவணம் எனும்  சொற்களும்  அப்பொருள்  தாங்கும்.  ஆனால்   இவை  தற்காலிகமானவை.   சிலநேரங்களில்  கொடி,  பதாகை  போன்று  நகரக்கூடியவையாகவும்  இருக்கும்.   குடைபோன்ற  அமைப்புடன்  இன்றும்  கோயில்  இறைவன்  வீதி  உலா  ஊர்தி/வாகனங்களில்  'சவுடல்'  விமானம்  உண்டு. 

    திருவானைக்கா  கோயிலின்  வரலாற்றில்  சிலந்தியும்  யானையும்  போட்டிபோடும்  விதானம்  மற்றும்  அதன்  பராமரிப்பு  குறித்துப் பேசுவதை  நினைவு  கொள்க.

மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியம் சகடுஅணைய வானத்து 50
          சிலப்பதிகாரம் 1 புகார்க் காண்டம் ; பதிகம் 1 மங்கல வாழ்த்துப் பாடல்

திருக்கோயி லில்லாத திருவி லூருந்
              திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
               பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்க மூதா வூரும்
               விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
               அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே 6.95.5
                                                அப்பரடிகள்;  திருத்தாண்டகம்

விதானம்  அமைந்த  கோயில்கள்  இல்லாமல்  இருக்கும்  ஊர்  ஊரல்ல   என்பது,  நாகரீகம்  முதிராது  வாழும்  குடிகள்,  அதாவது  காட்டுவாசிகளாக  வாழும்  இடம் (அடவி காடு) என்பதாகும்  

வேறு;
ASPIDAL, என்பது  தூங்கானை  மாட  அமைப்பின்  ஆங்கிலச்சொல், வடமொழியில் गजपृष्‍ठाकार எனக்கட்டுகின்றது (https://shabdkosh.raftaar.in/). 



வாதபிக்கோயில்  ஒருவகையில்  இத்தகையதே.   இங்கு  அடித்தளம்  தூங்கானை  மாடம்  மேலே  சதுர  அமைப்பு.

    இப்படி  இருந்தால்தான்  இது,  அல்லது  சிறிதே  மாறினாலும்  அதுவாகாது  எனும்  கொள்கையைக்  கடைபிடிப்பது  மிகுந்த  இடரைத்தரும்  எனலாம்.   கோஷ்டம்  என்றால்  நான்குபுற  சுவரினில்  சன்னல்  போல்  வைக்கும்  அமைப்பு.   கோஷ்டத்தில்தான்  தென்முகன்  பிரம்மா/லிங்கோத்பவர்,  துர்க்கை,  கணபதி எனும்  உருவங்களை  வைப்பர்.   ஆனால்,  புதுமையாகத்  தனித்துவம்  தாங்கி  குடந்தை  நாகேசுரர்  கோயில்  கோஷ்டங்களில்  சோழமன்னன்,  அவர்தம்  குடும்பம்/பரம்பரை  பெண்கள்  உட்படத்  தந்தை  மகன்  உருவங்கள்  உள்ளன.   அதனால்  அது  ஒரு  படைவீடாகுமோ  என்று  ஐயம்  உள்ளது.   ஆனால்,  கல்வெட்டுகள்  அப்படிக் காட்டவில்லை.

கீழே உள்ளவை - சில்பசாத்திரம்  தொடர்புடைய சொற்கள் :-



இரண்டாவது  படத்தில்  தரும்  விளக்கங்கள்  ஒரு  தனி  மனிதர்  இரண்டையும்  ஒப்புக்காட்ட  வந்த  நிலை  மட்டுமே  ஆகும்.   முதலில்  உள்ளது  கட்டிடம்  பின்தான்  அதனை  ஒப்பு காட்ட  வந்தநிலையில்  ஓர்  விளக்கம்.   எனவே, விளக்கம் என்பது இங்கே  பின்  வந்தது.  விளக்கத்திலிருந்து  கட்டிடம்  அமைக்கப்படவில்லை. 

    'வி'மானம்  வானம்  பறத்தல்  தொடர்புடையது   இதனில்  உள்ள  'வி'  என்பது  வடமொழி  முன்னொட்டு(prefix)  விதானம்,  விநாயகன்,  விபுலம்,  விக்கிரமன்,  விபூதி'  விமலன்,  விநாசம்  போன்றவை  சில.   வடமொழியில்  சிலபோது  'வகரம்'  'பகராக'  மாறும்.   வங்காள குடாக்கடல் Bay of "Bengal" எழுத்தின் வடிமமும் காண்க,  மிகச்சிறிதே மாற்றப்பட்டுள்ளது.  'व'  'ब' வயிற்றின் நடுவண் ஓர் கிடைக்கோடுமட்டும்.

    அதான்று,  ஓர்  பலபொருள்  அங்காடியில்  ஒரே  கூரையின்  கீழ் கிட்டுவதால்  அதற்கு  (காமதேனு,  சிந்தாமணி  போல்)  'விதான்'  எனவும்  பெயரிட்டுள்ளனர்.  




 படங்கள்: நன்றி இணையப் பக்கங்கள் 





________________________________________________________________________
தொடர்பு: நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்) <selvindls61@gmail.com>





Thursday, December 14, 2017

இறையில்



——   நூ.த.லோக சுந்தரம்.



    உயரத்தில் யானைகள் நெருங்கமுடியாமல் கட்டப்பட்ட கோட்டைகள் காட்டினர் அக்காலத்து அரசர்கள். பகைவர் நாட்டினைப்  பிடித்தவன்  அவர்களில் அரண் அமைப்பினை இடித்துத் தள்ளி விடுவான். அத்துடன்  அப்போதெல்லாம் கட்டிட அமைப்பும் கூட கிடையாது. காட்டு விலங்குகளுக்காக இயற்கையாக வேலிகளை வளர்த்து அதனுள் இருப்பர். மாற்றான் (ஆநிறை கொள்ளுதல் மீட்டல்) போர்த்தொடுத்தால் அவனது அரணை அழித்து எள்ளும் கொள்ளும் விதைத்து விடுவானாம். பிற்காலத்துக் கட்டிடங்களை யானைகளைக் கொண்டு இடித்துத் தள்ளாமல் இருக்க, யானைகள் ஏறமுடியாத சிறு சிறு குன்றுகள் மீது மிக உயர்ந்த மதில்களும் அதனை நெருங்க முடியாத அமைப்புகளும் தோன்றின.

போரிற்குப் பயன்படும் யானை ஏறமுடியாதபடி பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட இறையில்; இறை இல் =மன்னன் இருப்பிடம்
ஏயில் (எயில்) =கோட்டை  (ஏ எனும் சொல் உயரம் தொடர்புடைய சொல் (​ஏணி, ஏனாதி, ஏகம்பம்​ ​, ​​​ஏனுகு (யானை தெலுகு)

    கோச் செங்கணான் எனும் சோழ மன்னன் காவிரிக்கரையில் யானை எளிதில் ஏற்கமுடியாத கோட்டைகளை = அதாவது கோயில்களை (கோ  = இறைவன் மற்றும் தெய்வம்) கட்டிக் கொண்டதாக வரலாறு உண்டு. திருப்பனந்தாள் போன்று பனை மரத்தினடியிலோ ஆரூர் அறநெறி தண்டலை நீள் நெறி போன்று  நாட்டின் பெருவழிகளில் வழிபடும் இடங்கள் அமைந்தன என்பதை அவற்றின் பெயர்களே காட்டும்.

"பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து"

எனும் தேவாரத்தில் பலவகை  கோயில்களை அமைந்தமை காணப்படுகின்றது (பொது ஆண்டு 650 பாடல்).  பின்னாளில் கட்டிட அமைப்பு அகழி என்றெல்லாம் பெருகி உள்ளது.  ஒன்றுக்குள் ஒன்று என சிதம்பரம்  ஸ்ரீரங்கம் போல் 4- 5 பிரகாரங்கள் எனவும் வளர்ந்தது (அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பெண்டகன்  இதன் பிரதி). வெறும் மன்னன் இல்லமாக இருந்தால்தானே இடிக்கின்றனர். அதனால் கோட்டையும்,  எல்லோரும் வணங்கும் இறைவன் கோயிலாக மாற்றினர். ஆனால் தேவைப்படும் படைகள் தங்கும் (BARRACKS) கொட்டில்களாகிவிடும். வெறும் கருங்கல்லாலான தெய்வத்துக்காக உயர்ந்த மதில்கள் மிக உயர்ந்த கதவுகள் கட்டப்படவில்லை. கொடிமரமும் அரசனது கொடிகட்டி அறிவிக்கும் முயல்வு அவ்வளவே. யோகநிலை குண்டலினி முதுகுத்தண்டுபோல் காண்பது எல்லாம் வெறும் ஏமாற்று வேலையாக (கப்சாலாஜி)  மடை மாற்றிக்காட்டும் கற்பனை முயற்சி நிலை.
    இராசராசன் காலத்து இருந்த தனித்துவம் பெருமைபற்றி எழுந்த தஞ்சைக்கோயில் இறைவன் கருவறையில் மேலாகக் கட்டப்பட்டது. பின்னாளில் பாண்டியர்கள் விசய நகரத்தார் நாயக்கர் காலத்தில் வெளிமதிலில் நாற்புறமும் உயரத்திலிருந்து வேவுபார்க்கக் கட்டப்பட்டன (மேற்கத்திய நாடுகளில் உயரத்தில் bunkers அமைத்து நோட்டம் விடுவார் என்பதன் முன்னோடி). எங்கெல்லாம் கோயிலால் உள்ளனவோ அவையெல்லாம் குறு மன்னர்களின் கோட்டைகளே. இவை அமைக்கப்பட்டுள்ள இடம்  startegic location ஆக  இருப்பதைத்தான்  காண்கின்றோம்.  அதாவது பெரும் ஆற்றினைக் கடக்கும் பெருவழியில் மலைக்கணவாய் வாயிலில் (திருவண்ணாமலை) அமைப்பர். திருவரங்கம் காவிரியின் தீவில் உள்ளது. 



________________________________________________________________________
தொடர்பு: நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்) <selvindls61@gmail.com>

தூங்கானை மாடம்


——   நூ.த.லோக சுந்தரம், நரசிங்கபுரத்தான்


    தமிழகத்தில் உள்ள கோயில்களின்  தோற்ற அமைப்பில், சில கோயில்கள்  தூங்கானை விமானம் /    கஜப்பிரஷ்டம்   என வழங்கப்படும் யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு உடைய கோயில்கள்.  தூங்கானை மாடம்  அமைப்பு பிற்காலத்ததாகத்தான் உள்ளன.  இவ்வகை பெரும்பாலும் வட தமிழ் நாட்டில் உள்ளன. தொண்டை நாட்டிற்கே உரியது எனக்கூறும் அளவிற்கு மிக அதிகமாகத் தமிழகத்தின் வடபகுதியில் காணப்படுகின்றது இந்தத் தூங்கானைமாடம் அமைப்பு.  ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முற்படாத  பணிகளாகத் தெரிகின்றது.  அதாவது ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன் அமையவில்லை  என்பேன்.  கிட்டத்தட்ட 100 கோயில்கள் இவ்வகையில் காணலாம். சென்னையிலேயே 7 க்கு மேல் உள்ளன. மிகவும் தெற்காக உள்ள கோவில் பெண்ணாகடம் கோவில்.

    இதனில் மிகப்பழமையானது திருத்தணி வீரட்டேசுவரர் கோயில். மற்றும் சிறிய அமைப்பு வேறுபாட்டுடன் காண்பது காஞ்சியில் உள்ள சுரஅரேசுவரர் கோயில். இக்கோயிலும் இவ்வகை  அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது  காவித்துளை போல் (கிட்டத்தட்ட  STATE BANK அடையாளம்).

தூங்கானை மாடம்  எனில் இங்கு படுத்து தூங்குகின்ற யானை எனும் பொருள் கிடையாது.
தூங்கு  = உயரத்தில் உள்ள (தூக்கு >> தூக்கணாங்குருவி>> தொங்கல்)
குலோத்துங்கன் = குலத்தை உயர்ச்சி செய்தவன்
அநேக(து) தங்காபதம் = இமயமலைத்தொடரில் உள்ள ​தேவாரப் பாடல்பெற்றத்தலம்
கயிலாயமலையே வணங்கப்படுவதுபோல் ​அந்தத் தொடரில் உள்ள பலவேறு (அநேகம்) மலையுச்சிகளும் கடவுளாகக் கொள்ளப்படும் நிலை (ஏகம் ஒருமை, அநேகம் பன்மை).  காஞ்சியில் கயிலாய நாதர் கோயில் அருகேதான் கச்சி அனேகதங்காபதம் எனும் தேவாரப் பாடல்பெற்றத்தலம் உள்ளது.

கோயில் கட்டிட அமைப்பு பற்றி சில கருத்துக்கள்:
    வானத்திலிருந்து பார்த்தால் சிவலிங்க வடிவில் தோற்றம் கொள்ளும் வகையில் இக்கோயில்களின் கருவறைக் கட்டப்பட்டுள்ளது. இவை யாவும் மேலிருந்து பார்க்கும் பொது சிவலிங்கவடிவில் தோன்றும் சிவன் கோயில்களாகும் (இதற்கு இணையாக மயிலையில் உள்ள கிருத்துவ தேவாலயத்தினை கழுகுப் பார்வையில்   மேலிருந்து பார்த்தால் சிலுவையாகத் தெரியும் என்பதையும் நினைவில் கொள்ளலாம்).

    கேரள கோயில்களிலும் கழுகுப்பார்வை சிவலிங்க கருவறைகள் அமைப்பில் பல கோயில்கள்  உள்ளன. அதான்று கருநாடகத்தில் உள்ள சாரதா பீட கோயிலமைப்பும் இவ்வைகத்ததே. தூங்கானை மாடக்கோயில்கள் அமைப்பில் இன்னும் நிறையக் கோயில்கள் உள்ளன. 
 
முன்குடுமிஈசுவரர்,  பொன்விளைந்த களத்தூர்
இக்கோயில் ​தொல்லியல் துறை  மேற்பார்வையில் உள்ளது ​.


வீரட்டேசுவரர் கோயில்+ திருத்தணி ​
மிகப்பழைய கடைநிலை பல்லவர்கள் காலத்துப்பணி தொல்லியல் துறை மேற்பார்வையில் உள்ளது,  விமானமே கருங்கல்லால் ஆனது.  


பொழிச்சலூர் கோயில்
சென்னை பல்லாவாராம் மேற்கு, சென்னை விமான தளம் தென் கோடிக்கும் தெற்கு.


திருக்கள்ளில் கோயில்
தேவாரப் பாடல்பெற்றத்தலம்,  தமிழ்நாட்டில் வட கோடி பெரியபாளையம் அருகு (மேலும் வடக்கு ஆந்திரத்தில் காளத்திதான் தொண்டை நாடு)

 




தூங்கானை மாடக் கோயில்களின் இருப்பிடங்கள் 

——   நரசிங்கபுரத்தான்.

மாமல்லபுரத்தில் பஞ்ச பாண்டவர் ரதம் என தற்பொழுது வழங்கப் பெரும் இடத்தில் உள்ள யானை சிற்பம் அனைவரும் அறிந்ததே.  இவற்றில்  நகுலன் / சகாதேவன் ரதம் தூங்கானை விமானம் கட்டுமானத்தை உடையது. 




பல்லவர் கால முதல் கட்டுமான கோயில் எனப்படும் கூரம் சிவன் கோயில் கூட கஜப்பிரஷ்டம்   தான்.

தமிழகத்தில் உள்ள கோயில்களின் வரலாறு தேடும் முயற்சியில் தூங்கானை விமானம் /    கஜப்பிரஷ்டம்   என வழங்கப்படும் யானையின் பின்பகுதி போன்ற அமைப்பு உடைய கோயில்களை பட்டியலிட்டு google map ல் குறித்துள்ளேன்.
 
https://www.google.com/maps/d/u/0/viewer?mid=1yYKNNBSGo1a0sB7dCfzC5w4DYegjnnPI&ll=13.387569980678185%2C83.19741252292829&z=6
________________________________________________________________________
தொடர்பு:
நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்) <selvindls61@gmail.com>
நரசிங்கபுரத்தான் <jaisureshkumar@gmail.com>